மொய்த்ரா மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்கவை உறுப்பினர் (2019-2024). மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர், மக்களவையில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் பெற்றார் என்று மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தண்டிக்கப்பட்டுள்ளார். மொய்த்ரா இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார். இவர் கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடியின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் அவலங்களை மக்களவையில் கேள்விகளால் அம்பலப்படுத்தினார். இவர் புயலாக எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடியோ அவரது அமைச்சரவை சகாக்களோ பதில் அளித்ததே இல்லை. அதேநேரம், அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்றொரு திட்டத்தை வகுத்து அதில் அவரை சிக்க வைத்து தங்களை புனிதர்களாக காட்டிக் கொண்டார்கள். பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது தொழில்துறை நண்பரான கவுதம் அதானியையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதன் மூலம் மொய்த்ரா இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
மொய்த்ரா கேள்வி கேட்கப் போகிறார் என்றால் ஆளும் பாஜக எம்பிக்கள் நெளியத் தொடங்கினர். குறிப்பாக மொய்த்ரா பிரதமராக இருக்கும் மோடிக்கும் தொழிலதிபரான கவுதம் அதானிக்கும் இடையிலான உறவை மக்களவை தொடங்கி நாடு முழுவதும் அம்பலமாக்கினார். மொய்தரா ஊடகங்களில் தலைப்புச் செய்தியானார். இது பிரதமர் மோடிக்கும் அவரது அமைச்சரவை கூட்டாளிகளுக்கும் மொய்த்ரா மீது ஆத்திரத்தை உண்டாக்கி இருந்தது.
தர்ஷன் ஹிரனந்தானி (Darshan Hiranandani) மொய்த்ராவுக்கு நன்குத் தெரிந்தவரும் நண்பருமான ஒரு தொழிலதிபர். மொய்த்ரா தனது நாடாளுமன்ற மின்னஞ்சல் முகவரியையும், அவரது கணிணியில் உள்ள பாதுகாப்பான தகவல்களையும் (Portal login details) தர்ஷன் ஹிரனந்தானியிடம் பரிமாறி நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை உண்டாக்கினார் என்பது பாஜக அரசு மொய்த்ரா மீது வைத்த குற்றச்சாட்டு. மொய்த்ரா தனது மின் அஞ்சல் இணைப்பை ஹிரனந்தாவுக்கு வழங்கவில்லை, அதே நேரம், Portal login தகவல்களைப் பரிமாறுவது அனைத்து உறுப்பினர்களும் செய்யக் கூடிய சாதாரணமானது தான், அதேநேரம், மக்களவையில் கேள்விகள் கேட்டதற்கு யாரிடமும் பணம் பெற்றதில்லை என்கிறார் மொய்த்ரா.
மொய்த்ரா மக்களவை கணிணியில் இருந்து ஹிரனந்தாவுக்கு அனுப்பிய தகவல்களை கொண்டுதான் ஹிரனந்தா தனது தொழில் போட்டியாளரான கவுதம் அதானிக்கு எதிராக மக்களவையில் மொய்த்ரா எழுப்ப வேண்டிய கேள்விகளை உருவாக்கிக் கொடுத்தார் என்கிறது மோடியின் அரசு.
அதானி மீதான மொய்த்ராவின் மக்களவை கேள்விகள் அதானிக்கும் அவரது நண்பராக கருதப்படும் பிரதமர் மோடிக்கும் கடுமையான சங்கடங்களை உண்டாக்கியது. இப்போது அதானியை புனிதப்படுத்துவதற்காக மோடியின் அரசு மொய்த்ராவை குற்றவாளியாக காட்ட விரும்புகிறது. மேலும், மொய்த்ரா நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை பொறுப்பில்லாமல் வெளியாளுக்கு பரிமாறிவிட்டார் என்றும் பதறுகிறது.
இந்த விவகாரத்தை விசாரணை செய்ய நாடாளுமன்றம் மக்களவை நன்னடத்தை குழுவை (Lok Sabha Ethics Committee) வினோத் சோன்கர் (Vinod Sonkar) தலைமையில் உண்டாக்கியது. இந்த குழுவில் பாஜக அல்லாத இதர கட்சிகளின் உறுப்பினர்கள் ஐவர் இடம்பெற்றனர். மொய்த்ரா இந்த நன்னடத்தை குழுவின் விசாரணைக்கு நவம்பர் 2ஆம் நாள் ஆஜரானார். விசாரணக்கு சென்றவர் உடனே வெளியேறிவிட்டார். மொய்த்ரா கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் குரலை உயர்த்தி விசாரணை குழுவினை அவமானப்படுத்திவிட்டார் என்று குழு குற்றம் சாட்டியது. அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறவே விரும்புகிறேன். அதற்காக, பாஜக தலைமை முன்பு என்னை நானே அசிங்கப்படுத்திக்கொள்ள (disrobing) விரும்பவில்லை என்கிறார் மொய்த்ரா. (பிரண்ட் லைன் டிசம்பர் 1, 2023). நன்னடத்தை குழு மிக அவசரமாக இவரது வழக்கை கையில் எடுத்து மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கமும் செயது விட்டது. அது குறித்து மொய்த்ரா பிரண்ட் லைன் ஆங்கில மாத இதழுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்:
பாஜக உங்களை மக்களவையில் பேசவிடாமல் தடுக்கவே இந்த உத்தியை கையில் எடுத்திருக்கிறதா?
நான் மட்டும் விசாரணைக் குழுவை புறக்கணிக்கவில்லை. விசாரணைக் குழுவின் தலைவர் முன்பு 10 பேர் பதில்கூற சென்றிருந்தோம். தலைவர் மக்களவை உறுப்பினர்களிடம் நடந்து கொண்ட விதத்தை எதிர்த்து 5 உறுப்பினர்கள் புறக்கணிப்புச் செய்தோம். மக்களவை நன்னடத்தை குழுவின் சந்திப்புக்குப் பிறகு மக்களவை உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் வழக்கம் இதுவரையில் இல்லை. தற்போது முதன்முறையாக, காங்கிரஸ்-2, மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 1, ஐக்கிய ஜனதா தளம்-1, பகுஜன்சமாஜ் கட்சி-1 என 5 உறுப்பினர்கள் நேராக செய்தியாளர்களை சந்தித்து உள்ளே நடந்தவற்றை கூறினார்கள். விசாரணை குழுவின் தலைவர் சம்பந்தமில்லாத வகையிலும், இழிவுபடுத்தும் நோக்கத்திலும் கேட்ட கேள்விகளுக்கு உறுப்பினர்கள் பதில்கூற விரும்பவில்லை. குழுவின் தொடர்ச்சியான கேள்விகள் தனிநபர்களை தாக்கும் வகையில் தயார் செய்யப்பட்டதாக இருந்தது. விசாரணை குழுவின் தலைவர் 12 பக்கங்களுக்கு தட்டச்சு செயப்பட்ட கேள்விகளை கொண்டு வந்தார். குறிப்பானதொரு கேள்வி பற்றி நான் கேட்ட போதெல்லாம் அவர் பின்னுக்குச் சென்றார். அவருக்கே அந்த கேள்விக்கு அர்த்தம் விளங்கவில்லை. இது எவ்வளவு கொடூரமானது. பெண்களை இழிவு செய்யும் அந்த இடத்தில் நான் கொஞ்ச நேரம் கூட இருக்க விரும்பவில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவே விரும்பினேன். பாஜகவின் அவமானகரமான செயல்களுக்கு இலக்காக விருப்பமில்லை.
