வாரணாசியில் இருக்கும் காசி விசுவநாதர் கோவில்- கியான்வாபி பள்ளிவாசல் வளாகத்தை சுற்றியுள்ள வீடுகள், கோவில்கள், கடைகளை யோகி அரசு இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. 1991-1992 ல் அப்போது கல்யாண் சிங் தலைமையில் இருந்த பாஜக அரசு இப்படித்தான் அயோத்தில் பாபர் மஸ்ஜித் வளாகத்தை சுற்றிலும் இருந்த வீடுகள், கோவில்கள், கடைகளை அப்புறப்படுத்தியது. இப்போது யோகி அரசும் அதே வேலையை செய்வதால் மதுராவில் இருக்கும் கியான்வாபி மஸ்ஜிதுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

கடந்த நான்கு மாதங்கள் முன்பே விஸ்வநாதர் கோவிலை சுற்றிலுமிருந்த பாரம்பரிய கட்டடங்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான கட்டடங்களை இடித்து வந்தனர். இவை அனைத்தும் ‘டார்கெட் வாரனாசி ப்ராஜெக்ட்’ என்ற திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. டார்கெட் வாரணாசி ப்ராஜெக்ட் என்பது நாடெங்கும் முஸ்லிம் பெயர்களை தாங்கி நிற்கும் கட்டங்கள், நகரங்கள், ஊர்கள் பெயர்களை மாற்றி இந்து பெயர்களை சூட்டுவது. அலகாபாத் நகரின் பெயரை பிராயாக்ராஜ் என்று மாற்றினார்கள். பைசாபாத் நகரத்துக்கு அயோத்தியா என்று மாற்றினார்கள். இது மாதிரி ஏராளமான திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான இந்த அத்துனை நடவடிக்கைகளையும் நடந்துவரும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களையும அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மத்திய அரசுக்கான தேர்தலை எதிர்கொள்ள சமூகங்கள் இடையில் பிரிவினை கலவரத்தை தூண்டும் வகையில் தான் செய்து வருகிறார்கள். மத்தியில் உள்ள மோடி அரசும் யோகி ஆதித்யநாத் போன்று மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகளும் மக்களுக்கு அளித்திருந்த தேர்தல் வக்குறுதிகளை நிறைவேற்ற தவறியிருப்பதை இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

அரசு நிறுவனங்கள் அயோத்தியில் பாபர் பள்ளி மற்றும் ராம் ஷபூத்ராவை சுற்றி இருந்த சுமித்ரா பவன் மற்றும் சாக்‌ஷி கோபால் மந்திர் உள்ளிட்ட பல கோவில்களை இடித்தனர் (ஃபிரண்ட் லைன் ஏப்ரல் 24, 1992). அதற்கு இந்த கோவில்களில் இருந்த பூசாரிகள் மகந்த் ராஜ் மங்கல் தாஸ் மற்றும் மகந்த் ராம் கிரிபால் தாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில்களை இடிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். ராம் கிரிபால் தாஸ் அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஊடகங்களை சந்திக்கும் போதும் அயோத்தியில் பொதுக் கூட்டங்கள் நடக்கும் போதும் தொடர்ந்த வண்ணம் இருந்தார். பூசாரிகள் இருவரும் சின்ன சின்ன கோவில்களை சங்பரிவார் அமைப்புகள் இடித்து வரும் அநியாயங்களை தலைவர்களிடம் சுட்டிக்காட்டினார்கள். சங்பரிவார் அயோத்தியை நிறைத்து வந்தனர். வி.எச்.பியில் சேராத பூசாரிகள் நடத்தி வந்த கோவில்களை எல்லாம் இடித்து வந்தனர். இந்த இடிப்பு நடவடிக்கை தான் இறுதியில் 1992 ல் பாபர் பள்ளிவாசலை இடிப்பதில் போய் நின்றது. வி.எச்.பி போன்ற சங்பரிவார் அமைப்பினர் அயோத்தி நகரம் முழுவதையும் ஆட்கொண்டனர். அதன் பிறகு இவர்களது எதிர்ப்புகள் பயனற்று போனது. அதன் பிறகு ராம் கிர்பால் தாஸ் மர்மமான வகையில் காணாமல் போனார். ராஜ் மங்கள் தாஸ் கவலையுற்றவராக மரணமடைந்தார்.

1991 ல் உ.பியில் இருந்த கல்யாண்சிங் அரசு அவ்வாண்டு அக்டோபர் மாதம் அயோத்தியில் பாபர் பள்ளிக்கு அருகில் இருந்து 2.77 ஏக்கர் நிலத்தை இந்து மத வழிபாட்டுக்காக கைப்பற்றியது. இந்த 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு இந்து கோவில்கள், மத வழிபாட்டுத் தலங்கள், இதர கட்டடங்கள் இருந்தன. அயோத்தி நகரத்தை அழகுபடுத்தவும், நவீனப்படுத்தவும் இந்த இடத்தை கைப்பற்றுவதாக கல்யாண் சிங் அரசு அப்போது கூறியது. சுமார் 25 ஆண்டுகள் கழித்து மற்றுமொரு பாஜக அரசு அழகு படுத்தப்போறேன், நவீனப்படுத்தப் போறேன் என்ற பெயரில் நிலங்களைக் கைப்பற்றி கட்டட இடிப்புகளில் இறங்கியுள்ளது. ஒரு தோராயமான மதிப்பீட்டின்படி 2018 நவம்பர் 2வது வாரத்தில் 95 குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்டு 168 கட்டடங்களை மாநில அரசு கைப்பற்றியுள்ளது. இந்த கட்டடங்கள் எல்லாம் படிப்படியாக இடிக்கப்பட இருக்கின்றன. கோவில்கள் மற்றும் இதர வழிபாட்டு தலங்களாக இதுவரையில் 55 கட்டடங்கள் இடிக்கப்பட்டு விட்டது என்று கூட்டு நடவடிக்கை குழு மற்றும் கட்டட இடிப்புகளை கண்காணித்து வரும் சஜ்ஜா சன்ஸ்கிருதி மன்ச் (Sajja Sanskriti Manch) என்ற அமைப்புகளோடு தொடர்பில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இவ்வமைப்புக்கள் கட்டடங்கள் இடிக்கப்படுவதால் உண்டாகும் சமூக மற்றும் மனித உரிமை மீறல்களை அவ்வப்போது எடுத்து கூறி வருகின்றனர். மொத்தமாக 250 முதல் 300 கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டிவரும் என்று அரசு பிரதிநிதிகளும் மற்றும் ஶ்ரீ காசி விஸ்வநாத மந்திர் டிரஸ்ட்டை சேர்ந்தவர்களும் கூறுகிறார்கள். 295 கட்டடங்கள் இடிக்கப்பட இருப்பதாக அரசு தரப்பில் இருந்து கூறப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இந்த கட்டட இடிப்புகளால் நூற்றுக்கணக்கான மக்கள் வீடிழந்துள்ளதாகவும் அவர்களது கடைகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுள்ளதாகவும் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஜாஹிருதி ராய் மற்றும் திவாகர் ஆகியோர் பிரண்ட் லைன் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்கள். இந்த அழகுபடுத்தும் திட்டம் பன்முகத்தன்மை கொண்டது. காசி விஸ்வநாதர் கோவிலை சுற்றி நடக்கும் இந்த திட்டத்துக்கு “கங்கா தர்ஷன் பாத்வே” என்று பெயரிட்டுள்ளனர். இது பிரதமர் மோடியின் விருப்பத் திட்டம் (pet project) என்று கூறப்படுகிறது. அதாவது கங்கையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரையில் வரிசையாக மரங்கள் நடப்பட்ட அகலமான வீதி அமைப்பது, பாதையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது, இருக்கைகள், ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் அமைப்பது இந்த திட்டத்தின் அம்சம். இந்த பாதைகள் நடுவில் இருக்கும் பலநூறாண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோவில்களை புதுப்பிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

2018 ஜூலை 14ல் பிரதமர் மோடி, வாரணாசி வந்திருந்த சமயம் காசி விஸ்வநாதர் மந்திர் டிரஸ்ட்டி மோடியை சந்தித்து திட்டம் பற்றி பேசி இருக்கிறது. காசி கோவிலை அழகு மற்றும் நவீனப் படுத்துவது பற்றி விரிவாக விளக்கி கூறியுள்ளார்கள். இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்தும் விளக்கி இருக்கிறார்கள். அப்போது 65 கட்டடங்களை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். அதில், 48 கோவில்கள், இதர வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக, பாரம்பரியமான கட்டடங்கள் மிகப் பழமையான கட்டடங்கள் கொண்ட வரைவு திட்டமும் அதில் இடம் பெற்றிருந்தது. இடிக்கத் திட்டமிட்டுள்ள கட்டடங்களில் ஒன்று CK28/11 என்ற எண் உடையது. இந்த கட்டடம் கியான்வாபி பள்ளிவாசல் கேட்டில் இடம்பெற்று உள்ளது. காசி விஸ்வநாத கோவில் – கியான்வாபி பள்ளிவாசல் கேட் நம்பர் 4 என பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடியிடம் இந்த கட்டடம் சுட்டிக்காட்டப்பட்ட 3 மாதங்கள் 10 நாட்கள் கழித்து 2018, அக்டோபர் 25 அன்று, கேட் நம்பர் 4 ல் இருந்த ஒரு சிறிய தளத்தை உள்ளாட்சி நிர்வாகம் இடித்து விட்டது. இந்த கேட்டின் பாதை கியான்வாபி பள்ளிவாசலை அடைகிறது. உள்ளாட்சி நிர்வாகம் இடித்த அந்த தளமானது சன்னி வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது.

இந்த இடம் இடிக்கப்பட்டதும் முஸ்லிம்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு கூடி விட்டார்கள். கோவில்களை இடிப்பதால் அதிருப்தியில் இருந்த இந்துக்களும் கூட்டு நடவடிக்கை குழுவினரும் அங்கு கூடினர். அனைத்து தரப்பினரும் மல்லுக்கட்டியதால் உள்ளாட்சி நிர்வாகம் இடிப்பதை நிறுத்தி விட்டு 4 ஆம் எண் கேட்டில் இடித்த தளத்தை மீண்டும் கட்டிக்கொடுக்க நேர்ந்தது. இந்த அழகுபடுத்தும் திட்டம் பற்றி முஸ்லிம்கள் ரொம்பவே அச்சப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகள் அசலாக அயோத்தி சம்பவத்தை ஒத்ததாக இருக்கிறது. இது ஒரு சூழ்ச்சித் திட்டம் போல தெரிகிறது என்றும் முஸ்லிம்கள் பீதியுடன் கூறுகின்றனர். அயோத்தியில் 1992ல் உள்ளாட்சி நிர்வாகம் சிறிய வகை கோவில்களை இடித்த போது இந்துக்கள எதிர்ப்பு தெரிவித்ததை போன்று இப்போதும் காசியில் கோவில்களை இடிக்க இந்துக்கள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்குள்ள கட்டடங்கள் பலநூறு ஆண்டுகள் பழமையானவை. அவற்றை இடிக்க கூடாது என்று தெரிவித்து வருகின்றனர்.

1992 டிசம்பர் 6ஆம் நாள் பாபர் பள்ளிவாசலை இடித்து தகர்த்த கரசேவர்கள் டிசம்பர் 7 ஆம் நாள், அயோத்தியில் இருந்து வெளியேறும் போது, இது முன்னோட்டம் தான், காசி மற்றும் மதுரா மிச்சமிருக்கிறது என்று கூச்சலிட்டவாரே சென்றனர். 25 ஆண்டுகள் கழித்து காசியையும், மதுராவையும் நெருங்கி வந்துள்ளார்கள்.

கட்டுரையாளர்: ஜி. அத்தேஷ்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *