இந்தியாவின் 19 ஆவது மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு சம்பந்தமாக எதிர்கட்சிகள் சமூக ஆர்வலர்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் கூட தேர்தல ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிப்பு செய்யப்பட்டு விட்டால் அரசுக்கான அதிகாரங்கள் முற்றுப்பெற்று விடும். நாட்டின் அதிகாரம் மொத்தமும் தேர்தல் ஆணையத்தின கீழ் வந்து விடுகிறது. தேர்தல் ஆணையம் எவர் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்டு இருக்கிறது. ஆனால் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சிக்கு வந்து விடும் என்று ஆணையம் அச்சப்படுவதாகத் தெரிகிறது. அதே நேரம், இந்திய அரசமைப்புச் சட்டமானது தேர்தல் ஆணையத்துக்கு எத்தகைய அதிகாரம் வழங்கி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

1) இந்திய தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சட்ட அதிகாரம் உடைய அரசு நிறுவனம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 324ன் கீழ் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல்கள் நடத்த தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்பாகும். தேர்தல் ஆணையத்திற்கு இந்திய அரசியலமைப்பை பொறுத்து, தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் நீதித்துறை போன்று சுதந்திரமாக  செயல்பட வேண்டும் என்பதற்கான  அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள்,  மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் அச்சம் இல்லாமலும் சார்பு இல்லாமலும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்.

2) தேர்தல் சமயத்தில் மத அடிப்படையில் வெறுப்பை உண்டாக்கும் படி பேசும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1950ல் அன்றைய ஆட்சியாளர்கள் கருதி கீழ் வரும் அம்சங்கள் தவறான நடத்தைகள் மற்றும் தேர்தல் சார்ந்த குற்றங்கள் என வகை செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் 1951ஆம் ஆண்டு இயற்றினர்.

  1. A) மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 123(3)ன் கீழ் மதம், இனம்,சாதி, சமுதாயம் போன்ற அடிப்படையில் வாக்கு கேட்பது அல்லது மத முத்திரைகள் பயன்படுத்துவது தேசிய சின்னங்களை பயன்படுத்துவது தவறான நடத்தைகள் ஆகும்.
  2. B) இந்திய குடிமக்களின் பல்வேறு பிரிவினரின் மத்தியில் மதம், இனம், சாதிகள், சமுகம் அல்லது மொழிகள் அடிப்படையில் பிளவுகள் உண்டாக்கும் வகையில் பகை உணர்வுகளை தூண்டுவதும் வெறுப்பை தூண்டுவதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 123(3A) படி தவறான நடத்தை ஆகும். பிரிவு 125ன் படி தேர்தல் குற்றமும் ஆகும்.

3) மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் நோக்கம் பகுதி Vllல் கூறப்படுகிறது. அதில், ஒழுக்கம் கெட்ட நபர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தேர்தல் நடைமுறையானது கெட்டு விடவில்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

4) மாண்பமை உச்ச நீதிமன்றம் தனது தொடர்ச்சியான பல்வேறு தீர்ப்புரைகளில் இந்திய அரசியலின் மதச்சார்பற்ற கொள்கைகள் மாசு படக்கூடாது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது. ஒரு வேட்பாளருக்கு  மதத்தின் அடிப்படையில் மக்கள்  வாக்களிக்க வில்லை என்பதையும் மதத்தின் அடிப்படையில் ஒருவருக்கு வாக்குகள் மறுக்கப்பட்ட வில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 16-03-2024 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதையும் அறிவிப்பு செய்தது. 2024 பொதுத் தேர்தலில் வெறுப்பை தூண்டும் பேச்சுகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் கட்சிகளுக்கு எதிராக 2ம் நிலை தேர்தல் ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்தார். பிரச்சினைகள் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் அமைய வேண்டும், சாதிகள், மதங்கள் அடிப்படையிலான வெறுப்பு பேச்சுகளை சகித்துக் கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தினார்.‌ தனி நபர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் எச்சரித்தார். தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும் சமயம் அமைதியை பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  1. i) தேர்தல்கள் நடக்கும் சமயம் அரசியல் கட்சிகள் வன்முறையில் ஈடுபட்டால் இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்து கொள்ளும்.
  2. ii) நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் மேலும் நாம் கணிப்பொறி காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், நாம் பேசும் அனைத்தும் 100 ஆண்டுகளுக்கு அழியாமல் கணிப்பொறியில் பாதுகாப்பாக இருக்கும், கணிப்பொறியில் எப்போது தேடினாலும் கிடைக்கும் என்பதால் தேர்தல் பிரச்சாரத்தின் போது கடும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி உங்களது உத்தரவுகளை முற்றிலும் மறுத்து,  அவமதித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் (1951) கேலி செய்யும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பேரணியில் வெறுப்பை தூண்டும் விதமாக  பேசினார்.

“நகர்ப்புற நக்சல்கள்”  (காங்கிரஸ் கட்சி) உங்கள் மதிப்பிற்குரிய மாங்கல்யத்தை கூட விட்டு வைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் போவார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,  தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் உள்ள தங்கத்தை அவர்கள் கணக்கிடுவார்கள் அவைகளின் தகவல்களை திரட்டி கொள்வார்கள். பிறகு உங்கள் தங்க ஆபரணங்களை பங்கு வைத்து கொடுப்பார்கள். யாருக்கு கொடுப்பார்கள். மன்மோகன் சிங் அரசு, நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றது.

இதற்கு முன்னர் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த சமயம் நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றது.

நாட்டின் வளங்கள் யாருக்கு வழங்கப்படும் என்பது இதில் இருந்து தெரிகிறதா? அதிக குழந்தைகள் பெற்றுள்ளவர்களுக்கு, ஊடுறுவி வந்தவர்களுக்கு நாட்டின் வளங்கள் கொடுக்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த செல்வத்தை ஊடுறுவி வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் சம்மதிப்பீர்களா?

இது உங்களுக்கு சம்மதம் தானா? நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த செல்வத்தை பிடுங்குவதற்கு அரசுகளுக்கு உரிமை இருக்கின்றதா? நமது தாய்மார்கள் சகோதரிகள் வசம் உள்ள தங்க நகைகள் காட்சிப் பொருட்கள் இல்லை. அவர்களின் சுய மரியாதையோடு தொடர்புடையது. தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கள்யத்தின் மதிப்பு தங்கத்தின் மீதோ அதன் விலையின் மீதோ இல்லை. அவர்கள் வாழ்க்கையில் அது ஒரு கனவு. அந்த கனவை அழிப்பது பற்றியே  காங்கிரஸ் கட்சி பேசுகிறது.

இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் 06-12-2006 அன்று பேசியதை மின்னணு ஊடகங்கள் சில வேண்டுமென்றே திரித்துக் கூறின. அதற்கு பிரதமர் அலுவலகம் 10-12-2006 அன்று கீழ் கண்ட விளக்கம் அளித்தது.

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அரசின் வளங்கள் குறித்து கூறிய கருத்துக்கள் வேண்டும் என்றும் திட்டமிட்டும் ஊடகங்கள் திரித்து கூறியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவை தேவையற்ற சர்ச்சையை உண்டாக்கி விட்டன. மின்னணு ஊடகங்கள் அடிப்படையில்லாத சர்ச்சையை வேண்டும் என்றே உருவாக்கின.

பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சிறுபான்மை மக்களின் முன்னேற்றம் குறித்து இவ்வாறு தான் கூறி இருந்தார்:

“நம்முடைய ஒட்டு மொத்த முன்னுரிமையும் தெளிவாக இருப்பதாக நான் நம்புகிறேன்‌:  பட்டியல்/ பழங்குடி மக்கள், இதர பிற்பட்ட பிரிவினர், சிறுபான்மை மக்கள் மற்றும் ‘பெண்கள் மற்றும் குழந்தைகள்’ ஆகியோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டத்துடன், வேளாண்மை, பாசனம், நீர் மூலங்கள், ஆரோக்கியம், கல்வி, கிராமப்புற கட்டமைப்பின் முதலீடுகளில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது, பொதுவான உள் கட்டமைப்புகளுக்கு பொது முதலீடுகள் கொடுப்பது அவசியமாகிறது. பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான திட்டங்களை புதுப்பிப்பதும் இதில் அடங்கும். சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தேசத்தின் வளர்ச்சியின் பலனில் இருந்து சம பங்கு பெறுவதற்கு தகுதி உள்ளவர்களாக உயர்த்தும் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், தவிர, நாட்டின் வசமுள்ள ஒட்டு மொத்த வளங்களில் இருந்து முன்னுரிமை பெற தகுதி உடையவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் ஆயிரக்கணக்கான பொறுப்பும் அரசுக்கு உள்ளது” என்றார்.

மேலே உள்ள பத்தியை வாசிக்கும் போது, ‘நாட்டின் வளங்களில் முதல் உரிமை’ என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அன்று பேசியது முஸ்லிம்களை மட்டும் குறிப்பாக சுட்டி பேசியது இல்லை, முன்னுரிமை அளிக்கப்படும் பிரிவினர் குறித்து ஒரு பட்டியலை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அதில், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சிறுபான்மையர் அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தான் கூறி இருந்தார்.

பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இந்த கருத்தை கூறிய அன்றைய ஆண்டின் சமீபத்திய மாதங்களில் இந்திய பொருளாதாரம் மிகச்சிறந்த அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. பொருளாதாரம் தொடர்ந்து மேலும்  வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகளையும் புதிய வருமானத்தையும் உருவாக்கியது. பொருளாதாரத்தில் முன்னேறிய சமூகப் பிரிவினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து பலன் பெரும் போது சமூகத்தில் பலவீனமாகவும்  புறக்கணிப்பு செய்யப்பட்டும் இருக்கக்கூடிய பிரிவினருக்கு சிறப்பான கவனம் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் பல்வேறு சந்தர்ப்பங்களில் “இந்தியா ஒளிர வேண்டும். அனைவருக்காகவும் ஒளிர வேண்டும்” என்று கூறினார்.‌

பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்த பிறகும் பிரதமர் நரேந்திர மோடி வெட்கமே இல்லாமல் டாக்டர் மன்மோகன் சிங் பேச்சில் இருந்து முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சொன்னதை மட்டும் தேர்ந்தெடுத்து பேசுகிறார். காங்கிரஸ் கட்சி இந்துக்களின் சொத்துக்களை பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுத்து விடும் என்ற அச்சத்தை இந்துக்களின் மனதில் உருவாக்கும் கெட்ட நோக்கத்தில், டாக்டர் மன்மோகன் சிங் பேசிய கருத்தை திரித்து பேசுகிறார். அதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. முஸ்லிம்களை ‘ஊடுறுவி’ வந்தவர்கள் என்றும் அவர்கள் நாட்டின் வளங்களை பலவந்தமாக பிடுங்கிக் கொள்வார்கள் என்றும் முஸ்லிம்களை மறைமுகமாக குறியீடு செய்து பேசுவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்துக்களையும் முஸ்லிம்களையும் எதிரெதிராக நிறுத்தி வெறுப்பு நஞ்சை விதைக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கையில் தங்கம் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. அல்லது தங்கம் அல்லது சொத்துகளை கைப்பற்றுவது, அதை முஸ்லிம்களுக்கு பகிர்ந்து கொடுப்பது பற்றி எதுவுமே இல்லை. மின்னணு மற்றும் பத்திரிகை ஊடகங்கள் நரேந்திர மோடியின் தவறான பேச்சுகளை புறக்கணித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, மதத்தின் அடிப்படையில் இரண்டு சமூகங்கள் மத்தியில் பகையை உண்டாக்கி‌ பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கிறார். தேர்தல் குற்றங்களை திட்டமிட்டு உருவாக்குவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு தவறான செயல்களை அதிகப்படுத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பன்ஸ்வாரா தொகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் இந்திய முஸ்லிம்களை ஊடுறுவல்காரர்கள் என்றும் இந்துக்களின் செல்வங்களை கைப்பற்றி இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கொடுக்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி வைத்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டுவது, இந்திய முஸ்லிம்களை அதிக குழந்தை வைத்திருப்பவர்கள் என்று குறிப்பிடுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951க்கும் தேர்தல் நடத்தை விதிகளுக்கும் நடுக்கம் உண்டாக்கும் அளவுக்கு குற்றச் செயல் ஆகும். இந்திய முஸ்லிம் குடிமக்கள் அனைவரும் ஊடுறுவி வந்தவர்கள் என்றும் அவர்கள் இந்திய நாட்டின் வளங்களை பலவந்தமாக இந்துக்களிடம் இருந்து பிடுங்கி கொள்வார்கள் என்றும் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டுவது கிரிமினல் குற்றம். இதுபோன்று ஒரு மதத்தை குறிப்பிட்டு பேசுவதன் பின்னுள்ள நோக்கம் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் மதிப்புகளை அழித்து அரசியல் ஆதாயம் அடைவது ஆகும். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு மக்களை அழைப்பதும் இந்த வெறுப்பு பேச்சின் நோக்கம் ஆகும். அவர் இந்திய பிரதமர் அலுவல்களுக்காக எடுத்துக்கொண்ட உறுதிமொழியை அவரே மீறி விட்டார். மேலும், இது,  இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பிரதமர் செய்யும் துரோகம் ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு நாகரிகமான அனைத்து நாடுகளின் செய்தி ஊடகங்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது. 17000க்கும் அதிகமான இந்திய குடிமக்கள் மோடியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி‌யதும் 16-03-2024ல் தேர்தல் ஆணையம் வெளியிட்ட நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கும் படியும், இந்திய தேர்தல்களில் ஊழல் மற்றும் தேர்தல் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வருவதில் தேர்தல் ஆணையம் ஒரு முன்னுதாரணத்தை உண்டாக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கும் ஆணையத்தின் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினார்கள்.

தேர்தலில் ஒரு வாக்காளர் சுதந்திரமாக வாக்களிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் வாக்காளர் சிந்தனையை முடக்குவது, கட்டுப்படுத்துவது ஒருபோதும் இருக்க கூடாது. ஆனாலும், தேர்தல் ஆணையம் காட்டும் மவுனம், ஆணையத்தின் காதுகள் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது. மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு இணக்கமாகப் போவதை காட்டுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நேரத்தில் நடக்கும் விதி மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சட்ட அதிகாரம் உடைய அமைப்பு, ஆணைய அதிகாரிகள் அரசியல் சட்டத்தின் கீழ் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி அதிகாரிகள் தங்கள் சட்டத்தின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டவே இதை உங்களுக்கு எழுதுகிறோம்.  தன்னுடைய பதவியின் தரத்தை குறைக்கும் விதமாகவோ சட்டத்திற்கு முரணாக செயல்படவோ  பிரதமர் பதவிக்கும் குறைவான தகுதியுடைய எந்த ஒரு நபரையும் கூட அனுமதிக்க கூடாது.

02-01-2024ல் தேர்தல் ஆணைய கடிதத்தின் குறிப்புரை எண்:35ன்படி 2024 தேர்தல் நடத்தை விதிகளின் பிரிவு 14ல் உள்ள குறிப்புரையில் சுருக்கமாக கூறப்படுவது தலைமை தேர்தல் ஆணையர், துணை தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் அதிகாரி தேர்தல் பரப்புரையில் விதிமீறல்கள் இருப்பதை கண்டால் அரசியல் கட்சிக்கும் நட்சத்திர பேச்சாளருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும்.

சட்டம் மற்றும் வழிகாட்டல்கள் படி, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மோடியை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமும் தகுதியும் உள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கவும் முடியும். முன்பு சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவுக்கு வெறுப்பு பேச்சு காரணமாக 6 ஆண்டுகள் தேர்தல்  பரப்புரைகள் செய்ய தேர்தல்  ஆணையம் தடை விதித்து உத்தரவு இட்டது. வெறுப்பு பேச்சு சம்பந்தமாகவும் சமூக ஒற்றுமைக்கு இடையூறு செய்வதற்கு எதிராகவும் தேர்தல் ஆணையம் தனது விதிகளை சுமத்தி நடவடிக்கை எடுக்க முடியும்.  ஆனால், தற்போதுள்ள ஆணையமானது எதிர்கால ஆணையத்துக்கு தவறான முன்னுதாரணத்தை உண்டாக்கி விடக் கூடாது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *