மணிப்பூரில் அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம் (ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன்) மே 3 ஆம் தேதி நடத்திய பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை மணிப்பூர் அரசு பிறப்பித்தது. மாநிலம் முழுவதும் சில நாட்களுக்கு மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தீவைப்பு தொடர்பான சில படங்களை பகிர்ந்து, அதில் பிரதமர் நரேந்திரர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை டேக் செய்து, “மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்” என்று எழுதி இருந்தது உலகம் முழுவதும் பரவியது.
பட்டியல் பழங்குடி (எஸ்டி) பிரிவில் மெதேயி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. மத்திய அரசின் பரிசீலனைக்கும் இதை அனுப்புமாறு நீதிமன்றம் தனது உத்தரவில் கேட்டுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மே 3, புதன்கிழமை அன்று தலைநகர் இம்ஃபாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டோர்பாங் பகுதியில் ‘பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு’ பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இந்தப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.
மணிப்பூரின் மக்கள் தொகை சுமார் 28 லட்சம். இதில் மெதேயி சமூகத்தினர் 53 சதவிகிதம் உள்ளனர். இந்த மக்கள் முக்கியமாக இம்ஃபால் பள்ளத்தாக்கில் குடியேறியுள்ளனர். மணிப்பூரில் பொதுவாக மலைப்பகுதிகளில் வாழும் பல்வேறு குக்கி பழங்குடியினர் தற்போது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவிகிதமாக உள்ளனர்.
மணிப்பூரில் உள்ள மெதேயி சமூகத்தினர் நீண்ட காலமாக எஸ்டி அந்தஸ்து கோரி வருகின்றனர். மணிப்பூர் பட்டியல் பழங்குடியினர் கோரிக்கை கமிட்டி, மாநில அரசிடம் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக்கோரிக்கையை விடுத்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த அரசும் இந்தக்கோரிக்கை தொடர்பாக எதுவும் செய்யவில்லை. எனவே மெதேயி பழங்குடியினர் குழு நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் இந்தக் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. ஆனால் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கத்தொடங்கியது.
மெதேயி சமூகத்திற்கு, எஸ்சி மற்றும் ஓபிசியுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் கிடைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் மெதேயிகள் எல்லாவற்றையும் அடைய முடியாது. மெதேயிகள் பழங்குடியினர் அல்ல. அவர்கள் SC, OBC மற்றும் பிராமணர்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
மெதேயி சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வழங்கினால் தங்கள் நிலங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால்தான் தங்கள் இருப்புக்கு ஆறாவது அட்டவணை வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
மெதேயி இனத்தை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வேலைகள், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் வரிச்சலுகைக்கு மட்டுமல்ல. இந்தக் கோரிக்கை அவர்களின் பாரம்பரிய நிலம், கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக செய்யப்படுகிறது என்று மெதேயி மக்களுக்கு எஸ்டி அந்தஸ்து கோரி நீதிமன்றத்திற்கு சென்ற மணிப்பூரின் பட்டியல் பழங்குடியினர் கோரிக்கைக் குழு தெரிவித்தது.
இதனிடையே மணிப்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துள்ளனர். வன்முறை தொடங்கியவுடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், எந்த சமூகம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அந்த சமூகம் குறைந்த எண்ணிக்கையிலான சமூகத்தைக் குறிவைத்தது. இதன் விளைவாக, மெதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூகத்தினரின் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின.
வன்முறை அதிகரித்ததால், மெதேயி ஆதிக்க பகுதிகளைச் சேர்ந்த குகி பழங்குடியினரும், குகி ஆதிக்க பகுதிகளைச் சேர்ந்த மெதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
மணிப்பூரில் வன்முறை உச்சத்தில் இருந்த நேரத்தில் பல இடங்களில் காவல் நிலையங்களில் இருந்த அரசு ஆயுதங்களை மக்கள் கொள்ளையடித்ததாக சில செய்திகள் வந்தன.
புகாவோ பகுதியில் இரவு முழுவதும் தங்கள் கிராமத்தை காத்துக்கொண்டிருந்த மெதேயி மக்கள், காவல் நிலையங்களில் இருந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.
“எங்கள் கிராமங்கள் தாக்கப்பட்டபோது, எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நிர்வாகத்திடம் கெஞ்சினோம். ஆனால் யாரும் வரவில்லை. எனவே ஆயுதம் ஏந்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நீங்கள் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் அல்லது உங்கள் ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள் என்று நாங்கள் போலீஸாரிடம் சொன்னோம்,” என்று பெயர் வெளியிட விரும்பாதவர்கள் கூறினர்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் சாதி அல்லது சமூகத்தின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி வீட்டு வாசல் கதவுகளில் ஒட்டியுள்ளனர். இப்படி சாதியை அறிவிப்பதன் மூலம் ஒருவேளை தங்கள் வீடுகளைக் காப்பாற்ற முடியும் என்றும், கும்பல் தாக்குதல் நடத்தினால் சாதியின் பெயரைப் படித்தபிறகு வீட்டை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
சாதி மத மோதல்களை ஏற்படுத்தி குளிர்காய்ந்து கொண்டிருக்கும் பாஜகதான் மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கிறது. இந்த வன்முறையை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம். படுகொலைகளை ஒரே நாளில் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் மாநில, மத்திய பாஜக அரசுகள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதால், பெரும் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தியதோடு ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாக காரணமாகவும் ஆகிவிட்டது. சமத்துவம் சமூக நீதி வளர்ச்சி போன்றவற்றை முன்னிறுத்தி ஆட்சி செய்யாமல் வேறுபாடுகளை வளர்த்து வெறுப்பை ஊண்றி ஆட்சிக்கு வந்தவர்களால் சாமானியர்களின் வலிகளை உணர முடியாது என்பது மணிப்பூர் வன்முறை சொல்லும் தீர்க்கமான செய்தி.