AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது. Chat GPT, Google Bard போன்ற சாட்பாட் (Chatbot) உதவியால் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதனைப் போலவே பதில் கூறும் திறன் உடையதாக இந்த மென்பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், மனிதனுக்கு உதவி செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அவர்களின் வேலைக்கே பெரும் அச்சுறுத்தலாக பரிணமித்திருக்கிறது. குறிப்பாக சேவைத் துறையில் இருப்பவர்களின் வேலைவாய்ப்பு பெருமளவில் பறிபோக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் பெருகி மேலும் அணுகக்கூடியதாகிவிட்டன. செலவைக் குறைக்கும் அதே வேளையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க நிறுவனங்கள் இந்தக் கருவிகளைப் பயன்படுத்துகின்றன.

30 கோடி முழு நேர வேலையில் ஈடுபடுபவர்கள் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படலாம் என்று கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அண்மையில், ஒடிசாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் லிசா என்ற செய்தி வாசிப்பாளரை தொலைக்காட்சி ஒன்று அறிமுகப்படுத்தி தேசிய அளவில் விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. அசல் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த ரோபோ செய்திகளைப் பிழையின்றி வாசிக்கிறது.

இவ்வாறு, செயற்கை நுண்ணறிவுகள் ஒவ்வொரு துறையிலும் அறிமுகப்படுத்தப்படுவது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இனி செயற்கை தொழில்நுட்பம்தான் உலகம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை இணைத்து வேலை செய்வதற்கு யாரெல்லாம் தயராக இருக்கிறார்களோ அவர்களுக்கு பிரச்னை இல்லை.

சாட் ஜிபிடி, பாட், போன்றவை எல்லாம் தனிப்பட்ட உதவியாளர்கள் என்ன வேலையை செய்வார்களோ அந்த வேலையை செய்கின்றன. அப்படியிருக்கும்போது, தனி உதவியாளர்களுக்கான தேவை இல்லாமல் போகிறது. இதேபோல், ஒரு வாக்கியத்தை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்றால் ஆங்கிலம் தெரிந்த ஒரு நபரை நாம் வேலைக்கு வைத்திருப்பார்கள். இப்போது, அந்த வேலையை செயற்கை நுண்ணறிவு குறைந்த நேரத்தில் தரமாக செய்து முடிக்கின்றன. கூகுளின் செயற்கை நுண்ணறிவான பார்டு (Google Bard), தற்போது 40 மொழிகளில் உரையாடும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சேவைத் துறையில் இருப்பவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு காரணமாக நிச்சயம் பாதிப்பு ஏற்படும். தற்போது குறைந்த அளவில் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு உள்ளது. எனவே, சேவைத்துறையில் உள்ளவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து கற்றுக்கொள்வது அவசியம்.

AI என்பது ரிமோட்டாக எங்கிருந்தும் கட்டுப்படுத்தும் வகையிலான ஒரு கருவிதான். இணையத்துடன் அவை இணைந்துள்ளது. அப்படியிருக்கும்போது, எங்கேயோ உள்ள ஒரு ஹேக்கர் நமது AI-ஐ ஹேக் செய்து நமக்கு எதிராகவே செயல்பட வைக்க முடியும். நிறுவனத்தின் மொத்த தரவுகளும் AI வசம் இருக்கும்போது அவற்றை ஹேக் செய்து நமக்கு போட்டி நிறுவனங்கள் பாதிப்பை ஏற்படுத்த முடியும். இ.காமர்ஸ் போன்ற போட்டிகள் நிறைந்த துறையில் இத்தகைய செயல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை மறுக்க முடியாது.

தவிர, AI-யின் செயலுக்கு யார் பொறுப்பேற்பது என்ற சட்ட ரீதியிலான சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய பொறுப்பும் கூடுதலாக இருக்கும்.

AI மூலம் இயங்கும் கார்கள் வரப்போவதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் கார்கள் விபத்தில் சிக்கும்போது, அந்த விபத்துக்கு யார் பொறுப்பாக முடியும்? காரின் உரிமையாளரா அல்லது காரை தயாரித்தவர்களா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும்? என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய நிலைக்கு உலகம் வந்திருக்கிறது.

அதே நேரத்தில் ஊழியர்களிடம் விசுவாசம் குறைந்துள்ளதும் நிறுவனங்கள் செயற்கை தொழில்நுட்பத்தை அதிகம் நாடுவதற்கு காரணமாக உள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு நிறுவனம் தனது ஊழியரை சில மாதங்கள் காலமெடுத்து நன்றாக பயிற்சிகளை வழங்குகிறது. அதற்காக நிறைய அவர்கள் செலவழிக்கின்றன. பயிற்சி பெற்றப்பின்னர், அதிக ஊதியம் கிடைக்கிறது என்று அந்த ஊழியர் வேறு நிறுவனத்துக்கு செல்லும்போது முந்தைய நிறுவனத்துக்கு அது இழப்பை ஏற்படுத்துகிறது. இதுவே AI பயன்படுத்தும்போது பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அதேவேளை, முழுதும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இருக்காமல், மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து பணியாற்றும் COBOT (collaborative robot) முறையை ஒருசில நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. AI எதாவது தவறு செய்தாலும் உடன் இருக்கும் மனிதர்களால் அதை உடனடியாக சரி செய்ய முடியும். பொதுவான வேலைகள் அனைத்தையும் ரோபோ செய்துவிடும். அதிலேயே திறன் தேவைப்படும் வேலைகளை மனிதர்கள் செய்வார்கள். இது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

செயற்கை தொழில்நுட்பம் மூலம் வேலையை திறன்பட செய்ய முடிகிறது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அவற்றால் என்றைக்கும் மனிதர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *