இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தி உள்ளது. காஸாவில் இருந்து கொண்டு அக்டோபர் 7 சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்தான் அவர்கள் வரலாற்றில் நடத்தப்பட்ட பெரிய தாக்குதல். இஸ்ரேல் மீது சில நிமிடங்களில் 7000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டையே குலைநடுங்க வைத்திருக்கிறது ஹமாஸ் இயக்கம்.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் பல ஆயிரம் உயிர்களை தொடர்ந்து பலி கொண்டு வருகிறது. தற்போதைய போரும் மிகப் பெரும் நாசகார பேரழிவையே ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் இதற்கு முன்னர் கூட சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதைய மோதல் அளவுக்கு மிக வீரியமான தாக்குதலை ஹமாஸ் இதற்கு முன்னர் நடத்தியதில்லை. எனவேதான் தற்போது இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பேசு பொருளாகியுள்ளது.
தற்போது வரை இஸ்ரேலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுபோல 3,500க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பதிலடியாக இஸ்ரேல் மிகவும் உக்கிரமாக காஸாவைத் தாக்கி வருகிறது. இதனால் காஸா முழுவதும் உணவு தண்ணீர் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி இருக்கிறது காஸாவில் பலி எண்ணிக்கை 1,500 ஐ நெருங்கி உள்ளது
பாலஸ்தீனின் காசா, மேற்கு கரை, ஜெருசலேம் பகுதிகளை ஆக்கிரமிக்க பல ஆண்டுகளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல். கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் படையினர் காசாவுக்குள் நுழைந்து தாக்கி, ஜெருசலேமில் உள்ள அக்சா மசூதிக்கு நுழைய முயன்ற பாலஸ்தீனர்களை விரட்டி அடித்தனர். பல ஆண்டுகளாக பாலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் பல லட்சம் பாலஸ்தீன் மக்கள், பெண்கள், குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.
பாலஸ்தீன் நிலங்களை 70 ஆண்டுகளாக ஆக்கிரமித்து பெரும்பாலானவற்றை வசப்படுத்திய இஸ்ரேல், மீதம் இருக்கும் நிலப்பகுதிகளை கைப்பற்ற தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இஸ்லாமியர்களின் 3 வது புனித தலமான அக்சா மசூதிக்குள் பாலஸ்தீனர்கள் தொழுகை நடத்த இஸ்ரேல் தடை விதித்ததால் பதற்ற நிலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் அக்சா மசூதிக்கு சென்றபோது இஸ்ரேலிய படைகள் காலணிகளுடன் நுழைந்ததோடு இஸ்லாமுக்கு எதிராக கூச்சலிட்டிருக்கிறார்கள். இஸ்ரேலிய படைகள் அங்குள்ள இஸ்லாமிய தலைவர்களின் கல்லறைகளை சேதப்படுத்தியதை கண்டித்து ஜோர்டான், பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில்தான் பாலஸ்தீனிலிருந்து இஸ்ரேலை நோக்கி கடந்த 7ஆம் தேதி சனிக்கிழமை திடீரென ராக்கெட்டுகள் பாய்ந்து உள்ளன. காசா பகுதியிலிருந்து பாய்ந்த அந்த 7000 ஏவுகணைகள் இஸ்ரேலின் ஆயுத கிடங்குகள், ராணுவ மையங்கள், விமான நிலையங்களை தாக்கி உள்ளன. காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு ஆபரேசன் அல் அக்சா பிலட் என்ற பெயரில் இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்திய ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், “இஸ்ரேல் மீது தற்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஒரு நாள் ஆட்டம் அல்ல. எங்களுடைய புனிதமான அல் அக்ஸா மசூதியை இழிவுப்படுத்தியதற்காகவும், எங்களுடைய புனிதத் தலங்களை நாசப்படுத்தியதற்காகவும் இந்த தாக்குதலை நாங்கள் நடத்துகிறோம். இது முடிவடையும் தாக்குதல் அல்ல. ஒரு முடிவு தெரியும் வரை விட மாட்டோம். ராணுவ உயரதிகாரிகள் உட்பட பல இஸ்ரேலியர்கள் இப்போது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர்” என அறிவித்திருக்கிறார்.
