1
பலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 14,000 தை கடந்தால், ஒருவேளை நெதன்யாகு போர்நிறுத்தத்தை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடுமென அனுமானித்திருக்கிறது அல்-ஜஸீரா. அதாவது ஒரு யூதருக்கு பத்து அராபியர் அல்லது ஒரு இஸ்ரேலியருக்கு பத்து பலஸ்தீனியர். நம்புங்கள் இது இனப்படுகொலையில்லை. அவ்வாறு சொல்பவர்கள் காட்டுமிராண்டிகள், அல்லது பேய்கள். இஸ்ரேல் நடத்துவது “தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நடத்தும் தற்காப்பு யுத்தம்.” இதை ஏற்றுக் கொண்டால் நீங்களே கனவான்கள்.
இறப்பு எண்ணிக்கை இதுவரையிலும் பத்தாயிரத்தை கடந்திருக்கிறது. அதில் சரிபாதி பச்சிளங்கள் மற்றும் சிறுவர், சிறுமியர். மீதி பெரும்பாலும் பெண்கள். பெண்கள் இருந்தால்தானே பிள்ளை பெறுவீர்கள்? சுமார் பத்து நிமிடத்திற்கு ஒருகுழந்தை கொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஒரு நாளைக்கு 140 குழந்தைகள். தெருவில் ஒன்றாய் விளையாண்ட நண்பர்கள், ஒருங்கே பள்ளிக்கூடம், பள்ளிவாசல், கடைத்தெரு, கடற்கரை என சுற்றியலைந்த சிறார்கள், ஒரு வீட்டிலிருந்த சகோதர, சகோதரிகள் என யாரோ ஒருவர் தங்களின் உற்ற நட்பை, உயரிய சகோதரத்துவத்தை இழந்து துடிக்கக்கூடும். கூடிப் பிரியுமொரு தருணத்தில் அடுத்து காண்போமா? என்ற நிச்சயமற்ற நிலை எத்தனை துயருற்றதாக இருக்கும். நாளையை விடுங்கள் அடுத்தகணம் நிச்சயமற்றது, எப்போது வேண்டுமெனிலும் தலையில் குண்டு விழக்கூடும், உடல் சிதறி அடையாளம் காண்பதே சிரமமாக இருக்கும் என்ற நிலையில் சிறார்கள் தங்களின் கரங்களில் பெயரெழுதியும், உடம்பில் பெற்றோரின் அலைபேசி எண்ணை எழுதி வைத்தபடியும் வாழுகின்ற வாழ்க்கை மரணத்தை விடவும் கொடியது. ஒரு தகப்பனின், தாயின், சகோதர சகோதரிகளின், தாத்தா பாட்டி மார்களின் மனக் கொதிப்பை எந்த எழுத்தில் கொண்டு வரவியலும்?
இங்கு அறுபது வயது நண்பனின் மரணமே ஆகத்துயரான விசயம். அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு சக நண்ரான ஒரு முதியவரின் தனிமையை எந்த இலக்கியத்தாலும் வெளிப்படுத்தவியலாது. எனில் ஆறு வயது நண்பனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் மனநிலையை எதைக் கொண்டு அனுமானிக்க முடியும்? “அல்லாட்ட போய்ட்டான்”….என ஆறுதல்கூறி தேற்றலாம். ஆனால் தலையில் போடப்பட்டிருக்கும் கட்டிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் குருதி, தலை சிதறிய பிரேதங்கள் என அவனுக்குள் தோற்றுவிக்கும் உணர்வுகள் அவனுக்கு நிகழ்காலத்தை புரியவைத்து விடுமே. எனில் அப்படியான குழந்தைகள் வளர்ந்து, பால்யம் முதல் தம் நெஞ்சில் எரியும் தணலை ஆற்றத்துவங்கினால், இதுகாறும் தனக்கும், தம் சமூக துயருக்கும் காரணமானவர்களை தேடத்துவங்கினால் அது பழிவாங்கலா? அல்லது தீவிரவாதமா? தீவிரவாதம்தான் என அறுதியிட முடியுமெனில் அப்படியான தீவிரவாதம் இன்னுமின்னும் வளரவே செய்யும். ஏனெனில் அதற்கு நிர்பந்தக் குருதிக் கொடையளிப்பதே ஜியோனிசம்தான். சாதாரணமாக ஒருவன் நூறுரூபாய் இழப்பேற்படுத்தினாலே அவனுக்கு ஆயிரம் ரூபாய் இழப்பை ஏற்படுத்த கருவுகின்ற நல்லிதயங்கள், ஜொமோட்டாவிலும், ஸ்விக்கியிலும் வரவழைத்த உணவை உண்டு, குளிர்ந்த நீரைப்பருகியபடி உபதேசிக்கின்ற அமைதியான உலகம் எவருக்கு தேவை இங்கே? முதலில் அமைதி என்பது எது?
600 பலஸ்தீனியர்களுக்கு ஒரு கழிவறை. ஒரு ரொட்டித் துண்டுக்கு ஒரு நாள் முழுவதும் காத்திருந்தாலும் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. பசியைத் தின்னும் குடல்கள். ஒரு குடும்பத்திற்கு மூன்று லிட்டர் நீர். அதற்கும் உத்திரவாதமில்லை. கடற்கரையில் துணிதுவைத்து குளித்து வந்தாலும் அடுத்த கணம் நிச்சயம் இல்லை. எந்நேரமும் பின் தொடர்கிறது மரணத்தின் நிழல் என்பது தெரிந்துதான் தொடர்கிறது வாழ்க்கைப் பயணம். இங்கிருந்து வெளியேறுங்கள் என அச்சுறுத்துகிறது ஜியோனிசம். எம் நிலம் எனப் போராடி உயிர்விடுகிறது பலஸ்தீனம். முட்டாள்கள் எனலாம். ஒருநாள் சிறைவாசத்திற்கஞ்சி மன்னிப்பிற்கு மேல் மன்னிப்பு கேட்கும் காரியவாத உள்ளங்களுக்கு போராடி உயிர் விடுபவன் முட்டாளைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
ஆயினும் அவர்கள் பாவங்கள். கூரை மேல்விழும் குண்டுகளுக்கு தலை கொடுப்பதைத் தவிர வேறு கதியற்று ஏதும் செய்யவியலா ஏதிலிகள். இங்கு போர் என்பது ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும். ஆயினும் ஹமாஸை அடிப்பதெனில் தரைப் போர் மட்டுமே சாத்தியம். ஆனால் தரைப்போரில் ஜெயிக்க வக்கற்ற நெதன்யாகு அப்பாவிகளைக் கொல்வதன் மூலம் உள்நாட்டில் தமது செல்வாக்கை நிறுவ முடியுமென நம்புகிறார். ரெய்டு எனும் பெயரில் நினைத்த போதெல்லாம் வந்து அப்பாவி பலஸ்தீன இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6000-ம் பலஸ்தீனர்களை விட்டு விடுங்கள். Hostages என சொல்லப்படும் பணயக்கைதிகளை விடுவித்து விடுகிறோம் என்ற ஹமாஸின் கோரிக்கையை தீர்மானமாக மறுத்துவிட்ட நெதன்யாகு அப்பாவிகளைக் கொல்வதன் மூலமே அதனை சாத்தியப்படுத்திவிட வியலும் என முட்டாள் தனமாக நம்புகிறார். இரண்டு அமெரிக்க பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்த பின்பும், மேலும் 12 பேரை விடுவதாகக் கூறியும் அவர்களின் கோரிக்கை கேட்பாரற்றுக் கிடக்கிறது. விளைவு இஸ்ரேலுக்கும் கடுமையான பாதிப்புகள். காஸா எல்லையில் நுழைந்த இஸ்ரேலிய ராணுவத்தினரில் 3200 பேரை சிறைப் பிடித்திருக்கிறது ஹமாஸ். இதற்கு எத்தனை பேர் சாக வேண்டுமென தெரியவில்லை? ஆனால் ராணுவ கவச வாகனத்துடன் சொந்த நிலத்திற்கு புகுந்து, கொல்ல வருபவனை என்னதான் செய்யது?
ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் தினமும் புலம்புகிறார். இஸ்ரேலை நேரடியாகவே கண்டிக்கிறார். நீங்கள் செய்வது போர்க்குற்றம், ++ என்றெல்லாம் குறை சொன்ன அவருக்கு ஐநா சபைக்கான இஸ்ரேலின் தூதர் சொன்ன பதில் “எந்த காலத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள்? பதவியை ராஜினாமா செய்து விட்டு போங்கள்.” இஸ்ரேலையும், அமெரிக்காவையும் தவிர வேறு எந்த நாடேனும் இப்படி சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் உலக அமைதியின் தூதுவன், சமாதானக் காவலன் அமெரிக்கா உடனே தலையிட்டு அந்த நாட்டில் `ஜனநாயகத்தை’ நிலைநாட்டி விட்டுத்தானே ஓயும். கோவணம் துவைக்க கூடவே எப்போதும் ஜப்பான், பிரிட்டன், மேற்கு ஐரோப்பிய யூனியன் இருக்கும் போது ஜனநாயகத்தை நிறுவுவது அத்தனை சிரமமா என்ன? எனினும் இங்கு துள்ளிக் கொண்டிருப்பது தனது ரௌடிச்சீடன். எனவே இதில் யார் என்ன செய்யவியலும். உலகப் பொறுக்கியின் தயவால் உள்ளூர் போக்கிரி செய்யும் இனப்படுகொலை. எவன் காலில் விழுவது எனத் தெரியாமல் ஐநா நடிக்க, ஷாகிரா மோகத்தில் சல்மான் இருக்க, சம்பந்தமே இல்லாத பொலிவியாவோ இஸ்ரேலுடனான தனது அத்தனை தொடர்புகளையும் துண்டித்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா, துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் தூதுவர்களை வெளியேற்றியும், திரும்பப் பெறவும் செய்திருக்கின்றன.
G7 கூட்டத்தில் ஃபிரான்ஸைத் தவிர ஏனைய நாடுகள் ஹமாசைக் கண்டித்து, இஸ்ரேலுக்குத் தமது ஆதரவினைத் தெரிவித்திருக்கின்றன. ஆனாலும் கருணையின் அடிப்படையிலான போர்நிறுத்தத்தை வலியுறுத்தியிருக்கிறது G7. எப்பேர்பட்ட கருணை. எப்பேர்பட்ட மனித நேயம். என்ன அற்புதமான மனித உரிமை. எப்படியான கருத்துருமை, பேச்சுரிமை, பெண்ணுரிமை. விலங்குகளின் மீதும் அன்பைப் பொழியும் பீட்டா. அத்தனையிலும் மேலாக அதிகாரம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபை. அதன் உறுப்பான சர்வாதேச குற்றவியல் நீதி மன்றம். அடேங்கப்பா நம்புங்கள். இவையத்தனையும் இடையறாது இயங்குவது உலக மக்களின் நிம்மதிக்காகவும், உலக அமைதிக்காகவும், எங்கு அநீதி நிகழ்தாலும் அநீதி அகற்றி நீதியை நிலைநிறுத்துவதற்காகவும்தான்.
எனவேதான் மேற்கண்ட அமைப்புகள், கருத்தாக்கங்கள் என அத்தனைகளின் அடிப்படையிலும் நான், நீங்கள் மற்றும் ஜனநாயக காவலர்கள், பயங்கரவாதத்தை வெறுப்பவர்கள் இன்னபிற மகாத்மாக்கள் அனைவரும் நேசிக்க வேண்டிய நபர் நெதன்யாகுதான். பரிவு காட்ட வேண்டிய மக்கள் இஸ்ரேலியர்கள்தான். ஏனெனில் “இஸ்ரேலுக்கு தன்னைக் காத்துக் கொள்ள முழு உரிமை உண்டு” மட்டுமல்ல `உலகஅமைதிக்காகவே அமெரிக்க ஆசியுடன் இஸ்ரேல் போரிடுகிறது’. இத்தனைக்குப் பிறகும் நீங்கள் நெதன்யாகுவை நேசிக்கவில்லையெனில், இஸ்ரேலியர்கள் மீது உங்களின் மனம் இரங்காவிடில் அறிந்து கொள்ளுங்கள் நீங்களொரு யூத இன வெறுப்பாளர். நாஜியிஸ்ட். இஸ்லாமியரெனில் இதுவெல்லாம் கலந்த தீவிரவாதி. எனில் பலஸ்தீனியர்கள். மூச். அவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லது பேய்கள். இஸ்ரேலின் கூற்றுப்படியே சொல்வதெனில் “நாங்கள் மனிதர்களுடனல்ல. பேய்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றோம்”. போயும் போயும் எவரேனும் அவர்களுக்காக பரிந்து பேசமுடியுமா? பேசினால்தான் எவரும் கேட்கப் போகின்றார்களா? இத்தனை ஆண்டுகளாய் பிடுங்கிய நிலம் போதாதென்று, இன்னமும் பிடுங்க திட்டமிடுகிறது இஸ்ரேல். குடியேறுவதற்கு முன் தற்கால குழந்தைகளைக் கொன்று விட்டால், தங்களை எதிர்க்க்கூடிய எதிர்கால பலஸ்தீனிய தலைமுறை இல்லாமல் குடியேறிய யூதர்கள் நிம்மதியாக வாழமுடியும் என்பது இஸ்ரேலின் நம்பிக்கை. ஆனால் உண்மையில் நிம்மதி என்பது போரல்ல, அமைதி.
ஆனால் இஸ்ரேல் ஒருபோதும் அமைதியை விரும்பாது. ஏனெனில் அதுதான் அதன் இயல்பு. கடந்தகாலம், நிகழ்காலம் என்றல்ல எதிர்காலத்திலும் நாம் காணப்போகும் உண்மை அதுதான்.
ஆயினும் உண்மையிலேயே அமைதியை நாடும் தலைவனோ நடப்பவற்றை கவலையுடன்கவனித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கல் தவறாகப் போய்விட்டாலும் எல்லாமே தலைகீழாகி விடுமென்ற ஆபத்து அவருக்குத் தெரியும். எனினும் ஒரு பேரழிவின் தொடக்கமாக தான் இருந்துவிடக் கூடாதென்பதே அவரது ஒரே நோக்கமாக இருக்கிறது. ஆயினும் சர்வதேச அரசியலின் சூட்சுமங்களையும், புவிசார் அரசியலின் நிலையற்ற தன்மையையும் அறியாத பலஸ்தீன பச்சிளங்களோ தம்மை காக்குமாறு செய்தி அனுப்பியபோதும் வெகு நிதானமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் புடின். அவரது கவனம் பிராந்திய அளவிலேயே இருக்க வேண்டுமென்பதற்காகவே ரஷ்யாமேல் உக்ரைனை மேற்குலகு ஏவிவிட்ட போதிலும் மொத்த உலகும் அவர்மேல் ஒரு கண் வைத்திருப்பதற்காண காரணங்களின் முழு பரிமாணத்தையும் ஒருவேளை எதிர்காலம் நமக்கு சொல்லக்கூடும்.
சரி பலஸ்தீன சிறார்கள் ஏன் புடினுக்கு செய்தி அனுப்புகிறார்கள்? சவூதி சல்மானிடம்தானே உதவி கோர வேண்டுமென நமக்கு தோன்றினால் நம்மை விடவும் அச்சிறார்களின் அரசியல் அறிவு மேம்பட்டிருக்கிறது என்றே பொருள். எனில் இத்தகைய ஒரு பேரழிவில், அநீதியில் எம்முடைய பாத்திரம் என்பதென்ன? ஏதிலிகளின் துயரத்தில் எமது பங்கெனப்படுவதென்ன? போராளிகளின் தீரத்தில் எமது வகிபாகம் எது? இதுதான் என எவரும் எதையும் அறுதியிட முடியாத காலமும் தூரமும் உள்ள ஒரு நிகழ்வில் அவரவர் பாகமென்பது அவரவர் பாடு. அவரவர் மனச்சான்றுகளினூடேதான் இதற்கான பதிலைத் தேடவியலும். எனினும் ஒரு பாதுகாப்பான கூரையின் கீழ் இரவு உணவும், குளிர்ந்த நீரும். குழந்தைகளைக் கட்டிக் கொண்டு உறங்கும் உறக்கமும் எமக்கு எத்தனை பெரிய பாக்கியங்கள் என்பதை அறிந்திருக்கும் குறைந்தபட்ச அறிவே அத்தனையிலும் அடிப்படை. எனவே அறம் போதிப்பவர்கள் அவரவர்களுக்கான உரிமை என்பதே அவரவர்களின் அறம் என்பதை அறியும்போது உண்மையில் இப்பூமியானது அமைதிக்கு திரும்பக்கூடும். ஆனாலும் இப்போது நாம் காண்பதெல்லாம் ஒரு இடைவேளையின் போதான காட்சிதான். உச்சகட்ட காட்சியின்றி நிழலும், நிஜமும் நிறைவுறாதென்பதே காலம் உணர்த்துகிற உண்மை
2
அணு ஆயுதம் பயன்படுத்தப்படாத வரையில் இனி இந்த உலகத்தில் அமைதி திரும்பப் போவதில்லை. இதுதான் முகத்தில் அறையும் நிஜம். ஹமாஸை அழிக்கப்போகிறோம் எனும் சாக்கில் பலஸ்தீனிய இஸ்லாமியர்களைக் கொல்வதன் மூலம் அவர்களின் மக்கள் தொகையை சரிபாதியாக குறைக்கத் திட்டமிட்டிருக்கும் இந்த இஸ்ரேலிய பயங்கரவாதம் ஒருவேளை தற்போது முடிவுக்கே வருவதாக இருந்தாலும் சத்தியமாக அது தற்காலிகம்தான்.
‘Islamic eschatology’ எனும் கருத்தியலில் “அல் மல்ஹமத்துல் குப்ரா”- என இஸ்லாமும், ‘Armageddon’ என கிறிஸ்த்துவமும் குறிப்பிடும் இறுதி நாள் அடையாளங்களில் ஒன்றான மிகப்பெரும் அதி பயங்கரமான போர் குறித்து மூன்றாம் உலகப்போர் WW3 என ஒட்டுமொத்த உலக மாந்தரும் அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலோ அந்த போர் எத்தனை விரைவில் நடக்க வேண்டுமோ அத்தனை விரைவில் நடக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. அப்போதுதான் தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘மஸீஹூத் தஜ்ஜால்’ (போலி மீட்பர்) என்ற மாய தோன்றலின் தலைமையில் இஸ்ரேலிய யூத சாம்ராம்ஜியம் நிலைபெற்று விட்டால் அது என்றென்றும் முடிவுமில்லாமல் அழிவுமில்லாமல் அமெரிக்கா, ரஷ்யா உட்பட ஒட்டுமொத்த உலகையும் கட்டியாளும் ஒற்றை உலக யூத ஆட்சியாளர்களாக ஜியோனிஸ்டுகளும், அவர்களின் நம்பிக்கையின் படி உலகத் தலைமையகமாக இஸ்ரேலும் இருக்கக்கூடும். அவர்களின் ஆட்சியாளன் தஜ்ஜால் எனும் போலிமீட்பர்.
இதில் ஆச்சார யூதர்களின் நிலைப்பாடு வேறாக இருக்கிறது. இன்னும் இஸ்ரேலை ஏற்றுக் கொள்ளாமல் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு தாங்கள் குடியேறிய நாட்டிலேயே வாழ்ந்து வரும் மீச்சிறுபான்மையினரான அவர்களின் நம்பிக்கையானது மீட்பர் தோன்றிய பின் அவரது தலைமையில்தான் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதே. அதன் அடிப்படையில் அவர்களில் சிலர் இந்த ஜியோனிஸ்டுகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். இதனிடையே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும், ஜியோனிச அடக்கு முறைக்கு எதிராகவும் பலஸ்தீனியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்ராஹிம் நபி அவர்கள் (ஆப்ரஹாம்) காலம் மூலம், தௌராத் (தோரா), இன்ஜில் (நற்செய்தி), ஸபூர்(சங்கீதம்), குர்ஆன் என வேதகாலங்கள் துவங்கி, மேற்கு ஐரோப்பிய மன்னர்களுக்கு அடிமையாக இருந்து குறிப்பாக கி.பி 70ல்- டைட்டஸ் மன்னனுக்கு எதிரான யூதக்கிளர்ச்சியால் கடுமையாக தண்டிக்கப்பட்டு இனி பலஸ்தீன எல்லைக்குள் கூட நுழையக்கூடாதென விரட்டியடிக்கப்பட்ட யூதர்களுக்கு கி.பி 636ம் ஆண்டிற்கு பிறகுதான் பலஸ்தீன் வந்து செல்ல அனுமதி கிடைத்தது. கி.பி 636-ல் இரண்டாம் இஸ்லாமிய கலீபாவான உமர் கத்தாப் ரோமர்களை வெற்றி கொண்ட யர்முக் போருக்கு பிறகு, அன்றைய ரோம அரசன் யூதர்களை மட்டும் பலஸ்தீனுக்குள் அனுமதிக்க கூடாதென விதித்த வேண்டுகோளில் மாற்றம் செய்து “அவர்களை வழிபாடு செய்ய அனுமதிப்பேன். அவர்களின் அந்த உரிமையை தடுக்க மாட்டேன்” எனக்கூறியதைத் தொடர்ந்தே ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்குப் பிறகே யூதர்கள் பலஸ்தீனுக்குள் வழிபாட்டிற்காக வந்து போகத் துவங்கினர். இஸ்லாமியர்களால் வழிபாட்டு உரிமையைப் பெற்ற யூதர்கள்தான் இன்று இஸ்லாமியர்களின் புனித தலமான மஸ்ஜித் அல் அக்ஸா வை இடிக்க தகுந்த நேரத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். இப்படியாக உலகம் முழுவதும் சிதறிப்பரவிய யூதர்களின் சரித்திர காலம் முடிவுக்கு வந்து, இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனை வென்ற பிரிட்டன், ஃப்ரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளின் உதவியோடு பலஸ்தீனிய நிலப்பரப்பில் இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது நம் கடந்த கால வரலாறு.
29/11/1949 ல் ஐநாவில் நிறைவேற்றப்ட்ட தீர்மான எண் 181-ன் படி பலஸ்தீன், இஸ்ரேல் என இரண்டு சுதந்திர நாடுகள் என்ற தீர்மானத்தின் படி இஸ்ரேல் உருவாக்கப்பட்டு அன்றைய வல்லரசுகள் உள்பட ஏனைய ஐநா உறுப்பு நாடுகளாலும் உடனே அங்கீகரிகீகப்பட்டது.
இந்த இருநாடுகள் என்ற, கருத்தாக்கத்தில் இஸ்ரேல் மட்டும்தான் உருவாக்கப்பட்டாதே தவிர முற்றுமாய் இறையாண்மை கொண்டிருந்த பலஸ்தீன் ஒரு நாடாக பிரிக்கப்டவேயில்லை. ‘சுதந்திரமும், இறையாண்மையும் மிக்க தனிநாடு’ என்ற ஐநா வின் தீர்மானம் கண்டு கொள்ளப்படாமல் “மேற்குக்கரையிலும், காஸாவிலும் பலஸ்தீனியர்கள் வசித்துக் கொள்ளலாம்” என்ற ‘பெருந்தன்மை’ அளவில் சுருங்கிப்போனது அத்தீர்மானம். தொடர்ந்து அன்றைய சூழலில் நிலவிய கொடூரங்களுக்கு அஞ்சிய அப்பாவி பலஸ்தீனியர்கள் அருகிலுள்ள ‘இஸ்லாமிய’ நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றது போக, எஞ்சிய ஏதிலிகளின் தலைமுறையினர்தான் இன்றைய பலஸ்தீனியர்கள். இதில் இஸ்ரேல் முதன்மைக் குற்றவாளி என்றால் ஏனைய ஐநா உறுப்பு நாடுகள் அனைவரும் பலஸ்தீனுக்கும், அம்மக்களுக்கும் துரோகமிழைத்தவர்களே.
இன்று பெண்ணுரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளிட்டு இன்னபிற மயிறு உரிமைகள் யாவையும் பேசும் போலி நாகரீக மேற்குலகு உள்ளிட்ட அத்தனை பேர்களின் கரங்களிலும், நாவிலும் இருப்பதெல்லாம் அப்பாவி பலஸ்தீனியர்களின் இரத்தக்கறைதான். இன்று இஸ்ரேல் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற இத்தனை கொடுமைகளுக்கு அப்புறமும் கண்டணத்தையும், கடும் கண்டணத்தையும் மட்டுமே தெரிவித்துக் கொண்டு ஒரு குண்டூசியை எறியக்கூட தைரியமற்ற சவூதி சல்மான் முதல் வெளிப்படையாகவே இஸ்ரேலை ஆதரிக்கும் வளைகுடா நாடுகள வரை எவரும் விலக்கல்ல.
ஜியோனிஸ யூதர்களைப் பொறுத்தவரையில் தமது ஆச்சார, அனுஷ்டாங்களின் வழியின் படியும், உலக ஆதாய நோக்கின் படியும் மூன்றாம் உலகப்போர் நடந்து முடிந்து தற்போதைய வல்லரசுகள் யாவும் வீழ்ந்தால்தான் உலகை கட்டுப்படுத்தும் வல்லாதிக்க நாடாக தாம் உருவாக முடியும், அதன்பிறகுதான் தமது மீட்பரின் தலைமையில் உலகையாளும் ஒற்றை தேசமாக இஸ்ரேல் இருக்கமுடியுமென்ற அவர்களது நம்பிக்கையின் வெளிப்பாடே தற்போது காஸாவையும் இஸ்ரேலுடன் இணைப்பது. அகண்ட இஸ்ரேலை உருவாக்கும் முதல் முயற்சி. அதற்காகவே இத்தனை குரூர தாக்குதல்கள். மேலும் நெதன்யாகு அரசுக்கு எதிராக உள்நாட்டில் நிலவுகிற மக்களின் மனநிலையும், போராட்டங்களும் தனிக்கதை. அது சராசரியான சமகால ஆன்மீகமற்ற அரசியல்.
எனவே இன்றைய குரூரங்கள் ஒருவேளை தற்காலிக முடிவுக்கு வந்தாலும் ஒரு பேரழிவு வரையிலும், பேரழிவு என்றால் இதுவரை உலகம் கண்டிராத பேரழிவாக அது இருக்கக்கூடும். தற்போதைய உலக மக்கள் தொகையில் குறைந்து 300 கோடிப் பேரையாவது காவு கொள்ளக் கூடிய ஒரு பேரழிவை நோக்கிய புறப்பாடே இஸ்ரேல் இன்று நடத்திக் கொண்டிருக்கும் இத்தகைய குரூரங்கள் யாவும். அவைகள் யாவும் நடந்து முடிந்த பின் அதன் பிறகான எதிர்கால நாள்களில் இஸ்ரேலின் முடிவு அதைவிடவும் குரூரமாக இருக்கும் .
இதில் ரஷ்ய அதிபர் புடினின் இன்றைய ஒரு கோரிக்கை ஒட்டு மொத்த உலகமுமே கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1996ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “அணுவாயுத சோதனை தடை ஒப்ந்தத்தை” தான் திரும்ப பெற்றுக் கொள்வதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. அதாவது தேவையெனில் இனி ரஷ்யா அணுஆயுத சோதனையை மேற்கொள்ளும். அவசியமெனில் அணு ஆயுத போரையும் முன்னெடுக்கும். ரஷ்யாவின் இன்றைய இந்த அறிவிப்பிற்கு காரணமில்லாமல் இல்லை. இந்த 11 நாள்களில் இஸ்ரேல் காஸாவில் நடத்தியுள்ள போர்க்குற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் போர்நடைபெறும் கடந்த 500 நாள்களிலும் அதில் அரை சதவீதம்கூட செய்யாத ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்அனைத்தும் பல்வேறு தடைகளை விதித்தன. தடை விதித்து விதித்து இனிமேலும் தடைவிதிக்க வாய்ப்பற்ற நிலைலையில் வழக்கம்போல் தமது கால்நக்கி ஊடகங்கள் வாயிலாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஒட்டுமொத்த மானுடகுல வில்லனாகவும், அரக்கனாகவும் சித்தரிக்கும் போக்கை மேற்கொண்டு அதில் தோல்வியடைந்திருக்கின்றன.
திட்டமிட்டே உக்ரைன் தன் சொந்த குடிகளுக்கெதிராக குண்டுகளை வீசிவிட்டு ரஷ்யாவின் மீது பழிசுமத்திய ஜெலன்ஸ்கியின் அறிவிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உண்மை என்னவென ஆராயாமல், துடிதுடித்து ரஷ்யாவைக் கண்டித்த ஐநா சபையோ இத்தனை குரூரமான போர்க்குற்றத்தை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலிடம் மண்டியிட்டு பொதுமக்களை தாக்க வேண்டாமென போலி மனிதாபிமானத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய வெளிப்படையான பாகுபாடுகளே புடினின் சிந்தனை மாற்றத்திற்கான காரணம் என அவதானிக்கலாம்.
தோராவை நம்பும் யூதர்களைப்போல, பைபிளை நம்பும் கிறுத்துவரான புடினுக்கும் நடப்பதும், நடக்கப்போவதும் என்னவென நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஒப்பீட்டளவில் பைபிளின் ஆகமங்களை அணுவளவேனும் அனுசரிக்கக்கூடிய கிழக்கத்திய ஐரோப்பியர்களில் வலிமையான இடத்திலிருக்கும் புடினுக்கு பைபிளில் கூறப்பட்டிருக்கும் Armageddon குறித்த ஞானமே அவரை அணுவாயுத சோதனை தடை ஒப்பந்தத்திலிருந்து விலகச் செய்திருக்கிறது எனலாம். இந்த அவதானிப்பு சரியெனில் மூன்றாம் உலகப்போரின் துவக்கம் இதுவென்றே கொள்ளலாம். அதனைத் தூண்டியது இஸ்ரேல். தமது ஆதிகாலம் தொட்டு இன்று வரையிலும் தமது சுயநலத்திற்காக உலகில் குழப்பத்தைமட்டுமே செய்து கொண்டிருக்கும் யூதர்கள்.
இறுதிக்காலத்தில் உலகம் நன்மை, தீமை என இரு அணிகளாகப் பிரியும் என்கிறது இஸ்லாம். அதைத் தொடர்ந்தே “மல்ஹமா” -என குர்ஆனும் “Armageddon” -என பைபிளும், மூன்றாம் உலகப்போர் என சமகால உலகமும் குறிப்பிடுகிற பெரும்போர் WW3 நிகழக்கூடும்.
மூன்றாம் உலகப் போரைத் தலைமையேற்று நடத்துகிற வல்லரசுகள் போக எஞ்சியுள்ள ஏனைய நாடுகள் யாவும் போரினூடாகவே ரஷ்யா அல்லது அமெரிக்கா என ஏதேனும் ஒரு அணியை ஆதரிக்கக்கூடும். எனில் அப்போது உலகமானது நன்மை Vs தீமை எனும் அடிப்படையில் இயல்பாகவே இரு பிரிவாக பிரிந்து அணி சேரக்கூடும். இப்போதே இஸ்ரேலை ஆதரிக்க வேண்டி அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ஃபிளிங்கன் பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிடம் தூது சென்று கொண்டிருக்கிறார். இதனை வெளிப்படையாகவே போட்டுடைத்த மலேசியா, “இஸ்ரேலை ஆதரிக்க வேண்டி மேற்குலத்திடம் இருந்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் வருகிறதெனவும், எனினும் அத்தகையஅழுத்தங்களுக்கு ஆட்படாமல் தாம் பலஸ்தீனை ஆதரிப்பதாகவும்” கூறியிருப்பது ஒரு சிறிய சான்றாகும்.
மற்றொரு புறம் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தற்போதைய கடும் நெருக்கடிநிலை குறித்து உரையாடி வருகிறார். அரிதினும் அரிதாக ஈரான் அதிபர் ரைசும், சவூதி சல்மானிடம் தொலைபேசியில் ஒரு நீண்ட உரையாடலை மேற்கொண்டதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஈரானின் இத்தகைய நகர்வுகள் யாவின் பின்னணியிலும் ரஷ்யாவும், சீனாவும் இருக்கும் என நம்புவதில் உலக அரசியல் பார்வையாளர்களுக்கு வியப்பேதும் இருக்கப் போவதில்லை. குறிப்பாக தமக்குள் பெரும் பிரிவினையைக் கொண்டிருந்த ஈரான் – சவூதி நாடுகளுக்கிடையே ஒரு இணக்கத்தை ஏற்படுத்தியில் உள்ள சீனாவின் முயற்சியையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்.
எனினும் உலக மக்கள் யாவருக்கும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு உள்ள நிபந்தனை கட்டாயமாக நன்மையின் பக்கமே நின்றாக வேண்டும். ஆனால் எது நன்மை என்பதை எதைக் கொண்டு கண்டடைவது? எனவேதான் உலக மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் புவிசார் அரசியலில் போதிய அறிவைப் பெற்றிருப்பது அவசியம். அப்படியான ஞானம் ஒருவேளை நாம் வாழ்கின்ற காலத்திலேயே நமக்கோ அல்லது தலைமுறை வாயிலாக தொடர்ந்து கடத்தப்படுகின்ற அறிவின் வாயிலாக நமது தலைமுறைக்கோ பயன்படக்கூடும். நிச்சயம் பயன்பட வேண்டும். வாழும் போது மட்டும் வாழ்வின் இறுதியிலும் நெறிவிலகாமல் அறத்தின் பக்கம் நின்று மடிவதே வாழ்விற்கும், இறப்பிற்கும் அர்த்தம் பயப்பதாக அமையும். அந்த வகையில் எக்காலத்திலும் இஸ்ரேலுக்கு எதிராக நிற்பதே எமது அறம். அதுவே எம்மீதான கடமையும் கூட.