“பாபர்” என்ற பெயரைக் கேட்டவுடன், இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்தியர்கள் அனைவரும் புருவத்தை உயர்த்துபவர்களே.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் வங்காளதேசம் வரை மிகப்பெரிய நிலப்பரப்பினை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்ய நினைத்த பாபரை உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஸகஸ்தான், துருக்மேனிஸ்தான், அஸர்பைஜான் போன்ற மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது கதாநாயகனாகக் கொண்டாடுகின்றனர்.  ஆசியா  முழுக்கவும் பரவலாக அறியப்பட்ட ஒரு மகா சாம்ராஜ்யத்தின் மன்னராக பாபர் “பாத்ஷா” என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்படுகிறார்.

உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட தீரமிகு பராக்கிரம வாழ்க்கையைக் கொண்ட மாவீரர்களான மாசிடோனியாவில் ஒரு அலெக்ஸாண்டர், ரோமில் ஒரு ஜூலியஸ் சீஸர், மங்கோலியாவில் ஒரு செங்கிஸ்கான் இருந்தது போல,  ஒரே ஒரு பாபர் மட்டும் தான் ஹிந்துஸ்தான் என்ற பெயரில் மாபெரும் நிலமான இந்த மத்திய ஆசியா பகுதிகள்  முழுவதையும்  கட்டியாண்ட பெருமைக்குறியவராக நமது வரலாறுகளில்  காணப்படுகிறார்.

அவருடைய ஒவ்வொரு நிமிட வாழ்க்கையும் அவர் ஒருவரால் மட்டுமே செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது எனக்கூறப்பட்டால் அது மிகையல்ல. அவர் கைப்பற்றிய நிலங்கள் எதுவும் அவரது முப்பாட்டன்களால் தேடிக்  கொடுக்கப்பட்டதல்ல, மாறாக அவரது  உழைப்பாலும், முயற்சிகளாலும் தானே  உருவாக்கியவை.

சந்திரகுப்த மௌரியரையும், அசோகரையும், கணிஷ்கரையும் தவிர்த்துவிட்டு எப்படி இந்திய வரலாற்றை எழுதிவிட முடியாதோ அதேபோல முகலாய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பாபரைத் தவிர்த்துவிட்டு அந்த வரலாற்றை முழுமைப்படுத்திவிட முடியாது. அத்தகைய பெருமைகளை உள்ளடக்கி, தில்லியை தலைமையிடமாகக் கொண்டு பேரரசு ஒன்று நடந்தது என்பதை யாரும் ஒருபோதும்  தட்டிக்கழித்துவிட முடியாது. பொருளாதார வளர்ச்சியில் முகலாயர்கள் அடைந்திருந்த உயர்நிலை, உலக சாம்ராஜ்யங்களை திரும்பிப்பார்க்க வைத்தது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இந்தியாவின் இண்டோ-சரசனிக் எனப்படும் பிரம்மாண்டமும் தனித்துவமும் மிகுந்த கட்டிடக்கலைக்கும், இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரத்துறைகளுக்கு முகலாயர்கள் ஆற்றிய பணி மிகவும் அளப்பறியது. முழுமைபெற்ற அரசியலைப்பு மற்றும் உட்கட்டமைப்பு விவகாரங்களிலும் நிர்வாகப்பணிகளிலும் முகலாயர்களுடைய பங்களிப்பு மிகவும் குறிப்பிட்டு கூறப்படவேண்டியதாக உள்ளது. அவற்றுக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்ததே பாபரின் ஆட்சி.

இந்தியாவுக்கு வந்து ஒருங்கிணைந்த நிலங்களை முகலாய ஆட்சியின் கீழ் பாபர் கொண்டுவந்தார். ஆனால் அவர் உருவாக்க நினைத்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை முழுமையாக அமைக்கும் முன்பே அவரது அந்திமகாலம் நெருங்கிவிட்டிருந்தது. எனினும் எடுத்துக்கொண்ட பணிகளை அந்தரத்தில் விட்டுப்போக மனமில்லாத பாபர், தனது பாபர் நாமா வழியாகவும் அவர் தம் மகனுக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாகவும் அடுத்து வருவோருக்கு  வழிகாட்டிச் சென்றார். அந்த வழிகாட்டுதல் தான் பாபருக்குப் பிறகு முகலாய ஆட்சியை கிபி.1526 முதல் கிபி.1857 வரை, 331 ஆண்டுகள் இந்திய மண்ணில் நிலைப்பெறச் செய்தது. துருக்கியின் உதுமானிய பேரரசுக்கு நிகராக பொருளாதார வல்லமை பெற்றிருந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் வந்து ஆக்கிரமித்தது தனிக்கதை.

பாபர் நாமா மற்றும் அக்பர் நாமா புத்தகங்கள் வாயிலாக மினியேச்சர் ஓவியங்களில் அவர்களது ஒவ்வொரு நடைமுறைகளையும் வரைந்து அவற்றை ஆவணப்படுத்தி வைத்துவிட்டுச்சென்ற முகலாயர்களின் முதல் புள்ளியான பாபரைப்  பற்றி இந்த புத்தகத்தில் சிறிது விளக்க முயற்சித்துள்ளேன். இதில் எனக்கு வியப்பளித்த விஷயம் யாதெனில் கிபி.18ஆம் நூற்றாண்டுகளில் பதிவு செய்ய தொடங்கப்பட்ட ஒவ்வொரு நாட்டின் Fauna & Flora ஆகியவற்றைப் பதிவு செய்யும் ஒரு Ecologist ஆகவும், Geologist ஆகவும் பாபர் தன்னை அடையாளப்படுத்தியிருப்பது தான். (உலகின் முதல் Geologist ஆக அறியப்பட்டும் ஜேம்ஸ் ஹட்டன் (1726-1797) என்பவரால் பதிவாக்கிய விபரங்கள் முதன்முதலில் கிபி.1835 இல் தான் புத்தக வடிவம் பெறுகிறது. ஆனால் பாபரோ அதனை கிபி.16 ஆம் நூற்றாண்டிலேயே சத்தமில்லாமல் செய்துவைத்துவிட்டார்).

பாபர் எழுதியபடியே ஒரு சொல் மாறாமல் அவரது புத்தகம் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் எழுத்தாளரின் கற்பனைக்கும், மிகைப்படுத்தலுக்கும் இடமளிக்காது, இந்திய முஸ்லிம்களை குதூகலப்படுத்தவும் முயற்சி செய்யாது கிடைத்ததை கிடைத்தபடி படைத்திருக்கின்றோம் என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன்.

பாபர் இந்த நூலை எழுதிய காலகட்டம் கிபி.1498 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. அன்று அவர் பேசிய மொழி `சுகதாய்’ எனும் பழைய துருக் மொழியின் ஒரு கிளை மொழியாகும். அவரது காலத்திற்குப் பிறகு முகலாயர்கள் அந்த மொழியை கைவிட்டு ஹிந்துஸ்தானி மொழிகளை பேசப் பழகிக்கொண்டனர். சகதாய், துருக், பாரசீகம், சிந்தி ஆகிய நான்கு மொழிகளின் கூட்டணியே பின்னாளில் உருது மொழி ஆனது.

பாபர் எழுதிய பாபர் நாமாவை அவரது பேரன் அக்பர் பின்னர் பாரசீக மொழியில் மொழிமாற்றுகிறார். அந்த மொழிப்பெயர்ப்பு பிறகு 1820-1821 காலகட்டங்களில் மத்தியகால ஆங்கிலத்தில் வில்லியம் எர்ஸ்கீன் மற்றும் ஜான் லேய்டன் ஆகிய இரண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகளால் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது.   அந்த நூலை அடிப்படையாகக் கொண்டதே நமது இந்த தமிழ் மொழிப்பெயர்ப்பு. ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்காமல் (அர்த்தம் கொடுக்கப்படாமல்)  அப்படியே கொடுக்கப்பட்ட பல பாரசீக, சுகதாய் மொழிச்சொற்களை  தமிழ் வாசகர்களின் வசதிக்காக  உஸ்பெக்-கஸக் மொழி நிகண்டுகளை வைத்து துல்லியமாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளோம். முந்தைய மொழிப்பெயர்ப்புகளை விட நிச்சயமாக இது உங்களது அத்தனை கேள்விகளுக்கும் பதில் தரக்கூடியதாக அமையும் என்ற எதிர்ப்பார்ப்புகளுடன் உங்களிடம் இதனை கொண்டுவந்துள்ளோம்.

மேலும், பாபர் தனது புத்தகத்தை பிற்காலத்தில் யாரும் படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை. மாறாக நாம் இன்று டைரியில் தினக்குறிப்பு எழுதுவது போல அவரும் அன்றைய காலத்தில் அவரது தினசரி வாழ்க்கையை  சாதாரண ஒரு பேச்சு மொழியில் சாட்டு வாக்கியங்களாக, மரபுத்தொடர்களாக, உள்ளூர் சொலவடைகளைக்கொண்டு எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் Idioms and Phrases மாதிரியான வாக்கியங்களை அமைத்து அவர் எழுதியிருப்பதை நமது தமிழ் மரபுக்கு ஏற்றபடி எழுத முயற்சித்துள்ளோம் என்பதையும், அரபும் அல்லாத பாரசீகமும் அல்லாத கிழக்கு ஸ்டெப்பி நிலத்தின் வழக்கொழுந்துபோன ஒரு மொழியினை தமிழ் வழியாக உயிர்ப்பித்துக்கொண்டுவர முயற்சித்துள்ளோம் என்பதனை  தெரிவித்துக்கொண்டு…. கிபி.18,19ஆம் நூற்றாண்டு ஆங்கிலம் என்பது 60% பிரெஞ்சு சொற்களைக் கொண்டது நமக்கு புரிந்துகொள்ள சிக்கலானது என்பதையும் இங்கே தெரிவிக்க விரும்புகின்றோம். பாபருக்குப் பிறகு சுகதாய் மொழி வழக்கொழிந்துவிட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஹிந்து மற்றும் ஹிந்துஸ்தானி என்ற சொற்களை பாபர் தனது புத்தகத்தில் எடுத்தாண்டிருப்பதை வைத்து அவர் வந்தபோதே இங்குள்ள குடிமக்களை ஒட்டுமொத்தமாக ஹிந்துக்கள் எனவும் இந்த மண்ணுக்குறிய மக்களையும் சரி இங்கு ஏற்கனவே ஆட்சியமைத்திருந்த முஸ்லிம் மன்னர்கள் என அறியப்படும் கில்ஜி, கஸினி, லோடி ஆகிய ஆப்கானிய  மரபினரையும் சரி ஒன்று  சேர்த்தே அவர் ஹிந்துஸ்தானி என வர்ணித்து அடையாளப்படுத்தியிருப்பதை அறியமுடிகிறது.

இந்திய முஸ்லிம்கள் மாத்திரமல்லாது இந்தியாவில் வாழும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பாபரின் வரலாற்றுப்புத்தகத்தை மொழிப்பெயர்த்து தரவேண்டும் என்ற ஆசைக்குப் பின்னணியில் இருப்பது `முகலாயர்கள் மீது சித்தரிக்கப்பட்டுள்ள தகாத வாதங்களும் அவர்கள் மீது வைக்கப்படும் சிக்கலான விமர்சனங்களும் உண்மையா?’ எனக் கண்டறிய உருவான ஆவல்தான். ஒருவேளை அவை பொய்யான கட்டமைப்புகளாக இருந்தாலும் கூட  என்னாலும் அவற்றை பொய் என நிரூபிக்க  முடியாது, ஆனாலும் அவர்களது வரலாற்றை உள்ளபடி எழுதுவதன் மூலம் படிக்கும் வாசகர்களே புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். அதற்கு  ஒரு வாய்ப்பாக இப்புத்தகம் அமையும் என்று நம்புகிறேன்.

நவம்பர் 15 முதல் புத்தகம் விற்பனைக்குத் தயாராக உள்ளது.

புத்தகத்தைப் பெற:

கீழுள்ள வாட்ஸ்ஆப் எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும்.

தோழர் அழுதா,

±91-89393-45119

விலை – ரூ.900/-

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *