இரண்டு நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து பல நாடுகளின் தலைவர்கள் சென்ற வார இறுதியில் புது டெல்லி வந்திருந்தனர். இந்த ஆண்டின் ஜி20 மாநாட்டில் பல முக்கிய முன்னெடுப்புகள் உலகத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-இன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது முதல் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொருளாதார வழித்தட ஒப்பந்தம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி எனப் பல சிறப்பம்சங்கள் டெல்லி மாநாட்டில் உறுதி செய்யப்பட்டன.
இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் பொருளாதார வழித்தடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜி20 மாநாட்டில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு வழித்தடங்கள் அமைக்கப்படும். அதில் கிழக்கு வழித்தடம் இந்தியாவை மேற்கு ஆசியாவுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் இணைக்கும். வடக்கு வழித்தடம், மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும்.
இந்த பொருளாதார வழித்தடத் திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ரயில் மற்றும் கப்பல் வாயிலாக இணைக்கப்படும்.
இது சீனாவின் பிரமாண்ட பொருளாதார வழித்தடத் திட்டத்திற்கு பதிலடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உலகின் பெரிய பரப்பை ஒன்றாக இணைக்கவும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தவும் ஹைட்ரஜன் எரிவாயு போன்ற ஆற்றல் உற்பத்தி உட்பட உலக நாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் உதவும்.
பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளப் போராடும் வளரும் நாடுகளுக்கு நிதி கிடைப்பதற்காக உலகளாவிய நிதி நிறுவனங்களைச் சீர்திருத்துவது, கடனை மறுகட்டமைப்பு செய்வது ஆகியவற்றில் டெல்லி ஜி20 மாநாட்டின் கூட்டுத் தீர்மானம் கவனம் செலுத்தியுள்ளது.
இதில் பேசப்பட்டுள்ள அம்சங்கள், இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 28வது பருவநிலை உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.
இதுமட்டுமின்றி, இந்த மாநாட்டில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி.
உலகளவில் கரிம வாயு உமிழ்வில் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதில் உயிரி எரிபொருளின் பயன்பாடும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், “உலகளவில் அறிவு மற்றும் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக்கொள்ள உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஒரு தளத்தை வழங்குகிறது.
இதன்மூலம் உள்நாட்டில் உயிரி எரிபொருள் துறையில் முதலீடுகளைச் செயல்படுத்த சரியான கொள்கைரீதியிலான ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்த முடியும்,
இந்த ஆண்டு கடுமையான வானிலை நிகழ்வுகளால் புவிசார் அரசியலில் பருவநிலை நெருக்கடி பெரும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வரலாற்றுரீதியாக கரிம உமிழ்வுகளில் பெரும் பங்கு வகித்த நாடுகளை உள்ளடக்கிய, இந்தியா, சீனா போன்ற கரிம உமிழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடுகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய பருவநிலை நடவடிக்கைகளின் நிலை குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.
இந்நிலையில், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை மும்மடங்கு ஆக்குவதற்கான ஒப்பந்தம், பருவநிலை நிதிக்கான தேவையில் ஒரு குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தது ஆகியவை ஜி20 மாநாட்டில் பருவநிலை நெருக்கடி குறித்த விஷயத்தில் கவனிக்கத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகின்றன.
இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கு ஜி-20 இல் காணப்பட்டாலும், பத்திரிகை சுதந்திரம் பற்றிய கவலைகள் அதிகமாகவே தென்பட்டன.
செய்தியாளர்கள் உலகத் தலைவர்களிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் விமர்சித்திருக்கின்றன. “புது டெல்லியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் இந்தியா தன்னை ஜனநாயகத்தின் தாய் என்று அறிவித்தது. ஆனால் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் தலைவர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர்,” என்று என்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு நிகழ்ந்த இடத்திற்கு பொது நெறிமுறைக்கு மாறாக எந்த ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.
“உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் இந்த சந்திப்பு, இந்து தேசியவாத அரசில் பத்திரிகை சுதந்திரம் எப்படி உள்ளது என்று வெளிப்பட்டது,” என்று என்பிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
`இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்ற பெயரை முந்தைய காங்கிரஸ் பிரதமர்கள் உலக நாடுகளுக்கு மத்தியில் நிலைநிறுத்திச் சென்றிருக்கிறார்கள். தவிர, வல்லரசு அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் அதேவேளை உலகில் அணிசேரா நாடுகளை வழிநடத்தும் மத்தியஸ்தராகவும் இந்தியா இருந்து வந்துள்ளது. ஆனால் பாஜக அரசு அதை முற்றிலும் கேள்விக்குறியாக்கி உள்ளதை உலக நாடுகளின் தலைவர்களும் சர்வதேச ஊடகங்களும் கவனிக்கத் தவறவில்லை.