பாலஸ்தீனியர்களையும், ஹமாஸ் படையினரையும் எளிதில் பணிய வைத்துவிடலாம் என்று நினைத்த இஸ்ரேல் ராணுவத்திற்கு மரண அடி விழுந்து கொண்டிருக்கிறது. தரை வழியில் ஒரு பக்கம் தாக்குதல் நடந்து கொண்டிருக்க, வானில் இருந்து வவ்வாள்களை போல பறந்து வந்த ஒரு கூட்டம் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் இஸ்ரேல் ராணுவம் கதிகலங்கி நின்றதை உலகம் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் பிரகடனத்தை அறிவித்து பாலஸ்தீன் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டது. இரு தரப்பினரும் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாலஸ்தீனுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் களமிறங்கி உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன் மீது தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்கி வருவதுடன், விடிய விடிய போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. கடும் சேதங்களை காஸா சந்தித்து வருகிறது.
தாக்குதல்கள் தீவிரம் அடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
பல ஆண்டுகளாக நடந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகியுள்ளது. இதனிடையே, காசா பகுதியை முழுமையாக முடக்க உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காசா பகுதியை முழுமையாக முற்றுகையிட்டுள்ளோம். அப்பகுதி அனைத்தும்கட்டுப்பாட்டில் உள்ளன. மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு என எதுவும் கிடைக்க அனுமதிக்கப் போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மொசாட் பிம்பம்
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இஸ்ரேலின் ‘மொசாட்’ எப்படி ஹமாஸின் தாக்குதலை முன்கூட்டியே கணிக்க தவறியது? மொசாட் மட்டமல்ல, இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சியான ‘ஷின் பெட்’, இஸ்ரேல் பாதுகாப்பு படை, மொசாட்டின் வெளி உளவு அமைப்பு என ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பே இந்த தாக்குதலை முன்கூட்டே கணிக்கத் தவறிவிட்டது.
மற்ற மேற்கு நாடுகளை போல இஸ்ரேல் தனது உளவு அமைப்புகளுக்கு போதிய அளவு நிதி கொடுத்து வருகிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.24,000 கோடியை ஒதுக்குகிறது. இந்த உளவு அமைப்பில் 7,000 வீரர்கள் பணியாற்றுகிறார்கள். அமெரிக்காவின் CIAக்கு அடுத்தபடியாக மொசாட் இருக்கிறது. பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுக்குள்ளும், லெபனான், சிரியா மற்றும் பிற நாடுகளிலிருந்து முக்கிய தகவல்களை ரகசியமாக பெற ஆட்களை மொசாட் போதுமான அளவு கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் இப்படி தகவல்களை பெற்று பல போராளி குழுக்களின் தலைவர்களையும் கொலை செய்திருக்கிறது. கொலை செய்ய நேரடியாக சென்று துப்பாக்கியால் சுட வேண்டும் என அவசியமில்லை. இதற்காக ட்ரோன்கள், வெடிக்கும் மொபைல்கள் என மேம்பட்ட தொழில்நுட்பத்தை இஸ்ரேல் உளவுத்துறை பயன்படுத்தியுள்ளது. கொலை செய்வது மட்டுமல்லாது அரசியல் மந்த தன்மையை உருவாக்குவதும் மொசாட் உளவுப் பிரிவின் ஒரு வேலையாகும். இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளில் இந்த வேலையை மொசாட் செய்து வருகிறது. இந்த நாடுகளில் உள்ள அரசியல் ஸ்திரமின்மை, குழப்பங்கள், அடிக்கடி ஆட்சி மாற்றம் போன்றவற்றிற்கு மொசாட் தீவிரமாக பணியாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு பலம் வாய்ந்த அமைப்பின் தலைவராக டாடி பார்னியா பொறுப்பு வகித்து வருகிறார். இப்படியாக ஏராளமான உளவு செயல்பாடுகள், எல்லையில் ஊடுருவலைத் தடுக்க மோசன் கேமிரா பொருத்தப்பட்ட தானியங்கி துப்பாக்கி கொண்ட அமைப்பு, ஏவுகணை தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அயர்ன் டோம் அமைப்பு என எல்லாம் இருந்தும் ஹமாஸ் படையின் தாக்குதலை இஸ்ரேலால் தடுக்க முடியவில்லை. இதற்கு தெளிவான திட்டமிடலும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது எழுந்த கோபம், பழிவாங்கும் உணர்வு எல்லாம் இந்த துல்லிய தாக்குதலதலாக உருவெடுத்திருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
1973ம் ஆண்டுக்கு பின்னர் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுதான். ஹமாஸ் படையினர் வெறுமென ஆயுதம் ஏந்தும் போராளிகள் குழு கிடையாது. அவர்கள் அரசியல் தெளிவு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போர், தாக்குதல் வெறும் தொடக்கம்தான். நாங்கள் இப்போதுதான் தாக்கவே தொடங்கி இருக்கிறோம். இனி எங்கள் தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும். நாங்கள் இன்னும் வலிமையாகத் தாக்கப் போகிறோம். இப்போதுதான் ஹமாஸை தாக்க தொடங்கி உள்ளோம், இனிமேல்தான் எங்களின் பலம் முழுமையாக ஹமாஸுக்கு தெரியும். இனி வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு புரிய வைப்போம்.
நாங்கள் செய்யப்போகும் சம்பவங்களின் விளைவுகள் இனி வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும். அந்த அளவிற்கு இருக்கப் போகிறது. பல தலைமுறைகளுக்கு அவர்கள் இந்த தாக்குதலை உணருவார்கள். எங்கள் நாட்டு மக்களை அவர்கள் சீண்டிவிட்டார்கள். இதற்கான பதிலடியை கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொக்கரித்துள்ளார்.
சவூதி அரேபியா
இஸ்ரேல் – பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் – பாலத்தீன ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
சவுதி – இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்க இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது. சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா அறிவித்து உள்ளது. இந்த ஒப்பந்தம் பெரும்பாலும் நடக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா
அரபு நாடுகள், ஈரான் மற்றும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என அனைத்து தரப்புகளுடனும் ரஷ்யாவுக்கு நல்லுறவு இருக்கிறது. இந்தப் போர் விவகாரத்தில் இரு தரப்புக்கும் எதிரான வன்முறைகளைக் கண்டித்த ரஷ்யா, சுதந்திர பாலஸ்தீன நாட்டின் தேவையை அமெரிக்கா புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டியது.
ஈரான்
ஈரான் ஹமாஸின் தாக்குதலை ஆதரித்துள்ளது. இதனால் ஹமாஸ் இயக்கத்திற்கு ரகசியமாக உதவி செய்வதே ஈரான்தான் என்ற புகாரும் உள்ளது. அதன்படி ஹமாஸ் இயக்கத்திற்கு ஆயுதங்கள், உளவு தகவல்கள், இந்த மோதலுக்கு திட்டம் போட்டு கொடுத்ததே ஈரான்தான் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் தங்கள் நாடு தாக்கப்பட்டால் அதற்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் இந்த மோதல் மத்திய கிழக்கு உலக நாடுகளின் மோதலாக உருவெடுத்து உள்ளது.
அமெரிக்கா
அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவிகளை அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது போர்க்கப்பல்களையும் அந்நாட்டிற்கு அருகிலேயே நிறுத்த உள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்களில் இருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தவும் இஸ்ரேலுக்கு அனுமதி தரப்படும் எனத் தெரிகிறது.
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford தலைமையிலான குழு இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய விமான தாங்கி போர் கப்பல் ஆகும். அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன.
சீனா
இந்த நிலையில் போரில் ஹமாஸ் படைக்கு ஆதரவாக சீனா பேச தொடங்கி உள்ளது. முதல்முறையாக நேரடியாக இதில் சீனா கருத்து சொல்லி உள்ளது. அதன்படி, பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே தற்போது அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் அமைதியாக இருக்கவும், நிதானத்தை கடைப்பிடிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்கவும் விரோதப் போக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் நண்பன் என்ற முறையில், இரு நாடுகளும் அமைதியுடன் வாழ்வதைக் காண நாங்கள் எதிர்பார்க்கிறோம். இரண்டு நாடுகளும் மோதலை நிறுத்த வேண்டும். அமைதியை நிலைநாட்ட வேண்டும் . இதில் வேறு விதமாக கருத்து சொல்ல நாங்கள் விரும்பவில்லை. உடனடியாக இரு நாடுகள் தீர்வை நடைமுறைப்படுத்து வேண்டும். அதாவது இஸ்ரேல் தனி நாடு இருப்பது போல பாலஸ்தீனத்தின் சுதந்திர நாட்டை தனியாக நிறுவ வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
இந்தியா
கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டபோது, அதை எதிர்த்து வாக்களித்த மிக சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1950ம் ஆண்டு இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தாலும், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு இஸ்ரேலுடன் எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் விதமாக ‘பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என இந்தியா அஞ்சல் தலையை கூட அப்போது வெளியிட்டது.
ஆனால் கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு சென்றார். இந்திய வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் முன்னெப்போதும் நடந்ததில்லை. சுதந்திர இந்தியாவின் எந்த பிரதமரும் இஸ்ரேலுக்கு சென்றது கிடையாது. இப்படி இருக்கையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியிருப்பது பெரும் கனவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஹமாஸ்
மேற்கு கரை, காஸா முனை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த முதலாவது போருக்குப் பின்னர் 1980களின் தொடக்கத்தில் ஹமாஸ் இயக்கம் நிறுவப்பட்டது. 1967-ம் ஆண்டு நடந்த முதலாவது பாலஸ்தீனம்- இஸ்ரேல் போரின் போது இந்த பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1946-ம் ஆண்டு ஜெருசலேமில் செயல்பட்ட Palestinian Muslim Brotherhood இயக்கத்தின் வழித்தோன்றலாக விடுதலைப்போராளி ஷேக் அஹ்மது யாசின் தலைமையில் ஹமாஸ் இயக்கம் உருவானது.
1990களில் நார்வேயின் ஒஸ்லோவில் இஸ்ரேல் – பாலஸ்தீன விடுதலை இயக்கம் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் மூர்க்கமாக எதிர்த்து தாக்குதல்களை முன்னெடுத்ததன் மூலம் ஹமாஸ் இயக்கம் உலக அரங்கில் அறியப்பட்டது.
யாசர் அராபத் மறைவுக்குப் பின்னர் 2006-ல் பாலஸ்தீன சட்டசபை கவுன்சில் தேர்தலில் வென்ற ஹமாஸ் இயக்கத்தின் கீழ் மேற்கு கரை, காஸா பகுதிகள் நிர்வாகம் வந்தது.
இஸ்ரேல்- ஹமாஸ் மோதல்
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் கடந்த 2005திலிருந்தே தொடர்ந்து வருகிறது. 2005ஆம் ஆண்டில்தான் காஸாவிலிருந்து தனது ராணுவத்தையும், யூதர்களையும் இஸ்ரேல் திரும்ப அழைத்தது. அப்போதைய இஸ்ரேல் பிரதமா் ஏரியல் ஷரான் முயற்சியில், காஸாவிலிருந்த யூதக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. அதிலிருந்தவா்கள் இஸ்ரேல் அழைத்து வரப்பட்டனா். இஸ்ரேல் ராணுவ நிலைகள் நீக்கப்பட்டன. இருந்தாலும், காஸாவின் வான் எல்லையை இஸ்ரேல் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. அந்தப் பிராந்தியத்துக்கான நீா் மற்றும் மின்சார விநியோகத்தை இஸ்ரேல்தான் கட்டுப்படுத்துகிறது. காஸாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறினாலும், அந்தப் பிராந்தியம் இன்னும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில்தான் உள்ளது.
இஸ்ரேல் வெளியேறிய பிறகு பாலஸ்தீனத்துக்கு நடைபெற்ற தோ்தலில், காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பு வெற்றி பெற்றது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் ராக்கெட் தாக்குதல் நடத்துவது, அதற்குப் பதிலடியாக காஸாவில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவது, காஸாவுக்கு அத்தியாவசியப் பொருள்கள் செல்வதை இஸ்ரேலும், எகிப்தும் தடை ஏற்படுத்துவது போன்ற நிகழ்வுகளால் இந்தப் பதற்றம் பல மடங்கு அதிகரிக்கிறது. சில நேரங்களில் இது பெரும் போராக உருவெடுத்துள்ளது.
2006: இஸ்ரேல் ராணுவத்தைச் சோ்ந்த கிலாட் ஷாலிட் என்பவரை பாலஸ்தீன ஆயுதக் குழுவினா் கடத்திச் சென்றதைத் தொடா்ந்து காஸா பகுதியில் இஸ்ரேல் படைகள் நுழைந்தன. 2005-இல் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிய பிறகு இஸ்ரேல் ராணுவம் அங்கு நுழைந்தது அதுவே முதல்முறை. இதுதான் இஸ்ரேல்-காஸா போரின் தொடக்கமாக அமைந்தது.
சுமார் 5 மாதங்களுக்குத் தொடா்ந்த இந்த மோதலில் 402 பாலஸ்தீனா்களும், 11 இஸ்ரேலியா்களும் கொல்லப்பட்டனா். அதன் பிறகு 2011-இல்தான் கிலாட் ஷாலிட்டை ஹமாஸ் விடுவித்தது.
2007: இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதி ஆயுதக் குழுவினருக்கும் அவ்வப்போது தொடா்ந்து வந்த சிறு மோதல் மிகப் பெரிதாக தீவிரமடைந்தது. பாலஸ்தீன குழுக்களிடையேயான மோதல் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது.
அதையடுத்து, காஸாவுக்கு குடிநீா், மின்சாரம், எரிபொருள் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. இது, குற்றவாளிகளோடு மற்றவா்களுக்கும் சோ்த்து அளிக்கும் ‘கூட்டு தண்டனை’ என்று சா்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
ஜூன் 10 முதல் 15 வரை தொடா்ந்த இந்த மோதலில் 120 படையினா், பொதுமக்கள் 39 போ், 2 ஐ.நா. படையினா் உயிரிழந்தனா்.
2008: இஸ்ரேலை நோக்கி காஸாவிலிருந்து 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. பதிலுக்கு காஸாவிலுள்ள ஹமாஸ் அரசின் உள்துறை அமைச்சகக் கட்டடத்தின் மீது இஸ்ரேல் 3 ஏவுகணைகளை வீசியது. இதில் அந்தக் கட்டடம் அழிக்கப்பட்டது.
பின்னா் காஸா நகரிலுள்ள ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனியாவின் இல்லத்தில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான சிறுவா்கள் இறந்தனா். இந்த மோதலில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் சா்வதேச அளவில் சா்ச்சையை எழுப்பின.
இந்த மோதலில் 112 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். இதில் 52 போ் பொதுமக்கள். இஸ்ரேல் தரப்பில் 2 படையினா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
2008: காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஏவுகணைகள் ஏவப்படுவதை நிறுத்தவும், காஸாவுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் அந்தப் பகுதியில் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இதனால், எகிப்தின் முயற்சில் மேற்கொள்ளப்பட்ட – இரு தரப்பிலும் அதிகம் மதிக்கப்படாத – 6 மாத போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
2008, டிசம்பரிலிருந்து 2009, ஜனவரி வரை 3 வாரங்களுக்குத் தொடா்ந்த இந்த மோதலில் 1,166-லிருந்து 1,417 வரையிலான பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தரப்பில் 13 போ் உயிரிழந்தனா்.
2010: காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் சிறப்புப் படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 இஸ்ரேலியா்கள், 3 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.
2012: பாலஸ்தீன ஆயுதக் குழு தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. 5 நாள்கள் தொடா்ந்த இந்த மோதலில் காஸாவைச் சோ்ந்த 18 ஆயுதக் குழுவினா், பொதுமக்கள் 5 போ் உயிரிழந்தனா்.
2014: 3 இஸ்ரேலிய சிறார்களை பாலஸ்தீன படையினா் கடத்திச் சென்றதைத் தொடா்ந்து வெடித்த மிகப்பெரிய போரில் 2,310 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். இதில் 70 சதவீதத்தினா் பொதுமக்கள். இஸ்ரேல் தரப்பில் 67 படையினரும், பொதுமக்கள் 6 பேரும் உயிரிழந்தனா்.
2018: காஸா எல்லையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாலஸ்தீனா்கள் தொடா்ந்து நடத்திய ஆா்ப்பாட்டம் மோதலாக உருவெடுத்தது. இதில் 168 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனா்.
2019: பாலஸ்தீன விடுதலை ஆயுதக் குழுக்களில் ஒன்றான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தலைவா் அபு அல்-அத்தாவை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்துக் கொன்றதைத் தொடா்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இதில் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
2021-ல் ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய படைகளுடனான மிகப் பெரும் மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர். அப்போது 11 நாட்கள் யுத்தம் நடந்தது. இதில் 250 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் 13 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு அல்-அக்ஸா மசூதி விவகாரம், இஸ்ரேலியா்களின் வெற்றி ஊா்வலம் விவகாரம் என ஒவ்வொரு பிரச்னை கிளம்பும்போதும் காஸாவிலிருந்து ஏவுகணைகள் வீசப்படுவதும், பதிலடியாக போர் விமானங்களைப் பறக்கவிட்டு இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசுவதுமாக இந்தச் சண்டை தொடந்து கொண்டிருந்தது.
இப்போது இஸ்ரேல் மீது 7,000 ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டையே நிலைகுலைய வைத்திருக்கிறது ஹமாஸ். இஸ்ரேலும் பதிலடியை கொடுத்து வருவதால் உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. இஸ்ரேல் உளவுத் துறைக்கே தெரியாமல், நீண்ட நாள் திட்டத்துடன் ஹமாஸ் மிகத் தீவிரமான ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவியது, நீண்ட காலம் தொடரும் இஸ்ரேல்-காஸா போரில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீனை முழுமையாக ஆக்கிரமிக்கத் திட்டம்
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் என்பது பாரம்பரியமாக போருக்கு இருக்கும் முக்கியமான காரணம். அது நிலத்தகராறு. அதாவது பாலஸ்தீனம் இருந்த இடத்தில்தான் தற்போதைய இஸ்ரேல் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
1947ல் இருந்து பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் மேற்கு கரை பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடங்கியது முதல் உலகப்போரின் முடிவில் இருந்துதான். இந்த பகுதியை யூதர்கள் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக பூமியாக கருதினார்கள். இதனால் யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு குடியேற தொடங்கினார்கள். அப்போதே யூதர்கள் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சின்ன சின்ன நில தகராறுகள் ஏற்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜெர்மனியில் இருந்து வெளியேறிய யூதர்களை எல்லாம் சேர்த்து தனி நாடு உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு கடைசியில் இந்த இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. பாலஸ்தீனத்தை துண்டாக்கி இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. பாலஸ்தீனம் 1947ல் ஐநா மூலம் மொத்தமாக பங்கு போடப்பட்டது. ஐநாவின் திட்டப்படி பாலஸ்தீனம், அரபு மற்றும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இரண்டு நாடாக பிரிக்கப்படும். பாலஸ்தீன மக்களுக்கு 50%க்கும் குறைவான நிலம் ஒதுக்கப்படும்.
ஜெருசலேம் சர்வதேச கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஐநா கூறியது. ஆனால் இதோடு முடியாமல் தொடர்ந்து பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து கொண்டே வந்தது. இந்த ஆக்கிரமிப்பு அடங்க முடியாத நிலைக்கு சென்று, ஒரு கட்டத்தில் பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீனத்திலேயே வாழ முடியாத நிலை கூட ஏற்பட்டது. இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் 1948ல் போருக்கு சென்றது. 1 வருடம் நடந்த போரில் இஸ்ரேல் வென்றது.
அப்போது தொடங்கிய போர்தான் இப்போது வரை நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பும் – இஸ்ரேலும்தான் தற்போது பாலஸ்தீனத்திற்காக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றன. ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன விடுதலைக்கும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மொத்தமாக விழுங்குவதற்கும் முடிவு செய்துள்ளது.