அமெரிக்காவைச் சேர்ந்த தேர்தல் முறைக்கான சர்வதேச அமைப்பு 2024ம் ஆண்டில் உலகி்ல 60 நாடுகளில் தேர்தல் நடக்க இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஏறக்குறைய உலகளவில் 200 கோடி மக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் 2024ம் ஆண்டு மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
2024, ஜனவரி 7-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பூடானில் ஜனவரி 9ம் தேதி, 2வது சுற்று பொதுத் தேர்தலும், பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தலும் நடக்க உள்ளன. இலங்கையில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற, அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது. தைவானின் பொதுத் தேர்தல் ஜனவரி 13ம் தேதி நடக்கிறது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் 2024ம் ஆண்டில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடக்கிறது.
இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்தியாவும் 18ஆவது மக்களவைப் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றன.
ஆளும் பாஜகவிற்கு மத்திய மற்றும் வட மாநிலங்களில் வாக்கு வங்கி இருந்தாலும், தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் போதுமான செல்வாக்கு இல்லை. இதனைப் பயன்படுத்தி பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து வீழ்த்த பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் நாடுமுழுவதும் உள்ள பெரும்பாலான எதிர்கட்சிகளுடன் இணைந்து INDIA கூட்டணியை உருவாக்கியுள்ளது.
மக்களவைப் பொதுத் தேர்தலோடு ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், ஹரியானா, மகாராஸ்ட்ரா, சிக்கிம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை கடந்த ஒன்பதரை ஆண்டுகள் ஆட்சி செய்யும் பாஜகவை உற்று நோக்கும்போது, நாட்டின் எதிர்காலத்தை அது எப்படி மாற்றியமைக்க திட்டமிடுகிறது என்பது தெளியும்.
எதிர்வரும் 2024 பொதுத்தேர்தலிலும் பாஜக பரிவாரத்தின் வெற்றி தொடர்ந்தால் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நிலையிலிருந்து சார்பு நிலைக்கு கூர்மைப்படும்.
எதிர்வரும் 2025ம் ஆண்டு பாஜகவின் தாயான ஆர்எஸ்எஸ் அமைப்பு நூறாண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே தங்களுடைய செயல்திட்ட அறுவடையை பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் சங்கப் பரிவார். அதற்கு வசதியாக நாட்டின் சுயாட்சி அமைப்புகளை அதிகாரக் குறைப்பு செய்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதற்கு தேர்தல் ஆணையமும் விதிவிலக்காக இல்லை.
ஏற்கெனவே மாநில அரசுகளின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எடுத்து ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆளுநர்களை ஏவி அரசியல் செய்வது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. `மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது’ என்று ஆளுநர்களுக்கு எதிராக உச்சநீதி மன்றம் பல்வேறு தீர்ப்புகள் வழங்கி இருக்கிறது. அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே மதிக்கப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பெல்லாம் சாமானியர்களுக்குத் தானே தவிர அதிகார வர்க்கத்துக்கு அல்ல என்று ஒவ்வொரு நாளும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டு மக்களுக்காக அல்ல, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக. பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளும் கடன் தள்ளுபடிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்துப் பேரினவாதமும் சிறுபான்மையின அடக்குமுறைகளும் எதிர்கால இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
களத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதிலும் பிம்ப அரசியலிலும் ஓரளவு வெற்றி கண்ட பிறகு, 2025 ஆம் ஆண்டை சங் பரிவார் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
தவிர, பாஜகவை வீழ்த்த முடியாது; எதிர்க்கட்சிகள் இணைய முடியாது; காங்கிரஸ் எழவே முடியாது என்று மக்கள் மனதில் பொய்மையை பதிய வைக்க முயற்சிக்கிறார்கள். உண்மை அவ்வாறல்ல. தற்போது ஆளுங்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 303 என்றிருந்தாலும் பாஜகவின் ஆளுகைக்குட்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 244 மட்டுமே. இது பெரும்பான்மைக்கும் குறைவானது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கூட்டுத்தொகை 285 இருக்கைகள். INDIA கூட்டணி இன்னும் இணங்கி இணையும்போது அருதிப்பெரும்பாண்மை பெற முடியும்.
பல்வேறு மாநிலங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட INDIA கூட்டணி பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகா மற்றம் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது பாஜகவுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்திருந்தாலும், மோடியை முன்னிறுத்துவதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.
10 ஆண்டுகள் கழிந்தாலும் மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்பதை ஏற்பதற்கில்லை. காரணம் கர்நாடகாவிலும் தெலுங்கானாவிலும் பஞ்சாயத்து தேர்தலைப்போல தெருத்தெருவாக வலம் வந்த மோடியை மண்ணைக் கவ்வ வைத்துவிட்டார்கள் மக்கள். ஊடக வலிமையையும் ஆட்சி அதிகாரத்தையும் கொண்டும்தான் மோடியின் போலி பிம்பத்தை தொடர்ந்து திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயக சக்திகள் தங்களது ஈகோவைப் புறந்தள்ளிவிட்டு நாட்டு நலனில் அக்கறை செலுத்த முன்வருவார்கள் என்றால், பாஜக தோற்கடிக்க முடியாத கட்சியல்ல. எதிர்வரும் தேர்தலில் பாஜக தோற்று ஜனநாயக கட்சிகள் வெற்றி பெற்றால்தான், அதற்கடுத்த தேர்தலுக்கு மாநில கட்சிகளைக் காணவே முடியும்.