அண்ணன் நிஜாம் வீட்டிலிருந்து வெளியேறிய இக்பால் சொதப்பிவிட்டமோ என நினைத்துக்கொண்டே நடந்தான். பின்னயும் பின்னயும் காதர் சொல்லிவிட்டான் இருந்தும் பேச்சு எங்கேயோ போய் அவன் சொன்னமாதிரியே  இப்பிடியாகிவிட்டது! ‘எதயும் உருப்படியா செய்ய மாட்டீங்களானு கெடந்து சாடுவான். நாள்பூரா குத்திக்காமிச்சுட்டே வேற இரிப்பான். நடந்ததை அப்பிடியே சொல்லக்கூடாது அண்ணன் மேல இல்லேனா மைனி மேலத்தா பழியப்போட்டு திட்டுலருந்து தப்பிக்கப் பாக்கணும்.

இக்பாலை எதிர்பார்த்து காத்திருந்த காதர் வெறுங்கையுடன் இக்பால் வந்ததைக் கண்டு அவன் வீட்டுக்குள் நுழையும் முன்பே எரிச்சலுடன், “என்னண்ணா! வெறுங்கையோட வர்ரீங்க? நா சொன்னமாரியே சொதப்பிடீங்க போல? இப்பிடி  வெறுங்கையோடத்தா வருவீங்கனு.. நா நெனச்சேன்…..அதுக்குத்தானே கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாரீ சொல்லிவிட்டேன் என்னாச்சு?” என்றான்.

தலையாட்டியபடி அமைதியாக இருந்தால் இவன் திட்டிக்கிட்டே இரிப்பான் இக்பாலின் மூளை சர்ரென்று வேகமாக செயல்பட்டது! என்ன பதில் சொல்வது என்று வரும்போதே யோசித்துக்கொண்டேதான் வந்தான்.

“என்னப் பாத்ததும் மைனி உன்ன திட்ட ஆரம்பிச்சிரிச்சு!” என்றான்.

“என்ன எதுக்கு மைனி திட்டணும்?” கோபத்துடன் கேட்டான் காதர்.

“எனக்கென்ன தெரியும்?”

“நீங்க ஏதாச்சும் உளறியிரிப்பீங்க.. அதான் என்ன திட்டியிரிக்கும். உங்க வாய் சும்மாயிரிக்காதே !”

“நா ஒன்னும் உளறல. ஊட்டுப்பக்கமே யாரும் எட்டிக்கூட பாக்க மாட்டேங்குறீங்கணு கேட்டுட்டு எல்லாத்துக்கும் நீதா காரணம்னு மைனி ஒன்ன திட்ட ஆரம்பிச்சுரிச்சு!”

காதருக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேற  இக்பாலை பார்த்துக்கொண்டே நின்றான்.

“அண்ணன் வேற, நீ வீடு ஓப்பனிங்குக்கு  மொத நாள்தா போயி ஏனோதானோனு சொன்னியாம். இங்க எடம் வாங்கினத கூட இதுவரைக்கும் அவருகிட்ட நீ சொல்லவே இல்லயாம்னு கத்த ஆரம்பிச்சுட்டாரு..!”

“இதக் கேக்கத்தா ஒன்ன அங்க அனுப்பினனாக்கும்..?”

“அவுங்க ரண்டு பேரும் ஆளாளுக்கு மாரி மாரி கேள்வி கேட்டு கத்துறாங்க…. என்னால பதில் சொல்லவே முடியல! இதுல நா எப்பிடி ஊட்டுப்பத்திரத்தக் கேப்பேன் காதர்… சொல்லு?”

காதர் பதிலேதும் பேசாமல் இக்பாலை பார்த்தபடிக்கு நின்றிருந்தான்.

இக்பால் பெருமூச்சு விட்டபடி அப்பாடா  இவங்கிட்டருந்து திட்டு வாங்குறதிலிருந்து இன்னிக்கு தப்பிச்சேன் என நினைத்துக்கொண்டான்.

“அதுக்கு நீ என்ன பதில் சொன்னே?”

அடப்பாவி விடமாட்டான் போல! இப்பத்தா தப்பிச்சேன்னு நெனச்சன். “நா என்ன சொல்றது..?  அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க ஏன் வரலேனு உம்மா கேட்டுதுனு சொன்னேன். வாப்பாவும் கேட்டுட்டே இருந்தார்னும் சொன்னேன். அதுக்கு மனசார கூப்பிட்டாத்தானே வருவாங்க. ஏனோதானோனு ஊர்க்காரங்கள கூப்பிடுற மாரி ஒப்புக்கு அண்ணன கூப்பிட்டா எப்பிடி போவாங்கனு மைனி கேட்டுது. நா பதில் ஒன்னும் சொல்லல. எந்திரிச்சி வந்துட்டேன்.” கொஞ்சம் ஒட்டியும் வெட்டியும் பதில் சொன்னான் இக்பால். காதர் பதிலேதும் சொல்லவில்லை.

“ஏன் காதர்! நீயே போயி பத்திரத்த கேக்க வேண்டியதுதானே..?” இதுதான் சமயமென பட்டென்று கேட்டான் இக்பால்.

“நா போனா பிரச்சனயாகும்னுதா உம்மாவயும் ஒன்னயும் அனுப்பினேன். நீங்கல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்கனு தெரிஞ்சு போச்சு! சரி இனி நானே போயிக்கிறேன். எப்பிடி வாங்குறதுனு எனக்குத் தெரியும்..” ஒருமாதிரி சிரித்துக்கொண்டு சொன்னான் காதர்.

அப்பாடா! நீ என்னவோ பண்ணி அண்ணன்கிட்டருந்து பத்திரத்த வாங்கிக்க. எங்கள விட்டா சரி என நினைத்துக்கொண்டான் இக்பால். அண்ணனிடமும் மைனியிடமும் எடம் வாங்கினத கூட நீயேன் சொல்லல.? என்பதை கேட்க நினைத்தான் இக்பால். அதற்கும் விதண்டாவாதமாக ஏதாவது பதில் சொல்லுவான். எதற்கு வம்பு என, “சரி நா கெளம்புறேன்” என்று எழுந்து கொண்டான் இக்பால்.

மொகல்லாவில் குப்பைகளை போடுவதற்கு சரியான இடம் இல்லாமல் எங்கே போடுவது என்கிற பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது! இதனால் கண்ட இடங்களிலும் குப்பைகளை வீசிவிட்டு செல்வதும் மக்கள் நடக்கும் பொதுத்தடம் என்று பாராமல் குப்பைகளை சாலையோரத்தில் போட்டுவிட்டு செல்வதுமாகவே இருந்தார்கள். ஆற்றின் கரை ஓரப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை! தண்ணீர் வராத சாக்கடையாக சுருங்கிக் கிடக்கும் நொய்யல் ஆற்றில் இரவு நேரங்களில் குப்பைகளை ஆற்றுக்குள் வீசியெறிவதை அந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

நகராட்சி மூலம் இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒருமுறை லாரியில் வந்து குப்பைகளை அகற்றிச் செல்வார்கள். மறுபடியும் குப்பைகள் குவியும். சரியான தீர்வு மட்டும் கிடைக்காது. மொகல்லா குடியிருப்போர் நல்வாழ்வு சங்கத்தினருக்கு இதுபற்றியெல்லாம் அக்கறையும் கவலையும் இருப்பதாகவே தெரியவில்லை. பொதுச்சேவை செய்வதில் விருப்பம் இல்லாது சும்மா பெயரளவுக்கு சங்கம் வைத்துக்கொண்டு வெட்டி பந்தவுக்காக பொறுப்பு வகிப்பவர்களுக்கு மொகல்லாவாசிகளின் இந்த பிரச்சனை பற்றியெல்லாம் அக்கறையே இல்லை. கண்டும் காணாமல் இருந்தார்கள்.

மழைக்காலங்களில் நசநசவென்று அந்தப் பகுதியே நாறிப்போய் நடக்கவே மக்கள் சிரமப்படுவார்கள். ஆனாலும் குப்பைகளை கண்ட இடங்களில் போடுவதை மட்டும் நிறுத்தமாட்டார்கள்!  ‘இங்கு குப்பைகளைக் கொட்டாதீர்கள்..’ என்று எழுதி வைத்தால் அங்குதான் குப்பைகளைக்கொட்டி மலைபோல குவிப்பார்கள்.

மொகல்லாவின் ஒரு முக்கியஸ்தர் வீட்டின் அருகே இருக்கும் காலியிடம் இப்படியாக குப்பை மேடாகிப்போனது. அந்த இடமே அசிங்கமாகி கொசுத்தொல்லை, நாற்றம் என இது அவருக்கு பெரிய இடைஞ்சலாகியது. உடனே அவர் “இங்கே குப்பை கொட்டுபவர் வீட்டில் தரித்திரம் பிடிக்கும்” என பெரிய தட்டி எழுதி வைத்தார். அதைப் பார்த்து எல்லோரும் சிரியொ சிரியென சிரித்தார்கள்..!

‘இங்கு கொட்டினால்தானே தரித்திரம் பிடிக்கும்’ என்று கொஞ்சம் தள்ளிப்போய் கொட்டிவிட்டுச் சென்றார்கள். இன்னும் சிலர் “தரித்திரம் புடிச்சா புடிக்கட்டும்..” என்று அங்கேயே கொட்டினார்கள். வீட்டின் முன்பு நின்றபடி. “அறிவு கெட்டவனுங்களா இரிக்காணுங்க..! அவுங்கவுங்க ஊட்டு முன்னாடி குப்பய கொட்டி வைக்க வேண்டியதுதானே..? இங்க வந்து என் ஊட்டு முன்னாடி ஏண்டா குப்பய கொட்டுறீங்க? இதென்ன குப்ப மேடா?” என்று அவர் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.

இரவு நேரங்களில் வீட்டின் முன் நின்று கண்காணிக்க ஆரம்பித்தார். வண்டியில் குப்பையுடன் வருபவர்கள் அப்படியே நேராகச் சென்று மெயின் ரோடு சந்திப்பில் முக்கு திரும்பும் இடத்தில் குப்பையை வீசி விட்டுச் செல்ல, ஆரம்பித்தார்கள். கொஞ்சம் குப்பை அங்கு கிடப்பதைக்கண்டு  எல்லோரும் அங்கு போய் போட ஆரம்பித்தார்கள்.

மொகல்லாவின் நுழைவாயிலே இப்படி அசுத்தமாவது பற்றி யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. என்ன சொல்லியும், எவ்வளவு சொன்னாலும் மக்கள் கேட்பதாக இல்லை! இதனால் மொகல்லாவுக்குள் நாய்கள் தொல்லை அதிகமானது. இரவு நேரங்களில் வீடு திரும்புவோரை  குரைத்துக்கொண்டு நாய்கள் துரத்த ஆரம்பித்தன. எங்கிருந்தோ மாடுகளும்  மொகல்லாவுக்குள் வலம் வர ஆரம்பித்தன. இது மொகல்லாவாசிகளுக்கே பெரும் இடைஞ்சலகவும் அவஸ்தையாகவும் ஆனது.

எங்கள் வீடு சுத்தமாக இருந்தால் போதும். வீதி நாறினால் எங்களுக்கென்ன என்கிற மனப்பான்மை அதிகரித்துவிட்டது ! என்றும் எப்போதும் சுத்தத்தை வலியும் சுத்தத்தை பேணச் சொல்லும் மார்க்கத்தில் இருப்பவர்களின் நடத்தை இப்படியிருக்கிறதே ஐந்து நேரமும் தொழுகைக்காக ஒளுவெடுத்து சுத்தம் பேணுபவர்கள் இந்த சுற்றுப்புற சூழல் சுத்தம் பேணுவதில் இப்படி அசட்டையாக அக்கரையின்றி இருப்பது வருத்ததிற்குரியது என நிஜாமின் எண்ணமாக இருந்தது. அடிக்கடி இதை நினைத்துக்கொள்வான் நிஜாம். இதுபற்றி அடிக்கடி நண்பர்கள் கூடும்போது பெரிய விவாதம் நடக்கும்.

”நம்ம மொகல்லாவுல எதுக்குடா குடியிருப்போர் நல சங்கம் வச்சிருக்கானுங்க…?” என்று நிஜாம்தான் கோபத்துடன் கேள்வி எழுப்புவான்.

“என்னடா புதுசா கேக்குறே?” என்று கேட்டு நண்பர்கள் பலமாக் சிரித்துக்கொள்வார்கள்.

“ஒருவாரத்துக்கும் மேலா தண்ணி வரலேன்னாலும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க! ஒவ்வொரு தடவையும் நாமதான் பிளம்பருக்கு போன் பண்ணி மெனக்கெட வேண்டியிருக்கு! இதா இந்த குப்பை கொட்டுறதுக்கு எடம் இல்லாத பிரச்சன எப்ப இருந்து இருக்குது! நம்ம காலனி வீதி பூரா குப்ப மேடா கெடக்கு..! இவுனுங்க ஏதாச்சும் ஸ்டெப் எடுத்திருக்கானுங்களா..? சொன்னாலும் காதுல வாங்க மாட்டேங்கிறாணுங்க.! அப்பறம் எதுக்கு சங்கம்.. ஆளாளுக்கு பொறுப்பு?”

“அதான் நீயே சொல்லிட்டியே ஆளாளுக்கு பொறுப்புனு..! அதுக்குத்தான் சங்கமே..!” கேக்கெக்கே என சத்தமாக சிரித்தான் நாசர்.

“நம்ம கலானி மக்கள் யாருமே அவுனுங்க கிட்டப்போயி ஒரு புகார்  கூட சொல்ல மாட்டேங்கிறாங்களேனுதா எனக்கு சரியான கோபம்..” என்றான் நிஜாம்.

“நம்ம மக்களுக்கு இதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு சொல்லு ?”

“ஆமா, நாசர்! இந்த மாதிரி பொதுக்காரியங்களுக்கெல்லாம் நம்ம மக்களுக்கு நேரமே இருக்காதுதான்! சரியாச் சொன்னே.”

“நாலுபேரு போயி சங்கத்துக்காரங்கிட்ட அப்பப்ப இப்படி ஏதாச்சும் புகார் சொன்னத்தானே அவுனுங்களும்  பாக்க வேண்டியவங்களப் பாத்து அதுக்குண்டான முயற்சி செய்வாங்க..”

“ஆமா அவுனுங்க செஞ்சுட்டாலும்..!” என்று சிரித்தான் முபாரக்.

“நாமதாண்டா இதுக்கு ஏதாச்சும் ஸ்டெப் எடுக்கணும்..” என்றான் நிஜாம். ஜமாஅத்திற்கும் இந்தப் பிரச்சனை வந்தது.

ஒருகட்டத்தில் இந்தப் பிரச்சனை பெரிய அளவில் வெடித்து, ஒருவழியாக நகராட்சி மூலம் காலனிக்குள் குப்பை வண்டி வந்து வீடு தோறும் குப்பைகளை சேகரிக்க ஆரம்பித்தது. எல்லா இடங்களுக்கும் ஒரே ஒரு குப்பை வண்டியை வைத்துக்கொண்டு செயல்பட்டதில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் மொகல்லாவுக்குள் குப்பை எடுக்க வண்டி வரும். நாறிப்போன உணவுக் கழிவுகளையும் குப்பைகளையும் வீட்டில் மூன்று நாட்களுக்கு வைத்துக்கொண்டிருப்பதா என்று பழையபடியே மக்கள் குப்பைகளை வீதிகளில் ஆங்காங்கே கொட்ட ஆரம்பித்தனர்.

பல முறை நகராட்சி அலுவலகம் சென்று புகார் செய்த பிறகு  நகராட்சி நிர்வாகம் மொகல்லாவில் இரண்டு இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைத்தது. குப்பைத்தொட்டிகள் நிறைந்து வழிந்தாலும் நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டியிலிருந்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யாததால் வேறு வழியின்றி மக்கள் அந்த பகுதியெங்கும் குப்பைகளை வீசிச்செல்ல, குப்பைகளும் பிற கழிவுகளும் தெரு முழுக்க சிதறி வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வழியை அடைத்துக்கொள்ளும். நகராட்சிக்கு எப்போது தோணுதோ அப்போது வந்து லாரியில் குப்பைகளை அள்ளிச்செல்லும். நகரெங்கும் நீக்கமற நிலவும் இந்தப் பிரச்சனைக்கு சரியான தீர்வுதான் என்ன என்பது மட்டும் யாருக்கும் தெரியாதது புரியாத புதிர்!   (கதை தொடரும்)

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *