பாகிஸ்தான் சுதந்திரமடைந்து ஏறத்தாழ 76 ஆண்டுகள் ஆன நிலையில், அதனுடைய வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடைசி 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.

கொரோனா முடக்கத்துக்கு பிறகு உலக பொருளாதாரம் மீண்டும் உயர்ந்து வந்த நிலையில், பல்வேறு காரணங்களினால் உலக நாடுகள் மீண்டும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் பணவீக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டு எண் 31.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள், போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கூட ஏறக்குறைய பாதி அளவு உயர்ந்திருக்கின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 3.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் பின்னாளில் படிப்படியாக உயர்ந்து வந்தது. இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் 4 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்தை தொட்டிருக்கிறது.

பாகிஸ்தான், பூரண இஸ்லாமிய நாடாகவும் இல்லை. முழுமையான ஜனநாயக நாடாகவும் இல்லை. மாறாக, முதலாளித்துவத்தின் கைப்பாவையாக மாறியதன் விளைவை அந்நாடும் மக்களும் தினந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல பத்தாண்டுகளாக அமெரிக்காவை நம்பியே நாட்டின் நிதி நிலையை சமாளித்து வந்த பாகிஸ்தான் சமீப காலமாக சீனா, சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது.

சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்ஃப் இடமிருந்து 23வது முறையாக அவசரக் கடன் உதவி கோரியிருக்கிறது பாகிஸ்தான். கந்துவட்டிக் காரனிடம் கடன் பெற்றிருந்தால் கூட ஒரு கட்டத்தில் மீண்டுவிட முடியும். ஆனால் ஐஎம்ஃப் அமைப்பிடம் ஒரு நாடு சிக்கிவிட்டால் அதனிடமிருந்து மீள்வது கடும் சிரமம் என்பதற்கு தற்போதைய உதாரணம் பாகிஸ்தான்.

ஐஎம்எஃப் (International Monetary Fund), சடத்துவ பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்ட சர்வதேச நிதி அமைப்பு. கடன் கோரும் நாட்டுக்கு அது விதிக்கும் நிபந்தனைகள் அத்தனைக் கடுமை. கடன் கொடுப்பதற்கு முன்பாக, அந்நாட்டின் பொருளாதார சீர்திருததங்களி்ல் மாற்றம் தேவை என்று கூறி, ஏற்கச் செய்வது அதனுடைய முதன்மை நிபந்தனை. இதற்கு ஒரு நாடு இணங்கிவிட்டால், சாமானிய மக்களுக்கு ஒரு அரசு வழங்கும் மானியங்கள், மனிதாபிமான சேவைகள் அனைத்தையும் குறைக்கச் சொல்லும் அல்லது நிறுத்தி விட நிர்பந்திக்கும்.

அவசரத்துக்கு கடன் வாங்கும் நபரோ அல்லது அரசோ கடன்கொடுப்பவனின் நிபந்தனைகளை ஒருபோதும் தவிர்க்க இயலாது. இந்த பலவீனங்களை அதிகார வர்க்கம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, தனக்கு எந்த பாதகமும் ஏற்படாதவாறு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்த பிறகே கடன் வழங்கச் சம்மதிக்கும்.

சர்வதேச நிதியமான ஐஎமஎஃப் அமைப்பிடமிருந்து ஒரு சில நாடுகளைத் தவிர உலகின் அதிகமான நாடுகள் கடன் பெற்றிருக்கின்றன. அந்தக் கடன் தொகை அவரசக்கடனா அல்லது ஆடம்பரக்கடனா என்பதைப் பொறுத்து நிபந்தனைகள் கூடவோ குறைவாகவோ இருக்கும். இந்தச் சுழலில் வசமாக சிக்கிக்கொண்டது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அரசியல் கட்டமைப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதனால்தான் அதிபர் ஆட்சி, இராணுவத் தளபதிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு, உச்சநீதிமன்ற எதேச்சதிகாரத் தலையீடு மாறி மாறி ஏற்பட்டு அந்நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதன் காரணமாக எந்தப் பிரதமரும் தமது ஆட்சிகாலத்தை முழுமையாகக் கடந்த வரலாறு பாகிஸ்தானுக்கு இல்லை.
ஒரு நாடு வெறுப்பு பிரச்சாரங்களாலும் மத துவேசங்களாலும் ஒருபோதும் முன்னேறாது என்பதற்கு நிகழ் உதாரணமாகி இருக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் மக்கள் கல்வி விழிப்புணர்வு பெற்றுவிடாமல் அதிகார வர்க்கம் தடுக்கிறது. கல்வியில் பின்தங்கி இருப்பதால், வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீடு பற்றறாக்குறையால் உற்பத்தித் துறை சரிந்திருக்கிறது.

நாட்டு மக்களுக்கு முறையான மருத்துவம், அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காமல், இந்தியாவுக்கு இணையாக இராணுவத்துக்கு செலவழிப்பதிலேயே முனைப்புக்காட்டி இருக்கிறார்கள் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். இந்தியாவைப் பற்றிய பகை உணர்ச்சிகளைக் கொண்டே பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அந்நாட்டு மக்களை மட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு, கடந்த ஆண்டு வரலாறு காணாத வெள்ளப் பேரிடர் அந்நாட்டை நிலைகுலையச் செய்துவிட்டது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை, வாழ்வாதாரத்தை இழந்தனர்.
பாகிஸ்தானை அறிய வேண்டுமானால், நமது வட இந்தியாவைப் பார்த்தால் போதுமானது. தென் இந்தியா அல்லாத வட இந்தியா எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே பாகிஸ்தானும் இருக்கிறது.

இந்தியாவில் அரசியல் சாசனம் மற்றும் அதிகாரப் பங்கீட்டு முறை சரியாக வகுக்கப்பட்டிருப்பதாலும் அவை இந்நாள் வரை பாதுகாக்கப்பட்டிருப்பதாலும் முழு இந்தியாவும் காப்பாற்றப்படுகிறது. ஆனால் இத்தகைய கட்டமைப்பை மீறும் விதமாக தற்போதைய மோடி அரசும் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்புகளும் கொக்கரித்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தற்போதைய பாகிஸ்தானின் கதி இந்தியாவுக்கு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *