இறைவனின் அருள் மழை பொழிகிறது;
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகில் அமைந்துள்ள ஐவதுகுடி திக்குமுக்காடுகிறது!. எங்கு பார்த்தாலும் வாகனங்கள், மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது அந்த மாபெரும் மைதானம். தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னெழுச்சியில் திரண்ட கூட்டம் ஆர்வப் பெருக்குடன் அந்தத் திடலை அலங்கரிக்கிறது.
ஆம்! அங்கு தான் தமிழக முஸ்லிம்களின் லட்சியக்கனவு நனவாகும் விழா நடைபெறுகிறது. ஸாலிஹீன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது.
நவம்பர் 04, 2023 சனிக்கிழமை காலை 11 மணி, ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளைத் தலைவர், தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதன்மைத் துணைத்தலைவர், இறை சொத்து காப்பாளர், மனித நேய மாண்பாளர் எம். அப்துல் ரஹ்மான் Ex MP அவர்கள் தலைமையில் விழா தொடங்குகிறது.
அருள்மறை குர்ஆனிலிருந்து 48ஆம் அத்தியாயத்தின் 1 முதல் 6 வசனங்களை அதன் அறங்காவலர்களில் ஒருவரான டாக்டர் இபுராகிம் ஒதுகிறார்.
“நபியே! நாம் ஒரு தெளிவான வெற்றியாக வெற்றி அளித்துள்ளோம். நம்பிக்கை கொண்டோரின் உறுதியை அதிகரிப்பதற்காக அவர்களின் இதயங்களில் அல்லாஹ்தான் அமைதியும் ஆறுதலும் அளித்துள்ளான். அவர்களை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.
நயவஞ்சகர்களை அல்லாஹ் வேதனை செய்வான். அவர்கள் மீது அவன் கோபம் கொண்டான். அவர்களை சபித்தும் விட்டான். என்ற தமிழாக்கத்தையும் தந்தார்.
வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய அன்பளிப்பு:
ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளையின் செயலாளரும் இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷன் தமிழ்நாடு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான ஈரோடு டாக்டர் கே. எம். அபுல் ஹஸன் எம்.எஸ். எம்.சி.எச். வரவேற்புரையாற்றினார்.
“இன்று தமிழக முஸ்லிம்களின் ஒட்டு மொத்த கனவு நனவாகிறது. பல ஆண்டுகளுக்கு முன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் திடீரென என்னை அழைத்தார்கள். நான் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு விரைந்து வந்தேன். முஸ்லிம்களால் ஒரு மருத்துவ கல்லூரி நடத்துவது சாத்தியமா என இங்கு சிலர் கேட்கின்றனர். அவர்களின் சந்தேகங்களை போக்குங்கள் என்றார்கள்.
மருத்துவ கல்லூரி தொடங்கியே தீருவது என்று அப்போதே ஒரு உறுதி எடுத்தோம்! அதற்காக தமிழ்நாட்டில் பல இடங்களைப் பார்வையிட்டோம். கடைசியில் இந்த இடத்தை தேர்வு செய்தோம்.
இந்த இடத்தின் அமைவிடம் பூகோள, சமூக ரீதியாக சிறப்பானது. இங்கு 280 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளோம். தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி ஒன்றரை கிலோமீட்டர் நீளத்திற்கு இது பரந்து விரிந்துள்ளது. இதில்தான் 100 ஏக்கரில் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் வர உள்ளன. 200 ஏக்கரில் சிறப்பான டவுண் ஷிப் அமைய உள்ளது. காரணம் இந்த பகுதிக்கு இருபுறமும் கோமுகி ஆறு, மணி முத்தாறு நதிகள் உள்ளன. நிலத்தடி நீர் மிகச்சிறப்பாக உள்ளது.
மருத்துவக்கல்லூரியும் மருத்துவமனையும் இந்த இடத்திற்குத் தேவைதானா? என அறிவுப்பூர்வமாக அறிய, கள ஆய்வு செய்ய இன்ஃபனாமிக்ஸ் கம்பெனியிடம் பொறுப்பைக் கொடுத்தோம். அவர்களில் 15 பேர் ஒரு மாத காலம் இங்கு தங்கியிருந்து சுற்றுப்பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தந்தார்கள்.
இந்தப் பகுதியின் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் 1000 பேருக்கு 3 மருத்துவ படுக்கைகள் வேண்டும் என்ற விகிதாச்சாரத்தை எட்டுவதற்கு இன்னும் 15000 படுக்கைகள் தேவை என்பதை அறிந்தோம். உயர்சிகிச்சைக்கான மருத்துவ சிறப்பு சிகிச்சை இங்கு இல்லாததால் இருதய, நரம்பியல், சர்க்கரை மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ மனையாக இங்கு உருவாக்க வேண்டும் என முடிவு செய்தோம்.
எனவே இங்கு 15 மாடியில் 300 படுக்கைகளுடன் மருத்துவமனை அமையும். தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கும், சுற்று வட்டார மக்களுக்கும் இது மூன்று வகையில் பயனளிக்கும்.
முதலாவது, சமுதாயத்தில் காணப்படும் எல்லா வகை நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கும் இடமாக இது அமையும்.
இரண்டாவது, இங்கு அமைய உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகளில் 2500 பேருக்கு வேலை கிடைக்கும்.
மூன்றாவது, மருத்துவக் கல்லூரி கனவை நம் சமுதாய இளைஞர்களுக்கு நனவாக்கும் வாய்ப்பாக இது அமையும். இந்த உழைப்பு அடுத்த தலைமுறைக்கு தரும் மிகப்பெரிய அன்பளிப்பாகும்.”
இவ்வாறு அவர் சொல்லச் சொல்ல இனம்புரியா ஆனந்த உணர்வுடன் உள்ளம் பூரித்தது.
நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஸாலீஹீன் கல்வி அறக்கட்டளை நிர்வாகக்குழு உறுப்பினரும், திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி தாளாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளருமான ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், “சமுதாயத்திற்கான பெருந்திட்டம் என இதை சமுதாயத்தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களிடம் விவரித்த போது, இந்த மாபெரும் திட்டத்தை சமுதாயம் எதிர்பார்க்கின்ற படி செயல்படுத்த வேண்டுமேயானால் ஆளுமைகளின் குழு அமைக்கப்பட வேண்டும்; அதற்கு எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினால்தான் இதை செயல்படுத்த முடியும் எனக்கூறி எம். அப்துல் ரஹ்மான் அவர்களைத் தலைவராக அறிவித்தார்கள். அந்த தலைவருக்கு நன்றி எனக் கூறி எம். அப்துல் ரஹ்மான் அவர்களை தலைமை உரையாற்ற அழைத்தார்.
ஸாலிஹீன் பயணத்தில் சமுதாயம் கைகோர்த்து வரவேண்டும்:
ஸாலிஹீன் அறக்கட்டளைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் Ex MP அவர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு தலைமை உரை நிகழ்த்தினார்.
“நீண்ட நெடுங்காலமாக சமுதாயத்தின் ஒவ்வொருவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்த இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த யார் முன்னெடுத்துச் செல்வது என ஏக்கப்பெரு மூச்சோடு இருந்த நேரத்தில், ஒத்த கருத்தும் நன்னோக்கு பார்வையும் கொண்ட குழுமம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இதன் சார்பில் பன்னோக்கு மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என முடிவு செய்து, அதில் மருத்துவ கல்லூரிக்கு முன்னுரிமை அளித்து அதற்கு முதற்கட்டமாக மருத்துவமனை கட்டி அதன் திறப்பு விழா காணுகின்ற நன்னாள் இது.
இந்தப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன் சமுதாயப்பிரமுகர்களை, பல்வேறு துறைகளின் ஆளுமைகளை நான் அணுகி, சமுதாயத்தின் சார்பில் உருவாக்கக்கூடிய இந்தத் திட்டங்கள் பற்றி ஆலோசித்த போது அத்தனை பேரும் ஒரு முகமாக, ஒரே கோணத்தில் நின்று உற்சாகத்துடன் ஆதரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
முஸ்லிம் சமுதாயம் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்கள் எல்லாத் துறைகளிலும் மேம்பட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் நாம் முன்னேடுத்துச் செல்லும் இத்திட்டத்தை வெற்றிகரமாக்க அரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என எண்ணி, ஆழ்ந்த அனுபவமும் அறிவு முதிர்ச்சியும் கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரும் ஆளுமைகளைக் கண்டறிந்து அவர்களில் ஏழு பேர் அடங்கிய உயர்நிலை ஆலோசனைக்குழு அமைத்தோம்.
அந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதிஅரசர் இபுராஹிம் கலீபுல்லா, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் நீதியரசர் கே.என்.பாஷா, நீதி யரசர் ஜி.எம். அக்பர் அலி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் சாதிக், தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச் செயலாளர் கே. அலாவுதீன் IAS, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முன்னாள் மண்டல இயக்குநர் சதக்கத்துல்லாஹ் ஆகியோர் இடம்பெற்று அரிய ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளையின் 100 ஏக்கர் விடுதியுடன் கூடிய உலகத்தரத்திலான பள்ளிக்கூடம், அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, நர்ஸிங் மற்றும் பார்மஸி கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை உருவாக்குவது என முடிவெடுத்த போது, அறங்காவலர்கள் குழு பொதுக்குழுவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அது தான் இதுவரை முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் நடத்தாத மருத்துவக்கல்லூரியை முதலில் உருவாக்க வேண்டும் என்பது.
அதன்படி மருத்துவக்கல்லூரிக்கு முன்னோட்டமாக இந்த நடுத்தர மருத்துவமனையைக் கட்டி முடித்து திறந்துவைக்கின்ற இதே நாளில் 300 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு உயர்சிகிச்சை மருத்துவமனைக்கும் மருத்துவக்கல்லூரி கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது. எங்கள் பயணத்தில் சமுதாயம் கை கோர்த்து வரவேண்டும். அனைத்து காரியங்களுக்கும் உங்கள் ஆதரவையும், வல்ல இறைவனின் பெருங்கருணையும் வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டார். திரண்டிருந்த பெருங்கூட்டம் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரித்தது.
அடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் Ex MLA அவர்கள் உரையாற்றும் போது, “சமுதாய முன்னேற்றம், கல்விக்காக சுதந்திர இந்தியாவில் வழிகாட்டிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் வழி வந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பணிகளை முன்னெடுத்திருப்பது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்” என்றார்.
அதற்கடுத்து வாழ்த்துரை வழங்கிய எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், “எல்லோரும் கனவு காணலாம்; ஆனால் அந்தக்கனவை நனவாக்க வேண்டும். அதனை ஸாலிஹீன் அறக்கட்டளை சாதித்திருக்கிறது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இப்பணிக்கு பின்னால் நிற்கிறது; நாங்களும் வெறும் பார்வையாளர்காளக அல்லாமல் பங்காளர்களாக இருப்போம் என உறுதி கூறுகிறேன் என்றார்.
கல்லால் அடித்தாலும் கனிதரும் மரம் போல் ஆகுங்கள்:
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் கே.எம். பாஷா வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டார்.
கம்பீர குரலில், “சிறப்பிற்குரிய, மகிழ்ச்சிக்குரிய இப்பொன்னாளில் இந்த சாதனை நிகழ்த்துவதற்கு தலைமை தாங்கிய விழா நாயகர் அப்துல் ரஹ்மான் அவரைப்பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. ஏனென்றால் நினைத்ததை முடிக்கக்கூடிய ஆற்றலும் அறிவுமிக்கவர்.
இந்த சாதனை சாதரணமானதல்ல! முஸ்லிம் சமுதாயக் கல்வியில் இது ஒரு மைல்கல். இதன் அறங்காவலர்கள் தொண்டு செய்வது எமது பிறப்புரிமை என சபதமேற்றுள்ளார்கள். ஆற்றல் மிக்க அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மிகத்துணிவுடன், மிகுந்த நம்பிக்கையுடன் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். அவர்களை பாராட்டி போற்றும் வகையில் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்புவோம்” என்றார். விண்முட்ட கரவொலி எழுந்தது.
இஸ்லாமிய மார்க்க ரீதியாக முஸ்லிம்களை வழிநடத்தும் அறிஞர் அமைப்பு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை. சங்கைக்குரிய உலமா பெருமக்கள் பதினைந்தாயிரம் பேர் உள்ளனர். இதன் தலைவர் மௌலவி பி.ஏ.காஜா முயீனுத்தீன் ஃபாஜில் பாகவி, முகமலர்ச்சியோடு வாழ்த்துரை வழங்கிய ஹள்ரத், “இந்த விழாவிற்கு வந்திருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்கிறேன். பல்வேறு நலக்காரியங்களை முன்னெடுக்கக் கூடியவர்கள், அறங்காவலர்கள், நன்கொடை வாரி வழங்கக்கூடியவர்கள், பல பொறுப்புக்களில் இருக்கக்கூடியவர்கள் இந்த கிராமத்தை நோக்கி வந்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய ஆர்வத்தை உள்ளத்தில் அடக்கி வைத்து அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தக் காரியத்தை முழுமையாக்கி வெற்றியளிப்பானாக என துஆ செய்வோம்.
எண்ணற்றோர் போற்றும் அதே நேரம் சிலர் தூற்றுகிறார்களே என தனது தலைமை உரையின் கடைசியில் அப்துல் ரஹ்மான் அவர்கள் குறிப்பிட்டார். அவர் உள்ளத்து வேதனையின் வெளிப்பாடு அது என நான் உணர்தேன்.
பேரறிஞர் ஷிப்லி நுஃமானி அவர்கள் நடந்து செல்லும்போது பலபேர் அவர்களுக்கு கொடுக்கும் தொந்தரவைப்பார்த்து, அவர்களிடத்தில் ஒரு மரம், ஷிப்லி அவர்களே! நீங்கள் என்னைப்போல் ஆக வேண்டும். பலர் என்னை கல்லைக் கொண்டு எறிகிறார்கள்; நான் அவர்களுக்கு பழங்களை கொடுக்கிறேன் என்று பேசியதாக வரலாறு.
அப்துல் ரஹ்மான் அவர்களே! நீங்களும் அது போல் ஆக வேண்டும். அவர்களுடைய மனவருத்தத்திற்கு மருந்தாக இது அமையும். எல்லோரும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்; அவர்களுக்காக துஆ செய்கிறேன்.
நபிகளாரைத் திட்டினார்கள். அந்த திட்டு எனக்கல்ல என நபிகளார் திருப்பிவிட்டார்கள். அந்த அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும். குறை சொல்பவர்கள் குறை உள்ளவர்கள் சொல்கிறார்கள். நாம் அதைச் சார்ந்தவர்கள் அல்லர் என்ற எண்ணம் வரவேண்டும்” எனக்குறிப்பிட்டார்கள்.
பின் தங்கிய பகுதியின் 100 கிராமமக்களுக்கு பயன்தரும்:
அதனைத்தொடர்ந்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராதா கிருஷ்ணன்,” ஒரு மாபெரும் கல்விக்குழுமத்தை கடலூர் மாவட்டத்தில் அதுவும் நமது தொகுதியில் அதுவும் மிகவும் பின் தங்கிய விளிம்பு நிலைமக்கள் அதிகம் வாழும் வேப்பூர் பகுதியில் தொடங்கியிருப்பது பெரும் வளர்ச்சிக்கு முன்னேற்பாடாக அமையும். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சி.வெ.கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர், `நல்லோர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஸாலிஹீன் மருத்துவமனை 100 கி.மீட்டர் சுற்றளவில் 100 கிராம மக்கள் பயனடையும் வகையில் அமையும். இதன் திறப்பு விழாவிற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நல்ல மனம் படைத்த முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்கள் `இந்த மருத்துவமனை மூலம் எளிய மக்கள் பெருமளவு பயனடைவார்கள், அந்த வகையில் ஸாலிஹீன் அறக்கட்டளை மேலும் பல சேவைகளைப்புரிந்து தமது பயணத்தில் பீடுநடை போட வேண்டும்’ என வாழ்த்தியுள்ளார்கள். அந்த வாழ்த்துக்களோடு எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்கிறேன்” என்றார்.
வாழ்த்துரையின் நிறைவாக சமுதாயத்தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் உரையாற்றினார்.
ஐவதுகுடி என்ற இந்த சிற்றூரில் 300 ஏக்கர் பரப்பில் அதில் 100 ஏக்கரை தனிமைப்படுத்தி அதில் மருத்துவமனையும், மருத்துவகல்லூரியும் அதனோடு இணைந்த நிறுவனங்களையும் துவக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை உருவாக்கி அதன் சார்பில் இந்த சிறப்பான விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொருவரும் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய பெருமக்களாவார்கள். அவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் பெயர் குறிப்பிட்டு அவர்கள் சாதனைகளை பட்டியலிட்டால் அதுவே விழாவின் பெரும் பகுதியாக அமைந்துவிடும்.
தமிழ்நாடு முஸ்லிம் சமுதாயத்தில் நீண்ட காலமாக மருத்துவக்கல்லூரி துவக்கப்படவேண்டும் என்ற ஆசை, ஒரு கனவு போல் இருந்தது. கேரளாவில் 7 மருத்துவக்கல்லூரிகளை முஸ்லிம்கள் நடத்துகிறார்கள். அதன் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எமக்கு ஏற்படும் போது இப்படி ஒரு வாய்ப்பு தமிழ்நாட்டில் அமையவில்லையே என சிந்தித்தது உண்டு. சில சமயம் வேதனைப்பட்டதுண்டு. அந்த சிந்தனைக்கும் வேதனைக்கும் முடிவு கட்டுவது போல் இந்த விழா நடைபெறுகிறது.
சமுதாயத்தின் பேராதரவோடு ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மட்டுமின்றி என்னென்ன பணிகளுக்கு திட்டமிடுகிறார்களோ அவை அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேற வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை வரலாறு பற்றி இங்கு வெளியிடப்பட்ட மணிச்சுடர் நாளேட்டின் சிறப்புமலரில் தம்பி காயல் மகபூப் எழுதியுள்ளார். இதன் அறங்காவலர்கள் 111 பேர் இணைந்து இதனை உருவாக்கியுள்ளார்கள்.
தமிழ்நாடு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நல்லுள்ளம் கொண்ட 111 பேர் சேர்ந்து உருவாக்கியுள்ள நல்லோர் என பொருள்படும் ஸாலிஹீன் அறக்கட்டளை சேவை பல புரியும் என வாழ்த்தியுள்ளதைப்போல் ஸாலிஹீன் என்ற சொல் அடைந்துள்ளது.
ஸாலிஹீன் என்ற வார்த்தை திருக்குர்ஆனில் 24 இடங்களிலும் அது தொடர்பான வார்த்தை மேலும் 4 இடங்களிலும் வருகிறது. தினமும் நாம் ஐவேளை தொழுகிறோம். அத்தஹிய்யாத்தில் ஸாலிஹீன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறோம்.
ஆக, ஸாலிஹீன்கள் வாழுகிற காலமெல்லாம் தாங்கள் மட்டுமல்ல தாங்கள் சார்ந்துள்ள சமுதாயத்தை, வாழும் நாட்டை நாட்டு மக்களை நல்லவர்களாக்க வேண்டும் என்ற உணர்வோடு செயல்படவேண்டும் என உணர்த்தியே இந்த வார்த்தையை எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கற்றுத்தந்துள்ளான்” எனக் குறிப்பிட்டார்கள்.
இந்த வளாகத்தில் எழிலார்ந்த மஸ்ஜித் உருவாக்கப்படவேண்டும் என்ற தலைவர் பேராசிரியர் கோரிக்கையை மேடையிலேயே ஏற்றார், ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை நிர்வாகக்குழு உறுப்பினர் ஆடிட்டர் ரஸாக்!
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியை ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை திட்ட மேலாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பேச்சாளருமான புளியங்குடி முகம்மது அல்அமீன் கம்பீரமாக வாசித்து அவருக்கு நன்றி கூறினார்.
இந்த மாபெரும் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளைச் செயலாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளருமான மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்.
நான் ஒருவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர் புளியங்குடி முகம்மது அல்அமீன். ஏழாண்டு காலம் இந்த பணிகளுக்கு என்னோடு இணைந்து பாடுபட்டார். இன்னொருவருக்கு நன்றி கூற ஆசைப்படுகிறேன், அவர் பெரம்பலூர் எஸ்.சுல்தான் இபுராஹிம். இந்த அறக்கட்டளையில் அவர் கடைசியாக சேர்ந்தாலும் இந்த விழா ஏற்பாடு முழுவதும் எந்த எதிர்பார்ப்புமின்றி பணி செய்தார். இ.வி.பி.இம்ரான் ஹாரூன், பாம்புக்கோவில் செய்யது பட்டாணி உள்ளிட்டோருக்கும் நன்றி. கட்டிடப்பணிகளை உருவாக்கிய ராஜேஸ்வரி அஸோஸியேட் லோகநாதன் மற்றும் அவர் துணைவியாருக்கும் நன்றி என்ற அவர், எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து ஏழாண்டு காலம் எதிர் பார்ப்பின்றி சமுதாய நன்மையை மட்டுமே கருதி முதலீடு செய்த 111 மாணிக்கங்களுக்கும் நன்றி என சொல்லத் தவறவில்லை.
விழாவில் பலருக்கும் பொன்னாடைகளும் நினைவுப்பரிசுகளும் அளித்து கௌரவிக்கப்பட்ட போது, இந்த இடத்தைக் கண்டறிந்து, ஸாலிஹீன் அறக்கட்டளை அதனைப் பெறுவதற்கு காரணமாக இருந்த மயிலாடுதுறை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஆயப்பாடி அமீர், என்.ஏ.எம். நூருல்லாஹ், முஸ்லிம் யூத் லீக் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் அபூபாரிஸ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
நிறைவாக ஸாலிஹீன் அறக்கட்டளைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள், இந்த திறப்புவிழாவுக்கு முந்தைய நாளில் மஃரிப் தொழுகையுடன் திருக்குர்ஆன் முழுவதையும் 30 பேருடன் ஓதி அற்புதமாக பிரார்த்தனை செய்த அதாயி கல்வி குழுமத்தின் விக்ரவாண்டி கிளை பொறுப்பாளர்கள் மௌலவி Y.அப்துல் பாஸி ஃபாஸில் பிலாலி, மௌலவி பைஸூல் பாரி ஆலிம் பிலாலி ஆகியோர் தலைமையிலான அந்த அரபிக்கல்லூரியின் மாணவர்களே இன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்; அவர்களே தேசிய கீதமும் பாட உள்ளனர் அவர்களுக்கு நன்றி என கூறிவிட்டு முத்தாய்ப்பாக, இந்த மருத்துவக்கல்லூரி பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனை 300 படுக்கை வசதிகளோடு கட்டப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட எல்லா விதமான நிர்வாகப்பொறுப்புக்களையும் சமுதாயத்தில் எல்லோரும் கலந்து கொள்ளக்கூடிய வகையில் ஷேர் ஹோல்டர்ஸ் என்ற அந்த ஸ்கீமை அடிப்படையாக வைத்து பங்குதாரர்களாக எல்லோரும் சேர்ந்து எல்லோருமாக இணைந்து செய்யலாம் என முடிவு செய்துள்ளோம். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நாளை தேர்வு செய்து கூட்டங்களை நடத்த உள்ளோம். அதில் பங்கேற்க விருப்பமுடையவர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம் என வெள்ளை மனதோடு வெளிப்படைத்தன்மையாக அறிவித்தார்.
ஆக, ஒரு பெருங்கனவு நனவாகும் மகிழ்ச்சியில் தமிழக முஸ்லிம் சமுதாயம் வாழ்த்தி பிரார்த்திக்கிறது. அருட்கொடையாளனின் அடிமை என்ற ஆளுமை எம்.அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம்பி அவர்களே! உங்களுக்கு தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் `ராயல் சல்யூட்’
– காயல் மகபூப், மாநிலச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.