இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் முஸ்லிம் பெண் மருத்துவர்கள் என வரலாற்றாசிரியர்களால் புகழாரம் சூட்டப்படும் தாவூத் சகோதரிகள் இருவரும் பிறப்பில் இரட்டையர்கள் அல்லர் ஆனாலும் அவர்கள் ஒருசேர மருத்துவப்பணியில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவர்களுக்கு மருத்துவ இரட்டையர் என்கிற அடைமொழி கொடுக்கப்பட்டிருந்தது.

யாகூப் சகோதரிகளின் தந்தை கணேஷ் லால் என்பவர் ஹரியாணா, அம்பாலா நகரில் மிகப்பெரும் தொழிலதிபரின் மகனாவார். அவர் தனது 16வது வயதிலேயே இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர். தனது பெயரை முஹம்மது யாகூப் என வைத்துக்கொண்ட அவரைப் பற்றிய விபரங்கள் எதுவும் தெளிவாக கிடைக்கப்பெறவில்லை. ஆனால் சகோதரிகள் இருவரும் கிபி.1920இல் மருத்துவப்பணியை தொடர்ந்துவந்தனர் என்பதற்கான நிறைய ஆதாரத்தரவுகள் நமக்கு கிடைக்கப்பெறுகின்றன.

இந்திய துணைக்கண்டத்திலேயே முதல் பெண் மருத்துவர்களாக அறியப்படும் யாகூப் சகோதரிகளில் மூத்தவரது பெயர் உம்முகுல்சூம் , இவர் கிபி.1898 ,ஜூன் 27லும், இளையவரன அம்துர் ரகீப் ,கிபி.1900மாவது ஆண்டு பிப்ரவரி 22 அன்றும் பிறந்துள்ளனர். இருவரும் ஆக்ராவிலுள்ள புனித ஜான் பெண்கள் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்த கையோடு ஆக்ரோவில் இருந்த பெண் மருத்துவக்கல்லூரியில் LMP படித்து முடித்தனர். தற்போது அந்த கல்லூரி சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் அறியப்படுகிறது. அந்த காலத்தில் MBBS என்பது LMP என அறியப்பட்டது. அதன் அர்த்தம் Licensed medical practioner என்பதாக மாறி பிறகு LSMF (licentiate of State Medical Faculty) என மாற்றப்பட்டு இறுதியாக MBBS என மாற்றம் பெற்றது.

பெண்களுக்கு பள்ளிப்படிப்பே தேவையில்லை என்றிருந்த காலகட்டத்தில் அவர்களை உயர்கல்வி கற்க வைக்க வேண்டும் என்பது தந்தை யாகூப் முஹம்மது அவர்களின் ஒரே கனவாக இருந்து வந்தது. அப்போதைய இந்திய சமூகம் ஆணாதிக்க அழுத்தங்களாலும் பெண்ணடிமைத்தனத்தில் ஊறியிருந்த நிலையிலும் பெண்கள் படிக்கப்போவதே பெரும் போராட்டமாக இருந்த காலகட்டத்தில் பலரது சொல்லடிகளுக்கும் ஆளாகிய சகோதரிகள் சுயவிருப்பத்தின் பெயரிலும் தந்தையின் உற்சாகத்தின் உயிரூட்டலிலும் மருத்துவம் படித்து முடித்தனர்.

சகோதரிகள் இருவரும் மருத்துவம் படித்த மருத்துவர்கள் என்றபோதும் அவர்களுக்கு சமூக அக்கறையிலும், பெண்களுக்கான சேவையிலும், கல்வி மற்றும் அரசியல் துறையிலும் அதீத ஈடுபாடு நிலவிய காரணத்தால் “ரஹ்பரே நிஸ்வான்” எனும் உருது பத்திரைகையை துவங்கினர்.
இதில் மூத்த சகோதரியான மருத்துவர் உம்முகுல்சூம், மருத்துவர் அப்துல் கஃபூர் கவாஸ் என்பவரை திருமணம் முடித்துக்கொண்டார். அகில இந்திய முஸ்லிம் லீக்கில் இணைந்து பிலிபிட் தொகுதியில் பெண் பிரிவிற்கான தலைவியாய் விளங்கியதோடு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா உள்ளிட்ட மொத்த இந்திய துணைக்கண்டத்திற்கான முழுமையான மருத்துவ ஃபாக்கல்டிக்கு தலைவியாக சுமார் 18 வருடங்கள் நீடித்தார் அதற்கான பாராட்டும் சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து உம்முகுல்சூம் மற்றும் அவரது கணவருமான அப்துல் கஃபூர் கவாஸ் ஆகிய இருவரும் அரசியல் ரீதியாக பெரும் பிரச்சனைகளை சந்தித்தனர். பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கத்திற்காக தாங்கள் சந்தித்த பிரச்சனைகளை பற்றியும் அவரது கணவருடைய மரணம் குறித்தும், அவர் தனது “ருதத் இ கஃபாஸ்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிபி.1927 முதல் 1930 வரை பிலிபிட் நகரை தலைமையிடமாகக் கொண்டு வெளியான “ஹரெம்” என்ற உருது மாத இதழுக்கான ஆசிரியையாகவும் இருந்தார்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மற்றொரு மருத்துவரான அப்துல் கஃபூர் பிஸ்மில் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். 1971இல் ஜூலை 7, அன்று அவரது மரணம் நிகழ்ந்தது.
அதுபோல இளைய சகோதரியான மருத்துவர் அம்துர் ரகீப் , மருத்துவரான இஷாக் சித்திக்கி நஷித் என்பவரை திருமணம் முடித்து பரேலி மற்றும் அலிகார்க் மருத்துவமனைகளில் மருத்துவப்பணி செய்தார். கணவர் இஷாக் சித்திகியுடன் அவருக்கு அம்துல் ஹசீப், அஃபீபா மஹ்மூத், லத்தீஃபா அஸிம் ஆகிய மகள்களும், பேராசிரியரும் மருத்துவருமான ஹஸன் அஷ்ஃபாக் சித்திக்கி ஆகிய மகனும் இருந்தனர்.

நாடு பிரிவினைக்குப் பிறகு அக்காவைப் போலவே இவரும் கராச்சி நகருக்கு குடிப்பெயர்ந்தார். அங்கு கராதார் பிரசவ மருத்துவமனையில் நீண்ட நாள் மருத்துவராகவும் மருத்துவமனையின் தலைவராகவும் பணிபுரிந்து அக்கா உம்முகுல்சூம் இறந்த நான்கே ஆண்டுகளில் அம்துர் ரகீப்பும் 1974 ,ஜனவரி 4 அன்று மரணமெய்தினார்.

ஆணாதிக்க எண்ணங்கள் மிகுந்த இந்திய தேசத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே முஸ்லிம் பெண்கள் பலர் கல்வியும் வேலைவாய்ப்பிலும் சுதந்திரப் போராட்ட களத்திலும் நின்று அரசியல் ஆளுமைகளாக கோலோச்சி வந்துள்ளனர். இந்த யாகூப் சகோதரிகளுக்கு முன்னதாகவே கிபி.1896ல் கல்கத்தாவைச் சேர்ந்த லத்தீஃபு நிஸா என்ற முஸ்லிம் பெண் கல்கத்தா கேம்ஃபல் மருத்துவக் கல்லூரியில் பயின்று தம்முடன் பயின்ற 55 மாணவிகளில் முதன்மையானவராக வந்ததாக கிபி.1896ல் வெளிவந்த பாமாபோதினி பத்ரிகா என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டதாக தெரியவந்தாலும் லத்தீஃபு நிஸா மருத்துவப்பணி மேற்கொள்ளவில்லை என்கிற காரணத்தினால் அவர் குறித்த தரவுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. யாகூப் சகோதரிகளுக்கு முன்பாக இந்தியாவில் மருத்துவராக படித்த முதல் முஸ்லிம் பெண்மணி லத்தீஃபு நிஸா ஆவார்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என அறியப்படும் ஆனந்திபாய் ஜோஷி என்பவர் கிபி.1865இல் மும்பையில் பிறந்திருந்தாலும் அவர் தனது பதினைந்தாவது வயதில் கோபால் ராவ் என்பவரை திருமணம் முடித்துக்கொண்டு அமேரிக்கா, பென்சில்வேனியாவுக்கு சென்றுவிட்டார். அங்கு சென்று இரண்டு வருட மருத்துவப்படிப்பு படித்த பிறகு அங்கு சிலநாட்கள் மருத்துவராக இருந்தவருக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்படவே மீண்டும் கல்கத்தா திரும்பிய அவர் கிபி.1885இல் தமது 21வது வயதில் இறப்பெய்தினார். ஆனந்திபாய் ஜோஷியுடன் அமெரிக்க பென்சில்வேனிய மருத்துவக் கல்லூரியில் , ஆசியக்கண்டத்திலேயே முதல் பெண் மருத்துவர்களாக உடன் படித்தவர்கள் ஜப்பானைச் சேர்ந்த கெய் ஒகாமி என்பவரும் சபாத் இஸ்லாம்பூளி எனும் சிரிய குர்திஷ் பெண்ணும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

கட்டுரையாளர்: நஸ்ரத் எஸ் ரோஸி

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *