குழந்தைகளின் பாடச்சுமையைக் குறைக்கிறோம் என்ற பொய்யான காரணம் கூறி National Council of Educational Research & Training (NCERT) இந்திய வரலாறு என்னும் கட்டடத்தை இடித்து மாற்றுவது, குழந்தைகளின் பாடச்சுமையை அல்ல. வெறுப்பு அரசியலை விரல் நீட்டி நாளை விமர்சிக்கக் கூடாது என்ற அச்சம் தான். நாளை அவர்கள் கேட்கவிருக்கும் கேள்விகள் தான் சுமையாகிறது. வரலாறு படிக்கும் மாணவர்கள் வலதுசாரி அரசுக்கு வேண்டாதவர்களாக இருப்பார்கள் என்ற முன்னெச்சரிக்கைதான்.
கோட்சே என்ற பாதகனைத் திறந்து காட்டினால் யார் அச்சப்பட வேண்டும்? குஜராத் இனப்படுகொலை என்ற இன அழிப்பை பாடமாக்கினால் அது யாரை களங்கப்படுத்தும்?
முகலாய ஆட்சியின் எட்டு நூற்றாண்டுகளில் இந்திய வரலாற்றில் உருவாக்கிய சமூக மாற்றத்தை சொல்லிக் கொடுத்தால் யாருக்கு வருத்தம்? விடுதலைக்கு முன்னால் இருந்த காங்கிரஸ் குறித்தும், தலித் இயக்கங்கள் குறித்தும் அறிவின் மைய நீரோட்ட நகர்வுகள் குறித்தும் யாருக்கு ஒவ்வாமை வரும்?
பாட புத்தகங்கள் ஒரு கருவறை. அதன் பாதுகாப்பில் அறிவு வளர்ச்சி பெற்று வெளியே வருபவர்கள்தான் நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் மானுடத்துக்கும் குடிமகன் என்ற நிலையில் பங்களிப்பை ஆற்ற முடியும். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட சமூகத்தை, கர்ப்பம் தரிக்க பாடப் புத்தகங்களை இப்போதே தயார் செய்கிறார்கள். இதுதான் இப்போதைய ஒன்றிய அரசின் அஜெண்டா. அவர்களை நடத்துவது கருத்தியலின்மை தான். ஜனநாயகத்தின் பெயரில் சர்வதிகாரத்துக்கு பாத சேவை செய்பவர்களை உற்பத்தி செய்தல்.
தங்களைத் தவிர பிறரெல்லாம் வந்தேறிகள், அன்னியர்கள். அதனால் அவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் அல்லது பாரதியர் அல்லாதவர்கள் என்ற பொது உளவியலை உருவாக்க NCERT, CBSC ஆகியவற்றை தங்களது கருவிகளாகப் பயன்படுத்துகின்றார்கள்.
இந்துத்துவா ஆட்சி செய்த கர்நாடகத்தில், குஜராத்தை Model ஆக்கி கல்வியில் காவிமயமாக்கினார்கள். குஜராத்தில் இது எண்பதுகளிலேயே நடந்தது. `அங்கே நடந்த இனப்படுகொலைகள் பாடப்புத்தகங்களில் ஏற்படுத்திய மாற்றங்களின் காரணம்’ என ரோமிலா தாப்பர் கூறியுள்ளார். மைசூர் மன்னருக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் ஒப்பற்ற தீரனான திப்பு சுல்தான் பற்றியும் பகத்சிங்பற்றியும் கர்நாடக மாணவர்கள் இனி படிக்கக்கூடாது எனவும் பெரியாரும் நாராயண குருவும் பாட புத்தகத்திலிருந்து வெளியேற்றப்பட்டும் இருக்கிறார்கள். திப்புவை எதிர்ப்பாளராகவும் மதவெறியராகவும் ஊடகங்களினூடாக பாடப்புத்தகத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள்.
பண்டைய இந்தியாவின் பசு மாமிச உணவு, இந்தியாவின் சாதிய அமைப்பு ஆகியவை குறித்து ரோமிலா தாப்பர் எழுதியவை NCERT பாடத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. உலக சமூகத்தின் முன்னால் நமது நாட்டை தலை குனிய வைத்துள்ளது. பசுவின் பெயரில் நடந்த Criminalism குறித்தும் சாதியம் குறித்தும் மாணவர்கள் அறியக்கூடாது என்றே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
NCERT பாடபுத்தகங்களிலிருந்து சில பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பின் அரசியல் அறிவியல் நூலிலிருந்து ஆசாதின் பெயர் கத்தரிக்கப்பட்டுள்ளது.
Indian Constitution at work எனும் நூலில் Constitution-why and how எனும் அத்தியாத்தின் ஒரு பகுதி இருந்தது. வேறுபட்ட தலைப்புகள் குறித்து ஆய்வு செய்ய அரசியலமைப்பு சபைக்கு எட்டு குழுக்கள் இருந்தன. நேரு, மௌலானா ஆசாத், ராஜேந்திர பிரசாத், பட்டேல், அம்பேத்கர் ஆகியோர். இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்கினர். இவர்களுக்கிடையே கருத்து முரண்கள் இருந்தன. பல விஷயங்களிலும் ஒத்த கருத்துகள் இருந்ததில்லை, அம்பேத்கர் காங்கிரசையும் காந்தியையும் பல நேரங்களில் விமர்சித்து வந்துள்ளார். நேருவும் பட்டேலும் பல விஷயங்களிலும் முரண்பட்டனர். ஆனாலும் அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். ஆனால் புதிய பாடத்தில் ஆசாதின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 1940-46 காலத்தில் இரண்டாம் தடவையும் காங்கிரஸ் தலைவர் ஆனவர் ஆசாத். அவர் இந்திய அரசியலைப்பு சட்டத்தின் முன்வரைவை தயார் செய்த அரசியலமைப்பு சபைக்கு நடந்த தேர்தலுக்கு காங்கிரசை வழி நடத்தியவர் ஆசாத். பிரிட்டிஷ் கேபினட் மிஷனுடன் கலந்தாலோசனை நடத்திய குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஆசாத்.
ஆசாதை நீக்கியவர்கள், சென்ற ஆண்டு Notified minority ஆக இருக்கும் பௌத்த மதத்தினர், கிருத்தவர்கள், ஜைனர்கள், முஸ்லிம்கள், பார்சிகள், சீக்கியர்கள் ஆகிய இளைஞர்களுக்கு 2009 முதல் M.Phil, Ph.D ஆய்வுக்கு ஐந்தாண்டுக்கு அளித்து வந்த மௌலானா ஆசாத் Fellowship எனும் உதவித் தொகையை ஒன்றிய சிறுபான்மையின அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
ஆசாத் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் 14 வயது வரை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்று வாதிட்டவர் Indian Institute of Technology. Jamia Millia Islamiah. The school of planning and Architecture, Kendra sangeetha Nataka Academy. Sakitya academy ஆகிய முதன்மை பெருமை மிகு நிறுவனங்களை உருவாக்கியர்.
ஆசாதின் பெயரை மட்டும் ஆசாதிகா மஹோத்சவ் காலகட்டத்தில் நீக்கம் செய்வது சுத்தமான வகுப்புவாத வெறியின் உச்சம். ஆசாத் போன்ற ஒரு மத நல்லிணக்க தேசப்பற்றாலனை முன்வைக்க முடியாதவர்களின் இயலாமை இச்செயலில் வெளிப்படுகிறது. வரலாற்றை வகுப்புவாத குறுகிய எண்ணத்துடன் திரித்துச் சொல்வதை நகரிக சமூகம் ஏற்றுக் கொள்ளாது.
பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த பிரபலமான தேசத்துரோக விசாரணைகள் சில பாடபுத்தகங்களில் உள்ளன. ஆனால் அபுல்கலாம் ஆசாதை 1921 டிசம்பரில் கொல்கத்தாவில் வைத்து தேசத்துரோகக் குற்றம் சாட்டி கைது செய்தனர். 1922ல் விசாரணை செய்து ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1921 ஜுலை மாதத்தில் ஆசாதின் பேச்சின் மீது தேசத்துரோகம் சாட்டப்பட்டது. எம்.ஜி.நூரானியின் Indian political Trails (1775-1947) எனும் நூலில் இதன் விரிவான விளக்கம் உள்ளது.
கொல்கத்தா காலனி நீதிமன்றத்தில் ஆசாத் சமர்ப்பித்த 30 பக்கமுள்ள கடிதத்தில் அவருடைய அற்புதமான பதில் உள்ளது. அந்த கட்டுரையை இந்திய தேசியம் குறித்த சிறந்த ஆவணமாக காந்தி குறிப்பிட்டார். அது உருதுவில் “கவுல் இ பைசல்” எனும் நூலில் உள்ளது.
“எனக்கு எதிராக தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் தேசத்துரோகம் என்றால் என்ன? வெற்றி பெறாத விடுதலைப் போராட்டத்தை தேசத்துரோகம் என்று அழைப்பதென்றால் நான் அதனை ஏற்கிறேன். சுதந்திரப்போரட்டம் வெற்றி பெறும்போது அது தேசப்பற்றாக பாராட்டப்படும்” என்றார்.
ஆனால் இன்று தேசப்பற்றுக் குத்தகையாளர்கள் பகத் சிங்கை ஏற்பார்கள் ஆனால் ஆசாதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதான் தேசியத்தின் மறுபக்கங்களில் ஒன்று.
ஆசாத் நபிகள் நாயகத்தின் கூற்றை நினைவுப் படுத்துகிறார். “நீங்கள் ஏதாவது அநியாயத்தைக் கண்டால் உங்கள் கைகளால் தடுத்து நிறுத்துங்கள்! முடியவில்லை என்றால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்! அதற்கும் இயலவில்லை என்றால் உங்களிடமே கூறுங்கள் அது தவறு என்று” இதில் ஆசாத் தேர்ந்தெடுத்தது இரண்டாவது மார்க்கத்தை.
பிரிவினையை கடுமையாக எதிர்த்த ஆசாதை, நேரு “அமீரே கார்வன்” ‘Leader of Caravan’ என்றழைத்தார். ஜின்னாவின் இரு நாடு கொள்கையை தேவ்பந்து உலமாவைப்போன்று ஆசாத் எதிர்த்தார். ஆனால் அது இறையியல் மொழியில் அல்ல மதச்சார்பற்ற குரலில் பதிவு செய்தார்.
“இந்திய மக்களிடம் கூறும் மிகப்பெரிய போலிக்கருத்தும் ஏமாற்று வேலையும்தான் பிரிவினை புவியியல் ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பண்பாட்டு, பொருளாதார முறையிலும் வேறுபட்ட ஆட்களை வெறும் மதத்தின் பெயரால் பிரிப்பது அபத்தம்” என்றார். மேலும் “இது பொய், வஞ்சனை இங்குள்ள முதன்மை பிரச்சனை மதமல்ல, பொருளாதாரம்” என்றார். இது அவரது சுயசரிதயான India wins freedom எனும் நூலில் உள்ளது. இந்த நூல் 1959ல் வெளிவந்தாலும் அதன் 30 பக்கங்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகே வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்திய பிரிவினையில் இந்த அளவு வருத்தப்பட்ட தலைவர்கள் இல்லை எனலாம். நேருவும் பட்டேலும் இறுதியில் காந்தி கூட அந்த முடிவுக்கு வந்ததை ஆசாதால் சீரணிக்க முடியவில்லை. மவுண்ட் பேட்டன் இந்தியாவுக்கு வந்த ஒரு மாதத்திற்குள் பிரிவினைக்கு எதிராக இருந்த நேருவின் மனமாற்றம் ஆசாத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது.
1947 மார்ச் 31ல் காங்கிரஸ் பிரிவினைக்கு ஒத்துக்கொண்டால் அது என் பிணத்தின் மீதுதான் சாத்தியம் என்று ஆசாதிடம் கூறிய காந்தி, ஏப்ரல் 2க்கு மவுண்ட் பேட்டனை கண்டபிறகு பட்டேலின் பிரிவினைக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாடு ஆசாதை கவலைப்படுத்தியது.
காந்தியிடம் ஆசாத் கூறினார். “நீங்களே இதை அங்கீகரித்தீர்கள் என்றால் மிகப்பெரிய துயரத்திலிருந்து பாதுகாப்பதற்கு எந்த எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை” என வருத்தப்பட்டார்.
குழந்தைகளின் பாடச்சுமை குறைப்பது எனும் நியாயம் சொல்லி NCERT இந்துத்துவ உரைகல் பயன்படுத்தி காந்திப் படுகொலையையும், RSS தடை செய்யபட்டதையும் பாடப்பகுதியிலிருந்து நீக்கியுள்ளனர். NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானியின் நியாயம், நியாயவான்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது சங்பரிவாரத்தின் மீதான சுமையை இறக்கி வைத்துள்ளது.
காந்தி ஆயுத பாதுகாப்பை நிராகரித்தார் என்பதும் காந்தியை கொலை செய்த கோட்சே, பூனாவைச் சார்ந்த பிராமணன் என்பதும் அவன் தீவிர குணமுள்ள ஒரு இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்ற செய்திகளும் நீக்கப்பட்டது.
ஆறாவது வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட 25 பேர் கொண்ட குழுவில் நாடறிந்த கல்வி விற்பன்னர்களோ ஆளுமைகளோ யாரும் இல்லை.
ஆறு, ஏழு நூற்றாண்டுகள் நீண்ட சுல்தானேட் – முகலாய காலகட்டம். அதன் வரலாறு இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத ஒன்று. அந்த காலகட்டத்தை முஸ்லிம் ஆட்சி காலமாக சுருக்குவதும் அபத்தம். அதே காலகட்டத்தில் தான் விஜயநகர ஆட்சியும் சோழர்களும் பிற்கால சோழர்களும் ராஷ்ட்ர சேட்டர்களும் பிரதிஹரன்களும் பாலன்களும் பிறகு மராத்தர்களும் இந்தியாவின் பல திசைகளில் ஆட்சி செய்து வந்தனர்.
முதல் NDA ஆட்சி காலத்திலேயே பாடத்திட்டத்தில் கத்தி வைக்கத் தொடங்கினர். முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அந்நியராக சித்தரிக்க முயல்வதன் வெளிப்பாடு இது. ஆனால் இந்த முகலாய காலகட்டத்தில்தான் ஒன்றிணைந்த இந்தியா உருவாக்கப்பட்டது என Lichard M. Eatern கூறுகிறார்.
இந்தி மொழி, இந்தியாவில் உருவான உருது மொழி கலை, சிற்பம், இசை, இலக்கியம், வரலாறு, பண்பாட்டு உணர்வுகள் ஏன் பிரியாணி உட்பட்ட உணவு பண்பாடுகள் கூட உருவான காலகட்டம் அது. 16, 17 நூற்றாண்டுகளில் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார சக்தியாக நிலை நின்ற முகலாயர்கள் இல்லாத வரலாறு அரை குறையாகவே இருக்கும்.
எந்த ஒரு சாம்ராஜ்ய வரலாற்றையும் விமர்சன ரீதியாக அணுகக்கூடாது என்பதல்ல, மத நிலைப்பாடும் பிற நிலைப்பாடுகளும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதும் அல்ல. ஆனால் தங்களது கருத்தியலுக்கு எதிரானவற்றை முற்றிலும் நிராகரிப்பது வரலாற்று அணுகுமுறையல்ல வகுப்புவாத அணுகுமுறை.
ஆனால் ஆதித்யநாத் போன்ற வகுப்புவாதிகள் ஒட்டுமொத்தமாக முகலாய ஆட்சியை ஆயிரமாண்டு அடிமைத்தனம் என்ற புல்டோசர் கருத்துகளை பரப்புகின்றனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளாய் அடிமையாக்கப்பட்ட தலித்துகள் இன்னும் அதன் பிடியிலிருந்து விடுபடவில்லை என்பதை உலகறியும்.
மத்திய காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களால் கட்டாய மதமாற்றம் நடந்தது என்கிற கட்டவிழ்த்துவிடுகிற பொய்கள் இன்னும் வேர்பிடிக்கவில்லை.
முகலாய ஆட்சிப்பிரதேசமாக இருந்த கங்கை சமதளத்தில் இப்போதும் முஸ்லிம் மக்கள் தொகை 15 விழுக்காட்டை தாண்டவில்லை. ஆனால் முகலாய ஆட்சிக்கு வெளியே இருந்த காஷ்மீரிலும் வங்காளத்திலும் பஞ்சாப்பிலும் முகலாய ஆட்சியின் எல்லைக்கு வெளியே இருந்த மலபாரும்தான் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பது வகுப்புவாத கதைக்கு முரணாக உள்ளது.
இஸ்லாம் மதத்துக்கு மாறிய நிகழ்வுகளை சூஃபிசத்தின் தாக்கத்துடனும் சாதி இழிவுகளிலிருந்து விடுதலை பெற்ற வரலாற்றுடனும் தேட வேண்டும். பாபரும் அக்பரும் ஜஹாங்கீரும் ஷாஜஹானும் ஏன் அவுரங்கசீப் கூட நாத்யோகிகளின் மடங்களுக்கு பூதானமும் பொருளுதவியும் அளித்தது வரலாற்றில் பதிந்து கிடக்கிறது.
காதரின் பி.ஆஷர், ஓட்ரி ட்ரெஷ்க் ஆகிய வரலாற்றாய்வாளர்கள் அவுரங்கசீப்பின் கோயில் ஆக்ரமிப்புகளின் அரசியல் காரணங்களை நிறுவியுள்ளனர். 1650 களில் எல்லோரா கோயிலை பார்த்த அவுரங்கசீப் அதன் சிறப்பு குறித்து கூறியது வரலாற்றில் உள்ளது. இவர்கள் கோயில்களுக்கு அளித்த உதவிகள் குறித்து Richard Eatern ம் கூறியுள்ளார்.
கோயில் கொள்ளையடிக்கப்பட்டது அரபுப் பெயர்தாங்கியவர்களின் குத்தகையல்ல. கல்ஹணன் என்பவரின் ராஜதரங்கிணியில், 12 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆட்சி செய்த ஹர்ஷதேவன் என்ற மன்னன் கோயில்களை கொள்ளையடிப்பதற்காக தனியாக ஒரு அமைச்சரையே வைத்திருந்தார் என்று மிகத் தெளிவாக கூறியுள்ளார்.
அலகாபாத்தை ப்ரயாக்ராஜ் என்றும் முகல்சராய் இரயில்வே ஸ்டேசனை தீன்தயால் உபாத்யாயா ஸ்டேசன் என்றும் பைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா என்றும் குட்காவை குருகிராமம் என்றும் மாற்றியுள்ளனர்.
அலிகட்டை ஹரிகட் என்று மாற்றப்போகிறார்கள். அலிகருக்கு அந்தப் பெயர் வைத்தவர்கள் மராத்தர்களே. மராத்தர்கள் அன்று சாபித்கட், முஹம்மது கட் என்று அறியப்பட்ட அலிகட் கோட்டையை பிடித்து அன்று மராத்தா கவர்னராக இருந்த நஜப் அலிகானின் பெயரில் இருந்த அலியை சேர்த்து அலிகர் ஆக்கினர். பைசாபாத்தை 18ஆம் நூற்றாண்டில் நவாப் சாதத் அலிகான் நிறுவினார்.
2005-2007 ல் NCERT யின் அறுபது உறுப்பினர்கள் கொண்ட பாடப்புத்தகக் குழுவில் உறுப்பினராக இருந்த பிரபல வரலாற்றாசிரியர் Neeladri Battacharya அவரது Teaching History in Schools; the politics of Textbooks in india என்ற நூலில் அதை விளக்குகிறார்.
1961ல் இந்திய பள்ளிகளில் கற்பித்துவரும் வரலாற்று நூல்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்த UNESCO கேட்டுக் கொண்டது. London School of Oriental and African Studies ல் ஆய்வுப்பட்டம் பெற்று 1961ல் குருசேத்ரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றின் ரீடராக இருந்த Romila Thapar ஐ நியமித்தது.
அவர்தான் இந்திய வரலாற்றை காலனிய வரலாற்றாசிரியர்கள் எப்படி தங்களுக்கு ஆதரவாக மாற்றியதை குறிப்பிட்டார். இது வகுப்புவாதத்துக்கு வித்திடும் என்று எச்சரித்தார். பிறகு ஒன்றிய கல்வி அமைச்சராக இருந்த MC சக்லே (1963-66) பண்டைய – மத்திய கால இந்திய வரலாறு குறித்து எழுத தாப்பரிடம் கேட்டுக் கொண்டார். 1961ல் பாடப்புத்தகம் உருவாக்க NCERT நிறுவப்பட்டது. அறுபதுகளின் பிற்பகுதியிலும் எழுபதுகளிலும் அந்த காலத்து சிறப்பு மிக ஆளுமைகளாக இருந்த Bipin Chanra, Sathish Chandra, RS Sharma. Romila Thapar ஆகியோர் உருவாக்கிய பாடபுத்தகங்கள் வெளிவந்தன.
பாட புத்தகங்களில் இருந்து முகலாய வரலாற்றை நீக்கம் செய்யும்போது அதற்கு நிகராக அந்த காலகட்டத்தில் இடங்களும் நகரங்களும் தெருக்களின் பெயர்களும் இரவோடு இரவாக பெயர் மாற்றம் செய்தால், பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல வரலாற்றுக்கான சுட்டு விரல்கள்.
வரலாற்றின் வேர்கள் தேடிச் செல்வதற்கான நகர்வை தடை செய்து பெயர்களை அழித்தாலும், போலி வரலாற்றைப் படைத்து அந்தக் காலகட்டத்தை மறைக்க முயல்வது, நாம் தூங்கும் போதல்ல விழித்திருக்கும் போதே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஊர்களின் பெயர்களை மாற்றி நாட்டை கொதிநிலையில் வைப்பதுதான் அவர்களது இலக்கு. மதத்தை விட, நாட்டை மனதில் வைத்துக் கொடுங்கள் என்ற கூற்று Plastic Surgery. புராண காலத்தில் இருந்து புஷ்பக விமானம் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, தாஜ்மஹால்-தேஜோ மஹால் போன்ற பித்தலாட்டம், திப்புவைக் கொன்றது பிரிட்டிஷ்காரர்கள் அல்ல, உறி கௌடா நஞ்ச கௌடா என்ற இந்து வீரர்கள் என்ற பச்சை பொய்களை பரப்பிவிடுவதற்கென்றே லட்சக்கணக்கான முழுநேர ஊழியர்கள் பாஜகவில் இருக்கிறார்கள்.
இந்துத்துவா Factory உற்பத்தி செய்கின்ற வரலாற்றுப் புரட்டுகளைக் கூறும்போது இந்த நாட்டுக்காக ரத்தம் சிந்திய யதார்த்த வீரர்கள் புறக்கணிக்கவும் மறைக்கவும் படுகிறார்கள். பழங்குடியின மக்களும் வனவாசிகளும் சிறுபான்மையின மக்களும் வந்தேறிகளாகிறார்கள்.
கட்டுரையாளர்: முனைவர் மு. அப்துல் ரசாக்