உண்மை என்னவென்று ஆராய மாட்டேன் என்பவன் வெறியன்;

உண்மை என்னவென்று ஆராய இயலாதவன் முட்டாள்;

உண்மை என்னவென்று ஆராய அஞ்சுபவன் அடிமை”

– எச். ட்ரம்மண்ட்

19.03.1996ல் ஆந்திர அரசுக்கெதிராக நாராயண தீட்திதலு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் சனாதன தர்மம் என்பது “நிலையான மதிப்புள்ளது” என்றும் இதற்கு காலம் இடம் என்ற வரையறைகளெல்லாம் கிடையாது என்று கூறியுள்ளது.  (“Our dharma is said to be `Sanatana’ i.e. one which has eternal values; one which is neither time-bound nor space-bound. It is because of this that Rg. Veda has referred to the existence `Sanatan Dharmani’. A.S. Narayana Deekshitulu Vs. State of Andhra Pradesh – W.P. 1063, 1090, 1374 of 1987 & 173 of 1990).

பின்னர், சிதம்பரம் கோயில் வழக்கில் 16.12.2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முதல் பத்தியிலேயே சனாதன தர்மம் என்றால் என்ன விளக்கம் தரப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தினை மனதில் கொண்டு அந்த வழக்கில் உள்ள சிக்கல்களை ஆராய்வதாக உச்சநீதி மன்றம் தெரிவித்தது.

அந்த விளக்கமாவது: “மதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்து மதம், பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டதாகும். ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையைத்தான் அனைவரும் பின்பற்றவேண்டும் என்றோ ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை யாரும் பின்பற்றக்கூடாது என்றோ இந்து மதத்தில் கட்டாயம் ஏதும் கிடையாது.  இந்த மதத்திற்கு எந்த ஒரு தனி நபரும் நிறுவனர் அல்லர்; எந்த ஒரு தனிப்பட்ட சமயநூலும் கிடையாது; எந்த ஒற்றைத் தொகுதியான அறிவுரைகளும்  கிடையாது. இது சனாதன தர்மம் என்று விவரிக்கப்படுகிறது, அதாவது, நிலையான நம்பிக்கை. ஏனெனில், இந்து மதம் பல நூற்றாண்டுகளாக சேர்த்துவைக்கப்பட்ட ஞானத்தையும் எழுச்சியுணர்வையும் அறிவுரையாகப் பரப்ப விழைகிறது. மேற்கண்ட கொள்கைக் கட்டளைகளை மனதில் கொண்டு நாம் மேலே செல்கிறோம்”. (Ranjan Gogoi: “1. Religion incorporates the particular belief(s) that a group of people subscribe to. Hinduism, as a religion, incorporates all forms of belief without mandating the selection or elimination of any one single belief. It is a religion that has no single founder; no single scripture and no single set of teachings. It has been described as Sanatan Dharma, namely, eternal faith, as it is the collective wisdom and inspiration of the centuries that Hinduism seeks to preach and propagate. It is keeping in mind the above precepts that we will proceed further.” – W.P. 354 355, 383 & 384 of 2006).

இவற்றிலிருந்து ‘சனாதன தர்மம்’ என்றால் என்ன யாரும் வரையறுத்துச் சொல்லவோ, அல்லது தெளிவாக விளக்கவோ இயலவில்லை என்ற உண்மை மட்டுமல்ல, அந்தச் சொல்லாடல் சமூக வாழ்வுக்கும் சமய வழிபாட்டு முறைக்கும் எந்த விதத்தில் தேவை என்றுகூட அவர்களால் விளக்க இயலவில்லை என்ற உண்மை தெளிவாகிறது.   இருந்தும் பிராமண இனத்தாரின் தலைவர்கள் இந்தச் சொல்லாடலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? இது காறும் வரலாற்றில் நடந்த பல நிகழ்வுகளைக் காணும்போது இந்தச் சொல்லாடலானது, பிராமணர் உயர்ந்தோர் என்ற கொள்கையை (Brahmin Supremacist Theory) மறைமுகமாகச் சொல்லிவைக்கவும், அதை மற்றவர்கள் ஏற்கவைத்து பிராமணர்களின் வல்லாதிக்கத்தை நடைமுறைப்படுத்தவும், பிராமணரை உயர்வாகக் கருத வேண்டியது பிராமணரல்லாதோரின் கடமை என்று ஆக்கி, அதனை ஒரு தர்மம் – அதாவது சட்டம் – என்று காட்டி, நீதி மன்றங்கள் மூலமாகவே, பிராமணரல்லாத மக்களை அடக்கி, முடக்கி, ஒடுக்கி வைத்திருக்கப் பயன்படும் ஒரு கருவிதான் என்று தெரிகிறது.

இந்தச் சொல்லாட்சி இப்போது ஆரியர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் வல்லாதிக்கத்திற்கான அடிப்படை வேலைகளைச் செய்து வைத்துவிட்டோம் என்று கருதுவதுதான். சமுகத்தின் மீது அவர்கள் பிடி மேலும் இறுகுவதற்காக சனாதன தர்மம் என்ற சொல்லை இப்போது வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

‘இந்து’ என்ற சொல்லுக்கே இன்று வரை சட்டபூர்வமான நேர்மறை விளக்கம் தரமுன்வராத கூட்டத்தினர் ‘சனாதன தர்மம்’ என்ற சொல்லுக்கா இனி விளக்கம் தரப்போகின்றனர்? ஆயினும் இந்த சொற்களை வைத்து இந்நாட்டில் அவர்களால் வரலாறு முழுதும்  பல் அட்டூழியங்கள் செய்ய முடிந்தது.

பூசகர்களுக்கு நிலையான குத்தகை நிலம் பெற உதவிய சனாதன தர்மம்:

கோயில் பூசகருக்கு நிலையான குத்தகைக்கு  நிலத்தைக் கொடுப்பது தொடர்பான ஒரு வழக்கில்  ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்  “எந்தக் கோயில் கட்டினாலும், அதில் பண்டா  இருக்கவேண்டியது  சனாதான தர்மத்தின் படி  இன்றியமையாதது” என்று பலாமு மாவட்ட இணை ஆணையர் தெரிவித்திருந்த கருத்தைப் பதிவு செய்தது. கோயிலில் பண்டா பூசகர்களை நியமிக்கவேண்டிய கட்டாயத்தைக் காட்ட சனாதன தர்மம் இங்கே அரசு அலுவலர்களால் பயன்படுத்தப்பட்டது. (“The petitioner thereafter moved the Deputy Commissioner in appeal against that order and the Deputy Commissioner, coming to the findings that, “the families are Pujari Families. If any temple is constructed, a Panda is indispensable for a temple according to Sanatan Dharma”, dismissed the appeal.” This observation of the Deputy Commissioner, Palamau District, under the Privileged Persons Homestead Tenancy Rules, 1948. has been recorded in the judgment of the Jharkhand High Court in Lal Pratap Nath Shahdeo vs State Of Jharkhand on 13.12.2002.

பெண்டிர் பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள உதவிய சனாதன தர்மம்:

ரிக் வேதம் ஒரு வெறுப்பு இலக்கியம்.  இம்மண்ணில்  சிவனை வழிபட்டு வந்த  மக்களையும்  சிவனையும் வேத மதத்தைச் சேர்ந்தவர்கள் சிஸ்னதேவா என்றும் சிஸ்னதேவதா என்றும் இழித்து உரைத்திருப்பதிலிருந்தே அவர்கள் எவ்வளவு வெறுப்போடு இம்மண்ணின் மைந்தர்களை  ஏளனப்படுத்தியுள்ளனர் என்பது தெரியவரும். அவர்கள் உருவாக்கியுள்ள நால்வர்ண அமைப்பும் அவ்வாறே அவர்களுடைய வெறுப்பில் பிறந்ததுதான். அவர்கள் எழுதிய மகாபாரதம் என்ற நூலும் ஒரு காமசாஸ்திரமே என்று, (கொக்கோகா என்ற பண்டிதர் எழுதிய) ரதி ரகசியம் என்ற நூலுக்கு 1965 ஆம் ஆண்டு அணிந்துரை எழுதியுள்ள வி. இராகவன் கூறுகிறார். இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். “Of the two epics, the Mahabharata, which calls itself a Kama Sastra as much as a Sastra of the other three Purusharthas, …..” (Page v -Foreword by V. Raghavan, Professor of Sanskrit, University of Madras – Rati Rahasya – of Pandit Kokkoka – Translated by S.C. Upadyaya – First Edition – 1965).

இராமாயணம் எழுதப்ப்ட்ட காலம், புத்தர் காலத்திற்கும் (கி.மு. 500) அலெக்சாண்டர் காலத்திற்கும் (கி.மு. 323)  பிற்பட்டது ஆகும். இதற்கான சான்றுகள் பல இராமாயணத்திலேயே உள்ளன. புத்தரைத் திட்டி, அவர் திருடர், வேத நிந்தகர், நாத்திகர் என்றெல்லாம் வால்மீகி இராமாயணத்தில் எழுதப்பட்டிருப்பதிலிருந்தே, இந்நூல் புத்தர் காலத்திற்குப் பின் எழுதப்பட்டது என்பதைத் தெளிவாக்கும். அலெக்சாண்டர் காலத்திற்குப் பின்னர்தான் இன்னூல் எழுதப்பட்டது என்ற உண்மையும் எண்ணற்ற சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. (The cultural contact established after the invasion of Alexander and fortified by the marriage of the daughter of Seleucus Nicator with Chandragupta Maurya enabled the Brahmins to have access to the Greek literature. It was then that the Aryans who had come to know about the epics of Greeks, got ideas to better the performance of Buddhist bikkus in using stories to propagate their religion. Ramayana and Mahabaratha were the result of such an idea. Also, that was the era, the era after the invasion of Alexander, that witnessed the great impact of Chaldaean astronomy on the astronomy of the people of the sub-continent. It is to this source that the division of the week into seven days, named after the sun, moon and five planets is traced. This was “apparently borrowed directly from Alexandria by the Indians, as it is mentioned only in the later astronomical works” -(Page 15 – Intercourse between India and the Western World – H. G. Rawlinson – 1926. Also Pages 188 to 205 – Antiquities of Ancient India – on Astronomy, Geography and Cosmology – Lionell D. Barnett – 1913). For more ref: Page 43-47 – Right to Priesthood – by Vaeyurutholibangan.) அந்த இராமாயணத்திற்குப் பிற்பட்ட நூல்தான் மகாபாரதம். அந்த மகாபாரதம்தான், பிராமணர்கள் எவர் மனைவியை வேண்டுமாயினும்  கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்றுவிடும் வழக்கம் வெகுவாக இருந்ததைப் பதிவுசெய்துள்ளது.

ஒருநாள், உத்தலகா என்பவர் தனது மனைவியுடனும் தனது மகன் ஸ்வேதகேதுவுடனும் உட்கார்ந்திருந்தார். அப்போது பிராமணர் ஒருவர் வந்து உத்தலகாவின் மனைவியின் கையைப்பிடித்து இழுத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். தனது தாயை வேறொருவன் அழைத்துச் சென்றது கண்ட ஸ்வேதகேது கொந்தளித்தான். ஆனால், அது வழக்கம்தான் என்று அவனது தந்தை உத்தலகா அவனை சமாதானப்படுத்த முயலுகிறார். (One day, in the presence of Uddalaka, another Brahmana seized Swetaketu’s mother’s hand, and said, ‘Come with me!’ and she went with him. Thinking his mother had been taken by force, Swetaketu was furious. Seeing his son’s anger, Uddalaka said gently, ‘Do not be angry, my child. The women of every varna are entirely free, and their freedom is accepted since time out of mind. In sexual matters, they behave even like cows, and it is lawful and just.’ – Canto 122 – Sambhava Parva – The Complete Mahabharata – Ramesh Menon).

பாண்டு என்ற அரசர் தனது மனைவி குந்தியிடம் அவள் யாராவது சிறந்த பிராமணனைச் சேர்ந்து தனக்குக் குழந்தைகள் பெற்றுத் தருமாறு கோருகிறார். (ibid.). வியாசர் இவற்றையெல்லாம் சனாதன தர்மம் என்று கூறுகிறார். வரலாற்றாய்வாளர் எல். பி. கெனி  “பாண்டுவுக்கும் குந்திக்கும் நடுவில் நடந்த உரையாடலே உடலுறவு தொடர்பான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத சனாதன தர்மம் அன்றைய சமூக அமைப்பில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது என்று கூறுகிறார். யுதீஷ்டிரன் இதனை நியாயப்படுத்துவது பற்றியும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

பிஷ்மர் மூன்று அரசகுமாரிகளைக் கடத்தி வந்து தனது சகோதரன் விசித்திரவிர்யானுக்குத் திருமணம் செய்து வைக்க முயலும் நிகழ்வுகள், அம்மூவரில் இருவரை விசித்திரவிர்யான் திருமணம் செய்தபின் இறந்து போனதால்,, சத்யவதி தனது மகனான வியாசனை அனுப்பி நியோக முறையில் அந்த இரு கைம்பெண்களையும் சேர்ந்து  குழந்தை பெற்றுத்தருமாறு அறிவுறுத்திய விவரங்களும் மகாபாரதத்தில் பதிவாகியுள்ளன. (Mahabharata refers not only to the seizing of women by force but also to their sharing. Kunti was shared by Dharma, Vayu and Indra and gave birth to Yudhistira, Bhima and Arjuna from them(Adi Parvan-CXXIII) and Madri who gave birth to Nakula and Sahadeva was shared by the Ashwini Kumaras(Adi Parvan –CXXIV). Justifying this custom, Yudhisthira not only states that it was a righteous practice followed by the ancestors of the Pandavas, but he even refers to Gautami being the wife of seven rsis (rishis) and Vurski being shared by the ten pracetasa brothers in the past(Adi Parvan –CXCV. CXCVII).  Vyasa has described this practice as Sanatana Dharma (Adi Parvan. CXXII, CXCVII). The historian L B Keny also emphasizes that “the dialogue between Pandu and Kunti confirms the existence of this Sanatana Dharma where society had no sex-restrictions and women roamed about freely seeking satisfaction of their sex desires” Pages 30-33-Bharata war and Puranic Genealogies- Paper presented by L B Keny and edited by D C Sirkar and published by the University of Calcutta’s Centre of Advanced Study in Ancient History and Culture).

தீவிரக் கல்வியும் அலங்காரக் கல்வியும்:

பிராமணர்களுக்கு தீவிரக் கல்வியும், சத்திரிய வைசியர்களுக்கு அலங்காரக் கல்வியும் கொடுத்து சூத்திரனுக்குக் கல்வியே இல்லாமல் செய்தது சனாதனக் கொள்கைக்காரர்களின் சதிச்செயலாகும்.  (In the ancient India, Brahmins were given “intensive study” while the other two were given only “ceremonial study”. (Page -20 – Some Aspect of Education In Ancient India – Dr.C. Kunhan Raja – Professor of Sanskrit, University of Madras – 1949).

இதற்கு மாறாக  புத்த சமயம் கோலோச்சிய காலத்தில்  சூத்திரர்களுக்கு  மிகப் பெரும் கல்வி கிடைத்தது  அவர்கள் படித்த சான்றோர்களாக ஆனார்கள் புத்த பிக்குகளாகவே கூட அவர்களால் ஆக முடிந்தது. அப்போது, சூத்திரர்களுக்கு  துறவியாகும் உரிமை இருந்தது  அவர்கள் புத்த விகாரைகளிலே மற்ற பிக்குகளோடு தங்கவும் முடிந்தது, புத்தபிக்குகளால்தான்  சூத்திரர்கள் படித்து  முன்னேற முடிந்தது என்ற காரணத்தால் புத்த பிக்குகளின் மேல் இருந்த கோபத்தை  சூத்திர துறவிகளின் மீது காட்டினர். அதற்காகத் தனியாக சட்டம் இயற்றினார்கள்  யாராவது சமயச்சடங்குகளிலோ அல்லது  முன்னோர்களுக்கு செய்யும் பூஜைகளிலோ சூத்திரத் துறவிக்கு அழைத்து உணவு அளித்தால்  அவர்களுக்கு தண்டனை உண்டு என்று  யக்ஞ்வல்கீயர் ஒரு  சட்டம் இயற்றினார். “ஒரு சூத்திரனுக்கு  எழுத்து மட்டுமே  கற்று இருந்தால் கூட அவனை  எட்டத்திலேயே நிறுத்த வேண்டும்”  என்று சட்டம் இயற்றினார்கள் புத்த சமயத் துறவிகளை  சூத்திரத்துறவி என்று  சாணக்கியர்  தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டார். (Aswagosha in his Vajrachedika claims that the Sudra Buddhists were as learned as Brahmanas. The Sudra was excluded from Vedic but not from secular studies. Among Buddhists there was no exclusion of Sudras from any kind of learning, and they were eligible even for the monastic life. The Buddhist monk was identified with the learned Sudra and much of the animus against the former was transferred to the latter. Yagnavalkiya (II. 235) lays down that he who feeds the Sudra ascetic at religious and Sraddha ceremonies is liable to punishment. This is obviously aimed against hospitality to the Buddhist monk. Such bitter statements as that the Sudra who has learned even the alphabet should be kept at a distance reflect only the animus against the Buddhist. The Buddhist ascetic is described by Kautilya (Arthasastra, Mysore ed. 1909, p.199) as vrsla-pravrajita – i.e., Sudra ascetic.” (Page 158 – Rajadharma – K.V.Rangaswamy Iyengar – The Adyar Library – 1941)

அம்பேத்கர் தீவிரமாக எதிர்த்த சனாதன தர்மம்:

அம்பேத்கர் சனாதனத்தைத் தீவிரமாக எதிர்த்தார்.சனாதனம் இல்லாத நிலை உருவாக்கப்பெறவேண்டும் என்று கூறினார். (“Fourthly, the Hindus must consider whether the time has not come for them to recognize that there is nothing fixed, nothing eternal, nothing sanatan; that everything is changing, that change is the law of life for individuals as well as for society. “ – Page 79 – Annihilation of Caste – B. R. Ambedkar – Third Edition of 1944.). அவர் சொன்னதைச் செய்து காட்டவேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும் இன்று அதிகார மையத்தில் உள்ள காவிக் கொடியோர் கூட்டத்தின் வெறித்தனமான (fanatical) செயல்பாடுகள் நமக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.

இறை வழிபாடும் சனாதனமும் ஒன்றுக்கொன்று எவ்விதத் தொடர்பும் இல்லாதவை. இறை வழிபாடு என்பது இந்தத் துணைக் கண்டத்தில் ஆரியர் நுழைந்த கி.மு. 1500 க்கு முன்னரே இருந்து வந்தது. இறை வழிபாடு செய்வது என்பது சனாதனம் ஆகாது. பிராமணர்களை வழிபாடு செய்யவேண்டும் என்று நினைப்பதுதான் சனாதனம்.

பிராமணர்களைப் பூசுரர்கள் (பூமியில் கடவுள்கள் – பூ+ சுரர் = பூசுரர்: கடவுள் அல்லாதவர்கள் = அ+ சுரர் = அசுரர்) என்று அனைவரும் ஏற்கவேண்டும் என்ற நோக்கில் பலவிதமான சதிச் செயல்களை இன்று காவிக் கொடியோர்கள் நடைமுறைப்படுத்த முயல்வதுதான் சனாதனம். இந்த நினைப்பு உளளவர்களால்தான் இந்தியா இன்று வரை முன்னேறாமல் உள்ளது என்று ஆபே தூபே முதலான பல அறிஞர் பெருமக்கள் 1800 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கூறிவருகின்றனர். மக்கள் அனைவரும் சமமே என்ற நிலை வரவேண்டுமானால், சனாதன தர்மம் என்ற பிராமண உயர்வுக் கொள்கை (Brahmanical Supremacist Theory) முறியடிக்கப்படவேண்டும். சனாதனம் கொடியது. சனாதனத்தை வெல்வோம். காவிக் கொடியோர் மனம் மாற்றுவோம். ‘பொய்யினை மெய்யினால் வெல்’ என்பது அந்தக் காலத்து நாளந்தா பல்கலைக்கழக்த்தின் அறிவுரை ஆகும். (தொடரும்)

கட்டுரையாளர்: வேயுறுதோளிபங்கன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *