(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கூடிய அவையில் இற்றை அரசியல் பற்றி ஆய்வு  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப் போராட்டக் களத்தில் பிராமணரல்லாத மக்களை, பிராமணர் நலனுக்காகப்   பயன்படுத்திக்கொண்ட பிராமணர்கள், எப்படி பிராமணரல்லாத மக்கள் மீதான பகையுணர்வு மாறாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது பற்றி கி.பி. 1927 ஆம் ஆண்டில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் விரிவாக எச்சரித்ததைக் கேட்ட அவையினர், கி.பி 2023லும் அந்நிலை மாறவில்லை என்பதையும், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், சதுர்வர்ண பயங்கரவாதியான சாணக்கியனின் படத்தை முன்னிலைப்படுத்தியிருப் படுத்தியிருப்பதிலிருந்தே அதனை அறிந்து கொள்ளலாமென்பதையும் புரிந்துகொண்டனர். அப்போது, திருவள்ளுவரின் ஆணைப்படி அவையிலிருந்த வெள்ளித்திரை இயக்கப்படவும் திரையில் காட்சிகள் தோன்றலாயின. சோளிங்கநல்லூர் கடற்கரையில் தனியான ஒரு இடத்தில் அத்திம்பேரும் அம்மாஞ்சியும் தெரிகின்றனர். அத்திம்பேர் பாடிக்கொண்டிருக்கிறார்.

அத்திம்பேர்: “நினைப்பதெல்லாம் நடக்கிறதே. தெய்வம் எதுவும் இல்லை. தெய்வத்தைப் போல் கைப்பொம்மை உலகில் ஏதுமில்லை.”

அம்மாஞ்சி: என்ன, அத்திம்பேர்? பாட்டெல்லாம் பிரமாதமாக வருகிறது இன்றைக்கு?

அத்திம்பேர்: அப்புறம் என்ன? பிராமண வல்லாதிக்கத்தை இவ்வளவு எளிதாக நாம் அடையமுடியும் என்று முதலில் நினைக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு டெல்லியில் ஆட்சி அதிகாரத்தை நாம் நேரடியாகப் பிடித்தபின் நமது ஆட்கள் இந்தியாவில் இனி மக்களாட்சி இல்லாதவாறு செய்வதற்கு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் வெற்றியே. என்ன ஒரு வருத்தம் என்றால், நமது சாதனைகளை நாம் வெளியே சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ள முடிவதில்லை. ஏனெனில் நமது சாதனைகள் அனைத்தும் சதிச் செயல்கள் மூலமாகவே நடைபெற்றவை. இருந்தாலும், விரைவில் அந்தக் காலமும் மீண்டும் வரும் என்று நம்புகிறேன்.

அம்மாஞ்சி: நீங்கள் எந்த சாதனைகளைச் சொல்கிறீர்கள், அத்திம்பேர்?

அத்திம்பேர்: அம்மாஞ்சி! கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, இந்தியத்துணைகண்டத்தில் பல நாடுகள் இருந்தன. பல பண்பாடுகள் இருந்தன. அன்றைய கொல்காத்தாவிலிருந்து வெளிவந்த மாத இதழான “மாடர்ன் ரிவியூ”   வில் வெளிவந்த கட்டுரைகளில் கூட இந்தியாவை ஒரு ‘International’ அமைப்பாகத்தான் காட்டி வந்தது. அதுதான் அன்றைய வழக்கம். இந்தியா தன்னுரிமை பெற்றால், இந்தியாவில் எந்த மொழி ஆட்சிமொழியாக இருக்கும், அது வங்காள மொழியா அல்லது இந்தியா என்று விவாதம் செய்யும் பல கட்டுரைகள் அதில் தொடர்ந்து வெளிவந்தன. அந்தக் கட்டுரைகளில் “the International Language of all-India” என்றுதான் சொற்கள் பயன்படுத்தப்பட்டன.  (பக்கம் 330- Modern Review – செப்டம்பர, 1910). அந்த இதழில் வெளிவந்த பல கட்டுரைகள் இப்படித்தான் மொழிச் சிக்கலை அணுகின. மேலும், Selected Works of Jawaharlal Nehru என்ற நூற்களைத் தொகுத்த மாதவன் கே. பாலட் என்பார் 31.08.2015 அன்று, “India Nation of Nations” எனற தலைப்பில் நிகழ்த்திய கே.ஆர்.நாராயணன் நினைவுச் சொற்பொழிவில் இந்தியா எப்படி ஒரே விதமான (homogenous) நாடாக இருந்ததில்லை என்பதையும் பல நாடுகள் கொண்ட அமைப்பாகத்தான் இந்தியா இருந்தது என்பதையும் பல சான்றுகளுடன் தெளிவாக்குகிறார் (India Nation of Nations – Madhavan K. Palat – Published by the Centere for Research and Education for Social Transformation, Government of Kerala). 1947ல் உருவாக்கப்பட்டுள்ள இன்றைய இந்தியா ஒரு “புதிய” அமைப்பு என்று இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார். (“So this political unity is not only new but also exposed to various kinds of stress and strains.” –Rajendra Prasad in his letter to Gyanwati Devi on 25.11.1957- Page 179 – Portrait of a President – Letters of Dr. Rajendra Prasad written to Mrs. Gyanwati Devi – Vikas Publishing House P. Ltd – 1974.). இதுதான் 565 நாடுகளை ஒன்றாக்கி அவற்றுடன் Instrument of Accession கையொப்பமிட்டு வாங்கிக்கொண்டு அதன்பின் காஷ்மீர் என்ற நாட்டையும் பின்னர் இணைத்து, 1947 இல்  உருவாக்கப்பட்ட புதிய இந்தியாவின்  நிலைமை.  எனவே, அன்றைய சூழலில்  26.10.1947 அன்று காஷ்மீர் அரசர் ஹரிசிங் எழுதித் தந்து,  மறுநாள் 27.10.1947 அன்று, இந்திய கவர்னர் ஜெனரல் மௌண்ட்பாட்டனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒப்பந்தம் (Instrument of Accession) என்பது  அனைத்துலகச் சட்டத்தின் (International Law)   அடிப்படையில் அமைந்த ஒன்றுதான்  என்பது தெளிவாகும்.மன்னர் மான்ய ஒழிப்புச் சட்டம் செல்லாது என்று 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல்கிவாலா முதலான பல வழக்கறிஞர்களால் நீதிமன்றின்முன் வைக்கப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட வாதங்கள் இதனைத் தெளிவாக்கும். (H. H. Maharajathiraja Madhavrao Jiwajirao Scindia Bahadur  Vs. Union of India ) அவ்வாறு அனைத்துலகச் சட்டத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று வாதிடுபவர்கள், அந்த 26/27.10.1947 ம் தேதிகளில் கையொப்பமான ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், (குறிப்பாக கட்டுப்பாடு எண் 5 மற்றும் 7 ஆகியவை), பாதிக்கப்பட்டவர் யாரிடம் சென்று முறையிடவேண்டும் என்று விளக்கவேண்டும். அவர்கள் அந்தக் கேள்விக்கு விளக்கம் அளிப்பதில்லை. மேலும், இந்திய அரசு,  அரசர் ஹரி சிங்குக்கு அனுப்பிய 27.10.1947 நாளிட்டதும் மௌண்ட்பாட்டனின் கையொப்பாத்தில் சென்றதுமான கடிதத்தில், காஷ்மீரில் அன்றைய நிலையில் அத்துமீறிப் படையெடுத்து வந்தவர்கள் விரட்டப்பட்டுச் சட்டம் ஒழுங்கு நிலைமை சரியான பின் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது பற்றி “மக்களின் விருப்பத்தைக்  கேட்டறிந்து தீர்மானித்துக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டது. “it is my Government’s wish that as soon as law and order have been restored in Jammu and Kashmir and her soil cleared of the invader, the question of the State’s accession should be settled by a reference to the people”. அந்தக் கேட்டறியும் செயல், அதாவது கருத்துக் கணிப்பு ,  (Referendum) இன்று வரை நடைபெறவில்லை என்பதுதான் உண்மை.

அம்மாஞ்சி: அதுதான் பல தேர்தல்கள் நடத்தியுள்ளோம் என்று கூறுகிறார்களே?

அத்திம்பேர்: தேர்தல்கள் வேறு, கருத்துக் கணிப்பு வேறு. இரண்டும் ஒன்றல்ல. கனடாவில் கிவிபெக் வரலாற்றைப் பார்த்தோமானால் இந்த உண்மை எளிதில் புரியும். இரண்டும் ஒன்றானால், கருத்துக் கணிப்பை ஒரு கூட்டம் எதிர்க்க வேண்டிய காரணம் என்ன?

அம்மாஞ்சி: புரிகிறது.

அத்திம்பேர்: வரலாறு பலவிதமான வினோதமான நிகழ்வுகளை அரங்கேற்றியிருக்கிறது. காஷ்மீரைப் பொறுத்தவரை, அந்நாட்டை இந்தியாவுடன் இணைப்பதற்கு, காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாவிட்டாலும், அரசர் ஒத்துக்கொண்டுவிட்டார் என்று கூறி அந்த இணைப்பை நியாயப்படுத்துகிறோம்.  அதே நேரத்தில், ஹைதராபாத் விவகாரத்தில் அதை இந்தியாவுடன் இணைப்பதற்கு, மன்னர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அந்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறி  அந்த இணைப்பை நியாயப்படுத்துகிறோம்.  இரண்டிலும், நாம் தந்த விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முழுமையாக முரண்பட்டவை (Absolutely contradictory) ஆகும். ஒன்றில் மன்னரைக் காட்டியும் மற்றொன்றில் மக்களைக் காட்டியும் மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் செயலை நியாயப்படுத்தினார்கள்.

அம்மாஞ்சி: உண்மைதான். நம்மிடம் நேர்மையில்லை என்பது தெரிகிறது.  நமக்கு ஆதாயம் இருக்குமானால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் முன்னர் என்னிடம் சாணக்கியன் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். சாணக்கியன் சொன்னது போல,  எந்த ஒப்பந்தம் செய்து கொண்டாலும், எப்பொழுது நம் கை ஓங்குகிறதோ அப்பொழுது அந்த ஒப்பந்தத்தை முறித்து விடலாம் என்ற கொள்கையை  மத்திய அரசில் உள்ள நமது ஆட்கள்  தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நன்றாகத் தெரிகிறது. (“Whoever is rising in power may break the agreement of peace” – Page 347 – Chapter XVII titled ” Making peace and Breaking it”  –– Book VII – Arthasastra – R. Shamasastry). ஆனால், அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியன் சொல்லித்தரும் வழிமுறைகள் ஒவ்வொன்றும் பொதுவாழ்வில் நேர்மையின்மையைப் புகுத்தும் செயல்கள்தாமே?

அத்திம்பேர்: ஆம். ஆனால்,அது மட்டுமா? இந்திய அரசியல் சட்டத்தின்  2 மற்றும் 3 வது பிரிவுகள்   இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும்  யாருக்கும்  அன்பளிப்பாக கொடுப்பதற்கு  அதிகாரம் தரவில்லை. இருந்தும்கூட  நமது நாட்டின் பகுதியான  கச்சத்தீவை   தமிழக் மக்களின் விருப்பத்தை மீறி டெல்லி அதிகாரிகள் இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். அதிலும், கச்சத்தீவுப் பகுதிகளிலும், கச்சத்தீவைப் பயன்படுத்துவதிலும் இந்தியர்களின் உரிமையை 26.06.1974 ஒப்பந்தத்தில் இலங்கையே கூட ஒத்துக் கொண்டிருந்தும் கூட, எந்தவித முகாந்திரமும் இல்லாமல்,  நெருக்கடிநிலைக் காலத்தில்,  23.03.1976 அன்று இரண்டாவது ஒப்பந்தம் செய்துகொடுத்து, இதுகாறும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள் மத்திய அரசு அதிகாரிகள்தாம். சிங்களர்களுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் என்னவேண்டுமானாலும் செய்து கொடுத்தவர்கள் இவர்கள். இவர்கள் இலங்கையோடு செய்து கொண்ட கச்சத்தீவு ஓப்பந்தம் ஒன்றே இந்த அதிகாரிகள் தேசத்துரோகம் (Treason) செய்தவர்கள் என்பதைக் காட்டும். இருந்தும், இவர்களை யாரும் எதுவும் செய்துவிடவில்லையே. அதிகார மையத்தை ஆக்கிரமித்துப் பிடித்துக் கொண்டால், எப்படி வேண்டுமானாலும் கொட்டமடிக்கலாம் என்பது சாணக்கியன் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடமாயிற்றே.

அம்மாஞ்சி: அதனால்தான், நீதித் துறைவரை அனைத்துத் துறைகளிலும் உயர்பணியிடங்களை நாமே பெருமளவு இடங்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறோமா? இந்தியா தன்னுரிமை பெற்று 76 ஆண்டுகள் ஆகியும் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகார மையங்களில் உரிய அளவுக்கு இல்லையே? 2018 ஆம ஆண்டுக்குப் பிறகு  பணியில் சேர்ந்த  உயர்நீதிமன்ற நீதிபதிகளில்  76 விழுக்காட்டுக்கு  மேல் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (15.12.2023) தெரிவிக்கிறதே?

அத்திம்பேர்: இன்றைய நிலையில் இந்திய அரசியல் சட்டத்தில்  எந்த விதமான  திருத்தம் வேண்டுமானாலும்  நாம் செய்து கொள்ளலாம். யாரும் நம்மைக  கேட்பாரில்லை. எடுத்துக் காட்டாக, பல சட்டங்களைக் கூற முடியும். அவற்றில் ஒன்றுதான் Code on Social Security, 2020. இதன்மூலம், முதலாளிகள் கேட்டுக் கொண்டார்கள் என்பதற்காக  தொழிலாளர்களுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள சமூக பாதுகாப்பு திட்டத்தைத் சீர்குலைத்து புதிய சட்டம் உருவாக்கியிருக்கிறோம். இதுகாறும் பேறுகாலத்திலிருக்கும் பெண்தொழிலாளர்களுக்கு 8 மாதங்களுக்கு முழுமையான ஊதியத்தை பேறுகால உதவித்தொகையாக (Maternity Benefit)  வழங்கி வந்தோம். அந்த சட்டங்களை மாற்றி, குறைந்தபட்ச ஊதியத்தின்படிக் கணக்கிட்டு  அவர்களுக்கு, தாங்கள் வாங்கும் மொத்த சம்பளத்தில் பாதி அல்லது பாதிக்குக் கீழாக மட்டுமே பேறு கால உதவித் தொகையாக  கிடைக்கும் வகையில் சட்டத்தை மாற்றி இருக்கிறோம். முதலாளிகள்தாமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நமக்குக் கொள்ளை கொள்ளையாக நிதி தருகிறார்கள்.  தொழிலாளர்களா கொடுக்கிறார்கள்?   எனவேதான் முதலாளிகளின் நலம் நாடும் வகையில் நாம் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அம்மாஞ்சி: ஆமாம், ஆமாம்! EWS இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை எப்படித் திடீரென்று நிறைவேற்றினோம் என்றுதான் அறிவோமே!

அத்திம்பேர்: அதுமட்டுமா? இந்தக் காஷ்மீர் தொடர்பான சட்டமே எப்படி இயற்றினோம் தெரியுமா?

இந்தக் காஷ்மீர் சட்டம், The Jammu and Kashmir Reorganisation Act, 2019, எப்படி வந்தது? முதன் முதலில் 05.08.2019 அன்று  மாநிலங்கள் அவையில் அந்தச் சட்டவரைவு  தாக்கல் செய்யப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. மறுநாள் அந்த வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது  பின்னர்  09.08.2019 அன்று, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது  வெகு அவசர அவசரமாக இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.  அனைத்திந்திய அளவில்  எந்த ஒரு  விவாதமும் நடைபெறவில்லை.  இந்திய மக்களின் கருத்து அறியப்படவில்லை.  காஷ்மீர் மக்களின் கருத்து கணக்கில் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. அது மட்டுமில்லாமல்  இந்த சட்ட வரைவு  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே முதல் நாள் இரவே இந்திய ராணுவம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டு விட்டது.  அரசியல் தலைவர்களான ஓமர் அப்துல்லா, மெஹபூபா மஃப்தி  ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் அலைபேசியும் வலைத்தளச் செயல்பாடுகளும் முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டன.

அம்மாஞ்சி: ஆம்.  நான் கூடப் படித்திருக்கிறேன். ஓமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில்  அங்கே என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை என்றும் மக்கள் அமைதியாக இருக்குமாறும் கோரி 04.08.2019 அன்று இரவு 11.32 மணிக்குப்  பதிவிட்டு இருந்தார். ஆமாம். அடுத்த 51 நிமிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான சசிதாரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கவலையைத் தெரிவித்திருந்தார். நானே கேட்கிறேன், அத்திம்பேர்! முதலில் இராணுவத்தை அனுப்பிவிட்டு, மறுநாள் சட்ட முன்மொழிவைப் பாராளுமன்றில் தாக்கல் செய்வதை எந்த மக்களாட்சி முறை அனுமதிக்கிறது?.  ஏன் மாநில முழுவதும்  144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது?

அத்திம்பேர்: நமது ஆட்கள் எவ்வளவு சாமர்த்தியமாகச் செயல்பட்டுள்ளனர் என்பது இவற்றிலிருந்து நன்றாகத் தெரிகிறது.

அம்மாஞ்சி: என்ன சாமர்த்தியம், அத்திம்பேர்?

அத்திம்பேர்: நன்றாக ஆராய்ந்து பார்! காஷ்மீர் தொடர்பான  சட்ட முன் வரைவை ஆராய்ந்து  தயாரிக்க பல வாரங்களாவது ஆகும். அது அதிகாரிகள் மட்டத்தில் தீவிரமாக நடத்திருக்கிறது. நாக்பூரின் ஒப்புலும் அந்தச் சட்டவரைவுக்குப் பெறப்பட்டிருக்கும். அதனைச் செய்து முடித்துவிட்டு, பிறகு அதைப்பற்றி மக்களிடம் எதுவும் சொல்லாமல் நேரடியாக பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்து  ஒரு நாள் மேலவையிலும்  ஒரு நாள் கீழவையிலும்  ஒப்புதல் வாங்கி சட்டமாக்கினர். ஆனால் அதற்கு முன்பே, அதாவது பாராளுமன்றத்தில் இந்தச் சட்ட முன் வரைவை தாக்கல் செய்வதற்கு முன்பே,  ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பி வைத்து  தலைவர்களைக் கைது செய்து மக்கள் ஒருவருக்கொருவர் பேச வழி இல்லாமல்  அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தச் சட்டம் மட்டும் நேர்மையானதொன்றாக இருந்திருந்தால்  காஷ்மீரில் இராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தி மக்களை அடக்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன?

அம்மாஞ்சி: ஆம்! உண்மையில், இச்சட்டம்  காஷ்மீர் மக்களின் தலைவிதியை காஷ்மீரிகள் அல்லாத  மற்றவர்கள் தீர்மானிக்கும் செயலாகத்தான் இருந்திருக்கிறது.

அத்திம்பேர்: உண்மை. மக்களாட்சி நடைபெறும் எந்த ஒரு நாட்டிலும் இப்படிப்பட்ட முறைகளிலெல்லாம் சட்டங்கள் இயற்றுவதற்கு வழியே கிடையாது. பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக சட்டங்களை சதிச்செயல்கள் மூலம்  உருவாக்கி நடைமுறைப்படுத்துவது நமக்குக்  கைவந்த கலையாகும். எடுத்துக்காட்டாக  சதுர்வர்ண முறையையே எடுத்துக்கொள்! இது மனுநீதி, அர்த்தசாஸ்திரம், யக்ஞவல்கீய சட்டம், அகமது நகர் தலபாட்டியின் சட்டம் ஆகியவற்றின் மூலமாகத்தான் நடைமுறைபபடுத்தப்பட்டு வந்தது, அதுவும் கடந்த 2000 ஆண்டுகளாக.  பிராமணர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களை விடத் தாழ்ந்தவர்கள் என்றும்  எழுதி வைத்து அதை மற்றவர்களை ஏற்றுக் கொள்ள வைத்து நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறோம்  இந்த சட்டங்களை  பிராமணர் அல்லாத மக்களின் ஒப்புதல் பெற்றுக்கொண்டா  சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினோம்? இல்லவே இல்லையே! நாம் நமக்கு என்ன வேண்டுமோ, அதைச் சட்டமாக்குவோம். பின்னர் மற்றவர்கள் அச்சட்டங்களை ஒத்துக்கொள்ள வைப்போம். எதிர்ப்போரை, சாணக்கியன் சொன்ன வழியில் சதிசெய்து ஒடுக்கிவைப்போம். இதுதான் நமது இரண்டாயிரம் ஆண்டுக்கால வழக்கம். இதைச் செய்வதற்கான Toolkit பலவற்றில் அதி முக்கியமானது தான் அர்த்த சாஸ்திரம். சதுர்வர்ண அமைப்பைக் காப்பாற்றி நடைமுறைப்படுத்த எந்த விதமான பயங்கரவாதச் செயலையும் தனி மனிதன் செய்யலாம் என்பதற்கும் எந்த விதமான அரச பயங்கரவாதச் செயலையும் அரசு இயந்திரங்கள் செய்யலாம் என்பதற்கும் பலவிதமான வழிமுறைகள் சொல்லிச் சென்றிருக்கிறார் நமது மூதாதையரான சாணக்கியர்.  நாம் அவர்வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், இன்றுவரை.

அம்மாஞ்சி: காஷ்மீர் தொடர்பாக பா.ஜ.க. கொண்டுவந்துள்ள இந்தச் சட்டம், பிரிவினையைத் தடுக்கும் முயற்சிதான் என்றுதானே ஆளும் கட்சி பரப்புரை செய்கிறது?

அத்திம்பேர்: உண்மை அதுவல்ல. பிரிவினையை யாரும் விரும்புவதில்லை. மனிதன் மாற்றாருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறான். ஆனால், மாற்றார் அவனை அடிமையாக்க முயலும்போதோ, அல்லது ஏமாற்றிச் சுரண்ட நினைக்கும் போதோதான் அவனுள் பிரிவினை உணர்வு வருகிறது. உலகெங்கும் பிரிவினை உணர்வை வளர்ப்பவர்கள் ஆட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தானே தவிர பொதுமக்கள் அல்லர்.    அமெரிக்க சுதந்திரப் போர்  மூண்டதற்குக் காரணம்  அமெரிக்கர்கள் அல்லர். என்றைக்கு இங்கிலாந்து நாட்டினர்  ‘அமெரிக்கர்களிடமிருந்து வரிப்பணம் வர வேண்டும் ஆனால் அவர்களுக்குப் பாராளுமன்றத்தில் இடம் கிடையாது’ என்று சொன்னார்களோ, அன்றுதான்  அமெரிக்கர்கள்  இங்கிலாந்தில் இருந்து  தனி நாடாக பிரிவதற்கு  நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்கள்.  அவர்கள்  ஒரே மொழி ஒரே மதத்தைச் சேர்ந்த மக்கள்.   வங்காளதேசம்  தனி நாடாக  பிரிந்ததற்குக் காரணம் உருது மொழி பேசும் மேற்குப் பாக்கிஸ்தான் மக்கள் வங்க மொழி பேசும் மக்களுக்கு உரிய அரசியல் உரிமைகளைத் தராததுதான்.  இவர்கள் ஒரே மதத்தை ஆனால் வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள்.  நேர்மையாக, ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும்  அவர்களுக்கு உரிய  அரசியல்  உரிமைகளையும் சமூக உரிமைகளையும் வழங்கி விட்டால், பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக இருந்து நன்றாக வாழ்வார்கள் என்பதற்கு நான்கு மொழிகள்  பேசப்படும் ஸ்விட்சர்லாந்து, மூன்று மொழிகள் பேசப்படும் பெல்ஜியம் ஆகியவை தலைசிறந்த  எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்தியாவில் இந்து ராஷ்டிரா வர வேண்டும் என்று சொல்வதும்  அந்த இந்து என்ற போர்வையில் இந்நாட்டைப்  பிராமணராஷ்டிராவாகக் கட்டமைக்க முயல்வதும் மட்டுமே இந்நாட்டில் இனிவரும் காலங்களில் அமைதிக்குப் பெரும் பங்கம் விளைவிக்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கும். இந்து ராஷ்டிரா என்பது இன்றைய இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானதும் எதிரானதும் மட்டுமல்ல. அந்த இந்து ராஷ்டிராவில்  சீரிய மனிதப் பண்பு இருக்காது. அங்கே சனாதன .அசிங்கங்களும் அநியாயங்களும் தலைவிரித்தாடும். அவற்றை பிராமணரல்லாத மக்கள் எதிர்க்கவே செய்வர். ஆனாலும், நமது ஆட்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிராமண உயர்வுக்குத் (Brahmin Supremacy) தேவையான அனைத்து அநியாயங்களையும் தொடர்ந்து செய்வார்கள். அதன் ஒரு பகுதிதான் இன்று காலிஸ்தான் பிரிவினையைத் தடுக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்காவிலும்  கனடாவிலும் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களைக் கூலிப்படையை ஏவிக் கொல்ல முயலும் இந்திய அரசு அதிகாரிகளின் செயல். கனடாவில் இன்றும் கூட க்விபெக் (Quebec) பகுதிக்கான பிரிவினைப் பரப்புரை தடைசெய்யப்படவில்லை. இருந்தும் கூட, கனடாவில்  அனைவருக்கும் முழு உரிமை உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால், கிவிபெக் பகுதியில் வாழும் பெருவாரியான பிரெஞ்ச் மக்கள் இருமுறை (1980லும் 1995லும்) நடந்த கருத்துக் கணிப்புகளில் (Referendum) கனடாவில் உள்ள ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து வாழ விரும்பியே வாக்களித்தனர். காஷ்மீரில் அவ்வாறான கருத்துக் கணிப்பு நடத்த என்ன தடை? பிரிவினை என்று பேசுவது தவறல்ல. பிரிவினை பற்றி ஒரு பிரிவு மக்கள் பேசுவதற்கான காரணத்தை அரசாங்கம் உருவாக்குவதுதான் தவறு. ஆனால், மத்திய அரசில் உள்ள அதிகாரிகள் இவ்வாறான நேர்மையான, செம்மையான மக்களாட்சி இந்நாட்டில் மலர்வதை விரும்பவில்லை. எந்த ஆட்சியாளரையும் இந்நாட்டில் நல்லதோர் மக்களாட்சி மலரச்செய்யவிடமாட்டார்கள், இந்த அதிகாரிகள்.

(அத்திம்பேர் சற்று அமைதி காத்து, பிறகு தனது பேச்சைத் தொடர்கிறார்)

அது மட்டுமல்ல, அம்மாஞ்சி! இந்தியாவிலேயே, வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே திலகர் மீது Sedition வழக்கு தொடரப்பட்டபோது, அதில் திலகர் சார்பாக ஜின்னா வழ்க்கை எடுத்து நடத்தியபோது, அன்றைய் நீதி மன்றம் சுயராஜ்யம் கேட்டுப் போராடுவது Sedition அல்ல என்று தீர்ப்பளித்திருந்தது. (The Division Bench of the High Court of Bombay had, in their decision on 09.11.1916 in Emperor v Bal Gangadhar Tilak, ruled that advocating Swarajya was not synonymous with creating disaffection). இந்த உண்மைகளெல்லாம் மக்களுக்குத் தெரியாது என்று நமது நாக்பூர் ஆட்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மாஞ்சி: இப்படியொரு அரசியல் சூழலை நமது ஆட்கள் உருவாக்கத்தான் வேண்டுமா? எனக்கு இதில் உடன்பாடில்லை, அத்திம்பேர்! அனைவரும் சமம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள நான் தயார்! அநியாயமான வர்ண அடிப்படையிலான ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எனக்குப் பிடிக்கவில்லை.

அத்திம்பேர்: அம்மாஞ்சி! அதிகார மையங்கள் ஒரு வெறியைத் தரும். அதில் உள்ளவர்கள் உன்னைப்போல் நீதி, நேர்மை ஆகியவற்றையெல்லம் பார்க்கமாட்டார்கள். நாக்பூர் கூட்டம் சதுர்வர்ண வெறியில் ஊறிப்போயிருக்கின்ற கூட்டம். எனவே, நம்மவர்களில் உன்னைப்போல் நேர்மையானவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள். இதுதான் வழக்கம். திலகருக்குக் கொடுத்த இடத்தை நம்மவரகள் அன்று ரானடேவுக்கோ, பாரதியாருக்கோ அவர்களின் வாழ்நாளில் ஏன் கொடுக்கவில்லை என்று யோசித்துப்பார்! சாணக்கியனின் அரச பயங்கரவாத முறைகளைப் பற்றிப் படித்துப் பார்! பிராமணீய வல்லாதிக்கம் பற்றிய உண்மைகள் தெரியும்!

(அப்போது ஆபிரகாம் லிங்கன் குறுக்கிடவே, திருவள்ளுவர் திரையில் ஒளிபரப்பை நிறுத்திவிட்டு லிங்கனை நோக்குகிறார்)

ஆபிரகாம் லிங்கன்: ஐயனே! நான் அன்றே சொல்லியிருக்கிறேன். அது இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 28.02.1985 அன்று கூட தலையங்கப் பகுதியில் எடுத்தாளப்பட்டது. நான் சொன்னது இதுதான்: “If, by the mere force of numbers, a majority should deprive a minority of any clearly written constitutional right, it might, in a moral point of view, justify revolution – certainly would, if such a right were a vital one”. இந்தியாவில் ஆட்சியில் உள்ள கட்சியினர் சிந்திக்க வேண்டும். காலங்காலத்துக்கு பிராமணிய அநியாயத்தை அவர்கள் தொடரக்கூடாது. காந்தியடிகள் கற்றுக் கொடுத்த அறவழிப்போராட்டத்திற்கு மக்கள் மீண்டும் புத்துயிர் கொடுத்தால்தான் இந்தியாவில் சதுர்வர்ணக் கொடுமைகள் மறைந்து அது ஒரு நாகரிகமான நாடாக மிளிர இயலும்.

(ஆபிரகாம் லிங்கன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்த அவையோர் தலையசைத்துத் தம் இசைவைத் தெரிவிக்கின்றனர்)                                                                                                                    (தொடரும்)

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *