விடிந்த பிறகும் இரவின் தனுப்பு இன்னும் மிச்சம் இருந்தது. குளிர் காலங்களில் வெயிலும் தாமதமாகத்தான் மெல்ல எழுந்துவரும். நிறையபேர் அதிகாலைத் தொழுகைக்குச் சென்றுவிட்டு வந்து, குளிருக்கு இதமாக சுருண்டு படுத்து ஒரு குட்டித் தூக்கம் போடுவதால் மொகல்லா சுறுசுறுப்பற்று சோம்பிக் கிடந்தது. நேரமாக எழுந்து வாசல் கூட்டி கோலம் போடுவது போன்ற பழக்கங்கள் இல்லை என்பதால் மொகல்லா பெண்களுக்கும் நேரமாக எழுவதில்லை. தொழுகையாளிப் பெண்கள் மட்டுமே எப்போதும் பஜ்ர் தொழுகைக்கு வேண்டி விடியற்காலமே எழுவார்கள்.

தஹஜ்ஜத் தொழுகைக்காக அதிகாலை நாலுமணிக்கும் முன்பே எழுந்து கொள்ளும் ஒரு சில பெண்களும் இருக்கிறார்கள். இதில் ஜாஸ்மினும் ஒருத்தி. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் திங்கள், வியாழன், வெள்ளி என வாரம் மூன்று நாட்களுக்கு இப்படி அதிகாலையில் எழுந்து தஹஜ்ஜத் தொழுவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறாள் ஜாஸ்மின்.     .

உபரியான வணக்கங்களில் இந்த தஹஜ்ஜத் தொழுகையும் ஒன்றாகும். இதற்கு இரவின் பின்னேரத் தொழுகை என்பது பொருளாகும். நம் பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்களிலொரு நேரமாக இந்த இரவுத் தொழுகை உள்ளது. மற்ற உபரித் தொழுகைகளை நேரம் இருந்தால் தொழுது கொள்ளலாம். ஆனால் இந்த தஹஜ்ஜத் தொழுகை இரவின் கடைசிப் பகுதியில் இரவு தூக்கத்தின் ஒரு பகுதியை தியாகம் செய்துதான் தொழ வேண்டும்.

இந்த தொழுகையின் சிறப்பு பற்றி திருக்குர்ஆனும் நபிமொழிகளும் சிலாகித்துக் கூறுகின்றன.

-“இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அதில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளைக் கேட்டால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கிடுவான்..” (நூல் – முஸ்லிம்)

– “இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் அதைக் கொடுப்பேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிபேன்.” என்று கூறுகிறான். (நூல்– புகாரி)

அலாரம் அடிக்கும் முன்பே ஜாஸ்மினுக்கு சரியாக விழிப்பு வந்துவிட்டது. மனித உடல் எப்போது விழிப்புடனேயேதான் இருக்கிறது. பழக்கத்திற்கு கொண்டு வந்துவிட்டால் போதும். அது தானாக இயங்க ஆரம்பித்துவிடும். இரண்டு மூன்று நாட்களுக்கு சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்து கொண்டோமானால், அதன்பிறகு தானாக அந்த நேரத்திற்கு விழிப்பு வந்துவிடும்.

கணவரின் தூக்கத்திற்கு இடைஞ்சல் வராமல் வழக்கம்போல மெல்ல எழுந்து கட்டிலிலிருந்து இந்தப்பக்கம் இறங்க, நிஜாம் விழித்துக்கொண்டு கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டவளாக, ”என்னங்க..! இந்நேரத்துலயே முழிச்சிட்டீங்க…!?” என்றாள்.

“நைட்டு தூக்கம் வரவே ரொம்ப நேரமாச்சு.! நீ படுத்ததும் தூங்கிட்டே. திடீர்னு முழிப்பு வந்து ரொம்ப நேரமா புரண்டுட்டே கெடக்குறன். என்னானு தெரில..! தூக்கமே வரமாட்டேங்கிது!” நிஜாமின் குரலில் வருத்தம் இழையோடியது.

“ஏங்க..என்னாச்சு! உடம்புக்கு ஏதாச்சும்?” பதட்டமானாள் ஜாஸ்மின்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. தூக்கம் வரல..அவ்வளவுதா”

“கண்டதயெல்லாம் நெனச்சுட்டே படுத்தீங்களாக்கும்.? இல்ல எங்கயாச்சும் உங்க தம்பிய பாத்தீங்களாக்கும்..?”

“அவனையொன்னும் பாக்கல. ஆனா அவன் நம்மள இன்னும் கழுவி ஊத்திட்டேதா இருக்கான். நேத்தைக்கு வழில எங்க மாமா ஒருத்தரப் பாத்தேன். அவருகிட்ட கண்டதயும் சொல்லியிருக்கான் காதர்..!” விவரம் முழுவதையும் சொன்னான் நிஜாம்.

….வேலைக்குச் சென்று திரும்பும்போது தூரத்து உறவினர் ஒருவர் வழியில் தென்பட்டார். ரொம்ப நாட்களுக்குப் பிறகு அவரைப் பார்க்கும் சூழல். இவனைக் கண்டதும் கைகாட்டி நிறுத்தினார். தவிர்க்க முடியவில்லை.

“உம்மா, வாப்பாவெல்லாம் எப்பிடியிரிக்காங்க.?”’ என்று வழக்கமான சம்பிரதாயமான நலம் விசாரிப்புடன் பேச ஆரம்பித்தார் அவர்.

“வேலையெல்லாம் பரவாயில்லையா நிஜாம்?”

“முனைக்கு கொஞ்சம் பரவாயில்ல.. மாமா!”

“கொரொனா வந்து எல்லாத்தயும் ஒரு வழி பண்ணிருச்சு இல்ல நிஜாம்..? இப்பத்தா கொஞ்சம் நின்னு திரும்பிட்டிரிக்கோம்..அதுக்குள்ளயும் இதா மறுபடியும் பரவுதுணு பயம் காட்டுறாங்களே…?” அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“ஆமா மாமா! கொரோனாவ வச்சு மருத்துவ உலகம் நல்ல ஆதாயம் அடையறாங்கனு தெரியுது! அரசாங்கமும் இத வச்சுக்கிட்டு பூச்சாண்டி காட்டுது! அவுங்களுக்கும் லாபம் இருக்கும் போல! ஆக என்னமோ நடக்குது! அரசாங்கம் உண்மையை மறைக்குது…”

“அப்பிடி எல்லாம் பொய்யினும் சொல்ல முடியாது நிஜாம்! நம்ம கண்ணு முன்னாடியே எத்தன பேரு மௌத்தானாங்களா இல்லயா..? உலகமே பயந்து அரண்டதா இல்லயா?”

நிஜாம் மறுக்கவில்லை. “ஆமா மாமா. உண்மைதா. ஒத்துக்குறேன். ஆனாலும், வேறு என்னமோ இத வச்சு செய்யிறாங்கனு தோணுது.!  நம்ம நாட்டுல மட்டுமல்ல, உலகம் முழுக்கவும்தான் கொரோனாவ வச்சு கோடிக்கணக்கில் கல்லா கட்டுறாங்கனு சொல்றேன். டோலோ மாத்திரை மட்டுமே இத்தனை கோடிக்கு வித்திருக்குனு புள்ளிவிவரம் வந்துதல்ல..!  பாத்தீங்களா?.”

“எதுலதா ஊழல் இல்லாம இரிக்குது !“ என்று அவர்  சிரித்துக்கொண்டார். பேச்சு அப்பிடியே மறுபடியும் குடும்பத்திற்குள் நுழைந்தது..

“வீட்டுக்கு வாங்க மாமா..!” என்றான்

தலையாட்டிக்கொண்டு “போன வாரம் காதர பாத்தேன் நிஜாம்” என்றார்..

நிஜாம் எதுவும் பேசவில்லை. கண்டதையும் சொல்லியிருப்பானோ! மாமாவிடம் கேக்கலாமா. அவரே சொல்லுவாரானு பாப்போம். அவரும் நிஜாமை பார்த்தபடியே நின்றார். நான் என்ன சொல்லுவேன்னு  உள்ளெடுக்கப் பாக்குறாரோ மாமா. பிறகு ஏன் எதுவும் பேசாமல் இருக்கார்.! அப்பிடினா காதர் எங்களப்பத்தி அபாண்டமா சொல்லியிருப்பான். நிஜாமுக்கு புரிந்தது.

“என்ன மாமா ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறீங்க..?” தூண்டில் போட்டான்.

“உந்தம்பி ஒருபாட்டம் பொலம்புனான். நிய்யி முன்ன மாதிரி இல்லயாம்.! வாப்பாவயும் உம்மாவயும். நீ கண்டுக்கிறதே இல்லயாம்..! அவுங்களப் பாக்க நீ போறதே இல்லயாம்! தம்பிகளயும் பாத்தா பேசுறதே இல்லயாம்!” சொல்லிவிட்டு நிஜாமை கூர்ந்து பார்த்தபடி நின்றார்.

முகத்தில் எந்தவித பாவனையும் காட்டாமல் “ம்… சொல்லுங்க மாமா..” என்றான் நிஜாம்.

“அப்பறம் பெருநாளுக்குக் கூட வாப்பாவயும், உம்மாவயும் நீ கூப்பிடலயாம். அவுங்களுக்கு துணிமணி எடுத்துக் குடுக்கலயாம்..!”அவரின் புகார் பட்டியல் நீண்டு கொண்டிருக்க,  அவனுக்குள் விர்ரென்று கோபம் சுழன்று கொண்டிருந்தது. காதர் மட்டும் அவன் முன்னாடி இப்போது நின்றிருந்தானென்றால் அவன் முகத்தில் பளாரென ஒரு அறை விட்டிருப்பான். அந்தளவுக்கு கோபம் பாம்பின் சீற்றம் போல அவனுக்குள் சுழன்று எழுந்தது. மிக சிரமப்பட்டு அடக்கிகிக்கொண்டான் நிஜாம்.

இவரு போயி இன்னும் நாலுபேர்களிடம் இந்த பொய்யான செய்திகளை சொல்லுவாரே! அது ஒட்டுமொத்த குடும்பத்திலும் பரவுமே! உறவினர்களிடம் இப்படி இல்லாததையும் பொல்லாததையும் வேண்டும் என்றே இட்டுக்கட்டி பொய் சொல்லி எங்களை அவமானப்படுத்துவதும் இல்லாமல் கெட்ட பெயரையும் அல்லவா ஏற்படுத்துகிறான்!! இதனால் அவனுக்கு என்ன லாபம்? நினைக்க நினைக்க அவனுக்குள் கோபம் அதிகம்தான் ஆனது.

“மாமா! அவனப்பத்தி உங்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது! மேலோட்டமா பாத்தா அவன மாதிரி நல்லவன் உலகத்துல எவனும் இருக்கமாட்டான். அப்பிடித்தானே பசப்பி உங்ககிட்ட உருக்குற மாதிரி பேசுவான் – நடிப்பான். நீங்க நம்பிருவீங்க!  ஆனா அவனுடைய உண்மையான சுயரூபம் எங்குளுக்குத்தா தெரியும் மாமா!” மாமாவிடம் காதரைப் பற்றிய உண்மைகளையெல்லாம் விலாவாரியாக எடுத்துச் சொன்னான் நிஜாம்.

“உங்க குடும்பத்துக்குள்ள இவ்வளவு பிரச்சனைங்க இரிக்கா?” மாமா வியப்புடன் கேட்டார்.

பெருநாளுக்கு முன்னாடிதா துணிமணிகளோட போயி உம்மாவையும், வாப்பாவையும் பாத்து குடுத்துட்டு வந்தோம் நாங்க உம்மாவயும் வாப்பாவயும் பாக்கப் போறதே இல்லேன்னு அவன் உங்ககிட்ட அபாண்டமா பொய் சொல்றான் பாருங்க.! இதனால அவுனுக்கு என்ன கெடைக்குதாமா..? இப்ப நீங்க என்னப் பாக்காம இருந்திருந்தா அவன் சொன்னதுதா உண்மையினு நம்பியிருப்பீங்கள்ல மாமா!?”

அவர் தலையாட்டிக்கொண்டு, “உங்க பிரச்சனைங்க எனக்கு என்ன தெரியும் நிஜாமு ?” என்றார்.

“ஒரு பிரச்சனையும் இல்ல மாமா! எங்க மேல அப்பிடி என்ன வெறுப்பு அவுனுக்குனு எங்குளுக்கே புரியல மாமா! அவனோட சொத்த நாங்க அபகரிச்சமா என்ன? ஏதாச்சும் ஒரு காரணம் வேணுமல்ல? பாக்கப்போனா ஜாஸ்மினோட நகைகள வச்சு கட்டுன தரவாட்ட அவந்தா அபகரிக்கப் பாக்குறான் மாமா!

அவர் பதில் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்தபடி இருந்தார்.

“மாமா! மாமிய கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க..” என்றான்.

“இன்ஷா அல்லாஹ்..வர்றேன் நிஜாம்..” என்று கிளம்பிப் போனார்.

************************

“ஏங்க உங்க தம்பிக்கு நம்ம மேல இவ்வளவு வயித்தெரிச்சலும்….பொறாமையும்.?”

“எனக்கும் அதான் தெரியல! அத நெனச்சுட்டெ கெடந்தனா தூக்கம் வரல போல!

“இதுக்குப் போயா உங்குளுக்கு தூக்கம் வரல?’

“பின்னே! காரணமே இல்லாம நம்ம கூட பேசமேட்டேங்குறானே.! எதுக்கு நம்ம மேல மட்டும் அவுனுக்கு இவ்வளவு வெறுப்பு..? ஏதாச்சும் ஒரு காரணம் வேணுமல்ல..? அதத்தா யோசிச்சுட்டே கிடந்தேன்..! இன்னும் யாருகிட்டயெல்லாம் என்னென்ன சொல்லியிருப்பானோ..!”

“நாம நல்லா இருக்கிறது உங்க தம்பிக்கு புடிக்கல போல! என்ன ஒரு எண்ணம் பாருங்க. இப்பிடியுமா ஒருத்தன் இருப்பான்? மத்த ரெண்டு தம்பிங்க போல நீங்களும் போயி அவங்கிட்ட தொட்டது புடிச்சதுக்கெல்லாம் முட்டுக்கைய சொரிஞ்சுக்கிட்டே நிக்கணும்னு அவன் எதிர் பாக்குறான்… ஆனா நீங்க எதுக்கும் அவங்கிட்ட போறதில்ல..! அந்த எரிச்சல்தாங்க..! அதான் நம்ம மேல இவ்வளவு போறாமயும் வயித்தெரிச்சலும்.வேறென்னங்க..?”

“நானும் அதான் யோசிக்கிறேன்.”

“அதனாலத்தாங்க… அண்ணனு கூட பாக்கமா உங்கள மதிக்காம இப்பிடி இருக்கான்… சரி. இனி கண்டதயும் நெனைக்காம கொஞ்ச நேரம் படுத்துத்தூங்குங்க. நா தொழுதுட்டு வாரேன்.” என்று ஜாஸ்மின் செல்ல, “இரு! நானும் வருகிறேன். சேர்ந்து தொழலாம்” என்றான் நிஜாம். (கதை தொடரும்)

கட்டுரையாளர்: ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

 

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *