இந்திய அரசியல் வானில் கட்சிக் கொடி கட்டிப் பறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் உரியது. மக்களாட்சி அமைப்புக்குள் அனைவரும் இன்னாட்டு மன்னர்தான். இந்த வகை மன்னர்களுக்கு அரசியல் அறிவோ, அரசியல் தந்திரமோ, கொள்கைச் சார்போ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரபலமும், ரசிகத் தன்மையுள்ள மக்கள் திரளும், தேர்தலில் செலவு செய்ய நிதி ஆதாரமும், உளவுத்துறையின் பின்புலமும் இருந்தால் போதும். பிழைப்புவாதம் கொண்ட ஒரு கூட்டத்தைக் கட்டி வெற்றிக் கொடி பறக்க விடலாம்.
மற்றபடி ஒரு நாட்டின் அரசியல் கொள்கையை மக்கள் பார்வைக்குத் தெரியாத நிழல் சக்திகள்தான் புணரமைப்பு செய்து வெளியீடு செய்கிறது. உலகம் தழுவி மக்களை ஆளும் ஒற்றை அதிகாரச் சக்தி அந்தந்த நாடுகளில் இல்லை. ஒற்றை அதிகாரச் சக்தியின் உள்ளூர் ஏஜெண்டுகளாக அந்தந்த நாடுகளில் உள்ள உளவு அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த உளவு அமைப்புகளின் மதிப்பீட்டில் உள்ளீடற்றவர்கள் மக்கள் தலைவர்களாக உருவாகிறார்கள். இன்றைய நாளில் வெறுப்புக்கு எதிராக நட்புடைமையை பதியமிடும் ஒரு கருத்தியல் கட்சியே தேவைப்படுகிறது.
ஜனநாயகத்தில் தேர்தல் அரசியலுக்குப் பிழைப்புவாதமே ஆணிவேராக இருக்கிறது. இந்த வேறானது மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் ஆழப்பிடித்து நிற்கிறது. இந்த சக்தி அதிமுகவுக்கு இன்னும் உள்ளது. அதே பிழைப்புவாதம், அதே ஆழப்பிடிப்பு சிலந்தி வலைபோல் வலுவாக இருக்கும் இந்த உள்கட்டமைப்புக்குள் சிக்கும் எந்த புதிய கட்சியும் செரிக்கப்பட்டு விடுகிறது.
ஜெயலலிதா இல்லை, சசிகலா சிறையில், பரிதவிப்பில் கட்சித் தலைமைகள், இரட்டைத் தலைமையிலும் பிளவு, பாஜகவின் இரும்புப் பிடியில் சிக்கித் திணறிய நிலையிலும் அதிமுக 2021 சட்டமன்றத் தேரதலில் 69 இடங்களில் வெற்றி பெற்றது எப்படி? நிலையான பிழைப்புவாதம் அடிநீரோட்டத்தில் கட்சிக் கப்பலை கவிழாமல் கரை சேர்த்து விடுகிறது. இது புரியாமல் தான் பலரும் முதல்வர் கனவில் இருக்கிறார்கள்.
இந்த சூழலில் தமிழக சினிமா நடிகரான விஜய் அவர்களின் அரசியல் பிரவேசத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. விஜய் கட்சி தொடங்கியிருப்பதைக் குறித்த விவாதங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரக்கின்றன. நாட்டில் எவ்வளவோ எரியும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் உரிமைகளைக் கையகப்படுத்துவதில் முழு முனைப்புக் காட்டி வருகிறது. ஆளுனர்களின் அரசியல் தலையீடும், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் அரசியல் ரீதியான பயன்பாடும் எல்லையற்றுப் போய்க்கொண்டிருக்கிறது.
ஏராளமான அரசியல் பிரச்சினைகளின் கூர்முனையாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அமைகிறது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைத்தால் மக்களாட்சி முறை தொடருமா என்பதே ஐயம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார்.
இந்த நிலையில் அரசியலில் ஈடுபடப்போவதாக கூறும் ஒருவர் தன்னுடைய நிலைப்பாடுகளை முதலில் துணிந்து பேச வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை அவர் ஆதரிக்கிறாரா, இல்லையா என்று கூற வேண்டும். இது எதையும் கூறாமல் 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்றால் அது அப்பட்டமான ஆட்சி அதிகாரப் பித்துதானே தவிர, அரசியல் அல்ல.
விஜய் போன்ற நடிகர்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுவதால் தங்களைப் பற்றிய மிகை மதிப்பீடு இருக்கலாம். ஆனால் தன்னையும், தன் திரைபிம்பத்தையும் முதலீடு செய்து ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பதுதான் அரசியல்.விஜயின் கட்சி அரசியல் கட்சியல்ல. அரசியலற்ற கட்சி. சுய பிம்ப வியாபாரம். மக்களாட்சியின் வீழ்ச்சி.
ஊடகங்கள் விஜய் போன்ற ஒருவர் அரசியலுக்கு வருவதால் மக்களுக்கு என்ன நடக்கும்? அரசியல் என்ன ஆகும் என்பதை விவாதிப்பதற்கு பதிலாக விஜயின் அரசியல் பிரவேசத்தால் எந்தக் கட்சிகளின் வாக்குகள் பிரியும் என்று விவாதித்துக்கொண்டிருக்கின்றன. ஒருவர் பிரபலமான நடிகர் என்பதாலேயே அவர் அரசியலுக்கு வருகிறார் என்பதை ஒரு திருவிழாபோல் கொண்டாடுவது கேவலம். ஆனால் விஜய் இல்லை நாளை பிரசாந்த் அரசியலுக்கு வந்தாலும் ஊடகங்கள் இதைத்தான் செய்யும்.
பல ஆண்டுகளாக அரசியல் பணியாற்றிக்கொண்டிருப்போரிடம் சென்று விஜயின் அரசியல் வருகை உங்கள் கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்குமா என்று கேட்பது, அறிவீனத்தின் உச்சம். இது போதாது என்று சமூக ஊடகங்களில் களமாடிக்கொண்டிருக்கும் சில அறிவாளிகள் கூட, அவர் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து சாதி மத பேதங்கள் மற்றும் ஊழல் போன்ற தீங்குகளிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றவிருக்கும் விஜய்யின் துணிச்சலைப் பாராட்டுவதாகவும் வரவேற்பதாகவும் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நூறுகோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு நடிகர் அதைத் துறந்துவிட்டு அரசியலுக்கு வருவதில் பொதுநலச் சேவை செய்து மக்களைக் காப்பாற்றும் நோக்கம் மட்டும்தான் இருக்கும் என்று நம்பும் அப்பாவிகள் இருக்கும் வரை நடிகர்களின் அரசியல் வருகை குதூகலமாகவே இருக்கும்.
தொழில்நுட்ப காலத்தில் சினிமா தனது செல்வாக்கை இழந்து கொண்டு வருகிறது. எனவே, இனி ஒருவர் `சினிமாவில் இருந்து சி.எம்’ கனவு காண்பது காணல் நீராகவே முடியும்.