நிஜாம் எழுந்தபோது பளிச்சென்று வெளிச்சம் வந்திருந்தது. எழுந்ததும் மணி பார்த்தான். ஆறு பத்தாகியிருந்தது.“ஜாஸ்!” மனைவியை அழைத்தான். அடுப்படியில் வேலையாக இருந்தவள், “என்னங்க?” என்றபடியே வந்தாள். குரலில் சின்னதாய் கோபத்துடன் “என்ன நீயி தொழுகைக்கு கூப்பிட்டே விடல?” என்றான். “நீங்கதா ராத்திரி பூரா தூக்கம் வரலேன்னு, நாலு மணிக்கும் மேலதானே தூங்குனீங்க. அதா பாவம் தூங்கிட்டுப் போட்டும்னு எழுப்பல..!”
“ரொம்பத்தா பாவம் பாக்குறே?” நிஜாம் சிரித்தபடியே எழுந்து துவர்த்து துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமை நோக்கிப்போனான். பிறகு வீட்டிலேயே ஸுபுகு தொழுதான்.
டீ கொண்டு வந்து கொடுத்த ஜாஸ்மின் அவனருகில் அமர்ந்துகொண்டு, ”இப்ப எல்லாம் சரியாயிருச்சா..?” என்று கேட்டு லேசாக சிரித்தாள்.
“பாரேன் அவுனுக்கு எவ்வளவு லொல்லுனு..? என்னவெல்லாம் பொய் சொல்லியிருக்கான்! டென்ஷன் ஆகாதாக்கும்?”
“விடுங்க. அவன் புத்திதா அப்பிடினு ஆயிப்போச்சு.. நீங்க ஏன் தேவையில்லாம டென்ஷன் ஆயி ஒடம்ப கெடுக்கணும்?”
“உம்மா கூட இந்தப் பக்கம் எட்டிப் பாக்கமாட்டேங்கிறாங்க பாரு! மனுசனுக்கு டென்ஷன் ஆகாதா ஜாஸ்?”
“உங்க தம்பி உங்ககிட்ட பேசுறதில்லனு உங்கும்மாவுக்கு தெரியும்தானங்க..? அப்பறம் ஏன் நாம அவன் ஊட்டுக்கு போயித்தா பாக்கணும்னு உங்கும்மா உங்க தம்பி கூட சேந்துகிட்டு நம்மகிட்ட வாசி போடுது..?”
நிஜாம் பதிலேதும் சொல்லவில்லை. இனி அவுங்க யாரப்பத்தியும் நினைக்கவே கூடாது பேசவும் கூடாது என எண்ணிக்கொண்டு அலுவலகம் புறப்பட ஆயத்தமானான்.
எதிர் வீட்டு ரிஸ்வானா பற்றி எந்த தகவலும் முன்பு போல ஜாஸ்மின் அவனிடம் சொல்வதில்லையே ஏன்? திடுமென அவனுக்குள் சாப்பிடும் போது தோன்றியது. கேட்கலாமா என யோசித்தான். ”ஏன் அவளப்பத்தி திடீர்னு? அதத் தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க ?” என்று கோபப்படுவாள் எதுக்கு வம்பு என்று அந்த எண்ணத்தை கைவிட்டான் நிஜாம்.
சில நாட்களாகவே ரிஸ்வானா கண்ணில் படுவதே இல்லை. ஸ்கூட்டியில் அதுக்கும் இதுக்கும் சர்ருபுர்ருனு பறந்துட்டே இருப்பாளே..! அவள் வேலைக்குப் போவது தெரியும். மாலையில் வேலை முடித்து வந்ததும் குழந்தைகளை டியூசனுக்கு கூட்டிக்கிட்டுப் போய் விட்டு வருவா… அப்பறம் அவுங்க உம்மா வீட்டுக்குப் போவா… அப்பிடியே டியூசனிலிருந்து குழந்தைகளை கூட்டிக்கிட்டு வருவா… மறுபடியும் வண்டியை எடுத்துக்கொண்டு எங்கேயோ போயிட்டு வருவா..!
விடுமுறை நாட்களில் வண்டியை விட்டு இறங்காமல் பத்து தடவைக்கும் மேலாக போயிட்டும் வந்துட்டுமே இருப்பாள்.! இப்படி வீடு தங்காத பொண்ணாக இருக்காளே என நினைத்துக் கொள்வான் நிஜாம். இப்படி வெளியிலேயே சுற்றிக்கொண்டிருப்பவள் கண்ணில் படாமல் போகவே, இன்று அவள் ஞாபகம் வந்து விட்டது!
பக்கத்தில் குடியிருப்பவர்கள் யாருடனும் இவர்களுக்கு அன்னியோனியமும் பரஸ்பர ஒட்டுதலும் இல்லை! எப்போதாவது பார்த்தால் ஜாகீர் சும்மா சிரிப்பான் அவ்வளவுதான். நிஜாமும் பார்த்தால் சிறுத்துக் கொள்ளுவான். அதேபோலத்தான் ரிஸ்வானாவும்.! வீட்டுக்கார அம்மாவிடம் கூட பேசமாட்டாள்..! உரிமையாளர் கீழே குடியிருக்கிறார்கள். இவர்கள் மாடியியில்.! இதனால் யாருக்கும் தெரியாமல் வீட்டை காலிபண்ணிட்டு போயிட்டாங்களோ… ச்சே..! நமக்கு ஏன் தேவையில்லாத இந்த வீண் எண்ணங்களும் ஆராய்ச்சியும் என்று நினைத்துக்கொண்டான் நிஜாம்..
