(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கூடிய அவையில் இற்றை அரசியல் பற்றி ஆய்வு நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப் போராட்டக் களத்தில் பிராமணரல்லாத மக்களைத் தங்களது நலனுக்காகப் பயன்படுத்திக்கொண்ட பிராமணத் தலைவர்கள், 1947க்குப் பிறகு எவ்வாறு பிராமண வல்லாதிக்கத்திற்கு வழிசெய்து கொண்டிருக்கின்றனர் என்று அவையோர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது திருவள்ளுவர் மாக்ஸ் முல்லரைப் பேசுமாறு அழைக்கிறார்.)
மாக்ஸ் முல்லர்: ஐயனே! பிராமணர்களின் சூத்திர துவேஷம் பற்றி கடந்த அமர்வுகளிலே விரிவாக அனைவரும் பேசினார்கள். பிராமணர்களின் இந்த துவேஷ உணர்வு என்பது 3500 ஆண்டுக் கால வரலாறு கொண்டது. ரிக் வேத காலத்தில் மத்திய ஆசியாவில் இருந்து இங்கு வந்த ஆரியர்கள், அதாவது பிராமணர்கள், இங்கிருந்த மக்களை எவ்வளவு தூரம் இழித்தும் பழித்தும் பேசினார்கள் என்பது ரிக் வேதத்திலே தெளிவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள் இங்கிருந்த மக்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. அவ்வளவு தூரம் அவர்களுக்கு இந்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இருந்தது. “நாம் எல்லாப் பக்கங்களிலும் தஸ்யுக்களால் சூழப்பட்டிருக்கிறோம். அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. அவர்கள் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்முறைகள் வேறாக இருக்கின்றன. அவர்கள் மனிதர்களே அல்லர். அவர்களைக் கொன்று விடு. அந்த தஸ்யு இனத்தினை அழித்திடு” (“We are surrounded on all sides by the Dasyus / They do not perform sacrifices / They are unbelievers / Their practices are all different / They are not men / O! Destroyer of Foes! / Kill them, destroy the Dasa race.” -Rig Veda I. –1008.) என்று இந்திரனிடம் கோரிக்கை வைத்து, இங்குள்ள மக்களைத திட்டித் தீர்த்தனர். இதுபோன்று, ரிக் வேதத்தில் உள்ள பல பகுதிகள் பிராமணர்கள் வெளியில் இருந்து இந்தத் துணைக் கொண்டதற்குள் நுழைந்தவர்கள்தாம் என்பதை நன்றாகக் காட்டி நிரூபணம் செய்வதோடு, அவர்கள் எந்த அளவுக்கு இந்நாட்டு மக்கள் மீது பகைமை உணர்ச்சி கொண்டிருந்தார்கள் என்பதையும் விளக்குகின்றன.
கலீல் ஜிப்ரான்: அன்று அவ்வாறு இருந்திருக்கலாம். இப்போது அப்படி இருக்கத் தேவை இல்லையே?
(அப்போது திருவள்ளுவரின் இசைவுபெற்று வ.உ.சி.பேசுகிறார்)
வ.உ.சி: இன்று அப்படி இருக்கத் தேவை இல்லைதான். 1950ல் அரசியற்சட்டம் பிரிவு 14 படி அனைவரும் சமம் என்றும், பிரிவு 17 படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும் உலகுக்கே பேரிகை கொட்டிப் பிரகடனம் செய்துவிட்டபிறகு, அப்படி இருக்கவேண்டிய தேவை இல்லைதான். ஆனால் பிராமணத் தலைவர்கள் மனம் திருந்தவில்லையே. அந்தப் பகைமை உணர்ச்சியை இன்றளவும் நீட்டித்து வளர்த்துக் கொண்டு தானே வந்திருக்கிறார்கள்? பிராமணர்கள் மட்டுமே பூசகர்களாகப பணியாற்றும் கோயில்களில் பிராமணரல்லாத மக்களை பூசகர் பணிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக இவர்கள் இப்போது செய்யும் அநியாய செயல்கள் மற்றும் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்துமே, பிராமணர்கள் இன்று வரை பிராமணரல்லாத மக்கள் மீது கொண்டுள்ள பகைமை உணர்ச்சியைக் குறைத்துக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் பிராமணரல்லாத எங்கள் மேல் பிராமணர்கள் காட்டிய பகையுணர்வு மிகக் கொடுமையானது. இது தொடர்பாக நான் பலமுறை எடுத்துக் காட்டி, பிராமணர்களின் கொடும்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டுமாயின் பிராமணரல்லாத மக்கள் என்ன செய்யவேண்டும் என்று விரிவாகச் சொல்லிவைத்துவிட்டுத்தான் இங்கே வந்தேன்.
காலில் ஜிப்ரான்: என்ன சொல்லிவைத்துள்ளீர்கள்?
வ.உ.சி: நான் “அரசியல் பெருஞ்சொல்” என்ற தலைப்பில் சேலத்தில் 05.11.1927. அன்று நடைபெற்ற மூன்றாவது அரசியல் மாநாட்டில் பேசிய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகளை எடுத்துச் சொல்கிறேன். எனது உரையிலிருந்து, இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னரே பிராமணரல்லாதாருக்கும் பிராமணருக்கும் இருந்த பகைமை எத்தன்மைத்தானது என்ற உண்மை உங்களுக்குத் தெரியவரும். அந்த மாநாட்டில் நான் சொன்னவையாவன:
“பிராமணரும் பிராமணரல்லாதாரும்’ என்று கூறும் போது யான் முக்கியமாகச் சென்னை மாகாணப் பிராமணரையும் பிராமணரல்லாதவரையுமே குறிக்கிறேன். ‘பிராமணரல்லாதார்’ எனும்போது, முகமதியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், தாழ்த்துகின்ற ஹிந்துக்கள் என்னும் நான்கு வகுப்பினர்களையும் குறிக்கின்றேன்.” (பக்கம் 91- வ.உ.சி-யின் நூற்கோவை -தொகுப்பாசிரியர் செ.திவான் – அருணவிஜய நிலையம் – சென்னை ). “பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையும் பகைமையும் வளர்ந்து இப்போது துண்டு விட்டுப் போகும்படியான நிலைமைக்கு (Breaking point) வந்துவிட்டது. உண்மைத் தேசாபிமானிகள் இப்பொழுது விரைந்து முன்வந்து பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மைக்கும் பகைமைக்குமுரிய உண்மை காரணங்களை கண்டு பிடித்து ஒழிக்காத விஷயத்தில், நாம் சுய அரசாட்சி என்ற பேச்சையும் கூட விட்டு விடும் படியான நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டுவிடும் என்று யான் அஞ்சுகிறேன்.
நமது தேசத்தின் வடமாகாணங்களில் ஹிந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டையையும் நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்று நமது மாகாணத்தில் உள்ள சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன வெட்கக்கேடு!
நமது மாகாணத்தில் நம்முடன் வசித்து வரும் பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டிருக்கிற ஒற்றுமையின்மையையும் பகைமையையும் நீக்கி அவ்விரு வகுப்பினர்களுள்ளும் ஒற்றுமையை உண்டு பண்ண மாட்டாதார் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டைகளையும் நீக்கி அவ்விரு வகுப்பினர்களுள்ளும் ஒற்றுமையை உண்டாக்க போகின்றனறாம்! இது புதுமையினும் புதுமை!
பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைகளை உண்டு பண்ணுகின்றவர் இராஜாங்கத்தாரே என்றும், சுதேச மன்னர்கள் அரசாட்சிக்கு உட்பட்ட நாடுகளில் ஜாதிச் சண்டைகள் இல்லை என்றும், நம் தேசத்துக்குச் சுய அரசாட்சி வந்து விட்டால் ஜாதிச் சண்டைகள் எல்லாம் நீங்கிவிடும் என்றும் சிலர் சொல்லுகின்றனர். இந்த மூன்றும் முழுப்பொய்.
பிராமணர் பிராமணரல்லாதார் சண்டைகளுக்கு காரணம் ஒன்றுமே இல்லையெனின், ராஜாங்கத்தாராலோ மற்றவராலோ அவர்களுக்குள் சண்டையை உண்டு பண்ண முடியாது. சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளிலும் ஜாதிச்சண்டைகள் இல்லாமல் இல்லை; அவற்றிலும் தென்னாடுகளில் பிராமணர், பிராமணரல்லாதார் சண்டைகள் இருக்கின்றன.
