காலம்காலமாக அறம், நீதி, நேர்மையை இயன்றளவு தத்தமது வாழ்வில் கடைபிடித்த வெகுமக்கள் யாவரும் தற்போதைய நீதிமன்றத் தீர்ப்புகளால் நம்பிக்கையிழக்கத் துவங்கியுள்ளார்கள்.
சட்டப்படி குற்றமாயினும் தர்மப்படி குற்றமல்ல என்ற வாதம் குற்றமே இழைத்து விட்டாலும் குற்றவாளி ஓர் எளியவனாக இருக்கும் பட்சத்தில், அவனுடைய சூழ்நிலையைக் கருதி அவனுக்குரிய நீதியை பெற்றுத்தருகிற ஒரு வாதமாகவே நீதிமன்றங்களில் நடைமுறையில் உள்ள வாதமாகும். காரணம் அறம். எச்சூழலிலும் எவருக்கும் அநீதி நேர்ந்து விடக்கூடாதென்ற அறம். அதனால்தான் சட்டவாதமான நபர்களை விடவும் மனிதாபிமானிகளுக்கு அத்தனை மரியாதை.
ஆனால் நாம் இங்கு கோருவது மாட்சிமை மிக்க நீதிமன்றத்தின் கருணையையோ, மனிதாபிமான அடிப்படையிலான தீர்ப்புகளையோ அல்ல. மாறாக எமது உரிமையை. அரசியல் சாசனம் எமக்கு வழங்கிய உரிமையை சங்கப்பரிவாரங்கள் தகர்த்தெறிந்துவிட்ட நிலையில் இறுதியாக எமக்கான நீதியை வழங்குவதன் மூலமே இத்தேசம் ஒரு மதச்சார்பற்ற இறையாண்மை கொண்ட தேசமாக இருக்கவியலும் என்ற வெகுமக்களின் நம்பிக்கையை நீதிமன்றமும் சேர்த்தே தகர்க்கிறது.
`போதிய ஆதாரங்கள் இல்லையென்ற போதிலும் கூட்டு மனசாட்சி’யின் பெயரால் அனாதைகளையும், ஆதரவற்றவர்களையும் தூக்குமேடைக்கு அனுப்புகின்ற நீதிமன்றம் தேவைக்கு அதிகமாகவே ஆதாரங்கள் இருந்த போதிலும் குற்றவாளிக்கெதிராக `ஆதாரமில்லை’யென அவர்களை பரிசுத்தப்படுத்துவது எந்த அடிப்படையிலான மனசாட்சி?
`ஆதாரமில்லை’ என்ற நீதி அமைப்புகளின் மனசாட்சியை அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையே உரைகல்லாக்கி உரசிப் பார்த்தோமெனில் இறுதியாக நாம் கண்டடையும் உண்மையைச் பகிரங்கமாகச் சொல்வதற்கு எம் பெயர் எச்.ராசாவாக இருக்க வேண்டும். ஒரு சாதாரணன் தங்களை விமர்சிப்பதை மாட்சிமை மிக்கவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏசுவதற்கும் சில `தகுதிகள்’ வேண்டும். பிறப்பின் அடிப்படையிலான தகுதி.
முஸ்லிம்கள் தொழுகை நடத்திய ஒரு பள்ளிவாசல், நமது காலத்தில் வணக்க வழிபாடுகள் ஏதுமற்று இழைக்கப்பட்ட ஒரு அநீதியின் சாட்சியாக பல்லாண்டுகள் நிலைகொண்டிருந்த ஒரு பள்ளிவாசலை இல்லாமலாக்கி அதன் அடையாளத்தை சிதைத்தவர்கள் அதற்கு சொன்ன காரணம் `அதுவொரு தேசிய அவமானம்’.
ஒரு எளியவனின் வீட்டைப் பிடுங்கி அதனை இடித்துவிட்டு அதுவொரு அவமானம் என்று பிரச்சாரிப்பவனை சமூகம் என்ன சொல்லும்? அல்லது என்ன செய்யும்? எனில் ஏன் இத்தகைய பொதுமனசாட்சியை நீதிபதிகள் கண்டுகொள்வதில்லை? உண்மையில் இங்கு தேசிய அவமானம் எது?
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பில் நீதி அப்பட்டமாக மறுக்கப்பட்டதை 140 கோடி மக்களும் மவுன சாட்சிகளாக மாறியதை வரலாறு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. ஆட்சியாளர்களோ மறதியை தேசிய வியாதியாக்கி குளிர்காய்ந்து கொண்டிருக்கும்போது, பாபர் மசூதி வரலாற்றை சுருக்கமாய் நினைவு படுத்துவோம்.
கி.பி 1528: மஸ்ஜிதில் உள்ள கல்வெட்டு மற்றும் ஆவணங்களின் 1528-1530 ஆண்டுகளில் அயோத்தியிலுள்ள ராம்கோட் முகல்லா மலைக்குன்றில் பாபரின் ஆணையின் பேரில் அவரது ஆளுநர் மீர்பாகி மஸ்ஜிதை கட்டுகிறார்.
1853ல்: பிரிட்டிஷ் காலணிய ஆட்சியில் இதே இடத்தில் மதக்கலவரம் உண்டாகிறது.
1859ல்: பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலையிட்டு மஸ்ஜிதின் உள் மண்டபத்தில் முஸ்லிம்கள் தொழுகவும், வெளி மண்டபத்தில் இந்துக்கள் வழிபாடு செய்யவும் ஏற்பாடு செய்து வேலியமைக்கப்பட்டது.
1949ல்: மஸ்ஜிதுக்குள் சிலைகள் வைக்கப்படுகின்றன. இதை முஸ்லிம்கள் எதிர்க்க இரு தரப்பும் அலகாபாத் நீதிமன்றத்தில் சிவில் வழக்கை தொடுத்ததைத் தொடர்ந்து அன்றைய இந்திய அரசு மஸ்ஜித் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்து கதவுகளை மூடுகிறது. (பாபர் மஸ்ஜித் சர்ச்சைக்குறிய இடமாகியது இப்படித்தான்).
1984ல்: அப்பகுதியை ஆக்ரமித்த VHP கோயில் கட்டப்போவதாக அறிவிக்கிறது. அன்றைய பாஜக தலைவர் அத்வானி நாடு தழுவிய ரத யாத்திரையை துவங்குகிறார்.
1986ல்: மாவட்ட நீதிபதி அக்கட்டிடத்தை திறந்து அதில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடுகிறார். இதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழுவைத் துவங்கினர்.
1989ல்: மஸ்ஜிதுக்கு அடுத்த பகுதியில் VHP கோயிலுக்கான அடிக்கல் நாட்டியது. தொடர்ந்து மஸ்ஜிதின் சில பகுதிகள் அப்போதே சேதப்படுத்தப்படுகின்றன.
1991ல்: உ.பி.யில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது.
1992ல்: மஸ்ஜித் இடிக்கப்பட்டது.
துவக்கத்திலிருந்தே இதுவொரு நெடுந்துரோக வரலாறுதான்.
பாபர் மஸ்ஜித் தொடர்பான அத்தனை நிகழ்வையும் கோர்வையாகப் படிக்கும் மனசாட்சியுள்ள ஒருவர் அரசியல் அதிகாரம், மற்றும் ஜாதிய மேலாண்மைக்காக முனையும் ஒரு பேரினவாதத்தின் கொடுங்கரங்கள் சொந்த தேசத்தின் சிறுபான்மைச் சமூகத்திற்கு எத்தனையத்தனை துரோகங்களை இழைத்துள்ளனர். மட்டுமல்லாமல் இந்த அரசின் நிர்வாக உறுப்புகள் யாவுமே அவர்களுக்கெதிராக எத்தனை வன்மத்துடன் செயல்பட்டிருக்கின்றன என்பதைப் புரியவியலும்.
பொதுவில் இஸ்லாமியர்களுக்கு வரலாறு என்றாலே அது ஆதம் நபி அவர்களிடமிருந்து தொடங்கி முஹம்மது நபி அவர்கள் காலத்தை மையமிட்டு நபித்தோழர்கள்-கலீஃபாக்கள் வழியாக தாபியீன்கள், பெரியார்கள் என நிறைவுற்றுவிடுவது பேரவலம்.
உதுமானிய பேரரசு வீழ்த்தப்பட்டது முதல், பலஸ்தீன் மற்றும் மத்திய கிழக்கு அரசியல், சொந்த தேசப் பிரிவினை, அதன் அவலங்கள், பாகிஸ்தான் உதயம், பங்களாதேஷ் விடுதலை, காஷ்மீர், Article 370 என எந்த வரலாற்றுப் பார்வை குறித்தும் அறியும் ஆர்வம் இல்லை.
வரலாறு உள்ளவன் தனது வரலாற்றை அலட்சியப் படுத்தும்போது வரலாறற்றவன் இருக்கும் வரலாற்றை தனக்கானதாக திரிக்கிறான். அவன் அதிகாரம் பெரும்போது தன்னையே வரலாறாக எழுதி, ஒரு வரலாற்றின் குற்றவாளி, சமகாலத்திய நீதிபதியாகவும் பரிணமித்து வரலாற்றின்பக்கங்களை திருத்த முயல்கிறான்.
அசலான வரலாற்றின் மைந்தனோ கோர்ட்டு தீர்ப்புக்கு காத்திருந்து, தீர்ப்பு வந்தபின் இது அநீதியென புலம்பத் தொடங்குகிறான். எனினும் போலிப்புரட்டுகள் நிலையானதல்ல என்பதே ஒற்றையாறுதல்.
உரிமை மற்றும் சிவில் வழக்குகள்
பாபர் மஸ்ஜித் வழக்கு என்பது இரு வேறு வழக்குகளாக பதியப்பட்டது. ஒன்று மஸ்ஜிதின் உரிமை மீதான சிவில் வழக்கு. மற்றொன்று மஸ்ஜிதை இடித்தவர்கள் மீதான கிரிமினல் வழக்கு.
இதில், உரிமை கோரும் சிவில் வழக்கில் உச்சத் தீர்ப்பு மன்றம் கடந்த 9/11/2019 அன்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. வாதி, பிரதிவாதிகளாக முஸ்லிம் சன்னி வஃபு வாரியம், நிர்மோகி அகோரா `ஸ்ரீராம் விராஜ்மன்’ எனப்படும் ராம் லல்லா அதாவது குழந்தை ராமன் உள்ளிட்ட மூன்று அமைப்புகள். ராமனே தனது சார்பாக நியாயம் கேட்ட வழக்கு இது. எனில் ஏன் மன்னர் பாபரின் சார்பாக யாரையும் நியமிக்கவில்லை என அப்போது யாரும் கேட்கவில்லை. மீறி கேட்டிருந்தால், ஆப்கனுக்கு செல்லுங்கள் என்று கோஷம் போட்டிருப்பார்கள். எத்தனை பேர்தான் பாகிஸ்தானுக்கே செல்வது?
பாபர் மஸ்ஜித் நிலஉரிமை குறித்த உச்சத் தீர்ப்பு மன்ற தீர்ப்பில், “மஸ்ஜித் இருந்த 2.77 ஏக்கர் நிலம் ராம்லல்லாவிற்கு உரியதாகும். மூன்று மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை நிறுவி அவர்களிடம் ராமர் கோவில் கட்டும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” என்று கூறியது. அதே வேளை, நீண்டகாலமாக மக்களை அச்சுறுத்துமொரு பிரச்சனை முடிவுக்கு வந்தது என பெரும்பாலான அரசியல் கட்சிகளும் மக்களும் நிம்மதியடைந்தனர். `மக்களை அச்சுறுத்துவது யார்?’ என்ற கேள்வி கவனமாக தவிர்க்கப்பட்டு பாதிக்கப்பட்டவனின் நீதியைப் பேசாமல் அனுதாபத்தை தெரிவித்து, ஆற்றி முடித்தது பெரும்பான்மை இந்தியச் சமூகம்.
ஆனால் நிலவுரிமைத் தொடர்பான இத்தீர்ப்பில் அகழ்வாராய்வுகளை சான்றுகளாக கொண்டது, மசூதி இடிக்கப்பட்டதால்தான் அகழ்வாராய்ச்சி செய்ய முடிந்ததெனக் கூறியது.
துவக்கத்திலிருந்தே வன்முறையில் ஈடுபட்ட VHP ஐயும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொண்டது. 1857 லிருந்து 1949 வரை தொழுகை நடந்ததை ஒப்புக்கொண்ட உயர்நீதி மன்றம் அதன் பலனை முஸ்லிம்களுக்குத் தரவில்லை. தவிர, மசூதியின் உட்சுவர், வெளிச்சுவரென இரண்டு பகுதிகளில் வெளிச்சுவர் பகுதி முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதையும் தீர்ப்பில் ஒப்புக்கொண்ட உச்சத்தீர்ப்பு மன்றம், அந்த இரண்டு பகுதிகளையுமே இந்துக்களுக்கு உரிமையாக்கிது. இவ்வாறு பல்வேறு முரண்களை முன்னால் நீதிபதிகளும், பல பத்திரிக்கைகளுமே சுட்டியுள்ளனர். கிட்டதட்ட கட்டப்பஞ்சாயத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாத இத்தீர்ப்பு இந்திய முஸ்லிம்களை மனதளவில் சோர்வடையச் செய்தது.
சரி தீர்ப்புதான் இப்படியெனில் அதற்கு முன்னதாகவே என்னவானாலும் தீர்ப்பை ஏற்கும் உளவியல் சரி நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருந்தனர். வாட்சப் போன்ற சமூக ஊடகங்களிலும் இதைப்பற்றி கருத்து கூறக்கூடாதென எச்சரிக்கப்பட்டிருந்தது. மீறி பேசும் ஒரு சிலரிடமும் `சென்னையில் NIA வரப்போகுதுபாய்’ என்றன சங்கப்பரிவாரங்கள்.
ஒருவேளை தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக வந்திருந்தாலும் இப்படியானதொரு மயான அமைதி நிலவியிருக்குமா? மத்திய அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபடுவோரை இரும்புக்கரமோ, ஈயக்கரமோ கொண்டு ஒடுக்கியிருக்குமா? எனக் கேட்டால், அப்போது பரபரப்பான செய்தியாக ஓடிக்கொண்டிருந்த `சபரிமலையில் பெண்கள் வழிபடலாம்’ என்று இதே உச்சநீதி மன்றத் தீர்ப்பையடுத்து நடந்தவைகளை கவனத்தில் கொள்ளலாம். இன்றும் உதாரணமாகவே இருக்கிறது ‘குஜராத் மாடல்’.
2002 ஆம் ஆண்டின் குஜராத்மாடல், அன்றைய குஜராத் முதல்வர்தான் இன்றைய பிரதமர். கலவரக்காரர்களை ‘எப்படி ஒடுக்க வேண்டும்’ என்பதில் நிபுணரான ஒரு பிரதமர். ஆனால் இந்திய முஸ்லிம்களுமே ஒரு விதத்தில் ஆசுவாசத்திற்கு வந்துவிட்டனர் எனலாம். நீதியோ? அநீதியோ? இத்துடன் முடியட்டும். தலைமுறைகளாக பதற்றம் தொடர்வதை ஏற்கும் மனநிலை எவருக்குமே இல்லை. தவிர தங்களுக்கு வெகுதூரத்தில் இருக்கும் நீதியை எட்டிப் பிடிப்பது அத்தனை எளிதல்ல என்பதும் ஒரு காரணம்.
சரி நிலவுரிமை தொடர்பான உச்சநீதி மன்றத் தீர்ப்புதான் பாபர் மஸ்ஜித் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைந்து விட்டதென்றால் பாபர் மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகள் மீது நடை பெற்ற வழக்கில் கடந்த 30/09/2020 அன்று லக்னோ CBI நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இடித்தவர்களுக்கு பரிசாக அமைந்தது. அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தது CBI நீதிமன்றம்.
உண்மையில் இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்ற இந்நேரத்தில் கடும் மனச்சோர்வும், கழிவிரக்கமும். குற்றவுணர்வும் ஒருங்கே தோன்றுகின்றன. அரபு தேசங்களை தேடித்தேடி வேட்டையாடிய அமெரிக்கா கூட சொந்த தேச முஸ்லிம்களுக்கு நேர்மையாகவே இருக்கிறது. இஸ்லாமோஃபோபியோ நிறைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில்கூட இத்தகைய இழிநிலையில்லை.
ஆனால் இங்கோ மஸ்ஜிதை இடித்ததற்கும் ஆதாரமில்லை, கூட்டமாக வன்புணர்ந்தாலும் ஆதாரமில்லை. அதேநேரம் நடுநிசி பேருந்தை தவறவிட்டவனும், பேட்டரி வாங்கிய ரசீதை பையில் வைத்திருந்தவனும் குற்றவாளி. அவர்களது ஒட்டு மொத்த வாழ்வையும் அழித்தொழிக்க ஆதாரங்களல்ல, அவர்கள் யார் என்பதே போதுமானது.
உண்மையில் எத்தனையெத்தனை செறிவான தத்துவங்களையும், அறிநெறி நூல்களையும், நீதிபோதனை கதைகளையும் உலகிற்களித்த தேசம் இந்தியா. பாம்பாட்டி தேசம் என்ற பெயரிலிருந்து வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறியதில் அத்தனை மனிதர்களும் செய்த பங்களிப்பை யாரால் மறுக்க முடியும்? எந்த அளவுகோல் கொண்டு தேசபக்தியை வரையறை செய்யவியலும்? அப்படி செய்வோருக்கான தகுதி எது?
ஒரு சிறுபான்மை சமூகத்தின், சொந்ததேச சகோதரனின் வழிபாட்டிடத்தை இடித்து, அவனது உரிமையை மறுத்து வாழ்நாளெல்லாம் அவனை உளவியல் சிக்கலிலும், இருத்தலின் அச்சத்திலும் வைத்திருப்பதுதானா உங்கள் தேசபக்தியின் அடையாளம்?
எனில் அப்படியொரு அவலச்சூழலை உருவாக்கும் பேரினவாத கும்பலை ‘இடித்ததற்கு ஆதாரமில்லை’ என விடுவிப்பதுதானா நவ இந்திய நீதிபரிபாலனையின் அடையாளம்?
பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவியல் வழக்கு இரண்டு வழக்குகளாக பதியப்பட்டன. ஒன்று இடிப்பில் நேரடியாக ஈடுபட்ட கரசேவகர்கள் மீதும் மற்றொன்று சதித்திட்டம் தீட்டிய சங்கப்பரிவாரத்தினர் மீதுமாக இரண்டு வழக்குகள்.
இதில் ‘சமூகவிரோதிகளால்’ கட்டிடம் இடிக்கப்பட்டதாகவும், திட்டமிட்ட சதிச்செயல்கள் ஏதுமில்லை எனக்கூறியும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியா, சாத்வி ரிதாம்பரி உள்ளிட்ட 32 பேரை விடுவித்தது CBI நீதிமன்றம். ‘இது திட்டமிட்டு நடந்த செயல்பாடு, சட்டத்தின் ஆட்சியை அவமானகரமாக மீறிய குற்றச்செயல்’ என நிலவுரிமைத்தீர்ப்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் அமர்வு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபோதிலும் ‘அது திட்டமிட்ட செயல் இல்லை’ என்பதே CBI நீதிமன்றத் தீர்ப்பாகும்.
அதிர்ச்சியடைய வேண்டாம். சிறிய அதிர்ச்சிகள் பழகிப்பழகி, பேரதிர்ச்சிகள் இயல்பாகும் காலத்திற்கு வந்துவிட்டோம்.
சமீபகாலமாக மக்கள் பார்க்க நடந்த எந்தக் குற்றச் செயலிலும் எவரும் தண்டிக்கப்படவில்லை. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தாக்குகிறது ‘மர்ம கும்பல்’ ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லி கொல்கிறார்கள் ‘மர்ம நபர்கள்’ தாய் அருகே இருந்த சிறுமி மானசாவை இழுத்துச்சென்று வன்புணர்ந்து கொள்கிறார்கள் ‘சமூக விரோதிகள்’. காஞ்சி கோயில் வாசலில் பலர் பார்க்க ‘தன்னைத்தானே வெட்டிக்கொண்டு’ மாண்டார் சங்கரராமன். உலகமே பார்க்க ‘தன்னைத்தானே இடித்து தரை மட்டமாக்கிக் கொண்டது’ பாபர் மஸ்ஜித். எதற்கும் எந்த உள்நோக்கமும் இல்லை. சாட்சியும் இல்லை. ஆதாரங்களும் இல்லை. எல்லாமே தற்செயல்தான். சமீபத்திய தீர்ப்புகளும் தற்செயல்தானா? ஆதாரமில்லை. ஒரு நம்பிக்கைதான். பாபர் மஸ்ஜிதின் அந்த குவிமாடத்திற்கு நேர்கீழேதான் ராமர் பிறந்தார் எனும் அவர்களின் நம்பிக்கையைப் போல.
கும்பிட்டு தொழும் கைகளோடு மோடியை ஏக்கமாய் பார்த்து நிற்கும் லால் கிஷன் அத்வானியின் இன்றைய நிலையை பரிகாசமாகவோ, பரிதாபமாகவோ பார்க்கின்றவர்களுக்கு, அவரின் ஃப்ளாஸ்பேக் கலவரங்களால் நிறைந்த பழைய அத்வானி நினைவுக்கு வரக்கூடும். மோடிக்கெதிரே அன்று நின்ற நிலையைப் பார்த்தால் அத்வானிக்கே தனது கடந்தகாலம் ஒரு கொடுங்கனவாக மாறியிருக்கக்கூடும்.
1990ல் ராமர் கோயில் இயக்கத்தை துவங்கி குஜராத் மாநிலம் சோம்நாத் முதல் பீகாரின் சமஸ்திபூர் வரையிலான பத்தாயிரம் கிலோ மீட்டர் ரத யாத்திரையின் வழி நெடுக அத்வானி பேசிய பேச்சுகள் நிகழ்த்தப்பட்ட கலவரங்கள், கொல்லப்பட்ட உயிர்கள், பறிபோன தேசஅமைதி, கேள்விக்குறியான மதச்சார்பின்மை என எத்தனையத்தனை துயரங்கள் மிகுந்த நாள்களின் நாயகனாக அவர் இருந்தார். ‘ராமருக்கு கோயில் கட்ட வேண்டும், அதுவும் பாபர் மஸ்ஜித் இருக்கும் இடத்தில்தான் கட்ட வேண்டும். கோயில் கட்டுவதை எவராலும் தடுக்க முடியாது, பாபர் மஸ்ஜித் உள்ள அதே இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையில் அரசு எப்படி தலையிட முடியும்? நம்பிக்கை சார்ந்த விசயங்களில் நீதிமன்றத்திற்கு என்ன பங்கு இருக்க முடியும்? எங்களை யார் தடுக்க முடியும்? எந்த அரசு தடுக்கும்?’ என்ற அத்வானியின் பேச்சுகள் இன்று கேட்கும்போதே இப்படி இருக்கிறதெனில் 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள், பரபரப்பு செய்திகள், ப்ரேக்கிங் செய்திகள், என பெரும் அதிர்வுகளற்ற 1990களில் அது எத்தனையத்தனை பேரழிவினை இச்சமூகத்தில் நிகழ்த்தியிருக்கும் என உணர முடிகிறதல்லவா?
அத்வானியின் ராமர் கோயில் இயக்கத்திற்கு ஆறு ஆண்டு காலம் முன்னதாகவே ‘தர்ம சன்சாட்’ எனும் இயக்கத்தை துவங்கினார் VHP யின் அசோக் சிங்கால்.
இதன் நோக்கம், ராமர் கோயிலுக்கு சாமியார்கள் மற்றும் மடாதிபதிகளின் ஆதரவைப் பெறுவது. ராமர் கோயில் இயக்கத்தை அத்வானி நடத்தியபோது அப்போதே கோயில் கட்டுமானத்திற்கான அத்தனை ஆயத்தங்களையும் மேற்கொண்டவர் சிங்கால். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1990 களிலேயே கோயில் கட்டுமானத்திற்கு தயாராகியது, அதற்கான வேலைப்பாடுகள் நிறைந்த கற்பலகைகளை ஆய்வு செய்தது, தூண்களை தயார் செய்தது அவற்றை தொகுத்து ஓரிடத்தில் சேகரமாக்கியது மட்டுமல்லாமல் ராமர் கோயிலுக்கான வடிவமைப்பை உருவாக்கிதே அஷோக் சிங்கால்தான்.
குடும்பம், வாழ்வு என்ற வட்டத்தினுள் அடங்கிப்போகும் பெண்களையும் இந்த இயக்கத்தில் பங்குகொள்ள வைக்க சாத்வி ரிதம்பரா, உமா பாரதி, விஜயராஜே சிந்தியா என பெண்களும் வன்முறை இயல்பு கொண்டவர்களாக வார்த்தெடுக்கப்பட்டார்கள். இவர்களின் ஆவேசமான துவேசமூட்டும் பேச்சின் எதிர்வினையாக கரசேவையில் 55,000 பெண்கள் பங்கேற்றனர்.
சற்று யோசித்தால் சமூகத்தின் மேலிருந்து கீழ் வரையிலும் RSS எவ்வாறெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்பதை அறியவியலும். வெகுமக்கள் ஆதரவில்லாமல் இதை நிகழ்த்தவியலாது என்பதில் உறுதியாக இருந்த அது ஆட்சியதிகாரம், ஆட்சி நிர்வாகம் என அத்தனையும் வாய்க்கப் பெற்றபோதிலும் மக்களின் உணர்வைத் தூண்டுவதையே முதன்மையாகக் கொண்டிருந்தது.
‘இந்துக்களின் மனது புண்படுத்தப்படுகிறது’ என்ற வாக்கியம் பெரும் நுணுக்கமாகவே சமூகத்தில் விதைக்கப்படுகிறது. இதன் மூலம் எதிராளி தனது கருத்து சொல்லும் மனவலிமையை தார்மீகமாகவே இழக்கிறான். அது எத்தனை நியாயமாக இருந்த போதிலும் சரி. இப்படியாக கருத்துரிமை மறுக்கப்படுகின்ற இடைவெளிகள் சர்வாதிகாரம் தன்னை முற்றாக நிலைநிறுத்தத் துவங்குகிறது.
எதிர்கருத்து சொல்வோரையெல்லாம் எச்.ராஜா `Anti Indian’ எனக்கூறி வாயடத்ததை இங்கு நினைவு கூறவியலும். இந்துத்துவத்தையே தேசியமாக கட்டமைக்கின்ற பல படிநிலைகளில் அதுவும் ஒன்று. Anti Indian என்பது எதிர்காலத்தில் Anti hindu என உருமாறும் என்று அப்போதே கணிக்கப்பட்டது, இன்று நிஜமானது.
ரிதம்பராவின் பேச்சுகள் யாவும் இயல்பிலேயே துவேசத்தையும், பகைமையையும் கொண்டிருந்தன. எந்தளவுக்கெனில் அவரது உரைகள்(?) ஒலிநாடாவாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டதோடு அல்லாமல் RSS உறுப்பினர்களின் வீடுகளுக்கு இலவசமாகவே விநியோகிக்கப்பட்டன. மேலும், அயோத்தி கோயில்களின் பண்டிதர்கள் தங்களின் அன்றாட சடங்கு மற்றும் பிரார்த்தனைகளை ஒத்தி வைத்து மக்கள் கூடுகின்ற நேரத்தில் ரிதம்பராவின் ஆடியோ கேசட் பேச்சுகளை ஒலிபரப்பினர். அதாவது பக்தியை விடவும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் என்பதிலிருந்து ஆண்கள் நிகழ்த்தும் வன்முறைகளை பெண்களையும் ஏற்கச் செய்யும் Rssன் உளவியல் தந்திரத்தை உணரவியலும். உமா பாரதியின் பேச்சுகளும் இவ்வகையிலானதே.
RSSன் இந்த கீழமையின் ‘பலன்’ பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகான இனப்படுகொலைகளின் போது வெளிப்பட்டது. பல இந்துப் பெண்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், அவர்களின் உடமைகள் சூறையாடப்படல், முஸ்லிம் பெண்களின் மீதான பலாத்காரங்கள் குறித்து எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. ‘முஸ்லிம்சமூகம் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கவியலாது’ என்றே அவர்களின் மனதில் திணிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீதிக்கு இழுத்து வரப்பட்டபோது அவர்களின் மீது கூட்டு வன்புணர்விற்கு சக ஆண்களைத் தூண்டியது, அவர்கள் மீது கல்லெறிந்தது, தீயிடலில் ஆண்களுக்கு உதவியது எனத் தொடர்கிறது பெண்கள் அமைப்பான துர்கா வாகினியின் கோரங்கள். சற்று யோசித்தால் 2002 குஜராத் இனப் படுகொலைகளின் போதும் இதே செயல் திட்டம் நிகழ்த்தப்பட்டது நினைவுக்கு வரும்.
உண்மையில் பேரச்சமாக இருக்கிறது. நமது சந்ததியினரை யாருக்கு மத்தியில் நாம் விட்டுச் செல்லப் போகிறோம்? என்பதை நினைத்தாலே உடல், உயிரென அனைத்தும் செயலற்றுப் போகிறது. ஊரறிய, உலகறிய பலர் கண்பார்க்க நடந்ததொரு இடிப்பிற்கே ஆதாரமில்லை என்ற போது, அதன் பிறகான வன்முறைகளுக்கும் யாரும் பொறுப்பில்லை(!) முதலில் அது வழக்காகவும் இல்லை. பேசு பொருளாகவும் இல்லை. நீங்கள் ஒரு முஸ்லிமா? எனில் இனி இப்படித்தான் என்கின்றது இந்த அமைப்பு.
ஏனெனில் ‘பாபர் மஸ்ஜித் இடிப்பு ஒரு தற்செயல். திட்டமிடப்பட்டதல்ல’ என்ற நீதிமன்றத் தீர்ப்பு நமக்கு கூறியது அதைத்தான். லிபரான் ஆணைய அறிக்கை, கிட்டதட்ட 850 சாட்சிகள், காட்சி மற்றும் வீடியோ ஆதாரங்கள், இன்றும் இணைய வெளிகளில் பொதுவிலுள்ள பல வீடியோக்கள், அதில் தெளிவாக கேட்கும் ‘இன்னும் ஒரே அடிதான். பாபர் மசூதியை உடையுங்கள்’ எனும் குரல் என அத்தனையையும் CBI நீதிமன்றம் ஆதாரமாக கொள்ளாதது அப்போது பெரும் கவலையை அள்ளிக் கொடுத்தது.
1992 டிசம்பர் ஐந்தாம் தேதியன்றே மஸ்ஜிதை உடைப்பதற்காக ஒத்திகை பார்க்கப்பட்ட ஆதாரங்களைக் கூட நீதிமன்றம் போதுமானதாக கருதவில்லை. இரும்புக் கம்பிகள், கோடாரிகள், மண்வெட்டிகள், கயிறுகள் என அத்தனையையும் வைத்திருந்த ஒத்திகைக் கூட்டத்தின் ஆண்களைக் கண்டபோது அவர்கள் தொண்டர்களைப் போலல்லாமல் கட்டிடத்தை தரைமட்டமாக்கும் தொழிலாளர்களைப் போலவே இருந்தார்கள் என இவ்வழக்கில் இன்றளவும் சாட்சி கூறும் பத்திரிக்கையாளர் ப்ரவீன் ஜெயின் கூறுகிறார். மட்டுமல்லாமல் மறுநாள் 6/12/1992 அன்று சில மணி நேரங்களிலேயே மசூதி இடிக்கப்பட்டதும், அதன் பிறகான கலவரமும் தன்னையொரு அவமானகரமான இந்துவாக உணரச் செய்ததாகவும் குறிப்பிடுகிறார் ஜெயின்.
கடந்த 2019 ஜூலை24 ம் தேதி காணொளி காட்சி மூலம், அத்வானி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் ‘தான் எவ்வித குற்றச்சதியிலும் ஈடுபடாதவன் எனவும், அப்போதைய காங்கிரஸ் அரசு, அரசியல் பழி தீர்க்கும் நோக்கோடு தன்னை வழக்கில் இணைத்து விட்டதாகவும் தெரிவித்தார்’. பிரச்சினை அதுவல்ல அதற்கு இருநாள்கள் முன்னதாக ஜூலை 22 அன்று அமித்ஷா ஒரு வழக்கறிஞர் படையுடன் அத்வானி வீட்டிற்கு சென்று சந்தித்து திரும்பினார். ஒரு குற்றவழக்கில் விசாரிக்கப்பட இருக்கும் ஒருவரை ஒரு நாட்டின் உள்துறை அமைச்சரே நேரில் சென்று அதுவும் அரசு வழக்கறிஞர்களோடு சந்தித்து திரும்புவது அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு எத்தகைய அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்?
1949 டிசம்பர் 22 ம்தேதி இரவு மஸ்ஜிதினுள் ராமர் -சீதை- லக்ஷ்மன் சிலைகளை வைப்பதற்கு முன்பிருந்தே இங்கு சதித்திட்டம் துவங்கி விடுகிறது. அன்றைய பைசாபாத் கலெக்டரான நய்யார் அன்றைய பாஜகவான ஜன்சங்குடன் தொடர்புடையவர் என்பதும் பிறகு அவர் மக்களவைத் தேர்தலில் ஜன்சங் சார்பாக போட்டியிட்டதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள். மட்டுமல்லாமல் 1992 டிசம்பர் 6 அன்று மஸ்ஜித் இடிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அன்றைய மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் தங்களது இடத்தில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தனர். பின்னர் அதே காவலதிகாரி மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரானார். அமித்ஷாவை நிரபராதியாக்கிய நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநரானார்.
பாபர் மஸ்ஜித் நிலவுரிமை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரஞ்சன் கோகய் பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அரசியல் சடுகுடு விளையாட்டில் ஒரு சுண்டைக்காயான நமக்குத் தெரிந்தே இத்தனை. எனில் இன்னும் எத்தனையத்தனை சதிகள் நிரம்பியதாக இருக்கும் கடந்தகாலமும், இனி வருங்காலமும்.
இவையெல்லாம் வெறும் ஒரு மஸ்ஜிதை இடிப்பதற்காக செயல்படுத்தப்பட்ட நிகழ்வென கருதவியலுமா? இயலாது. சங்கப் பரிவாரங்களின் இறுதி இலக்கான இந்து ராஷ்ட்ரம், பார்ப்பணீய மேலாண்மை, வர்ணாஷ்ரம கோட்பாடு என்ற இறுதி செயல் திட்டத்திற்கு மக்களை இந்து என்ற ஒற்றைப்புள்ளியில் இணைக்க அவர்களுக்கு தேவைப்பட்டதுதான் பாபர் மஸ்ஜித், ராம ஜென்ம பூமியாகி பின் சர்ச்சைக்குறிய கட்டடமாகி, பிறகு சர்ச்சைக்குறிய இடமாகி, இறுதியில் ராமர் ஆலயமாக மாறிவிட்டது.
இந்நெடிய வரலாற்றிற்கான துவக்கப்புள்ளிகளாக பல இருந்த போதிலும் ஒன்றை குறிப்பிடலாம். அன்றைய பிரதமர் நேருவின் காலத்தில் 1949 ல் காங்கிரசுக்கும், இடது சாரிகளுக்குமான கூட்டணி பிளவு காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்து சமூக துறவி பாபா ராகவ்தாஸ் வென்றதைத் தொடர்ந்தே இப்பிரச்சினை துவங்கியது. அவருக்கு முன்னதாக அத்தொகுதி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு இடதுசாரி வேட்பாளர் என அறிய வரும்போது தோன்றும் ஆயாசம் அளவில்லாதது. ஒரு வரலாற்றையே தலைகீழாய்ப் புரட்டிப்போட்ட மாற்றம்.
இதோ சுதந்திர இந்தியாவில் அநீதியின் குறியீடாக, அபகரிப்பின் அடையாளமாக ரூ.1800 கோடி செலவில் 54,700 சதுர அடி பரப்பளவில் ராமர் கோயில் தயாராகி இருக்கிறது. 2024 பொதுத்தேர்தல் பிரச்சாரத்தொடக்கமாகவும் கோயில் கும்பாபிஷேகம் இம்மாதம் 22 அன்று நடைபெற இருக்கிறது.
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, அதன் வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டு, இறுதியில் 2019 நவம்பர் மாதம் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
உலகமே கொரனா முடக்கத்தில் இருந்தபோதும் அவசர அவசரமாக பிரதமர் நரேந்திர மோடி 2020, ஆகஸ்ட் 5 அன்று முகத்தில் கவசம் அணிந்து கொண்டு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.1800 கோடி செலவில் 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட ராமர் கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் திறப்புக்கு தயாராகி இருக்கிறது.
ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக, நாடு முழுக்க இருந்த பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என்று பெயர் செதுக்கப்பட்டுள்ள செங்கல்கள் கடந்த 30 வருடங்களாக அனுப்பப்பட்டு தொடர்ந்து வந்து சேர்ந்த இந்தச் செங்கல்கள் பூஜை செய்யப்பட்டு இராமர் கோயில் கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரும், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையின் கட்டுமான கமிட்டியின் தலைவருமான நிர்பேந்திர மிஸ்ரா மேற்பார்வை செய்து வருகிறார்.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ‘மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம்’, புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் மற்றும் நகரக் கட்டமைப்பு என ரூ.30,923 கோடிகளை மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டு செலவு செய்து வருகின்றன.
2024 பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரமாக ராமர் கோவிலை முன்னிறுத்துவதில் முனைப்புக் காட்டப்படுகிறது.
1992 டிசம்பர் 6 அன்று மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பும் பிறகும், நீதிமன்றத்திற்கு உள்ளே, வெளியே எத்தனை விதமான வன்ம ஒத்திகைகள், அரசியல் சித்து விளையாட்டுகள் நடந்தேறின என்பதை வரலாறு நிறைய பதிவு செய்திருக்கிறது. இன்று மிருக பலத்தில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதை திரையிட்டு மறைப்பதில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
இனி, அவர்களின் அறுவடைக்கான காலம். நீதி அறம் போன்ற நெறிகளுக்கு இங்கு சிறிதும் இடமில்லை என்பதையே அவர்களின் செயல்திட்டங்கள் வெளிச்சப்படுத்துகின்றன.
எனவே நாடு இன்றிருக்கும் பேரபாயச்சூழலில் மதச்சார்பற்ற முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளும், சிறுபான்மை கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் சிற்சில வேறுபாடுகளை மறந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம் அதன் இயல்பான அமைப்பிலேயே நிலைபெற வேண்டுமென்ற உயரிய நோக்கோடு ஓரணியில் திரள்வதே இத்தேசத்தின் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும். நட்புமுரண், பகை முரணென வியாக்கியானங்களைப் பேசிப் பேசியே பிளவுற்றார்களெனில் எதிர்காலத்தில் இப்படியொரு நாடு இருந்தது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இருக்காது. தேடினாலும் கிடைக்காது.