தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி’ என்கிற விவகாரம் அண்மைகாலமாக விஸ்வரூபம் எடுத்து பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் இதன் முழு விவகரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வகை செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். ஆனால் 2018-ல் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த பாஜக அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கத் தேவை இல்லை என மாற்றிவிட்டது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கும் பெற முடியும். இந்த பத்திரங்கள் ரூ .1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என விற்கப்படுகின்றன. மேலும் அவற்றை விற்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆகும்.
இதன் பின்னர் அரசியல் கட்சிகள் பெருமளவு கல்லா கட்டின. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையைப் பெற்று குவித்தன. இதில் பெருமளவு நிதி பெற்றது ஆளும் பாஜகதான் என்கின்றன புள்ளி விவரங்கள்.
இந்த தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதா சார்ந்தது; லோக்சபா ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இதன் அம்சங்கள், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2018-2022ம் ஆண்டுகளில் அறியப்படாத மூலங்களில் இருந்து இரகசியமாக நன்கொடை பெற்ற கட்சிகளில் பாஜகதான் முதலிடம் வகிக்கிறது.
நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட தேவையில்லை என்பதால், அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வருடங்களுக்கும் குறைவான காலங்களிலேயே தேர்தல் பத்திரங்கள் நன்கொடையின் மிகவும் பிரபலமான பாதையாக மாறியுள்ளன.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டம் சட்டபூர்வமாக செல்லுபடியாகுமா என்ற வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைவரின் பார்வையும் அதன் மீதே உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, அக்டோபர் 30ஆம் தேதி, மத்திய அரசு சார்பில் ஆஜரான இந்திய அட்டர்னி ஜெனரல் கூறுகையில், “சுத்தமான பணத்தை” பயன்படுத்துவதை இந்த திட்டம் ஊக்குவிக்கிறது என்றும், பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் எதைப்பற்றியும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக் கூடாது என்றும் நியாயமான கட்டுப்பாடுகள் தேவை என்றும் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார்.
கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க, பணமதிப்பழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பலமுறை எச்சரித்துள்ளது.
இன்றுவரை பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.5,271.97 கோடி நிதி திரட்டியுள்ளது. இது காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக திரட்டிய மொத்த நிதியை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து தேர்தல் நிதிப் பத்திரங்களில் பாஜக ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
நன்கொடை அளித்த நபர்கள் வருமான வரித்துறையிடம் கணக்கு காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பது மட்டுமல்ல, இவர்களுக்கு வரிச்சலுகையும் உண்டு. கொடுத்தவர் யாருக்கு கொடுத்தேன் என்று சொல்ல வேண்டியதில்லை! கணக்கும் காட்ட வேண்டியதில்லை!
ஆக,தேர்தல் பத்திரங்கள் திட்டமானது ஆளுங்கட்சிக்கு தங்கு தடையற்ற அனாமதேய நன்கொடைகளுக்கு வழி வகுத்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களால் வாரி வழங்கப்படும் இந்த நன்கொடையால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நன்கொடையாளரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், அது கறுப்பு பண புழக்கத்தை ஊக்குவிக்கும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
செப்டம்பர் 2017-ல், அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்குக் கடிதம் எழுதினார். அதில் தேர்தல் பத்திரங்கள் போன்ற ஒரு திட்டத்தை அனுமதிப்பது ஆபத்துகள் நிறைந்தது என்று எழுதினார்.இது பணமோசடி பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டம் அமலானது.
மேலும், தீவிரவாத தொடர்புடையதாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படும் நிறுவனத்திடமிருந்து பா.ஜ.க தேர்தல் நன்கொடை பெற்ற தகவலும் அண்மையில் அம்பலமாகியுள்ளது.
பாஜக அரசின் ஒவ்வொரு நகர்விலும் அரசியல் கணக்குகளே ஒளிந்திருக்கின்றன!