எல்லா அசுரப் பிரச்னைகளுக்கும் பின்னால் நிச்சயம் ஓர் ஆணிவேர் இருக்கும். அதை ஊடுருவிக் கண்டுபிடிக்காமல் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோ தீர்க்க நினைப்பதோ முடியாத காரியம்.
நேரடியாகப் பிரச்னைக்கு வருவோம்: தேச விடுதலைக்கு முந்தைய காலம் தொடங்கி ‘பாபரி மஸ்ஜித்’ எனும் அஸ்திரத்தைக் கையில் தூக்கிய நாள்வரை ஜனசங்கமோ அல்லது பாரதிய ஜனதாவோ தன்னை `இந்திய இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவ இயக்கம்’ என்று வர்ணித்துக் கொண்டதில்லை. சீன யுத்தத்தில் தோல்வியுற்று பிரதமர் நேருமீது சற்றே அதிருப்தி நிலவிய நிலையிலும்கூட `நேருவுக்குப்பின் யார்?’ என்ற வினா முன் வைக்கப்பட்டதே தவிர, ஜனசங்கத்திலோ அல்லது ஆரிய சமாஜிலோ ஒருவரைத் தூக்கிப் பிடிப்பதற்கு இந்திய சமூகம் தயாரில்லை.
தேசிய அளவில் பார்த்தால்கூட காங்கிரஸுக்கு எதிராக சரண்சிங்கின் பாரதிய கிசான் கட்சி, ஆச்சார்யா நரேந்திர தேவாவின் சோசலிசம் அல்லது ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆகியவைதான் மாற்றாக வைக்கப்பட்டது. அப்போது மதச்சார்பற்ற இந்துக்களில் பெரும்பாலோரும் ஒட்டுமொத்தத் தாழ்த்தப்பட்டோரும் தங்களது ஏகோபித்த அடையாளமாக பண்டிட் நேருவையோ அல்லது அண்ணல் அம்பேத்கரையோதான் பின் தொடர்ந்தனர். இத்தனைக்கும் எல்.கே.அத்வானியும் ஏ.பி.வாஜ்பாயும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தும்கூட இந்துக்களின் முகத்தைத் தன்பால் ஈர்க்க முடியவில்லை.
அவசரநிலையைத் தொடர்ந்து இந்திரா காந்தி மீது ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி தேசாய், ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், ஜெகஜீவன் ராம், மதுலிமாயி, மதுதண்டவதே போன்ற ஜாம்பவான்கள் தீவிர அரசியலில் குதித்தபோதுதான் வாஜ்பாயும் அத்வானியும் ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு `ஜனதா’ என்ற பதாகையில் ஒன்றிணைந்தனர். இந்திராவை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற ஒற்றை எதிர்மறை காரணம் மட்டுமே அவர்களது கூட்டின் நோக்கம். மற்றப்படி தேசிய நலன் சார்ந்த விஷயம் எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் `இந்துப் பிரதிநிதித்துவம்’ என்ற வார்த்தையே இந்திய அரசியலுக்கு அந்நியமான காலம் அது.
அவசரநிலை நீக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றச் சித்தாந்தத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எவ்வளவு அவசரமாக இணைந்தார்களோ, மக்கள் வழங்கிய அரசு அதிகாரத்தைக் காப்பாற்றாமல் பல்வேறு அற்பக் காரணங்களுக்காக அதே வேகத்தில் சிதறுண்டும் போயினர். சந்திசேகர், ஜெகஜீவன் ராம், சரண்சிங் போன்றோர் வாஜ்பாயி வகையறாவை ஓரம் கட்டிவிட்டுப் புதிய ஆட்சியமைக்கத் திட்டமிட்டனர். ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிர இந்துத்துவ வாதம் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட ஏனைய தலைவர்களுக்கு ஒரு பாரமாகவே பட்டது. தவிர இந்திய மக்களில் பெரும்பான்மையினரே ஜனசங்கத்தைவிட்டுத் தனித்து நிற்கையில் ஜெகஜீவன் ராமும் இதர சோசலிச நண்பர்களும் உயர்சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனசங்கத்தை இந்த நெருக்கடியைக் காரணம் காட்டி முற்றிலுமாக ஓரங்கட்டவே விரும்பினர்.
பெரும்பான்மையான இந்துக்கள் ஜனசங்கத்தை ஏற்றுக்கொண்டால் சுதந்திரம் அடைந்து 20ஆண்டுகளுக்குப் பின்னரும் அதை அரியணை ஏற்ற ஏன் மக்கள் ஓட்டளிக்கவில்லை என்ற பிரதானக் கேள்வி எழுந்தது. வாஜ்பாயி வகையறாவைப் பலப்படுத்த மொரார்ஜி உள்ளிட்ட யாரும் விரும்பவில்லை.
`ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கே ஜனதாவில் இடம்’ என்று நிர்த்தாட்சண்யமாகக் கூறிவிட்டனர். அதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தன. அன்றைக்கு இந்து மகாசபையில் கோலோச்சிய தலைவர்கள் அனைவரும் பிராமணர்கள். அவர்களது பாஷையோ செயல்பாடோ சராசரி இந்திய வெகுஜனங்களுக்குச் சற்றும் புரியாதவை. அப்போதுதான் தேசம் சற்றும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது:
எமர்ஜென்ஸி காலத்தில் திஹார் சிறையில் வருடக்கணக்கில் ஒற்றுமையாக இருந்த தலைவர்கள், ஆட்சியதிகாரம் கிடைத்த கணத்திலிருந்து எதிரும் புதிருமாக அணிவகுத்துக் கலாச்சார, சித்தாந்தப் போரைப் பிரகடனப்படுத்தினர். வடக்கென்றும் தெற்கென்றும் வேறுபட்டுக் கிடந்த மக்களை ஒன்றிணைப்பற்குப் பதிலாக மத, சாதிய, மொழி மற்றும் பிராந்திய வாதங்கள் முழங்கி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர்.
அந்தக் காலகட்டத்தில்தான் தமிழகத்தின் தென்மாவட்டத்தில், மீனாட்சிபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில், ஒரே இரவில் 800க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் `தீண்டாமைக் கொடுமை தாங்க முடியவில்லை’ எனக்கூறி இஸ்லாத்தை ஏற்றனர். அந்தக் கிராமத்துக்கே ஓரிரவுக்குள் `ரஹ்மத் நகர்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
சாதியக்கொடுமைக்கு ஆளாகிக் கொண்டிருந்த இதர கிராம மக்களும் மீனாட்சிப்புரம் பாதையைப் பின்பற்றப்போவதாக முழக்கமிட்டனர். வேறு சில மாநிலங்களில்கூட இந்தத் தீ பரவியது. இதன் தாக்கம் ஒட்டு மொத்த தேசத்தையும் தன்பால் திரும்பிப் பார்க்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
அப்போதுதான் டெல்லியிருந்து அத்வானி கூவினார், `நான் இந்து என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்’ என்று. அப்போதும்கூட `மீனாட்சிபுரத்தில் துன்பப்படுகிற எனது பட்டியலினச் சகோதரனுக்காக வேதனைப்படுகிறேன்’ என்றோ அல்லது `தீண்டாமை ஒழியப் பாடுபடுவேன்’ என்றோ அவர் முழங்கவில்லை. இப்படியெல்லாம் சாதியத் துவேஷங்களுக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்டோரைத் தைரியப்படுத்துவதற்கு அவரது சனாதனபாஷையில் சொற்கள் இல்லையோ எனக் கேட்கத் தோன்றுகிறது. `இந்துவாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று அத்வானி போன்ற மேல்தட்டு பாஜக காரர்கள் பீற்றிக்கொள்வதில், நாள்தோறும் தீண்டாமையால் தேய்ந்து போகிற பட்டியலின மக்களுக்கு என்ன விதமான வழி பிறக்கப் போகிறது? எவ்வாறு ஆறுதல் வழங்கப்போகிறார்கள்?
40 ஆண்டுகளுக்குமுன்னால் கீழவெண்மணி, மீனாட்சிபுரம் போன்ற தமிழகப்பகுதிகளில், தீண்டாமைக்கொடுமைக்கும் சாதியப்பாகுபாட்டுக்கும் எதிராக வெகுண்டெழுந்த பட்டியலின எழுச்சியை தனது அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள பாஜக எழுந்தது. தலித்கள் அனைவரையும் ஒனறு திரட்டி ஒரு தீர்மானத்தின்மூலம் அவர்களது ஆதரவைப் பெறாமல் ஒன்றிணைவது சாத்தியமில்லை.
ஆனால் அத்வானியின் திட்டமே வேறு. அப்போதுதான் அவர் ஒற்றை ரதயாத்திரை மூலம் ஒட்டு மொத்த மக்களையும் கட்டியாள முயன்றார். மக்களை உணர்ச்சிப் பிழம்பாக்கிப் பிரச்னையிலிருந்து திசை திருப்புகிற பயனற்ற காரியம். இந்தியாவிலுள்ள பட்டியலின மக்களை ஒரே வளையத்துக்குள் கொணர்வதற்கும் அயோத்திக்கு ரதம் இழுப்பதற்குமிடையே இருந்த வித்தியாசம் புரியாமல் குழம்பியவர்கள் அதிகம். பாரதியின் `சாதி உயர்த்தித் தாழ்த்திச் சொலல் பாவம்’ என்ற கவி வரியின் அர்த்தம் புரிய வேண்டும். தீண்டாமையை முற்றிலுமாகத் துடைத்தெறியாமல் இந்து மதத்தை மேலெடுக்க இயலாது என்பதை அறிவுஜீவிகளாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வோர் சிந்திப்பதே இல்லை. `அவனை அச்சுறுத்தினால் வழிக்கு வந்துவிடுவான்; இவனை ஒழித்துக்கட்டினால் நமக்கு எதிரியே இருக்கமாட்டான்’ என்ற அரைவேக்காட்டுச் சிந்தனை, ஜனநாயகத்தில் எதிர்விளைவையே தரும்.
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிற இழிகுணம் ஒருபோதும் `ஜெயம்’ வழங்காது என்பதற்கு உலகெங்கும் ஏராளமான கீழ்மனிதர்களின் கல்லறைகள் கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றன. எல்லா உயரதிகார அமைப்புகளையும் காலில் போட்டு மிதிப்பவர்கள், பின் எதற்கு மக்களை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற வினாவுக்கு உருப்படியான விடை இல்லை.
இந்தியாவின் மக்கள் தொகையில் 20 விழுக்காட்டுத் தலித் பிரிவினரை இந்துக்களின் உட்பிரிவுக்குள் அழைத்து வருகிற எவ்விதப் பிரயத்தனமும் ரத யாத்திரையில் இல்லை. அதனால் `இது முரண்பாட்டின் முழுவடிவம். ரத யாத்திரை தலித்களுக்கு ஆதரவானதல்ல; மாறாக முஸ்லிம்களுக்கு எதிரானது’ என்பதை உணர்ந்த வி.பி.சிங் அந்தச் சதியை முறியடிக்க முனைந்தார்.
அத்வானியின் யாத்திரையை தனது ஆத்மார்த்த சீடரான பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவை வைத்து பாட்னாவில் முடக்கினார் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். லாலுவை, அத்வானி முதல் மோடிவரை பகை பாராட்டுவதற்கு அதுவே முக்கியக்காரணம். அந்த நிகழ்விலிருந்துதான் இந்தி பேசும் மாநில தலித் ஆதரவைப் பெருமளவு பெற்றார் வி.பி. சிங். பாஜகவுக்கு அது ஒரு பெரும் வீழ்ச்சிதான். அதிலிருந்து பாடம் கற்பதற்குப் பதிலாக அதையே தன்னை விமர்சிக்கும் மக்களை ஒழித்துக் கட்டும் ஆயுதமாகப் பயன்படுத்த நினைக்கிறது மோடி ஆட்சி.
ராமர் கோயில் எழுப்ப ரதம் இழுத்த அத்வானிக்கே அடிக்கல் நாட்டுவிழாவுக்கும் அனுமதி இல்லை கும்பாபிஷேகத்துக்கும் அனுமதி இல்லை என்பதை வைத்தே ஆட்சியாளர்களின் மனவோட்டத்தைக் கணித்துவிட முடியும். தனது ஆத்மார்த்த சீடனாக விளங்கிய மோடியைக்கொண்டே லால் கிஷன் அத்வானிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அறவழி அரசாட்சியில் இதெல்லாம் நடக்காது. ஸ்ரீராமின் வழிபாட்டுத்தல துவக்க விழாவில் நடந்த பல நிகழ்வுகளும் கலந்துகொண்டவர்கள் மொழிந்த கருத்துக்களும் முக்காலம் பற்றிய பல கேள்விகளுக்கு விடை தேடத் தூண்டுகின்றன. இனி திறப்பு விழாவில் என்னென்ன பதில்கள் கிடைக்க இருக்கின்றனவோ?
ராமருக்குக் கோயில் நிர்மாணிக்கப்பட்ட இடம் பற்றிய சர்ச்சை தீர்ந்துவிட்டாலும் அது தீர்க்கப்பட்ட விதம் குறித்த சர்ச்சை மேலெழுகிறது. தேசமக்களைப் பொறுத்து அயோத்தி எவ்வளவு புனிதமானதோ அதுபோன்றே நீதிமன்றங்களும் பரிசுத்தமானதே என்றுதான் நினைத்திருந்தார்கள். குறிப்பாக முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கும் மரியாதை. சுமார் இருபது கோடிக்கும் அதிகமான மக்களைக்கொண்ட இஸ்லாமிய சமுதாயம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட பவ்யமான கீழ்ப்படிதலை, நீதிபதி ரஞ்சன் கோகாய் மதிக்கத் தவறிவிட்டாரே எனத் தோன்றுகிறது. அயோத்தி வழக்கை பல்வேறு நீதி மன்றங்கள் கையாண்ட விதம் அவ்வாறு சந்தேகிக்க வலியுறுத்துகிறது.
கரசேவைக்கு பாஜக அறைகூவல் விடுத்ததைத் தொடர்ந்து செய்வதறியாது கதி கலங்கி நின்ற ஒரு தேசிய சமுதாயத்துக்கு நமது அன்றைய பிரதமர், நாடாளுமன்றம், தேசிய அபிவிருத்தி மன்றம், மத்திய அரசு, உ.பி.மாநில அரசு ஆகிய மேலதிகார அமைப்புகள் அனைத்தும் `எப்பாடு பட்டேனும் பாபரி மஸ்ஜித் காப்பாற்றப்படும்’ என்று அளித்த தங்களது வாக்குறுதியைத் தூக்கி கங்கையில் எறிந்த இழிசெயலைக்கூட முஸ்லிம் சமுதாயம் மறந்துவிட்டுத்தானே உச்ச நீதிமன்றம் வந்தது?
`நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது’ என்ற ஒற்றைச் சொற்றொடர் தீர்ப்பின்மூலம் `நீயுமா புருடஸ்?’ எனக் கேட்க வைத்துவிட்டாரே ரஞ்சன் கோகாய்?
மத்திய அரசு விரும்புகிறபடி தீர்ப்பு வழங்காவிடில் நீதிபதி என்னென்ன இன்னலுக்கெல்லாம் ஆளாவார் என்பது ஊரறிந்த ரகசியம். அதற்காக நீதிதேவனையே பலிபீடத்தில் வைத்து வெட்டியிருக்க வேண்டியதில்லை.
அதன் நீட்சி, நீதி விஸ்வரூபமெடுக்கும் வரை தொடரவே செய்யும்.