உத்தர்பிரதேசம் வாரணாசியில் காசி விஷ்வநாதர் கோவில் சுவரை தொட்டு அமைந்திருக்கிறது ஞானவாபி மஸ்ஜித். பலநூறாண்டுகளுக்கும் மேலாக கோவிலும் மஸ்ஜிதும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நெருக்கமானது இந்திய நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்போதும் நெருக்கமாக வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு நூற்றாண்டுகால ஆதாரம்.

பாபர் மசூதிக்கு அடுத்தபடியாக சங்பரிவர்கள் வாரணாசி ஞானவாபியை கையில் எடுத்திருக்கிறார்கள். 2022ல் உத்தர்ப்பிரதேச சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்த போது யோகி ஆதித்யநாத் ஞானவாபி மஸ்ஜிதுக்குள் சிவனின் திரிசூலம் இருப்பதாக பிரச்சனையை கிளப்பினார்.

நரசிம்மராவ் ஆட்சிகாலத்தில் 1993ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சமயம் பாபர் மஸ்ஜித் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் பாபர் மசூதி தவிர்த்து, “நாட்டில் உள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் தற்போது எந்த இடத்தில், என்ன நிலையில் இருக்கிறதோ அவ்வாறே பாதுகாக்கப்படும்” என்கிறது அந்தச் சட்டம். எனவே, பாபர் மசூதி நீங்கலாக மற்ற வழிபாட்டுத் தலங்களை இந்தச் சட்டம் பாதுகாக்கும் என்று முஸ்லிம்கள் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையை அப்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் தகர்த்தது. இப்போது வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜயா கிருஷ்ணா விஷ்வேசா கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி புதன்கிழமை வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

“மசூதி வளாகத்தில் உள்ள `வியாஸ் கா தெகானா’ பகுதிக்குள் சீல் வைக்கப்பட்ட பகுதியில் இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்யலாம், அடுத்த ஏழு நாள்களுக்குள் பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யலாம்” என்றும் அந்த நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அடுத்த நாளே அதாவது, வியாழக்கிழமை காலையே வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்து சமய வழிபாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.

‘‘எனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது.” என்று வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் வியாழக்கிழமை அதிகாலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பூஜை நடத்தப்பட்டதா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நீதிமன்றம் எதைச் சொன்னதோ அது நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மசூதியின் இணை செயலாளர் எஸ்.எம்.யாசின் தெரிவிக்கையில், “நாட்டில் நீதியின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. மசூதியில் இதுவரை எந்த பூஜையும் நடந்தது இல்லை. அங்கு எந்த சிலைகளும் இல்லை. வெறும் மூங்கில் கம்புகள்தான் உள்ளன. அவர்கள் கூறும் அனைத்தும் பொய்கள். அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரமே இல்லாமல் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.” என்று குறிப்பிடுகிறார்.

முன்னதாக, அலகாபாத் உயர்நீதிமன்றம், ஞானவாபி மஸ்ஜிதில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற வழக்கில் தீர்ப்பு சொல்லும் தேதியை அறிவிக்கவிருந்த நிலையில், உத்தர்ப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு செய்தி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை 31 அன்று கொடுத்த பேட்டியில், “ஞானவாபியில் உள்ளதை நாம் மஸ்ஜித் என்று சொன்னால் அது பிரச்சனையை உருவாக்கும். ஒரு வரலாற்றுத் தவறு நடந்து விட்டது. அதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை முஸ்லிம்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றார்’. அதாவது ஒத்துக்கொண்டால் நமக்குள் பிரச்சனை இல்லை என்றார். மஸ்ஜிதுக்குள் திரிசூலத்துக்கு என்ன வேளை இருக்கிறது? நாம் அதை அங்கே கொண்டுபோய் வைக்கவில்லை. அங்கே கடவுளின் சிலை ஒன்று இருக்கிறது” என்று கூறினார்.

ஆதித்யநாத் பேட்டிக்கு இரண்டுநாட்கள் கழித்து ஆகஸ்ட் 3 ஆம் நாள், அலகாபாத் உயர்நீதிமன்றம் அகழாய்வு நடத்த இந்திய தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கியது. “நீதியின் நலனுக்கு அறிவியல் பூர்வமான ஆய்வு தேவைப்படுகிறது” என்றார்கள் நீதிபதிகள். ஞானவாபி மஸ்ஜிதில் அகழாய்வு நடத்த அனுமதிக்க கூடாது என்று அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி (Anjuman Intezamia Masjid Committee) தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த கமிட்டி தான் ஞானவாபி மஸ்ஜிதின் விவகாரங்களை பராமரித்து வருகிறது. வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அகழாய்வுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கியதை எதிர்த்து தான் இந்த AIMC கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழங்கு நடத்தியது.

இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தை ஆகஸ்ட் 2021ல் அனுகி ஞானவாபி மஸ்ஜித் உள்ளே இந்து கடவுள் சிலைகள் இருப்பதாகவும் அந்த கடவுள் சிலைகளை வழிபடும் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் முறையிட்டனர். உடனடியாக, வாரணாசி நீதிமன்றம் சிலைகள் இருப்பதாக கூறப்படும் மஸ்ஜித் பகுதியை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டது. முஸ்லிம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அனுகி முறையிட்ட போது, வீடியோ பதிவு செய்ய இடைக்கால தடை விதித்து வழக்கை மீண்டும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கே தள்ளி விட்டது.

மே, 2024ல் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் இந்த ஞானவாபி மஸ்ஜித் பிரச்சனையை களத்தில் இறக்கிவிட அப்போதே தீவிரம் காட்டினார். இதோ இப்போது தீர்ப்பு வெளியாகி ஒரே நாளில் மசூதியின் ஒரு பகுதியில் இந்துக்கள் வழிபட அனுமதியும் வழங்கி ஆகிவிட்டது. 17வது மக்களவைத் தேர்தல் 2019ல் நெருங்கி வந்திருந்த நிலையில் தான் பாபர் மஸ்ஜித் வழக்கில் அவசரமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னது.

கடந்த ஆண்டு யோகியின் கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பலவற்றின்  சாமியார்கள் யோகிக்கு ஆதரவாக பேசத் தொடங்கி விட்டனர். இந்து மடங்களை ஆளுகை செய்யும் அகில பாரதிய அகாரா பரிஷத் (Akhil Bharatiya Akhara Parishad) அமைப்பின் தலைவர் மஹந்த் ரவீந்திர பூரி, `ஞானவாபியை எங்களிடம் கொடுங்கள் உங்களுக்கு வேறு ஒரு மஸ்ஜித் நாங்கள் கட்டித் தருகிறோம்’ என்று முஸ்லிம்களுக்குச் சொன்னார். `முஸ்லிம் தலைவர்கள் பெரிய மனது வைக்க வேண்டும், அதனால், பின் வரக்கூடிய சந்ததிகள் அவர்களைப் பற்றிப் பெருமையாக உணர்வார்கள்’ என்றார் மஹந்த். `முஸ்லிம் சமயத் தலைவர்கள் ஞானவாபியை இந்து பக்தர்களிடம் கொடுத்து விட்டால் பிறகு இருதரப்பும் இணக்கமாகி வாழலாம்’ என்று நைச்சியமாகப் பேசினார்.

அயோத்தியின் பாபர் மஸ்ஜித் மட்டுமல்லாமல் வாரணாசியின் ஞானவாபி மஸ்ஜிதும் மதுராவில் ஷாஹி ஈத்கா மஸ்ஜிதும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சங்பரிவார்களின் கோரிக்கை. பாபர் மஸ்ஜித்தை 1992ல் இடித்து முடித்த கையோடு தெள்ளத்தெளிவாகவே (unambiguously) காசியும் மதுராவும் இன்னும் பாக்கி உள்ளது (‘kasi Madhura baaki hai’) என்று முழங்கினார்கள். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் பாபர் மஸ்ஜித் வழக்கை சங்பரிவர்களுக்கு சாதகமாக 2019ல் முடித்து வைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் சங்பரிவர்களின் ஞானவாபியை கைப்பற்றுவோம் என்ற இரைச்சல் (clamor) மீண்டும் கேட்கத் தொடங்கி விட்டது.

17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் ஔரங்கசீப் மஸ்ஜித் கட்டும்போது பழமையான கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டார் என்பதே மனுதாரர்கள் தரப்பு வாதம். ஆனால், முஸ்லிம்கள் தரப்பு, “ஔரங்கசீப் காலத்துக்கு முன்பிருந்தே ஞானவாபி மஸ்ஜித் பலநூறு வருடங்களாக இருந்து வருகிறது” என்று நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்கள்.

2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சார இலக்கை பாஜக முடிவு செய்து விட்டது. வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி, “இந்த உத்தரவை தான் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி நாளில் பிறப்பித்திருக்கிறார். 1993-க்குப் பிறகு 30 ஆண்டுகளாக அங்கு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை என்று அவரே கூறியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, உள்ளே சிலை இருக்கிறது என்று அவருக்கு எப்படித் தெரியும். எனவே, இது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாகும்” என்று AIMIM கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான ஒவைசி தெரிவித்திருக்கிறார்.

“சீல் வைக்கப்பட்ட பகுதியை ஏழு நாள்களுக்குள் திறக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதேசமயம், மேல்முறையீடு செய்ய 30 நாள்கள் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். இது ஒரு தவறான முடிவு. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தாங்கள் நிற்பதாக மோடி அரசு கூறாத வரை இத்தகைய போக்கு தொடரும். பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பின் போதும், நான் இதே அச்சத்தை எழுப்பினேன்” என்று கூறினார். மேலும், “வழிபாட்டுத் தலங்கள் சட்டம் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்ட, பிறகு கீழ் நீதிமன்றங்கள் ஏன் உத்தரவைப் பின்பற்றவில்லை?” என்றும் ஒவைசி கேள்வியெழுப்புகிறார்.

ஞானவாபி மஸ்ஜித் வழக்குகள் காலவரிசை அட்டவணை:-

1991:-

ஞானவாபி மஸ்ஜித்தில் உள்ள இந்து கடவுள் சிலைகளை வணங்க அனுமதி கேட்கும் முதல் மனுவை சுயம்பு ஜோதிர்லிங்க பகவான் விஷ்வேஷ்வர் வாரணாசி மாவட்ட கோர்ட்டில்  1991ல் தாக்கல் செய்தார்.

ஆகஸ்ட், 2021:-

இந்து பெண்கள் 5 பேர் கியான்வாபி மஸ்ஜித்தில் உள்ள அனுமன், நந்தி மற்றும் ஶ்ரீங்கர் கௌரி கடவுள் சிலைகளை வழிபட வாரணாசி மாவட்ட கோர்ட்டில் அனுமதி கேட்டனர். அங்குள்ள சிலைகள் சேதப்படுவதைத் தடுக்கவும் உத்தரவு கேட்டனர்.

ஏப்ரல், 2022:-

வாரணாசி கோர்ட், பெண்கள் 5 பேர் மனுவை வைத்து, கடவுள் சிலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் அஜெய் மிஸ்ராவை வழக்குரை ஆணையராக (Advocate Commissioner) நியமனம் செய்தது. அவருக்கு கடவுள் சிலைகளை ஆய்வு செய்யும் போது ஒளிப்படப் பதிவுகள் செய்யும்படி உத்தரவுமிட்டது. முஸ்லிம்கள் தரப்பில் அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி வாரணாசி மாவட்ட கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர்நீதிமன்றம் வாரணாசி கோர்ட்டின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்புரைத்தது.

மே 6, 2022:-

மே 6 ஆம் நாள் கியான்வாபி மஸ்ஜித் உள்ளே ஒளிப்படப் பதிவுகள் தொடங்கியது. வழக்குரை ஆணையர் அஜெய் மிஸ்ரா ஒளிப்படப் பதிவின் ரகசியம் காக்காமல் படப் பதிவுகளை வெளியில் கசியவிட்டதாக அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி ஒரு புகார் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

மே 17, 2022:-

அகழ்வாய்வு படத் பதிவுகளை குறிப்பாக சிவ லிங்கம் என கருதப்படும் படப்பதிவை  வெளியில் கசியவிட்டதற்காக அஜெய் மிஸ்ராவை வழக்குரை ஆணையர் பொறுப்பில் இருந்து கோர்ட் நீக்கியது. அகழ்வுப் படப் பதிவுகள் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைக்கும் படி தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.

மே 19, 2022:-

உச்சநீதிமன்றம் தொல்லியல்துறை ஆகழ்வு செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது. அதுவரையில் அகழ்வில் கிடைத்தவற்றை வாரணாசி கோர்ட் முன்னர் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அக்டோபர் 14, 2022:- டீ டாக்ஸ்

அகழ்வில் ஷிவ லிங்கம் கிடைத்ததாக தொல்லியல் துறை அறிக்கை கூறியதையடுத்து அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி ஷிவ லிங்கம் என்று கூறுவதன் மீது கார்பன் டேட்டிங் (Corbin dating) எனப்படும் அறிவியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி நீதிமன்றத்தை கோரியது. இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுத்தது. நீதிமன்றத்தில் மஸ்ஜித் கமிட்டி, ‘ஷிவ் லிங்கம்’ என்பது முகம் அலம்பும் நீர்தொட்டியில் உள்ள நீரூற்று தான் என்றது.

மே 12, 2023:-

அலகாபத் உயர்நீதிமன்றம் ‘அறிவியல் ஆய்வு’ (scientific survey) நடத்தவும் ஷிவ் லிங்கம் என கூறப்படுவதன் வயதை சோதனை மூலம் உறுதி செய்யவும் உத்தரவிட்டது.

மே 19, 2023:-

உச்சநீதிமன்றம், ஷிவ் லிங்கம் என்பதை சோதனை செய்ய தடை விதித்தது.

ஜூலை 21, 2023:-

வாரணாசியில் கோவில் இருந்த இடத்தின் மீது தற்போதுள்ள கியான்வாபி மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக கியான்வாபி மஸ்ஜித் இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வாரணாசி மாவட்ட கோர்ட் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. தேவைப்பட்டால் அகழ்வு செய்து கொள்ளவும் அனுமதி கொடுத்தது.

ஜூலை 24, 2023:-

ஞானவாபி மஸ்ஜித்தில் ஆய்வு செய்வதை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் கோரிக்கையை விசாரணை செய்யும் படி உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 3, 2023:-

ஞானவாபி மஸ்ஜிதில் தொல்லியல்துறை ஆய்வு செய்வதற்கு இருந்த தடையை நீக்கியது. நீதி செலுத்துவதற்காக அறிவியல் பூர்வ ஆய்வு தேவைப்படுகிறது என்றது அலகாபாத் உயர்நீதி மன்றம்.

ஜனவரி 24, புதன்கிழமை 2024:-

“மசூதி வளாகத்தில் உள்ள `வியாஸ் கா தெகானா’ பகுதிக்குள் சீல் வைக்கப்பட்ட பகுதியில் இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்யலாம், அடுத்த ஏழு நாள்களுக்குள் பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யலாம்” என்று வாரணாசி நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

ஜனவரி  25, வியாழக்கிழமை 2024:-

வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அடுத்த நாள் காலையே வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்து சமய வழிபாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.

‘‘எனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது.” என்று வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் வியாழக்கிழமை அதிகாலை தெரிவித்தார்.

பிப்ரவரி 1, 2024:-

ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து, மசூதி நிர்வாகத்தின் மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு. அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.

பிப்ரவரி 26, 2024:-

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த இஸ்லாமிய அமைப்பின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *