கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் கருமேகம் தான் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்எஸ்எஸ்!
“இந்து ராஜ்யம் என்பது உண்மையாக அமைந்தால் அது இந்த நாட்டின் பேரழிவாக முடியும் என்பதில் சந்தேகமில்லை!” என எச்சரிக்கை செய்தவர் டாக்டர் அம்பேத்கர். அந்த எச்சரிக்கையை உணர்ந்து அதை விளக்குவதற்காக எழுதப்பட்ட ஒரு பெரிய ஆவணப் படைப்பே இந்த நூல்.
ஏ.ஜி. நூரானி – இந்த நூலின் ஆசிரியர். 1930ல் பிறந்தவர். அரசியல் சட்ட நிபுணர், வழக்கறிஞர், புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ஆங்கில தினசரிகளிலும் ஃபிரண்ட் லைன் போன்ற இதழ்களிலும் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதிப் பெயர் பெற்றவர். பல அரசியல் முக்கியத்துவம் பெற்ற நூல்களை எழுதியவர். காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவுக்காகவும், கலைஞர் கருணாநிதிக்காகவும் நீதிமன்றங்களில் வாதாடியவர்.
இந்த நூலின் தேவையையும் முக்கியத்துவத்தையும் தனது முன்னுரையில் விரிவாக எழுதும் போது, “ஆர்எஸ்எஸ் மத நல்லிணக்கத்திற்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை. அது ஜனநாயக ஆட்சி முறைக்கு அச்சுறுத்தல். அதைவிட மோசமாக இந்த தேசம் கட்டமைக்க நினைத்த இந்தியாவிற்கே அது ஒரு அபாயம்”… என அபாய மணியை அடித்து, இந்தியர்களை உலுக்கி எழுப்புகின்ற பாங்கில், ஒரு பொறுப்பான இந்தியராக நூலை எழுதியுள்ளார் – ஏ.ஜி. நூரானி!
“நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் ஆர். விஜயசங்கர். இடதுசாரி சிந்தனையாளர். முற்போக்கு எழுத்தாளர். ஃபிரண்ட் லைன் ஆங்கில இதழின் ஆசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றியவர். பல நூல்களைப் படைத்துள்ளார். ஏராளமான மொழியாக்கம் செய்துள்ளார். அவரை இந்த நூல் மிகப் பெரிய வாசகர் வட்டத்திற்கு கொண்டு சென்று விட்டது.
விஜயசங்கர் தனது முன்னுரையில், “அரசியல் அமைப்பு அல்ல என்று கூறிக்கொண்டே (ஆர்எஸ்எஸ்) ஒரு அரசியல் கட்சியை (பாஜக) தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, தன்னுடைய இந்து ராஷ்ட்ரா கனவை நோக்கி ஆர்எஸ்எஸ் எவ்வளவு விரைவாக நகர்கிறது என்ற வரலாற்றை தமிழ் வாசகர்கள் அறியச் செய்வது தான், இந்த மொழி பெயர்ப்பின் முக்கிய நோக்கம்”…என தெளிவுபடுத்தி, அதற்கான கடமையைச் சரியாக முடித்துள்ளார். பாராட்டிற்குரியவர்!
இந்த நூலை இந்து மத அரசியல் அமைப்புகளின் என்சைக்ளோபீடியா என்று அழைத்தால் மிகையாகாது. ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி மற்ற அமைப்புகள் பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆர்எஸ்எஸ்ஸின் தாய் அமைப்பு முதல் பேரன் அமைப்பு வரை விவரங்கள் கிடைக்கின்றன.
ஆர்எஸ்எஸ்ஸின் தாய் நிறுவனம் இந்து மகா சபையை (HMS) 1907ல் லாலா லஜபதி ராய் பஞ்சாபில் தோற்றுவித்தார். ஹெட்கேவர் தலைமையில் 1925ல் நாக்பூரில் துவக்கப்பட்டது ஆர்எஸ்எஸ் (RSS). ஷியாமா பிரசாத் முகர்ஜி 1951ல் ஜனசங்கை (JS ) தோற்றுவித்தார்.
ஆர்எஸ்எஸ் முயற்சியால் 1964ல் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) துவக்கப்பட்டது. வாஜ்பேயும் அத்வானியும் 1980ல் பாரதிய ஜனதா கட்சியை (BJP) துவக்கினார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத் முயற்சியால் 1984ல் பஜ்ரங் தள் (BD) துவக்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் – நாக்பூரில் 1925ல் விஜயதசமி அன்று ஹெட்கேவரால் துவக்கப்பட்டது.
அதில் பி.எஸ். மூஞ்சே, வி.டி. சாவர்க்கரின் மூத்த சகோதரர் பாபாராவ் சாவர்க்கர், எல்.வி. பரஞ்சிபே, பி.டி.தாக்கூர் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் அனைவருமே இந்து மகா சபையின் ஊழியர்கள்.
ஆர்எஸ்எஸ்ஸின் முக்கிய கொள்கைகள்:
இன, கலாச்சார மேன்மை கோட்பாடு; ராணுவத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தம்; மத இலட்சிய வாதம் நிறைந்த அதீத தேசிய வாதம்; தேசிய ஒற்றுமை, தேசியம் என்ற கருத்தாக்கத்திலிருந்து மத அல்லது இனச் சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்தல்; சமஸ்கிருதத்தை எல்லா மொழிகளுக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் வைத்தல்; இறுதியாக இந்து ராஷ்ட்ராவை நிறுவுதல்.
ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டு முக்கிய வழிகாட்டி நூல்கள்:
1923ல் வி. டி. சாவர்க்கர் எழுதிய – இந்துத்துவா.
1966ல் கோல்வால்கர் எழுதிய – சிந்தனைக் கொத்து.
இன்றும் பெரிதாக விவாதத்திற்குள்ளாகும் சொல் – இந்துத்துவா அல்லது இந்துத்துவம். ஆர்எஸ்எஸ்ஸின் பைபிளாக கருதப்படும் இந்துத்துவா என்ற நூலை 1923ல் சாவர்க்கர் வெளியிட்டார்.
இந்துத்துவா என்றால் என்ன?
“இந்துத்துவா என்பது ஒரு அரசியல் கோட்பாடு. அது மதக் கோட்பாடு அல்ல. இந்து மக்களை தனியாக அடையாளப் படுத்தும் வகையில் அவர்களின் கலாச்சார, வரலாற்று, அரசியல் அம்சங்களை மொத்தமாக வெளிப்படுத்தும் செயல்!” …என சாவர்க்கரே விளக்கம் தந்துள்ளார்.
கோல்வால்கர் எழுதிய சிந்தனை கொத்து நூலில் சிறுபான்மையினருக்கு தரப்பட்ட அச்சுறுத்தலான அறிவுரை:
அன்னிய சக்திகளுக்கு (மதத்தினருக்கு) இரண்டே வழிகள்தான் உள்ளன. அவர்கள் தேசிய இனத்தில் (இந்துக்களுடன்) ஐக்கியமாகி அதன் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தேசிய இனம் அனுமதிக்கும் வரை அவர்கள் அந்த இனத்தின் கருணையில் வாழ்ந்து, அது விரும்பும் போது வெளியேற வேண்டும்” …ஓகோ.. புதிய குடியுரிமை சட்டம் இந்த கொள்கையை நிறைவேற்றத் தானோ?
ஆர்எஸ்எஸ் – இந்துத்துவா தீவிர இந்து மத அமைப்புகளின் திட்டத்தையும் செயல்பாடுகளையும் நன்கு உணர்ந்த அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இவ்வாறு கூறினார், “இந்தியாவின் அபாயம் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல! வலதுசாரி இந்து மதவாதமே!”… இந்த கொள்கையை பகிரங்கமாக தெரிவித்த காரணத்தினால் தான் இன்றும் நேருவை சங்கிகள் சாடுகின்றார்கள்.
நூலில் கிடைத்த கடலளவு தகவல்களிலிருந்து கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதுமான கையளவு தகவல்கள்:
ஆர்எஸ்எஸ்ஸை தோற்றுவித்த ஹெட்கேவரின் இந்து மத மீட்டெடுப்பு வாதம் | சாவர்க்கரின் இந்துத்துவா கொள்கை விளக்கம் | பி.எஸ். மூஞ்சே இத்தாலிக்கு சென்று முசோலினியை சந்தித்த பின் ஆர்எஸ்எஸ் ராணுவ பயிற்சி பள்ளியை உருவாக்கியது | சாவர்க்கர் காந்தியை ஒரு போலியான ஆன்மீக வாதத்தால் நாட்டை குழப்புபவர் என்றது | அந்தமான் சிறையிலிருந்து பிரிட்டிஷாருக்கு சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதங்கள்.
கோல்வால்கரின் சிந்தனை கொத்து நூல்| ஆர்எஸ்எஸ்ஸை நேரு வெறுக்க காரணங்கள் | நாதுராம் கோட்சேயால் காந்தி சுடப்பட்டு மரணம் | முதன்முறையாக ஆர்எஸ்எஸ்க்கு தடை|
கோட்சே, சாவர்க்கர் கூட்டாளிகள் காந்தி கொலை சதி வழக்கில் கைது | கோட்சேயை விசாரிக்கும் போது நீதிபதி ஆத்மசரண் அழுத வேடிக்கை | சாவர்க்கர் விடுதலையின் பின்னணி | கோல்வால்கர் நேருவுக்கு எழுதிய மடல்கள் | நேரு படேலுக்கு எழுதிய மடல்கள் | இந்தியாவில் நடந்த மதக் கலவரங்கள் |
அகிம்சையைக் காப்பாற்ற வன்முறையை பயன்படுத்துவது அவசியம் என வியாக்கியானம் செய்த கோல்வால்கர் | ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தில் புகுந்த ஆர்எஸ்எஸ் | இந்திரா கொண்டு வந்த அவசரநிலை பிரகடனம் | இரண்டாவது முறையாக ஆர்எஸ்எஸ்க்கு தடை |
தடைக்குப் பின் இந்திராவை ஆதரித்த ஆர்எஸ்எஸ் | மன்னிப்பு கடிதம் எழுதித் தந்து சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் | புதிதாக தோன்றிய ஜனதா கட்சியில் இணைந்த ஜனசங் | ஆர்எஸ்எஸ் ஒரு கலாச்சார இயக்கம் என சர்ட்டிபிகேட் அளித்த வாஜ்பேய் | ஜனதா கட்சியை சிதைத்த ஆர்எஸ்எஸ் | பாரதிய ஜனதா கட்சி பிறப்பு |
பாபர் மசூதி பிரச்சினையை கையிலெடுத்த ஆர்எஸ்எஸ் | அத்வானி ரதயாத்திரை செயல்பாடுகள் | ராம் ஜென்ம பூமி விவகாரம் வெடித்து கிளம்பியது | பாபர் மசூதியை இந்துத்துவா சக்திகள் இடிப்பு | மூன்றாவது முறையாக ஆர்எஸ்எஸ்க்கு தடை |
ஆர்எஸ்எஸ் பெரிய அளவில் வளர ஆரம்பித்த விவரங்கள் | குஜராத் கலவரம் | கலவரத்துக்குப் பின் குஜராத்தின் மோடி நிர்வாகம் ஆர்எஸ்எஸ்ஸின் கட்டுப்பாட்டுக்குள் | பிரதம வேட்பாளராக அத்வானியை ஏற்காத ஆர்எஸ்எஸ் |
இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக மோடியை தேர்வு செய்த ஆர்எஸ்எஸ் | ஆர்எஸ்எஸ் – பாபா ராம்தேவ் – அன்னா ஹசாரே கூட்டணி | நாட்டில் கொலை செய்யப்பட்ட இடதுசாரி சிந்தனையாளர்கள் | ஆர்எஸ்எஸ்ஸை தொடர்ந்து குஷிப்படுத்தும் மோடியின் செயல் திட்டங்கள்|
2015ல் நாடெங்கும் ஆர்எஸ்எஸ்ஸின் 51,335 கிளைகள் தினந்தோறும் பயிற்சி நடத்தும் நிலையானது | 38 நாடுகளில் ஆர்எஸ்எஸ்ஸின் கிளைகள் உள்ளன | மோடியின் ஆட்சியில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம் | 2025ல் நடக்கவிருக்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்காக இந்தியாவை தயார் செய்கிறார் மோடி என பற்பல தகவல்கள்!
நூலில் ஏ.ஜி. நூரானி எழுத மறந்த மிக முக்கியமான தகவல் :
ஆர்எஸ்எஸ்ஸை தோற்றுவித்த ஹெட்கேவர், ஆர்எஸ்எஸ்ஸின் மூளையாக இருந்த கோல்வால்கர், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் காந்தி கொலை சதியின் திரை மறைவு உந்து சக்தியான சாவர்க்கர், இந்த நால்வருமே மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்பவன் பிராமணர்கள்.
பிராமணர்கள் சாத்வீக குணம் கொண்ட நல்லவர்கள் என்பது நமது பொதுப் புத்தியில் ஆயிரம் ஆண்டுகளாக ஏற்றப் பட்டுள்ளது என்பதையும் இங்கே நினைவு கூர்கிறேன்.
ஆர்எஸ்எஸ் தோற்றம் பற்றியும், இந்துத்துவா, கிளை அமைப்புகள் பற்றியும், செயல்பாடுகள், அதன் தலைவர்கள் பற்றியும், தீவிர வளர்ச்சி, அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றியும் மிகவும் சிறந்த முறையில், அறிவார்ந்த முறையில், ஆதாரங்களைக் கொண்டு ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியரைப் போல எழுதப்பட்ட, நூலாசிரியர் ஏ.ஜி. நூரானியின் இந்த படைப்பு – ஒரு சிறந்த மேற்கோள் புத்தகம் (Reference book ).
இந்த நூலுக்காக ஏ.ஜி.நூரானிக்கு முனைவர் பட்டம் வழங்க வேண்டும்!
நூலை தமிழில் மொழியாக்கம் செய்த ஆர். விஜயசங்கர் மிகவும் எளிமையான மொழியில் எல்லோரும் படிக்கும் வகையில் தனது நடையை அமைத்துள்ளார். அவரது பணி மேலும் தொடர வாழ்த்துகள்!
நச்சென்று நாலுவரியில் முடிவுரை:
நூலின் பெயரோ – ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்!
நூலின் பொருளோ – இந்துத்துவாவிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க அறிவுறுத்தல்!
கட்டுரையாளர்: பொ.நாகராசன்