தத்துவ அறிஞர் ஏ.ஜே.டாய்ன் பீ (AJ Toyn bee) தனது மிகப்பெரிய படைப்பான A Study of History எனும் நூலில், “நாகரீகங்கள் எழுவதும்; வீழ்வதும் தொடர்ச்சியாக சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு நிற்பதில்தான் இருக்கிறது” என்று பெரும்பாலோர் ஏற்றுக்கொண்ட கொள்கையை அழகாக எடுத்துக் காட்டுகிறார். சவாலை எதிர்கொண்டு எழும்போது அந்த நாகரீகம் உச்சத்துக்குப் போகிறது. ஓரளவே சமாளிக்கும் போது சமநிலையில் நிற்கிறது. எதிர்கொள்ள முடியாமல் மிகவும் தளர்வாகிடும் போது அந்த நாகரீகம் வீழ்ச்சியை நோக்கிப் பாய்கிறது.

இந்தியா இன்று, அமைப்புகள் அழிவுறும் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த 20 வருடங்களில் அரசியல் கட்டமைப்பு சரிவை அடைந்திருக்கிறது. அதிகார மையங்கள் சோரம் போயிருக்கின்றன. சட்டம் இயற்றக் கூடியவர்களே குற்றம் செய்பவர்களாகி இருக்கிறார்கள். நாடெங்கிலும் சட்டத்தைக் காப்பாற்றக் கூடியவர்களே குற்றவாளிக் கூண்டில் நிற்பதையும் தண்டனைச் சட்டத்தின் ஒவ்வோர் பிரிவும் அவர்கள் மீது சுமத்தப்படுவதையும் பார்க்கிறோம்.

இறுதியாக இந்த நாடு சாதியம், மதவாதம் என்ற பல தலைகள் கொண்ட அசுரனை எதிர்நோக்கி நிற்கிறது. அது, இறுக்கி கட்டப்பட்ட நமது மதச்சார்பற்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை கிழித்துப் போடுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. மக்களின் கடைசிப் புகலிடமான நீதித்துறை, நீதி, சட்டத்தின் ஆட்சி அனைத்தும் உள்ளும் புறமும் இருந்து மிரட்டப்படுகிறது. இருளுக்கு எதிராக வெளிச்சத்தின் பக்கம் உறுதியாக நிற்பதற்கு கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் இன்னும் எத்தனைக் காலத்துக்கு நடுநிலை பிசகாமலும், துணிச்சல் கொண்டதாகவும் நீடித்திருக்க முடியும் என்பது கேள்விதான். குஜராத்திலும் மற்றெங்கிலும் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். சட்ட வல்லுனர் எச்.ஆர்.பரத்வாஜ் இவ்வாறு கூறினார்:

“நீதித்துறை சுதந்திரத்துக்கான மிகப்பெரிய சவாலே நீதித்துறைக்கு உள்ளே இருந்துதான் வருகிறது. தனிப்பட்ட காரணங்களால் பிளவுண்டு நிற்பதே அதற்குக் காரணம்” என்கிறார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழிகாட்டுக் கொள்கையில் பொது சிவில் சட்டத்தைப் பற்றிப் பேசும் விதி 44 இணைக்கப்பட்டிருக்கிறது. நீதித்துறை திட்டமாக விரும்புகிற ஒரு இலக்கை அடைவதற்காக குறிப்பிட்டதொரு சட்டத் தொகுப்பை ஏற்கவேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை வழங்குமானால் அது சட்டத்தின் ஒவ்வொரு அதிகாரமும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தெளிவாக வரையறை செய்திருக்கும் அரசியல் சட்ட வரைவின் வரம்பை மீறும் செயலாகும்.

சட்டப்புலமை வாய்ந்த நீதிபதி நானி பல்கிவாலா (மறைவு) கூறுகிறார்:

“இன்று நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பு அரசிடம் இருந்து உச்ச நீதிமன்றத்துக்குப் போகுமானால் நாளை அது மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து மக்களால் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படாமல் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களிடம் போக வாயப்புள்ளது. உதாரணமாக, இன்று உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளை மக்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டுமென்றால் நாளை ராணுவம் எடுக்கும் முடிவினையோ ஒரு சர்வாதிகார ஆட்சியாளர் எடுக்கும் முடிவினையோ மக்கள் ஏற்றுக்கொண்டுவிட முடியும். அவர்களுக்கெல்லாம் நாட்டை ஆள்கிற வகையில் அதிகாரத்தின் எல்லை இருக்கிறதா என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும்.

அரசானது தேர்தல் முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தினர்களால் நடத்தப்பட வேண்டும். அல்லாமல் ஒரு அரசே சில தனிநபர்களை நியமனம் செய்துகொண்டு செயல்பட முடியாது. நீதிபதிகளாக இருக்க அரசு நியமனம் செய்யும் வழக்கறிஞர்கள் ஒரு அரசை வழிநடத்த முடியாது. அவ்வாறு நடக்குமானால் அரசு நியமனம் செய்யும் நீதிபதிகளால் வழிநடத்தப்படும் அரசுக்கும்; அரசு நியமனம் செய்யும் ராணுவத் தளபதிகள் வழிநடத்தும் அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?” என்று கேட்கிறார்.

மாட்டிறைச்சி சம்பந்தமான ஒரு வழக்கு சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று ஒதுங்கிக் கொண்டது. சட்டத்தை உருவாக்குவது சட்ட அவையின் வேலை, நீதிமன்றத்தின் வேலை இல்லை என்று விளக்கம் கூறியது.

ஆஸ்திரேலிய நாட்டில் தலைமை நீதிபதியாக இருந்த சர்.அந்தோணி சோன் ஒருமுறை இங்கிலீஷ், ஸ்காட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியன் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டம் ஒன்றில் பேசும் போது, “நீதித்துறை சுதந்திரம் என்பது நீதிபதிகளுக்கான சிறப்பு உரிமை கிடையாது. சில சமயம் நீதிபதிகள் தங்கள் மனப்போக்கில் சிறப்புரிமையைக் கொண்டு நீதித்துறை சுதந்திரத்தை தவறாக அணுகுகிறார்கள். நீதித்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் மக்களின் தேவைக்காக கொடுக்கப்பட்ட சிறப்புரிமை. அது மக்களின் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நமது ஜனநாயகத்தில் இது அடிப்படை அம்சம். எல்லாவற்றுக்கும் மேலாக, மற்றொரு குடிமகனுக்கு எதிரான அவன்/அவள் உரிமைகளைக் காட்டிலும் உயர்வானது அரசுக்கு எதிரான உரிமைகள்” என்றார்.

இங்கே நடப்பிலுள்ள வார்த்தைகள் “நீதித்துறை சுதந்திரம் மக்களுக்குத் தேவைப்படும் உரிமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறது” என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

நீதிபதி ஏ.எம்.அஹமதி இதில் ஒரு சமநிலையை ஏற்படுத்தினார். “மக்களால் தேர்வு செய்யப்படாத நீதித்துறை கொள்கை உருவாக்கும் அமைப்பாகவும் அல்லது கொள்கை உருவாக்க உதவி செய்யும் அமைப்பாகவும் செயல்பட முடியாது என்பதில் நீதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார். பொதுவாகவே, நீதிபதிகள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றே மக்கள் நம்பினார்கள், நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகளாக இருக்கும் ஒருவர் இதற்கும் மேலான வார்த்தைகளைக் கூறமுடியாது. பல நூற்றாண்டுகளை எடுத்துக்கொண்டு இந்திய நாடு தனது கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் ஒன்றிணைத்திருக்கிறது. இந்தக் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்திற்குச் சொந்தமான மக்கள் அனைவரும் சமமானவர்கள். அவர்கள் தம்முடைய சமயத்தையும் சட்டத்தையும் பின்பற்ற சட்டப்படியான உரிமம் உடையவர்கள். சிறுபான்மையினரின் தனிச் சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று ஒரு அரசியல் கட்சி அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தூண்டிவிடுமானால் சிறுபான்மை மக்களை மிகப்பெரிய அச்சம் கவ்விக் கொள்ளும். பொதுவான உரிமையியல் சட்டத்தை உருவாக்குவதற்கான சரியான சூழல் உருவாவதில் அந்த அச்சமே மிகப்பெரிய தடையை ஏற்படுத்தும்” என்றார் அஹமதி.

இந்துத்துவாவினர் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக, மிரட்டல் விடும் படியான அறிக்கைகளை வெளியிடும்போது சிறுபான்மையினர் மனதில் கடும் சஞ்சலத்தை ஏற்படுத்தும். இந்துமத தத்துவத்தின் அடிப்படையில் ஒரு அரசை விரும்புவோர் ஏன் பொது சிவில் சட்டம் கொண்டுவர கடும் ஆர்வம் காட்டுகிறார்கள்?

அவர்களின் நோக்கம்தான் என்ன? பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூறுபவர்கள் மறைவாக வைத்துள்ள திட்டம்தான் என்ன? மேலும், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்குமா? பொது சிவில் சட்டத்தை ஏற்பதில் ஒத்தக் கருத்து ஏற்பட்டு அனைவரும் பொதுவானதொரு முடிவுக்கு வரும் போது மட்டும்தான் சட்டமாக்க முடியும் என்பது வெளிப்படையான அம்சம். பொது உரிமையியல் சட்டத்தில் இணைக்கப்படும் விதிகளின் காரணத்தை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து முஸ்லிம் தனிநபர் சட்டம் வேறுபட்டிருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். முஸ்லிம் சமூகத்தின் அறிஞர்கள் முஸ்லிம் தனிநபர் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்று நான் ஒரு வாதத்தை முன்வைப்பதன் மூலம் இஸ்லாமிய சட்டத்தின் புனிதத்தன்மை காரணமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரும் வாய்ப்பு இல்லை என்று வாதிடவில்லை. பல அறிஞர்கள் அணிவகுத்துச் சொன்ன சமய சார்பற்ற வாதங்களைத் தான் நானும் வெறுமனே முற்படுத்துகிறேன். அவற்றை வலுப்படுத்தவே கொஞ்சம் கூடுதலான வாதங்களைத் தருகிறேன். சூடான வாதங்களை வெல்லவே அவை முனைகின்றன.

ஒரேயொரு வழிகாட்டும் கொள்கைக்கு முக்கியத்துவம் ஏன்?

உச்சநீதிமன்றம் ஒரு வழக்கின் விசாரணையின் இடையில் கூறும் கருத்துக்களுக்கு அவ்வப்போது பெரிய விளம்பரம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஊடகங்கள் அவற்றை வைத்து தொடர்ச்சியாக சர்ச்சைகளை முன்னெடுக்கின்றன. இதன்காரணமாக, அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறையில் பொது உரிமையியல் சட்டம் பற்றிப் பேசும் 44 என்ற ஒரேயொரு விதிதான் இருக்கிறது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஊடகங்கள் அதிகரிக்கச் செய்கின்றன.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 37, வழிகாட்டு நெறிமுறைகளில் (Directive Principals) இருக்கும் எந்தவொரு பிரிவையும் எந்த நீதிமன்றமும் மக்கள் மீது திணிக்க முடியாது என்று தெளிவாகவே கூறுகிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒரேயொரு வழிகாட்டு கொள்கை மட்டும் இல்லை. மொத்தம் 16 விதிகள் இருக்கின்றன என்ற உண்மையைச் சொல்ல இதுவே சரியான தருணம். அந்த விதிகளில் பெரும்பாலானவை மக்கள் மீது ஆழமான கரிசனம் கொண்டவை.

நேரடி நடவடிக்கைகளின் 16 விதிகள் பற்றி அறிய விருப்பம் உடையவர்கள் அரசியல் அமைப்புச் சட்ட புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். சமூக அடுக்குகளின் வரிசையில் மக்களின் நலன்களை மேம்படுத்த வேண்டும் என்று அது அரசுக்கு ஆணையிடுகிறது. இதில் அனைத்து மக்களுக்கும் தேவையான அளவில் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், குடிமக்களில் எவரும் விபச்சாரம், பிச்சையெடுத்தல், போதை மருந்துகள் விற்றல் போன்ற பொருத்தமில்லாத தொழில்களில் வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். பொருளாதார முடக்கம் காரணமாக பிரதிநிதித்துவம் பெறமுடியாமல் இருப்பவர்களுக்கு அனைத்து வகையான சட்ட உதவிகளையும் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பில்லாதமைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். மனிதநேயம் கெடாத பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறுகிறது.

அனைத்துக்கும் மேலாக, நேரடிக் கொள்கைகளில் இரண்டை அரசியலமைப்புச் சட்டம் குறிப்பாக வலியுறுத்துகிறது. விதி 45 இவ்வாறு கூறுகிறது:

“இந்த அரசியலமைப்புச் சட்டம் செயல்படத் தொடங்கியதில் இருந்து, 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றும் வகையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் 14 வயது முழுமை அடைவதற்குள் கட்டணமில்லாத கட்டாயக் கல்வியைக் கொடுக்க வேண்டும்” என்கிறது. வழிகாட்டுக் கொள்கையில் காலக்கெடு வைத்து வகுக்கப்பட்ட விதி இது ஒன்றுதான். ஆனால் மத்திய அரசு, கட்டணமில்லாமல் கட்டாயக் கல்வி கொடுப்பதை சட்டமாக்க 10 ஆண்டுகளுக்கு பதில் 50 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 93வது திருத்தத்தில் தான் இது சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்தை முழு அளவில் அமல்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது இறைவன் ஒருவனுக்குத் தான் தெரியும்.

அதேபோல் விதி 47, மது விலக்கைப் பற்றிக் கூறுகிறது. நாடு முழுமைக்கும் மது விலக்கை அமல்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வழிகாட்டுகிறது. தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்பமும் அதுதான்.

இந்தியா மது விற்பனையில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இதில் 18 விழுக்காடு மது கடும் போதையுடையது. அதில் நச்சுத்தன்மை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மது குடிப்போர் வயது 23ல் இருந்து 19ஆக குறைந்திருக்கிறது. தற்கொலை செய்பவர்களில் 34 சதவீதமானவர்கள் மதுவுக்கு அடிமையான காரணத்தால் விபரீத முடிவினை எடுக்கிறார்கள். பணி செய்யும் இடங்களில் நடைபெறும் விபத்துகளில் 40 விழுக்காடு மது குடிப்பதனால் உண்டாகிறது. மனைவியைத் துன்புறுத்துபவர்களில் 85 சதவீதம் பேர் தினமும் குடிப்பவர்களாக இருக்கிறார்கள். இதன்காரணமாக பிரிந்து போகவோ, விவாகரத்து ஆகவோ நேர்கிறது. இந்தியாவில் மதுவினால் இறப்போர் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் 20 விழுக்காடு அதிகரித்துக் கொண்டே போகிறது. சாலை விபத்துக்களில் 70 விழுக்காடு மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதினால் ஏற்படுகிறது. இந்தியாவில் தற்போது 10 கோடிக்கும் அதிகமானோர் மது குடிப்பதாக கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.

ஏராளமான அளவு மது குடிப்பதனால் தான் இந்தியாவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்வதாக உச்ச நீதிமன்றமே எச்சரிக்கை செய்திருக்கிறது. பலவிதமான நோய்கள் தோன்றுவதற்கும் கூட அதிகமான குடிதான் காரணம் என்பது முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. ஒரு குடும்பத்தின் ஒரே உழைப்பாளி தனது முழு ஊதியத்தையும் குடித்தே காலி செய்வதனால் எத்தனைக் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன என்பதும் நன்றாகவே தெரிந்த ஒன்றுதான். மது குடிப்பதனால் உண்டாகும் கேடுகள் பற்றி தேச மற்றும் சர்வதேச மருத்துவக் கழகங்கள் என்ன கூறியுள்ளன என்பதும் ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும் தான். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த, சீக்கிய மதங்களின் அறிஞர்களும் மது குடிப்பது பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் இதுவரையில் உச்ச நீதிமன்றம் இந்த நேரடிக் கொள்கையை சட்டமாக்கும் அவசியம் குறித்து ஒரு வார்த்தைக் கூட கூறவில்லை. நேரடிக் கொள்கையில் சட்டமாக்கும் வகைக்கு உச்ச நீதிமன்றம் எந்தவொரு விசாரணையின் போதும் போகிற போக்கில் கூட சுட்டிக் காட்டியதில்லை.

அதுவே, பொது சிவில் சட்டம் இன்னும் கொண்டு வரப்படாத காரணத்தால், இதுவரையில் எத்தனை மரணங்கள், நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன, சமூகத் தீமைகள் தோன்றியிருக்கின்றன என்கிற புள்ளி விபரம் எதுவும் கிடையாது என்பதும் நன்கு தெரியும். சிறுபான்மை சமூகத்தின் சிறிய பிரிவினருடன் தொடர்புடைய விதி 44ஐ காட்டிலும் பெரிய எண்ணிக்கையிலான மக்களை பாதிக்கும் மதுவை முற்றிலும் தடை செய்ய சட்டம் இயற்றத் தேவையுடைய விதி 47ஐ பற்றி பிரதமர் எந்த அக்கறையும் காட்டுவதில்லை.

பொது சிவில் சட்டம் குறித்து அம்பேத்கர்:

இந்திய அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்தவர்கள் விதி 44ஐ காலம் கனியும் போது மட்டும்தான் சட்டமாக்க முடியும் என்று உறுதி கூறினார்கள். சாசன அவையில் அம்பேத்கார் பேசும் போது, விதி 44 நாடாளுமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டது என்று அரசு உரிமைக் கோருகிறது. தனிநபர் சட்டங்களை ரத்து செய்யும் கடமை எதுவும் அரசுக்கு இல்லை. எனவே, அரசுக்கு அதிகாரம் வந்துவிட்டால் அரசு உடனடியாக விதி 44ஐ சட்டமாக்கும் என்றோ தன்னுடைய அதிகாரத்தை பலவந்தமாகப் பயன்படுத்தும் என்றோ யாரும் அச்சப்படத் தேவையில்லை. அரசு அதிகாரம் என்பது எப்போதும் ஒரு வரம்புக்கு உட்பட்டது தான். வரம்பற்றது என்று நீங்கள் மதிப்பிட்டாலும் பிரச்சனை இல்லை. ஏனெனில் ஆட்சித் தலைமை தனது அதிகாரத்தை செயல்படுத்துகையில் பல்வேறு வகையிலான சமூகங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப சரிசெய்ய வேண்டியது ஏற்படும். முஸ்லிம் சமூகம் கிளர்ச்சியில் ஈடுபடும் அளவுக்கு சினமூட்டும் செயலை எந்த ஒரு அரசும் செய்யாது. அவ்வாறு ஒரு அரசு செய்தால் அது முட்டாள் அரசாகத்தான் இருக்கும் என்றார் அம்பேத்கர். இங்கே அம்பேத்கரின் பேச்சு தவிர்க்க முடியாமல் இடம்பெற்றதற்கு சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.

அடிப்படை உரிமைகளின் பட்டியலில் பொது சிவில் சட்டத்துக்கான ஒரு விதியை சேர்க்க வேண்டும் என்று சாசன அவையின் உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஆர்.மசானி என்பவர் 1947 மார்ச் 28ஆம் நாள் சாசன சட்ட அவையில் நடந்த அடிப்படை உரிமைகள் உதவிக்குழு (Sub Committee of the Constituent Assembly) கூட்டத்தில் ஒரு ஆலோசனையாக வைத்தார். இந்த உத்தேச ஆலோசனை விவாதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பொது உரிமையியல் சட்டத்துக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. சீர் உரிமையியல் சட்டத்துக்காக எம்.ஆர்.மசானி அன்றைய நாள் முழுவதும் வாதாடினார்.

இம்முறை, வலிந்து திணிக்க முடியாத; நியாயப்படுத்த முடியாத பிரிவாக, வழிகாட்டுக் கொள்கையில் பொது உரிமையியல் சட்டத்தை சேர்க்கலாம் என்று சாசன அவையின் உதவி குழு பரிந்துரை செய்தது மசானி போன்ற பெரிய உறுப்பினர்களின் கருத்துக்களை இணைத்துக் கொள்வதற்காக வெளிப்படையாகவே செய்துகொண்ட சமரசம் தான் இது.

அரசியல் அமைப்புச் சட்ட அவையின் சிறுபான்மையினருக்கான துணைக் குழு உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகள் துணைக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து அதில் பொது சிவில் சட்டம் குறித்துப் பேசும் விதியில் பயன்படுத்தப்பட்டிருந்த சொற்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்கள். சிறுபான்மை துணைக் குழு (Sub-Committee) 1947 ஏப்ரல் 19ஆம் நாள் தனது இடை அறிக்கையில் (Interim Report) அனைத்து மக்களுக்குமான பொதுவான உரிமையியல் சட்டம் மக்களின் விருப்பத்தின் பேரிலும் முழுவதும் தானே முன்வந்து ஏற்பதின் அடிப்படையிலும் மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக விளக்கும்படிக்கு அந்த விதியை மீண்டும் சீர்திருத்தி எழுதவேண்டும் என்று கூறியது.

எனவே, பொது சிவில் சட்டம் என்பதே மசானி என்ற தனிநபரின் எண்ணத்தில் தோன்றியது தான். மசானியின் கருத்தை கே.எம்.முன்ஷி மற்றும் சர். ஏ.கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்ற இரண்டு உறுப்பினர்கள் ஆதரித்தார்கள். சட்ட அவையில் இருந்த சிறுபான்மை உறுப்பினர்கள் ஒரே கருத்தோடும், உறுதியோடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அம்பேத்கர் கொடுத்த (மேலே சொன்னபடி) வாக்குறுதியின் காரணமாகவே வழிகாட்டுக் கொள்கையில் பொது சிவில் வைக்கப்பட்டது.

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தேசியத் தலைவர்கள் கொடுத்த உறுதிமொழிகள்

பொது சிவில் சட்டம் தொடர்பான அடுத்த விவாதம் தேசியத் தலைவர்கள் கொடுத்த உத்தரவாதம் தொடர்பானது. இதுதொடர்பில் மேலிருந்து எந்த மாற்றமும் திணிக்கப்படாது என்று நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வெளிப்படையாகவே நம்பிக்கையூட்டினார். “அரசு இருக்கும் சட்டத்தை மாற்றி அனைவருக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்க முதலில் சீர் உரிமையியல் சட்டம் குறித்து கருத்தொற்றுமையை மக்களிடத்தில் உருவாக்க வேண்டும். எந்தவொரு மாற்றமும் அந்தந்த சமூகங்கள் தாங்களாகவே முன்வந்து ஏற்படும் போதுதான் சாத்தியமாகும்” என்றார்.

நேருவின் மகளான இந்திரா காந்தி, பிரதமராக இருந்த சமயம் 1967ஆம் ஆண்டிலும் பின்னர் 1969ஆம் ஆண்டிலும் நேரு கொடுத்த வாக்குறுதியை உறுதிசெய்தார். “சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான எந்த முடிவுகளும் முதலில் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டது. உண்மையில், எந்தவொரு மாற்றமும் சிறுபான்மை சமூகத்திடம் இருந்துதான் வரவேண்டும்” என்றார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போதும் இதே வாக்குறுதிகளைக் கொடுத்தார். “நான் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவானவன் தான். அதேநேரம் அரசியல் கட்சிகள், சமயத் தலைவர்கள், சமூகத்தின் மதிப்புமிக்க மனிதர்கள் மத்தியில் ஒரு பொது கருத்து உண்டான பிறகுதான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். நமக்குத் தேவை எனக் கருதும் சீரான சட்டம் ஒரு சிறப்பான முடிவுகள் மூலமே கொண்டு வரப்பட வேண்டும். புறவாசல் வழியாகக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் நாம் செய்துவிடக் கூடாது” என்றார்.

இந்தியாவின் செல்வாக்கு மிக்க மற்றொரு சக்தி இந்தத் தலைவர்களுடன் விவாதிக்க நேரிட்டது. அவர் குரு கோல்வால்கர். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கக் காரணமானவர்களில் ஒருவர். அவ்வமைப்பில் சர்சங்சாலக் பொறுப்பில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏடான ஆர்கனைசரில் 1972 ஆகஸ்ட் 26ஆம் நாள் அவர் சொன்ன அனைத்து வாதங்களும் பின்னாளில் உச்ச நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. “கருத்து மோதல்கள் உடைய பாரதூரமான சட்டங்கள் நீங்கி ஐக்கிய தேசியம் உருவாக பொது உரிமையியல் சட்டம்தான் உதவ முடியும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

1972ல் குருஜி, ஆர்கனைசர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,

கேள்வி: தேசியவாதம் என்ற உணர்வு மேலோங்க சீர்மையான ஒரு சிவில் சட்டம் (Uniform Civil Code) தேவை என்று நீங்கள் கருதவில்லையா?

பதில்: இல்லை. இது உங்களையோ, மற்றவர்களையோ ஆச்சரியப்பட வைக்கலாம். ஆனால் இதுவே எனது கருத்து. நான் பார்க்கும் உண்மையை அப்படியே பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: தேசத்தின் சீரானத் தன்மை தேச ஒற்றுமையை வளமாக்கும் என்று நீங்கள் கருதவில்லையா?

பதில்: தேவை இல்லை. இந்தியா எப்போதுமே எண்ணிடலங்காத முரண்களைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் காலத்தின் நீண்ட பயணத்தில் நாம் அதிக பலம் பொருந்தியும், தேச ஒற்றுமையுடனும் தான் இருந்து வருகிறோம். ஒன்றுபட்டு வாழ்வதற்கு நமக்குள் ஒத்திசைவே தேவை. ஒருப்படுத்துதல் (Uniformity) தேவை இல்லை.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பொன்றில், “நாட்டின் குடிமக்களுக்கு பொது சிவில் சட்டத்தைக் கொடுப்பதே அரசுக்கு கடமையாக்கப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதற்கு ஏதாவது வழியிருந்தால் அதைச் செய்வதற்கான வேலையை உடனே தொடங்க வேண்டும்” என்று கூறியது.

இதன்மீது குரு கோல்வால்கார் கருத்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவர் சொல்கிறார்: எல்லாம் சரிதான். பொதுசிவில் சட்டத்துக்கு நான் எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஆனால் ஒருவிஷயம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் காரணத்தாலேயே அது விருப்பத்திற்குரியதாக ஆகிவிடாது. நமது அரசியலமைப்புச் சட்டம் சில வெளிநாடுகளது அமைப்புச் சட்டங்களின் கலவையாக உருவானதுதான். இந்தியாவின் அனுபவங்களின் முதிர்ச்சியில் இருந்து கருப்பிடிக்கவும் இல்லை, வரையப்படவும் இல்லை” என்கிறார்.

சீரான குற்றவியல் சட்டங்களை ஏற்றுக்கொண்ட பிறகு ஏன் பொதுசிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கேட்பவர்களுக்கு கோல்வால்கர் காட்டமான பதில் ஒன்று தருகிறார். “இரண்டுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. உரிமையியல் சட்டம் குறிப்பாக தனிநபரையும் அவர் குடும்பத்தையும் பற்றி அக்கறைக் காட்டுகிறது. குற்றவியல் சட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்சனையோடும் மேலும் ஓராயிரம் விஷயங்களோடும் தொடர்பு கொண்டது. குற்றவியல் சட்டம் தனிநபரைப் பற்றி அக்கறைப்படாது. முழு சமூகத்தின் மீதும் அக்கறைக் காட்டக்கூடாது” என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் சிலரும் பொதுசிவில் சட்டம் பற்றி கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். நீதிபதி கஜேந்திர கட்கர் சொன்னதாக தலைமை நீதிபதியாக இருந்த பரத்வாஜ் கூறுகிறார். “இந்நாட்டில் தனிநபர் சட்டங்கள் அவர்களின் சமய நூல்களின் மூலத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. பல்வேறு அம்சங்களில் சமயங்கள் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. எனவே இந்த நாட்டின் வெவ்வேறான சமூகங்களுக்குப் பொருந்தக்கூடிய சீர்உரிமையியல் சட்டத்தைக் கொண்டு வருவது எளிய பணி இல்லை” என்று கூறினார்.

பொது சிவில் சட்டம் பற்றி தலைமை நீதிபதி எம்.சி.சுக்லா சொல்லும் போது, “ஒரு சமூகம் சமூக சீர்திருத்தங்களை ஏற்கத் தயாராகி அதற்கான வேலையைச் செய்யலாம். அதேநேரம் மற்றொரு சமூகம் அதற்குத் தயாராகாமல் இருக்கலாம். சமூகத்தின் அனைத்துப் பிரிவினைவரையும் கட்டாயமாக ஒன்றிணைத்து அதன் மீதுதான் சீர்உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விதி 44ல் கூறப்படவில்லை. சீர்திருத்தங்களை பகுதிவாரியாகவோ, சமூகம் வாரியாகவோ எடுத்துக்கொண்டு படிப்படியாகக் கொண்டு வருவதே சரியான முடிவாக இருக்கும்” என்று கூறினார். சமீபத்தில் சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த ஏ.பி.ஷா, சீர் உரிமையியல் சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராகக் கடுமையாக வாதாடினார்.

விதி 44ல் உள்ள வாசகத்தில் மற்றுமொரு சட்ட நுணுக்கம் இடம்பெற்றிருக்கிறது. சட்ட வல்லுனர்களின் கவனத்தில் இருந்து அது தப்ப முடியாது என்று நிச்சயமாக சொல்வேன். மற்ற விதிகளுடன் சேர்ந்து விதி 44ம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சிகளை செய்ய வேண்டும் என்று சொல்கிறது. சட்ட விதியானது, உரிமையியல் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கூறவில்லை. மாறாக, கொண்டு வரும் முயற்சி செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறது.

சட்ட விதியில் இருக்கும் வாசகங்களுக்கு முரணாக விளங்கிக் கொள்ளக் கூடாது. உதாரணமாக, சட்ட விதி 42; வேலையில் ஈடுபடும் மக்களுக்கு ஊதியமும், மனிதத் தன்மையுள்ள வேலையும் கொடுக்க வேண்டும். வேலையில் ஈடுபடும் பெண்கள் தாய்மை அடையும் போது உண்டாகும் தேவையையும் பாதுகாக்க அரசு சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. சட்ட விதிகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, விதிகளை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. இதேபோல 43ஏ, நிர்வாகத்தில் (Management) பங்கெடுக்கும் பணியாளர்கள் சம்பந்தமானது.

நமது அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்தவர்கள் நமது சமூகத்தின் இயல்பான பன்முகத்தன்மையையும் இதில் ஒரேவிதமான சீர்மையைக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளீடாக இருக்கும் மிரட்டலான பின்விளைவுகளையும் முழுவதுமாக அறிந்திருந்ததை இதுபோன்ற வாசகங்களைப் படிக்கும் ஒருவர் வியக்க முடியும். இந்த நாட்டின் சட்டம் எதுவாக அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ அந்த சட்டத்தை நோக்கி நகரும் வகைக்கு அரசு முயற்சிதான் செய்யவேண்டும் என்று வேண்டுமென்றே அரசிடம் விட்டுவிட்டார்கள்.

நாகலாந்து, மிசோரமுக்கு பொது சிவில் சட்டம் செல்லாதா?

உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பாணை (Notice)யில் இருந்து சீர் உரிமையியல் சட்டம் தப்பிக்கும் மற்றொரு கோணமும் இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக தேசம் என்பதை தங்கள் கருத்தில் இருந்து பார்ப்பவர்கள் நம் அனைவரையும் தாக்க ‘சீர்மம்’ (Uniformity) என்ற ஆயுதத்தைப் பயன்படுத்த விரும்புவோர்களின் கவனத்தில் இருந்தும் தப்பிவிடுகிறது. நமது சட்டத்தில் 370, 371ஏ, 371ஜி பிரிவுகள் இருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 370, காஷ்மீருக்கான சிறப்புத் தகுதிகள் பற்றிப் பேசுகிறது. ஆனால் அங்கே என்ன நடந்தது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் விதி 371ஏ இன்னும் கூடுதல் சிறப்பானது. இந்த விதி நாகலாந்து மக்களுக்கு அளிக்கும் உத்தரவாதமானது நாகர்கள் விருப்பம் இல்லாமல் அவர்களின் சமயங்கள் மற்றும் சமூக வாழ்க்கை முறைகள் பாதிக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்ற முடியாது. அவர்களின் கலாச்சாரம், சமய சடங்குகள் படிதான் அவர்களின் வாழ்க்கையின் அடிப்படைச் சட்டங்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிகள் அனைத்தும் அமைந்திருக்கும் என்பதற்கான உத்தரவாத்தை விதி 371ஏ அம்மக்களுக்கு கொடுக்கிறது.

நாகர்களின் மொத்த மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவானது. இந்திய மக்கள் தொகையில் 0.16 விழுக்காடு தான். ஆனால் நமது அரசியல் சட்டம், நாகர்களுக்கும் இந்தியாவின் மற்ற சமூகங்களுக்கும் இடையில் இருக்கும் கலாச்சார முரணை அங்கீகரிக்கிறது. இந்த பன்மைத்தன்மைக்கு உறுதியும் அளிக்கிறது.

விதி 371ஜி, இதே மாதிரியான சட்டப் பாதுகாப்பை மிசோரம் மாநில மக்களுக்கு கொடுக்கிறது. மிசோரம் மக்கள் 6 லட்சம் பேராக இருப்பார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மிசோமியர்கள் 0.0007 விழுக்காடு தான் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் நாகர்களும், மிசோமியர்களும் 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தாலும் அவர்கள் சட்டம் அங்கீகாரத்தையும், பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இந்தியாவின் பன்மைத்தன்மைக்கு உயிர்ப்புள்ள ஆதாரமாக இருக்கிறது. புரிந்துணர்வுக்கும், சகிப்புத்தன்மைக்கும் மெய்ப்பொருளாக இருக்கிறது.

மலைவாழ் பகுதிகளாக இருப்பதால் நாகலாந்தும், மிசோரமும் சிறப்புரிமை பெற்றுள்ளதாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் சட்ட விதியின் வாசகங்களில் மற்றொரு சட்ட நுணுக்கமும் இடம்பெற்றுள்ளது.

பொது சிவில் சட்டமாக்கும் சமயம் நேரடிக் கொள்கையின் விதி ஒன்றை மேடுபள்ளமாக இருக்கும்படி அமைத்தால் அது அரசியலமைப்புச் சட்டத்தின் மாற்றத்தகாத விதியுடன் முரண்படாதா என்ற கேள்வியை மேதகு நீதிபதிகளிடம் விடுகிறேன். விதி 44, பொது சிவில் சட்டத்தை இந்தியாவின் மூலைமுடுக்கு அத்தனையிலும் கொண்டு வரவேண்டும் என்றே கூறுகிறது. ஆனால் பொது சிவில் சட்டத்திற்கு வாதிடுவோர்  பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் பகுதிகளில் இருந்து சிறப்பு அதிகாரம் உடைய பகுதிகளை மட்டும் நீக்கிவிடலாம் என்கின்றனர். ஆனால் நாகலாந்து, மிசோரமுக்குப் பொருந்தாத ஒரு சட்டத்தை நாடாளுமன்றமே விரும்பினாலும் எவ்வாறு சட்டமாக்க முடியும்? தெளிவாகவே அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதிக்கு இது முரணாகப் போகாதா? இரண்டு மாநிலங்களுக்கும் நாட்டின் இதர மாநிலங்களுக்கும் இடையிலான தெளிவான பாகுபாடாக இது அமையாதா? சீரான உரிமையியல் சட்டம் என்று அழைக்க முடியுமா? மற்றொருபுறம், சட்ட விதி 371ஏ, 371ஜி க்கு எதிராக  பொது சிவில் சட்டத்தை ஏற்கவேண்டும் என்று நாகர்களையும், மிசோமியர்களையும் கட்டாயப்படுத்த முடியுமா? நாகர்களும் மிசோமியர்களும் கிறிஸ்தவர்கள். அவர்களை அவர்களின் சமய சட்டங்களின் படி வாழ அனுமதிக்கும் போது அதற்கு மாற்றமாக நாட்டின் இதர பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களை வேறு ஒரு சட்டத்தைப் பின்பற்றும் படி கட்டாயப்படுத்த முடியுமா?

பொது சிவில் சட்டம் ஒருமைப்பாடு கொண்ட பெரிய தேசத்தை உருவாக்க வழிகாணும் என்பது வக்காலத்து வாங்குபவர்களின் மிகப்பெரிய வாதமாக இருக்கிறது. இந்த வாதத்துக்கு குரு கோல்வால்கர் பலமான எதிர்வாதம் வைத்ததைப் பார்க்கிறோம். சீரான சட்டங்கள், சீரான மதங்கள், சீரான மொழிகள் தேசங்களை ஒன்றாக வைத்திருக்கவில்லை என்பது கடந்தகால வரலாறு. சீரான இஸ்லாமிய சட்டம் அரபுலகப் பேரரசுகளையோ, உதுமானியப் பேரரசையோ ஒருங்கிணைத்து வைக்கவில்லை. கிழக்குப் பாகிஸ்தானையும், மேற்கு பாகிஸ்தானையும் ஒன்றாக்கவில்லை. இப்போதிருக்கும் மேற்கு ஆசியாவும் சீரான சட்டங்கள் இருந்த போதும் ஒரே நாடாக இறுத்திவைக்கவில்லை.

பொது சிவில் சட்டம் ஒருமைத்தன்மையைக் கொண்டுவரும் என வைத்துக் கொண்டாலும் சீரான உடை சட்டம் ஒருமைத்தன்மைக்கு மேலும் உதவக்கூடும் என்றும் வாதிடலாம். சீனா மாவோ ஆட்சியில் இதற்கு முயற்சித்துப் பார்த்து தோல்வி அடைந்துவிட்டது. அதேபோல் சீரான உணவுச் சட்டம் பற்றியும் பேசலாம். உணவுகள் மிகப்பெரிய அளவில் வீணாவதைத் தடுக்கவும் நாட்டு மக்கள் உடல்நலத்தை அதிகரிக்கவும் இந்த சட்டம் உதவும். அனைத்துக்கும் மேலாக சீரான மதச் சட்டம் ஏன் கொண்டுவரக் கூடாது என்று அறிவுஜீவிகள் வாதிடலாம். கதைக்கு உதவாத இந்த வாதங்களை (reductio ad absurdum arguments) முன்வைப்பது, பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் தேச ஒருமைப்பாடு உண்டாகும் என்பவர்களின் வாதத்தின் உள்ளே இருக்கும் போலித்தன்மையைச் சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே கையாளப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் இந்து சமூகத்துக்குப் பயன் தருமா?

மக்களில் சில பேர் தாங்கள் விரும்பும் பொது சிவில் சட்டத்தின் மீது கடுமையான வாதங்களை வைப்பதன் மூலம் ஊடகங்களை வளைக்கிறார்கள். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பணிசெய்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கங்களில் உள்ளவர்கள் ஊடகங்களில் சில பேர் பல்வேறு கருத்துக் களங்களில் அமர்ந்து கொண்டு பொது சிவில் சட்டத்தின் தேவைப் பற்றி தேனொழுகப் பேசி வருகிறார்கள். தற்போது எல்லோருக்கும் பொதுவான பிரதமரே வாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். பிரதமர் உட்பட யாருக்கும் பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்றே தெரியாது. என்னென்ன விதிகளை சேர்த்துக் கொள்ளும் என்றும் தெரியாது. பெரும்பான்மையினர் உட்பட பல்வேறு சமூகங்கள் மத்தியில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை எவ்வாறு பாதிக்கும் என்றும் தெரியாது. இதுசம்பந்தமாக பெரும்பான்மையாக இருக்கும் இந்து சமூகத்தின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று யாராவது சிந்தித்ததுண்டா?

பொது சிவில் சட்டம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களை மட்டுமே பாதிக்கும் என்று ஒவ்வொருவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு உதாரணமாக இந்திய வரிச் சட்டம் அங்கீகரித்திருக்கும் இந்து கூட்டுக் குடும்பச் சட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

இந்து கூட்டு குடும்பச் சட்டம் வரி செலுத்த வேண்டியவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி வரி செலுத்த வேண்டியவர்கள் வரி செலுத்தாமல் தவிர்த்திருப்பதைக் குறித்து நேரடி வரிகள் விசாரணைக் குழு (Direct Taxes Enquiry Committee) அறிக்கை ஒரு பட்டியல் இட்டது. சீர் உரிமையியல் சட்டம் கொண்டு வந்தால் இந்துக்கள் மட்டும் அனுபவிக்கும் இந்த வரிவிலக்கின் பலன் என்னவாகும்? இந்த நலன்கள் எல்லாம் அழிக்கப்படுமா? இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு இந்தப் பலனை விட்டுக் கொடுப்பதாக இருந்தால் அதை பொது சிவில் சட்டம் என அழைக்க முடியுமா? இதுசம்பந்தமாக இந்து சமூகத்திடம் கேட்டார்களா? சீர்மம் பற்றி பெரும் கூச்சல் போடுபவர்களின் ஆரவாரத்தால் பொது சிவில் சட்டம் பற்றி இந்து சமூகம் என்ன நினைக்கிறது என்றே நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா என்ற கொள்கைகளை சட்டமாக்க 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறது.

இந்து சட்டத்தை நெறிப்படுத்தும் தேவை மற்றும் விருப்பம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த கோல்வால்கர், “இந்து சட்டத்தை நெறிப்படுத்துவது தேச ஒற்றுமைக்கும் (National Unity) தேசிய ஒருமைப்பாட்டுக்கும் (National Integration) தேவையில்லாதது என்றே நான் கருதுகிறேன். பல தலைமுறைகளாக நாம் எண்ணற்ற சட்டங்களை வைத்திருந்தோம். இப்போது கேரளாவில் தாய்வழிச் சட்டம் இருக்கிறது. அதில் என்ன தவறு இருக்கிறது? அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் சட்டம் வகுப்போர் அனைவரும் மக்களின் மரபுகள் சட்டத்திற்கு மேலாக இருக்கவேண்டும் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். சாத்திரங்களைக் காட்டிலும் மக்களின் மரபுகள் அதிக வலிமையுடையது என்று சாத்திரம் வகுத்தவர்களே சொல்லி இருக்கிறார்கள். உள்வட்டம் (local) அல்லது ஒரு குழுவின் சட்டமாக மரபு இருக்கிறது. அனைத்து சமூகங்களுமே உள்வட்டம் அல்லது குழுவினது மரபுகளையும் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

முஸ்லிம்களைப் பொருத்தமட்டில், பொது சிவில் சட்டம் அவர்களது அடையாளங்களை தீவிரமாக முற்றிலும் அழித்தொழிக்கும் காரணியாக இருக்கும் என்றே அச்சப்படுகிறார்கள். பொது சிவில் சட்டம் பேசுபவர்கள் இந்துத்துவாவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்து சட்டம் மதச்சார்பற்றது, இந்தியன் என்ற அடையாளத்திற்குரியது என்று நம்புகிறார்கள். அதேநேரம், முஸ்லிம் சட்டம் பிற்போக்குத்தனமானது, பலதார மணத்தை அனுமதிக்கும் காரணத்தால் முஸ்லிம்களின் மக்கள் தொகையில் திடீர் பெருக்கம் ஏற்பட்டு நாட்டின் நலனுக்கு கேடு செய்கிறது, பெண்களை ஒடுக்குமுறை செய்கிறது என்றும் நம்புகிறார்கள். முஸ்லிம் சமூகத்தில் இருதார மணம் மற்றும் பலதார மணம் நடந்துள்ள சம்பவங்கள் பற்றி எந்தப் புள்ளிவிபரமும் இல்லை. பலதார மணமும், இருதார மணமும் முஸ்லிம்களைக் காட்டிலும் இந்துக்கள் மத்தியில்தான் அதிகரித்துக் காணப்படுகிறது. வரதட்சணை இறப்புகள், மணப்பெண் எரித்துக் கொலை, பெண் சிசுக் கொலை போன்ற நிகழ்வுகள் குறித்து புள்ளி விபரங்கள் ஏதுமில்லை. இதுபோன்ற அம்சங்கள் எதிலும் முஸ்லிம் சமூகம் முன்னணியில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்து தனிநபர் சட்டம் 1955-56ல் சில திருத்தங்களுடன் உட்படுத்தப்பட்டிருந்தாலும் பெண்களுக்கு எதிரானப் போக்கு தொடரவே செய்கிறது. உதாரணமாக மரபுரிமைகள். இந்து கூட்டுக் குடும்பச் சட்டத்தில் பெண் கூட்டுப் பங்காளியாக முடியாது.

தகப்பன் சொந்தமாக சேர்த்த சொத்தில் மகளுக்கும் சமபங்கு உரிமையுண்டு என்பது இன்றும் ஏட்டளவில்தான் இருக்கிறது. ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில், ஒரு தகப்பன் உயில் எழுதும் போது மகளுக்கான வாரிசுரிமையை மறுக்கிறார். அவளது சகோதரர்களுக்கு ஆதரவாக தனது உரிமைகளை விட்டுக்கொடுத்து கையெழுத்திட நிர்பந்திக்கப்படுகிறாள். முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பொருத்தமட்டில், ஒரு தகப்பன் உயில் மூலம் தனது மகளுக்கான சொத்துரிமையை நிராகரிக்க முடியாது.

1955ஆம் ஆண்டு இந்து சிறுபான்மை மற்றும் காப்பாளர் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஒரு இந்து தகப்பன் தனது குழந்தைக்கு 5 வயது வரையில் இயற்கையான பாதுகாவலர் ஆவார். அந்தக் குழந்தையை அதன் தாய் பின்னர் தனது பாதுகாப்புக்கு கொண்டு வருவதற்கு நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி, தகப்பனாக இருப்பவன் குழந்தையைப் பாதுகாக்கும் தகுதி இல்லாதவன் என்று நிரூபிக்க வேண்டும், அதன்பிறகே நீதிமன்றம் அவளது குழந்தையை அவளின் பொறுப்பில் கொடுக்க உத்தரவிடும். ஒரு இந்து ஒரேயொரு திருமணத்தையே பதிவு செய்ய முடியும். ஆனால் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை பலதாரமாக இருந்தாலும் சம்பிரதாயப்படி மணம் முடித்துக் கொள்ள முடியும். ஏதோ சில திரைப்பட நடிகர்கள் அரசியல்வாதிகள் அப்படியான திருமணங்களை செய்திருப்பார்கள்.

பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய உரிமையியல் சட்டங்களையும், குற்றவியல் சட்டங்களையும், சாட்சியியல் சட்டங்களையும் கைவிட்டு விட்டன. ஒருசில முஸ்லிம் நாடுகளைத் தவிர வேறு முஸ்லிம் நாடுகள் எதுவும் மது குடித்தால், பெண்கள் பற்றி அவதூறு கூறினால், திருமணத்திற்கு முன்பு தகாத உறவு கொண்டால் (fornication) கசையடி கொடுப்பது, திருட்டுக்கு கைது துண்டிப்பது, திருமணத்துக்குப் பிறகு தகாத உறவு வைத்திருந்தால் கல்லெறிந்து கொல்வது, கொலைக்குக் கொலை அல்லது பணம் என்று ஈடு செய்தல் போன்ற சட்டங்களை விரும்புவதில்லை.

நம்முடன் உள்ளவர்கள் வைக்கும் கேள்வி இதுதான். ஏராளமான முஸ்லிம் நாடுகளிலேயே இதுபோன்ற இஸ்லாமிய சட்டங்களைக் கைகழுவும் போது முத்தலாக், நான்கு பெண்களை மணப்பது, சொத்தில் மகளுக்கு பாதி அளவே பங்காகக் கொடுப்பது போன்ற சட்டங்களை இணைத்து வைத்துக் கொள்வதில் என்ன புனிதம் இருக்கிறது என்கிறார்கள். பொதுமக்களிடம் எதிர்ப்புகள் வந்திருந்த போதிலும் பல முஸ்லிம் நாடுகள் இந்த தனிநபர் சட்டங்களை மாற்றியமைத்திருக்கின்றன.

இன்று, இஸ்லாமிய உலகில் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாம் ஒரு மதம் என்ற வகையில் தாக்கப்படுகிறது. கிழக்கில் இருந்து மேற்காக கல்வியாளர்கள், அறிஞர்கள் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் அடிப்படைக் கொள்கையை ஆய்வு செய்கிறார்கள். பாலினத்தவரிடையே சமமின்மை, பலமுடையவர்கள் பலவீனமாவர்களை சுரண்டுவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய சட்டங்கள் மீது கேள்வி எழுப்புகிறார்கள். மார்க்க அறிஞர்கள் குர்ஆன், நபி வாழ்வியல் ஒளியில் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை மீளாய்வு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இறைவன் மற்றும் இறைத்தூதர் அருளிய மறையாட்சியின் கீழ் பெண்கள் உண்மையாக அனுபவித்து வந்த உரிமைகளை மீட்டுக் கொடுக்கவும் முயற்சிக்கிறார்கள்.

இந்தியா மிக உயர்ந்த முஸ்லிம் சீர்திருத்தவாதிகளை உலகத்துக்கு வழங்கியிருக்கிறது. அவர்கள் பெரிய அளவிலான சீர்திருத்தங்களையும், புத்தாக்கங்களையும் செய்திருக்கிறார்கள். முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து இஸ்லாமிய சட்டங்களை புத்தாக்கம் செய்வதற்கான பொது அரங்கை ஏற்படுத்தும் மிகப்பெரிய தேவை இருக்கிறது. அப்படிச் செய்தால் மட்டும்தான் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் தேவை இருக்காது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு IV அரசின் கொள்கைகளில் வழிநாட்டு நெறிமுறைகள் பற்றிப் பேசுகிறது. எந்த ஒரு நீதிமன்றமும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சட்டமாக நிறைவேற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது. ஆனால் நாட்டின் ஆட்சி முறையில் ஒரு அடிப்படையான பங்களிப்பை இது ஆற்ற முடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள சட்டப் பிரிவு 44, நாடு முழுமைக்கும் சீரானதொரு உரிமையியல் சட்டத்தை மக்களின் நலனுக்காகக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறது. தற்போது பொது சிவில் சட்டம் காரசாரமான விவாதத்தின் மையப் புள்ளிக்கு வந்திருக்கிறது.

உண்மையில் சட்டப் பிரிவு 44 எப்போதும் சர்ச்சைக்குள் பயணித்தே வந்திருக்கிறது. புதிதாகச் சுதந்திரம் அடைந்த இந்தியா என்ற நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டம் எழுத முற்பட்டபோது, சட்டத்தின் பிரிவு 31ஐ போல் பிரிவு 44ம் அரசியலமைப்புச் சட்ட உருவாக்க அவையில் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. சட்டம் உருவாக்க கூட்டப்பட்டிருந்த அவையில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது உறுப்பினர்கள் மத்தியில், மதத்தின் அடிப்படையில் பிளவு ஏற்பட்டது. அரசியல் சட்டவரைவு குழுவின் தலைவராக அப்போது இருந்த பி.ஆர்.அம்பேத்கர், பிரிவு 44 சிறுபான்மை மக்கள் மீது வலிந்து திணிக்கப்படாது என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்பிறகுதான் விதி 44ஐ அரசியல் சட்டத்தில் இணைக்க ஒப்புக்கொண்டார்கள்.

1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள், சட்டப்பிரிவு 44 விவாதத்துக்கு வந்தது. (சட்டப்பிரிவு 44 அப்போது பிரிவு 35ஆக எழுதப்பட்டிருந்தது.) அப்போது, இந்த சட்டப் பிரிவு 44க்கு ஒரு காப்பு வாசகம் (proviso) இணைக்கப்பட வேண்டும் என்றார் (காயிதே மில்லத்) முகம்மது இஸ்மாயில். இஸ்மாயில் சாகிப் அவர்கள் சென்னை மாகாணப் பிரதிநிதியாக அரசியல் சட்ட அவையில் இடம்பெற்றிருந்தார். விதி 44ஐ அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளும் போது அப்படியொரு காப்பு வாசகம் சேர்க்கப்பட்டால் தான் (நாளையொரு நாள்) மக்களில் ஒரு குழுவோ, சமூகமோ தங்களது தனிச் சட்டங்களைக் கைவிடுவதற்கு எதிராக ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

“மக்களில் ஒரு குழுவினரோ, அல்லது சமூகமோ தங்களது தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றும் உரிமையானது அடிப்படை உரிமைகளில் உள்ளதாகும் என்று (காயிதே மில்லத்) முகம்மது இஸ்மாயில் கருதினார். அரசு அதில் ஏதாவது திருத்தம் கொண்டு வரும்போது பரம்பரையாகவும், பல்லாண்டுகளாகவும் மக்கள் பின்பற்றிவரும் சட்டங்களில் தலையிடுவதற்கு சமமாகும்” என்றார். மேற்கு வங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்த நசீருத்தின் அகமதுவும் முகம்மது இஸ்மாயிலின் கருத்தையே வலியுறுத்தினார்.

“முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களது மதநம்பிக்கை மற்றும் வாழ்க்கை முறைகளில் இருந்து பிரிக்க முடியாத குறிப்பான வாழ்வியல் சட்டங்களும் (Civil Laws) மதச் சட்டங்களும் (Religious Laws) இருக்கின்றன” என்றார் நசீருத்தீன் அகமது. மஹபூப் அலி பெய்க் ஷாஹிப் பகதூர், சென்னை மாகாணத்தில் இருந்து சென்றிருந்த மற்றொரு உறுப்பினர். அவர் பேசுகையில், “முஸ்லிம்களின் வாரிசுரிமை, சொத்துரிமை, திருமணம் மற்றும் மணமுறிவு ஆகிய சட்டங்கள் அவர்கள் மதத்தைச் சார்ந்தது” என்றார். மற்றொரு உறுப்பினராக எம். அனந்த சயனம் அய்யங்கார், “முஸ்லிம்கள் மத்தியில் திருமணம் ஒரு ஒப்பந்தமாக இருக்கிறது” என்றார். அனந்த சயனம் அய்யங்கார் இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டாவது சபாநாயகராக இருந்தார். இந்த சயனத்துக்கு பதில் கூறிய பெய்க், “முஸ்லிம்கள் திருக்குர்ஆனின் நெறிப்படித்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருக்குர்ஆன் அறிவுறுத்தும்படி செய்து கொள்ளாத திருமணம் இஸ்லாமிய சட்டத்தின்படியான திருமணம் ஆகாது” என்றார்.

சென்னை மாகாணத்தின் மற்றுமொரு உறுப்பினரான பி.பாக்கர் ஷாஹிப் பகதூர் பேசும்போது, “இந்து சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்குள்ளும் வாரிசுரிமை மற்றும் பல்வேறு அம்சங்களில் பெரிய அளவுக்கு முரண்பாடு இருப்பதை நான் அறிவேன். இந்தக் கூட்டம் அந்த வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி விட்டு அவர்களுக்கு பொதுவான சட்டத்தைக் கொண்டு வரப்போகிறதா? பொது என்று நீங்கள் சொல்வது என்ன? எந்த சமூகத்தின் எந்த சட்டத்தை உயர்வானது என்று எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எதை மனதில் கொண்டு இப்படியொரு விதியை அரசியல் சட்டத்தில் இணைக்க விரும்புகிறீர்கள்? மிட்டாக்ஷரா (Mitakshara) மற்றும் தயாபகா (Dayabhaga) என்பன போன்ற பல்வேறு முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள் என்றார்.

வழக்கறிஞரும் & கல்வியாளருமான கே.எம்.முன்ஷி, பாம்பே மாகாணத்தில் இருந்து வந்திருந்தார். முன்ஷி, பொதுவான சிவில்சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “இச்சட்டம் அனைத்து மதத்தின் மக்களையும் பாதிக்கும்” என்றார். அரசியல் சட்டஅவையில் இருந்த இதர இந்து உறுப்பினர்களும் முன்ஷியின் கருத்துக்கு ஆதரவு அளித்தனர்.

நாட்டின் தனிநபர் சட்டத்தை பாதிக்கும் வகையில் இந்த ஒரு துணுக்கான சட்டத்தை அனுமதிக்கப் போகிறோமோ என்பது சிறுபான்மை மக்களின் கேள்வி மட்டுல்ல, பொதுவான சிவில் சட்டம் என்பது பெரும்பான்மை மக்களையும் பாதிக்கும். இறுதியாகப் பேசிய மரியாதைக்குரிய முஸ்லிம் உறுப்பினர்கள் கருதுவதைப் போன்று இந்துக்கள் மத்தியிலும் பலர் பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை என்பதை நான் அறிவேன். வாரிசுரிமை, சொத்துரிமை உள்ளிட்ட தனிச் சட்டங்கள் அவர்கள் மதத்தின் ஒரு பகுதி என்று உண்மையாகவே உணர்கிறார்கள்.

அம்பேத்கரும் கூட பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். வடக்கு மலபாரில் (கேரளா) மருமக்க தாயம் என்னும் சட்டம் இந்துக்களை மட்டுமின்றி முஸ்லிம்களையும் உள்ளடக்குகிறது. மருமக்க தாயம் சட்டம் தந்தை வழிச் சட்டம் இல்லை, அது தாய்வழிச் சட்டம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் முன்ஷி. பாபா சாகேப் அம்பேத்கர், முஸ்லிம் உறுப்பினர்களிடத்தில் உறுதியளித்து கூறுகையில், சட்டப்பிரிவு 35ஐ அவர்கள் நன்கு ஊன்றி படித்துவிட்டார்கள். நாட்டினது குடிமக்களின் உரிமையியல் சட்டத்தைப் பாதுகாக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றுதான் அதில் கூறப்பட்டிருக்கிறது” என்றார்.

இந்த சட்டத்தை வரையறை செய்த பிறகு இந்த சட்டத்தை நாட்டின் அனைத்து மக்கள் மீதும் குடிமக்கள் என்ற காரணத்துக்காக இந்த சட்டத்தை வலிந்து திணிக்க வேண்டும் என்று கூறவில்லை. பொது சிவில் சட்டத்துக்கு கட்டுப்பட்டு வாழ முன்வரும் மக்களுக்கு மட்டும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று தனியான ஒரு விதியையும் பின்னாளில் வரும் நாடாளுமன்றம் உருவாக்குவதற்கும் சரியான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. எனவே ஆரம்பக் கட்டத்தில் இந்தச் சட்டம் தானாக முன்வந்து ஏற்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பாராளுமன்றம் இதுபோன்ற முறைகளால் அடிப்படையை உணர முடியும். இது புதிய முறையன்று. 1937ஆம் ஆண்டின் ஷரீஅத் சட்டத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

1937ல் ஷரீஅத் சட்டம் கொண்டு வரப்பட்ட போது வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அப்பகுதி மக்களைத் தவிர இதர இந்தியப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு இந்த ஷரீஅத் சட்டம் பொருந்தக் கூடியதாக இருந்தது. ஷரீஅத் சட்டம் இவ்வாறு கூறுகிறது ‘இங்கே ஒரு ஷரீஅத் சட்டம் இருக்கிறது. இது முஸ்லிம்களுக்கு பொருந்தக்கூடியது. அதிலும், யார் ஷரீஅத் சட்டத்துக்கு உட்பட்டு வாழ விரும்புகிறார்களோ அவர்கள் ஒரு அரசு அலுவலரிடம் சென்று ஷரீஅத் சட்டத்துக்கு உட்பட்டு வாழ விரும்புவதாக அறிவிப்புச் செய்ய வேண்டும். அதன்பிறகே ஷரீஅத் சட்டம் அவரையும் அவரது வழித்தோன்றல்களையும் உள்ளடக்கிக் கொள்ளும்’ என்று கூறுகிறது. இதுபோன்றதொரு விதியைக் கொண்டுவர வெகுநிச்சயமாக நாடாளுமன்றத்தால் கூடும். எனவே, இங்கே எனது நண்பர்கள் வெளிப்படுத்திய அச்சம் முழுமையும் தேவையில்லாதது. எனவே இந்த சட்டத்தைக் கொண்டு வருவதில் பாதிப்பு ஏதும் இருக்கப் போவதில்லை என்பதால் அவர்களின் கருத்தை மறுக்கிறேன்” என்றார்.

கட்டுரையாளர்: ஜி.அத்தேஷ்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *