பருவநிலை மாற்றத்தால் கடந்த 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது உலகம் மிக வேகமாக வெப்பமாகி வருகிறது. இதன் காரணமாக, உலகெங்கிலும் கடும் வறட்சி, காட்டுத்தீ, மழை வெள்ளம் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பல்வேறு அழிவுகளை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் ஐ.நா.வின் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசுகளுக்கு இடையேயான குழு (IPCC – Intergovernmental Panel on Climate Change) சுமார் 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால் ஒருங்கிணைந்து ஒரு அறிக்கையை தயார் செய்தனர். இந்த அறிக்கையை உலகின் 195 நாடுகள் அங்கீகரித்தன. தற்போதைய கார்பன் உமிழ்வு (Carbon Emission) விகிதம் நீடித்தால் நிலைமை இன்னும் வேகமாக மோசமடையும் என்றும்; மனித இனம் இன்று தேர்வு செய்யும் வழிமுறைகளைப் பொருத்தே இவ்வுலகின் எதிர்காலம் அமையும் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
1850 முதல் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் தான் உலகின் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. ஐபிசிசி (IPCC – Intergovernmental Panel on Climate Change) அறிக்கையில் உலகின் சராசரி வெப்பநிலை இனி 2.1°C இல் இருந்து 3.5 °C வரை உயரும் என்று தெரிவித்துள்ளது. இது 2015 பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட 1.5°C – 2°C வரம்பை விட அதிகம். சர்வதேச நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வை தீவிரமாக கட்டுப்படுத்திடும் பட்சத்தில் கூட வரவிருக்கும் ஆண்டுகளில் உலக வெப்பநிலை 1.5°C வரம்பைவிட அதிகமாக உயரும் என்று அறிக்கை கூறுகிறது.
1990களில் இருந்து ஆர்க்டிக் கடலில் உள்ள பனிப்பாறைகளின் உருகுதலுக்கு கார்பன் உமிழ்வு மிகப்பெரும் காரணியாய் உள்ளது. 1,000 ஆண்டுகளில் இருந்ததை விட கடந்த பத்தாண்டுகளில் ஆர்க்டிக்கடல் பனி மிக வேகமாக உருகி உள்ளது. இந்த நூற்றாண்டில் இமயமலையில் பனி மூடிய பகுதிகள் மற்றும் பனிப் பாறைகளின் அளவுகள் குறையும் என்றும் திபெத்திய பீடபூமி மற்றும் இமயமலையில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் ஐபிசிசி அறிக்கை எச்சரித்தது.
உலக வெப்பநிலை உயர்வு 1.5°Cல் கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள கடல் மட்டம் அடுத்த சில ஆண்டுகளில் 2-3மீட்டர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11,000 ஆண்டுகளில் பார்த்திடாத வேகத்தில் கடல் வெப்பமடைந்துள்ளது.
1901-1971 இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில் சமீபத்திய கடல் மட்ட உயர்வு விகிதம் சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடலோரப் பகுதிகள் இந்த நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்து கடல் மட்ட உயரும் என்றும், இது தாழ்வான பகுதிகளில் அடிக்கடி கடுமையான வெள்ளம் மற்றும் கடலோர அரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து வந்த தீவிர கடல் மட்ட மாற்றங்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடும். இதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் கடற்கரை வாழ்விடங்கள் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும்.
ஆசிய நாடுகளின் நிலவரம்
- 1850-1900 உடன் ஒப்பிடுகையில் குளிரின் தீவிரம் குறைந்து, வெப்பத்தின் தீவிரம் அதிகரிக்கும் போக்கு அடுத்து வரும் ஆண்டுகளில் தொடரும்.
- கடல் வெப்ப அலைகள் தொடர்ந்து அதிகரிக்கும்.
- ஆசியாவின் பெரும்பகுதிகளில் சராசரி மழைப்பொழிவு அதிகரிக்கும்.
- ஆசியாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில், மேற்பரப்பு காற்றின் சராசரி வேகம் தொடர்ந்து குறையும்.
- இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் பனிப்பாறைகள் மற்றும் பருவகால பனிகாலம் மேலும் குறையும்.
- ஆசியாவின் உயர் மலைகளில் பனிப்பாறை உருகி மழைநீருடன் கலந்து ஓடுவது (Glacier runoff) இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அதிகரிக்கும். பின்னர் பனிப்பாறைகளின் இழப்பின் காரணமாக ஓட்டம் குறையலாம்.
- ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டம் உலக சராசரியை விட வேகமாக அதிகரித்துள்ளது. இந்த “சராசரி கடல் மட்டம்” தொடர்ந்து உயரும்.
- இந்த நூற்றாண்டில் வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பதமான வெப்ப அழுத்தம் மிகவும் தீவிரமாக இருக்கும்.
- கோடை மழை மற்றும் பருவ மழை மாறுபட்ட இடைவெளியுடன் பெய்யும்.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பருவகால மாற்றங்கள், இந்திய மக்களை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், இந்தியாவில் ஆண்டுதோறும் மழைப்பொழிவு சுமார் 40 சதவீதம் அதிகரிக்கும். சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, சூரத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இந்திய துறைமுக நகரங்களில் கடல் மட்டம் 50 செமீ உயர்ந்தால், கிட்டத்தட்ட 2.86 கோடி மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவார்கள். எனவே வெப்ப அலைகள், புயல்கள், சீரற்ற பருவ மழை, குடிநீர் பற்றாக்குறை, வெள்ளம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று அனைத்து வகையான பேரிடர்களுக்கும் அரசு தகுந்த முன்னேற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இன்று நாம் அனுபவித்து வரும் வெப்பமயமாதலில் 25 சதவிகிதத்திற்கும் மேலான வெப்பத்தின் காரணம் மீத்தேன். இது, வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட 20 ஆண்டுகளில் கார்பன் டை-ஆக்சைடை விட 80 மடங்கு அதிக புவி வெப்பமடைதலை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிசிசி கடந்த 30 ஆண்டுகளாக புவி வெப்பமடைதலின் ஆபத்துகள் பற்றி எச்சரித்து வந்தாலும், மாற்று எரிசக்தி வழிமுறைகளுக்கும் கார்பன் உமிழ்வை நிறுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கங்கள் இன்னும் எடுக்கவில்லை. இதன் விளைவாகவே பல நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும் பல்லாயிரம் கோடி பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
வளிமண்டத்தில் அதிக அளவில் பரவி வரும் கார்பன் டை ஆக்சைடு காரணமாய் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 210 பில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்திக்கிறது. இது போக, புவி வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் என்று கணிக்கப்படுகிறது.
கார்பனின் சமூக விலை (Social Cost of Carbon, SCC) என்ற கருத்தாக்கம் 1981ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. கூடுதலாக ஒரு டன் கார்பன் டை ஆக்சைட் வளிமண்டலத்தில் கூடுவதால் எழக்கூடிய விளைவுகளின் சமூக விலை என்னவென்பதன் கணிப்பு இது. தட்பவெப்ப மாற்றத்தின் தாக்கங்களைக் கணக்கிட உதவும் கருவிகளில் இதுவும் ஒன்று. இந்தக் கணிப்பு, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு பணமதிப்பு அளிக்க உதவுகிறது. இதன்படி புவியளவில் கூடுதலாக அதிகரிக்கும் ஒவ்வொரு டன்னுக்கும் 2050ஆம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 31 டாலர் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது கணக்கு, பணவீக்கத்தைப் பொருட்படுத்தினால் மூன்று சதவிகிதம். இதற்கு இணையாக கார்பன் வரி என்று ஒன்று வசூலிப்பது கார்பன் டை ஆக்சைட் உமிழ்பவர்களுக்கு தடையாக இருக்கும், தொழிற்துறை மாற்று வழி தேடத் தூண்டுவதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. ஆனால் இதில் உள்ள சிக்கல், பருவநிலை மாற்றத்தை துல்லியமாய் கணிப்பது சுலபமல்ல, அவை பொருளாதாரத்தின் மீதும் பிறவற்றின் மீதும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்துக்கு ஒரு எண் அளிப்பதும் சுலபமல்ல. எனவே கார்பனின் சமூக விலை குறித்து ஒருமித்த கருத்து இதுவரை உருவாகவில்லை- உமிழப்படும் ஒரு டன் கார்பனுக்கு ஒரு டாலர் முதல் ஆயிரத்து ஐநூறு டாலர்கள் வரை விலை சொல்லப்படுகிறது.
உலகளாவிய கார்பன் மாசுக்கு தனிப்பட்ட அளவில் ஒவ்வொரு நாடும் என்ன விலை தருகிறது என்பது குறித்து ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. உலகளாவிய சராசரி டன்னுக்கு 31 டாலர் என்றால், இந்தியா 86 டாலர் விலை கொடுக்க வேண்டியிருக்கும் (அமெரிக்கா கொடுக்கக்கூடிய விலை 50 டாலர்கள்). ஏன் இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு என்றால், விவசாய மகசூல், கிருமிகளால் பரவும் நோய்கள், வெப்பம் காரணமாய் ஏற்படக்கூடிய உற்பத்தி இழப்பு, பெருமழைகளால் நிகழும் பேரழிவு, என்று பல கூறுகள் தேசத்துக்கு தேசம் மாறுபடுகின்றன, என்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள். இவை கூடும்போது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன, அவற்றால் ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு அளவு இழப்பை எதிர்கொள்கிறது. “கார்பன் டை ஆக்சைட் உமிழப்படும்போது அது உலகெங்கும் உள்ள மக்கள் மற்றும் உயிரிமண்டலங்களை பாதிக்கிறது. கார்பனால் பயன் ஒருவருக்கு, பாதிப்பு வேறொருவருக்கு என்ற ஒரு சமநிலையின்மை தொடர்கிறது.
2013 ஆண்டுக் கணக்கில், பிரேசில் கிட்டத்தட்ட ஒன்றரை சதவிகிதம் கார்பன் டை ஆக்சைட் உமிழ்ந்து, ஆறு சதவிகித விலை கொடுக்கிறது. சவுதி அரேபியா மூன்று சதவிகிதம் உமிழ்ந்து பன்னிரண்டு சதவிகித விலை கொடுக்கிறது. உச்சத்தில் இந்தியா ஐந்தரை சதவிகிதம் உமிழ்ந்து இருபத்து இரண்டு சதவிகித விலை கொடுக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, உலகளாவிய உமிழ்வில் இருபதில் ஒரு பங்கு இந்தியாவின் அளிப்பு; ஆனால் உலகளாவிய சமூக தாக்கத்தில் ஐந்து முதல் நான்கில் ஒரு பங்கு இந்தியாவின்மீது இருக்கிறது.
இந்தியாவைவிட அதிக அளவு கார்பன் உமிழும் தேசங்கள் அமெரிக்கா மற்றும் சீனா. அமெரிக்காவைப் பொறுத்தவரை உமிழ்வும் பாதிப்பும் கிட்டத்தட்ட சரியாக இருக்கின்றன, ஆனால் சீனாவோ உலகளாவிய உமிழ்வில் முப்பத்திரண்டு சதவிகிதத்துக்கு காரணமாக இருந்து, ஏழு சதவிகிதம்தான் பாதிப்படைகிறது. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா அடையக்கூடிய பாதுகாப்பு கார்பன் உமிழும் சீனாவுக்கும் இல்லை, பெட்ரோல் தேசங்களான அமெரிக்கா, ரஷ்யா, சவூதி அரேபியா ஆகியவற்றுக்கும் இல்லை!
பயன் ஓரிடம் பாதிப்பு ஓரிடம் என்ற நிலையில் 5% மாற்றம்தான் ஏற்படும் என்கிறார்கள் (இந்தியாவின் கார்பன் சமூகவிலை 22% என்பதற்காக அது 22% கார்பன் வரி போட்டு பயனில்லை, அதன் உமிழ்வு கிட்டத்தட்ட 5% மட்டுமே. ஆனால் அதே சமயம் 30%க்கு மேல் கார்பன் உமிழும் சீனா 7% மட்டுமே கார்பன் சமூகவிலையும் கார்பன் வரியும் போட வேண்டியிருக்கும், இதனாலும் பயனில்லை).
புவி வெப்பம் 1.5-2 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்ற பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றச் சிறந்த வழி, உலகளாவிய கார்பன் சமூகவிலைக்கேற்ற அளவில் எல்லா தேசங்களும் தன் கார்பன் வரிச் சுமையை ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வருகிறார்கள். இது அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லை, தன் உமிழ்வுக்கேற்ற வரியை அமெரிக்கா சுமத்தும், சீனா தன் உமிழ்வில் நான்கில் ஒரு பங்குக்கும்கீழ் வரியாய்ச் சுமத்தும், ஆனால் இந்தியாவோ தன் உமிழ்வைக் காட்டிலும் நான்கு மடங்கு கார்பன் வரி சுமத்த வேண்டியிருக்கும்!
இந்த விஷயத்தில் ஐயப்பாடுகள் மற்றும் தாமதத்தின் ஆபத்துக்கள் பிற எவரையும் விட இந்தியாவுக்கே அதிகமாக இருக்கும் என்பதால் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளிலும் இந்திய துணைக்கண்டத்தில் அதன் பாதிப்புகள் குறித்து தரவுகள் திரட்டுவதிலும் இந்தியா முனைப்பு காட்ட வேண்டிய தேவை வேறெப்போதையும்விட இப்போது உடனடி அவசியம் கொண்டதாகவும் இருக்கிறது. வேறெந்த பிரச்சினையும்விட இதுவே இன்று இந்தியாவின் ஜீவாதார பிரச்சினை என்று சொன்னாலும் தவறில்லை.
புவி வெப்பம் உலகம் தொழில்மயமாவதற்கு முன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்த நிலையைக் காட்டிலும் 1.5 செல்சியஸ் டிகிரிக்கு மேல் உயராத வகையில் (பாரன்ஹீட் கணக்கில் 2.7 டிகிரி) செயல்பட 2015 ஆம் ஆண்டு உலக தேசங்கள் அனைத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன, நீண்ட கால இலக்கு 2 டிகிரி. 1.5 டிகிரி இலக்கை அடைவது மாற்றங்களை நடைமுறைப்படுத்த போதுமான அவகாசம் அளிக்கும் என்பது இதன் பின்னணி. ஒவ்வொரு தேசமும் தன் தேவைகளுக்கேற்ற வகையில் கார்பன் உமிழ்வைக் குறைத்துக் கொள்ளலாம் என்பது ஒப்பந்தம். ஆனால், 8.10.2018 அன்று ஐபிசிசி Intergovernmental Panel on Climate Change ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது.
1 டிகிரி உயர்வை இப்போதே எட்டிவிட்ட நிலையில், உலக வெப்பம் இதே வேகத்தில் அதிகரித்தால் 1.5 டிகிரி எல்லை இன்னும் 12 ஆண்டுகளில், 2030-2052 ஆண்டுகளுக்குள் அடையப்படும் என்று அது கூறியது. இந்த நூற்றாண்டின் முடிவில் 3 முதல் 4 டிகிரிகள் உயர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது. 1.5 டிகிரிக்கு நிறுத்துவது என்பதே பெரிய விஷயம் – 12 ஆண்டுகளில் புவி வெப்பமய உமிழ்வுகளை பாதிக்குப் பாதி குறைத்து, 2050 ஆண்டுக்குள் முழுமையாக நிறுத்தியாக வேண்டும். அதற்கு மேல் உயரும் ஒவ்வொரு அரை டிகிரியும் பெரும் சேதம் ஏற்படுத்தக்கூடியது.
முதற்கட்டமாய், 1.5 டிகிரிக்கும் 2 டிகிரிக்கும் உள்ள வேறுபாடே மிகப் பெரியது. தெற்காசியா என்றழைக்கப்படும் இந்திய துணைக்கண்டம் மட்டும் சந்திக்கும் விளைவுகளில் சில:
இந்நிலையில் 3 டிகிரி 4 டிகிரி வெப்பம் உயர்வது என்பதை எல்லாம் நினைத்தே பார்க்க முடியாத அளவாகும். ஆனால் உலகப் போருக்கு இணையான மிகப் பெரிய பேரழிவு நிகழ்ந்து உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் முழுமையாக உடைந்தாலொழிய இன்றுள்ள நிலையில் இதுவே நடைமுறை சாத்தியம்.
பருவநிலை மாற்றம் குறித்த ஐபிசிசி அறிக்கையை “மனித இனத்திற்கான சிவப்பு குறியீடு” என்று ஐ.நா கூறுகிறது.
பூமி பந்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளை கார்போரேட்டுகளின் லாப பசிக்காக தொடர்ந்து அழிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகின் முதல் இடத்தில உள்ள பிரேசில் அமேசான் காடுகளை அழித்து மாட்டு தீவினத்திற்காக சோயா பயிர் செய்து வருகிறது. சுமார் 20% காடுகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. 25%க்கு மேல் அழிக்கப்பட்டால் அமேசான் காடுகளை மீட்டெடுப்பது கடினம் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். பிரேசிலின் அதிபரோ தங்கள் நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக அமேசானை அழித்திட தங்களுக்கு முழு உரிமை உள்ளது என்று பேசி வருகிறார்.
தொழில் புரட்சியின் வெற்றி சின்னமாக கொண்டாடப்படும், உலகின் மிகப் பெரிய தொழில் துறையான, ஆட்டோமொபைல் துறை மட்டுமே புவி வெப்பமயமாவதற்கு பெரும் பங்களிக்கிறது. பன்னாட்டு ஆட்டோமொபைல் கார்போரேட்டுகள் தங்கள் எல்லையில்லா லாப குவியலுக்காக உலகம் முழுவதும் தனி நபர் போக்குவரத்து வழக்கத்தை தொடர்ந்து கவர்ச்சிகர விளம்பரங்கள் மூலம் வளர்த்து வருகின்றனர். ஒப்பீட்டளவில் குறைவான மாசு வெளியிடும் பொது போக்குவரத்து முறையை மக்களின் சிந்தனையில் இருந்து அகற்றிவிட்டனர். இதன்மூலம், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாகன விற்பனை செய்து லாபம் கொழுக்கின்றனர்.
வாகன உற்பத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படுவது இரும்பு மற்றும் அலுமினியம். உலகம் முழுவதும் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க இயற்கை நிலைகள் அழிக்கப்படுகின்றன. அடுத்தபடியாக, நெகிழி மற்றும் ரப்பர் பயன்படுத்தப்படுகிறது. இந்த துறைக்கான ரப்பர் உற்பத்திக்காக அழிக்கப்படும் காடுகள் ஏராளம். பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் இருந்து கழியும் நெகிழிகளின் குவியல் ஒரு புறம் வளர்ந்து கொண்டே உள்ளது.
இதைத் தாண்டி, இந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்காக அழிக்கப்படும் இயற்கை ஒருபுறமிருக்க அவை கக்கும் மாசு மறுபுறம். மலிவு கடன்கள் மூலம் நுகர்வோர்களிடம் விற்கப்படும் வாகனங்களை இயக்கிட சாலைகள் போதுவதில்லை. இதற்காக, சாலை விரிவாக்கம் செய்திட அழிக்கப்படும் மலைப் பாறைகள். இப்படியாக ஒரு துறையால் ஏற்படும் இயற்கை பாதிப்புகளே ஏராளம்.
மற்றொரு உதாரணமாக, கைபேசி உற்பத்தி துறையின் அசுர வளர்ச்சி. ஓராண்டில் இரண்டு அல்லது மூன்று கைப்பேசிகளை மாற்றும் நுகர்வு கலாச்சாரத்திற்கு கார்பொரேட் நிறுவனங்கள் மலிவான கடன்கள் மூலம் உருவாக்கி உள்ளன. கைபேசி உற்பத்தியில் கோபால்ட், சிங்கு, கேட்மியம், தாமிரம், லித்தியம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இதில் பல அரிய வகை கனிமங்கள். கோபால்ட் உற்பத்திக்காக ஆப்பிரிக்க காங்கோ நாட்டு காடுகள் அழிக்கப்படுகின்றன. கார்ப்பரேட்களால் உள்நாட்டு போர்களும் தூண்டப்படுகின்றன.
இப்படி இயற்கையை அழித்து உருவாக்கப்படும் ஒரு கைபேசியை அல்லது வாகனத்தை உடனுக்குடன் மாற்றக்கூடிய நுகர்வு கலாச்சாரத்தை தங்கள் தொடர் லாப வளர்ச்சிக்காக கார்ப்பரேட்கள் வளர்த்து வருகின்றன. கார்ப்பரேட்களின் லாப குவியலே பருவநிலை மாற்றத்திற்கான அடிப்படை காரணி. அந்த கார்ப்பரேட் முதலாளிகளின் லாப பசியை மையப்படுத்திடாமல் இயற்கை அழிவை பேசுவது ஏமாற்று வேலை.