ஞானவாபி மஸ்ஜித் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தற்போது தாக்கல் செய்யப்படுள்ளது. கியான்வாபி மஸ்ஜித் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. முதல் வழக்கு வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் 1991ல் “சுயம்பு லார்ட் விஸ்வேஸ்வர்” பக்தர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள், இந்த கியான்வாபி மஸ்ஜித் இருக்கும் இடத்தில் முதலில் ஒரு கோவில் தான் இருந்தது, எனவே, கியான்வாபி மஸ்ஜித் உள்ளே சென்று வழிபடுவதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். வழக்கின் இறுதியில் தீர்ப்புரை வழங்கிய நீதிமன்றம், 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் [Places of Worship (Special Provisions) Act, 1991] சில ஷரத்துகள் உங்கள் கோரிக்கைக்குத் தடையாக இருப்பதாக 1997ல் தீர்ப்பு வழங்கியது.

ஒரு மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி ஒருவர் மேற்படி தீர்ப்பை செப்டம்பர் 1998ல் ரத்து செய்தார். இந்த விசயத்தில் ஆதாரங்களை சேகரிக்காமல் முடிவு செய்ய முடியாது என்றார். அதே ஆண்டின் பிற்பகுதியில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து விட்டது. இந்த இடைக்காலத் தடை 2020 முடிய நடைமுறையில் இருந்தது. இடைக்கால தடையை விரைவாக நீட்டிப்புச் செய்யவில்லை என்றால் 6 மாதங்களுக்கு மேல் செல்லாது என்று உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து சிவில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வழக்கில் மனுதாரர் மனுவை விசாரணை செய்ய தொடங்கியது. விசாரணைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் பிப்ரவரி 2020ல் மீண்டும் இடைக்கால தடை விதித்தது. தீர்ப்பை மார்ச் 2020க்கு ஒத்தி வைத்தது. இதன் பிறகு ஒரு சிவில் நீதிமன்றம் இதே வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது. மஸ்ஜித் தற்போதிருக்கும் இடத்தில் ஏற்கெனவே கோவில் இருந்ததா என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாபர் மஸ்ஜிதை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பிரச்சனை பரபரப்பாகி வந்த வேளையில் தான் இதர மஸ்ஜித்துகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் “வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம்” நாடாளுமன்ற ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஆகஸ்ட் 15, 1947ல் என்னவாக இருக்கிறதோ அவ்வாறே பாதுகாக்கப்படும் என்று அந்த சட்டத்தால் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்த வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விலக்கு கேட்க தொல்லியல்துறை ஆய்வின் முடிவுகளைப் பயன்படுத்துவார்கள். இந்த சட்டம் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் அதே சமயம் பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் இருந்து விலகி நிற்கிறது. பழங்கால சின்னங்கள் என்பது வரலாற்றுப் பூர்வமாக 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கு கட்டடங்கள் அல்லது நினைவிடங்கள்.

சிவில் நீதிமன்றத்தின் அகழாய்வு செய்யும் உத்தரவை அலகாபாத் உயர்நீதிமன்றம்  கண்டித்ததுடன் தொல்லியல்துறை ஆய்வுக்கும் இடைக்காலத் தடை விதித்து செப்டம்பர் 2021ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் “நீதித்துறையின் (courtesy and decorum) மாண்பும் நல்லொழுக்கமும் (அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் காத்திருத்தல் போன்ற) கட்டுப்பாடுகளுக்கு உத்தரவாதம் தருகிறது. இந்தக் கட்டுப்பாடு கீழமை நீதிமன்றங்களில் இருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், புரிந்துகொள்ள முடியாத காரணங்களால் இது நடப்பதில்லை” என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடிந்து கொண்டது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், வாரணாசி சிவில் நீதிமன்றம் ஒன்றில் 2வது மனு ஒன்று ஆகஸ்ட் 2021ல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கியான்வாபி மஸ்ஜித் உள்ளே சென்று பூசை செய்ய உரிமை கேட்டதுடன் மஸ்ஜித் உள்ளே இருக்கும் ஷிரிங்கர் கௌரி, விநாயகர், ஹனுமன், கண்ணுக்குப் புலப்படும் மற்றும் புலப்படாத இந்து தெய்வங்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை கோரியது. இந்த வழக்கு இப்போது நிலுவையில் இருக்கிறது. ஒரு சிவில் நீதிபதி, அஜெய் குமார் என்ற வழக்கறிஞரை வழக்குரை ஆணையராக (advocate commissioner) நியமனம் செய்து, ‘கியான்வாபி மஸ்ஜித்தை ஒளிப்படப் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று  ஏப்ரல் 8, 2022ல் உத்தரவிட்டார். தேவைப்பட்டால் காவல்துறை பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவும் அஜெய் குமாருக்கு அனுமதி வழங்கினார். அஜெய் குமார் பெயரை மனுதாரர் தரப்பே பரிந்துரை செய்திருந்ததால் அஜெய் குமார் நியமனத்தை முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். அஜெய் குமாரை மாற்ற முடியாது என்று மே, 12ல் நீதிமன்றம் மறுத்து விட்டது. பதிலாக, ஒளிப்படப் பதிவு செய்ய இரண்டு வழக்குரை ஆணையர்களை கூடுதலாக நியமித்தது. தேவைப்பட்டால் பூட்டுகளை உடைப்பதற்கும் யாரேனும் இடையறு செய்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.மேலும், மே 17க்கு முன்பே அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்குரை ஆணையர்களை கேட்டுக் கொண்டது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அமர் சரண் (Justice Amar Saran), “இந்த ஆய்வே வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு முரணானது, வழிபாட்டுத் தலத்தை மாற்றும் முயற்சியை கூட இந்த சட்டம் அனுமதிக்காது. எனவே, கீழமை நீதிமன்றங்கள் சட்டவிரோத செயல்களை தூண்டி விடுவோருக்கு உடந்தையாக இருக்கின்றன” என்று Quint இணைய இதழுக்கு கூறி இருக்கிறார்.

இந்து மனுதாரர்கள் மஸ்ஜித்தின் குளத்தில் (ablution tank) சிவலிங்கம் இருப்பதை கண்டு பிடித்து விட்டதாக, அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே சொன்னதை, மஸ்ஜித் தரப்பு  வழக்கறிஞர்கள் ஆஜராகாத ஒருநாளில், (மே 23ல்) நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கியான்வாபி பள்ளிவாசலின் ஒரு பகுதியை மூடி முத்திரையிட உத்தரவிட்டது. தொழுகைக்காக மஸ்ஜித் உள்ளே போக நாள் ஒன்றுக்கு 20 முஸ்லிம்களுக்குத் தான் அனுமதி என்றது. இந்த வாதத்தை முற்றிலும் மறுத்த மஸ்ஜித் தரப்பு அந்த பகுதியானது நீரூற்றுப் பகுதி (fountain) என்றது. ஊடகங்களுக்கு செய்தியை கசிய விட்ட வழக்குரை ஆணையரை அடுத்தநாளே நீக்கியது நீதிமன்றம். மீதமுள்ள 2 ஆணையர்கள் மே 19க்கு முன்னர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒளிப்படப் பதிவை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், அலகாபாத் உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 2021ல் தள்ளுபடி செய்தது. நீதிமன்றங்கள் எந்தவொரு வழக்கிலும் உத்தரவுகள் வழங்க கடினமாக ஆய்வுகளுக்குப் பின்னரே முடிவெடுக்கின்றன. அந்த ஆய்வுகள் செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்க இந்த நடைமுறை வழிகாட்டுகிறது” என்றது.

அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கியான்வாபி மஸ்ஜிதின் நிர்வாகக் குழு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தொழுகை செய்ய 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்று முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை உச்சநீதிமன்றம், மே 24ல், ரத்து செய்தது. மேலும், ஒளிப்பட ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட அமைப்பை பாதுகாக்கும் படிக்கு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991ன் கீழ் சங்பரிவார் மனுக்கள்  விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்று அறிவிக்கும் படி மஸ்ஜித் நிர்வாகம் கோரியதை நீதிபதிகள் ஏற்கவில்லை. மனுக்களை நிராகரிக்க சட்டத்தில் இடம் இருந்தும் மனுக்களை ஏற்றுக்கொள்ளத் தக்க சமாதானத்தை நீதிபதிகளே கூறினார்கள். ஒரு பார்சி கோவிலில் சிலுவை கண்டெடுக்கப்படதாக கூறினால் அதற்காக கோவிலை இடித்து சர்ச்சு கட்ட உத்தரவிட முடியுமா என்று முஸ்லிம்கள் தரப்பை வாயடைத்து உள்ளார்கள். சிவலிங்கம் கண்டறியப்பட்ட பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் மேலும், இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கும் மாற்றி உள்ளார்கள். வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு 2 வழக்குகள் விசாரணைக்கு உள்ளன. அதில், எதை முதலில் விசாரிப்பது என்பதிலும் குழப்பம். ஒரு வழக்கானது, வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் படி இந்த வழக்கை விசாரணை செய்யக் கூடாது என்று முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. மற்றது, கியான்வாபி மஸ்ஜிதின் தடாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. இந்த குழப்பம் தீர்ந்து முதலில் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கத்தக்கதா என்பதை முதலில் விசாரிக்கலாம் என்று மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்தது.

மன்னர் ஔரங்கசீப் கட்டிய கியான்வாபி மஸ்ஜித் வெளிப்புறச் சுவரில் உள்ள சிரிங்கார கவுரி அம்மனை தரிசனம் செய்ய அனுமதி கோரி சங்பரிவார அமைப்புகள் வாரணாசியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனையடுத்து, ஓராண்டுக்கு மட்டும் வழிபட அனுமதி பெற்றனர். இந்த நிலையில், அம்மனை நிரந்தரமாக வழிபட அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்றம் இந்த வழக்கில் உள்ள உள்நோக்கம் பற்றியோ, இனி எந்த ஒரு வழிபாட்டு தலத்தின் மீது எவரும் கைவைக்காத படிக்கு பாதுகாப்பு வழங்கும் 1991 சட்டத்தைப் பற்றியோ விசாரணையில் குறிப்பிடாமல் மஸ்ஜித் முழுவதையும் ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு நீதிபதி ரவிக்குமார் திவாகர் உத்தரவிட்டுள்ளார்.

மஸ்ஜித்தில் நடக்கும் ஆய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு அவசர வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆனால், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய முடியாது என்றும் ஆய்வுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் கூறியது உச்சநீதிமன்றம்.

பாபர் மஸ்ஜித் வழக்கிலும் சங்பரிவார்கள் முதலில்  நம்பிக்கை அடிப்படையில் ராமரை வழிபாடு நடத்தவே  நீதிமன்றத்தின் மூலம்  அனுமதி பெற்றனர். பின்னர், படிப்படியாக திட்டங்கள் வகுத்து இறுதியாக கரசேவை செய்து பள்ளியை சட்டவிரோதமாக இடித்து தள்ளினார்கள். இப்போது, அவர்கள் ஏற்கெனவே பட்டியல் செய்து வைத்திருந்த காசி, மதுரா போன்ற மஸ்ஜிதுகளையும் படிப்படியாக முன்னேறி இடித்து விட்டு கோவில்கள் கட்டுவதற்கு விளைந்திருக்கின்றனர். விஷ்வ வேதிக் சனாதன் சங் அமைப்பின் தலைவர் ஜிதேந்தர் சிங் கூறும்போது, மஸ்ஜிதில் உள்ள நீர்த்தடாகத்தில் 13 அடி அளவுள்ள சிவ லிங்கம் இருக்கிறது, நீதிமன்றம் மூலம் சாதகமான முடிவினை பெறலாம் என்று தெரிவித்தார்.

கட்டுரையாளர்: ஜி. அத்தேஷ்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *