கடந்த பதிவில் விலாயத் பேகத்தின் குடும்பத்தினர் மரணம் வரை படித்தோம். இத்தொடரில் அவர்களுடைய பின்னணி என்ன? அதனை வெளிக்கொணர்ந்தவர் யார் என்பதைப் பார்க்கலாம்.

சைரஸ் இறப்பதற்கு முன்,  அவர் எலான் பெரி என்ற அமேரிக்க பத்திரிகையாளர் பெண்மணிக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். எலான் பெரி, டெல்லியில் இயங்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் தெற்காசியப் பிரிவு பதிப்பிற்கு தலைவராக இருந்தவர்.

வருடத்திற்கு ஒருமுறை வெளிநாட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது வேதனைகளையும் சோதனைகளையும் கூறி பேட்டிகளும் அறிக்கைகளும் வெளியிடுவதையே வேலையாக வைத்திருந்த பேகம் விலாயத்  குடும்பத்தினர், இந்தியர்களையோ இந்திய பத்திரிகைகளையோ தங்களது பூத் பங்களாவுக்குள் அனுமதிக்கமாட்டார்கள். தன் தாயும் சகோதரியும் இறந்த பிறகும் தன்னந்தனியாக மாளிகை வளாகத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்த சைரஸுடன் நட்பாக பேசி தோழமையை ஏற்படுத்திக்கொண்டார் பத்திரிகையாளர் பெரி, இவர்களது நட்பு பதினைந்து மாதங்கள் நீடித்தது, இடைக்கிடை சைரஸை சந்தித்து தனது டாக்குமண்ட்ரிக்கு தேவையான தகவல்களை அவரிடமே பெற்றுவந்த பெரி, மூன்று மாதங்கள் இந்தியாவை விட்டு வெளியே சென்றிருந்தார். அதன் பிறகு சைரஸ் இறந்துவிட்டதாக செய்தி கேள்விப்பட்ட போது அவர் கூறிய தகவலின் அடிப்படையில் தனது புலன் விசாரணையை தொடங்கினார்.

சைரஸ் கூறியதுபடி அவர்கள் சிலநாள் தங்கியிருந்த லக்னோவுக்கு புறப்பட்டார், அங்கு சென்று விசாரித்த போது அவர்கள் சொன்னது அத்தனையும் பொய், இங்குள்ள ராஜகுடும்பத்தினருக்கு அப்படியொரு பெண் பிறக்கவில்லை என உள்ளூர் மக்கள் அடித்துக்கூற, அவரது உறவினர் என அறியப்பட்ட ஷாஹித் என்பவரை சந்திக்க லண்டனில் பிரட்ஃபோர்ட் என்ற நகருக்குச் சென்றார்.

அங்கு இருந்த ஷாஹித் வேறு யாரும் அல்ல, பேகம் விலாயத்தின் மூத்த மகன்தான், லக்னோவில் இறந்துவிட்டதாக கூறப்பட்ட அதே மூத்தமகன். அவர் அங்கு தனது மனைவி, மக்களுடன் சுகமாக வாழ்ந்துவந்தார். லண்டனில் இருந்து இவர்களுக்கு வெஸ்டர்ன் யூனியன்  மணி எக்சேஞ்ச் வழியாக மாதாமாதம் செலவுக்கு பணம் அனுப்பிக்கொண்டிருந்தவரும் இவர் தான் என்ற விபரம் பெரிக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஷாஹித் கொடுத்த தகவலின்படி: விலாயத்தின் கணவர் இனாயத்துல்லாஹ் பட் என்பவர் லக்னோ பல்கலையில் ஆவணக்காப்பாளராக பணிபுரிந்தவர் என்பதும், தேசப் பிரிவினையின் போது இனாயத்துல்லாஹ் அவரது பூர்வீகமான லாகூருக்கு சென்றுவிடலாம் என முடிவெடுத்து, இங்குள்ள சொத்துகளை அப்படியே விட்டுவிட்டு குடும்பத்தைக் கூட்டி பாகிஸ்தான் பக்கம் போய்விட்டதாகவும், அங்கு தந்தைக்கு பெரிய சிவில் சர்வண்ட் வேலை கெடுக்கப்பட்ட போதும், பாகிஸ்தானுக்கு  வந்தது பேகம் விலாயத்திற்கு பிடிக்காமல் போக அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனையில் தம் தந்தை விரைவிலேயே இறந்துவிட்டதாகவும், சகினாவின் உண்மை பெயர் ஃபர்ஹத் மார்ஸியா  என்றும், சைரஸின் உண்மை பெயர் ஆசிஃப்  மிக்கி பட் என்றும் விளக்கம் கொடுத்தார்.

பிறகு பாகிஸ்தானுக்கு வந்த பெரி கண்டுபிடித்த விபரங்கள்: விலாயத்தின் மூத்த மகன் சலாஹுத்தீன் பாகிஸ்தானில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு ஏர் ஃபோர்ஸ் அதிகாரியாக இருந்ததாகவும் (2017 இல் இறந்துபோனார்), தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு அம்மா விலாயத் சென்று பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது அலி போக்ராவுடன் போய் சண்டைபிடித்த காரணத்தால், அவர் விலாயத்தை மனநல மருத்துவமனையில் அனுமதித்து மின்சார நடுக்க சிகிச்சை கொடுக்க உத்தரவிட்டதாகவும், அவர் ஆறு மாதகாலம் மனநல மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்தவர் என பாகிஸ்தானில் உள்ள அவரது உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.

இதன் பின்னர் அதிரடியாக பிள்ளைகளை கூட்டி வந்து இந்தியாவில் இறங்கிய விலாயத் பேகம், தாம் ஔத் ராஜவம்சத்தின் மகாராணி என அறிவித்துக்கொண்டு தங்களுக்கான சலுகைகளை எதிர்பார்த்து அப்போதைய அரசிடம் நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருந்தார் என்பது மீதிக் கதை. இதனை அப்படியே புத்தகமாக எழுதி, “The Jungle Prince of Delhi” என்ற பெயரில் வெளியிட்டார் எலான் பெரி. 2019இல் Bertrand Russell விருது வாங்கிய அந்த புத்தகம், 2020ஆம்  ஆண்டு புலிட்சர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் இவற்றை மறுத்து அறிக்கை வெளியிட்ட இந்திய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சயீத் நக்வி கூறியதாவது: வழக்கம்போல இந்திய பத்திரிகையாளர் ஒருவருடைய துணை இல்லாமல் பரபரப்பிற்காகவும் இரகசியத்தை கண்டுபிடித்தோம் என்ற பெருமையை தட்டிச்செல்லவும் இந்த புத்தகம் விபரங்கள் போதாமல் எழுதப்பட்டுள்ளதாகவும், இதில் உண்மைகள் பல விடப்பட்டுள்ளதாகவும், இந்திய முஸ்லிம் வம்சாவளிகளில் சுன்னி முஸ்லிம் மக்கள் மட்டுமே “பட்” என்ற பிரிவுப் பெயரை சூட்டிக்கொள்வார்கள், அவர்களை இப்போதும் உபி, கஷ்மீரில் காணமுடியும், ஆனால் இவர்களை ஷியா முஸ்லிம் என கூறியதே மிகப்பெரிய தவறு என விளக்கியிருந்தார்.

இந்தக் கதையை அப்படியே எடுத்து மீரா நாயர் தற்போது வெப் சீரீஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. மேலும் பேகம் விலாயத், அவரது பூர்வீகம்  பற்றிய சில தகவல்கள் அடுத்த பதிவில்.

கட்டுரையாளர்: நஸ்ரத் எஸ். ரோஸி

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *