தேர்வு என்பது மனித வாழ்க்கையின் ஓர் அங்கம். ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் அந்த காலத்திற்கேற்ப பல தேர்வுகளைச் சந்திக்கிறோம். சில தேர்வுகளை வெளிப்படையாகவும் பல தேர்வுகளை மறைமுகமாகவும் எதிர்கொண்டு வருகிறோம். இவ்வாறான தேர்வுகளில் முதன்மையாகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது மாணவர்கள் எதிர்கொள்ளும் பள்ளி பொதுத்தேர்வுகளே.

`ஒரு மாணவன் பெறும் மதிப்பெண்களை வைத்தே அவனது திறமையை எடைபோட முடியாது. அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் அறிவாளிகளோ குறைவாகப் பெற்றவர்கள் திறமையற்றவர்களோ அல்லர்’ என்பதாக பல பேர் பொதுவாகப் பேசி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மை அவ்வாறல்ல.

மாணவர்கள் அறிவாளிகளோ திறமையற்றவர்களோ பள்ளிப் பொதுத் தேர்வுகளில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்துத்தான் அவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்பில் ஒரு மாணவன் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே அவன் விரும்பிய பாடப்பிரிவை பதினொன்றாம் வகுப்பில் எடுக்க அனுமதிக்கப்படுகிறான். அதேபோல பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்துத்தான் அவன் விரும்பிய படிப்பை, விரும்பிய கல்லூரியில் பயில அனுமதிபெற முடியும். ஆகவே இந்திய கல்வி அமைப்பு முறைமையில் மதிப்பெண் என்பது மாணவர்களின் மதிப்பை எடைபோடும் முக்கிய கருவி என்பதை மாணவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது தேர்வுகளின் காலம். இதை முறையாகப் பயன்படுத்தி சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்கு மாணவர்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேர்வுக்கு மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும்? எவ்வாறு திட்டமிட்டு எழுத – எதிர்கொள்ள வேண்டும் என்பன போன்ற சில நுனுக்கங்களை இங்கே காண்போம்.

தேர்வு காலங்களில் (தேர்வு நடக்கும் நாளோ அல்லது தேர்வு இல்லாத நாளோ) தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

புதிதாக ஒன்றைப் படிப்பதைத் தவிர்த்துவிட்டு, படித்தவற்றை திருப்புதல் செய்ய வேண்டும்.
படித்தவற்றை எழுதிப் பார்க்க வேண்டும். எழுதிப் பார்ப்பது தவறை திருத்திக் கொள்ள உதவும். மேலும் தேர்வில் விரைவாக எழுத உதவியாக இருக்கும்.
இரவு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்து படிப்பதைத் தவிர்த்து, சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும்.

அதிகாலை வெகு சீக்கிரமாக எழுந்து படிக்க வேண்டும். அதிகாலையில் மனிதனின் மூளை அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும்.
காலை சிற்றுண்டி மிதமாக உட்கொண்ட பிறகே தேர்வுக்கு செல்ல வேண்டும்.
எப்போதும் நேர்மறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுவோரிடமிருந்து விலகி இருத்தல் வேண்டும்.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் தங்களது உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சினிமா, நாடகம் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
செல்பேசி பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு சென்றுவிட வேண்டும். பேனா, பென்சில் உட்பட தேவையான பொருட்களை ஒன்றுக்கு இரண்டாக எடுத்துச் செல்ல வேண்டும்.
கேள்வித்தாளை வாசிப்பதற்கு 15 நிமிடங்கள் கொடுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் குறைந்தது இரண்டு தடவையாவது படித்துப் பார்க்க வேண்டும்.

நன்றாகத் தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். விடை சரியாகத் தெரியாதவற்றை எழுதத் தொடங்கி, அதுபற்றி யோசித்து நேரத்தை வீணடித்து விடக் கூடாது.
தேர்வு முடிந்த பிறகு ஒருதடவை விடைத்தாளை திருப்பி, எவ்வித தவறும் இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு முடிந்த பிறகு, நடந்து முடிந்த தேர்வுக்கான சரியான விடையைத் தேடுகிறேன் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
சிறிய ஓய்வுக்குப் பிறகு அடுத்த தேர்வுக்காகப் படிக்க ஆயத்தமாக வேண்டும்.
மாலை நேரத்தில் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி அல்லது விளையாட்டு போன்றவற்றில் ஏதேனும் விரும்பிய ஒன்றில் சிறிய அளவில் ஈடுபடுவது உடல் மற்றும் மனதுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு தனி அறை என ஒதுக்கிவிட்டு, தமது வேலைகளிலோ, தொலைக்காட்சி, மொபைல் போன்களிலோ மூழ்கிவிடாமல் அவர்களின் அருகாமையில் இருந்து (தொந்தரவு செய்யாமல்) அவர்களைக் கண்காணிக்க வேண்டும்.

நாளைய இந்திய தேசத்தைக் கட்டமைக்கப்போகும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்!

கட்டுரையாளர்: என். முஹம்மது ஃபாரூக்
மேல்நிலை ஆசிரியர், இராமநாதபுரம்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *