அடுத்த வருடம் இந்நேரமேல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் நாடே பரபரத்து இருக்கும். கருத்துக்கணிப்புகளும் விவாதங்களும் அனல் பறந்து கொண்டிருக்கும். கடந்த 2019 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததில் பலருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த முறையாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா என்பது மிக பெரிய கேள்விக்குறியாய் தொக்கி நிற்கிறது. 

2014 இல் ஆட்சி அமைத்த பாஜக இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால், அது மிகை அல்ல. 2014-2019 வரையிலான பாஜக ஆட்சியில் தங்களின் அடித்தளத்தை பலமாக்குவதற்கான வேலைத் திட்டங்களையும் அதற்கு தேவையான நிதி ஆதாரங்கங்களை ஒழுங்கு (?) படுத்துவதுமாக அமைத்துக் கொண்டார்கள். தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை என்று துவங்கி நீதித் துறை வரை இன்று பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது நாடறிந்த இரகசியம்.

பெரு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை கணக்கில் காட்டாமல் இருக்க, Electoral Bonds மூலம் அரசியல் கட்சிகள் பெறும் பணத்தை வெளியிடத் தேவையில்லை என்ற விதியையும் அமைத்து கொண்டது. உலக நாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் அம்பானியோ அதானியோ பிரதமருடன் சென்ற காரணத்தை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிற்கு வரும் வர்த்தகங்கள் அனைத்தையும் பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பது பாஜகவின் வேலை. அதற்கு கைமாறாக தேர்தல் மற்றும் ஊடகங்கள் என அனைத்தையும் வாங்க நிதி உதவி செய்ய வேண்டும்.

2019-2023 தற்போதைய பாஜக ஆட்சி, முன்பு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறது. நல்லதுதானே என்று நினைத்தால் நாட்டின் வளர்ச்சிக்காக கொடுத்த வாக்குறுதிகளை குப்பையில் போட்டு விட்டு, மதவாத அரசியலுக்கான செயல்களை முழு வேகத்தில் காட்டியது. அதுவரை சாத்தியமேயில்லை என்று நினைத்திருந்த இரண்டு செயல்களை செய்தது. ஜம்மு காஷ்மீரை மூன்றாக உடைத்து மாநில அந்தஸ்தை பறித்தது. மசூதியை இடித்தது தவறு தான் ஆனாலும் இடித்தவர்களே அங்கு கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கி, ராமர் கோவிலும் தயாராகி கொண்டிருக்கிறது.

தங்களை எதிர்ப்பவர்களை  ஒன்று கொலை செய்யவோ அல்லது மிரட்டி பணிய வைப்பதோ பாஜகவுக்கு கைவந்த கலையாகிவிட்டது. வியாபம் ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க கொலை செய்ததில் இருந்து விடுதலை அடைந்த அமித்ஷாவில் துவங்கி, தங்களை எதிர்த்தால் கொலை! இல்லையெனில்,  ஊழல் வழக்குத் தொடர்ந்து சிறைக்கு அனுப்புவது என்றும், ஆதரித்தால் ஆளுநர் அல்லது MP பதவி என்றும் பல எலும்பு துண்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தேவையான நிதியை electoral bond மூலமாக பெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படி தங்களுடைய ஒவ்வொரு அடியையும் சாதுர்யமாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்று, அசுர வளர்ச்சியை அடைந்திருக்கும் பாஜகவை அடுத்த தேர்தலில் எதிர்கொள்ளப்போகும் அனைத்து தேசிய கட்சிகளின் பலத்தை ஒன்று கூட்டினால் கூட பாஜகவின் அருகில் கூட நிற்க முடியாது. அவ்வாறெனில் பாஜகவை வீழ்த்தவே முடியாதா என்றால், ஒரே ஒரு வழி இருக்கிறது. அரசு எந்திரங்கள் அனைத்தையும் காவிமயமாக்கி வைத்திருக்கும் பாஜகவினால், இந்தியர்கள் அனைவரையும் காவியாக்க முடியவில்லை.

கடைசியாக நடந்த மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக கூட்டணி கட்சிகளே ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. மேகாலயாவில் பாஜகவுக்கு விழுந்த வாக்கு சதவிகிதம் வெறும் 9.4%. திரிபுராவில் 41.1%, நாகலாந்தில் 51.2% ஆக இருந்தது. திரிபுராவிலும் மேகலாயாவிலும் பாஜக வாக்குகள் அதற்கு முந்தைய தேர்தலை விட குறைய, நாகாலாந்தில் மட்டும் அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மக்களிடம் தொடர்ந்து செல்வாக்கை இழந்து வருவது கண்கூடு. அதற்கான நியாயமான காரணங்கள் அந்த மக்களுக்கு இருக்கிறது.

இப்போது கர்நாடகாவின் மும்முனை போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டாலும் பாஜகவின் ஒன்றிய எந்திரம் அனைத்தும் அங்கு படையெடுத்திருக்கின்றன.

தென்னிந்திய மாநிலங்களில் பாஜக ஆட்சி புரியும் ஒரே மாநிலம். அதை தக்க வைக்க போகிறதா, அல்லது காங்கிரஸிற்கு தாரை வார்க்கப் போகிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு வேலை காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க போவது யார் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

பால் பாக்கெட் போடும் வேளையில் பதவி பிரமாணம் செய்து வைப்பதும், கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற கட்சிகளை மிரட்டி பணிய வைத்து, கூட்டணியை உடைத்து பொம்மை ஆட்சி நிறுவ முனைவதும், ஆட்சி அமைத்த கட்சிக்குள்ளேயே கழகத்தை உண்டு பண்ணி, கட்சியை உடைத்து ஆட்சியை பிடிப்பதும் இப்போதெல்லாம் ஜனநாயகத்தில் சேர்ந்து விட்டது.

இப்படி ஒரு அசுரபலத்துடன் இருக்கும் கட்சியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் அதை வீழ்த்த வேண்டியது வேறு எதையும் விட மிக இன்றியமையாத தேவையாய் இருக்கிறது. அரசு எந்திரங்கள் அனைத்தும் காவி மயமாகிவிட்ட இந்த நேரத்தில், மூன்றாவது முறையாக பெரும்பான்மையில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் அவர்கள் செய்யப் போகும் முதல் காரியம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே திருத்துவதாகத் தான் இருக்கும். அதில் முதல் திருத்தமாக, `மதச்சார்பற்ற’  என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, ஹிந்து நாடு என்பதை சேர்த்து, சனாதன (அ) தர்மத்தை சட்டமாக்குவதாகத்தான் இருக்கும். அடுத்த கட்டமாக இடஒதுக்கீடை ஒழிப்பது அல்லது நீர்த்துப்போகச் செய்வது. ஏற்கனவே தனியார் மயமாகி கொண்டிருக்கும் அரசுத் துறைகள் மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஒரு சர்வாதிகார ஆட்சி அமைவதற்கான சாத்தியக் கூறுகளையும் மறுக்க இயலாது.

மேற்சொன்னவை எல்லாம் கற்பனாவாதங்கள் இல்லை. எந்த ஒரு சர்வாதிகார ஆட்சியும் மக்களின் ஜனநாயக அழிவில் இருந்தே ஆரம்பமாகிறது. மாநில உரிமைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்வதே அதன் முதற்கட்டம்.

2024 நாடாளுமன்ற தேர்தல் இதனால்தான் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 2024ல் பாஜகவை வீழ்த்துவதே இந்திய ஜனநாயகத்திற்கான மிகப் பெரிய சவால். இதை எதிர்க்கட்சிகள் எப்படி சாத்தியமாக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இரண்டு வழிகளைக் காட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை தவிர்த்த, மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பில் தேர்தலை சந்திப்பது. 2016ல் தமிழ்நாட்டில் அமைந்த  மக்கள் நலக் கூட்டணி போல. இரண்டாவது வழி காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவது. இரண்டிலுமே பல பிரச்சனைகள் இருக்கின்றன.

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணி

இரண்டாவது வழியை விட, இந்த வழியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கொஞ்சம் எளிதானது. அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையுமா என்பது சந்தேகம். உதாரணத்திற்கு, ஒருவேளை அதிமுக பாஜகவை எதிர்த்தாலும், திமுகவுடன் அதிமுக கூட்டணியில் இணையாது. அதுபோலவே மற்ற மாநிலங்களிலும். உத்தரப்பிரதேசில் அகிலேஷ் யாதவும் மயவாதியும் ஒன்றிணைவதோ, ஆந்திரப்பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியும் குமாரசாமியும் இணைவதோ சாத்தியமற்றதாக இருக்கிறது. பாஜகவை வீழ்த்த எந்த மாநில கட்சிகளை இந்த மூன்றாம் கூட்டணி தேர்ந்தெடுக்க போகிறது என்ற கேள்வி எழுகிறது.

அடுத்து, யார் தலைமையில் இந்தக் கூட்டணி அமையும்? தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானெர்ஜியும் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்தனர். அது மூன்றாம் கூட்டணிக்கான சந்திப்பு என்ற சலசலப்பு எழுந்தது. இந்த மூன்றாம் கூட்டணியை ஆதரிக்கும் அனைத்து மாநில கட்சித் தலைவர்களுக்கும் தாங்கள் பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவு இருப்பதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருவரை தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படியே ஒருவரை தேர்வு செய்த பின்னால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், அந்த ஆட்சி காலம் முடியும் வரை அந்த ஒற்றுமை நீடிக்குமா?  இல்லை மற்ற கட்சிகள் தங்கள் ஆதரவை திரும்ப பெற்று ஆட்சியை கலைப்பார்களா என்ற கேள்விகள் யாவும் தொடரவே செய்யும். விபி சிங், சந்திர சேகர், IK குஜ்ரால், தேவகவுடா, சரண் சிங் ஆட்சி இழந்த வரலாறு அதைத்தான் உணர்த்துகிறது.

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தால் அதில் தமிழ்நாட்டுக்கு ஒரு தனிப் பெருமை இருக்கிறது. ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற குரல் முதன்முதலில் ஒலித்தது தமிழ்நாட்டில் இருந்துதான். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்று எதிர்க் கட்சியாய் இருந்தபோது இந்த எண்ணத்தை விதைத்தார். 2018 டிசம்பரில் கலைஞரின் சிலை திறப்பு விழா கூட்டத்தின் போது இதை அறிவித்தார். சில தருணங்களில் டெல்லியில் யார் பிரதமராக வேண்டும் என்பதை தமிழ்நாட்டு தலைவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான முன்னெடுப்பு எப்போதும் வடநாட்டில்தான் துவங்கும். ஆதரவு மட்டும் தெற்கு பக்கம் இருந்து செல்லும். இந்த முறைதான், டெல்லி ஆட்சியை முடிவெடுக்கும் முன்னெடுப்பு தமிழ்நாட்டில் இருந்து முதன்முதலாக ஸ்டாலின் மூலம் துவங்கி இருக்கிறது. அறிவித்ததுடன்  நிற்காமல் அதற்கான நடவடிக்கைகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஸ்டாலின். தனது 70வது பிறந்தநாள் விழாவிலும் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைவதின் அவசியத்தை வலியுறுத்தினார். சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த சமூக நீதிக்கான தேசிய மாநாட்டில் பல மாநில தலைவர்களும் காணொளி வாயிலாக கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணியை விட காங்கிரஸ் தலைமையின் கீழ் அமையும் கூட்டணி வலுவாக இருக்கும் என்பதே ஸ்டாலினின் கணக்கு. அதற்கு முக்கியமான காரணம், யார் அடுத்த பிரதமர் என்ற குழப்பம் இருக்காது. ராகுல் காந்தி தான் பிரதமர் என்பது திண்ணம். கூட்டணியும் ஓரளவிற்கு பலமாக இருக்கும் வாய்ப்புள்ளது.

ஆனால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைவதில் பெரும் சவால் இருக்கிறது. ஆரம்ப காலம் முதல் காங்கிரஸுடன் பல சமயங்களிலும் கூட்டணி வைத்திருக்கிறது திமுக. கலைஞருக்கும் சோனியா காந்திக்கும் நல்ல அரசியல் உறவு இருந்து வந்திருக்கிறது. அதையே இப்போது ஸ்டாலினும் ராகுலும் தொடர்கின்றனர். ஆனால் காங்கிரஸ் என்றாலே ஒதுங்கும் பல மாநிலக் கட்சிகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம் ஆத்மீ போன்ற கட்சிகளுக்கு காங்கிரஸ் என்றாலே வேப்பங்காய். இது போன்ற கட்சிகள் ஒன்றிணையத் தயாராக இருந்தாலும் காங்கிரஸின் கீழ் ஒன்றிணைய ஒப்புக்கொள்ள வாய்ப்பு மிகவும் குறைவு.

மேற்குறிப்பிட்ட இரண்டு வழிகள் தவிர பாஜகவை வீழ்த்த வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆம் ஆத்மீ இப்போதுதான் தேசியக் கட்சியாக வருவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற தேசியக் கட்சிகள் காங்கிரஸ் போலவே பலம் இழந்து நிற்கின்றன. மேலும் ஒரு 5 ஆண்டுகளுக்கு பாஜக மீண்டும் ஆட்சி புரியுமேயானால், இனி ஜனநாயகம் எந்த அளவிற்கு உயிர்த்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

இப்போதிருக்கும் சூழ்நிலையில் ஸ்டாலினின் திட்டப்படி காங்கிரஸின் கீழ் அமையும் கூட்டணியே பலம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் மற்ற மாநில கட்சிகள் அதற்கு இணங்கி வருமா என்பதை காலம் தான் சொல்லும்.

கட்டுரையாளர்: சுமதி விஜயகுமார்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *