இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த பலருடைய வரலாறுகளும் தகவல்களும் நமக்கு 75 ஆண்டுகளை கடந்தபிறகு தான் சிறிது சிறிதாக கிடைக்கப்பெறுகிறது. அதுவும் மதச்சார்பற்ற பல நல்ல எழுத்தாளர்களும், ஆவணச் சேகரிப்பாளர்களும், வரலாற்றுப்பகுப்பாய்வாளர்களும் களமிறங்கி, டெல்லி மியூசியத்தில் ஆழ்ந்து உறங்கிக்கடக்கும் பல மரப்பேழைகளை தூசி துடைத்து தட்டியெழுப்பி அதன் கர்ப்பங்களில் ஒளித்தும் புதைத்தும், இன்னும் சிதைத்தும் வைக்கப்பட்ட பல நல்ல நேர்மையான சீர்த்திருத்தவாதிகளுடைய ஊர், பேர், சம்பவம் என அனைத்து விபரங்களையும் பாராபட்சமின்றி உலகறியச் செய்து வருகின்றனர். அவை தற்போது பத்திரிகைகள் வாயிலாகவும்,   சமூகக்காட்சி ஊடகங்கள் வாயிலாகவும் நமக்கு அரிதாகக் கிடைத்து வருகிறது.

நமக்குத் தெரிந்த நமது ஊர் தியாகிகளைப் பற்றிக்கூட நாம் இன்னும் வெளியுலகிற்கு பெரிதாக அறிவித்துக்கொள்ளாமலே காலந்தாழ்த்தி வருகிறோம். அவரது உறவினர், அவரது வாரிசுகள் போன்றவரை தொடர்பு கொண்டு தரவுகள் சேகரிக்க வழியில்லாமல் பல விஷயங்கள் மறக்கடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் நிச்சயமாக ஆணாகவோ பெண்ணாகவோ வெள்ளையனை வேரறுக்கத் துடித்த போராளிகளும், காந்திய முறையில் சாத்வீகமாக போராடிய தியாகிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

அவ்வாறு அன்றைய ஒருங்கிணைந்த இந்திய சமஸ்தானங்களில் மதராஸுக்கு நிகராக பெரிய மாகாணமாக அறியப்பட்ட மைசூர் பிரசிடென்ஸியின் மிக செல்வாக்குமிகு தலைவராகவும், இந்திய விடுதலைக்காக போராடியவரும் மகாத்மா காந்தி, அபுல்கலாம் ஆசாத் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தவருமான `முஸ்லிம் வேலூரி’ என்கிற ஒரு சமூகப்போராளி பற்றி சமீபத்திய எனது பெங்களூரு, மைசூரு பிரயாணங்களின் போது சுருக்கமாக அறியப்பெற்றேன். தகவலை எனக்கு கூறியவர் ஒரு மதரஸா ஆலிம்.

ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு அருகே கஞ்சம் என்ற பகுதியில் கிபி.1883இல் பிறந்தவர் முஹம்மது அப்துல் வாஹித் கான். பெரும்பாலான தனது இளமைப் பருவத்தை வேலூர் மதரஸாவில் கழித்தவர் இவர். இவருடைய தந்தை பிரிட்டிஷ் ராஜ் நடத்திய நிர்வாகத்தில் அதிகாரியாக பணியாற்றிய போதும் இவருக்கு பிரிட்டிஷார் மீதான வெறுப்பிற்கு அவர்களது ஏகாதிபத்யம் காரணமாக அமைந்தது.

மதரஸா படிப்பு முடிந்து, தனது உறவினர் ஒருவர் நடத்திய கப்பல் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டே  பம்பாயில் இருந்து பர்மா, சுமத்ரா, ஜாவா, மொரிசியஸ், சிலோன், மடகாஸ்கர் போன்ற கீழ்த்திசை தேசங்களுக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் சென்று வந்தார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் அவருக்கு மகாத்மா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தாடி வைத்துக்கொள்வதால் அடிக்கடி பிரிட்டிஷாருடைய கேலி, கிண்டலுக்கு ஆளான வாஹித் கான், அவர்களை ஆத்திரத்தில் அடிக்க கிளம்பிவிடுவாராம். பிறகு அவருக்கு காந்தியின் பொறுமை மிகவும் பிடித்துப்போய் காந்திய வழியில் இந்திய சுதந்திரப்போராட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கினார்.

கிலாஃபத் இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட அவர் சுதந்திரப்போராட்ட வீரர்களான முகம்மது அலி, சௌக்கத் அலி, முக்தார் அகமது அன்சாரி, ஹக்கிம் அஜ்மல் கான், சைஃபுத்தீன் கிச்லேவ் ஆகியோருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு பெற்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடாவடிகளுக்கு எதிராக அவரது எழுச்சிமிகு உரைகள் யாவும், 1924  முதல் 1927 வரை அவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை சிறையில் அடைத்தது. பெங்களூருவில் அவரது உரை நிகழ்த்தப்பட போகிறது எனில் அங்கே மக்கள் இந்துமகா சமுத்திரம் போல திரண்டுவிடுவார்கள். பிரிட்டிஷாரை கேலி, கிண்டல் செய்து அவர் நிகழ்த்தும் உரைகள் யாவும் அல்லாமா இக்பால் போன்றவர்களை மேடையிலேயே விழுந்து விழுந்து சிரிக்க வைக்குமாம்.

முஸ்லிம் வேலூரி அவர்கள் வேலூர் மதரஸாவில் மார்க்கம் பயின்ற ஆலிம் ஆதலால் அவரை அனைவரும் வேலூரி என்றே செல்லப்பெயர் கொண்டு அழைத்தனர். இறுதிவரை முஸ்லிம் வேலூரி என்பதே அவரது அடையாளப்பெயரும் ஆனது. சுதந்திரப் போராட்டக்களங்களில் ஒரு போராளியாக மாத்திரமல்லாது தன்னை ஒரு முழுநேர சமூக சேவகராகவும், எளிய மக்களின் ஆபத்பாண்டவராகவும் இந்த சமூகத்திற்கு தன்னை  அர்ப்பணித்திருந்தார் வேலூரி.

சுதந்திரம் வேண்டி போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் செய்து பிரிட்டிஷ் அடக்குமுறையால் உயிரிழந்த மக்களின் அநாதையாக்கப்பட்ட குழந்தைகளை பேணி வளர்க்க மைசூருவிலும் கடப்பாவிலும் ஆதரவு நிலையங்களைத் திறந்து வைத்தார். பல்வேறு தலைவர்களிடமும் பொதுமக்களிடமும் சிறிது சிறிதாக சேமித்த பணத்தில் அவர் அந்த ஆதரவு இல்லங்களை நடத்தினார். காங்கிரஸின் பல மூத்த தலைவர்களின் நட்பில் இருந்த வேலூரி அவர்களுக்கு இந்திய-பாகிஸ்தான் என்ற  இருதேசக்கொள்கை சுத்தமாக பிடிக்கவில்லை எனவே டெல்லிக்கு போவதை தவிர்த்து வந்தார்.

1950இல் கெங்கல் ஹனுமந்தைய்யா தலைமையில் மைசூருவில் அமைந்த சட்டமன்ற ஆட்சியில் வேலூரி அவர்களுக்கும் ஒரு பதவி வழங்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்களே தனிப்பட்ட முறையில் வந்து மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டுச் செல்லும் ஆளுமையாக இருந்த வேலூரி அவர்கள், 1977இல் வேலூர் ஜெயநகரில் இயற்கை எய்தினார்.

இந்த தகவல்களை ஒரு சிறிய புத்தகம் வாயிலாக நமக்கு அறிவிப்பவர் முஸ்லிம் வேலூரியின் பேத்தியான மருத்துவர் ஷகீரா கானம் அவர்கள். தற்போது பெங்களூரு அல்-அமீன் டிகிரி காலேஜில் இந்தி ஆசிரியையாக இருக்கும் அவர் தான், மறக்கடிக்கப்பட்ட தன் நாநாவின் புகழை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் ஆவார். மகாத்மா காந்தியின் அந்தரங்க காரியதரிசியாக இருந்த துளசிதாஸ் யாதவ் அவர்களிடமிருந்த கடிதங்கள் சிலவற்றில் பாட்டனார் முஸ்லிம் வேலூரி குறித்த தகவல் இருப்பதை அறிந்து அதனை வாங்கி பத்திரப்படுத்தி வைத்துள்ளார் ஷகிரா கானம்.

கட்டுரையாளர்: நஸ்ரத் எஸ். ரோஸி

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *