மத்திய அரசுக்கு மொத்தம் 155.8 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் வெளிக் கடன்கள் சுமார் 7.03 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்த நிதியமைச்சகம், இந்தியாவின் கடன்கள் குறித்த பல்வேறு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மக்களவையில் நாமா நாகேஸ்வர ராவ் எம்.பி எழுப்பிய கேள்வியில், மத்திய அரசின் கடன்கள், வெளிக் கடன்கள், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வால் ஏற்பட்ட கடன் சுமை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டுள்ளார்.

இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதிலில், 2023 மார்ச் நிலவரப்படி மத்திய அரசுக்கு மொத்தம் 155.8 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மொத்த கடன்களில் வெளிக் கடன்களின் பங்கு 4.5% ஆக உள்ளது. ஜிடிபி மதிப்பில் வெளிக் கடன்களின் விகிதம் 3%. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த அரசுடன் ஆலோசனை நடத்தி ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி கையிருப்பு மூலங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2014-ல் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.க அரசு முழுமையாக ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர் பா.ஜ.க-வினர். இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடியை, ஒன்பதே ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ.155 லட்சம் கோடியாக உயர்த்தியிருக்கிறார்.

ரூ.100 லட்சம் கோடி கடன் என்பது மிகவும் ஆபத்தான அளவு. பொருளாதார மேலாண்மை என்பது ஊடக தலையங்க மேலாண்மை போன்றது அல்ல. இதை டெலிப்ராம்ப்டர்கள் மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ செய்ய முடியாது. எனவே நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். ஏனெனில் இதில் நடக்கும் தவறுகள் இன்னும் ஆழமாகி வருகின்றன என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தி உள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு கடன் விகிதம் முந்தைய ஆண்டினைக் காட்டிலும், கடந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளும் கடன் பிரச்சனையால் பெரும் சரிவைக் கண்டு வரும் நிலையில், அதனை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் கடன் அறிக்கை குறித்தான தரவுகள் வெளியாகி, இந்தியாவை எச்சரிக்கும் விதமாக வந்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் அறிக்கையின் படி, இந்தியாவின் வெளிநாட்டு கடன் விகிதமானது, 8.2% அதிகரித்து, 620.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இதே அன்னிய செலவாணி கையிருப்பு விகிதத்தில் முந்தைய ஆண்டில் 100.6% ஆக இருந்த வெளி நாட்டுக் கடன், மார்ச் 2022ல் 97.85 ஆக குறைந்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் நீண்டகால கடன் அளவு 499.1 பில்லியன் டாலர் எனவும், இது மொத்த கடனில் 80.4% பங்கு வகிக்கிறது. இதே குறுகிய கால கடன் என்பது 121.7 பில்லியன் டாலராகவும் உள்ளது. இது 19.6% பங்கு வகிக்கிறது.

மொத்த வெளி நாட்டு கடனில் பெரும்பகுதி வணிகக் கடனாகவே உள்ளது. இது கிட்டதட்ட 90% ஆகும். இதே வெளி நாடு வாழ் இந்தியர்களின் வைப்பு தொகைகள், குறுகிய கால வர்த்தக கடன் என பல வகையான கடன்கள் இதில் அடங்கும்.

குறிப்பாக நாட்டின் இறையாண்மை கடன் விகிதம் 17.1% அதிகரித்து, 130.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்தால் ஸ்பெஷல் டிராவிங் ரைட்ஸ் (SDR) கூடுதலாக ஒதுக்கப்பட்டதன் காரணமாக இந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இதே இறையாண்மை அல்லாத கடன் விகிதம் மார்ச் 2021 ஆண்டினை விட 6.1% அதிகரித்து, 490 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது பெரும்பாலும் வணிக கடனாக உள்ளது. இது தவிர என்ஆர்ஐ டெபாசிட்கள் மற்றும் குறுகிய கால கடன் என பலவும் இதில் அடங்கும்.

என்ஆர்ஐ டெபாசிட்கள் 2% குறைந்து, 139 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இதே வணிக கடன் விகிதம் 209.71 பில்லியன் டாலர்களாகவும், குறுகிய கால வர்த்தக கடன் 117.4 பில்லியன் டாலர்களாவும், அதிகரித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைக்கு மோடி அரசின் தவறான பொருளாதார நிர்வாகமே காரணம். மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அரசியலில் எதிர்பக்கம் இருந்தவர்களைத் திறமையற்றவர்கள், ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டினார். ஆனால் இன்று அவருக்கும், அவரது அரசாங்கத்தும் இதைவிட சரியான சொற்கள் இருக்க முடியாது.

2014-ல் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து நாட்டின் கடன் ரூ.100 லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது. அதாவது, 67 ஆண்டுகளில் 14 பிரதமர்களின் கீழ் இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி மட்டும் ரூ.100 லட்சம் கோடி கடனை ஏற்படுத்தி தற்போது நாட்டின் மொத்த கடனை ரூ.155 லட்சம் கோடியாக உயர்த்தியிருக்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையைச் சீரழித்து, மிகப்பெரிய அளவில் வேலையின்மையை உருவாக்கி, பணவீக்கத்தை அதிகரித்திருக்கிறது இந்த மோடி அரசு.

ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி வருமானம் முந்திய வாட் வரி வருமானத்தை விட பல மடங்கு  அதிகரித்து இருந்த போதும் கடன் சுமையை மலைபோல உயர்த்தி நாட்டு மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தி இருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

மிகப்பெரும் அளவிளான இந்த கடன் சுமைதான் மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனை என்பதை மக்கள் நன்றாக புரிந்துகெண்டுள்ளனர்.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *