மே மாதம் 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு தங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. பொதுசிவில்சட்டம் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராயும் படி,  21 வது சட்ட ஆணையத்தை 2016, ஜூன் 17 ஆம் தேதி மோடி அரசு கேட்டுக்கொண்டது. சட்டஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ். சௌகான், பொதுசிவில் சட்டம் என்றால் என்ன வென்று தனக்கே தெரியாது என்று கூறியிருந்தார்.

பாஜக தவிர வேறு அரசியல் கட்சிகள் எதுவும் பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை. சட்ட ஆணையம் 16 கேள்விகளை சுற்றுக்கு விட்டு கருத்தறிந்தது. முஸ்லிம்கள் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கேட்டுக்கொண்டார் கொண்டது. முஸ்லிம்கள் பல கோடி பேர் சேர்ந்து எங்களுக்கு ஷரியத் சட்டம் தான் வேண்டும். பொதுசிவில் சட்டம் வேண்டாம் என்று கையெழுத்து போட்டு சட்ட ஆணையத்துக்கு அனுப்பினார்கள். சட்ட ஆணையம் பொதுசிவில் சட்டத்துக்கு தோதான கருத்தையோ, ஒத்துழைப்பையோ பெறமுடியாமல் போனது. இப்போது, ஆகஸ்ட் 31 ஆம் தேதி 21 வது சட்ட ஆணையத்தின் ஆயுள் காலம் முடிவடைந்தது. இதனிடையே, சட்ட ஆணையம் 185 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், இப்போதைக்கு, பொதுசிவில் சட்டம் கொண்டுவரும் சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டது. இதன் மூலம் பொதுசிவில் சட்டம் பற்றிய விவாதம் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால், பொதுசிவில்சட்டம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? பொது சிவில் சட்டம் அவசியம்தானா? என்பன போன்ற அம்சங்களில் அரசு இதுவரையில் ஒரு தெளிவைத் தரவில்லை.

பொது சிவில் சட்டம் என்ற உடன் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பது முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்பதால் இந்துத்துவ அரசியல் எப்போதும் முஸ்லிம்களை கோபமூட்டும் வகைக்கு பொது சிவில்சட்டம் என்ற சொல்லாடலை பயன்படுத்துகிறது. மற்றபடி அது சாத்தியப்படத் தக்க ஒரு வேலை இல்லை என்பதும் அவர்களுக்கு தெரியும். 21 வது சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த பி.எஸ். சவுகான், டைம்ஸ் ஆப் இண்டியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பொது சிவில் சட்டம் என்றால் என்னவென்று தெரியாது” என்று தான் கூறினார்.

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பது தான் நோக்கம். இது, அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் போதே விவாதிக்கப்பட்டது. ஆனால் அது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று கைவிடப்பட்டது. அரசியல் சட்ட அவையில் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித்தனி குழுக்கள் இருந்தன. முஸ்லிம் குழு இந்த அம்சம் குறித்து விவாதம் செய்து பின்னர் அதனை ஏற்க முடியாது என்று தூக்கி வீசி விட்டனர்.

இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுக் கொள்கை பிரிவு 44 கூறுகிறது. வழிகாட்டு கொள்கையில் உள்ள சட்ட பிரிவுகளை அடிப்படை உரிமை சட்டங்களை போன்று உடனடியாக அமல்படுத்தும் அவசியம் இல்லை. இந்தியாவில் மொத்தம் 400 தனிச் சட்டங்கள் இருக்கின்றன. அதில் முஸ்லிம் மற்றும் கிறித்தவர்களுக்கு ஆளுக்கு 4 சட்டங்கள் தான் உள்ளன. மிச்சமுள்ள 392 சட்டங்கள் பல்வேறு பண்பாடுகள் கலாச்சாரங்கள் கொண்ட இந்து மக்களுக்குத் தான் இருக்கிறது. இந்துக்களுக்கு தயாபரா, மித்ராக்‌ஷா என இரு சிவில் சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. இதனடிப்படையில் தான் அவர்களது திருமணம் உள்ளிட்ட விவகாரங்கள் உள்ளன.

முஸ்லிம்களுக்கு திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், பாகப்பிரிவினை என இந்த நான்கை தவிர மற்ற சட்டங்கள் அனைத்தும் பொதுவானது தான். கிறித்தவர்களுக்கும் 4 சட்டங்கள் தவிர மற்ற அனைத்தும் பொதுவான சட்டங்கள் தான். கூட்டு குடும்ப வருமான வரி விலக்கு சட்டம் இந்து குடும்பங்களுக்கு மட்டுமே இருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பை பெற்றுள்ளது. இங்கு முஸ்லிம்களும் கிறித்தவர்களும் சீக்கியர்களும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தாலும் அவர்கள் கூட்டுக் குடும்பங்களுக்கு உரிய வருமான வரிவிலக்கு பெற மாட்டார்கள்.

அது போல் நாகலந்து, மணிப்பூர், கோவா மாநிலங்களில் வாழும் மக்களுக்கு என்று தனித் தனியான வாழ்வியல்  சட்டங்கள் இருக்கின்றன. அரசமைப்பு சட்டத்தின் கீழ் அவர்களின் தனிச் சட்டங்கள் பாதுகாப்பு பெற்றுள்ளன. கேரளாவில் உள்ள மக்களுக்கு மருமக்கள் வழி தாயம் என்றொரு சட்டம் இருக்கிறது. இது தான் இந்திய பண்மைத்துவத்தின் அடையாளம். அதனால் தான் “அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டத்தை உடனடியாக கொண்டுவர முடியாது, காலப்போக்கில் மக்கள் தாங்களாக விரும்பி ஏற்கும் காலம் வரும்போது அனைவரையும் உள்ளடக்கிய பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வரலாம்” என்று அரசியல் நிர்ணய சபையில் முடிவெடுக்கப்பட்டது. இது பற்றி அரசியலமைப்பு சட்ட உருவாக்க அவையில் அம்பேத்கர் அவர்கள் பேசும் போது, “மக்களின் விருப்பமின்றி பொது சிவில் சட்டம் திணிக்கப்படாது, ஒரு பித்து பிடித்த அரசு தான் அவ்வாறு செய்யும். எனவே பொது சிவில் சட்டம் பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை” என்று கூறினார்.

அரசியல் சட்டம் உருவாக்கும் அவையில், 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள், சட்டப்பிரிவு 35 விவாதத்துக்கு வந்தது. அப்போது, இந்த சட்டப் பிரிவுக்கு ஒரு காப்பு வாசகம் (proviso) இணைக்கப்பட வேண்டும் என்றார் (காயிதே மில்லத்) முகம்மது இஸ்மாயில். இஸ்மாயில் சாகிப் அவர்கள் சென்னை மாகாணப் பிரதிநிதியாக அரசியல் சட்ட அவையில் இடம்பெற்றிருந்தார். விதி 35ஐ அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளும் போது அப்படியொரு காப்பு வாசகம் சேர்க்கப்பட்டால் தான் (நாளையொரு நாள்) மக்களில் ஒரு குழுவோ, சமூகமோ தங்களது தனிச் சட்டங்களைக் கைவிடுவதற்கு எதிராக ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

“மக்களில் ஒரு குழுவினரோ, அல்லது சமூகமோ தங்களது தனிப்பட்டச் சட்டங்களைப் பின்பற்றும் உரிமையானது அடிப்படை உரிமைகளில் உள்ளதாகும் என்று சென்னை மாகாண உறுப்பினர் (காயிதே மில்லத்) முகம்மது இஸ்மாயில் கருதினார். அதில் ஏதாவது திருத்தம் கொண்டு வரும்போது அந்த மக்கள் பரம்பரையாகவும், பல்லாண்டுகளாகவும் பின்பற்றிவரும் சட்டங்களில் தலையிடுவதற்கு சமமாகும்” என்றார். மேற்கு வங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்த நசீருத்தின் அகமதுவும் முகம்மது இஸ்மாயிலின் கருத்தையே வலியுறுத்தினார்.

“முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு மதத்தினரும் அவர்களது மதநம்பிக்கை மற்றும் வாழ்க்கை முறைகளில் இருந்து பிரிக்க முடியாத குறிப்பான வாழ்வியல் சட்டங்களும் (Civil Laws) மதச் சட்டங்களும் (Religious Laws) இருக்கின்றன” என்றார் நசீருத்தீன் அகமது. மஹபூப் அலி பெய்க் ஷாஹிப் பகதூர், சென்னை மாகாணத்தில் இருந்து சென்றிருந்த மற்றொரு உறுப்பினர். அவர் பேசுகையில், “வாரிசுரிமை, முஸ்லிம்களின் சொத்துரிமை, திருமணம் மற்றும் மணமுறிவு ஆகிய சட்டங்கள் அவர்களை மதத்தைச் சார்ந்தது” என்றார். மற்றொரு உறுப்பினராக எம். அனந்த சயனம் அய்யங்கார், “முஸ்லிம்கள் மத்தியில் திருமணம் ஒரு ஒப்பந்தமாக இருக்கிறது” என்றார். அனந்த சயனம் அய்யங்கார் இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டாவது சபாநாயகராக இருந்தார். இந்த சயனத்துக்கு பதில் கூறிய பெய்க், “முஸ்லிம்கள் திருக்குர்ஆனின் நெறிப்படித்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருக்குர்ஆன் சொல்லும்படி செய்து கொள்ளாத திருமணம் இஸ்லாமிய சட்டப்படியான திருமணம் ஆகாது” என்றார்.

சென்னை மாகாணத்தின் மற்றுமொரு உறுப்பினரான பி.பாக்கர் ஷாஹிப் பகதூர் பேசும்போது, “இந்து சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்குள்ளும் வாரிசுரிமை மற்றும் பல்வேறு அம்சங்களில் பெரிய அளவுக்கு முரண்பாடு இருப்பதை நான் அறிவேன். இந்தக் கூட்டம் அந்த வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி விட்டு அவர்களுக்கு பொதுவான சட்டத்தைக் கொண்டு வரப்போகிறதா? பொது என்று நீங்கள் சொல்வது என்ன? எந்த சமூகத்தின் எந்த சட்டத்தை உயர்வானது என்று எடுத்துக் கொள்ள போகிறீர்கள்? எதை மனதில் கொண்டு இப்படியொரு விதியை அரசியல் சட்டத்தில் இணைக்க விரும்புகிறீர்கள்? மிட்டாக்ஷரா (Mitakshara) மற்றும் தயாபகா (Dayabhaga) என்பன போன்ற பல்வேறு முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள்.

வழக்கறிஞரும் & கல்வியாளருமான கே.எம்.முன்ஷி பாம்பே மாகாணத்தில் இருந்து வந்திருந்தார். முன்ஷி பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “இச்சட்டம் அனைத்து மதத்தின் மக்களையும் பாதிக்கும்” என்றார். அரசியல் சட்ட அவையில் இருந்த இதர இந்து உறுப்பினர்களும் முன்ஷியின் கருத்துக்கு ஆதரவு அளித்தனர்.

நாட்டின் தனிநபர் சட்டத்தை பாதிக்கும் வகையில் இந்த ஒரு துணுக்கான சட்டத்தை அனுமதிக்கப் போகிறோமோ என்பது சிறுபான்மை மக்களின் கேள்வி மட்டுல்ல, பொதுவான சிவில்சட்டம் என்பது பெரும்பான்மை மக்களையும் பாதிக்கும். இறுதியாகப் பேசிய மரியாதைக்குரிய முஸ்லிம் உறுப்பினர்கள் கருதுவதைப் போன்று இந்துக்கள் மத்தியிலும் பலர் பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை என்பதை நான் அறிவேன். வாரிசுரிமை, சொத்துரிமை உள்ளிட்ட தனிச் சட்டங்கள் அவர்கள் மதத்தின் ஒரு பகுதி என்று உண்மையாகவே உணர்கிறார்கள்.

அம்பேத்கரும் கூட பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். வடக்கு மலபாரில் (கேரளா) மருமக்கதாயம் என்னும் சட்டம் இந்துக்களை மட்டுமின்றி முஸ்லிம்களையும் உள்ளடக்குகிறது. மருமக்க தாயம் சட்டம் தந்தை வழிச் சட்டம் இல்லை, அது தாய்வழிச் சட்டம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் முன்ஷி. பாபா சாகேப், முஸ்லிம் உறுப்பினர்களிடத்தில் உறுதியளித்து கூறுகையில், சட்டப்பிரிவு 35ஐ அவர்கள் நன்கு ஊன்றி படித்துவிட்டார்கள். நாட்டினது குடிமக்களின் சிவில் சட்டத்தைப் பாதுகாக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றுதான் அதில் கூறப்பட்டிருக்கிறது” என்றார்.

பல்வேறு சமஸ்தான மக்களும் விரும்பி இணைந்து கொண்டதால் உருவானது தான் யூனியன் ஆப் இண்டியா எனப்படும் இந்திய தேசம். இதில், எந்த பிரிவினரும் தங்கள் உரிமையை விட்டு விலகிட விரும்ப வில்லை. இப்போது, அவரவருக்கு என்று இருக்கும் ஓரிரு தனிச் சட்டங்களால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவும் அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொண்டுள்ள பட்டியல் தனிச் சட்டங்களை பின்பற்றி வாழ்வதில் குற்றமும் இல்லை.

இது போக, இந்திய குடிமக்கள் எவரும் தங்களது விவகாரம் பொதுவில் இருக்கும் சட்டத்தின் படி தீர்க்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினால் அதற்கும் சட்டத்தில் இடமிருக்கிறது. “ இப்போதைக்கு, பொது சிவில் சட்டம் தேவை இல்லை. அவரவர் சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று சட்டஆணையம் கூறியிருக்கிறது. இவ்வாறு பொதுசிவில் சட்ட விவாதம் முடிவுக்கு வந்துவிட்டது.

பொதுசிவில் சட்டத்துக்கு மாறாக, தனிநபர் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து 21 வது சட்ட ஆணையம் தற்போது மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், விவாகரத்து, குழந்தைகளின் பராமரிப்பு, திருமண வயது, குடும்ப சொத்து உள்ளிட்டவற்றில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்தும் பரிந்துரைத்திருக்கிறது. சட்டஆணையத்தின் தலைவர் நீதிபதி சௌகான், “ பொதுசிவில் சட்டம் என்பது மிகவும் விரிவானது. தற்போது, அதனை கொண்டு வருவதற்கான பரிந்துரைகளை அளிக்க முடியவில்லை. அதற்கு பதிலாக, தனி நபர் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர பரிந்துரை செய்யப்படும். பொதுசிவில்சட்டம் மிகவும் பரந்துபட்டது. இந்தியாவில் இதுவரையில் இதனை செயல்படுத்திப் பார்க்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பொதுசிவில சட்டம் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டோம். பலதரப்பினருடனும் ஆலோசனை நடத்தினோம். அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். இதனடிப்படையில் ஆலோசனை அறிக்கையை வெளியிடுகிறோம் என்று கூறியிருக்கிறார்.

அதே நேரம், அடுத்து அமைய உள்ள 22 சட்டஆணையம், பொதுசிவில் சட்டம் குறித்து, முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்தும் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இந்துக்கள், பார்சிகள், உட்பட பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் தனிநபர் சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இந்த ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, திருமணம், பலதாரமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், விவாகரத்துக்குப் பிறகு மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்பு தொகை வழங்குவது, வாரிசுரிமைச் சட்டம், பரம்பரை சொத்துகளை பங்கிடுதல், விதவைகள் சொத்துரிமை, மதம் மாறி திருமணம் செய்யும் பெண்களுக்கு சொத்துரிமை, குழந்தைத் தத்தெடுப்பு, குழந்தைகள் பாதுகாவலர் சட்டம் உட்பட்டப் பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சர்ச்சையான விசயங்களை அறிக்கை தவிர்த்து உள்ளது.

மேலும், கிறிஸ்தவ ஆலயங்களில் பின்பற்றப்படும் பாவ மன்னிப்பு நடைமுறைக்கு மாற்று வழி குறித்து ஆராய வேண்டும் எனவும் சட்ட ஆணையம் தனது பரிந்துரையில் வலியுறுத்தி இருந்தது.

கட்டுரையாளர்: ஜி.அத்தேஷ்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *