காதர் பின்னயும் பின்னயும் கிளிப் பிள்ளைக்கு சொல்வதைப் போல சொல்லிவிட்டான். “அங்க போயி மதினியப் பார்த்ததும் கண்டதையும் உளறாதீங்க! உம்மா, பத்திரம் கேட்டு வந்ததாமேனு நைசா பேச்சை ஆரம்பிச்சு அவுங்க மனநிலையைத் தெரிஞ்சுக்கிட்டு அப்பறமா பத்திரம் கேப்பதைப் பத்தி யோசிச்சுப் பேசுண்ணா..”

“அப்பறம் முக்கியமா ஒண்ணு. நாந்தா ஒங்கள அனுப்பினேன்னு உளறி விடாதீங்க..ஆமா..” எல்லாவற்றுக்கும் இக்பால் தலையாட்டினான். ஆனால் இப்போது மதினி கேட்ட கேள்வி அவனுக்குள் பல குடைச்சல்களை உண்டாக்கியது. தொண தொணனு குண்டக்க மண்டக்க எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் சுபாவம் கொண்டவன் இக்பால். உளறுவாயன் என்ற பட்டப்பெயர் கூட அவனுக்கு உண்டு!

மதினியின் கேள்விக்கு பதில் சொல்லியே ஆகணும் அவனுக்குள் சுர்ரென ஏறியது. “சரி நா உங்க பாயிண்டுக்கே வர்றேன். ஏம் மைனி! பெரியவங்களத் தேடி நாம போணுமா.. இல்ல அவுங்க நம்மளத் தேடி வரணுமா? சொல்லுங்க!” சிக்கலான கேள்வியை கேட்டுவிட்ட சந்தோசத்தில் மதினியைப் பார்த்து மெல்ல சிரித்துக்கொண்டான் இக்பால்.

“காதர் பெரிய மனுசனா?” கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெடுக்கென்று கேட்டான் நிஜாம்.

“நா காதர சொல்லலேண்ணா! வாப்பா, உம்மாவ சொல்றேன். அவுங்கள பாக்க நீங்கதானே போவணும்.”

“எங்கள மதிக்காதவன் ஊட்டுக்கு நாங்க எப்டி போவோம் மச்சான்?” ஜாஸ்மின் திருப்பி பதில் கேள்வி கேட்டாள்.

“ரோட்ல பாத்தாக் கூட பாக்காதவன் மாரி மூஞ்சிய திருப்பிக்கிட்டு போறான். அவன் ஊட்டுக்கு நாங்க போறதாக்கும்?” நிஜாம் கொக்கி போட்டான்.

“அவன எதுக்கு நீங்க பாக்குறீங்க? உம்மாவயும் வாப்பாவயும்தானே பாக்கப் போறீங்க..? இதுல என்ன தப்பு சொல்லுங்க?”

“என்னடா நீ லூசு மாதிரி பேசுறே..? அவன் ஊட்டுலதானே அவுங்க இருக்காங்க? எங்கள தேடி அவன் வந்தானா நாங்களும் அங்க போறது மரியாத.. அண்ணன் ஊட்டுக்கு ஒரு எட்டு வந்து பாக்காதவன்  ஊட்டுக்கு நாங்க போறது என்ன மரியாத? வீடு ஓப்பனிங்குக்கு மொத நாள் வந்து ஏனோ தானோனு கூப்பிடுறான்.! அவன் ஊட்டுக்கு தொறந்த ஊட்டுல நாயி நொழையற மாரி  போயி நொழயச் சொல்றியாக்கும்..? நீங்க யாராச்சும் வந்து ஏண்ணா வீடு ஓப்பனிங்குக்கு வரலேனு ஒரு வார்த்த கேட்டீங்களா?” கோபம் கொப்பளிக்க முகம் சிவந்து தம்பியைப் பார்த்து கேட்டான் நிஜாம்.

வாயடைத்துப் போனது போல் பதில் சொல்ல முடியாமல் நிஜாமையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான் இக்பால்.

“இதுக்கு பதில் சொல்லுடா?” நிஜாம் அதட்டினான்.

கொஞ்சநேர மௌனத்திற்குப் பிறகு வாயைத் திறந்த இக்பால், “அண்ணனையும் மைனியையும் எங்க காணம்னு நா அப்பவே காதர்கிட்ட  கேட்டேன்.. ஏன் வரலேன்னு தெரியலன்னு சொன்னான்… வேற விவரம் ஏதும் எனக்குத் தெரியாது… உம்மாவும் கேட்டுது” என்றான்.

“அவன் இங்க எடம் வாங்குற விவரமோ வீடு கட்டுற விவரமோ எதையுமே கடைசிவரை எங்கிட்ட சொல்லவே இல்ல! அப்பிடியென்ன நா அவுனுக்கு ஆகாதவனாயிட்டேன்…? எந்த காரணமும் இல்லாம அப்பிடியென்ன எங்க மேல அவுனுக்கு இவ்வளவு வெறுப்பு? சொல்லு”

அண்ணனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்தபடி இக்பால் மௌனமாக இருந்த நிலையில்,

“தூரமா எங்கயாச்சும் எடம் வாங்கி ஊடு கட்டி எங்ககிட்ட சொல்லாம மறச்சிருந்தா கூட  சரினு உட்டுத்தொலைக்கலாம்! இந்த மொகல்லாவுக்குலயே அடுத்த வீதியில எடம் வாங்கி ஊடும் கட்டுனா எங்குளுக்கு தெரியாமப் போவுமா மச்சான்? எங்குளுக்கு தெரிஞ்சுதுனா நாங்க என்ன அவன் ஊடு கட்டுறத தடுத்துருவமா.. இல்ல அவன் சொத்த அபகரிச்சுருவோமா..? இத எதுக்கு எங்ககிட்ட மறைக்கணும்? அண்ணங்கிட்ட சொல்லாம இதுல என்ன ஒரு அல்பத்தனம்…? சரியான ஈத்தரையா இருக்கான் ச்சை!” மதினியிடமிருந்து இப்படியொரு கடுமையான சொல் வீச்சை – தாக்குதலை இக்பால் எதிர் பார்க்கவில்லை! மதினியின் முகத்தைப் எதிர்கொள்ளவே பயமாக உணர்ந்தான்.

காதர் என்னடானா அண்ணனைப் பற்றி ‘அண்ணன் இப்படி அண்ணன் அப்படி..’ என்று ஒருபாட்டம் புகார் சொல்லிக்கொண்டிருக்கிறான்.!. காதர்தான் எல்லாத்துக்குமே காரணம் அவன் புத்தி ஈத்தரை புத்தி என இவுங்க அவன் மீது இப்பிடி குற்றம் சுமத்தறாங்க! இவுங்க ரெண்டு பேர் சொல்றதும் அவனுக்கு நியாயமாகப்பட்டது. காதர் செய்ததுதான் சரியானதில்லை என நினைத்துக் கொண்டான். இருந்தாலும் அவனுக்கு காதரின் செய்கை குறித்து அவன் மீது குற்றம் எதையும் இப்போது இவர்களிடம் சொல்ல  மனம் வரவில்லை!  ஒரு கோணத்தில் காதர் சொல்வதிலும் அவன் பக்கமும் நியாயம் இருப்பதாகவும்  சரியானதாகவும் தோன்றியது! ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு!

அண்ணன்பாட்டுக்கு தான் தன் குடும்பம்னு ஒதுங்கிக் கொண்டிருக்கார்! மத்த யாரப் பத்தியும் அவருக்கு அக்கற இல்ல! கண்டு கொள்றதும் இல்ல! தம்பியை பிடிக்கலைங்கறதுக்காக  தம்பி மீது உள்ள கோபத்த சாக்கா வச்சுக்கிட்டு வாப்பாவையும் உம்மாவையும் போய் பாக்காமலேயே இருக்காங்க ரெண்டு பேரும்! கூடப்பொறந்தவங்க மேல இவுங்க அக்கறை கொண்டாத்தானே மத்தவங்களும் இவுங்க மேல அக்கறை கொள்ளுவாங்க! இப்பிடி ஈகோ காமிச்சுக்கிட்டு இருந்தா எங்கிருந்து பாசம்  வரும்?

எங்களையெல்லாம் கூப்பிட்டு ஒருவாய் சோறு போட மனசு வர்றதில்லை… இவங்க மேல உள்ள தவறையெல்லாம் மறைச்சுட்டு மத்தவங்களப் பத்தியே அண்ணனும் மைனியும் குத்தம் சொல்லிக்கிட்டிருக்காங்க! இது எந்த வகையில் நியாயம்? நாமும் கொஞ்சம் கோபமா அண்ணன் மேல உள்ள குறைகளப்பத்தி கொஞ்சம் பேசினா என்ன? கோபப்படாம சாந்தமாக பேசிப் பாக்கலாமா ? சொன்னாத்தானே இவுங்களுக்கும் அவுங்க தப்பு தெரியும். கொஞ்சமாச்சும் உணருவாங்கல்ல.. அதுக்கப்பறம் இவுங்க என்ன சொல்றாங்கணு பார்ப்போம். காதர் சொல்லிவிட்ட சங்கதிகளையெல்லாம் மறந்து விட்டு இப்படியாக அவர்களின் பிரச்சனைகள் பற்றி ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தான் இக்பால்.

திடீரென ஞாபகம் வந்தவனாக  வீட்டுப் பத்திரத்தை  எதுக்காக காதர் வாங்கிட்டு வரச்சொல்கிறான் என இப்போது ஒரு எண்ணம் அவனுக்குள் ஓடியது. இக்பாலும் அது பற்றி அவனிடம் விவரம் எதுவும் கேட்கவில்லை ‘நம்ம வீடு நல்ல விலைக்கு போகும் போல! நிறைய பேரு கேக்குறாங்க. பத்திரம் ஜெராக்ஸ் கேக்குறாங்க. இல்லேனா நாம லோன் வாங்கி வேறு எதும் செய்யலாம். வீட்ட போக்கியத்துக்கு குடுத்திருக்கிறதனால வாடகையும் கிடைக்கிறதில்ல! அண்ணன்கிட்ட சொன்னா எதுக்கும் ஒத்து வரமாட்டாரு..!. ஆனா நீ அண்ணன் கிட்ட இந்த விவரம் எதயும் சொல்லக் கூடாது என்ன?’ காதர் அவனிடம் சொன்னது அப்படியே உள்ளுக்குள் மறுபடியும் ஓடியது.

அவனே நேரில் வந்து அண்ணனிடம் காரணத்தைச் சொல்லி கேட்டு வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே…? உம்மாவை அனுப்பி கேட்டிருக்கிறான். இப்போது என்ன அனுப்பி ஆட்டம் காட்டுறான்! இப்ப எதுக்கு தரவாட்டு வீட்டை விக்கணும்? வித்து என்ன செய்யப்போறான்.? என்னவோ செய்யட்டும். வாப்பா சொத்தில் நமக்கும் பாகம் கிடைக்குமே…. அத வச்சு எங்கயாச்சும் எடம் வாங்கிப் போடலாம். இல்லேன்னா போக்கியத்துக்காச்சும் ஒரு வீட்டைப்பார்த்து குடி போலாம். மாசமானா வாடகை குடுக்கவே முடியாம திண்டாட்டமா இருக்கு! அவனுக்குள் இப்படியாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, என்ன இவன் எதுவும் பேசாமல் திடீர்னு வந்த விவரம் எதுவும் சொல்லாம குத்துக்கல்லாட்டம் உக்கார்ந்திட்டிருக்கான் என மனைவியைப் பார்த்து ஜாடை செய்துவிட்டு இக்பாலின் முகத்தையே  பார்த்துக் கொண்டிருந்தான் நிஜாம்.

அநேகமாக வீட்டுப்பத்திரம் விஷயமாக நம்மை ஆழம் பார்க்கத்தான் காதர் இவனை அனுப்பியிருப்பானோ என நிஜாமுக்குள் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. பின் எதற்காக வராதவன் இப்படி வீடு தேடி வரணும்? சிறு வயதில் அண்ணன் தம்பிகளுக்கிடையில் எவ்வளவு பாசமும் நேசமுமாக எப்படியெல்லாம் வளர்ந்தோம்… ஆளானவுடன் அவரவர்களுக்கு குடும்பம் என ஆனவுடன் அந்த பாசமும் பிணைப்பும் ஒற்றுமையும் இப்படி காணாமல் போய்விட்டதே! சங்கடமாக உணர்ந்தான்.

இது மனித மனங்களின் விசித்திரமா… இல்லை வளரும் முறை சரியில்லாததால் ஏற்படும் மாற்றமா?அப்படியென்றால் எத்தனையோ குடும்பங்களில் வயதானாலும் அண்ணன் தம்பிகளிடையே ஒற்றுமை குலையாமல் அதே நேசத்துடன் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார்களே! அது எப்படி? வாப்பாவும் அவருடைய அண்ணன் தம்பிகளும் இன்னும் அதே அன்புடனும் பாசத்துடனும்தானே இருக்கிறார்கள். பேசிக்கொள்கிறார்கள்.!

மாசம் ஒருமுறையாவது அண்ணனை பார்க்க வாப்பா அண்ணன் வீட்டுக்கு சென்று வருகிறார்.. சின்னாப்பாமார்களும் வாப்பாவைத் தேடி வீட்டுக்கு வந்து பார்த்து பேசிவிட்டு செல்கிறார்கள். பழைய கதைகளையெல்லாம் மனம்விட்டு பேசி சிரித்து மகிழ்கிறார்கள்! அந்த ரத்தத்தில் பிறந்த நாங்க ஏன் இப்படி எலியும் பூனையுமா மாறிப்போனோம்? எண்ணங்களின் பிடியில் சிக்கி ஒருவித தவிப்பு நிலையில் ஆழ்ந்திருந்தான் நிஜாம்.

இந்த சூழ்நிலையில் வீட்டுப்பத்திரம் விஷயமாக பேச்சை எடுக்க இக்பால் விரும்பவில்லை. அது மேலும் பேச்சை வளர்த்தி சிக்கலை ஏற்படுத்திவிடும் என பதில் எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான். யாரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அவர்களுக்கிடையே  மௌனமே வார்த்தையாக நீடித்துக்கொண்டிருந்தது. மோந்தி நேரம் ஆவதை உணர்ந்த ஜாஸ்மின் எழுந்து போய் முன் அறைக்கும் வாசல் பக்கமும் உள்ள விளக்குகளுக்கான ஸ்விட்சை போட்டாள். அறை வெளிச்சம் இக்பாலை எழுப்பியது. மெல்ல எழுந்து நின்றபடி “அப்ப நா கிளம்பறேன்..” என்றான்.

“இரிங்க  மச்சான்! நாஷ்டா சாப்புட்டு போலாம்…” என்றாள் ஜாஸ்மின்

“இல்ல மைனி! ரொம்ப நேரமாயிப்போச்சு.. கடைக்குப்போணும்..”

“பத்து நிமிஷம் உக்காருங்க. மச்சான்! பூரி சுடுறேன்..”

“இருடா! டிபன் சாப்பிட்டுப் போ…” நிஜாமும் ஒப்புக்கு சொன்னான்.

“இன்னொரு நாள் வர்றேண்ணா”

“நிஷா என்ன பண்றா ? மக்கள்லாம் எப்பிடியிரிக்காங்க மச்சான்?”

“ம்…” என்று தலையாட்டினான் இக்பால்..

அவன் சென்ற பிறகு, ”என்னங்க  அதிசீமா இருக்கு.!. உங்க தம்பி இப்பிடி திடீர்னு வந்துட்டுப் போறாரு?’ என்றாள் ஜாஸ்மின்.

“அதான் எனக்கும் ஒன்னும் புரியல! எதுக்கு வந்தான்னு ஒன்னும் சொல்லாமப் போறான்! என்னக்கென்னமோ காதர்தா அனுப்பியிருப்பான்னு தோணுது!”

“நானும் இதத்தா நெனச்சங்க!” என்று மெல்ல சிரித்துக் கொண்டாள்  ஜாஸ்மின். (கதை தொடரும்)

கட்டுரையாளர்: ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *