நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஆரம்பித்த வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இட ஒதுக்கீடு, மதவாதம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களை மோடியும் அவரது அமைச்சர்களும் தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரித்து வருகிறார்கள்.
“ஓபிசியினருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டில் முஸ்லிம்களை உள்ளே கொண்டு வந்துள்ள கர்நாடக மாடலை நாடு முழுவதும் விரிவுபடுத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது. ஒரு பிரிவினரை திருப்தி படுத்துவதற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் காங்கிரஸ் தரம் தாழ்ந்து வருகிறது”. “அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி, தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்து இட ஒதுக்கீட்டுப் பலன்களை பறிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது”. “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பையும் நிராகரித்தது”. “காங்கிரஸ் கட்சி உங்கள் சொத்துக்களை பறித்து நாட்டின் வளங்களில் முஸ்லிம்முகளுக்கு முதல் உரிமை என்று விநியோகிக்க விரும்புகிறது”. “பரம்பரை வரியை விதித்து மக்களின் உரிமையைப் பறிக்க காங்கிரஸ் நினைத்தது. அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு சிறு வாய்ப்புக் கூட கிடைக்கக்கூடாது” என்று முழுமையான ஆர்எஸ்எஸ்காரராக பேசி வருகிறார் மோடி.
ஒரு நாட்டின் அமைதியை, வளர்ச்சியை நிர்மூலமாக்கி விடும் தீய சக்திதான் வெறுப்புப் பேச்சு. ஆனால், அதைப் பற்றி துளியும் யோசிக்காமல், கொடிய விஷம் தோய்ந்த வார்த்தைகளை வெறுப்புணர்வோடு தொடர்ந்து பேசி வருகிறார் காபந்து பிரதமர். இந்திய ஆட்சி பீடத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர், ‘இந்தியாவின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாப்பேன்’ என சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர், “உங்கள் செல்வத்தை ஊடுருவல் காரர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா..?”என இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு வெறுப்பை உமிழ்ந்திருப்பது அரசியல் அநாகரிகம்.
`400-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க-வும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெல்லும்’ என்று பெரும் நம்பிக்கையோடு பிரசாரத்தை ஆரம்பித்தார் மோடி. ஆனால், ‘இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த அளவு சீட்டுகள் கிடைக்காது’ என்று செய்திகள் வரத் தொடங்கியவுடன், மதவாதத்தையும் வெறுப்பு பேச்சையும் சிறிதும் தயக்கமின்றி பேசிக் கொண்டிருக்கிறார் மோடி.
பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கத் தயங்கிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றங்களும் மோடிக்கு எதிரான வழக்குகளை கையாளுவதில் பின்வாங்குகிறது.
குஜராத் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பிரதமர் மோடி பேசிய பேச்சுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தன. அவர் மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
`இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை எனது தாய்மார்களின், சகோதரிகளின் தாலியைக் கூட விட்டுவைக்காது’ என்று காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தார் மோடி. மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தது. ஆனால், இதுவரை எதிர்க்கட்சியினர் அளித்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தேர்தல் ஆணையம், பாஜக தொடர்பாக வரும் புகார்களில் மட்டும் வேகம் காட்டி வருவதாகவும் எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜக வேட்பாளர் ஹேமமாலினி குறித்து காங். கட்சியைச் சேர்ந்த ரன்தீப் சுர்ஜேவாலா சர்ச்சையாகப் பேசினார் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் உடனடியாக நோட்டீஸ் அனுப்புகிறது. விசாரணை நடத்துகிறது. ஆனால், மோடி விசயத்தில் இதுவரை மவுனம் மட்டுமே பதிலாக இருக்கிறது. இந்த மாதிரியான வெறுப்பு பேச்சு சட்டப்பிரிவு 153படி குற்றச்செயல் என வகைப்படுத்துகிறது.
`அர்பன் நக்சல்’ என்ற ஒரு வார்த்தையே இல்லை என்று நாடாளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது. ஆனால் மோடி அர்பன் நக்சல் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.
2019இல் கடைசிக்கட்ட பிரச்சாரத்தின் போது தியான குகையிலிருந்து பரப்புரை செய்தார். அதைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்தன. அதற்குக்கூட இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மோடியின் பதவிக்காலம் முழுவதுமாகவே கேள்விக்குறியாக உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றார்கள். ஆனால், ஒரே கட்டமாகக் கூட தேர்தலை நடத்த முடியவில்லை. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படவில்லை என்று பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆணையத்தில் உள்ள மூன்று ஆணையர்களும் பாஜக நியமனம் செய்த ஆதரவாளர்களைப்போல்தான் உள்ளனர். ஒரு தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமிக்கும். ஒரு ஆணையரைக் குழுவில் உள்ள நீதிமன்ற நீதிபதி நியமிப்பார். ஒரு ஆணையரை எதிர்க்கட்சித் தலைவர் நியமிப்பார் என்பதுதான் நியதி. ஆனால், அதில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நீர்த்துப் போகச் செய்துவிட்டது பாஜக அரசு. பிறகு எவ்வாறு அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்ப முடியும்?