சுய அரசாட்சிக்கு முதல் வழி நமது தேசத்தினர்களெல்லாம் ஒற்றுமைப்படுதல். உண்மை அவ்வாறிருக்க, சுய அரசாட்சி வந்துவிட்டால் நம் தேசத்தினர்களுள் ஒற்றுமை உண்டாகிவிடும் என்று சொல்வது நீந்தக் கற்றுக் கொண்டால் நீரில் இறங்கலாம் என்பது போலாம். ஒருவன் நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக்கொள்ளப் போவதில்லை. அது போல் நம் தேசத்தார்களெல்லாம் ஒற்றுமைப்படாமல் நாம் சுய அரசாட்சி அடையப்போவதில்லை.
தேசாபிமானிகளென்றும் தேசத்தலைவர்களென்றும் சொல்லப்படும் பிராமணர்களில் சிலர் தமது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் நடத்தைகளிலும் பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைகள் இங்கு இல்லாதது போல காட்டிக் கொண்டு வருகின்றனர். இவர் இவ்வாறு செய்வதின் நோக்கம் இவரது ஜாதியாருக்கும் மற்றை ஜாதியார்களுக்கும் உள்ள சண்டைகளைப் பிற மாகாணத் தேசாபிமானிகளும் தேசத்தலைவர்களும் அறிவார்களாயின் தம்மை மதிக்க மாட்டார்கள் என்ற நினைப்போ அல்லது அச்சண்டைகளுக்குரிய காரணங்களை விசாரித்து நீக்கத் தலைப்படுவார்களாயின் தம் ஜாதியார்களே இச்சண்டைகளுக்குக் காரணஸ்தர்கள் என்பதை அறிந்து கொள்ளவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை.
இவர் நோக்கம் எதாயினும் ஆகுக. நமது தேச ஒற்றுமைக்கு ஒரு பெரும் நோயாய்த் தோன்றியுள்ள பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைகளை ஒழிப்பதற்குரிய வழிகளை நாம் சிந்திப்போமாக. “நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் நம் பெரியார். பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைநோயோ அளவு கடக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது என்பது இம் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஆண் மகனுக்கும் பெண் மகளுக்கும் நேரில் தெரிந்த விஷயம். ஆதலால் அச்சண்டைகளைப் பற்றியோ, அவற்றின் தற்கால நிலைமையைப் பற்றியோ நாம் ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
அச் சண்டைநோயின் முதல் (காரணங்கள்) கூடப் பிராமணரல்லாதார்களில் பலர்க்கும், பிராமணர்களிற் சிலர்க்கும் நன்றாகத் தெரியும் அக்காரணங்களைத் தெரியாமல் இருக்கிற பிராமணரல்லாத சிலரும் பிராமணர் பலரும் பிற மாகாணத் தேசாபிமானிகளும் தேசத்தலைவர்களும் தெரிந்துகொள்ளும் பொருட்டு இங்குக் கூறுகின்றேன்.
- பிராமண ஜாதியார்களெல்லாம் மேலானவர்கள் என்றும் மற்றை ஜாதியார்களெல்லாம் கீழானவர்கள் என்றும் தங்கள் சொல்லாலும் செயலாலும் காட்டி மற்றை ஜாதியர்களை இழிவுபடுத்தி வருகிறார்கள்.
- பிராமணர்களே பிராமணரல்லாதவர்கள் கடவுளை அடைவதற்குரிய வழியைக் காட்டும் குருமார்களென்றும் பிராமணரல்லாதார்களின் குடும்பங்களில் நிகழும் சகல மங்கல அமங்கலச் சடங்குகளையும் நடாத்துவிப்பதற்குரிய ஆச்சாரியார்கள் என்றும் கூறிப் பிராமணரல்லாதார்களின் பொருள்களை அவர்கள் தாய் வயிற்றில் உற்பவித்த காலம் முதல் அவர்கள் இறக்கும் வரையிலும், அவர்கள் இறந்தபின் அவர்கள் மக்கள் உயிரோடு இருக்கும் காலம் முடியும் வரையிலும், கவர்ந்து கொண்டு வருகிறார்கள்
- சர்க்கார் உத்தியோகங்களையும், ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களையும், பொது ஸ்தாபன உத்தியோகங்களையும் வகிப்பதற்குரிய அறிவும் திறமையும் உரிமையும் தங்களுக்கே உண்டென்று சொல்லி அவ்வுத்யோகங்களையெல்லாம் தாங்களே கொண்டு அவற்றின் சம்பளம், அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றையெல்லாம் அபகரித்து வருகின்றார்கள் பிராமணர்கள்.
இம் மூன்றும் பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைநோயின் முதல்கள் (காரணங்கள்). இக்காரணங்களை ஒழிப்பதற்குரிய வழிகளை ஆராய்வோமாக. ..…… பிராமணர்கள்….. தாங்கள் மேலான ஜாதியார் என்றும் தமிழர்கள் எல்லாம் கீழான ஜாதியார்கள் என்றும் நடத்தையிலும் காட்டினார்கள். சிறிது காலத்தில் அவர்கள் மேலான ஜாதியாராகவும் தமிழர்களுக்கு கீழான ஜாதியார்களாகவும் பலரால் கருதப்பட்டார்கள். தமிழர்களின் முன்னோர்களால் தங்களுக்கு ஏற்பட்ட இழிவு (என்ற) நோய் தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கூறிய மருந்தால் நீங்கிப் போயிற்று. அந்த மருந்தையே தமிழர்கள் கைகொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம். அதாவது பிராமணரல்லாத ஜாதியார்களில் ஒவ்வொருவரும் தாம் பிராமணருக்கு மேற்பட்ட ஜாதியார் என்று கருதி, பிராமணர் மற்றை ஜாதியார்களை நடத்துகிறது போலப் பிராமணர்களை நடத்தி வருவாராயின், தம் ஆரோப இழிவு நோய் போய்விடும் இந்நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டுவதில்லை.
இரண்டாவது காரணம், மேற்கண்ட படி தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டு பிராமணர்கள் மற்ற ஜாதியர்களுக்கு விதித்த அபராத தண்டனை. அத்தண்டனையை மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணரல்லாதார்கள் கையிலேயே இருக்கிறதைக் கண்டுபிடித்து நம் திருவாளர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் அவர்கள் பிராமணரல்லாதார்களுக்குக் கூறி அதனை உபயோகிக்கும்படி செய்து கொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதார்கள் ஊக்கத்துடன் உறுதியாகச் செலுத்தித் தங்கள் அபராத தண்டனையை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைக்குரிய மூன்றாவது காரணத்தைப் போக்குவதுதான் மிகக் கஷ்டமான காரியம். இக்காரண விஷயத்தைப் பற்றி தேசத்தலைவர்கள் என்று சொல்லப்படுகிற பிராமண சகோதரர்களில் சிலர் பேசுகிற பேச்சுக்களைப் பார்க்கும் பொழுது மிக வியப்புத் தோன்றுகிறது. இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரைப் பலப்படுத்துகின்ற (பிராமணரல்லாதார் அடங்கிய) ஒரு கட்சியாரை ஒழிப்பதற்காகக் காங்கிரஸ்காரர்கள் இரட்டையாட்சிக்கு உதவி புரிய வேண்டியவர்களாயிருக்கிறார்கள் என்று ஒரு பிராமணத் தலைவர் சிலர் தினங்களுக்கு முன் பேசியிருக்கிறார். ஆ! என்ன ஆச்சரியம்!
நமது தேசத்தில் நூற பேர்களுக்கு மூன்ற பேர்களாயிருக்கின்ற நம் பிராமண சகோதரர்கள், நமது தேசத்து இராஜாங்க உத்தியோகங்களில் நூற்றுக்கு 97 வீதமும் அவ்வுத்தியோகங்களில் இந்தியர்கள் பெரும் சம்பளத் தொகையில் நூற்றுக்கு 97 வீதமும் (இக்கணக்கு சிறிது ஏறத்தாழ இருக்கலாம்) அடைந்து வருகிறபோது, பிராமணரல்லாதார்கள் இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரை பலப்படுத்துகின்றார்கள் என்று காங்கிரஸ் தலைவர் என்னும் பிராமணர் ஒருவர் பேசுவாராயின், மற்றைப் பிராமணர்கள் என்னென்ன பேசத் துணிய மாட்டார்கள்?
பிராமணர்கள் நம் தேசத்தில் சிறு தொகையினராயிருத்தலால், தம்முடைய உரிமைகளை மற்ற ஜாதியார்கள் கைப்பற்றிக் கொள்வார்கள் என்ற அச்சத்தால் சுய அரசாட்சியை உள்ளூர விரும்ப மாட்டார்கள் என்றும் அவர்கள் சுய அரசாட்சிக்கு பாடுபடுவது போல் நடிப்பதெல்லாம் தம் உறவினருக்கும் ஜாதியாருக்கும் இராஜாங்க உத்தியோகங்கள் வாங்கிக் கொடுக்கும் பொருட்டே என்றும் பிராமணரல்லாதார் சொல்வது உண்மைதானோ என்று யானும் இப்பொழுது ஐயம் உறுகின்றேன்
இராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாருக்கும் அந்தந்த ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதேயில்லை என்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல் நாம் சுய அரசாட்சி அடையப்போவதே இல்லை என்பதும் மனித அறிவுடைய எவர்க்கும் தெளிவாக விளங்கத்தக்கவை.
இவ்வுண்மைக்கு மாறாகப் பேசுகின்றவர் யாராயினும் மனித அறிவில்லாதவர் அல்லது ‘பகலை இரவென்று கூறும் பாதகர்’ என்று நாம் கொள்ளக் கடவோம். பிராமணர்களும் பிராமணரல்லாதார்களும் ஒத்துழைப்பின் அவ்விரு வகுப்பாரினருள்ளும் இப்போது நிலவும் பகைமையை விரைவில் ஒழித்து ஒற்றுமையை எளிதில் ஏற்படுத்தி விடலாம்.
இவ்வொற்றுமையை உண்டு பண்ணுவதற்காகப் பிராமணரல்லாதார்களுடன் ஒத்துழைக்க பிராமணர்கள் முன் வரவில்லையானால், மேல் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்” என்னும் தலைப்பின்கீழ் யான் கூறியபடி, இப்பொழுது பிராமணர்கள் வகித்துக் கொண்டிருக்கிற உத்தியோகங்களில், பிராமண ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்களுக்கு உரிய உத்தியோகங்களையெல்லாம் இராஜாங்கத்தார் காலி செய்வித்து மற்றை ஜாதியார்களுக்கு அவரவர் எண்ணிக்கை விகிதபடி கொடுக்க வேண்டுமென்று சட்டம் ஒன்று பிராமணரல்லாதார் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி அச்சட்டத்தை ஊர்ஜிதத்துக்குக் கொண்டு வரும்படி இராஜாங்கத்தாரை வற்புறுத்த வேண்டும்.
இராஜாங்க உத்தியோகங்கள் முதலியவற்றில் தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், தாழ்த்துகின்ற ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும் இந்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை விகிதபபடி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், முகமதியர்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும் அடையும்படி நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்… (பக்கம் 101).
மேலும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் அன்று பேசும்போது, அதை நடைமுறைப்படுத்துவது பற்றியும் தெளிவாக்கினேன். நான் பேசியதாவது:,“ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களிலும் புது ஸ்தாபன உத்தியோகங்களிலும் “வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்” சரியாக நிலவும் படி நாம் செய்து விட்டோமென்றால் ராஜாங்க உத்தியோகங்களிலும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் சரியாக நிலவும்படி நம் இராஜாங்க அதிகாரிகள் செய்து விடுவார்கள். இராஜாங்க உத்தியோகங்களில் பெரும்பாலானவற்றை தற்காலம் ஒன்றிரண்டு ஜாதியார்கள் மாத்திரம் கைக்கொண்டிருக்கிறார்கள். அவ்வுத்தியோகங்களை நம் தேசத்தில் உள்ள எல்லா ஜாதியார்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது எவ்வாறு என்று சிலர் வினவுகின்றனர். கவர்மெண்ட் அதிகாரிகள் ஒன்று செய்ய வேண்டும் என்று நினைப்பார்களே ஆனால் அவர்கள் அதனை எப்படியும் செய்து முடித்து விடுவார்கள். அதற்குரிய வழிகள் எல்லாம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இப்பொழுது உள்ள இராஜாங்க உத்தியோகங்களில் எந்தெந்த சாதியார்களுக்கு எத்தனை எத்தனை கொடுக்கப்பட வேண்டும் என்று கணக்கிடப்படுகிறது. அந்த கணக்குப்படி அந்தந்த சாதியார்கள் அத்தனை அத்தனை உத்தியோகங்கள் அடையும் வரையில் காலியாகும் உத்தியோகங்களுக்கு வேறு ஜாதியார்கள் நியமிக்கப்படக்கூடாது என்று கவர்மெண்ட் உத்தரவு ஒன்று பிறப்பித்து ஊர்ஜிதத்துக்குக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் இவ்வுத்தரவு நாம் விரும்பும் பலனை விரைவில் அளிக்கமாட்டாது. மற்றைய சாதியார்களுக்காக என்னென்ன உத்தியோகங்களில் எத்தனை எத்தனை கொடுக்கப்பட வேண்டும் என்று கணக்கிடப்படுகின்றனவோ அத்தனை உத்தியோகங்களையும் இராஜாங்கத்தார் உடனே காலி செய்ய வைக்க வேண்டும்.
அதற்கு இத்தனை வருஷத்துக்கு மேற்பட்டு இன்னின்ன உத்தியோகங்களை வகிக்கின்றவர்கள் உடனே அவ்வுத்தியோகங்களை விட்டு ஓய்வுச் சம்பளம் வாங்கிக்கொண்டு விலகிவிட வேண்டுமென்றும் இத்தனை வருஷத்திற்குட்பட்டு இன்னின்ன உத்தியோகங்களை வகிக்கின்றவர்களெல்லாம் கவர்மெண்ட்டுக்குத் தேவையில்லை என்றும் ஒரு சட்டம் (சட்டசபையிற்) கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அந்தச் சட்டப்படி முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் அவரவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டு காலியான அவ்வுத்தியோகங்களை மற்றை சாதியார்களுக்குக் கொடுத்து விட வேண்டும். இராஜாங்க அதிகாரிகள் அவ்வாறு சட்டம் உண்டு பண்ண முற்படவில்லையானால், சட்டசபையில் உள்ள நமது பிரதிநிதிகள் மூலமாக அவ்வாறான சட்டமொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றும்படி செய்து அந்தச் சட்டத்தை ஊர்ஜிதத்துக்குக் கொண்டு வரும்படி கவர்மெண்ட் அதிகாரிகளை நாம் வற்புறுத்த வேண்டும்.(பக்கம்-91) என்றும் பேசினேன். அத்தோடு, “எனது தேசத்தார்கள் ஆகிய உங்கள் பால் தெரியப்படுத்த வேண்டியவற்றை ஒருவாறு தெரியப்படுத்தி விட்டேன் இனி நமது தேசத்தை ஆள்வோராகிய ராஜாங்கத்தாருக்கு தெரியப்படுத்த வேண்டியவற்றை சுருக்கமாக சொல்லி என் பேச்சை முடித்து விடுகிறேன்”. (பக்கம் 105) என்று அவற்றையும் சொல்லி என் உரையை நிறைவு செய்தேன். இவைதாம் நான் சொல்லிவைத்து வந்தவை!
காந்தியடிகள்: ஆம். சிதம்பரனார் சொன்ன தீர்வு மிகவும் சரியானதே! எனக்குத்தான் அன்றைய நாளில் தெரியாமல் போய்விட்டது.
மறைமலையடிகள்: அதனாலென்ன, உங்களையும்தான் தீர்த்துக்கட்டினார்கள். வ.உ.சி. விஷயத்தில் அவரை வேறுமாதிரி பழி தீர்த்துக் கொண்டார்கள். பிராமணர்கள். தமிழர்கள் மீது கொண்டிருந்த பகைமை உணர்வை அவர் தற்போது சொன்னதுபோலப் பல இடங்களில் பேசிப் பதிவுசெய்திருந்தார். அதனால் அவர் மீது பிராமணர்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்தியா தன்னுரிமை பெற்றபின் சிலகாலம் கழித்து 1960 களில் சிதம்பரனாரின் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் நாளை அனைத்திந்திய நாளாகக் கொண்டாடவேண்டும் என்று தமிழ்நாட்டுச் சிந்தனையாளர் சிலர் தீவிர முயற்சியெடுத்தனர். இந்த விவரம் அறிந்த பிராமணர்கள் வழக்கம்போலச் சதிவேலை செய்து வ.உ.சி. நாள் அனைத்திந்திய அளவில் கொண்டாடப்படாம்ல் தடுத்துவிட்டனர்.
டால்ஸ்டாய்: கேட்கக் கேட்க வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறதே. அப்படி என்ன சதி செய்தனர்?
மறைமலையடிகள்: சிதம்பரனாரின் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் தேதியில் அவரகளில் வேறு யாருடைய பிறந்த நாள் வருகிறது என்று பார்த்தனர். அன்றைய குடியரசுத் துணைத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளும் அதுவேதான் எனக் கண்டு ஆனந்தக் கூத்தாடி அந்த நாளை ஆசிரியர் நாள் என்று அறிவித்துவிட்டு, சிதம்பரனாருக்குப் புறங்கையைக் காட்டினர். 1962 ஆம் ஆண்டு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உயிரோடு இருக்கும்போது அவருடைய பிறந்தநாளை அவசர அவசரமாக ஆசிரியர் நாளாக அறிவித்தனர் நடுவண் அரசு அதிகாரமையத்திலிருந்தவர்கள். அவர் 1975ல் தான் இறந்தார். அவர் நேருவைப் போல மக்களிடையே செல்வாக்கு பெற்றவர் அல்லர். இருந்தாலும் அவருடைய பிறந்தநாள் அவர் உயிரோடு இருக்கும் பொழுது ஒரு கொண்டாடப்பட வேண்டிய நாளாக அறிவிக்கப்பட்டது. அவரை விட அரசியலிலும் அரசியல் பணிகளிலும் வயதிலும் மூத்தவரான ராஜேந்திர பிரசாத் துடைய பிறந்தநாள் டிசம்பர் 3 ஆம் நாள் ஆகும். 1950 முதல் 1962 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் 12 ஆண்டுகள் பணியாற்றிய அவருடைய பிறந்த நாள், அனைத்திந்திய நாளாக இன்று வரை கொண்டாடப்படவே இல்லை. அவரது காலத்தில் துணைக் குடியரசுத்தலைவராக மட்டுமே இருந்த இராதாகிருஷ்ணனின் பிற்ந்த நாள் அவர் உயிரோடு இருக்கும் காலத்திலேயே அனைத்திந்திய நாளாக அறிவிக்கப்ட்டது. ஏன்? இராஜேந்திர பிரசாத்தைவிட இராதாகிருஷ்ணன் நாட்டிற்கு அதிகம் என்ன செய்தார்?
சிதம்பரனாரின் தொண்டை இந்திய மக்கள் அறியச் செய்யாமலிருக்க அதிகாரமையத்தால் இராதாகிருஷ்ணன் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார் என்பது வெள்ளிடைமலை. இதற்காகத்தான், இதுபோன்ற சதி வேலைகளைத் தடுப்பதற்காகத்தான், அனைத்து அதிகார மையங்களிலும் அனைத்துச் சாதியினரும் அவரவர் விகிதாச்சாரப்படி பணியில் இருக்க் வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பெறுகிறது. இன்று காவிக் கொடியோர் கூட்டம் நடத்தும் அரச் பயங்கரவாத ஆட்சியில் இக்கோரிக்கை தீவிரமாக வலுப்பெறுகிறது.
திருவள்ளுவர்: தமிழர்கள் என்று தன்மான உணர்வு பெறுவார்கள் என்ற கேள்வி எழுகிறது. அடுத்த அமர்வில் பேசுவோம். (அவை கலைகிறது) (தொடரும்)