அன்றைய காலங்களில் சிறுவயதில் ரமளான் நோன்பு வைப்பது ஒரு சாகசம் போலவே இருக்கும். அதுவும் முதல் நோன்பில் சஹர் செய்துவிட்டு தூங்கி தாமதமாக எழும் போதே தாகமும் பசி உணர்வும் எழும்! அப்போதுதான் இன்னிக்கு நோன்பு… என்ற எண்ணம் எழுந்து, வெளியே ஓடிப்போய் ‘புளிச்சென்று’ எச்சியயைத் துப்பி வருவோம். பள்ளிக்கூடத்திலும் பசங்கள் மாறிமாறி ஒவ்வொருவராக எழுந்து போய் வராத எச்சியை வர வைத்து துப்பிக் கொண்டே இருப்பார்கள்.

“டே! இவன் எச்சியே துப்ப மாட்டேங்குறாண்டா! நோன்பு வைக்யாம .நோன்புனு பொய் சொல்றாண்டா..”

சிறுவர்களின் செய்கை வேடிக்கையாக இருக்கும். “நானும் நோன்பு வச்சிருக்கிறேனாக்கும்..” என்று மற்ற பசங்களுக்கும் காட்டும் தெரிய வைக்கும் உணர்வின் வெளிப்பாடு இது என்பது பெரியவனான பிறகுதான் புரிபடும்! வகுப்பில் மாணவர்களின் இந்த ரமளான் நோன்பு கால ஆர்வலங்களையும் குதூகங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள் ஆசிரியர்கள். அது ஒரு புரிதல் நல்லிணக்கம் மிக்க காலம் .

மாதங்கள் மெல்ல கடந்து ஜமாஅத்துலாஹிர், ரஜப் மாதங்களில் மிஃராஜ், பராத் இரவுகளில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும் பயானும் வந்தவுடனே அடுத்து எப்போது ரமளான் வரும் இபாதத்தோடு இறையச்சத்தோடு இறைவனுக்காக கடமைகளை செவ்வனே நிறைவேற்றலாம் என காத்திருப்பது ஒரு சுகமான பேரனுபவம். நோன்பு வைத்துக் கொண்டு ஜவுளிக்கடை கடையாக அலைந்து கொண்டிருக்க முடியாது என்பதால் ரமளான் தொடங்குவதற்கு முன்னதாகவே பண வசதி உள்ளவர்கள் பெருநாள் புதுத் துணிமணிகள் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

வசதியற்றவர்கள் அவ்வரவர்களுக்கு பணம் கிடைக்கும்போது குழந்தைகளுக்கு புத்தாடை வாங்க நோன்பு கால இரவுகளில்தான் அலைவார்கள்.
நோன்பு கால தொழுகை இபாதத்துகளைவிட கடைவீதிகளில் அலைந்து ரமளாணை இப்படி வீணாக்கிறார்களே என அவர்களின் கஷ்டங்களை அறியாது இப்போது இதற்கு இமாம்கள் பயான் மேடைகளில் வியாக்கினம் பேசுகிறார்கள்.!

இப்போது போல பிறை கூத்துகள் இல்லாத காலம் அது.! ரமளான் பிறை பார்த்தவுடனேயே பள்ளிவாசல்களில் சீரியல் விளக்கு அலங்காரத்துடன் பள்ளிவளாகமே புதுப் பொண்ணு போல ஜொலிக்க ஆரம்பிக்கும். போட்டி போட்டுக்கொண்டு மொகல்லா பள்ளிவாசல்கள் கலர்கலரான விளக்கொளி அலங்காரகளில் ஜொலிக்கும் ! தராவீஹ் தொழுகைக்கு பள்ளி நிறைந்து வெளிப் பிரகாரமும் நிறைந்து தாமதமாக வருபவர்களுக்கு இடமே இருக்காது! மூன்று நோன்புக்கு இப்படித்தான் இருக்கும். பிறகு படிப்படியாக சப்புகள் குறிந்து கொண்டே வரும். சிறுவர்கள் வருவதும் போவதுமாகவே இருப்பார்கள் ஒரு பக்கம் உட்காரவே மாட்டார்கள். ஓயாத பேச்சு சத்தம் விளையாட்டு என தொழுகைக்கு இடைஞ்சலாக இருக்கும்

பெரியவர்கள் வந்து அதட்டிக்கொண்டே இருப்பார்கள். பசங்கள் கேட்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். சில பெருசுகள் கோபமாக எழுந்து வந்து “தொழுதுட்டு இரிக்காங்கள்ல சத்தம் போடாம இரிக்கமாட்டீங்களா? போங்கடா எந்திரிச்சு… வெளில போயி வேளயாடுங்கடா.” என்றவாறு சத்தம் போட்டு வெளியே துரத்தி விடுவார்கள். போக்கு காட்டிக்கொண்டே பசங்கள் வெளிப்பிரகாரத்தில் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். அங்கு வந்தும் விளையாட்டும் பேச்சும் ஓயாது. சில சமயம் கோபக்கார பெருசுகளில் ஒருவர் எழுந்து வந்து தொழுகைக்கு இடைஞ்சலாக இருக்கு என பசங்களை வெளியே துரத்தி விடுவார். பெருசு உள்ளே போனதும் மறுபடியும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டே பள்ளிக்குள் வந்துவிடுவார்கள்.

”சொன்னா கேக்குறாணுங்களானு பாரு..” என்றவாறு அந்தப் பெருசு பக்கத்தில் உள்ளவரிடம் புலம்புவார். இப்போது தொழுகை வரிசையில் நின்றவாறு சிறுவர்களின் விளையாட்டுகள் தொடருகிறது. முன்னைவிட அதிகமாக இப்போது சிறுவர்கள் நண்பர்களுடன் தொழுகைக்கு வருகிறார்கள். இரண்டு ரகஅத் தொழுவதும் எழுந்து போய் விளையாடுவதுமாக இப்போதும் தொடர்கிறது. இது சிறப்பானதும் மகிழ்ச்சிக்குரியதுமாகும். சில நாட்களுக்கு முன் துருக்கி பள்ளிவாசல்களில் சிறுவர்கள் விளையாடுவது தொடர்பாக வந்த செய்தியையும் சமூக ஊடகங்களில் இது பேசு பொருளானது குறித்தும் இங்கு யோசிப்போம் -பொருத்திப்பார்ப்போம்.
சஹர் கமிட்டிக் குழுக்கள் எல்லாம் இப்போது இல்லாமல் போய் விட்டது. ரமலான் நோன்பு காலங்களில் மொஹல்லா தோறும் சஹர் கமிட்டி என்று ஒன்று இருக்கும். மாப்பிளை ஊர்வலத்திற்கு பாடல்கள் பாடி வரும் அதே பைத் சங்கம்தான் ரமளான் மாதத்தில் சஹர் கமிட்டியாகிவிடும். கோவை கோட்டைமேட்டில் உள்ள முஸ்லிம் வாலிபர்கள் முன்னேற்ற சங்கம்தான் இதற்கு முன்னோடி என்று சொல்லலாம். பொன்விழாவைக் கடந்து இன்னும் அந்த சங்கம் நீடிப்பது ஒரு சிறப்பான செயல்.

இரண்டு மணிக்கே பெண்கள் எழுந்து சமையல் செய்வதற்கும் சஹர் செய்து (நான்கு மணிக்கு உணவு உண்பது) நோன்பு நோற்பதற்காக வேண்டி பெண்களை துயில் எழுப்ப வேண்டி நள்ளிரவில் வந்து இஸ்லாமியப் பாடல்களை பாடி ”இப்பொழுது நேரம் சரியாக இரண்டு மணி நாற்பது நிமிஷம். சகர் செய்ய எழுவீர்…. சகர் செய்ய எழுவீர்….” என்று மைக்கில் சொல்லிக் கொண்டும் பாடல்களைப் பாடிக்கொண்டும் வீதி வீதியாக வருவார்கள். அதிகாலை வரை இவர்களின் இந்த சேவை நீடிக்கும். நோன்பு மாதம் முழுக்க முப்பது நாட்களும் தூக்கம் விழித்து இந்த சேவை செய்வார்கள்.
நான் கூட முன்பு வசித்த ஆத்துப்பாலம் பகுதியில் ஒரு சஹர் கமிட்டிக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்திருக்கிறேன். மைக்செட்டுக்கு மின்சாரம் தேவைக்கு ஏதாவது ஒரு வீட்டிலிருந்து ஒயர் சொருகி மின்சாரம் எடுத்துக் கொள்வார்கள். சில வீடுகளில் அவர்களுக்கு சாயா தயாரித்துக் கொடுத்து உற்சாகம் ஊட்டுவார்கள்.

இவர்களுக்கு இணையாக ஃபக்கீர்ஷாக்கள் தப் அடித்துக்கொண்டு இஸ்லாமியப் பாடல்களைப் பாடியவாறு தனித்தனியாக வீதி வலம் வருவார்கள். இவர்கள் குழுவாக வருவதில்லை. ஒவ்வொரு மொஹல்லாவுக்கும் ஒருவர் என்ற கணக்கில், மக்களின் அந்த நள்ளிரவு ஆழ் நிலை உறக்கப் பொழுதில் தப்ஸ் அடித்து..’அஸ்ஸலாத்துல் ஹைருல் மினன்னவ்..’ (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்கிற சொல்லைப் போன்ற தேர்ந்த இசையை மொஹல்லா வீதிகள் தோறும் அலையவிட்டுச் செல்வார்கள்.

பேஷன் என்கிற பெயரில் பெண்கள் அணியும் தடித்த பாசிகள் வைத்த மாலைகளை இந்த ஃபக்கீர்ஷாக்கள் விதவிதமாக அணிந்திருப்பார்கள். பச்சை நிறத்தில் உருமாலைக் கட்டாக தலைப்பாகை கட்டியிருப்பார்கள். கணுக்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிய லுங்கியும், ஜிப்பாவும் அணிந்திருப்பார்கள். நெடும் தொட்டில் போலிருக்கும் பச்சைப்பை எப்போதும் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும். ரமலான் நோன்பு காலங்களில் மட்டுமல்லாது தர்ஹா சந்தனக்கூடுகள் நடைபெறும் பொழுதுகளிலும் இவர்கள் தவறாமல் ஊருக்குள் வலம் வருவார்கள்.
ரமளானின் போது சஹருக்கு வந்து துயில் எழுப்புவது இவர்களின் பிரதான பணியாகும். 27 வது புனித லைலத்துல் கத்ர் இரவில் முழுவதும் சுற்றி வந்து துயில் எழுப்பிவிட்டு இருபத்தியெட்டாவது நோன்பன்று ஃபக்கீர்ஷாக்கள் வீடு வீடாக வந்து காசு வசூல் செய்வார்கள்.

இப்போது அந்த பக்கீர்ஷாக்களை காண்பதே அரிதாகிவிட்டது! தஃப்ஸ் அடித்துக் கொண்டு வீடுவீடாக என்றாவது வரும் ஃபக்கீர்ஷாக்கள் கூட இன்று கண்ணில் படுவதில்லை. கடைகளில் சாம்பிராணி போடுபவர்களாக சிலர் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இல்லை. அறிதாகிவிட்டது. எந்தக் காலகட்டத்தில் நாம் ஃபக்கீர்களைத் தொலைத்தோம் என்று தெரியவில்லை. அது வேண்டாம். இது வேண்டாம். எதுவும் கூடாது. இதெல்லாம் பித்அத் என்று கூறி காலங்காலமாக இருக்கும் இஸ்லாமிய மரபுகளையெல்லாம் அழித்து விட்டு வரட்டுத்தனமாக சித்தாந்தத்தை முன் வைக்கும் இயக்கங்களின் வரவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த சஹர் கமிட்டி சங்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனதற்கு, இல்லாமல் போனதற்கு மதக்கலவரச் சுழலும் பிரதான காரணம்.

