கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கேராளவை மையமாக கொண்டது. படம் எடுக்கப்பட்டது இந்தியில். பிறகு தமிழ, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் மொழி மாற்றங்கள் செய்து மே மாதம் 5 ஆம் நாள் வெளிவந்தது. இந்த படம் வெளி வரும் முன்பே கேரள முதல்வர் பிணராய் விஜயன் தனது கண்டனத்தை பதிவு செய்தார். வேறு மாநில முதல்வர்கள் கருத்து கூறவில்லை. முஸ்லிம்கள் தடைவிதிக்க கேட்டு உச்சநீதிமன்றத்தை அனுகினர். தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படத்தை தடை செய்ய முடியாது, மாநில உயர்நீதிமன்றங்களை அனுகும்படி உச்சநீதிமன்றம் மனுதாரர்களை அறிவுறுத்தியது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகினர். உயர்நீதிமன்றமும் தடைவிதிக்க மறுத்து விட்டது. மேலும், படத்தை திரையிட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. . 

படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பும் நமத்துப் போனது. தமிழகத்தில் திரையரங்குகளில் படத்துக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டதால் மக்கள் பிரச்சனைகள் வரும் என்று படத்துக்குப் போகவில்லை. இந்த படத்தை அவ்வளவு முக்கியம் கொடுத்து பார்க்க வேண்டியதாக மக்கள் கருத மாட்டார்கள். முதலில் படத்துக்கு நட்சத்திர மதிப்பு இல்லை. கதை குறித்து பொது வெளியில் விவாதிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கருதும் அளவுக்கு மக்களிடம் முஸ்லிம் வெறுப்பு கிடையாது. மேலும் இந்த படத்தை ஓடிடி தளத்தில் இலவசமாகவே பார்த்து விடலாம். முதல் காடசியிலேயே திரையரங்குகள் காத்தாடிக் கொண்டு இருந்தன. இதில் ஒரு சோகம் என்ன வென்றால் இந்த கேரளா ஸ்டோரி ஏற்படுத்திய பரபரப்பு மற்றும் விவாதங்களில் பொன்னியின் செல்வன் இரண்டாம பாகம் காணாமல் போனது. முதலில் பேசப்பட்ட பரபரப்பு கேரளா ஸ்டோரியால் அடங்கிப் போனது. இந்த படத்துக்கான கதை வேறொன்றுமில்லை.

சில வருடங்கள் முன்னர் கேரளாவைச் சேரந்த அகிலா என்ற சித்த மருத்துவ மாணவி இஸ்லாமைத் தழுவிக் கொண்டு ஹாதியாவாகி முஸ்லிம் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். ஊடகங்களும் பாஜகவும் இந்த பிரச்சினையை பெரிதாக்கி உச்சநீதிமன்றம் வரை கொண்டுபோனார்கள். மாணவி அகிலாவை முஸ்லிம்கள் மிரட்டி மத மாற்றம் செய்துவிட்டதாகக் கூறி மாணவியை வீட்டில் பெற்றோர் பூட்டி வைத்தனர். அகிலாவை கட்டாயத் திருமணம் செய்ததாக கணவர் மீது வழக்குப் போட்டார்கள். வழக்கை விசாரணை செய்த கேரள உயர்நீதிமன்றம் ஹாதியாவின் திருமணம் செல்லாது என்று திருமணத்தை ரத்து செய்ததுடன் ஹாதியாவை பெற்றோருடன் அனுப்பி வைத்தது. அகிலா என்ற ஹாதியாவின் கணவர் தனது மனைவியை மீட்டுக் கேட்டு உச்சநீதிமன்றம் போனார். உச்சநீதிமன்றம் ஹாதியாவை அழைத்து விசாரித்தது. ஹாதியா தான் விரும்பியே இஸ்லாம் மதத்துக்கு மாறிக் கொண்டதாகவும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, இஸ்லாமுக்கு மாறியப் பிறகு தான் கணவரை திருமணம் செய்தேன், எங்களது காதல் திருமணம் இல்லை என்றும் நீதிபதிகள் முன்பு  விளக்கமளித்தார். ஹாதியாவின் விளக்கத்தைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹாதியாவை அவரது கணவரோடு செல்ல அனுமதி கொடுத்தனர்.

இந்த ஹாதியா சித்தா மருத்துவம் படித்தபோது கல்லூரி விடுதி அறையில் இரண்டு முஸ்லிம் மாணவிகளோடு தங்கி இருந்தார். முஸ்லிம் தோழிகளின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் அகிலாவுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. முஸ்லிம் தோழியரின் வித்தியாசத்துக்கான கரணத்தை விசாரித்தப் பிறகு அகிலா திருக்குர்ஆன் பக்கம் திரும்பினார். திருக்குர்ஆனின் படிப்பினைகள் பிடித்துப்கோக அகிலா முஸ்லிமானார். இது உண்மைச் சம்பவம். இதுதான் கதைக்கான கரு. இந்த அகிலா என்ற ஹாதியாவையும் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பையும் இணைத்து கற்பனையான ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கேராளா முஸ்லிம்கள் குறித்து அவதூறு பரப்பக் கூடிய படம். ஆனால், உண்மைச் சம்பவங்களுன் அடிப்படையில் எடுக்கப்பட்ட உண்மை கதை என்று முன்னோட்டக் காட்சியிலேயே விளம்பரம் செய்தனர். ஒரு கல்லூரி விடுதியில் 4 மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். அவர்களில், ஒருவர் முஸ்லிம் பெண், ஒருவர் இந்துப் பெண், ஒருவர் கிறித்துவப் பெண், ஒருவர் இடதுசாரி குடும்பத்தில் இருந்துள்ள பெண். இந்த நான்கு பேரும் நல்ல தோழிகளாக இருக்கின்றனர். இவர்களில் முஸ்லிம் தோழி மற்ற மூவரையும் முஸ்லிமாக மதம் மாற்றுவதில் குறியாக இருக்கிறார். மதம் மாற்றவும் செய்கிறார். சிவனை விட அல்லாஹ் தான் சக்தி வாய்ந்த கடவுள் என முஸ்லிம் மாணவி இந்து மாணவியிடம் வாதிடுகிறார். இந்து மாணவி ஒருவரது ஆடையை ஒருவன் பிடித்து கிழிக்க உடனே முஸ்லிம் மாணவி பர்தா தான் பெண்களுக்கு பாதுகாப்பான உடை. பர்தா அணிந்த பெண்கள் மீது தைரியமாக கைவைக்க முடியாது என்கிறார். அதாவது, இயக்குனர் பார்வையில் இருந்து, முஸ்லிம் தீவிரவாதிகள் அவன் கையை வெட்டி விடுவார்கள் என்பதை படத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

புர்கா பெண்களுக்கு பாதுகாப்பு கவசம் என்று முஸ்லிம்கள் சொல்லவில்லை. புர்கா ஒரு பெண்ணின் கண்ணியத்தை நிச்சயம் பாதுகாக்கும். ஒரு மேடை நிகழ்ச்சிக்கு வந்த சாருக்கான் புர்கா அணியாத பெண்ணை கட்டிப் பிடித்தார். அதே மேடையில் புர்காவோடு நின்றிருந்த பெண்ணிடம் சலாம் கூறிச் சென்றார். இதுதான் புர்காவின் பெருமை.

படத்தில் முஸ்லிம் மாணவி இதர மூன்று மாணவிகளையும் ஒரு மதரசா ஆசிரியரிடத்தில் அழைத்துச் செல்கிறார். அங்கு அவர் முஸ்லிம் இளைஞர்களிடத்தில் மூவரையும் காதலித்து கற்பமாக்கும் படி அறிவுறுத்துகிறார். முஸ்லிம் மாணவி மதரசாவில் ஒரு இளைஞனுடன் தகாத உறவில் இருக்கிறார். இவ்வாறெல்லாம் படம் செல்கிறது. மூன்று மாணவிகளும் எதுவும் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள். அதாவது முஸ்லிம்கள் நடத்தும், படிக்கும் மதரசாக்களை விபச்சார விடுதியாகவும், மதம் மாற்றும் தொழிற்களமாகவும் படம் சித்தரிக்கிறது. மேற்படி 3 மாணவிகளையும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்க வளைகுடா நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள் அங்கு அவர்கள் படும் துயரங்கள் தான் கேரளா ஸ்டோரி படம். இப்படி 36000 கேரள இந்து கிறித்துவ பெண்கள் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டு வளைகுடா நாடுகளில் அடிமைகளாகவும் கேவலமாகவும் நடத்தப்படுகிறார்கள். இந்து கிறித்தவப் பெற்றோர்களே, உங்கள் பெண் பிள்ளைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பெண் பிள்ளைகளை முஸ்லிம்களோடு சேர்ந்து படிக்க,  தங்கி இருக்க, பயணிக்க அனுமதிக்காதீர்கள். முஸ்லிம்களோடு உங்கள் பெண் பிள்ளைகள் சேர்ந்து பழகினால் உங்கள் பிள்ளைகள் மதம் மாற்றப்படுவார்கள், கடத்தப்படுவார்கள், தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமையாக இருப்பார்கள் என்று இந்தப் படம் முஸ்லிம் அல்லாதவர்களை பயமுறுத்துகிறு.

கேரளாவைச் சேர்ந்த இயக்குனர்கள் எவரும் இந்த படத்தை இயக்குவதற்கு முன்வரவில்லை. மலையாள நடிகர்களும் முன்வரவில்லை. அதன் பிறகு படத் தயாரிப்புக் குழு மும்பையில் முகாமிட்டு படத்தைத் தயாரித்து இருக்கிறது. படம் இந்தி மொழியில் எடுக்கப்பட்டுப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் மொழி மாற்றங்கள் செய்து மே மாதம் 5 ஆம் நாள் வெளிவந்தது. இந்த படம் வெளிவர இருந்த நிலையில் கேரள முதல்வர் பிணராய் விஜயன் தனது கண்டனத்தை பதிவு செய்தார். வேறு மாநில முதல்வர்கள் கருத்து கூறவில்லை. முஸ்லிம்கள் தடைவிதிக்க கேட்டு உச்சநீதிமன்றத்தை அனுகினர். உயர்நீதிமன்றத்தை அனுகும்படி உச்சநீதிமன்றம் மனுதாரர்களை அறிவுறுத்தியது. உச்சநீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் அமைப்புக்கு கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 36000 என்பதை 3000 பெண்கள் எனவும் 3 பெண்களின் கதை எனவும் திருத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டது. அதாவது படத்தை சர்ச்சையாக்கி விளம்பரப்படுத்த வேண்டும் என்பதில் வெற்றி பெற்றார்கள். வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஒரு படம் தயாரிப்பதற்கு ஆகும் செலவு, படத்தில் பணி செய்தவர்களின் ஊதியம் போன்ற காரணங்களைக் கூறி படத்தை எப்படி தடை செய்ய முடியும் என்று கேட்டுள்ளனர். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகினர். உயர்நீதிமன்றமும் தடைவிதிக்க மறுத்து விட்டது. மேலும், படத்தை திரையிட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பு நமத்துப் போனது.

இந்தப் படம் சர்ச்சையை ஏற்படுத்துவதற்காகவே எடுக்கப்பட்டப் படம். கரநாடகா தேர்தலில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சாதனைகள் இல்லை. உட்கச்சிக்குள் சாதிய சிக்கல்கள். அதனால், கர்நாடகா மக்களிடம் முஸ்லிம் வெறுப்புணர்ச்சி மற்றும் அச்ச உணர்வை ஊட்டி அந்த அச்சத்தில் இருந்து பாஜக மட்டும் தான் இந்துக்களை காப்பாத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை வாக்குகளாக மாற்றினால் தேர்தல்களில் வெற்றிப் பெறலாம் என்று நினைக்கிறார்கள். சினிமாக்கள் ஓரளவுக்குத் தான் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால், மக்கள் சினிமா மூலம் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள்.

பாஜக கேரளா, தமிழகம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களை தேர்தல் மூலம் கைப்பற்ற முடியவில்லை. மாநில கட்சிகள் வலிமையாக இருக்கின்றன. மாநில கட்சிகளின் செல்வாக்கை வீழ்தத முடியவில்லை. கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி பலமாக உள்ளது. தமிழகத்தில் திமுக, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சிகள் வலிமையானவை. எனவே, இந்த கட்சிகள் தீவிரவாதிகளை ஆதரிப்பதாக ஒரு படம் காட்ட வேண்டும். அதை கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர தாமோதிர தாஸ் மோடி பேசி இருக்கிறார்.

கர்நாடகா தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தி கேரளா ஸ்டோரி படம் உதவும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால்தான் படம் வெளியாகும் முன்பே முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டு சூட்டை ஏற்றினர். இந்த படம் நிச்சயம் தோல்வி அடையும் என தெரிந்தே மே 10 ஆம் நாள் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கயில் மே 5 ஆம்நாள் படம் திரைக்கு வந்தது. தேர்தலுக்கு 5 நாட்கள் முன்னதாக கேரளா ஸ்டோரி வெளியானது. பாஜக மீது கடும் வெறுப்பில் இருக்கும் கர்நடகா மக்கள் படத்தை விரும்பி பார்க்கவில்லை.

கேரளா முஸ்லிம்கள் 36 ஆயிரம் பெண்களை மதம் மாற்றி தீவிரவாத இயங்களுக்கு கடத்துகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய். அதுவும், உண்மை தகவல்கள் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டது என்று படத்தின் இயக்குனர் கூறுகிறார். ஆப்கன் சிறையில் உள்ள கேரளா பெண்களிடம் பேசினேன் என்றும் ஒரு பேட்டியில் கூறுகிறார். எந்த சிம்கார்டை பயன்படுத்தி பேசினார் என்று தெரியவில்லை. ஆப்கன் மாதிரியான ஒரு நாட்டின் சிறையில் இருக்கும் வெளிநாட்டு கைதிகளிடம் இந்தியாவில் இருந்து ஒருவர் பேசமுடியுமா என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் இயக்குனர் பேசுகிறார். இயக்குனர் படத்தில் காட்டாத பிரமாண்டத்தை பேச்சில் காட்டுகிறார். நிச்சயம் இந்த படத்தின் பின்னாள் இந்துத்துவ அமைப்புகளின் உதவி இருக்கிறது.

இந்த படம் மக்களால் ஈர்க்கப்படும் போது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர் தங்கள்  பெண் பிள்ளைகளிடம் கல்லூரிகளில் முஸ்லிம் நண்பர்களிடம் பழகாதே, விலகி இரு என்று கூறும் அளவுக்கு படம் மக்களை அச்சுறுத்துகிறது. இந்த படத்தை பார்க்கும் எவரும் 36,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது. அனைத்து மக்களும் சினிமாவை சினிமாவாகத் தான் பார்ப்பார்கள் என்று கூற முடியாது. இன்றளவில் முஸ்லிம்கள் மீது காட்டப்படும் வெறுப்பு, நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முஸ்லிம்களை பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்திய சினாமாக்களுக்கு பங்குண்டு. அந்த படங்கள் கொடுத்துள்ள விளைவுகளை கருத்தில் வைத்து தான் முஸ்லிம்களுக்கு எதிரான படங்களை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு வருகிறார். உதாரணமாக, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், மோடி, காந்தாரா, காஷ்மீர் பைல்ஸ், பெர்ரா, பிரமாஸ்த்தரா, ஆதிபுரூஷ் படங்கள்.

இந்துத்துவா இரண்டு விதமான படங்களை எடுக்கின்றனர். முதலாவது வகை இந்து தெய்வங்களின் மகிமையை பரப்பும் படங்கள். தற்போதுள்ள நவீன மொழிற்நுட்ப வசதிகளை கொண்டு புராண, இதிகாச கதைகளை மிகப் பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் வசூல் சாதனை செய்த பாகுபலி திரைப்படம் பக்தி படம் இல்லை என்றாலும் காலாவதியான பழைய இந்திய அரசுகளின் பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கை என்ற அனைத்திலும் இந்து மத சாயலை புகுத்தி இருந்தனர். பாகுபலி இயக்குனர் மகாபாரத கதையை 10 பாகங்களாக தயாரித்து வெளியிடப் போவதாக கூறி இருக்கிறார். இதுபோல ஏராளமான கதைகள் தயாராகி வருகின்றன. அடுத்ததாக, முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டக் கூடிய காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்கள். 2024 தேர்தலை ஒட்டி. வெளியாக திப்பு சுல்தான் படம் தயாராகி வருகிறது. திப்பு சுல்தான் 6000 கோவில்களை இடித்தார். கிறித்துவ தேவலயங்களை இடித்து தள்ளினார். முஸ்லிமாக மதம் மாற வற்புறுத்தி இந்துக்களை துன்புறுத்தினார். பிராமணர்களை கொலைகள் செய்தார் என்று படத்தில் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

திப்பு சுல்த்தான் இரண்டு பிராமணர்களை முக்கிய அமைச்சர்களாக வைத்திருந்தார். கோவில்களுக்கு மானியங்கள், நிலங்கள் கொடுத்திருக்கிறார். சிருங்கேரி மடத்துக்குரிய கிரீடத்தை மராட்டிய கொள்ளையர்களிடம் இருந்து மீட்டுக் கொடுத்தார். ஆங்கிலேயரை எதிர்த்து போர் களத்திலேயே உயிரிழந்தார். அப்படிப்பட்ட ஒரு மனிதரை இவ்வளவு பொய்களால் வெறுப்புக்கு ஆளாக்கக் கூடாது. இது ஒரு ஆபத்தான போக்கு. இந்த படங்களை எல்லாம் முஸ்லிம்கள் கடந்து போக வேண்டும் என்கிறார்கள்.

பத்மாவதி என்றொரு படம், இந்தியில் வெளிவந்தது. படத்தின் கதை உணமையில் கதை தான். ஆனால், வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்பட்ட படம். தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி சித்தூர் இளவரசி மீது மோகம் கொண்டு இளவரசியை அடைவதற்காகவே சித்தூர் மீது படையெடுத்து சித்தூரை அழிப்பது தான் படம். படத்தின் கரு மற்றும் கதை அப்பட்டமான பொய். இந்த படத்தில் வரும் ஒரு பிராமணரின் பாத்திரத்தை கொண்டு படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் நாடு முழுவதும கலவரங்கள் செய்தன. அந்த படத்தில் ஒரு காட்சி. சித்தூரை முற்றுகையிட்டிருக்கும் அலாவுதீன் கில்ஜி எதையோ எழுதிக் கொண்டிருப்பதை குறித்து சித்தூர் இந்து இளவரசன் விசாரிக்கிறான். அதற்கு, கில்ஜி, `என்னைப் பற்றிய சுயசரிதை’ எழுதுகிறேன் என்பார். அதற்கு அந்த இந்து இளவரசன், இன்று உன்னைப் பற்றி நீ எழுதும் இந்த வரலாறு அழிந்து விடும். நாளையொருநாள், நாங்கள் உன்னைப் பற்றி ஒரு வரலாறு எழுதுவோம், அதுதான் வரலாற்றில் நிலைக்கும் என்பான். இது மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். முஸ்லிம் ஆட்சியாளர்கள் குறித்து இவர்கள் எடுக்கப் போகும் படங்கள் தான் இது வரலாறாக பாட புத்தங்களில் வரலாம்.

இதேபோல, பிரிதிவிராஜ் சவுகானுக்கும், கோரி முஹம்மதுக்கும் இடையில் நடந்த போர் சம்பந்தமான படம் கடந்த ஆண்டு நடந்தது. அதுபற்றிய படம் மிகவும் அபத்தமானது. வரலாற்று தகவல்கள் படி முதலில் இறந்தது பிரிதிவிராஜ் சவுகான். கோரி முகம்மது இரண்டாவது தான் இறந்து போனார். ஆனால், இந்த படம் என்ன சொல்கிறது தெரியுமா? பிரிதிவிராஜ் சவுகான் கோரி முஹம்மதுவை கொன்று விட்டதாக படம் எடுத்துள்ளார்கள். கோரி முஹம்மது பிரிதிவி ராஜ் சவுக்கானை வீழ்த்தி தில்லியை கைப்பற்றி ஆண்டார் என்பது வரலாறு. ஆனால், இந்து மன்னர்கள் மாவீரர்கள், வெல்ல முடியாதவர்கள் என்ற பிரமையை உருவாக்குவது, முஸ்லிம்கள் கோவிலை இடித்தார்கள், லட்சக்கணக்கான இந்துக்களை மிரட்டி முஸ்லிம் மதத்துக்கு மாற்றினார்கள் என்று சினாமா மூலம் பொய்யை புகுத்துகிறார்கள்.

அடுத்து ஆதிபுரூஷ் என்றொரு ராமர் பற்றிய படம். இந்தப் படத்தில் ராவணனாக வரும் பாத்திரம் முஸ்லிம்களை போன்று தாடி வைத்திருக்கிறார். ராமர் இந்து கடவுள். இந்து கடவுளான ராமனின் எதிரி ராவணன். ராவணன் பார்ப்பதற்கு முஸ்லிமாக தெரிகிறான். அதனால் ராவணனை எதிர்க்கும் மனப்பான்மையில் ஒருவன் ராவண தோற்றத்தில் தாடி வைத்து இருக்கும் முஸ்லிம்களையும் எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதாவது முஸ்லிம்களையும் இந்துக்களையும் உளவியல் படியாக பிரிக்க வேண்டும். தீவிரவாதம், லவ் ஜிகாத் போன்ற கதைகளை முஸ்லிம்களுக்கு எதிராக திரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அந்த திட்டத்துக்கு சினிமா துறையை கையில் எடுத்துள்ளது இந்துத்துவா.

ஒரு படத்தை படமாக பாரக்க  வேண்டும் என்று பல்வேறு படங்களுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போதெல்லாம் அறிவுஜீவிகள் வகுப்பெடுத்துள்ளார்கள். இப்போது அவர்களே இத்தகைய படங்களை தடை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். முஸ்லிம்களை தீவிரவாதி போல காட்டும் படங்கள் பின்னாட்களில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும என்று முஸ்லிம்கள் தொடர்ச்சியாக கூறி வந்துள்ளனர். தமிழில் துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற படங்களுக்கு முஸ்லிம்கள் தடை கேட்டனர். அப்போது மற்றவர்கள் மௌனமாக இருந்தனர். முஸ்லிம்கள் தடை கேட்பது நியாயமில்லை என்று சிலர் கூறினர். சினிமா ஒரு கருத்துப் பலகை. கருத்தை சினிமாவில் சொல்ல ஒரு கலைஞனுக்கு உரிமை உள்ளது. தடை செய்யச் சொல்வது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்றனர். ஆனால், இன்று இந்துத்துவா எடுக்கும் படங்களை கருத்து சுதந்திரம் என்று ஏற்கவில்லை. இதுபோன்ற படங்களை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் என்று பாஜகவுக்கு எதிரானவர்கள் பதறுகிறார்கள். இது நிஜமல்ல கற்பனை என்று தலைப்பிட்டு ஒரு படம் வந்தாலும் அது மிகப் பெரிய நஞ்சை விதைத்து விடும். முஸ்லிம்களுக்கு எதிரான படங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது இல்லை. மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கும் எதிரானது என்பதை தாமதமாகப் புரிந்து கொண்டார்கள். இத்தகைய படங்கள் படம் பார்க்கும் மக்களை இந்து வாக்கு வங்கியாக ஒருங்கிணைக்கும். அது பாஜகவுக்கு அரசியல் வகையில் பலம் கொடுக்கும். அதனால், மதச்சார்பின்மை அரசியலே அழிந்து போகும் என அச்சப்படுகிறார்கள்.

சினிமா என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல, கூர்மையான கருவி என்பதை இந்துத்துவ சினிமா கற்றுக் கொடுத்து விட்டது. இந்தியாவில் மத்திய பாஜக அரசுக்கு இன்னும் முக்கியமான இரண்டு சட்டங்களை கொண்டு வர வேண்டி உள்ளது. ஒன்று மத மாற்றத் தடைச் சட்டம். மற்றொன்று பொது சிவில் சட்டம். இந்துப் பெண்களை மதம் மாற்றம் செய்து பயங்கரவாதத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற நம்பிக்கையை ஆழமாக ஊன்றி விட்டால் மதம் மாற்றத்திற்கு எதிராக கடும் விதிகள் கொண்ட சட்டத்தை அமல்படுத்தி விடலாம். அதனால் தான் முஸ்லிம் பெண்களே இந்துப் பெண்களை மதம் மாற்றுவதில் தீவிரம் காட்டுவதாக சித்தரிக்கின்றனர்.

அடுத்து புர்கா, இத்தா போன்ற இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்த ஷரிஅத் சட்டங்களை விவாதிப்பதன் மூலம் பொது சிவில் சட்டத்துக்கான மனத் தடையை உடைக்கலாம். இந்த நோக்கத்தில்தான் புர்கா என்ற படம் வந்திருக்கிறது. புர்கா படத்தை இந்துத்துவாவினர் எடுக்கவில்லை. பெரியாரிய நாத்திகர்கள் எடுத்துள்ளார்கள்.

தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தை எதிர்ப்பதே தவறானது. தணிக்கை துறை சான்றிதழ் கொடுத்த படங்களை மறு தணிக்கை செய்ய முடியாது என்றும் வாதிட்டுள்ளனர். 36000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை நடந்த உண்மை என்று தலைப்பிட்டு உண்மைக்கு மாறாக எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கும் இதே  தணிக்கைத் துறை தான் சான்றிதழ் கொடுத்திருக்கிறது. தணிக்கைத் துறை சான்றிதழ் கொடுக்கும் விதம் எப்படிப் பட்டது, தணிக்கைத் துறையை எப்படி விலைக்கு வாங்குவது என்று அனுபவமுள்ள சினிமாக்காரர்கள் பல கதைகள் சொல்வார்கள். தணிக்கை துறையில் பெரும்பாலும் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் தான் இருப்பார்கள். அவர்களில் பலருக்கு சினிமாவே தெரியாது. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே வந்து விடுவார்கள். ஒவ்வொரு படத்துக்கும் ஏராளமான பரிசுப் பொருட்களை பெற்றுச் செல்வார்கள். தணிக்கைத் துறையில் இப்போது ஆர்.எஸ்.எஸ் காரர்களே இருப்பார்கள். பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான படங்கள் எப்படி நியாயமாக தணிக்கை செய்யப்படும் என்ற கேள்விகள் உள்ளன.

அதேநேரம், சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம் அமைப்புகள் தடை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யத் தேவை இல்லை. அது படத்துக்கான சூட்டையும் எதிர்ப்பார்ப்கையும் அதிகரிக்கச் செய்யும். அது ஓடாத படத்தையும் ஓட வைக்கும். முஸ்லிம்கள், எதிர்ப்பைக் காட்டும் அடையாளமாக ஒருநாள் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும். ஆனால், ஒரு படத்தை ஆர்ப்பாட்டங்களால் தடுத்துவிட முடியாது. அரசு நினைத்தால் மட்டுமே முடியும்.

டேம் 999 படம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது. இது அரிதிலும் அரிதான சம்பவம். நீதிபதிகள் ஒரு படம் வெளியாகி ஒரு சமூகத்துக்கு ஏற்படுத்தும் சிக்கல்கலை காட்டிலும் அந்தப் படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் செலவிட்டத் தொகையை பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். சவுக்கு சங்கர் போன்ற விமர்ச்சகர்கள் பாஜகவிடம் 5 லட்சம் வாங்கிக் கொண்டு கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தும் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராகவும் பேசுகிறார். இவர் விஸ்வரூபம் படம் வந்த நேரத்தில் விஸ்வரூபம் படத்தை ஆதரித்தும் முஸ்லிம்களை சாடியும் தனது வலைப் பக்கத்துல் எழுதி இருந்தார். இந்த நேரம், கமல் ஹாசனிடம்  25 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு தான் ஆதரித்து எழுதினார் என்ற செய்தியை மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். உங்களுக்கு ஆதரவாக ஒருத்தன் பேசுகிறான் என்கதற்காக அவனை அதிகம் கொண்டாடாதீர்கள் என்று மதன் கூறியுள்ளார். இந்த சவுக்கு சங்கர் காஷ்மீர் பைல்ஸ் படம் வந்த நேரம், மோடியையும், பாஜகவின் முஸ்லிம் வெறுப்பு சினிமாவையும் கடுமையாகப் பேசி இருந்தார். கேரளா ஸ்டோரிக்கு ஆதரவாக பேசிய சவுக்கு, ஏன் முஸ்லிம்கள் எல்லாம் குண்டு வைக்கவில்லையா? மும்பை, கோவை குண்டு வெடிப்புகள் கம்யூனிச சித்தாந்தத்துக்காகவா நடந்தது என்று நக்கலாக கேட்கிறார். அவைப்பற்றி அவர் தனது பழைய நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். ஐஎஸ் அமைப்புக்கு முஸ்லிம்கள் யாரும் போகவில்லையா? என்று கேட்கிறார். நமக்குத் தெரிந்து ஐஎஸ் அமைப்புக்கு இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் சென்றதாகத் தெரியவில்லை. அப்போது உலகலாவிய பரபரப்பில் இருந்த ஐஎஸ் அமைப்பையும் இந்திய முஸ்லிம்களையும் சேர்த்து வைத்து ஒரு கதையை கட்டுவோமே என்று கட்டப்பட்டது தான் அந்த கட்டுக்கதை.

கேரளாவில் முஸ்லிம்கள் 18%ம் அதிகமாக உள்ளார்கள். மேலும், கேரளாவில் கால் பதிப்பது கடினமாக இருக்கிறது என்பதால் கேரளா முஸ்லிம்களுக்கு ஒரு சர்வதேச பயங்கரவாதப் பின்னணியை கொடுத்தால் பின்னாட்களில் எதற்காகவாவது உதவலாம் என்று கூட இந்த முடிச்சைப் போட்டிருக்கலாம்.

கேரளா ஸ்டோரி  படத்தில் 36000 பெண்கள் சிரியா, ஈராக், ஆப்கான் நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு இந்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மீது அவதூறு சொல்வதாகும். 36000 பெண்கள் நாடு கடந்து சென்றிருந்தால் 36000 பெண்கள் காணாமல் போனது தொடர்பாக காவல்நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அப்படி புகார்கள் எதுவும் இல்லை. அனைத்தும் ஊகம் தான். அந்த நேரத்தில் ஊடகங்கள் இதை மிகையாக எழுதிக் கொண்டிருந்தன. நோக்கம், முஸ்லிம்கள் குறித்து பீதி உண்டாக்கவது ஒன்று தான். மத்திய புலனாய்வுத் துறை சொல்வது போல, வெளிநாடுகளில் ஏற்கெனவே வேலைக்குச் சென்றிருந்தவர்கள் அங்கிருந்த படியே ஐஎஸ் அமைப்புக்குத் தாவி இருக்கலாம். அவர்களின் எண்ணிக்கையும் 60க்குள் இருக்கலாம் என்பதை நாமும் ஊகித்துக் கொள்ளலாம். அப்படி இருந்தாலும் அந்த ஊகமான 60 பேர்களில் திரும்பி வந்தவர்கள், வராதவர்கள் குறித்த தகவல்களை கடவுச் சீட்டுத்துறை மூலம் திரட்டி விடலாம். வேலைக்குச் சென்றிருந்த அந்த சந்தேகத்திற்குரிய 60 பேர் குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பி வராமல் போயிருந்தால் அவர்களின் பெற்றோர்களே மகனை காணவில்லை, தேடிக் கொடுங்கள் என்று புகார் கொடுத்திருப்பார்களே! அந்த புகார்கள் எங்கே? அப்படியான முயற்சிகள் எதுவுமே நடக்கவில்லை. ஐஎஸ்க்கு கேரளாவில் இருந்து ஒரு நபர் சென்றதாகக் கூட சட்டப்படி இவர்களால் நிரூபிக்க முடியாது. ஆனால், சவுக்கு கேட்கிறார், நீங்கள் யாரும் ஐஎஸ்க்குப் போகவில்லையா? என்று.

ஹாதியா வழக்கை ஒட்டி லவ் ஜிகாத் கேரளாவில் உள்ளதா என்று கேரள அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கேரளாவில் லவ் ஜிகாத் என்பதே இல்லை என்று பதில் கூறியது. கேரள உயர்நீதிமன்றமும் லவ் ஜிகாத் இல்லை என்று உறுதி செய்திருக்கிறது. இந்துத்துவ அமைப்புகள், மருத்துவர் ஹாதியாவின் மத மாற்றம் மற்றும் திருமணத்தை கட்டாய மதமாற்றம் என்றும் லவ் ஜிகாத் என்றும் நிரூபிக்க கடும் சிரமப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றும் தோற்றனர். காதல் திருமணங்கள் இயல்பாக நடந்து கொண்டே இருக்கின்றன. ஒருவேளை இந்துப் பெண்களுக்கு முஸ்லிம் இளைஞர்களின் நடத்தை, ஒழக்கம், பழக்க வழக்கங்கள் பிடித்துப் போக திருமணம் செய்து கொள்ளலாம். அதேபோல, அநேக முஸ்லிம் பெண்கள் இந்து இளைஞர்களை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். இதை அரசியலாக்க விரும்புவோருக்கு கேரளா ஸ்டோரி சுவாரஸ்யமாக இருக்கிறது.

கேரளாவில் திருமணத்திற்கு சிரமப்படும் இந்து குடும்பத்து இளம் பெண்களுக்கு முஸ்லிம்கள் தங்களது சொந்த செலவில் பள்ளிவாசலில் வைத்து திருமணம் செய்து வைக்கின்றனர். அடிக்கடி செய்திகளில் காண முடியும். கேரளா ஸ்டோரியின் சர்ச்சை ஓடிக் கொண்டிருந்த சமயம் ஏ.ஆர். ரஹ்மான், அத்தகைய சமீபத்திய திருமணம் ஒன்றின் வீடியோவை  பதிவிட்டார்.

இந்த படங்களின் உண்மையான நோக்கம் முஸ்லிம்களையும் இஸ்லாமையும் புதிய இந்தியாவின் புதிய இந்து மக்களிடம் ( பிராமணர்+ பிற்பட்டோர்+ தலித்+ பழங்குடி= புதிய இந்துக்கள்) இருந்து விலக்குவது. முஸ்லிம்கள் அனைவருமே பயங்கரவாதிகள், கொலைகாரர்கள், அசுத்தமானவர்கள் என்று இந்துக்கள் மத்தியில் அடையாளப்படுத்த வேண்டும். முஸ்லிம்களை படிப்படியாக புதிய தலித்துகளாக மாற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் செயல் திட்டம். திரைப்படம் மூலம் இந்த விசமப் பிரச்சாரத்தை விரைவாகவும் எளிதாகவும் எடுத்துச் செல்ல முடியும் என நம்புகிறார்கள். ஆனால், தென் மாநிலங்களைப் பொறுத்து இந்து முஸ்லிம் மக்கள் ஒருவருக்கொருவர் சௌஜன்யமாகப் பழகிக் கொள்கிறார்கள். பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்து நட்பு பாராட்டி வருகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வளர்கிறார்கள். கேரளா, மகாராஷ்ட்ரா, கரநாடகா போன்ற மாநிலங்களில் அரசுப் பணிகள் மற்றும் தனியார் நிறுவனப் பணிகளிலும் முஸ்லிம்கள் கணிசமான அளவுக்கு ஆண்களும் பெண்களும் இடம் பெறுகின்றனர். இந்துக்களும் முஸ்லிம்களும் குடும்பங்களாகவே நட்புறவு கொண்டுள்ளார்கள். ஒருவர் மீது ஒருவர் அக்கறையும் ஆவலும் உள்ளார்கள். எனவே, வெற்று சினாமாக்களை மட்டும் கொண்டு மதப் பகையை உருவாக்கிட இயலாது. நேர்மறை எண்ணங்களும் முநற்சிகளுமே வெற்றி அடையும். எதிர்மறை எண்ணங்களும் முயற்சிகளும் தற்காலிகமாகவே வீழ்ந்து விடும்.

கட்டுரையாளர்: ஜி. அத்தேஷ்

 

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *