(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அங்குள்ள பெருந்திரையில் உலக நாடுகளில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளை அவையோருடன் சேர்ந்து கண்டு கவனித்து வருகின்றனர். அன்று, இந்தியாவில் பிராமணர்கள் அடாவடிச் செயல்கள் மூலம் EWS இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கிவிட்ட மகிழ்ச்சியில் துள்ளி ஆட்டம் போட்ட அத்திம்பேர், பின்னர் அந்த இடஒதுக்கீட்டின் விளைவாக பிராமணரல்லாத மக்கள் ஏழு விதங்களில் வெற்றிகரமாக எதிர்வினையாற்ற முடியும் என்பதை உணர்ந்து கவலையோடு தனது அம்மாஞ்சியுடன் கடற்கரையைவிட்டு நடந்து செல்லும் காட்சியைப் பெருந்திரையில் கண்ட அவையோர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கின்றனர். அவர்களில் அம்பேத்காரும் பெரியாரும் ஜெர்மானியக் கவிஞர் கெதேவும் (Goethe) தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வதைக் கண்ட திருவள்ளுவர் அவர்களைப் பேச அழைக்கிறார்).

அம்பேத்கார்: ஐயனே! இந்தியாவில் தூங்கும் புலியை பிராமணர்கள் சீண்டிவிட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் கவலையடைவது இயல்புதான். ஆயினும் அவர்களால் தூக்கம் கலைக்கப்பட்ட புலி இன்னும் தூக்கக் கலக்கத்தில்தான் இருக்கிறது. எப்போது அந்தப் புலி விழித்துக் கொண்டு எதிர்வினையாற்றும் என்பதுதான் மாந்தநேயத்தில் அக்கறை கொண்டவர்களின் கவலையாக உள்ளது. இந்த EWS இடஒதுக்கீடு என்பது இந்திய மக்களின் சமூக வாழ்வினைச் சீரழித்து, மறுபடியும் பிராமணரல்லாத அனைத்து மக்களையும் பிராமணர்களின் அடிமைகளாகக் காலங்காலத்திற்கு அடக்கி ஒடுக்கி வைத்திருக்க பிராமணர்களுக்கு உதவக்கூடிய மிகக்கொடியதொரு கருவியாகும். இந்தியாவில் பிராமணர்கள் நடைமுறைப்படுத்தும் Apartheid கொள்கையை இந்தக் கருவி மேலும் தீவிரமாக்கும். அது பற்றித்தான் நாங்கள் மூவரும் கவலையோடு பேசிக்கொண்டிருந்தோம்.

கெதே: ஆம், ஐயனே! நான் மிகவும் கவலைப்படுகிறேன். இந்தியாவில் உள்ள சாதி அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக நான் எழுதிய பாடலில் இனியும் ஒரு முறை எஙகளை அடிமைப்படுத்த விடமாட்டோம் என்று அம்மக்கள் சூளுரைப்பதாக எழுதியிருந்தேன். (Never! Never Again!! Never again shall we be enslaved!!!). அம்மக்கள் இன்னும் விழித்தெழவில்லை. ஆனால், நாங்கள் உங்களை மீண்டும் அடிமைகளாக ஆக்கத்தான் போகிறோம் என்று பிராமணர்கள் இந்த EWS இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலமாக, உரத்த குரலில் பிரகடனம் செய்துள்ளார்கள். எந்த விதமான நேர்மையும் நியாயமும் இல்லாத அடாத அடாவடிச் செயல்தான் இந்த EWS இடஒதுக்கீட்டுச் சட்டம். இதனை எதிர்க்க வேண்டுமானால், பிராமணரல்லாத மக்களில் படித்த இளைஞர்கள் தாங்களாக முன்வந்து செயலாற்றவேண்டும். தத்தம் சாதிகளைத் தம் கட்டுக்குள் வைத்து தமது சுய நலத்திற்காக அரசியல் ஆதாயம் தேடி ஆரியத்திற்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டிருக்கும் பல்வேறு சாதித் தலைவர்களைப் புறந்தள்ளி அவர்கள் பிடியிலிருத்து தம்மக்களை மீட்டு, அவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற இந்த இளைஞர்களால்தான் இயலும். 1990 ஐயும் 2022 ஐயும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். 1990ல் மண்டல் அறிக்கையை வி.பி. சிங் செயல்படுத்தியபோது, ‘உயர்’சாதியைச் சேர்ந்த இளைஞர்களும், அவர்களது தலைவர்களும் ஊடகத்தினரும் எப்படி நாட்டை அதகளப்படுத்தினர் என்பதையும், தற்போது 2022ல் ஒடுக்கப்பட்ட பிராமணரல்லாத மக்கள் எப்படி திசைதெரியாது நிற்கின்றனர் என்பதையும் காணும்போது எனது மனம் பதைபதைக்கிறது. இந்த EWS இடஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு பிராமணர்கள் மட்டிலும் பூசகர்களாகப் பணியாற்றும் அனைத்துக் கோயில்களிலும், பிராமணரல்லாத மக்களும் அனைத்து நிலைகளிலும் பூசகர்களாகப் பணியாற்ற சட்டம் இயற்றப்படும் வரை இந்தியா பூவுலகிலேயே மிக மிக அநாகரிகமான சமுதாய அமைப்பைக்கொண்ட நாடாகத்தான் இருந்துகொண்டிருக்கும். பிராமணர்கள் உருவாக்கிய சதுர்வர்ண அமைப்பு மனிதகுல வரலாற்றிலேயே மிக அநாகரிகமானதொரு சமுதாய அமைப்பு. இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் அனைத்துக் காலங்களிலும் பயங்கரவாதிகளாகவும், அரச பயங்கரவாதிகளாகவுமே இருந்துள்ளனர் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.

பெரியார்: கவிஞர் கெதே சொல்வது சரிதான். 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தனது தேர்தல் அறிக்கையில் வி. பி.சிங் தான் ஆட்சிக்கு வந்தால் மண்டல் அறிக்கையைச் செயல்படுத்துவேன் என்று தெரிவித்திருந்தார். அது தெரிந்துதான் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் அன்றைய ஆசிரியரான அருண் ஷோரி தலைகுப்புறவிழுந்து வி.பி. சிங்கை ஆதரித்து அந்த நாளிதழை வி.பி. சிங்கின் பரப்புரைக்கருவியாகப் பயன்படுத்தினார். ஆனால், வி.பி.சிங் ஆட்சிக்கு வந்தபின் உண்மையிலேயே மண்டல் அறிக்கையைச் செயல்படுத்தியதும், அருண்ஷோரிக்குக் கோபம் தலைக்கு மேல் ஏறியது. அன்று முதல் வி.பி.சிங்கை வீழ்த்துவதற்கு முழுமூச்சாகத் தனது பணியிடத்தைப் பயன்படுத்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை ஒரு முழுமையான காவிக்கூட்டத்துப் பரப்புரைக்கருவியாக்கிச் செயல்பட்டார். மண்டல் அறிக்கை சட்டமாக்கப்பட்டதும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதல் பக்கக் கட்டுரையில் “The Mandal Commission Report is an idiotic document. All of a sudden, it becomes law” என்று அங்கலாய்த்துத் தொடங்கி மண்டலையும் வி.பி.சிங்கையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் அந்தக் கட்டுரையில் எல்லையின்றி வசைபாடி, மறைமலை அடிகள் அடிக்கடி சொல்கின்ற Brahmanical animosity என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் தனது வெறுப்பைக் காட்டினார். அன்று முதல் அத்வானிதாசராகி 1992 டிசம்பர் மாதத்தில்சதுர்வர்ணச் சதிச் செயல்களைத் தொடங்கலானார். பின்னர், பாபர் மசூதி இடிக்கப்படும் வரை தனது காவிச் சிந்தனையின் தீவிர ஊதுகுழலாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழையும மாற்றியிருந்தார். மசூதி இடிக்கப்பட்டதற்கு மறுநாள் மிகவும் புளகாங்கிதம் அடைந்து தலையங்கம் தீட்டினார்.

பின்னர், 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை வாஜ்பாயி அமைச்சரவையில் Minister for Disinvestment பதவியில் இருக்கும்போது, பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் பிரிவினர்களுக்கும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு செய்யும் சட்டங்களை ஒன்றுக்கும் பயனற்றவையாக ஆக்கவேண்டும் என்பதற்காகவே, முழுமூச்சோடு வேலைசெய்து அரசாங்க நிறுவனங்களையெல்லாம் தனியார் நிறுவனங்களாக மாற்றி அரசுப்பதவிகளையெல்லாம் தனியார் நிறுவனப் பதவிகளாக மாற்றினார்.
உலகெங்கும் மக்களாட்சி நடைபெறுகின்ற, பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்ற, நாடுகளில் விகிதாச்சாரப் பங்கீடுதான் (Proportionate. Representation) கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் கூட பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பட்டியல் பிரிவு மக்களுக்கும், மக்கள் தொகையின் அடிப்படையில் அவர்களுடைய விகிதாசாரப்படிதான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இருந்தும் கூட மண்டல் அறிக்கை காரணமாக அருண்ஷோரி, சோ, முதலானவர்களுக்குக் கோபம் ஏன் வந்தது என்றால், சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அனைத்து அரசுப் பணியிடங்களிலும் பிராமணர்களுடைய ஆதிக்கம்தான் இருக்கவேண்டும் என்ற வெறிகலந்த வல்லாதிக்க மனப்பான்மைதான் (Fanatical imperialist mentality) காரணம். வெள்ளையர்கள் வசம் இந்தியா வந்தபின், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்பவன் பிராமணர்களின் கவலையே வெள்ளையர் ஆட்சி எப்போது முடியும், பேஷ்வா ஆட்சியின் நல்ல காலம் எப்போது திரும்பும் என்பதுதான் என்று, (1823ல் பிறந்து, பின்னாளில் ரத்லம் சாம்ராஜ்யத்தின் திவானாக இருந்த ) சித்பவன் பிராமணரான கோபால் ஹரி தேஷ்முக் கூறுகிறார் (When he grew up, “the eternal topic of discussion among the upper classes was whether British rule would last forever or the Peshwa’s good times would return. … “. Page 269 – Vol. 3 – History of freedom movement in India – Tarachand – Publications Division).

வெள்ளையர்களிடமிருந்த ஆட்சி அதிகாரம் பேஷ்வா பிராமணர்களுக்குத்தான் செல்லவேண்டும் என்ற நோக்கில் வரலாற்றில் பிராமணர்கள் செய்த சதிச்செயல்கள் பலப்பல. இவையெல்லாம் தெரிந்திருந்தும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல்பிரிவின மக்களின் சாதித் தலைவர்கள் பலர் வாளாவிருப்பதன் காரணம் அவர்களின் அநியாயமான சுயநல நோக்கம்தான். தங்கள் சொந்த நலனுக்காக தங்கள் சாதி மக்களின் தற்கால மற்றும் எதிர்கால வாழ்வைப் பாழாக்குபவர்கள் இவர்கள். வரலாறு முழுதும் இவ்வாறு செய்துதான், தமது சாதி மக்கள் கல்வியறிவு பெறாமல் இவர்களே தடுத்துவைத்து பிராமணர்களின் குறிக்கோளை நிறைவேற்றி வைத்தனர்.

அம்பேத்காரை மிகவும் இகழ்ந்து அருண்ஷோரி எழுதிய புத்தகம்தான் ‘Worshipping False Gods’ என்ற நூல். இருந்தும் பல ஒடுக்கப்பட்ட மக்களின் சாதித் தலைவர்கள், இன்றும் காவிக்கூட்டத்தோடு இருப்பதற்குக் காரணம் சுயநலம்தான். இவர்கள் தங்கள் சாதி மக்களின் சமூக விடுதலை பற்றிக் கவலைப்படாமல், அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அரசியல் பேரம் செய்து தம்மை மட்டும் வளர்த்துக்கொள்கின்றனர். இம்மாதிரிச் செயல்படுவதால், தாங்களும் ஒரு அடிமைக்கூட்டத்தின் தலைவராகத்தான் இருக்கிறோம் என்ற அவமான உணர்வோ கவலையோ அவர்களிடம் இருப்பதில்லை. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் ஆறு லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார். அவர்கள் தப்பித்துச் செல்லாமலிருக்க Ghetto க்களில் குடியிருக்கச் செய்து அவற்றைச் சுற்றி பெருஞ்சுவர்களை எழுப்பினார். அப்போது, அவரால் உருவாக்கப்பட்ட Jewish Council என்ற அமைப்பினைச் சேர்ந்த ‘அறிஞர்களும்’ யூதப் பத்திரிகையாளர்களும், அந்தச் சுவர்கள் யூதர்களின் பாதுகாப்புக்காகத்தான் எழுப்பப்படுகின்றன என்று பரப்புரை செய்து யூத மக்களை நம்பவைத்து, ஹிட்லர் தமது யூத மக்களை இனக்கொலை செய்யத் துணைபோயினர். இவ்வாறு லட்சக்கணக்கான யூதர்கள் கொலை செய்யப்பட்டபோது கூட, சில யூத ‘அறிஞர்கள்’ செயல்பட்டதைக் காணும்போது, பிராமணர்களுடன் கைகோர்த்துத் தங்கள் இனத்தை பிராமணர்களுக்கு அடிமைப்படுத்த பிராமணரல்லாதோரில் பல சாதித் தலைவர்கள் கிடைக்க மாட்டார்களா என்ன? நிறையக் கிடைக்கிறார்கள். எத்தனையோ பிராமணரல்லாதார் இவ்வாறான அடிமை வேலை செய்ய இன்றும் முன்வருகிறார்கள். “கூரைமேல சோறு போட்டா நூறு காக்கா” என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ. க. வின் தேசியச் செயலாளர் எச். இராஜா அந்த அடிமைகளை 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இழித்துப் பேசினார். இருந்தும்கூட, எந்த அவமான உணர்வுமில்லாத பல காக்கைகள் சாதித்தலைவர்கள் வடிவில் பிராமணர்களுக்குத் தொடர்ந்து அடிமைகளாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி இந்த உண்மைகள் தெரிந்த இளைஞர்கள்தாம் இந்தத் தலைவர்களின் பிடியிலிருந்தும் பிராமண வல்லாதிக்கத்திலிருந்தும் தமது மக்களை மீட்கப் போராடவேண்டும்.

(அப்போது மேடையில் அமர்ந்திருக்கும் கலீல் ஜிப்ரான் பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்க விழைகிறார்)
கலீல் ஜிப்ரான்: அருண்ஷோரியின் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லும்போது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது பற்றிச் சொன்னீர்களே. அது பொருளாதாரப் பிரச்சினை தானே. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பட்டியல்பிரிவு மக்களுக்கும் என்ன பாதிப்பு?
பெரியார்: பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது பொருளாதாரப் பிரச்சினை அல்ல. Mixed Economyதான் எந்தவொரு நாட்டிற்கும் சிறந்தது. மேலும், வெற்றிகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவது என்பது பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும் செயலாகாது. மக்கள் நலனைப் பாதுகாக்காது. இதனைக் கவிஞர் கண்ணதாசன் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்:

“கத்திரியில் வெண்டைக்காய் காய்த்துக் குலுங்குமென்றால்
தத்துவத்தில் ஏதோ தகராறு என்றுபொருள்!
சிங்கந்தான் மான்குலத்தைச் சீராட்டி வளர்க்குமென்றால்
அங்கத்தில் ஏதோ அடிவிழுந்த தென்றுபொருள் !
தனியார் தொழிலால்தான் சமதர்மம் வளருமென்றால்
தலையினிலே ஏதோ தகராறு என்றுபொருள்!”

இந்தியா ஒரு மக்கள் நலம் நாடும் அரசாக (Welfare State) இருக்கவேண்டுமானால், கலப்புப் பொருளாதாரம் எனும் Mixed Economy தான் அதற்குச் சிறந்த வழி. ஆனால், அருண்ஷோரியோ,, அரசுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்க தனக்கென்று ஒரு தனி அமைச்சகமே கேட்டு வாங்கிக்கொண்டு அவ்வேலையை முழுநேர வேலையாக செய்ததற்குக் காரணம் மக்கள் நலன் கருதி அல்ல;. பிராமணர்கள் நலன் மட்டுமே கருதித்தான்!

இந்தியாவில் அதிகாரமையம் என்பது அரசுப்பணியிடங்கள்தாம். அரசின் பல்வேறு நேரடித் துறைகளிலும். பொதுத் துறை நிறுவனங்களிலும்தான் அரசுப் பணியிடங்கள் இருக்கின்றன. இப் பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பும் போது இடஒதுக்கீடு தொடர்பான சட்டங்களைச் செயல்படுத்தியாகவேண்டும். அரசின் நேரடித்துறைகளை, அதாவது வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை, வருமான வரித் துறை, தேர்தல் ஆணையம், முதலானவற்றைத் தனியார்மயமாக்கவியலாது. ஆனால், வங்கிகள், நிலக்கரிச் சுரங்கங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள் போன்ற எண்ணற்ற பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கிவிட முடியும். அவ்வாறு செய்யும்போது, அந்நிறுவனங்களில் இதுவரை இடஒதுக்கீட்டுச் சட்டங்கள் மூலமாகப் பணியில் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல்பிரிவு மக்களைப் போல, அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் செய்துவிடலாம். இதுதான் அவர்கள் கணக்கு. அதனால்தான் இன்றைய பா.ஜ.க. ஆட்சியில் இன்னும் தீவிரமாக வெற்றிகரமாகச் செயல்படும் எல்.ஐ.சி. கூடத் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆள்வோருக்கு இரண்டு வகையில் ஆதாயம். ஒன்று, பிராமணரல்லாதோருக்கு இருந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்பது. இரண்டு, அந்தத் தனியார் மயமாக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து Electoral Bonds மூலமாகக் கோடிகோடியாக ஆளுங்கட்சிக்கு வழிப்பறி செய்வது.

கலீல் ஜிப்ரான்: புரிகிறது. ஆனால், இந்த நிறுவனங்களில் இடஒதுக்கீடு இல்லாமற்போவதில் பிராமணர்களுக்கு என்ன ஆதாயம்? தனியார் நிறுவனங்களில் போட்டித்தேர்வு மூலம் பணிக்கு ஆளெடுப்பது கிடையாதே?

பெரியார்: தவறு. இந்தியாவில் சமூக அமைப்பும் அரசியல் அமைப்பும் பன்னெடுங்காலமாகச் சதுர்வர்ண முறைக்கு ஆட்பட்டதாகத்தான் இருந்து வருகிறது. எனவே, பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமானபின் அங்கே உள்ள பணியிடங்களில் பிராமணர் ஆதிக்கம்தான் ஏகபோகமாக இருக்கும். இந்தியாவில் உள்ள அயல்நாட்டுத் தூதரகங்களில் (இஸ்லாமிய நாட்டுத் தூதரகங்களைத் தவிர) பணியாற்றும் இந்தியர்கள் பெரும்பாலும் பிராமணர்களே. இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் கதை இது என்றால், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் உள்ள பணியிடங்கள் பற்றிய கதையே வேறு. மற்ற அலுவலகங்களில் ‘D’ பிரிவு வேலைக்குச் செல்ல மறுக்கும் பிராமணர்கள், வெளிநாடுகளில் உள்ள இந்திய நாட்டுத் தூதரகங்களில் உள்ள ‘D’ பிரிவுப் பணியிடங்களை மட்டும் தாங்களே மிகப்பெருமளவில் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

போட்டித் தேர்வு இல்லாத நிலையில் எப்படி இவர்கள் இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் உள்ள பணியிடங்களில் சேர்ந்தார்கள் என்பதையம், யாருடைய பரிந்துரையின் பேரில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும் அறிந்தோமானால், பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒன்றிய அரசுத் துறைகளுக்கும் இந்தியாவில் உள்ள பிறநாட்டுத் தூதரக நியமனங்களுக்கும் உள்ள தொடர்பு விளங்கும். அது மட்டுமல்ல. அரசு அதிகார மையங்களில் பிராமணர்களின் பங்கு அதிகமாவதன் விளைவாக, இந்தியாவில் உள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்களிலும் பிராமணர்களுக்கே வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும்.

கலீல் ஜிப்ரான்: அது எப்படி?

பெரியார்: அரசுத் துறைகளில் பிராமணர் ஆதிக்கம் இருக்கும்போது, தமது தொழில் தொடர்பாக அவர்களிடம் சென்று நிற்கவேண்டிய தனியார் நிறுவனங்கள் பிராமணர்களையே தமது பணிக்கு நியமனம் செய்யவேண்டிய தேவை உருவாகும்; அந்தத் தேவை மெல்லிய அழுத்தம் (subtle pressure) மூலம் உருவாக்கப்படும். வருமானவரித்துறை, வணிகவரித்துறை, கணக்காயர்கள் (Chartered Accountants) தொழிலதிபர்கள் ஆகியோரது தொடர்பை அறிந்தோமானால் இதுபற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, மைதீன் புகையிலை என்று ஒரு நிறுவனம் தமிழ் நாட்டில் கும்பகோணம் என்ற ஊரில் இருந்தது. இது இ.எஸ். எம். பக்கீர் முகமது என்ற இஸ்லாமியர் ஒருவரின் தந்தை ஷேக் மைதீன் என்பவரால் உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனம். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு முறை (1980) சட்டமன்ற உறுப்பினராகவும், இருமுறை (1984 & 1989) பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் . இவருடைய இந்த நிறுவனத்தில் சார்நிலைப்பணியிடங்களில் (subordinate services) அதாவது எழுத்துப்பணியிடங்களில், பணியாற்றியவர்களில் மிகப் பெரும்பான்மையோர் பிராமணர்களே. எவ்வாறு இப்படி நிகழ்ந்தது என்பதற்கு வரலாறு தெளிவாக விடை சொல்லும். இது ஒரு மிகச்சிறிய எடுத்துக்காட்டே. ஆனால், இது ஒரு மிகப்பெரிய சமூகவியல் ஆய்வுக்கான ( A major subject for sociological research) அம்சமாகும்.

கலீல் ஜிப்ரான்: அது என்ன அவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்குத் தகுதியான வரலாறு?

பெரியார்: அரசுப் பணிகளில் இருப்பவர்கள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தங்களிடம் வரும் தொழிலதிபர்களிடம் சொல்லித் தங்களுக்கு வேண்டியவர்களை அந்த நிறுவனங்களில் பணிக்குச் சேர்த்துவிடுவது இயலும். இதன் காரணமாகவே, அரசுப் பணிகளில் எந்த ஒரு சாராரும் அதிக அளவில் நியமிக்கப்படக் கூடாது. ஆயினும், பிராமணர்கள் இன்று இந்திய ஒன்றிய அரசுப் பணிகளை அபரிமிதமாக ஆக்கிரமித்துள்ளனர். இதன் விளைவாகத் தனியார் நிறுவனங்களிலும் அவர்களுடைய ஆட்களையே நியமனம் செய்யவைத்து அங்கும் கூட தங்கள் வல்லாதிக்கத்தை விரிவு செய்யமுடிகிறது. மேலும், தங்கள் கேள்விக்கு விடையாக சில அண்மைக்கால வரலாற்று நிகழ்வுகளைக் காட்டினாலே, பழங்கால வரலாறு பற்றித் தாங்கள் அறிந்துகொள்ள முடியும்.
அது 1850 ஆம் ஆண்டு. வெள்ளையர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. அன்றைய சென்னை மாகாணத்தில் (இன்றைய ஒடிஷா மாநிலத்தில்) உள்ள கஞ்சம் (Ganjam) என்ற மாவட்டத்தில், அந்த வெள்ளை வணிகர்களுக்காகப் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் பிராமணர்கள். இவர்கள் வழக்கம்போல பல செயல்களை ஏறுக்குமாறாகச் செய்கிறார்கள். இவர்களின் இச்செயல்பாடுகளைப் பலகாலமாகக் கண்ட வெள்ளையர்கள் 1850 ஆம் ஆண்டு முதல் பிராமணர்களைப் பணியமர்த்துவதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கத் தொடங்குகிறார்கள்.

1853ஆம் ஆண்டு நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 49 பிராமணர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தில் துணை சிரஸ்தாராக வேலை பார்க்கும் கூட்டூர் வெங்கட ரமணீயன் என்பவரின் உறவினர்கள். அந்த ஆட்சியரைத் தனது வழிப்படி தனது விருப்பத்துக்கு ஏற்றபடி ஆட்சி நடத்த இவர்கள் விடுவதில்லை. அந்த ஆட்சியரையே தங்கள் கூட்டுச் செயல்பாட்டால் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதாவது தமிழ்நாட்டில் ஆடு-புலி ஆட்டம் என்ற விளையாட்டில் புலிகளை நகர முடியாமல் ஆடுகள் கட்டிவிடும். அதுபோலத்தான், வெள்ளை அதிகாரியிடம் பவ்யமாக இருப்பதுபோல் நடித்துக்கொண்டே, அவரைச் செயல்படவிடாமல் பிராமண ஊழியர்கள் ஒன்று சேர்ந்து சதி செய்து தடுத்து, தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்வது வழக்கமாக இருந்தது. இதே கைவண்ணத்தைத்தான் அவர்கள் 1853 ல் நெல்லூர் மாவட்ட ஆட்சியரிடமும் காட்டினர். ஆனால் அவர் இந்த பிராமணச் சதி விவரங்களை அன்றைய சென்னை மாகாண ஆளுநர் ஹாரிஸ் கவனத்துக்கு எடுத்துச் சென்றார்..
அதன் விளைவாக, 1854 ஆம் ஆண்டில் ஆளுநரின் ஆணைப்படி வருவாய் வாரியம் (Board of Revenue) ஒரு ஆணை பிறப்பிக்கிறது. அதன்படி அரசுப்பணியிடங்களுக்கு ஆட்களை நியமிப்பதில் மாவட்டாட்சியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முக்கியமான பதவிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பலதரப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரை நியமிக்கவேண்டும் என்றும், குறிப்பாக, தாசில்தார்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிற சாதிகளைச்சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும், அது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இருக்கும் இரண்டு தலைமை வருவாய் அலுவலர்கள் பதவிகளுக்குப பணியமர்த்தும் போது அவர்கள் கட்டாயமாக வெவ்வேறு சாதியினராய் இருத்தல் வேண்டும் என்றும் தெளிவாக விரிவாகக் குறிப்பிடப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. “Collectors should be careful to avoid the monopoly by members of a few influential families in appointments. Endeavour should always be made to divide the principal appointments in each district among several castes. A proportion of the Tahsildars in each district should belong to castes other than the Brahmins, and it should be a standing rule that the two chief revenue servants in the Collector’s Office should be of different castes” -(P. Maran -Evolution of Communal Representation in Tamil Nadu 1920- 2005 – Shodhganga)

அடுத்து 1904 ஆம் ஆண்டில் இருந்த நிலைமையைக் காண்போம். 1854க்குப் பிறகு ஐம்பது ஆண்டுகள் ஆகியும் நிலைமை மாறவில்லை. 1904 ஆம் ஆண்டு பிராமணர்கள் 70% ம் பிராமணரல்லாதார் 30% ம் அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கின்றனர். இந்நிலை மாறவேண்டும் என அரசு நினைக்கிறது. எனவே, வருவாய் வாரியமானது ஒரு ஆணை (GO 792 Revenue 25.07.1904) பிறப்பிக்கிறது. அதில், 70 விழுக்காடு இருக்கும் பிராமணர்கள் 50 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும்வரை பிராமணர்களைப் பணியமர்த்த வேண்டாம் என்று தெரிவிக்கிறது. அதுபோல, கூட்டுறவுத்துறையில் பணியமர்த்துவதிலும், பிராமணரல்லாத இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இந்தியக் கிறிஸ்தவர்களுக்கும், யுரேசியர்களுக்கும், உரிய பங்கைத் தரவேண்டுமென அத்துறையின் பதிவாளருக்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. ஆனால், கூட்டுறவுத்துறைப் பதிவாளர் அதுபற்றிக் கவலை கொள்ளவில்லை. அந்த ஆணையைச் செயல்படுத்தாமல் விட்டுவிடுகிறார். இந்தப் பிரச்சினை ஆறு ஆண்டுகள் கழித்து, 1910ல், பெரிதாகிறது. அரசின் தெளிவான ஆணையை ஏன் அந்தப் பதிவாளர் செயல்படுத்தவில்லை என்று விளக்க்ம் கேட்டு அவருக்குக் கடிதம் செல்கிறது. அத்துடன், பிராமணர்களின் பங்கு 50 விழுக்காடாகக் குறையும் வரை பிராமணர்களைப் பணியமர்த்தாமல் பிராமணரல்லாதாரைப் பணியமர்த்துமாறு ஆணை மறுபடியும் (GO 2357, Revenue, 16.07.1910.) பிறப்பிக்கப்படுகிறது. ( For more: P. Radhakrishnan – Economic and Political Weekly – 31.07.1991).

மாவட்ட நிர்வாகத்தில், பிராமணர்களின் அபரிமிதமான நியமனம் பற்றி திருச்சி மாவட்ட ஆட்சியர் சொல்லும்போது, “நேர்மையற்ற முறையில் செயல்படுகின்ற, அல்லது உள்ளறுப்பு வேலைகளில் ஈடுபடும் பிராமணர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மற்ற பிராமணர்கள் கூட்டு சேர்ந்து கொண்டு தவறு செய்தவர்களைக் காப்பாற்றுகின்றனர். தவறான செயல்களுக்கு இவர்கள் இப்படிக் கூட்டு சேர்ந்து கொள்வதை முறிக்க முடியவில்லை, பிராமணரல்லாதோர் அல்லது முஸ்லிம்களாக இருந்தால் இந்த நிலை இருக்காது. ஏனெனில், அவர்களுக்கு நண்பர்கள் குறைவு, எதிரிகள் அதிகம்.” என்றார். The Trichinopoly collector conveyed that “in the event of any underhand and dishonest practices obtaining among the subordinates… brahmins form a clique which it is very difficult to break down” and that “non brahmins and Mussalmans can be more easily found out, because they have fewer friends and more enemies”. (P. Radhakrishnan – Economic and Political Weekly – 31.07.1991).
கஞ்சம் மாவட்ட ஆட்சியரோ, “பிராமணர்களுக்கு இவ்வாறு ஏகபோக வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்களுக்குக் கீழ் உள்ள அரசுப்பதவிகளில் அவர்களுடைய சாதிக்காரர்களை வைத்தே நிரப்புகிறார்கள்” என்று குறிப்பிட்டார். (The Ganjam Collector recorded that “if brahmins get such a monopoly, the subordinate posts will be filled with their relations or caste-men” (ibid.). இன்றைய அதிகார அமைப்பின் முக்கியப் புள்ளியான RAW (Research and Analysis Wing) என்ற உளவுத்துறையில் இன்றும் இவ்வாறே பிராமணர்களைக்கொண்டு பணி நியமனம் செய்யப்படுவதும், இதன் காரணமாக இந்தத் துறை Relatives and Associates Wing என்று டெல்லி பத்திரிகையாளர்களால் அழைக்கப்படுவதும் இந்த உண்மையை RAW அமைப்பின் முன்னாள் தலைவரான சங்கரன் நாயர் தனது அறிக்கையிலும் (Nair Committee Report) இந்த நேரத்தில் ஒப்புநோக்கத்தக்கது. (Ref: India Today – 15.03.1984).
1911 ஆம் ஆண்டு, இவ்வாறு பிராமணர்கள் அதிகமாக அரசுப்பணிகளை ஆக்கிரமித்துள்ள விவரம் பற்றி எல்லா அரசுத்துறைகளிலும் விசாரித்து அறிக்கை தருமாறு அரசாங்கம், வருவாய் வாரியத்தைப் பணித்தது (G.O.Ms. No.1763, (Revenue (Confidential) Department), 9th June 1911.). அப்போது, பிராமணர்களில் பல பிரிவினர் (sects) உள்ளனர் என்றும் எனவே அவர்கள் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதலாம் என்று வருவாய் வாரியம் அறிக்கை கொடுத்தது. ஆனால், அரசாங்கம் ஏமாறவில்லை இந்த அறிக்கையால். பிராமணர்களில் பல பிரிவினர் இருந்தாலும், அவர்களுக்குள்ளே பிணக்குகளும் போட்டிகளும் (rivalries)இருந்தாலும், மற்ற சாதியினரைப் பணியமர்த்துவது என்றால் அதனை எதிர்க்க பிராமணர்களில் உள்ள அனைத்துப் பிரிவினரும் ஒன்றாகக் கூடிக்கொள்வார்கள் என்று கூறி, பிராமணரல்லாதாரை உரிய அளவில் பணியமர்த்துமாறு, அரசாங்கம் வருவாய் வாரியத்திற்கு அறிவுறுத்தியது.

1913 ஆம் ஆண்டு அரசாங்கப் பணியில் இருந்த 128 மாவட்ட நீதிபதிகளில், 93 பேர் பிராமணர்கள், 25 பேர் பிராமணரல்லாதோர் என்று, அன்றைய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன்பு
அலெக்சாண்டர் கார்டூ (Alexander Cardew) என்ற அன்றைய ஐ.சி.எஸ். அலுவலர் அறிக்கை தாக்கல் செய்தார். இவர் 1885 முதல் 1919 வரை சென்னையில் பணியாற்றியவர். 29.03.1919 முதல் 10.04.1919 வரை சென்னை மாகாணத் தற்காலிக ஆளுநராகவும் (Acting Governor) இருந்தார். இவர் கொடுத்த அறிக்கையின் காரணமாக, பிராமணரல்லாதோரின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, பின்னாளில் மாண்டேக்- செம்ஸ்போர்டு அறிக்கை (Report on Indian Constitutional Reforms) தயாரித்த, எட்வின் மாண்டேகைச் (Edwin Samuel Montague) சந்தித்து, பிராமணரல்லாதோருக்கு அரசுப்பணிகளில் உரிய பங்கைத்தரவேண்டும் என்று கோரினர்.

1918 ல் உள்ள நிலைமையைப் பாருங்கள். அன்றைய மைசூர் அரசாங்கத்தில் திவானாக இருந்த சர். விஸ்வேஸ்வரய்யா என்பவர் அரசுப் பணியிடங்களை பிராமணர்களை வைத்து நிரப்பி மைசூர் அரசாங்கத்தையே பிராமணக் குடியேற்றமாக (Brahmin colony) மாற்றினார். இது தொடர்பாக விசாரணை செய்ய அன்றைய மைசூர் அரசர் கிருஷ்ணராஜ உடையார், மேனாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி லெஸ்லி மில்லர் தலைமையில் ஒரு குழு (Leslie Miller Committee) அமைத்தார். அந்தக்குழுவில், பிற்படுத்தப்பட்டோர் சார்பாக எம். முத்தண்ணாவும், இஸ்லாமியர் சார்பாக நவாஸ் குலாம் அகமது கலமியும், பிராமணர்கள் சார்பாக சி. ஶ்ரீகாந்தேஸ்வர ஐயரும் எம். சி. ரங்க ஐயங்காரும், வொக்கலிகர் சமுதாயம் சார்பாக எச். சென்னையாவும், லிங்காயத்துக்கள் சார்பாக எம். பசவையாவும் இடம்பெற்றனர். இந்தக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து, இது அரசுப் பணியில் தகுதியையும் திறமையும் பாதிக்கும் என்று கூறி அன்றைய திவான். விஸ்வேஸ்வரய்யா தானாகப் பதவி விலகினார். 1919 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தக் குழு கொடுத்த அறிக்கை, அன்றைய அரசுப்பணியில் பிராமணரின் ஏகபோகப் பிடியை படம்பிடித்துக் காட்டியது.

1922ஆம் ஆண்டிலும் நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் மாறாததால், 1854 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் சாராம்சமே மறுபடியும் ஒரு ஆணையாக வெள்ளையர் அரசால் பிறப்பிக்கப்பட்டது. (G.O. No. 658, Public dated, 15.08.1922, KRA, Kozhikode – http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/13208/8/08_chapter%201.pdf – (Pages 50 – 52).

இப்போது D.M. Ravi Prasad & G.Bhadru ஆகியோர் தாங்கள் பதிப்பித்துள்ள Eradication of Caste and Birth of New Humanity என்ற நூலில் தந்துள்ள சில விவரங்களைப் பார்த்தீர்களானால், வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் உயர்நிலைப் பதவிகளில் 3% மட்டுமே இருந்த பிராமணர்கள் வெள்ளையர்கள் போன பிறகு 70.20% க்கு அந்தப் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்ற உண்மை தெரியவரும்.
வெள்ளையர் வெளியேறியதற்குப்பின் இன்று வரை இந்தியாவில் நீதித் துறைகளில் பிராமணர் ஆதிக்கம் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி மிக அபரிமிதமாக இருந்து வருகிறது. இந்த அட்டவணை கூட அந்த உண்மையை விளக்கும்.

இவ்வாறு நீதித்துறையில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தையும் அதன் விளைவாக நீதிவழங்கலில் கூட ஒடுக்கப்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதையும், 11.12.2014ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் ஆவணப்படுத்தியது.(“The National Commission for Scheduled Castes had in its report dated 11.12.2014 observed that “Unfortunately, the composition of the higher judiciary shows that judges continue to be drawn from the very sections of society that are infected with the age old social prejudices. In most of the cases, social inhibitions and class interests of such judges do not permit them full play of their intellectual honesty and integrity in their decisions. Communal bias is a premise which is recognised even by the criminal procedure code wherein specific provisions are there showing the possibility of communal bias in the judiciary.”(Page 1 & 2 – NCSC – A Report on Reservation in Judiciary). இருந்தாலும் கூட உச்சநீதிமன்றத்தில் இயங்கும் நிர்வாக அமைப்பின் ஒரு பகுதியான கலீஜியம் (Collegium) என்றழக்கப்படும் தேர்வுக்குழு இதையெல்லாம்பற்றி இன்றுவரை எந்தக் கவலையும்படவில்லை. இன்று வரை நீதித்துறைப் பணிநியமனங்களில் பிராமணர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிக்கொண்டுதான் இருக்கிறது.

ஆகக்கூடி, 1850ஆம் ஆண்டுக்குப் பின்னர் 170 ஆண்டுகளாகியும் கூட, இந்தியாவில் அதிகார மையங்களில் பிராமணர்களின் ஆதிக்கம் சற்றும் மாறாமல்தான் இருக்கிறது. இந்த உண்மையை இன்றைய RAWஅமைப்பில் பணி நியமனம் செய்யும் முறையும், சென்னை ஐ.ஐ.டி. யில் பணி நியமனம் செய்யும் முறையும் தெளிவாகக் காட்டுகின்றன. அந்தச் சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநராக இருந்த பி.வி. இந்திரேசன் எவ்வளவு உக்கிரமாக வக்கிர உணர்வோடு மண்டல் அறிக்கையை எதிர்த்துப் பரப்புரை செய்தார் என்பதையெல்லாம் காணும்போது, பிராமணீயம் என்பது எப்படிக் காலங்காலமாகப் பிராமணரல்லாதோரைத் தொடர்ந்து இழிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது என்பதை அனைவரும் உணர முடியும். (Ref to some of his many articles in The Hindu dated 28.09.1994 titled “Me too Mandal” and the article published on 11.11.1995 titled “Equality for all Citizens”).
இந்தச் சூழ்நிலையில்தான், முன்னரே அதிகாரமையங்களை தங்கள் பங்குக்கு உரிய அளவைவிட பன்மடங்கு அதிகமாக ஆக்கிரமித்திருக்கும் பிராமணர்கள், இன்னும் மேலதிகமாகத் தங்களுக்குப் பங்குவேண்டும் என்ற பேராவலால் உந்தப்பட்டு, தங்களுக்குள் தகுதி குறைந்தவர்களுக்கும் அரசுப் பணிகளில் சேர வகைசெய்யும்படி, ஜனவரி 2019ல் EWS இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்துள்ளனர். இதற்கான 124 ஆவது அரசியற்சட்டத் திருத்த வரைவில் ‘not adequately represented’ என்ற (16(4) ல் உள்ள) தொடரை ஏன் எடுத்தனர் என்பது பற்றி பாராளுமன்ற விவாதத்தின் போது யாரும் கேட்கவுமில்லை, சொல்லவுமில்லை. இவ்வாறு உரிய விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்ட அந்த வரைவுதான் 103 ஆவது அரசியற் சட்டத்திருத்தமாக இரண்டே நாளில் அடாவடியாக நிறைவேறியது. (பெரியார் பேசி முடிக்கவும் அம்பேத்கார் பேசுகிறார்)

அம்பேத்கார்: இந்திய இராணுவத்தில் தங்களவு உடல் வலிவால், உண்மையான திறனால் பணியிற் சேர்ந்த சீக்கியர்களை, அவர்கள் மக்கள் தொகையில் 4% மட்டுமே இருந்து கொண்டு இராணுவத்தில் 10% சேர்ந்தது நாட்டுக்கு ஆபத்து என்று கருதி, சாமர்த்தியம் என்று நினைத்துக்கொண்டு சொல்விளையாட்டுக்களில் இறங்கி, நாட்டின் மொத்த மக்கட்தொகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்த மாநில மக்கட்தொகையின் விகிதாச்சார அளவினை மீறாத அளவுக்கு மட்டுமே, மக்கள் இராணுவத்தில் சேரலாம் என்று 1983ல் சட்டம் கொண்டுவந்த ஒன்றிய அரசு, மொத்த மக்கள் தொகையில் 5% மட்டும் இருந்து கொண்டு, முக்கியமான அரசு அதிகாரமையங்களில் 90% க்குமேல் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது, இந்நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என்ற உண்மையை இன்றுவரை ஒத்துக்கொள்ள மறுக்காது நடிக்கிறது. ஏனெனில், இந்திய ஒன்றிய அரசு 1947 முதல் பிராமண அலுவலர்களின் கைப்பாவையாகவே செயல்பட்டுத் தனது தலையாய கடமை பிராமணர்கள் நலனை மட்டும் காப்பதே என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகையில் தங்கள் விகிதத்திற்கு அதிகமாக பிராமணர்கள் அதிகாரமையங்களில் இருப்பது தொடர்ந்து அவர்கள் பிராமணரல்லாத மக்களுக்கு எதிரான செயல்களில் மேலும் அதிகமாக ஈடுபட வழிவகுக்கும். இந்தியாவில் பிராமண வல்லாதிக்கம் தொடர்வது உலக நன்மைக்கே எதிரானதாக அமையும். அதிகாரமையங்களில் இருக்கும் பிராமணர்களின் பெருநிலைச் சமூகவியற் செயல்பாடுகள் (macro-sociological activities) அவர்களின் வர்ண நலத்தைப் பாதுகாப்பதாக மட்டுமே அமையும் என்பது வரலாறு தொடர்ந்து மறுபடியும் மறுபடியும் நிரூபித்து வரும் உண்மையாகும்.

சங்காராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி முதல் பிராமணர்களின் தலைவர்கள் பேசும் பேச்சுக்களிலிருந்தே, அவர்கள் தங்களையும் இந்து மதத்தில் உள்ள பிராமணரல்லாத மற்றவர்களையும் எவ்வாறு ‘நாம் Vs. அவர்கள்’ (We Vs. They) என்று பிரித்து வைத்துச் செயல்படுகின்றனர் என்பதையும், பிராமணரல்லாதோர் எந்தத் தொழிலிலும் சிறந்திருப்பதை அவர்கள் விரும்புவதில்லை என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது., அனைத்திந்திய பிராமணர் சங்கத்தின் பொதுச்செயலாளரான கேப்டன் மணி ஐயர் சென்னையில் 19.01.1986ல் பேசியதை, இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். (“Although the people of our community possess large number of scooters, cars and motor-cycles, we do not have shops to repair those vehicles. We have to go only to the others for repairing them. The people of our community must therefore open large number of mechanic shops. The people of our community must get their vehicles repaired only by them.” – Captain Mani Iyer, General Secretary, All India Brahmins Association, during their conference held on 19.1.1986 at Chennai). எனவே, அனைத்துச் சாதியினருக்கும், அனைத்து மதத்தினருக்கும், மொத்த மக்கள் தொகையில் அவரவர் விகிதப்படி இடப்பங்கீடு தருவதுதான் இந்திய அரசை பிராமணர்கள் உட்பட அனைத்து மக்களின் நலமும் காக்கும் அரசாகப் பணிசெய்யவைக்க ஒரே வழி.

கலீல் ஜிப்ரான்: இம்மாதிரியான விகிதாச்சாரப்பங்கீட்டிற்கு (Proportionate representation) பிராமணர்கள் ஒத்துக்கொள்வார்களா?

அம்பேத்கார்: நிச்சயமாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தீவிரமாக எதிர்ப்பார்கள். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு, அவ்வளவு நேர்மையானவர்களாக இருந்தால் “not adequately represented” என்ற தொடரை எடுத்துவிட்டு EWS இட ஒதுக்கீட்டுக்கான 16 (6) ஆம் பிரிவைக் கொண்டுவந்திருப்பார்களா என்ன? அவர்கள் எதிர்ப்பார்கள்தாம். ஆனால், பிராமணர்களே ஒரு காலத்தில் விகிதாசாரப் பங்கீடு கேட்ட வரலாற்றை அவர்களுக்கு நினைவுபடுத்தினால் போதும். வேடிக்கையாக இருக்கும்.
(ஆர்வம் தாளமுடியாமல் காந்தியடிகள் குறுக்கிடுகிறார்)

காந்தியடிகள்: அது என்ன வரலாறு? எப்போது நடந்தது அவ்வாறு?

அம்பேத்கார்: இட ஒதுக்கீட்டுச் சட்டம் என்பது ஒன்றிய அரசுத்துறைப் பணிகளிலும் ஒன்றிய அரசு நிறுவனங்களிலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டமாகும். அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலம் முழுமையும் அந்த மாநிலத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில், அந்த இட ஒதுக்கீட்டு முறை மாநில அரசுத்துறைப் பணிகளிலும் மாநில அரசு நிறுவனங்களிலும் ஒரே மாதிரியாகக் கடைபிடிக்கப்படும்; கடைபிடிக்கப்படவேண்டும். இதுதான் சட்டம்.

ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள டேராடூன் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பிராமணர்கள் அதிகமாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறைவாகவும் இருந்தனர்; இருக்கின்றனர். இந்த மாவட்டங்களுக்கு உத்தராஞ்சல் பகுதி (Uttranchal Area) என்று பெயர். இந்த மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து உத்தராஞ்சல் மாநிலம் என்று பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை 1936 முதல் அவ்வப்போது எழுந்து அடங்கிக்கொண்டிருக்கும். ஆனால், அக்கோரிக்கை 1990ல் மண்டல் அறிக்கை சட்டமானபின் தீவிரமாக்கப்பட்டது. இக்கோரிக்கையை பாரதீய ஜனதா கட்சி வெகுதீவிரமாக ஆதரித்தது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலச் சட்டமன்றத்தில் 12.08.1991 அன்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில் 1992 நவம்பர் மாதத்தில் மண்டல் தீர்ப்பு வந்தது முதல், குறிப்பாக 1994 மார்ச் மாதத்தில் அன்றைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் மணடல் அறிக்கை தொடர்பான அரசாணையை அமல் செய்தவுடன், அந்த உத்தராஞ்சல் மாவட்டங்களில் உள்ள பிராமணர்கள் தங்களது மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தனர். மண்டல் அறிக்கையின்படி 27% பணியிடங்களைப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை தங்கள் மாவட்டங்களைல் நடைமுறைப்படுத்துவதை அவர்கள் ஏற்க மறுத்தனர். உத்தராஞ்சல் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள், மொத்த மக்கட்தொகையில் 2.5 விழுக்காட்டினர்தாம் என்றும் என்றும் அவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினால், அது தங்களின் வேலைவாய்ப்புக்களைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் வாதிட்டனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் உத்தராஞ்சல் மாவட்டங்களில், மக்கள் தொகையில் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அந்த அளவுக்கு மட்டுமே (Proportionate Representation) அவர்களுக்கு அந்த மாவட்டங்களில் உள்ள அரசுப்பணியிடங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துத் தீவிரமாகப் போராடினர்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி 10. 8. 1994 அன்று டெல்லியில் ஒரு கூட்டம் நடத்தியது. அதில் அக்கட்சியின் தலைவர் அத்வானி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான வாஜ்பாயி, அக்கட்சியின் முன்னாள் தலைவரான ஜோஷி, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் முதலானோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் இது தொடர்பாகப் பேசுமாறு, பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த கல்யாண் சிங் ஏவி விடப்பட்டார். அவர் பேசும்போது, உத்தராஞ்சல் மாவட்டங்களைத் தனி மாநிலமாக அறிவிப்பதில் அரசாங்கம் தாமதம் செய்வதைக் கண்டித்தார். இந்த தாமதம் இந்த மலைப்பகுதியில் பல பிரச்சனைகளுக்குக் காரணம் ஆகிறது என்று அவர் கூறினார். தமது கட்சி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது என்றும் ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மொத்த மக்கட்தொகையில் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அந்த அளவுக்கு மட்டுமே அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைத்தான் ஆதரிக்கிறது என்றும் கூறினார் (“This delay is the root cause of many problems in the hill areas”, Mr kalyan Singh said. He pointed out that his party supported the contention of the anti-reservationists that since the population of the backward classes in the hills areas was around 2.5 per cent, the job reservation order for the OBCs should not be implemented there. He clarified that the BJP did support reservation for the backward classes but only to the extent of the percentage of their population. If this was not done the youth in the hill areas would be denied access to the few jobs available creating tremendous problems. Mr Kalyan Singh said that the job reservation order should not be implemented in the Uttaranchal for Uttarakhand districts.”- ‘BJP backs ant-quota stir in U.P’ – The Hindu 11.08.1994).

இறுதியாக, 15.08.1996ல்தான் அன்றைய தலைமை அமைச்சர் தேவேகௌடா உத்தராஞ்சல் பகுதிகளைத் தனியாகப் பிரித்து தனி மாநிலமாக அமைக்கப்படும் என்று அறிவித்தபின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 09.11.2000 முதல் உத்தரகாண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் உருவானது. இன்று அந்த உத்தரகாண்ட மாநிலத்தில் 13% இடஒதுக்கீடு மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. (DOPT O,M. No. 36017 /1/2004 – Estt (Res) dated 05.07.2005 and O,M. No. 36017 /1/2007 – Estt (Res) dated 04.07.2007). இன்றும் உத்தரபிரதேசத்தோடு இணைந்த பகுதியாக் உத்தரகாண்ட் மாவட்டங்கள் இருந்திருந்தால், அந்தப்பகுதியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 27% ஆகத்தான் இருந்திருக்கும். ஆனால், பிராமணர்கள் தங்கள் நலனுக்காக சில மாவட்டங்களைப் பிரித்துத் ஒரு தனி மாநிலத்தையே உருவாக்கி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை27 இல் இருந்து 13 குறைத்துக்கொண்டனர்.
காந்தியடிகள்: இந்த நிகழ்வுகளிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் பிராமணர்கள் காலங்காலமாக எப்படி செயல்பட்டார்களோ அதே மாதிரிதான் இப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மைதான். அவர்கள் அனைத்திந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய மக்கட்தொகையின் அளவுக்கு 52% இடஒதுக்கீடு வழங்காமல், 27% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று தெரிந்தும் அதனையும் எதிர்க்கின்றனர். உத்தரகாண்ட் பகுதியில் அந்த 27 விழுக்காடே அதிகம் என்றுகூறி அதனையும் குறைக்கின்றனர். (புன்னகையுடன் கூறுகிறார்). பிராமணர்கள் மாறுவதில்லை.

கலீல் ஜிப்ரான்: என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. ஏன் புன்னகைக்கிறீர்கள்?

காந்தியடிகள்: (மீண்டும் புன்னகைக்கிறார்) பிராமணர்கள் தங்கள் செயல்பாடுகளில் அன்றுமுதல் இன்று வரை ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.தங்களுக்கு எங்கெங்கே எப்படி வசதியாக இருக்குமோ அங்கெல்லாம் அப்படிச் சட்டங்களையும் சூழ்நிலைகளையும் மாற்றிக்கொள்வார்கள். சட்டங்கள் அவர்களுக்காக. அவர்கள் சட்டங்களுக்காக இல்லை.
அன்றைய சட்டப்படி, தங்களுக்குள் யாராவது கடல்கடந்து சென்றால் சாஸ்திர்ங்களைக் காட்டிச் சாதிப்பிரஷ்டம் செய்துகொண்டிருந்த பிராமணர்கள், இன்று, தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், அந்தச் சாத்திரங்களை மூட்டைகட்டிக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவருவதும் பிராமணர் என்ற நிலையை இழக்காதது மட்டுமின்றி உலக பிராமணர் கூட்டமைப்பு என்று (Weld Brahmin Federation) என்று ஒன்றையும் உருவாக்கி உலகெங்கும் வர்ண பேத வெறியைப் பரப்புவதும் அரசியல் செய்வதுமாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் தங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பதால் தாங்கள் உருவாக்கிய அதே சாஸ்திரங்களைக் காட்டி, பிராமணரல்லாதவர்கள் கோயில்களில் பூசகர்களாகப் பணியாற்றுவதைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று சமஸ்கிருதத்தை சூத்திரர் படிப்பதைத் தடுத்தனர்.இன்று சமஸ்கிருதம் அனைவரும் படிக்கலாமென்கின்றனர். அன்று அவர்கள் பசுமாட்டைக் கொன்று ருசியாகப் புசித்தனர். இன்று மாட்டைக்கொல்லக்கூடாது என்று கூறுகிறார்கள்.
அவர்களுடைய சாஸ்திரங்களில் எவை புனிதமானவை எவை குப்பையில் வீசப்படவேண்டியவை, எப்போது அவை புனிதம் பெறுகின்றன, எப்போது அவை குப்பையாகின்றன என்பதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமையை அவர்களே வைத்துக் கொண்டுள்ளார்கள். அதுபோலவே, இடஒதுக்கீட்டு விவகாரங்களிலும், அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்றால்,, விகிதாச்சார பங்கீடு வேண்டும் என்று கூறுவார்கள்; மாறாக அவர்களுக்கு எதிராக இருக்கும் என்றாள் விகிதாச்சார பங்கீட்டை எதிர்ப்பார்கள். இவற்றுக்கெல்லாம், கல்யாண்சிங் போன்ற சுயநலவாதிகள் பலர் அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட சுயநலவாதிகளைத் தங்கள் தலைவர்கள் என்று நம்பும் பிராமணரல்லாத மக்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது.

பிராமணர்கள் சதுர்வர்ண முறையை ஒழித்துக்கட்ட முன்வரும் வரையில், அனைத்துச் சாதியினருக்கும், அனைத்து மதத்தினருக்கும் அவரவர் சாதி, மதத்து மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதே அளவுக்கு அரசுப்பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பங்கீடு (Proportionate Representation) கொடுத்தால்தான் இந்தியா உருப்படும் என்பது நன்றாகத் தெரிகிறது. அதுவரை இந்தியாவில் மக்களாட்சி முறை இருக்காது. சதியும் சூழ்ச்சியும் நிறைந்த மனுநீதிக்கால, சாணக்கியன் கால அரச பயங்கரவாத ஆட்சிதான் (State Terrorism) நடக்கும். எனவே, இக்கால இந்திய மக்களாவது விகிதாச்சாரப் பங்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வெல்லவேண்டும் என்றும், அதன் மூலம் இந்தியாவில் வர்ணபேதம் காற்றில் கரைந்து, சாதிக்கொடுமை இல்லாத நல்லாட்சி நடக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

அம்பேத்கார்: உண்மைதான். இந்தியாவில் அரசுப்பணியிடங்களில் முழுமையாக விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தினால்தான், இந்தியாவில் உண்மையான மக்களாட்சி முறை நிலவத் தொடங்கும்.. அது நல்லாட்சியாகவும் இருக்கும். இந்தக் கோரிக்கையை எதிர்ப்பதற்கு யாருக்கும் எந்த முகாந்திரமும் கிடையாது. விகிதாச்சாரப் பங்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் ஆங்காங்கே தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் முழுக்க முழுக்கத் தவறானவை. இதற்குக் காரணம் உண்மையறியாத சில நீதிபதிகளின் நோக்கு (Outlook). இரண்டாவது, அரசாங்கத்தாலும் பிற வழக்காடிகளாலும் பல உண்மைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நடக்கும்போது நீதிபதிகள் முன் வைக்கப்படாமை.

காந்தியடிகள்: எந்த உண்மைகள் அவ்வாறு நீதிபதிகள் முன் வைக்கப்படவில்லை?

அம்பேத்கார்: ஒன்றிய அரசாலும் பல மாநில அரசுகளாலும் விகிதாச்சாரப் பங்கீட்டு முறை முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது என்ற உண்மை தெளிவாக உச்சநீதிமன்றத்தின் முன்பு, அரசுத் தரப்பாலும் சரி, மற்றவர்களாலும் சரி, எடுத்து வைக்கப்படவேயில்லை.

காந்தியடிகள்: நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறதே!

அம்பேத்கார்: இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. எடுத்துக்காட்டாக, DOPT ஆணையின்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அட்டவணைப் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு 1%, அட்டவணைச் சாதியினருக்கு 21%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஆகும். ஆனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் அட்டவணைப் பழங்குடியினருக்கு 3%, அட்டவணைச் சாதியினருக்கு 18%, பிற்படுத்தப்பட்டோருக்கு 13%. இந்த மூன்றையும் கூட்டினாலே, 34% தான் வரும். இதிலிருந்தே, இந்த மூன்று பிரிவினருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு கொடுத்திருப்பது, விகிதாச்சாரப்பங்கீட்டின் அடிப்படையில்தான் என்பது தெரிகிறதா?

காந்தியடிகள்: நன்றாகத் தெரிகிறது. அது மட்டுமல்ல. உத்தரப்பிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் அட்டவணைப் பழங்குடியினருக்கும் அட்டவணைச் சாதியினருக்கும் கொடுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடும் விகிதாச்சாரப்பங்கீட்டின் அடிப்படையில்தான் என்பதும் புரிகிறது. மேலும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, உத்தரகாண்டில் அந்தமாநில மக்கட்தொகையில் அவர்களின் விகிதப்படி முழுமையாக இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது என்பதும், உத்தரப்பிரதேசத்தில் கொடுக்கப்பட்டுள்ள 27% இடஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்றம் கண்டுபிடித்த 50% உச்சவரம்பு என்ற தவறான அடிப்படையில்தான் என்பதும், அதனால்தான், உத்தரப்பிரதேச மக்கட்தொகையில் OBC மக்கள் 50 விழுக்காட்டினராக இருந்தும் கூட 27% மட்டும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. அது மட்டுமல்ல, இந்தப் பின்னணியில் காணும்போது பிராமணர்களுக்கும் மற்றையோருக்குமான 10% EWS இட ஒதுக்கீடு என்பது எந்த வகையிலும் நியாயமில்லாதது என்பதும் தெரிகிறது.

அம்பேத்கார்: உண்மை. உத்தரகாண்ட் மாநிலத்தில் இவ்வாறு முன்னமேயே விகிதாச்சாரப் பங்கீட்டு முறை நடைமுறையில் வந்துவிட்டது என்பது அனைவருக்குமே தெளிவாகும். பஞ்சாப் மாநிலத்தில் 29% பட்டியல் சாதியினருக்கும் 12% பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டியல் பழங்குடியினருக்கு அந்த மாநிலத்தில் இடஒதுக்கீடு கிடையாது. இதிலிருந்து இந்த இரண்டு பிரிவினருக்கும் அந்த மாநில மக்கள் தொகையில் உள்ள விகிதாச்சார அளவுப்படிதான் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும், மொத்த (29+12=41) இடஒதுக்கீடும் 50% வரம்பைத் தொடக்கூட இல்லை என்பதும் புலனாகும்.
அடுத்து, இந்த அட்டவணையைப் பாருங்கள். இதில் சில மாநிலங்களில் உள்ள நிலைமை பற்றி மட்டுமே ஒரு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. இந்த விவரங்களே, இடஒதுக்கீட்டை ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் விகிதாச்சாரப்படி நிர்ணயித்துக்கொண்டுள்ளன என்றும் இதிலிருந்தே விகிதாச்சாரப் பங்கீடு என்பது அரசியற்சட்டத்திற்கு விரோதமானது அல்ல என்பதும், உச்ச நீதிமன்றம் தேவையின்றி 50% உச்சவரம்பைக் கொண்டுவந்து திணித்துள்ளது என்பதும் புலனாகும்.
மேலும் அருணாச்சலம் (6), உத்தரகாண்ட் (14), மேற்கு வங்காளம் (17) ஆகிய மூன்று மாநிலங்களிலும் பட்டியலினத்தவர் மற்றும் பிற்பட்டோர் ஆகியோரின் இட ஒதுக்கீடு மொத்தமாக சேர்த்தும் 50% வராத போது கூட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 27% விழுக்காட்டை விடக் குறைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்கூட Proportionate Representation Theory செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதும், இந்த மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் அவர்களின் விகிதாச்சாரம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு, அந்த அளவுக்கு மட்டுமே, இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவரும்.
இவற்றிலிருந்து என்ன உண்மை தெரிகிறது என்றால், இன்று நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு மாநிலத்தில் அதிகமாக இருப்பார்களேயானால் அவர்களுடைய இட ஒதுக்கீடு 27%க்கு மேல் போகாது. ஆனால் அவர்கள் எந்த மாநிலங்களிலாவது மிகவும் குறைந்த அளவில் இருப்பார்கள் என்றால், அவர்களுடைய இட ஒதுக்கீடு அந்த மாநிலங்களில் அவர்களுடைய மக்கள் தொகையின் அளவுக்கு மட்டுமே உள்ளதாகக் குறைக்கப்பட்டுக் கொடுக்கப்படும் என்பதுதான். ஆனால், பிராமணர்களுக்கோ, அவர்கள் முன்னமேயே அரசுப்பதவிகளில் தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிக அளவில் பணியிலிருந்தாலும் கூட மேலதிகமாக 10% இடங்களை அவர்கள் பிடித்துக்கொள்வதற்கு EWS இட ஒதுக்கீடு வழிவகுக்கிறது. இதற்குமட்டும் உச்சநீதிமன்றம் கண்டுபிடித்த 50% உச்சவரம்பு தடையாகாது என்ற காவிகளின் வியாக்கியானம் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

காந்தியடிகள்: இந்த 50% விழுக்காட்டு உச்சவரம்பு எப்போது உச்சநீதிமன்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டது?

அம்பேத்கார்: 28.09.1962 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

காந்தியடிகள்: எப்படி?

அம்பேத்கார்: 1960ஆம் ஆண்டு அன்றைய மைசூர் அரசானது, டாக்டர் ஆர் நாகனா கௌடா என்பவர் தலைமையில் ஒரு குழு அமைத்து (Report of the Mysore Backward Classes Committee with Dr. R. Nagana Gowda as its Chairman submitted on July 31, 1962) பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு பணித்தது. அவர் 31.07.1962 அன்று கொடுத்த அறிக்கையில், 68% பிற்படுத்தப்பட்டோருக்குத் தரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து ‘உயர்’சாதியினர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றம் 28.09.1962 அன்று அளித்த தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆனால் இம்மாதிரியான சிறப்பு விதிகளுக்கு ஒரு வரம்பு இருக்க வேண்டும் என்றும் அது எவ்வளவு என்று தன்னால் சொல்ல முடியாது என்றும் ஆனாலும் அந்த சிறப்பு விதிகள் பொதுவாக 50 விழுக்காட்டுக்குக் கீழேதான் இருக்க வேண்டும் என்று சொல்லலாம் என்றும், 50 விழுக்காட்டிற்கு கீழே எந்த அளவில் இருக்கலாம் என்பதை ஆங்காங்குள்ள நிலைமைகளுக்கு ஏற்ப தீர்மானித்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறியது. (“In this matter again.. we are reluctant to say definitely what would be a proper provision to make. Speaking generally and in a broad way, a special provision should be less than 50%; how much less than 50% would depend upon the relevant prevailing circumstances in each case.” – M. R. Balaji And Others Vs. State Of Mysore on 28 September, 1962 ). இதுதான் தொடக்கம். குத்துமதிப்பாக அந்த நீதிபதிகள் மிகவும் தயக்கத்துடன் சொன்ன சொந்தக்கருத்துதான் அந்த 50% உச்சவரம்பு.

ஆனாலும், அதன்பின் 16.11.1992 ல் வந்த மண்டல் தீர்ப்பில் உச்சநீதிமன்றமானது, அரசியல் சட்டத்தில் விகிதாச்சாரப் பங்கீட்டுக்குத் தடையில்லை என்ற உண்மையை ஒத்துக்கொண்டபோதும்கூட , அரசியற்சட்டத்தை மீறிக் கொண்டுவரப்பட்ட இந்த 50% உச்சவரம்பை இறுக்கி நிலைப்படுத்தி மக்கள்தொகையில் 54% இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் 27% க்கு மேல் இடஒதுக்கீடு பெறாமற் செய்து, அதிலும் மேல்தட்டுக் கொள்கை (Creamy Layer Theory) என்ற ஒன்றையும் புதிதாகப் புகுத்தி வைத்தது. (“True as observed by Krishna Iyer, J., in Soshit Karamchari (supra) and Chinnappa Reddy, J., in Vasantha Kumar (supra) that there is no consitutional provision restricting reservation to 50% but with profound respect, the debates in the Constituent Assembly, the provisions in the Constitution do not support the construction of Article 16(4) as empowering government to reserve posts for backward class of citizens in proportion to their population” – Para 677 of Mandal Judgment of the Supreme Court).
அடுத்து 19.10.2006 ல் வந்த நாகராஜ் வழக்குத் தீர்ப்பில் (M. Nagaraj Vs. Union of India & Others) உச்சநீதிமன்றம், மூன்று முக்கியமான கட்டளைகளைப் பிறப்பித்தது. அதன்படி, அரசுக்கு எவ்வளவுதான் தேவையான காரணங்கள் இருந்தாலும் இடஒதுக்கீடு என்பது (1) 50% உச்சவரம்பை மீறக்கூடாது என்றும் (2) மேல்தட்டுக் கொள்கையை இல்லாமலாக்கக்கூடாது என்றும் (3) இடஒதுக்கீட்டை எல்லையில்லாமல் காலங்காலத்திற்குத் தொடரக்கூடாது என்றும் கட்டளையிட்டது. (“It is made clear that even if the State has compelling reasons, as stated above, the State will have to see that its reservation provision does not lead to excessiveness so as to breach the ceiling-limit of 50% or obliterate the creamy layer or extend the reservation indefinitely.)

ஆனால், தற்போதைய EWS இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பில், இந்த விளக்கங்களையெல்லாம் உரிய காரணங்கள் தராமல் புறந்தள்ளிவிட்டு (Ref: Para 90 in Page 136 to Para 95 in Page 146 of the judgment in Janhit Abhiyan Vs. UOI on 07.11.2022) ‘உயர்’ சாதியினருக்காகச் கொண்டு வந்த 2019 ஆம் ஆண்டுச்சட்டம் Vertical Reservation ஐ 60%க்குக் கொண்டு சென்றது சட்டப்படி சரிதான் என்று அதே உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. விந்தைதான்.

இவ்வாறாக, இன்று நாட்டை ஆளும் வாய்ப்புக் கிடைத்த காவிக் கொடியோர் கூட்டம் 124 ஆவது அரசியற்சட்டவரைவு மூலம் பாராளுமன்றத்தில் செய்த இரண்டு நாள் அடாவடிப்புரட்சியானது அவர்களுக்கு இப்போதைக்கு ஆதாயத்தைத் தந்துள்ளது. இந்த 103 ஆவது அரசியற்சட்டத் திருத்தச் சட்டம் இந்தியாவில் காவிகளின் சதுர்வர்ண அமைப்பை நிலைநிறுத்தி பிராமணர்களின் இனவெறிக்கொள்கையை மிகவும் கடுமையாக எதிர்காலத்தில் செயல்படுத்தி பிராமணரல்லாதாரை நிரந்தர அடிமைகளாக்கிவைக்க வழிவகுக்க அவர்களுக்கு உதவக்கூடிய தலையாய ஆயுதமாகும் (Chief weapon to enforce the Brahmanical policy of Apartheid). எனவே, பிராமணரல்லாதோர் இந்த உண்மைகளை அறிந்து நியாயத்திற்குப் புறம்பான 50% உச்சவரம்பை முறியடித்து அனைத்து மக்களுக்கும் அவரவர் சாதி, மதத்தின்படி தங்களுக்குரிய விகிதாச்சாரப் பங்கீட்டினை (Proportionate representation) நடைமுறைப்படுத்தச் செய்து, உயர்நிலை அரசுப் பணிகளிலும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய மேலமை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிப் பதவிகளிளும் தங்களுக்கு உரிமையான பங்கைப் பெறவேண்டும். இது அவர்களுடைய பிறப்புரிமை. இவ்வுரிமை இந்திய நாட்டில் நிலைப்படுத்தப்படும்போதுதான் இந்தியா ஒரு நாகரிகச் சமுதாயம் வாழும் நாடாக மாறும்.

காந்தியடிகள்: உண்மைதான். பிராமணரல்லாதார் விழித்தெழுந்து போராடவேண்டிய தேவை முன்பு எப்போதும் இருந்ததைவிட இன்று மிக அதிகமாக எழுந்துள்ளது. அவர்கள் அவ்வாறு செய்யாவிடில், இந்தியாவில் அந்தக்காலத்தில் இருந்ததைவிடக் கொடிய, மிகக்கொடிய, மனுநீதிக் காலக் கொடுங்கோலாட்சி எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்பது உறுதி. அந்த எதிர்காலம் என்பது ஏதோ வெகு தொலைவில் உள்ள காலம் அல்ல; மிக அண்மையில் உள்ள காலம் என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் உணர வேண்டும். அவ்வாறான கொடுங்கோலாட்சி செய்வதற்காகவே, இன்றைய காவிக் கொடியோர் கூட்டம் தொடர்ந்து பல திரைமறைவுச் சதிகள் செய்து கொண்டு காத்துக் கிடக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு அவர்களுக்கு உரிய பங்கை மறுத்து, சரிபாதி மறுத்து, பிராமணர்களுக்கு மட்டும் அபரிமிதமாக அதிகாரமையங்களில் இடஒதுக்கீடு செய்யும் இந்த EWS இட ஒதுக்கீடு ஒரு கொடுமையான எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட சட்டம்தான் என்று நன்றாகத் தெரிகிறது. விகிதாச்சாரப் பங்கீட்டுக் கோரிக்கை சட்டப்படியும் நியாயப்படியும் சரியான கோரிக்கையே. அக்கோரிக்கையை நோக்கி அவர்கள் போராடும் போராட்டம் வெற்றி பெறட்டும்.
(காந்தியடிகள் பேசிமுடித்ததும் திருவள்ளுவர் கையை உயர்த்துகிறார். அனைவரும் அவரை நோக்குகின்றனர்)

திருவள்ளுவர்: அன்பர்களே! நமது அறிக்கை, இந்தியாவின் இன்றைய நிகழ்வுகள் பற்றியும், இவற்றின் பின்னணி பற்றியும், இவற்றின் தீர்வுகள் பற்றியும் நாம் ஆய்ந்தறிந்த விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நமது அமர்வின் தொடக்கத்திலேயே நான் சொன்னது உஙகளுக்குத் தெரியும். இன்று இந்த அவையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நாம் அறிந்த விவரங்களின் அடிப்படையில், நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள இரண்டாவது கருத்து, ஒரு தீர்மானமாக, இதுவரை இந்தச் சிந்தனையாளர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் வரையப்பெற்றுள்ளது. இவ்வரைவினைப். படிக்கிறேன், கேளுங்கள்!

“இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் சதுர்வர்ண அமைப்பினால் பிறப்பின் அடிப்படையில் பிரித்துவைக்கப்பட்டு இன்றுவரை பிராமணர்களால் நடைமுறைப்படுத்தப்படும் அந்த அமைப்பின் காரணமாகத் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல, இன்று சட்டமாக்கப்பட்டுள்ள EWS இடஒதுக்கீடு என்பது பிராமண வல்லாதிக்கத்திற்கும் கொடுங்கோலாட்சிக்கும் மட்டுமே வழிவகுக்கும் என்பதையும், இச்சட்டம் அன்று பிராமணர்கள் உருவாக்கிய சதுர்வர்ண அமைப்பின் புது வடிவம்தான் என்பதையும் இந்த அவை பதிவு செய்கிறது. இன்றைய உலகில் மக்களாட்சிமுறை நடைமுறையில் உள்ள நாகரிகம் மிக்க பல நாடுகளில் உள்ளதைப்போல, இந்திய மக்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு, இந்திய மக்களில் அனைத்துப் பிரிவினரும் அதிகாரமையங்களில் தத்தமக்குரிய பங்கினைப் பெறும் வகையில் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை (Proportionate Representation) இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் நடைமுறைப் படுத்தியாகவேண்டும் என்றும். அவ்வாறாக விகிதாச்சாரப் பங்கீட்டு முறை இந்தியாவில் நடைமுறைக்கு வரும் வரை, அந்நாட்டில் உள்ள அதிகார மையங்கள் அனைத்தும் பலசாதிப் பலமதத்தார் கொண்ட (Multi-Religious, Multi-Caste and Multi-Party committees of Members of Parliament) பாராளுமன்றக் குழுக்களின் கண்காணிப்பில் இயங்கவேண்டும் என்றும் இந்த அவை தீர்மானிக்கிறது” (தீர்மான வரைவைப் படித்து முடித்ததும் திருவள்ளுவர் பேசுகிறார்)
இதுவே இந்த அவையின் தீர்மானமாக முன்மொழியப் பெறுகிறது. அவையின் முடிவு என்ன? (அவையோர் அனைவரும் கரவொலி எழுப்பி அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கின்றனர்.)

திருவள்ளுவர்: நல்லது. இந்தக் கருத்து நமது இரண்டாவது தீர்மானமாக, நம் அனைவரின் மனமொத்த கருத்தாக ஏற்கப்பெறுகிறது.
(அவையினர் அனைவரும் மீண்டும் கையொலி எழுப்பி தங்கள் மகிழ்வைத் தெரிவிக்கின்றனர். தன்முன் வைக்கப்பெற்ற தீர்மானப் பதிவேட்டில் திருவள்ளுவர் கையொப்பமிடுகிறார். பின்னர் அனைவரையும் புன்னகையுடன் ஒரு முறை பார்த்துவிட்டுச் சொல்கிறார்.)
“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்”
– தொடரும்

கட்டுரையாளர்: வேயுறுதோளிபங்கன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *