பிரதமர் மோடி. ஊடகத்தை எதிர்கொள்ளத் தெரியாதவர், அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மக்கள் பணத்தையும் அதிகாரப் பிரயோகத்தையும் பின் வாசல் வழியாக தாரை வார்த்தவர், பாஜகவின் தேர்தல் பிரச்சாரகர் என பல முகங்களுக்கு சொந்தக்காரராக அறியப்பட்டாலும், 2002 ஆம் ஆண்டு அவர் முதல்வராக இருந்த போது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் கலவர நாயகனாகவே அதிகம் பேசப்பட்டவர்.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் கடுமையாக தாக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. `இந்தச் சம்பவங்களின்போது கலவரத்தைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’ என மோடிமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இது தொடர்பாக மோடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பி.பி.சி ஊடகம் குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து, “India: The Modi Question” என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்போதைய மோடி அரசுமீது பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருக்கிறது.
பிபிசியின் ஆவணப்படம் வெளியான அடுத்த நாளே யூடியூபிலிருந்து நீக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தை பகிரும் இணைய இணைப்புகளை நீக்குமாறும் யூடியூப் மற்றும் ட்விட்டருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
2002ல் குஜராத்தில் வன்முறைச் சூழலை ஏற்படுத்தியதற்கு மோடிதான் நேரடிப் பொறுப்பு என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அறிக்கை கூறினாலும், குஜராத் வன்முறையில் முதல்வராக இருந்த மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பதை இந்திய மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
கோத்ரா ரயில் தீ வைத்து எரித்ததும் அதன்பிறகு கலவரம் செய்ததும் மோடிதான் என்பதை வாஜ்பாய் என்னிடம் கூறியிருந்தார் என்று வாஜ்பாயின் மருமகள் கூறிய செய்தி தொலைக்காட்சியில் தற்போது வெளியாகி இருக்கிறது.
குஜராத் கலவரத்தின்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார். எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வேன் என்று மோடியை வாஜ்பாய் கடிந்து கொண்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரங்களை இந்த நாடும் முஸ்லிம்களும் ஒருபோதும் மறந்துவிடமாட்டார்கள். அது ஒரு கொடுமையான இனப்படுகொலை என்று சர்வதேச பத்திரிக்கைகள் விமர்சித்திருந்தன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மோடிக்கு விசா வழங்கத் தடைவிதித்திருந்தன.
பிபிசி தயாரித்த ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தவைகள் மிகச்சில சம்பவங்கள்தான். சொல்லப்படாத ரணங்கள் உயிரோடு சாம்பலாக்கப்பட்டன. கூராயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டன. பச்சிளங்குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை இன வெறிக்கூட்டம்.
குஜராத் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் இந்நாள் வரை மோடி ஒரு மன்னிப்பும் கேட்கவில்லை அத்தகைய இரக்க மனமில்லாத சங்கப்பரிவார வார்ப்பு அவர். முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைத் தாக்குதல்கள்தான் மோடியை இத்தனை உயரத்துக்கு உயர்த்திய இரகசியம் என்பதை எல்லோரும் அறிவர்.
2004 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 வருடங்கள் முழுவதுமாக மத்திய ஆட்சி அதிகாரம் காங்கிரஸ் கையில்தான் இருந்தது. ஆனாலும், குஜராத் கலவர நாயகன் மோடி தண்டிக்கப்பட வில்லை. அதற்கான முயற்சிகள் கூட சரிவர எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே இன்று காங்கிரசும் நாட்டு மக்களும் பெரும் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோடியின் அரசியல் தொடக்கமும் அதன் பிறகான வளர்ச்சியும் திட்டமிட்ட சதியின் விளைவாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மோடியையும் அவர் சார்ந்த போலி தேசப்பற்றாளர்களையும் மிகச் சரியாக இனம் கண்டு கொண்டவர் ராகுல் காந்திதான். ராகுலைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால் காங்கிரஸ் என்பது பாஜகவின் இன்னொரு அரசியல் பிரிவு என்று இப்போது எல்லோராலும் நம்பப்படுகிறது.
தவறு செய்தவன் தண்டனை பெற்றே ஆக வேண்டும் என்பது இயற்கை நியதி. அது வரும் 2024 மக்களவைத் தேர்தலில் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாம்.