வாடகைக்கு குடியிருப்பவர்கள் சிலர் இப்படித்தான் யாருடனும் ஒட்டமாட்டார்கள்! அவர்கள் குடி வருவதும் தெரியாது. வீட்டை காலிபண்ணிக் கொண்டு போவதும் தெரியாது. இரவுகளில் ஊர் அடங்கிய பிறகே எல்லாம் நடக்கும். இரண்டு வீடு தள்ளியிருக்கும் மம்மது கனியண்ணன் வீட்டில் குடியிருப்பவர் சில மாதங்களாகவே வாடகை கொடுப்பதில்லை என இரண்டு நாட்களுக்கு முன் சரியான சண்டை.!
அப்போதுதான் வேலை முடிந்து வந்த நிஜாம் ஜாஸ்மினுடன் பேசிக்கொண்டிருந்தான். காஷ்மூச்சென்று வெளியே வாக்குவாதம் நடக்கும் சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்தான். மம்மது கனியண்ணன் வீட்டு காம்பௌண்டுக்குள் இருந்துதான் பலத்த பேச்சும் சண்டை போல வாக்குவாதமும்! வீட்டு முன்பு சிலர் கூடி நின்றிருக்க, நிஜாமும் சென்றான். பக்கத்து வீட்டுப் பெண்கள் நின்றிருந்த பக்கம் ஜாஸ்மினும் சென்று நின்றபடி, மெல்லிய குரலில் “பாத்தீக்கா என்ன பிரச்சன..?” என்றாள்.
“வாடகையே குடுக்க மாட்டேங்கிறாங்களாமாம்…! கேக்கும்போதெல்லாம் பள்ளில குடுக்குறேன்…. அங்க போயி வாங்கிக்கேனு சொல்லுறாராம் அந்தாளு.!” பாத்துமுத்துபீவியக்கா மெதுவாக பதில் சொன்னது.
“வீட்டுக்காரங்ககிட்ட வாடக குடுக்காமா பள்ளில எதுக்கு குடுக்குறாராம்..?”
“ஏற்கனவே ஏதோ பிரச்சன ஆயிரிக்குது…! அடிக்கடி இப்பிடிதா நடக்கும். அதனால பள்ளிலாத இனி வாடக குடுப்பேனு குடியிரிக்கிற பாய் சொல்லியிரிக்காரு போல!. அப்பருந்து வாடகயே குடுக்கிறதில்லயாம்.”
“பள்ளில போயி கனியண்ணன் சொல்ல வேண்டியதுதானே.?” ஜாஸ்மின் கேட்டாள். அவளுக்கு காரணம் ஒண்ணும் சரியாக புரியவில்லை.
“நாந்தான ஒனக்கு என் ஊட்ட வாடகைக்கு உட்டிரிக்கேன். நீ எங்கிட்டத்தானே வாடக தரணும்… நா எதுக்கு பள்ளில போயி கேக்கணும்? நீ மொதல்ல ஊட்ட காலி பண்ணுனு கனியண்ணன் சொல்றாரு. அதுக்குதா இன்னிக்கு சண்ட..!”
“நியாயந்தானே? வாடக குடுக்க முடியலேன்னா ஊட்ட காலி பண்ணிட்டு போக வேண்டியதுதானே? பள்ளிக்காரங்க இதுல எங்க வாராங்க..? ஊட்டு வாடகை குடுக்குறதுக்கு பள்ளிக்காரங்கள இந்தாளு எதுக்கு நடுவுல வைக்கணும்..?” ஜாஸ்மின் தன் சந்தேகங்களை கொட்டினாள்.
அந்தம்மா அதுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. சிலர் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயன்றார்கள். குடியிருப்பவர் எகிறிக்கொண்டே இருந்தார். நிஜாமுக்கு அந்தாளு மீது சரியான கோபம் ஏற்பட்டது. வாடகைக்கு குடியிருப்பவர் கொஞ்சம் அடங்கிப் போகாமல் இதென்ன அடாவடித்தனம்..! வாடகையும் குடுக்கமாட்டாராம்.. வீட்டையும் காலி பண்ணமாட்டாராம்..! இந்தாளுக்கு சரியான லொள்ளுதான். மம்மது கனியண்ணன் வயசானவர் என்று இந்தாளு இப்படிப்பண்ணுறாரு போல..! கொஞ்சம் சவுண்டு விடலாமா என யோசித்தான். விவரம் எதுவும் சரியா தெரியாம பேசுனா சரியாகாது நமக்கேன் வம்பு என மௌனமாக வேடிக்கை பார்த்தான் நிஜாம்.
மம்மது கனியண்ணன் வாடகைக்கு கொடுத்திருக்கும் வீட்டில் இவ்வளவு பிரச்சனை இருப்பதே நிஜாமுக்கு இப்போதுதான் தெரிகிறது.! வாடகை கொடுக்கும் பிரச்சனையில் பள்ளிக்காரர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்.? இந்தாளு எப்போது குடிவந்தார் என்ற விவரமே அவனுக்கு தெரியவில்லை. கனியண்ணன் வீட்டுக்கு குடிவருபவர்கள் யாரும் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியதே இல்லை.! காரணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் சாந்தமான மனுஷன் ஆச்சே! பிறகு ஏன் குடி வந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவே காலி பண்ணிக்கொண்டு போய்விடுகிறார்கள்.!
கொஞ்ச நேரம் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. அதற்குள் ஜமாத்திலிருந்து இரண்டு மூன்றுபேர் வந்து பேச்சு வார்த்தை நடந்தது. கனியண்ணன் அவர்களை வீட்டுக்குள் அழைத்துச்சென்று விட ஒவ்வொருவராக நகர்ந்து நகர்ந்து கூட்டம் கலைந்தது.
வீட்டுக்குள் வந்ததும், ”என்ன ஜாஸ் அவுங்க பிரச்சன..? ஒண்ணும் புரியல!” என்றான் நிஜாம்.
“ஆமாங்க. நானும் விசாரிச்சேன். எதுக்கு பள்ளிலத வாடகை குடுப்பேன்னு அந்தாளு சொல்றாரேனு கேட்டேன். அந்தாளு குடிவந்தப்பவே ஏதோ பிரச்சன ஆயிருக்காம். அது ஜமாத்து வரைக்கும் போயிருக்கு. அதனால ஜமாத்துலதா அந்தாளு வாடகைய குடுப்பாராம். ரெண்டு மூணு மாசத்துக்கு அப்பறம் வாடகையே குடுக்கிறதில்லயாம்! அட்வான்ஸ் பணத்துல வாடகை பூரா கழிஞ்சிருச்சாம். இப்ப மூணு நாலு மாச வாடக பாக்கியாம். அத கேக்கப்போயித்தா இன்னிக்கு மறுபடியும் பிரச்சனயாம்!”
“ரெண்டு பசங்க இருந்தும் பாரு அவரோட நெலமய?”
“ஒருத்தர் சவுதில இருக்காருனு தெரியும். இன்னொரு மகன் அவரு கூடத்தானே இருந்தாரு..? கொஞ்ச நாளா காணமேங்க?”
“பெங்களூர்ல ஏதோ வேல கெடச்சுருச்சுனு போயிட்டான்… வயசான காலத்துல பாவம். இவுங்க தனியா இருக்காங்க ஜாஸ்!”
“பெரும்பாலும் வாடகைக்கு குடியிருப்பவங்களுத்தா வீட்டு சொந்தக்காரங்களால இடைஞ்சல்களும் பிரச்சனைகளும் வரும்ங்க! ஆனா நம்ம மம்மது அண்ணனுக்கு வாடகைக்கு வர்றவங்களால பிரச்சன பாருங்க!” என்றாள் ஜாஸ்மின்.
மறுநாளே அந்தப் பிரச்சனைகள் எதுவும் ஒரு பொருட்டாக அங்குள்ள யாருக்கும் தோன்றாது. அவ்வளவுதான் நமக்கும் அந்த பிரச்சனைக்கும் என்ன இப்ப என்று விட்டு விடுவார்கள். இதுதான் மனித இயல்பு. நிஜாமும் அதை சுத்தமாக மறந்து போனான். இன்று ரிஸ்வானாவைப் பற்றி ஞாபகம் வர வரிசையாக எல்லாம் மனத்திரையில் ஒரு ஓட்டம் ஓடியது.
மனுஷங்க வாழ்கையில் ஒவ்வொருத்தருக்கும் ஏதாச்சும் ஒரு வகையில பிரச்சன இருந்துட்டேதா இருக்கும்! இனிப்பும் கசப்பும் போல.! பகலும் இரவும் போல! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. பிரச்சனை இல்லாத மனுசங்களே யாரும் இருக்கமாட்டாங்க! பணக்காரனுக்கும் அவனுக்கு தகுந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இது இறைவனின் நியதி. நாட்டம். மனுசனுக்கு பிரச்சனைகளே இல்லேன்னா இறை சிந்தனையே இல்லாமல் போய்விடும்.
“நமக்குத்தான் எல்லா பிரச்சனைகளும் வருது! அவன் பாரு எந்த பிரச்சனையும் இல்லாம ஜாலியா இருக்கான்.!” இப்படித்தான் ஒவ்வொருத்தனும் நினைச்சுக்கிறான்.
கனவு கலைந்தது போல சட்டென எல்லாம் கலைந்து போனது! என்ன இன்று இப்படியான எண்ணங்களும் சிந்தனைகளும் வந்து குழப்புகிறது என எண்ணிக்கொண்டே “ஜாஸ்! வர்றேன்” என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்து அலுவலகம் கிளம்பினான் நிஜாம். (கதை தொடரும்)
கட்டுரையாளர்: ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்