இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீனப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை இரக்கமற்றப்படி கொன்று வருவதை நாம் அச்சத்துடனும் வேதனையுடனும் கவனித்துக் கொண்டு வருகிறோம். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஷேக் ஷரா (Sheikh Jarrah) வில் ஆரம்பித்து அல் அக்ஸா பள்ளிவாசலுக்குப் பரவி அல் அக்ஸா பள்ளியில் நோன்பு திறப்பதற்காக குழுமி இருந்த முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ரப்பர் குண்டுகளை கொண்டு சுட்டு காயப்படுத்தியதில் இருந்து 2021ல் புதிய பிரச்சனை தொடங்குகிறது. அல்-அக்ஸா முஸ்லிம்களின் மூன்றாவது புனித பள்ளிவாசல் என்பதால் அங்கு நடந்த தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை கோபப்படுத்தியது. பாலஸ்தீனக் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பூர்வக்குடி முஸ்லிம்களை வெளியேற்ற பல பத்தாண்டுகளாக நடந்து கொண்டு வரும் வன்முறைகளில் ஒன்றுதான் இதுவும்.
பாலஸ்தீனர்கள் சந்தித்துவரும் இந்த ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் கொண்டு வரவேண்டும், ஐரோப்பாவும் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று முஸ்லிம்களும் மற்றவர்களும் மிகுந்த எதிர்ப்பார்ப்பு கொண்டவர்களாக இருந்து வந்தனர். ஆனால், அந்த நம்பிக்கை பொய்யாகிப் போனதால் இனி முஸ்லிம்களைக் கொண்ட ஒரு வலிமையான ராணுவம் தான் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று உணரத் தொடங்கி உள்ளனர். பாலஸ்தீன விடுதலைக்கான இந்தப் போராட்டம் வரலாற்றில் முதல் சம்பவமாக இல்லை. பாலஸ்தீனத்தை சிலுவைப்போர் வீரர்கள் 88 ஆண்டுகள் 12 ஆம் நூற்றாண்டில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த நூற்றாண்டில் முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய சலாகுதீன் அய்யூபி என்ற மாவீரர் சிலுவைப்போர் வீரர்களிடம் இருந்து பாலஸ்தீனத்தையும் ஜெருசலத்தையும் மீட்டார். அந்த வரலாற்றில் இருந்து இன்றைய தீர்வுக்கான பல படிப்பினைகளை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
முஸ்லிம் உலகத்தில் 11 ஆம் நூற்றாண்டில் போட்டிக் குழுக்கள் மத்தியில் நடந்திருந்த அரசியல் இயங்கியல் மற்றும் அதிகார அரசியலுக்கு மத்தியில் இருந்து வந்த இழுபறி இன்றைய முஸ்லிம் உலகப் பிரச்சனைக்கு ஒன்றும் சளைத்தது இல்லை. அப்பாஸிய கலிஃபாக்கள் முஸ்லிம் சமூகத்தின் மைய அதிகாரமாக ஒரு காலத்தில் இருந்து வந்தனர். ஆனால், அவர்கள் முன்னர் ஈட்டியிருந்த தங்கள் புகழை 11 ஆம் நூற்றாண்டு முடிவதற்கு உள்ளாகவே இழந்து விட்டனர். எகிப்துக்கும் பாரசீகத்திற்கும் இடைப்பட்ட முஸ்லிம் உலகம் பல துண்டுகளாக உடைந்து போனது. முஸ்லிம் உலகுக்கு நடுவணாக இருந்த அரசியலின் தலைமை குலைந்தது. இதன் விளைவாக, ஆட்சியாளர்கள் பாரம்பரியத்தின் வழியில் வந்தார்கள். இவர்கள் கலிஃபாவுக்கு எதிராக இருந்தார்கள். போட்டித் தலைநகரங்களை உருவாக்கினார்கள்.
இவர்களில் இரண்டு பெரிய போட்டியாளர்கள் ஃபாத்திமிகள் மற்றும் இஸ்மாயிலிகள். இவர்கள் இருவரும் தங்களை ஃபாத்திமா (ரலி) மற்றும் இமாம் அலி (ரலி) அவர்கள் வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் அதனால் தங்களுக்கு தான் அரசாளும் உரிமை உண்டு என்றும் உரிமை கோரினார்கள். ஃபாத்திமா (ரலி) வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் பாத்திமிகள் எனப்பட்டார்கள். இந்த ஃபாத்திமியாக்கள் முஸ்லிம் உலகத்தை வழிநடத்தும் கடமை தங்களுக்கு இருப்பதாக கருதிக்கொண்டு இஸ்மாயில் அரசை கி.பி. 909 முதல் நிறுவினார்கள். இவர்கள் அப்பாசிய அரசோடு நேரடியாக மோதினார்கள். ஃபாத்திமிகள் எகிப்தை கி.பி. 969ல் வென்ற பின்னர் முஸ்லிம் உலகத்தின் மாபெரும் சக்தியாக மாறினார்கள். 11 ஆம் நூற்றாண்டு முடிவில் மக்கா, மதினா, வடக்கு ஆப்ரிக்கா, எகிப்து, சிரியா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளை ஆண்டனர்.
ஃபாத்திமிகள் தவிர மற்றொரு பெரிய அரசியல் சக்தியாக செல்ஜூக்குகள் இருந்து வந்தனர். முஸ்லிம்களின் நிலங்கள் பல துண்டுகளாக சிதறிய பின்னர் அப்பாசிகள் மத்திய ஆசியாவின் துருக்கிப் பகுதிகளில் இருந்து கைது செய்து கொண்டு வந்த அடிமை வீரர்களை தங்கள் படைகளில் சேர்த்துக் கொண்டு ஃபாத்திமிகளுக்கு இணையாக பலமான படையை உருவாக்கினர். துருக்கிய பூர்வக் குடிகளான இவர்கள் இஸ்லாமியர்கள் நிலங்களில் குடியேறி இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டனர். இவர்கள் 10 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கான நாடுகளை உருவாக்கினார்கள். செல்ஜூக்குகள் சிரியா தொடங்கி மத்திய ஆசியா வரையிலும் பரந்து விரிந்த நிலையான அரசை உருவாக்கினார்கள். இந்த செல்ஜூக்குகள் கலிஃபாவை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றனர். செல்ஜூக்குகள் ஃபாத்திமிகளின் ஆதிக்கத்தை 11 ஆம் நூற்றாண்டில் கட்டுப்படுத்தினர். செல்ஜூக்குகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் அனடோலியா முழுவதையும் 11 ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் கொண்டு வந்தனர்.
சிலுவை வீரர்களின் வருகை:-
சிலுவைப் போர்கள் தொடங்குவதற்கு முன்பாகவே முஸ்லிம்களின் ஒற்றுமை குலைந்தது. முஸ்லிம்கள் மத்தியில் போட்டி ஆட்சியாளர்களும் மன்னர்களும் தோன்றினார்கள். அதாவது தற்போதுள்ள சூழ்நிலையில் மற்றவர்கள் சுரண்டுவதற்கு வசதியாக முஸ்லிம்கள் தங்கள் மத்தியில் பல்வேறு நாடுகளாகவும் ஆட்சியாளர்களாகவும் பிரிந்து இருப்பதைப் போலவேதான் அன்றைய நிலையும் இருந்தது.
முஸ்லிம்கள் பைசாந்தியம் மீது 1095ல் படையெடுத்த போது பைசாந்திய பேரரசன் அலெக்சியோ (Alexios) பைசாந்தியத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாது என்றே உணர்ந்தார். ரோமில் இருந்த போப் அர்பன் IIவிடம் உதவி கேட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட போப் அர்பன் II கடவுளின் பெயரால் (In the name of Christ) லட்சக்கணக்கானவர்களைக் கொண்ட கிறித்தவப் படையை உருவாக்கினார். உண்மையில் போப் குறிவைத்தது பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலம் நகரைத் தான். ஜெருசலம் நகரை வென்று பாலஸ்தீனத்தில் போப் தலைமையில் கிறித்தவ அரசை நிறுவ வேண்டும் என்று தான் போப் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இருந்து பிரபுக்கள், வீரர்கள் கொண்ட படை ஒன்று 1096ல் இருந்து கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நகர்ந்தது. சபைகளால் முஸ்லிம் வெறுப்பூட்டப்பட்ட கிறித்தவப் படைகள் வரும் வழிகளில் எல்லாம் முஸ்லிம்களை கொன்றும் முஸ்லிம் ஊர்களை அழித்தும் வந்தார்கள். சிலுவை வீரர்கள் காண்ஸ்டாண்டிநோபிள் (Constantinople) நகரின் கோட்டைச் சுவர்களை நெருங்கிய சமயம் பேரரசன் அலெக்சியோ இதன் காரணமாகவே அவர்களுக்கு அனுமதி மறுத்தார்.
அன்டியோக் நகரத்தின் வீழ்ச்சி:-
சிலுவை வீரர்கள் சிரியா- துருக்கி எல்லையில் உள்ள புராதன அன்டியோக் (Antioch) நகரை அடைந்தபோது அந்த பகுதியில் நிகழ்ந்துவந்த அரசியல் சூழல் சிலுவை வீரர்களுக்கு சாதகமாக இருந்திருந்தது. அன்டியோக் தற்போது துருக்கியில் அன்டக்யா (Antakya) வாக உள்ளது. அண்டியோக் ஒரு தனித்த தீவாக இருந்தது. செல்ஜூக் பேரரசில் அன்று ஐக்கிய அரசியல் இருக்கவில்லை. பதிலாக, சிற்றரசர்கள் (petty Amirs) ஒவ்வொரு நகரங்களையும் தனித்தனியாக ஆண்டு வந்தனர். ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து மோதிக்கொண்டிருந்தனர். டமாஸ்கஸ், அலெப்போ, மொகசூல் என அனைத்துப் பிரதேசங்களும் தங்களுக்குள் ஐக்கியமில்லாமல் இருந்தன. தொடர்ச்சியாக சண்டையிட்டுக் கொண்டன. சிலுவை வீரர்கள் அன்டியோக் நகரை சுற்றி வளைத்த போது அன்டியோக் மன்னர் சுற்றி இருந்த இதர அரசர்களிடம் இருந்து உதவிகளை எதிர்ப்பார்ததார். ஆனால், அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
சிலுவை வீரர்கள் ஜெருசலமுக்குப் போகும் வழியில் அன்டியோக் மற்றும் இதர நகர மக்களை கொன்று குவித்ததை கண்டு அருகமையில் இருந்தவர்கள் பீதியடைந்தார்கள். முஸ்லிம் அரசர்கள் சிலுவை வீரர்களுடன் மோதலை தவிர்த்தார்கள். வீரர்களுக்கு வழியை விட்டு ஒதுங்கினார்கள். சிலுவை வீரர்கள் ஜெருசலமுக்குத் தானே போகிறார்கள் என்று பலரும் அவர்களோடு போர் செய்யாமல் அவர்களுக்கு உணவு, குடிநீர், ஆயுதங்கள் கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். சிலுவை வீரர்கள் 1099க்கு முன்பாகவே ஜெருசலம் கோட்டையை அடைந்து விட்டார்கள். சிலுவை வீரர்கள் ஜெருசலம் நகரை ஒருவாரகால முற்றுகைக்குள் ஜூலை 15, 1099ல் முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்றினார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள் கி.பி. 462ல் ஜெருசலம் நகருக்குள் நுழைந்த நாள்முதல் முதன் முறையாக ஜெருசலமை அன்று தான் முஸ்லிம்கள் இழந்திருந்தார்கள். இந்த வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று முஸ்லிம் தலைமைகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லை. இரண்டு ஷெரிஃப் உசேன்களும், மிர் ஜாஃபர்களும் சிலுவை வீரர்கள் ஜெருசலமை கைப்பற்ற உதவி செய்தார்கள். இன்றுள்ள இதே நிலையே அது.
ஜெருசலமை கைப்பற்றும் முயற்சியில் சிலுவை வீரர்கள் 70,000க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்தார்கள். மஸ்ஜிதுகளையும் இஸ்ரவேலர்களின் வழிபாட்டுத் தலங்களையும் (synagogues) இடித்தனர். கிறித்தவர்களும் கூட பாதிக்கப்பட்டார்கள். ஜெருசலமில் இருந்த கிரீக், ஆர்மீனியன், ஜார்ஜியன் உள்ளிட்ட இதர வகையான தேவாலயங்களில் சிலுவை வீரர்கள் தங்களது கத்தோலிக்க வகை கிறித்துவத்தை திணித்தார்கள்.
முஸ்லிம் உலகம் உறுதியற்றதாக இருந்ததால் சிலுவை வீரர்கள் ஜெருசலமில் தங்கள் வலிமையை பலப்படுத்திக் கொண்டனர். நான்கே ஆண்டுகளில் எடிஸ்ஸா (Edessa), அண்டியோக் (Antioch), ஆர்மீனியன் சிலிசியா (Armenian Cilicia), திரிப்போலி (Tripoli) என நான்கு கிறித்தவ நாடுகள் உதயமானது. முஸ்லிம் உலகம் பகை மற்றும் பிளவுகள் காரணமாக மிகவும் பலவீனமாக இருந்ததால் அவர்களுக்கு சிலுவை வீரர்களை எதிர்க்கும் வலிமை இல்லை. இதன் காரணமாக, பாக்தாத், டமாஸ்கஸ் மற்றும் கெய்ரோவில் இருந்த பாரம்பரியமான அரசியல் தலைமைகளால் சிலுவை வீரர்களை எதிர்க்க முடியவில்லை. சுற்றியிருந்த முஸ்லிம் ஊர்களும் நகரங்களும் சிலுவை வீரர்களின் நாடுகளுடன் வர்த்தகம் செய்து கொண்டனர். இது சிலுவை வீரர்களின் இருப்பை பலப்படுத்தியது.
இமாத் அல்தீன் செங்கி:-
அல்- குத்ஸை இழந்து அரைநூற்றாண்டுகள் கழித்து தான் முஸ்லிம்கள் சிலுவை வீரர்களை எதிர்கொண்டார்கள். வடக்கு ஈராக் நகரமான மொசூல் நகரத்தை ஆண்டு வந்த துருக்கி அரசன் இமாத் அல் தீன் செங்கி தான் சிலுவை வீரர்களை முதலில் எதிர்த்தார். செங்கி மொசூல் மற்றும் அலெப்போ நகரங்களை இணைத்து வலிமையான ஒரே நாடாக உருவாக்கினார். இவரது படை சிலுவைக்காரர்களின் தூரவடக்கு நாடான எடிசாவை (Edessa) 1144ல் வென்று கைப்பற்றியது. அந்த சமயம், சிலுவைக்காரர்களின் மிகப் பலவீனமான பகுதியாக எடிசா இருந்தது. அண்டியோக் பகுதியில் பலவீனமாக இருந்த அமீர்கள் இந்தப் பகுதிகளை முன்னர் தங்களிடம் இழந்ததை போன்றும் தற்போது மிகப்பெரிய தவறு நிகழ்ந்து விட்டது என்றும் எடிசாவின் இழப்பை சிலுவைக்காரர்கள் பார்த்தார்கள்.
சிலுவைக்காரர்களின் மிரட்டலை முறியடிக்க இமாத் அல் தீன் டமாஸ்கஸை தனக்கு கீழே கொண்டு வந்து ஒருங்கிணைந்த சிரியாவை உருவாக்கும் திட்டம் ஒன்றை வகுத்தார். முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் இந்த திட்டத்துக்கு டமாஸ்கஸ் பகுதியின் அமீர் மட்டும் ஒத்துவரவில்லை. இவர் சிலுவைக்காரர்களின் நாடுகளோடு உறவை வளர்த்துக் கொண்டார். அதனால் டமாஸ்கஸ் இமாத் அல் தீன் ஆளுகைக்குள் வரவில்லை.
இமாத் அல் தீன் செங்கி 1146 ஆம் ஆண்டு மரணித்தார். தொடர்ந்து அவரது மகன் நூர் அல் தீன் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். நூர் அல் தீன் அண்டியோக்கை சுற்றியிருந்த ஏராளமானப் பகுதிகளை 1149 மற்றும் 1154ல் வென்றார். இவர் டமாஸ்கஸின் அமீரை உள்ளூர் மக்கள் உதவியோடு தோற்கடித்தார்.
நூர் அல் தீன்:-
சிரியா மொத்தமும் ஒரே ஆளுகைக்குள் வந்த பிறகும் எகிப்து மட்டும் வெளியில் இருந்து வந்தது. இந்த சமயத்தில்தான் சிலுவைக்காரர்கள் தெற்கில் எகிப்தை தாக்கி தங்கள் பகுதியோடு இணைக்க முயன்றனர். பாத்திமிகள் தாங்களும் நூர் அல்தீனிடம் வீழந்து விடுவோம் என்று அச்சப்பட்டனர். அவர்கள் நூர் அல் தீன் படைகளை எகிப்தில் துரத்திய கிறித்தவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டனர். நூர் அல் தீன் படைகள் எகிப்தில் இருந்து பின் வாங்கிக் கொண்டது. நான்கே ஆண்டுகளில் நூர் அல்தீன் எகிப்தில் கிறித்தவர்களையும் பாத்திமிகளையும் வெற்றி கொண்டார். தனது மூத்த படைத் தளபதி ஷிர்குக்கை பிரதிநிதியாக வைத்துச் சென்றார். அதில் இருந்து சொற்ப நாட்களில் உடல்நலக் குறைவு காரணமாக நூர் அல் தீன் இறந்து விட்டார். அவரை தொடர்ந்து அவரது மருமகன் யூசுப் 1169ல் எகிப்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் தான் நாம் அறிந்து வைத்திருக்கும் சலாகுதீன் அய்யூபி.
மாவீரர் சலாகுதீன் அய்யூபி:-
அல் குத்சை விடுவிக்கும் பெரிய பொறுப்பு சலாகுதீன் முன்பு இருந்தது. அல் குத்சை விடுவிப்பதற்கான கட்டுமானங்களை தொடங்கினார் சலாகுதீன். எகிப்தையும் வரலாற்றின் குப்பைக் கூடையில் கிடந்த பாத்திமிகளின் எச்ச சொச்சங்களையும் ஒன்றிணைத்து பலப்படுத்தினார். மத நம்பிக்கையில்லாத பாத்திமிகள் அதிகாரப்பூர்வமாக அழிக்கப்பட்டனர். இஸ்மாயிலி கொள்கையை பரப்பிக் கொண்டிருந்த எகிப்தின் அல் அஸ்கர் பல்கலைக் கழகம் மெய் இஸ்லாமிய கோட்பாட்டை கற்பிக்கும் நிறுவனமாக மாற்றப்பட்டது. இன்று வரையிலும் அல் அஸ்கர் அதே நிலையில் செயல்பட்டு வருகிறது.
ஜெருசலமை சுற்றி இருந்த முஸ்லிம் நிலப் பகுதிகளை ஒன்றிணைக்க வசதியாக சலாகுதீன் ஜெருசலமோடு அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார். நூர் அல் தீன் நோய்வாய்ப்பட்டு 1174ல் இறந்த போது கவர்னர் நிலையில் இருந்த சலாகுதீன் சிரியாவுக்கு உள்ளே எந்த எதிர்ப்பும் இல்லாமல் நுழைந்தார். மக்களின் பேராதரவோடு எகிப்தையும் சிரியாவையும் ஒன்றிணைத்தார். பாத்திமியாக்களின் எழுச்சிக்குப் பின்னர் இந்த காலத்தில் சலாகுதீன் தான் எகிப்தையும் சிரியாவையும் முழுமையாக ஒருங்கிணைத்தவர். பின்னர் ஈராக்கை தனது ஆளுகைக்கு கொண்டு வந்தார். இந்த சம்பவத்தால், ஜெருசலத்தை விடுவிப்பது தனது கடமை என்பதில் நம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லிம் ஆட்சியாளரின் தலைமையில் ஒருங்கிணைந்த பலம் பொருந்திய முஸ்லிம் அரசால் “சிலுவை வீரர்களின் ஜெருசலம்” சூழப்பட்டது. 1187ல் நடந்த ஹாத்தின் (Hattin) போரில் சிலுவை வீரர்களின் ராணுவத்தை சலாகுதீனின் ராணுவம் முழுவதுமாக சூழ்ந்து கொண்டது. சிலுவை வீரர்கள் ஜெருசலமில் நுழைந்த போது நகரத்தில் இருந்த ஒவ்வொருவரையும் கொலை செய்தது போல அல்லாமல் தங்கள் சொந்த நாட்டுக்குப் போக விரும்பும் கிறித்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடைமைகளோடு வெளியேற சலாகுதீன் பாதுகாப்பு வழங்கினார். ஜெருசலமில் இருந்த கிறித்தவர்களின் புனித இடங்களுக்கு பாதுகாப்பு அளித்தார். புனித யாத்திரைக்கும் அனுமதி வழங்கினார்.
சலாகுதீன் அய்யூபி ஜெருசலத்தை மீட்க முன்னெடுத்த காரியங்களில் நமக்கு ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றன:-
முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை குழைந்ததால் கிறித்தவர்கள் ஜெருசலத்தை முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்ற முடிந்தது. முஸ்லிம்களுக்குள் இருந்த சின்னசின்ன சண்டைகள் பெரிய பகையை ஏற்படுத்தி இருந்தது. சிலுவை வீரர்களின் ஆபத்தை உணர்ந்து அவர்களோடு போரிடாமல் தங்களுக்குள் மோதிக்கொண்டு இருந்தார்கள். இப்போதும் இதே நிலையைத்தான் பார்க்கிறோம். இப்போதும் முஸ்லிம் உலகம் பல்வேறு தேசங்களாக பிரிந்து சண்டையிட்டு கொள்கின்றன. அதேசமயம்,மேற்கத்திய சக்திகள் தங்களுடைய நலனை அடைய இவர்களது சின்னசின்ன சண்டைகளை பயன்படுத்திக் கொள்கின்றன.
முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவிய பிரிவினையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் சலாகுதீனே நமக்கு கற்றுக் கொடுக்கிறார். ஜெருசலமை மீட்கும் பணியில் ஒன்று சேர விரும்பாத ஆட்சியாளர்களோடு சண்டை செய்து அனைவரையும் வெளியேற்றி விட்டார். சலாகுதீன் பாத்திமியாக்களிடம் இருந்து எகிப்தை மீட்டபோது எகிப்து மக்கள் சலாகுதீனுக்கு பெரிய ஆதரவுக் கரம் நீட்டினார்கள். சிலுவை வீரர்களிடம் இருந்து ஜெருசலமையும் விடுவிக்க விரும்பினார்கள். சலாகுதீன் முஸ்லிம் மக்களின் உணர்வுக்கு பாத்திமியா ஆட்சியாளர்களைக் காட்டிலும் முக்கியமளித்தார். இன்று நம் காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஜெருசலத்தை இஸ்ரேல் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஏங்குகிறார்கள் (craves). ஆனால், முஸ்லிம் ஆட்சியாளர்கள் பலவீனமாக இருக்கிறார்கள், ஜியோனிச அமைப்பு பலமாக இருக்கிறது, எங்கள் கரங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன என்று சாக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தமாதிரி கட்டத்தில் இத்தகைய ஆட்சியாளர்கள் விரட்டப்பட்டு அந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஆட்சியாளர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்பதை சலாகுதீன் தனது நடவடிக்கைகள் மூலம் காட்டி இருக்கிறார்.
தரகு ஆட்சிகள்:-
கிறித்தவர்கள் ஜெருசலத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் பாலஸ்தீனத்தைச் சுற்றி இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் தான் செய்து கொடுத்தார்கள். கிறித்தவ சிலுவை வீரர்களின் நோக்கம் பாலஸ்தீன், சிரியா, ஜோர்டான், லெபனான், ஈராக் பகுதிகளை உள்ளடக்கிய ‘லீவண்ட்’ எனப்படும் நிலப் பகுதிகளில் ஆதிக்கத்தை உறுதி செய்யவும் நிலப்பகுதிகளை மேலும் விரிவாக்கம் செய்யவும் ஜெருசலத்தை ஒரு தளமாகப் பயன்படுத்தினார்கள். இன்றும் அதேபோன்று ஜியோனிச இஸ்ரேல் அரசோடு எகிப்து, ஜோர்டான், சிரியா நாடுகள் ராஜிய உறவுகளையும், வர்த்தக உடன்படிக்கைகளையும் வளர்த்துக் கொண்டுள்ளன. இஸ்ரேல் பலம்பொருந்திய சக்தியாக இருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கிறது. அரபு நாடுகளின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் இல்லை என்பது தான் உண்மை. சலாகுதீனும் இதே சிக்கலை சந்தித்தார். சலாகுதீன் முதலில் சிலுவை வீரர்களுக்கு தரகு வேலை செய்து வந்த ஆட்சியாளர்களோடுப் போரிட்டு விரட்டினார். அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்தார். இதனால், ஜெருசலமில் சிலுவை வீரர்களுக்கு சென்று கொண்டிருந்த அனைத்து வழங்கல்களும் துண்டிக்கப்பட்டன.
முஸ்லிம் சிற்றரசுகளுக்கும் ஊர்களுக்கும் சிலுவை வீரர்களுக்கும் நடுவில் இருந்த வர்த்தகம் தான் ஜெருசலமில் சிலுவை வீரர்கள் நிலைத்திருப்பதற்கு காரணம் என்பதை சலாகுதீன் ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தார். அதனால் தான் இந்த சிற்றரசுகளை ஒழித்துக்கட்டியதன் மூலம் ஜெருசலமுக்கு போய்க்கொண்டிருந்த பொருள் வழங்கல் சங்கிலியை சலாகுதீன் உடைத்தார். சிலுவை வீரர்களின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தினார். பின்னர் சலாகுதீன் ஜெருசலமை முற்றுகையிட்ட போது சிலுவை வீரர்கள் சலாகுதீனின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் சரண்டைந்தார்கள். இப்போதும் அதே நிலை இருப்பதைக் காணலாம். இஸ்ரேலுக்கு ஜோர்டன் நாடு தான் குடிநீர் வழங்குகிறது. சமையல் எரிவாயுவை எகிப்து வழங்குகிறது. அரபு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்திசைவு இல்லாமல் தற்காலத்திலும் இஸ்ரேல் நீடித்திருக்க முடியாது.
புனித நகரமான ஜெருசலமை கட்டுப்பாட்டில் வைக்கவும் இதர அரபுப் பகுதிகளிலும் குடியேற்றங்களை ஏற்படுத்தவும் ஜெருசலமை மையமாக வைத்து ஒரு ராணுவ தளத்தை (Forward Base) ஐரோப்பாவின் கிறித்தவ தேவாலயம் உருவாக்கியது. கணக்கற்ற சிலுவை வீரர்களாலும் ஐரோப்பிய கிறித்தவ குடியேறிகளாலும் அவர்களது ராணுவ தளங்களை தக்கவைக்க முடியவில்லை. 88 வருடங்களே நீடித்த சிலுவை வீரர்களுக்கு சலாகுதீன் முடிவு கட்டினார். ஜெருசலமில் ஜியோனிஸ்ட்கள் அதே வேலையை தான் இன்று செய்து வருகிறார்கள். அரபு பகுதிகளின் அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்களில் மூக்கை நுழைக்க மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஜியோனிச இஸ்ரேல் அரசுக்கு நிதியுதவியும் ஆதரவும் கொடுத்து வருகிறார்கள்.
அன்று சிலுவை வீரர்களின் அரசுகள் பாலஸ்தீனத்தில் தங்கள் இருப்பை பலப்படுத்தவும் ஐரோப்பாவில் இருந்த கிறித்தவ சரச்சுகளின் ராணுவ தளமாக இருக்கவும் முஸ்லிம் சிற்றரசுகளோடு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கை செய்து கொண்டதை போன்றே இன்றைய ஜியோனிச இஸ்ரேல் அரசு அரபுப் பகுதியில் அமெரிக்காவின் போர்விமானங்களைச் செலுத்தும் தளமாக இருந்து வருகிறது. அமெரிக்கா அரபுப் பகுதியில் தனது செல்வாக்கை செலுத்தும் பல கருவிகளில் ஒன்றாக ஜியோனிச இஸ்ரேலை பராமரித்துக் கொண்டு வருகிறது. சலாகுதீன் அய்யூபி சிலுவை வீரர்களை வெளியேற்ற அவர்களுக்கு கிடைத்து வந்த வழங்கல் வழிகளை 11 ஆம் நூற்றாண்டில் துண்டித்தது போல் தற்போது இஸ்ரேலுக்கு கிடைத்து வரும் வழங்கல் வழிகளை துண்டிக்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருந்து இஸ்ரேலை வெளியேற்ற முடியாது.
பாலஸ்தீன மக்களுக்கு தேவைப்படும் விடுதலையை பெற்றுக் கொடுக்க முஸ்லிம்களுக்கு நடுவில் தேவைப்படும் அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் அரபுப் பகுதியில் இஸ்ரேலுக்கு தரகு வேலை செய்பவர்களையும் அப்புறப்படுத்தும் தேவை ஆகியவற்றை சலாகுதீன் அய்யூபி வரலாற்றில் நமக்கு முன்னுதாரணமாக வைத்துச் சென்றிருக்கிறார். பாலஸ்தீனத்தில் ஒரு குற்றமும் அறியாத குழந்தைகளும் தாய்மார்களும் வயோதிகர்களும் கொத்தாக கொல்லப்படுவதை, குடியிருப்புகள் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டு இஸ்ரேல் நாட்டவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்கவும் தூய பூமியையையும் மனித மாண்புகளையும் காக்கவும் இது தான் முதன்மையான தேவையாக இருக்கிறது.