அவர்கள் என்னை பதில் சொல்லவே விடவில்லை. புகார் அளித்தவர் ஏற்கெனவே விசாரணைக்கு பதில் கூறி விட்டதால் நானும் பதில் கூற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவித்த பிறகே என்னை பதில் சொல்ல அனுமதித்தார்கள். புகார் அளித்தவர் என்னுடன் அவருக்கு தனிப்பட்ட கசப்பான உறவு இருந்ததாக விசாரணையில் சொல்லவில்லை என்று கூறினேன். நன்னடத்தை குழுவின் புகாரானது பிழையாகவோ, தொந்தரவு செய்யும் நோக்கமுடையதாகவோ, அவசியமற்றதாகவோ இருக்க கூடாது என்பது முக்கியமான ஒரு விதி. புகார் அளித்தவருக்கு என்னோடு எந்த மோதல் போக்கும் இல்லை என்பதால் இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. தள்ளுபடி செய்திருக்க வேண்டும். எனவே, நான் அந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். அந்த நபர் அளித்த புகாரைத் தொடர ஒரு மக்களவை உறுப்பினரை பயன்படுத்தினார். அந்த மக்களவை உறுப்பினர் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கவில்லை என்பதை உலகிற்கு வெளிப்படுத்தினேன் என்பதால் அந்த மக்களவை உறுப்பினர் ஏற்கெனவே என் மீது பழிவாங்கும் உணர்வில் இருந்து வருகிறார்.
நான் பாஜகவுக்கு எதிராக பேசுகிறேன் என்பதால் அவர்கள் என்னை குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கையின் மீது அவதூறு சொல்கிறார்கள். அதற்காக, ஒரு பலவீனமான நபரை கையில் எடுத்திருக்கிறார்கள். ஒரு தேசிய தொலைக்காட்சியில் நான் சொன்னதைப் போல, நன்னடத்தை குழுவின் கேள்விகள் என்பது கேள்வியே இல்லை. கேள்விகள் அனைத்துமே திட்டமிட்டு உருவக்கப்பட்டவை தான்.
நான் 1 ரூபாய் வாங்கி இருந்ததாக நிரூபித்தால் அவர்கள் என்னை சிறையில் போடட்டும். நன்னடத்தை குழுவால் விசாரிக்கும் அவசியம் இல்லை. இது பிரச்சனையை திசைத் திருப்பும் உத்தி.
அதானிக்கும் மோடிக்கும் உள்ள பிணைப்பு குறித்தும் நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு திட்டங்களும் எப்படி அதானிக்கு கிடைக்கிறது என்று யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். அவர்கள் என்னை பேசவிடாமல் தடுக்கவே இந்த முயற்சியை செய்கிறார்கள்.
அதானி 2 மக்களவை உறுப்பினர்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக என்னை நெருங்கி வந்தார். இந்த கடுமையான முயற்சியை தொடர்ந்து யாரோ ஒருத்தர் மூலம் எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பினார்கள். அதில், அடுத்த 6 மாதங்களுக்கு வாயை மூடிக்கிட்டு இருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று கூறப்பட்டு இருந்தது.
தர்ஷன் ஹிரனந்தனி (Darshan Hiranandani) தனது பிரமாண வாக்குமூலத்தில் நீங்கள் மக்களவையில் அதானிக்கு எதிராக கேட்கும் கேள்விகளை தொகுத்து கொடுத்ததாகவும், அதானிக்கு எதிராக கேள்விகள் கேட்க, நீங்கள் பணம் கேட்டு அவரால் மறுக்க முடியவில்லை என்றும் கூறி இருக்கிறார்.
பாஜக மிக மோசமான ஒரு வேலையில் இறங்கியது. பொய்யான புகார் அளிப்பதற்கு ஒரு புகார்தாரரை ஏற்படுத்திக் கொண்டது. பின்னர் அந்த புகாருக்கு ஆதரவாக பிரமாண வாக்குமூலம் அளிக்கச் சொல்லி தர்ஷன் ஹிரனந்தனியை மிரட்டி இருக்கிறது. ஆனால், தர்ஷன் ஹிரனந்தனியை நன்னடத்தைக் குழு விசாரணைக்கு அழைக்கவில்லை.
பிரமாண வாக்குமூலம் 12 பத்திகளுக்கு இருந்தது. முதல் 11 பத்திகளில் நான் எவ்வளவு பிடிவாதம் உள்ளவள் என்பதையும் பிரதமர் எவ்வளவு உயர்ந்தவராக இருக்கிறார் என்பதையும் பேசுகிறது. 12வது பத்தியில் மட்டும் தான் கேள்வியில் உள்ள பிரச்சனையை பேசுகிறது. அதில், எந்த இடத்திலும் பணம் பற்றி குறிப்பிடப்படவே இல்லை. தர்ஷன் ஹிரனந்தனி ஒரு அரசியல்வாதிக்குப் பணம் கொடுத்தார் என்றால் அது மிகக் கடுமையான குற்றச்சாட்டுதான். தர்ஷன் ஹிரனந்தனி எனக்கு என்ன கொடுத்தார் என்றால், அந்தப் பொருளின் மதிப்பு என்ன? அதன் விலை என்ன என்பவைகளையும் எழுதி இருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் இல்லை. பதிலாக, மிகவும் ஆடம்பரமான பொருட்களை கொடுத்தாக சொல்கிறார். நான் தர்ஷன் ஹிரனந்தனியை குறுக்குவிசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன். நான் அவரை விசாரணை செய்வதை நன்னடத்தை குழு விரும்பவில்லை.
தர்ஷன் ஹிரனந்தனி நல்ல ஆள்தான். ஆனால், பிரமாண வாக்குமூலத்தை அவ்வாறு எழுதுவதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. பிரமாண வாக்குமூலத்தில் அவர் எழுதிய வரிகள் நரேந்திர மோடியை புகழ்ந்து (Extol) செல்கிறது. அரசாங்கம் வெளியிடும் விளம்பர அறிக்கை போல இருந்தது. பிரதம மந்திரி அலுவலகமே இந்த வாக்கு மூலத்தை எழுதி, தர்ஷன் ஹிரனந்தனியை கையெழுத்துப் போட வற்புறுத்தி இருக்கிறது.
தர்ஷன் ஹிரனந்தனியிடம் இருந்து நான் தகவல்களை வாங்கி இருந்தாலும் அதானியின் எந்தவொரு தொழில் போட்டியாளரிடமும் வியாபாரம் எவ்வாறு நியாயமற்ற வகையில் நடந்து வருகிறது என்பதைப் பற்றிப்பேச எனக்கு உரிமை உள்ளது. அதானி இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் விலைக்கு வாங்கும்போது, அதேநேரம், தகுதியுடைய தொழிலதிபர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்போது அதானி எப்படி அனைத்து விமான நிலையங்களையும் வாங்கி குவிக்கிறார் என்று அதானியின் போட்டியாளர்களிடம் பேச எனக்கு முழு உரிமை உண்டு. அறிவுள்ள எந்தவொரு மனிதரிடமும் நான் ஏன் பேசக்கூடாது. இவ்வாறு பேசுவதும் எனது மக்களவை பணியின் ஒரு பகுதிதான்.
G.V.K. ரெட்டி மும்பை ஏர்ப்போர்ட்டை வாங்கி இருந்தார். உடனே அவர் மீது சிபிஐ மற்றும் வருமான வரித்துறையை ஏவி விட்டார்கள். உடனடியாக அவர் மும்பை ஏர்போர்ட்டை அதானிக்கு விற்க வேண்டியது வந்தது. என்ன நடந்தது என்பதை G.V.K. ரெட்டி தெரிந்து கொள்வதற்காக நான் அவரிடம் பேசக்கூடாதா?
விமான நிலையங்களை பராமரிப்பதில் அனுபவம் இல்லாத அதானி ஏன் மும்பை விமான நிலையத்தை வாங்க வேண்டும். இதில், நாட்டின் நலன் ஏதும் இல்லையா? ஒவ்வொன்றையும் அதானி எவ்வாறு வங்குகிறார் என்பதை கேள்வி கேட்கத்தான் வேண்டும். அதானி தொழில் ரகசியத்தை நான் தொடர்ந்து கேள்வி கேட்பதால் என்னை கட்டம் கட்டுகிறார்கள்.
நீங்கள் தர்ஷன் ஹிரனந்தனிக்கு உங்கள் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்ததால்தான் அவர் உங்களுக்கு தகவல்கள் வழங்க முடிந்தது என்று பிரமாண வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். உண்மையில் உங்கள் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்தது உண்மைதானா?
இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. மக்களவை உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் முகவரியும் கடவுச் சொல்லும் NIC எனும் தேசிய தகவல் ஆணையம் (National Informatics Centre) கொடுக்கிறது. இவற்றை எவருக்கும் பகிர முடியாது. NICன் portal login தான் தர்ஷன் ஹிரனந்தனிக்கு பகிர்ந்தேன். portal loginஐ பகிரக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. இதன்மூலம் மட்டும்தான் நாம் கேள்விகள் கேட்க முடியும்.
ஒவ்வொரு மக்களவை உறுப்பினர் அலுவலகத்திலும் 10 பேர் portal loginஐ பயன்படுத்துவர்கள். எந்த உறுப்பினரும் தனது கேள்வியை தானே தட்டச்சு செய்வதில்லை. அனேகம்பேர் தங்கள் கேள்விகளை தாங்களே தயாரிப்பதும் இல்லை. ஆனால், நான் கேட்கும் கேள்விகளை நானேதான் தயாரிக்கிறேன். எனது தொகுதி தொலைதூரத்தில் உள்ளது. என்னால் ஒரு கணிணி கூட பெற முடியாது. அதனால், எனக்கு தர்ஷன் அலுவலகத்தில் இருந்து கணிணியில் தட்டச்சு செய்யும் ஒருவரது உதவி தேவைப்பட்டது. மேலும், OTP (One Time Passward) எனது அழைப்பேசிக்கு வந்துவிடும். எனவே, எனக்குத் தெரியாமல் ஒரு கேள்வியைக் கூட கணிணியில் ஒருவர் தட்டச்சு செய்துவிட முடியாது. நான் கணிணியில் மொத்தம் 61 கேள்விகளை பதிவு செய்தேன். அதில், அதானி பற்றியது 9 கேள்விகள் தான்.
எனது கேள்விகள் கிருஷ்ணா நகரில் இருப்புப் பாதையின் குறுக்குச் சாலை (Railway Crossing) முதல் இந்தியாவில் குவிக்கப்படும் உயிரி கழிவுகள் (Biodegradable) வரையில் இருந்தது. அனேக கேள்விகள் தர்ஷன் அலுவலகத்தில் தட்டச்சு செய்யப்பட்டதுதான். அவரது loginல் 47 கேள்விகள்தான் இருந்தது எனக்கு உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், மேல் அதிகமாகவே இருக்க வேண்டும். NICயின் loginஐ வெளியே பகிரக்கூடாது என்று விதிகள் எதுவும் இல்லாத போது அவர்கள் login ரகசிமானது என்று ஏன் சொல்லுகிறார்கள் என்பது புரியவில்லை. இது பிரச்சனை என்றால் மக்களவையின் ஒவ்வொரு உறுப்பினரும் விதியை மீறிவிட்டதாக ஆகாதா என்பது தான் எனது கேள்வி.
எனது மக்களவை அலுவல் கணிணியில் யாரை அழைத்தும் தட்டச்சு செய்ய எனக்கு முழு உரிமை உண்டு. எனது NIC loginஐ பகிர்ந்து விட்டால் நாட்டின் பாதுகாப்புக்கான அரணை உடைத்து விட்டதாக பாஜக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
Adani Enterprises எனப்படும் அதானி குழும நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மறைமுக பங்காளிகளாக இருக்கிறார்கள். மேலும், அதானி நிறுவனம் மத்திய உள்துறையின் சான்றுடன் நமது துறைமுகங்களை நமது விமான நிலையங்களை வாங்குகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா?
நன்னடத்தை குழு முன்பு ஏராளமான வேறு வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருக்கும்போது உங்கள் வழக்கை அவசரமாக எடுக்க வேண்டிய தேவை என்ன?
நன்னடத்தை குழுவின் 2019 ஆண்டின் கையேடு என்னிடம் உள்ளது. இதில், நன்னடத்தை என்பது சட்டரீதியிலோ, செயல்முறையிலோ (Technical matter) திணிக்க முடியாது என்று தெளிவாக கூறுகிறது. நன்னடத்தை விதிகளை வரையறுக்க நன்னடத்தை குழுவுக்கு 2019ல் உத்தரவிடப்பட்டது. நன்னடத்தை விதிகளை வரையறை செய்ய 2019 முதல் 2023 வரையில் இயலவில்லை. எனவே, நாம் பேணிக்கொள்ளவோ அல்லது முறிக்கவோ நன்னடத்தை விதி என்பது இல்லை.
நன்னடத்தை குழுவின் இறுதி கூட்டம் ஜூலை 27, 2021ல் நடந்தது. இந்தக் குழுவின் முன்பு 18-20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒரு வழக்கு பாஜக மக்களவை உறுப்பினர் ரமேஷ் பிதூரி (Ramesh Bidhuri) மக்களவையில் கக்கிய வெறுப்புப் பேச்சு சம்பந்தமானது. இது எல்லாவற்றையும்விட முக்கியமானது. ரமேஷ் பிதூரி அக்டோபர் 10ஆம்நாள், நன்னடத்தை குழு முன்பு விசாரணைக்குச் சென்றார். அதன்பின்னர் அவர் நன்னடத்தை குழு முன்பு நேர்செல்லவில்லை. அவர் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதாக கூறினார்கள்.
துர்க்கை பூஜை வரவுள்ளதால் நன்னடத்தை குழுவுக்கு நேரில்வர அவகாசம் கேட்டேன். குழு எனக்கு அவகாசம் தரவில்லை. குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்பே என்னை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம். அதன் மூலம் எனது வாயை அடைக்க முடியும். 2024 பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கவுள்ள 2 நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்பாமல் தடுக்க முடியும்.
நாடாளுமன்ற விதிமுறையை நீங்கள் மீறியதாக நன்னடத்தைக் குழு கண்டறிந்ததாக சொல்லுமானால் நன்னடத்தை குழு என்ன செய்யும்?
நன்னடத்தை குழு அதிகபட்சமாக இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்ய முடியும். குழு என்னை தகுதி நீக்கம் செய்ய முடியாது. நன்னடத்தை குழு தனது அறிக்கையை சபாநாயகரிடம் வழங்கும். சபாநாயகர் அந்த அறிக்கையை மக்களவையில் இடம்பெறச் செய்வார். மக்களவையில் பெரும்பான்மையாக பாஜக உறுப்பினர்கள் இருப்பதால் அவர்கள் வாக்களிப்பு மூலம் என்னை இடைநீக்கம் செய்ய முடியும். அதுவும் அந்த கூட்டத் தொடருக்கு மட்டும்தான் இடை நீக்கம் செய்ய முடியும். எனக்கு மட்டும் இதில் விலக்கு இருக்காது. நான் அதானியை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன். 2024 மே மாதம் எனது தொகுதியில் இருந்து மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவைக்கு வருவேன். எனது கேள்வி முழுமையடையவில்லை.
உங்கள் விசயத்தில் வேறு கட்சிகள் உங்களுக்கு பக்கம் உறுதியாக நிற்கும்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் நீண்ட மௌனம் காப்பது ஏன்?
மம்தா பானர்ஜி நவம்பர் 2ஆம்நாள் எனக்கு ஆதரவாகப் பேசினார். திரிணாமுல் கட்சியின் மற்றொரு மக்களவை உறுப்பினர் சுதிப் பந்தியோபதயாவும் எனக்கு ஆதரவாக பேசினார். மேற்கு வங்க மாநில அமைச்சர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
(பிரண்ட் லைன் ஆங்கில மாத இதழ் டிசம்பர், 2023).
தமிழில்: ஜி.அத்தேஷ்