அன்றைய காலகட்டத்தில் சிறுபிராயத்தில் நோன்பு நோற்க ஆசையாக இருக்கும். ஆனால் உம்மாக்கள் விடமாட்டார்கள். சஹருக்கு எழுப்பி விடச்சொன்னால் எழுப்பிவிடவே மாட்டார்கள். அப்படியே அழுது அடம்பிடித்து நோன்பு நோற்றாலும் முதல் மூன்று நோன்புகள்தான். அதுவுமில்லாமல் அப்போது சிலர் முதல் மூன்று நோன்புகளும் கடைசி மூன்று நோன்புகளும் வைத்தால் போதும் முப்பதும் பூர்த்தியாகிவிடும் என்று சொல்லி அதன்படியே நோன்பு நோற்பார்கள். இதென்ன கணக்கு? இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

சிறுவர்கள் சிலர் மதியம் தாண்டியவுடன், பசி தாங்கமுடியாமல் ”ம்மா வயிறு வலிக்குதும்மா..” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழுது நோன்பை விடும் சங்கதியெல்லாம் நடக்கும்.
பள்ளிக்கஞ்சி (இப்போது பரவலாக நோன்புக்கஞ்சி) இப்போது போல அவ்வளவு ருசியாக இருக்காது. ஒரு டம்ளருக்கு மேல் குடிக்கவே முடியாது. ஆனால் இப்போது ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு ருசியில் நோன்புக்கஞ்சி செய்கிறார்கள். எங்கள் பகுதி பூங்காநகர் பள்ளியில் நோன்புக்கஞ்சிக்கு அவ்வளவு கூட்டம்! வெளியிலிருந்தெல்லாம் வந்து வாங்கிச் செல்வார்கள். இதற்கும் கரும்புக்கடை முழுக்க வீதிக்கு ஒரு பள்ளி. இருந்தும் கூட்டம். காரணம் ருசி! மேலும் தினம் தினம் இஃப்தாருக்கும் சரியான கூட்டம் இருக்கும். வெளியாட்கள் எல்லாம் நோன்பு துறக்க இங்கு வந்துவிடுவார்கள்.

ரமளான் மாதம் துவங்கியதும் வடை போண்டா பஜ்ஜி பலகாரக் கடைகளில் கூட்டம் அலைமோதும். நோன்புக்கஞ்சியுடன் சாப்பிட வடை, பஜ்ஜி, பப்ஸ் வகையறாக்கள் அத்தனையும் ஆறு மணிக்குள் விற்றுத் தீர்ந்துவிடும். ஐந்தரை மணிக்கு ஒவ்வொருக்கடை முன்பும் கூட்டம் சும்மா அள்ளும். பள்ளிக் கஞ்சிக்கு வடை பஜ்ஜியை விட என் சாய்ஸ் முட்டை போண்டா. வீட்டிலேயே வெங்காய பஜ்ஜியும், முட்டை போண்டாவும் செய்வோம். இப்போது பள்ளிக்கஞ்சியும் இல்லை. முட்டை போண்டாவும் இல்லை. எங்கள் டாக்டர் கட்டுப்பாடு விதித்துவிட்டார். பேரீச்சையும், பாதம், பழங்கள் ஜூஸ் மட்டுமே. வாரம் ஒருநாள் மட்டுமே பள்ளிக்கஞ்சியும் முட்டை போண்டாவும்!

விடாமல் முப்பது நாட்களும் ஜில்லென்று குளிர் பானங்கள் அருந்துவதும் பள்ளிக்கஞ்சியும், வடை பஜ்ஜி போண்டா சாப்பிடுவதும் உடலுக்கு கெடுதலை ஏற்படுத்துகிறது. நோன்பு முடிந்ததுமே எல்லோருக்கும் சளி இருமல் வயிறு கோளாறு என்று அவதிப்படுவார்கள்.

பள்ளிவாசல்கள் மின் அலங்கார விளக்கொளியில் புதுப்பெண் போல தகதகவென ஜொலிக்கும். இதுவும் கூடாது என்று சொல்லி இன்றோ பள்ளிவாசல்கள் எல்லாம் எப்போதும் போலவே வெறிச்சென்று கிடக்கிறது. வல்ல இறைவனை வணங்கும் பள்ளிவாசல்களை ரமளான் மாதம் முழுக்க மின்விளக்குகளால் அலங்கரிப்பதில் என்ன தவறு? இதுவெல்லாம் ஒரு சந்தோஷம். இஸ்லாமிய நாடுகளில் இன்றளவும் இந்த வைபவமும் விசேச அலங்கரிப்பும் நடக்கத்தான் செய்கிறது.

இதில் என்ன பித்அத்தைக் கண்டார்களோ? வஹாபிய பள்ளிவாசல்களில் மட்டும் ரமளானில் இந்த மின்விளக்கு அலங்காரம் எதுவும் இருக்காது. எப்போதும் போலவே வெறுமனே காட்சியளிக்கும். ஆனால் ஊரெல்லாம் வசூல் செய்து ஒற்றைப்படை இரவுகளில் பிரியாணி, குஸ்கா என சஹர் சாப்பாடு பந்தி தடபுடலாக நடத்துவார்கள்.

அன்றைய நாளில் சஹர் கமிட்டிக்காரர்கள் ரமளானின் புனித லைலத்துல் கத்ர் என்கிற இருபத்தி ஏழாம் இரவில் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மொகல்லாதோறும் வீதி வீதியாக உலா வருவார்கள். வெளிப் பக்கம் இருந்தெல்லாம் விடிய விடிய அலங்கரிக்கப்பட்ட பல வகையான வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். நகர் முழுக்க இந்த அலங்கரிக்கப்பட்ட வாகன உலா செல்லும். மக்கள் சந்தோஷமும், குதூகலமுமாக வந்து நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள்.

27 வது இரவு புனித லைலத்துல் கத்ர் அன்று இஷா தொழுகை பத்து மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும். அதன் பிறகு 20 ரகாஅத் தராவீஹ் தொழுகை. அதன் பிறகு சிறப்பு பயான் நடக்கும். நள்ளிரவு வரைக்கும் அன்றைய அமல்கள் நீடிக்கும். இதன் பிறகுதான் சஹர் கமிட்டிகளின் வாகன உலாவும் ஆரம்பிக்கும். 26வது நோன்பு அன்று மாலையிலிருந்து இந்த உற்சாகம் ஆரம்பித்துவிடும். விடிய விடிய மொஹல்லாக்கள் தோறும் திருவிழா பட்டபாடாக இருக்கும்.
சிறுவர்கள் சைக்கிள்களின் சக்கரங்களில் பலூனைக் கட்டிக்கொண்டு படபடவென சத்தம் கிளப்பியபடி வீதிகளில் வரிசை வரிசையாக சர்சரென்று சைக்கிளை வேகமாக ஒட்டி சாகசம் செய்து கொண்டிருப்பார்கள். இன்று எதுவுமே இல்லாமல், எல்லாம் அப்படியே அடியோடு மாறிப்போய் நோன்பும் பெருநாளும் வெறுமனே ஒரு சடங்கு போல வறட்சியாகிவிட்டது! கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது வேறு. சட்டென்று எதுவுமே இல்லாமல் நின்று விடுவது வேறு. இப்போது அப்படித்தான் முஸ்லிம்களின் மரபான கலாச்சாரங்கள் எல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டுவிட்டன. திடுமென ஒரு பெரிய கலாச்சார மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

மதவாதிகளால் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் பலவிதத்திலும் இடைஞ்சல்களும் ஆபத்தும் ஏற்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டி உருவான அமைப்புகள் ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல தங்களின் போக்கை மாற்றிக்கொண்டு இஸ்லாத்தில் புரையோடிப் போயிருக்கும் அனாச்சாரங்களை ஒழிக்க வேண்டும் என தூய்மை வாதம் பேச ஆரம்பிக்க குழப்பங்களும், பிரச்சனைகளும்தான் வெடித்தன! மரபான நல்ல கலாச்சார நிகழ்வுகளும் விஷேசங்களும் இஸ்லாத்தின் மரபுகளும் காணாமல் போய்விட்டன.
அதுமட்டுமல்ல தொண்ணூறுகளுக்குப் பிறகு ஏற்பட்ட உலகமயமாதல் மற்றும் சேனல்களின் வருகை, இயக்கங்களின் வறட்டுப் பிரச்சாரங்கள், மதக் கலவரச்சுழல் என எல்லாமும் சேர்ந்து மொகல்லா தோறும் இருந்த முஸ்லிம் இளைஞர்களின் நற்பணி மன்றங்கள் சஹர் கமிட்டி மன்றங்களையெல்லாம் வீழ்ச்சியடைய செய்துவிட்டன.

ரமளான் நோன்பில் பிறை பார்ப்பதில் ஆரம்பித்து தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்தா அல்லது இருபது ரக்அத்தா என்கிற பிரச்சனை வேறு பெரிய அளவில் வெடித்து. இது தொடர்பான பேச்சும் வாதங்களும் குழப்பங்களும் அக்கப்போர்களும் தொடர ஆரம்பித்து இன்னும் நின்றபாடில்லை!
இந்த பிறைக்கூத்து ஆண்டுதோறும் ஒரு பெரிய பிரச்சனையாக இன்னும் தொடர்கிறது! முன்பெல்லாம் எங்கேயாவது ஒரு இடத்தில் ரமளான் பிறை தென்பட்டால் போதும் உடனே டவுன் ஹாஜி தலைமை ஹாஜிக்கு தகவல் கொடுப்பார், தலைமை ஹாஜி அதை ஏற்றுக்கொண்டு ரமளான் நோன்பு அறிவிப்பார். அது போலவே ரமளான் பிறை 29 அன்று மக்ரிஃப் நேரம் ஷவ்வால் பிறை பார்ப்பதும் நடக்கும். மறுநாள் ரம்ஜான் பண்டிகை என்று இரவு எட்டு மணிக்கும் மேல் அறிவிப்பார்கள். தமிழகம் முழுக்க ஒரே நாளில் முஸ்லிம்கள் அனைவரும் பெருநாள் கொண்டாடுவார்கள்.

இப்போது “நீ பார்த்த பிறையை நான் பார்க்கவில்லை, நான் பார்த்த பிறையை…. நீ பார்க்கவில்லை..! என் பார்வை போல உன் பார்வை இல்லை..! நீ கண்ட காட்சி நான் காணவில்லை..!“ என்ற கணக்காய் ஆகி கோஷ்டி கோஷ்டியாக கொஞ்சம் பேர் சவுதியில் மழை பெய்தால் இங்கே குடை பிடிப்பவர்களாக சவுதியை கணக்கில் கொண்டு இங்கு முதல் நாளே நோன்பு நோற்பதும், மீதிப் பேர் இங்கு பார்த்த பிறைக் கணக்கில் மறுநாள் நோன்பு நோற்பதும், இன்னும் ஒரு கோஷ்டி பிறை பார்க்காமலேயே நோன்பை அறிவித்து அமாவாசையன்றே நோன்பு வைப்பதும் அதே போலவே பெருநாளுக்கு பிறை பார்ப்பதும் இப்படி ஆகி இரண்டு பெருநாட்கள் என ஆரம்பித்து இப்போது மூன்று பெருநாட்கள் ஆகிவிட்டது.!

பிடித்த புத்தகங்களை மறுவாசிப்பு செய்வது போல அன்றைய ரமளான் நினைவுகளை மீட்டெடுத்து மீட்டுருவாக்கம் செய்ய மட்டும் முடியாது என்பது நிதர்சனம். திரும்பி வராத அந்த பொற்காலங்களின் நினைவுகளை அசைபோடுவோம். அன்றைய அழகிய ரமளான் நாட்களை அடுத்த தலைமுறைக்கு எத்தி வைப்போம். இன்ஷா அல்லாஹ்.

கட்டுரையாளர்: ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *