இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டிலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931-ம் ஆண்டிலும் நடைபெற்றது. 2021-ல் நடைபெறவிருந்த 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பீகார் அரசு அக்டோபர் 02 அன்று வெளியிட்டுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்தியாவின் பேசுபொருளாக மாறியுள்ளது.
பீகார் மாநில அரசு தங்களது கொள்கைகள் மற்றும் திட்டங்களை, தனது மாநிலத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 13 கோடி மக்களுக்கும், சமூக அந்தஸ்து அடிப்படையில் திறம்பட கொண்டு சேர்ப்பதற்காக, ‘பீகார் ஜாதி ஆதாரித் கணனா’ என்று அழைக்கப்படும் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை அக்டோபர் 2 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மக்கள் தொகை 27.1286% என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (EBC) மக்கள் தொகை 36.0148% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பட்டியலின மக்கள் தொகை 19.6518% ஆகவும், பட்டியல் பழங்குடியின மக்கள் தொகை 1.6824% ஆகவும், பொதுப் பிரிவினர் மக்கள் தொகை 15.5224% ஆகவும் உள்ளது.
இதேபோன்று அம்மாநில மக்கள் தொகையில் இந்துக்கள் 81.9986% ஆகவும், முஸ்லீம்கள் 17.7088% ஆகவும் உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 214 சாதிகளுக்கும் வெவ்வேறு தனி குறியீடுகளையும் ஒதுக்கியுள்ளது. ஆனால் இதில் துணை சாதி உட்பிரிவுகள் எதுவும் கணக்கிடப்படவில்லை.
பீகாரில் இதுவரை 27% உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவு(BC) மக்களுக்கு 12% இடஒதுக்கீடும், 36% உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு(EBC) மக்களுக்கு 18% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதுவே 15% மட்டுமே உள்ள பொதுப்பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவை மறுபரிசீலனை செய்ய அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
பல்வேறு தரப்பினரும் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்த வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு (ஒத்திசைவற்ற கணக்கெடுப்பு– non synchronously type) 1865 இல் தொடங்கி 1872 வரை 8 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டது. எனவே 1872-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது. அதே போன்று இந்தியாவில், முதல் ஒத்திசைவான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த 1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கப்பட்டது. அதுவரை இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்புகள் முழுமையாக நடத்தப்படவில்லை.
இவ்வாறு கடந்த 1931-ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி பற்றிய தகவல்களும் இடம்பெற்று வந்தன. ஆனால் இரண்டாம் உலகப் போர் காரணமாக, 1941-இல் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இடையூறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. எனவே அந்த ஆண்டு முதல் சாதி குறித்த தகவல்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படவில்லை.
பின்னர் இந்தியா குடியரசான பிறகு இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதிலும் சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. ஆனால் அரசியலமைப்பின் பிரிவு 341, 342-இன் படி பட்டியலின மற்றும் பழங்குடியினர் கணக்கெடுப்பு மட்டும் இந்தக் கணக்கெடுப்பில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இவற்றில் மற்ற சாதிப்பிரிவுகள் கணக்கிடப்படுவதில்லை.
இந்தியாவில் சமூகத்தில் பின்தங்கிய மக்களும் முன்னேற கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு விகிதங்கள், 1931-இல் கணக்கிடப்பட்ட சாதிரீதியான மக்கள் தொகைக்கு ஏற்பவே தற்போது வரை வழங்கப்பட்டு வருகின்றன. 1931-லிருந்து தற்போது வரை நாட்டின் மக்கள்தொகையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இடஒதுக்கீடு சரியான முறையில் வழங்கப்பட, சாதிவாரியான தரவுகள் கட்டாயம் தேவை.
மேலும் பீகாரில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அங்கு 15% மட்டுமே உள்ள பொதுப்பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது, ஆனால் 63% உள்ள ஓபிசி பிரிவினருக்கு 30% இடஒதுக்கீடே இதுநாள்வரையில் வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே பீகாரில் தற்போது எடுக்கப்பட்டுள்ள சாதிவாரியான கணக்கெடுப்பின் மூலம் இந்த இடஒதுக்கீடு விகிதங்கள் மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சாதிவாரியான கணக்கெடுப்பின் மூலம் மக்களுக்கான நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியும்.
பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்பட்டதற்கு பிரதமர் மோடி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எல்லா சாதியினரையும் இந்துக்கள் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதால் தான் தங்களால் எளிதாக தேர்தல் அரசியலில் 80/20 என்ற விகிதத்தில் வெல்ல முடிகிறது என்று சங் பரிவாரக் கூட்டம் உறுதியாக நம்புகிறது. இதில்தான் இப்போது பீகார் மண் அள்ளிப் போட்டிருக்கிறது.
கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பீகார் மாநிலம் முழு இந்தியாவுக்கும் இப்போது வழிகாட்டி இருக்கிறது. மற்ற மாநிலங்களும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி மக்களுக்குத் அறிவிக்க வேண்டும் என்ற பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்களின் கோரிக்கையை மாநில அரசுகள் புறந்தள்ளிவிடக் கூடாது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *