கிஜேபி மாநில தலைமையகம். மாநில தலைவர் மருதமலை குளிர்பதனமூட்டப்பட்ட தன் அறையில் அமர்ந்திருந்தார். வயது 40. உயரம் 172 செமீ. காவல்துறையில் 11வருடங்கள் பணிபுரிந்து சமூகத்தில்  நிலவும் அனைத்து கெட்டகுணங்களையும் ஸ்வீகரித்திருந்தார்.  நரிப்பார்வை. கன்னடம் கலந்த தமிழ் அவரது நாவில் நர்த்தனம் புரிந்தது. பொய்கள் பேசுவதில் அசகாயசூரர். மொத்தத்தில் மருதமலை ஒரு தெருசண்டை சேவல்.

உள்தொலைபேசி சிணுங்கியது. ஒலிவாங்கி எடுத்து காதில் இணைத்தார்.

“சார்! உங்களை பாக்க ஏழெட்டு பேர்வந்திருக்காங்க. வரிசையா உள்ள அனுப்பவா?”

“அனுப்பும்மா!”

ஒரு மாமிசமலை கும்பிட்டபடி உள்ளே பிரவேசித்தது. முகத்தில் ஏராளமான வெட்டுக்காயங்கள். வாயிலிருந்த சொற்ப பற்களை எடுத்துவிட்டு பல்செட் கட்டியிருந்தான்.

“வணக்கோம் தலீவா!”

“யார்நீங்க?”

“நான் காசிமேட்டை சேர்ந்தவன். என் பெயர் பூபதிராஜா. இதுவரை எட்டு கொலைகளும் இருபது கொள்ளைகளும் முப்பதுக்கும் மேற்பட்ட கற்பழிப்புகளும் செய்துள்ளேன்..”

“சென்ட்ரல் கவர்மென்ட்ல சொல்லி ஸ்பெஷலா  ஒரு அவார்டு வாங்கிக் குடுத்திரவா?”

“அதில்லை.. கொஞ்சநாளா எனக்கு போலீஸ் தொல்லை அதிகமா இருக்கு. என்கவுன்டர்ல என்னை போட்டு தள்ளிரக்கூட போலீஸ்கிட்ட திட்டம் இருக்கு!”

“நல்ல வக்கீலை பாக்காம என்னை ஏன் பாக்க வந்த?” ஒருமைக்கு தாவி ஆழம் பார்த்தார் மருதமலை.

‘அய்யா!” மருதமலை காலில் வந்தவன் பெரும் சப்தத்துடன் விழுந்தான். “என்ன உங்க கட்சில சேத்துக்கங்கய்யா..”

“அத நேரடியா சொல்லாம வளவளான்னு பேசிக்கிட்ருக்கீங்க.. காசிமேடு மீனவர் அணிக்கு தலைவரா உங்களை போட்டுர்ரேன்.. ஏரியாவை ஒரு கலக்கு கலக்குங்க!”

“நன்றிங்கய்யா…’

“பதவி கொடுத்திட்டேன்ல சும்மா கெத்தா நிமிந்து நிக்கனும்” புகைப்பட கலைஞரை அழைத்தார் மருதமலை.

“உறுப்பினர் அட்டைக்கு ஒரு ஒளிப்படமும் பத்திரிகை  செய்திக்கு ஒரு ஒளிப்படமும் எடுங்க!”

கிளிக்!

கிளிக்!

“நாளைக்கு காலைல உங்க சகரவுடிகளோட ஊர்வலமா வந்து உறுப்பினர் கார்டை வாங்கிக்கங்க. இனி நீங்க செய்ற கொலை கொள்ளை கற்பழிப்பு கிஜேபி வளர்ச்சிக்கு உதவுறதா இருக்கனும்!”

“ஜமாய்ச்சிடுறேன்!”

“நீங்க இப்ப கிளம்புங்க. உங்களை மாதிரி ஹாபிச்சுவல் அபன்டர்ஸ் யார் இருந்தாலும் கூட்டிட்டு வாங்க! கட்சில சேத்து பொறுப்பு கொடுத்திரலாம்!”

தலைக்கு மேல இருகைகளை குவித்து கரகாட்டக்காரி போல சுழன்றபடி பூபதிராஜா வெளியேறினான். ஏழெட்டு பெட்டிகேஸ்களையும் நேர்காணல் நடத்தி கட்சியில் சேர்ந்தார் மருதமலை. வரவேற்பாளனி கூவினாள். “உங்களை பாக்க கங்காணி அண்ட் மங்காணி சர்வே குரூப் வந்திக்காங்க!”

“அவங்க பேசி முடிச்சு போற வரைக்கும் யாரையும் உள்ளே விடாதே!”

இருவர் கோப்புகளுடன் அறைக்குள் பிரவேசித்தனர்.

“வணக்கம் தலைவர்!”

“வணக்கம் வணக்கம் சர்வே வேலைகள் முடிஞ்சிதா?”

“எல்லா வேலைகளும் முடித்து பைனல் ரிசல்ட்டை கொண்டு வந்திருக்கிறோம்!”

“த பாருங்கள். தமிழ்நாட்டு கிஜேபி மாநிலதலைவரா நான் பதவியேத்து இரண்டு வருஷமாகப் போகுது. போன 2021 சட்டசபை தேர்தல்ல கிஜேபி நாலு சீட் வாங்குச்சு. வாங்கின ஒட்டு சதவீதம் 2.6 சதவீதம். நான் தலைவர் பதவி ஏற்றுக் கொண்ட பின் தமிழ்நாட்டில் கிஜேபி வளர்ந்திருக்கிறதா? வளர்ந்திருந்தா 2024 பாராளுமன்ற தேர்தலில் கிஜேபிக்கு தமிழ்நாட்டில் எத்தனை சீட்டுகள் கிடைக்கும்? இன்னும் நூறு கேள்விகள் உள்ளன. அனைத்துக்கும் உங்க சர்வே பதில் சொல்ல வேண்டும்!”

கங்காணி அண்ட் மங்காணி பிரதர்ஸ் தலைகுனிந்தனர்.

“என்னப்பா ஆச்சு? எழவு வீட்ல உக்காந்திருக்ற  மாதிரி உக்காந்திருக்கீங்க..”

“நிலைமை கவலைக்கிடம்!”

“கிஜேபியின் ஓட்டுசதவீதம் 12ஆக உயர்ந்திருக்கிறதா?”

“இல்லை!”

“பத்து ?”

“ம்ஹிம்!”

“எட்டு.. ஆறு.. நாலு..”

“இல்லவே இல்லை 0.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு 1.06சதவீத ஒட்டுகள் விழுந்திச்சு. அதில பாதி அதல பாதாள சரிவு…”

“என்னய்யா இது? என்கிட்ட காசு வாங்கிக்கிட்டு கிமுகவுக்கு வேலை பாத்திட்டீங்களா?”

“நாங்க பிளாக் ஷேடு பீப்பிள்தான். ஆனா கொடுத்த அஸைன்மென்டில் தகிடுதித்தம் செய்ய மாட்டோம்!”

“எத்னி சாம்பிள் எடுத்திங்க?”

“தமிழ்நாட்டில் 38மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டாயிரம் ஆண் இரண்டாயிரம் பெண்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம்!”

“கருத்துக்கணிப்பில் தவறு நடந்திருக்க வாயப்புண்டா?”

“ஜீரோ பர்சன்டேஜ் கூட கிடையாது. ஆயிரம் வோட்டர்ஸ்கிட்ட விடியோ காமென்ட் எடுத்திருக்கம் பாக்றீங்களா?”

“போடுங்க. பாக்றேன்!”

ஒரு மத்திமவயது ஆண் கேமிரா முன் நின்று “கிஜேபி கட்சியே இல்லை ஹிட்லரின் நாஜி கட்சியின் கிளை. முஸ்லிம்களின் மீது அப்படியென்ன கொலைவெறி? முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாம போனா நாடு சர்வநாசம் அடைந்திரும்.. உங்களை ஆட்சிலயிருந்து அகற்ற இரண்டாவது சுதந்திர போராட்டத்தை ஆரம்பிக்கனும்!”

“கிஜேபி மக்கள் நலம் துளியும் சார்ந்த கட்சிஅல்ல கிரிமினல்களின் கூடாரம்!”

“பெட்ரோல் விலை உயர்த்திறீங்க. கட்டியிருக்ற கோவணத்துக்கு கூட  ஜிஎஸ்டி போடுறீங்க.. அந்த பணமெல்லாம் எங்கதான் போகுது!”

“இரண்டு கோடீஸ்வரர்களின் பாக்கெட்டை நிரப்ப நாட்டின் வளங்கள் சூறையாடப்படுகின்றன, நாடு திவாலாகி போய் நிக்கப் போகுது!”

“தமிழ்தமிழ்னு பேசிக்கிட்டு தமிழர்களை காயடிக்கிறீங்களே நியாயமா?”

“அகிமுகவை சுதந்திரமா இயங்க விடுங்கடா..”

“ஆப் பண்ணுங்கப்பா கங்காணி மங்காணிஸ்..”

“ஏற்கனவே கட்சி அதிருப்தியாளர்களை ஆபாசபடம் எடுத்து லீக் பண்ணதில கட்சி மேலிடம் என் மேல் கோபமா இருக்கு. என்னை தலைவர் பதவில இருந்து நீக்கினா செல்லாக் காசு ஆய்டுவேன்!”

“உங்களுக்காக பரிதாபப்படுகிறோம்!”

“நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா?”

“என்ன?”

“அஞ்சுகோடி உபரியா தரேன். கருத்துக்கணிப்பை மானிபுலேட் பண்ணனும். 0,4 சதவீதத்தை 20,4சதவீதமா மாத்தனும்!’‘

“2024 எலக்ஷன் ரிசல்ட் வந்தவுடன் உங்க பேரு நாறிப் போய்டுமே..”

“ஒரு வருஷம் இருக்கு. அகிமுகவை பாதி முழுங்கிடுவேன்..”

“டேட்டா முழுவதையும் மானிபுலேட் பண்ண ரெண்டு வாரம் ஆகிடும்!”

“பரவாயில்லை சினிமா துணைநடிகர்களை வைத்து  கிஜேபிக்கு சார்பான கருத்தை விடியோ பண்ணுங்க!”

“மருதமலை கிரிமினல் யுனிவர்ஸ்க்குள்ள எங்களையும் கொண்டு வரீங்க!”

“அரசியல் ஒரு சூதாட்டம் அதில் என்ன எதிக்ஸ் பாக்க வேண்டியிருக்கு?”

“அஞ்சு கோடி எப்ப கிடைக்கும்?”

“நாளைக்கே உங்க கணக்கில் போடச் சொல்றேன். விஷயம் யாருக்கும் கசியாம பாத்துக்கங்க!”

“ஓகே டன்!”

அவர்கள் எழுந்து போனவுடன் மருதமலை யாருக்கோ போன் செய்து கங்காணி அண்ட் மங்காணிக்கு அஞ்சுகோடி மணி ட்ரான்ஸ்பர் பண்ணச் சொன்னார்.

இரண்டு வாரங்களுக்கு பின்..

கங்காணி அண்ட் மங்காணி கொடுத்த கருத்துக்கணிப்பை திருப்தியாக பார்த்தார் மருதமலை. டெல்லிக்கு விமானத்தில் சென்று உள்துறை அமைச்சர் பிரதீப்ஷாவிடம் கருத்துக்கணிப்பு கோப்பை கையளித்தார்.

பிரதீப்ஷா பிரமாதகரிடமும் மத்திய கட்சி தலைவர் ஒய்.பி. கட்டாவிடமும் கருத்துக்கணிப்பைக் காட்டி, “மருதமலை நம்பளவிட திருட்டு பயலா இருக்கான். 0.4சதவீதத்தை 20.4சதவீதமாக உல்ட்டா பண்ணி காமிச்சிருக்கான். பெரியார் மண்ணில் நம்ம பாச்சா ஒரு நாளும் பலிக்காதுன்னு எனக்கு தெரியாதா? எம்பி சீட்ல தமிழ்நாட்டை விட்டுட்டுதான் மற்ற மாநிலங்கள்ல தேத்தனும்..”

“மருதமலையை நீக்கி விடலாமா?”

“திருடனுக்கு திருடன்தான் ஊழியம் பார்ப்பான். அவனே இருக்கட்டும்!”

பான்டா  கரடி போல சிரித்தார் பிரதீப்ஷா.

கட்டுரையாளர்: ஆர்னிகா நாசர்

 

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *