கரிங்கமன்னு குலியில் முகம்மது என்ற கே.கே. முகம்மது (Karingamannu Kuzhiyil Muhammed aka K K Muhammed) என்பவர் இந்திய தொல்லியல் துறையில் பணி செய்த மூத்த அதிகாரி. மண்டல இயக்குனராக இருந்து 2012ல் ஓய்வு பெற்றுள்ளார். அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடித்த பின்னர், 2000ல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு ராமர் கோவிலைத் தேடி தொல்லியல் ஆய்வு செய்ய உத்தரவிட்டபோது அந்த குழுவில் இடம் பெற்றிருந்தார் இந்த கரிங்கமன்னு குழியில் முகம்மது. பாபர் மஸ்ஜித் இடித்த இடத்திற்கு கீழே ராமர் கோவில் இருந்த ஆதாரம் தொல்லியல் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறி அதிர்ச்சி அளித்தவர் இவர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதியுதவி அளித்து ஆதரவும் நல்கும் உத்தர்பிரதேச ஷியா வக்புவாரிய தலைவர் ரிஸ்விக்கு சற்றும் குறைந்தது அல்ல இவரது பாஜக விசுவாசம்.
இவர் இப்போது, வாரணாசியில் உள்ள கியான்வாபி மஸ்ஜித்தையும், மதுராவில் உள்ள கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் இடத்தையும் முஸ்லிம்கள் தாங்களாக முன்வந்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவர் இந்தக் கருத்தை கூற வந்ததன் மூலம் இவரது பழைய வண்டவாளங்களையும் மக்கள் அறிய முடிகிறது. இவர் போன்ற கயமையர்களைக் கொண்டே முஸ்லிம்களை குற்றவாளிகள் போன்ற தோற்றப் பிழையை பாஜக உருவாக்குகிறது.
`அவ்வாறே பிரச்சனைக்கு முன்பே முஸ்லிம்கள் அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜிதைக் கொடுத்திருக்க வேண்டும். முஸ்லிம்கள் அவ்வாறு செய்யத் தவறியதற்கு மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் தான் காரணம்.’ என்று விமர்ச்சித்து இருக்கிறார். இவர் பிப்ரவரி 7 ஆம் நாள், பெங்களூரு இலக்கிய விழாவில் (Lit fet) கலந்து கொண்டார. உண்மையைத் தோண்டி எடுத்தல் (Excavating Truth) என்ற பெயரில் Harsha Bhat உடன் நடந்த உரையாடலின் போது, ‘பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கு ஆதாரங்கள் அகழ்வாய்வில் கிடைத்தது’ என்று கூறினார். இதனை கேட்டு அங்குள்ளவர்களே கூச்சப்பட்டிருப்பார்கள். நிச்சயமாக இவ்வளவு பெரிய அடிமை வேறு எங்கும் சிக்க மாட்டான் என்று வியந்திருக்க வேண்டும்.
`நான் இதை முதலில் ஊடகத்துக்குச் சொன்னபோது, ஒரு அரசு ஊழியர் அப்படி சொல்வது பண்பல்ல என்றாலும் ஒரு தொல்லியல் ஆய்வாளனாக இதைப் பேசுகிறேன், மேலும் நான் ஒரு முஸ்லிமாக இருக்கிறேன், அதனால், உண்மையை மட்டும் பேச வேண்டும் என்ற இரட்டை பொறுப்பு எனக்கு இருந்தது என்று கூறினார். நாம் இதற்காக சண்டை போடுவதற்குப் பதிலாக இந்திய ஒற்றுமைக்கே நமது முயற்சிகளில் தீவிரம் காட்ட வேண்டும்’ என்றும் தெரியப்படுத்தி இருக்கிறார். மதரசா பள்ளிக் கூடத்தில் தங்கிப் படித்து வந்த முகம்மதுக்கு அவருக்கு இஸ்லாம் கற்பித்த ஆசிரியர் அபுபக்கர், உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதை ராமாயாணத்தில் இருந்து எடுத்துக் கூறினாராம். ராமாயணம் தன்னை செதுக்கியதாகவும் (shape his personality) அந்த விழாவில் பெருமிதமாகக் கூறினார்.
“இந்தியா மிகப்பெரிய சகிப்புடைய சமயம். அதனால் தான் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இந்தியா மதச்சார்பற்ற தன்மையில் உண்மையிலும் உண்மையாக இருந்து வருகிறது. கடவுள் ராமர் போன்ற இந்திய நாயகர்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லிம் நாடுகள் ஏற்றுக்கொண்டு இருக்கின்றன. அகழ்வராய்ச்சிகள் வெளிப்படுத்திய இதுபோன்ற குறிப்புகளே இந்திய உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்க உதவியது” என்றும் கூறி இருக்கிறார்.
பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்ன மிக முக்கிய முடிவான விசயமே, பாபர் பள்ளி இருந்த இடத்தில், அகழ்வாராய்ச்சி நடந்ததில், காணக்கிடைத்தவைகள் பற்றியது தான். பாபர் மஸ்ஜித் இருந்த இடத்துக்கு கீழே கட்டடம் போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தொல்லியல் அகழ்வில் கூறப்பட்டது உண்மை. ஆனாலும், அது கோவில் போன்ற கட்டடமோ, மஸ்ஜித் போன்ற கட்டிடமோ இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு தான் இந்திய முஸ்லிம்கள் மீது 450 ஆண்டுகளாக பூசப்பட்ட பழிச்சொல்லை நீக்கியது.
அந்த தீர்ப்பை புறக்கணித்து, தான் நடத்திய அகழ்வாராய்ச்சியில் ‘உள்ளே ஒரு கோவில் உண்மையில் இருந்தது’ என்று கூறி இருக்கிறார். ஒரு பக்கம் இதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கருத வேண்டும். இவர் மீது உண்மையில் வழக்குத் தொடரலாம். அகழாய்வில் பல சூழ்ச்சிகள் நடந்தன. பாபர் மஸ்ஜித்தை தகர்த்து விட்டு தற்காலிக கோவிலை அமைத்து வழிபாடு செய்து கொண்டிருந்த பாஜகவினர் தான் அன்று மத்திய அரசில் இருந்தனர். அகழ்வாராய்ச்சி நேர்மையாக நடந்திருக்கவில்லை என்று அப்போதே குற்றம் சாட்டப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் நேர்மையாக இருக்குமா என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கும் ஆழமாக இருந்தது. அந்த முடிவுகளை நீதிமன்றம் தீர்ப்புக்கு பக்கத் துணையாகக் கொள்ள கூடாது என்ற வேண்டுகோளும் நீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்டது. அப்படி இருக்க முஸ்லிம்கள் மீது காலமாக போடப்பட்டு வந்த பழியை நீதிமன்றமே துடைத்து விட்டப் பிறகு அந்த அகழ்வு முடிவினை உண்மைப்படுத்தி கூறியதுடன் மேலும், சம்பந்தமில்லாமல் மற்ற இரு மஸ்ஜித்துகளையும் பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நடந்து கொண்டது போலன்றி மரியாதையோடு இந்துக்களிடம் ஒப்படையுங்கள் என்று முஸ்லிம் குரலாக கூறும் இவர் ‘கட்டுச் சோற்றுக்குள் புகுந்த பெருச்சாலி!’.
கட்டுரையாளர்: ஜி. அத்தேஷ்