அனைவரும் பங்கேற்கும் ஒரு ஜனநாயகம், வளர்ச்சி, எல்லோருக்கும் அடிப்படை வசதிகள், உலகத்தரம் வாய்ந்த பொருளாதாரம், புதிய இந்தியா, ஊழலற்ற அரசு.. இவை எல்லாம் பாஜகவின் 2014 தேர்தல் வாக்குறுதிகள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம், காங்கிரஸ் ஆட்சியில் தவறுகளை சுட்டி காட்டி அதை எல்லாம் சரி செய்வோம் என்று கூறி இருந்தார்கள். ஆனால் அதில் ஒரு சிறு பிழை நேர்ந்துவிட்டது. எதெல்லாம் செய்வோம் என்பதையும் எதெல்லாம் செய்ய மாட்டோம் என்பதையும் மாற்றி அச்சடித்து விட்டார்கள்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றால் அது இந்தியா தான். இந்தியா விடுதலை பெற்ற இந்த 75 ஆண்டுகளில் உண்மையான ஜனநாயகம் இருந்திருக்கிறதா என்றால் அது சந்தேகத்திற்குரியதாகிவிட்டது. ஆனால் ஜனநாயகம் மீறும் போதெல்லாம் மக்களும், ஊடகங்களும் தட்டிக் கேட்கும் போது பாஜக அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத இருமாப்போடு இருப்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள்.
2014 தேர்தலில் மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று முன்னிறுத்தியது பாஜக. அதை மக்கள் மனதில் பதிய வைக்க பெரும் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. நாடு முழுக்க விளம்பரப்படுத்த, ஆட்சியில் இல்லாத பாஜகவுக்கு பணம் ஏது என்ற கேள்விக்கும், பாராளுமன்றத்தில் அதானி பற்றி நாங்கள் பேசமாட்டோம், தயவு செய்து பாராளுமன்ற விவாதத்திற்கு வாருங்கள் என்று எதிர்க்கட்சி கோரிக்கை வைத்ததற்கும் தொடர்பு இருக்குமா என்பதை விளக்கத் தேவையில்லை.
2014 தேர்தல் பரப்புரையில், தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ரூ. 40க்கு கொண்டு வருவேன் என்று வாக்குறுதி கொடுத்தார் திருவாளர் மோடி. அப்போது இருந்த ரூபாயின் மதிப்பு ஏறக்குறைய ரூ 60. இன்று இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. 1 அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ 83.14 என்று வீழ்ந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
2020ல் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் இந்தியா வந்தபோது, மோடியை வளர்ச்சியின் நாயகனாகக் காட்ட ஏழைகள் வாழும் பகுதியை மறைத்து சுவர் எழுப்பினார்கள். மூன்று வருடங்கள் கழித்து சில நாட்களுக்கு முன் உலக நாடுகள் பங்கெடுக்கும் G20 மாநாட்டில் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியை ஒரு விஸ்வகுருவாக ஊடகங்கள் சித்தரிக்க, டெல்லியில் சுவருக்கு பதிலாக தார்பாயை கொண்டு குடிசைகள் மறைக்கப்பட்டன. அதை முழுவதுமாக கூட மறைக்க வழியற்று நின்றது மோடியின் வளர்ச்சி. அவ்வளவு செலவு செய்து தார்பாய் போட்டதற்கு கொஞ்சம் கைக்குட்டையை வாங்கி உலக தலைவர்கள் கண்களில் கட்டி, அழைத்திருந்தால் செலவு மிச்சம் ஆகி இருக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் கார்கே கிண்டலடித்தார். மோடி ஆட்சியில் மக்களின் தரமான அடிப்படை வசதிகள் நிறைந்த நாடாக இந்தியா இப்படி தான் விளங்குகிறது.
மோடியின் ஆட்சியில் விவசாயம் செழிப்படைந்ததோ இல்லையோ, விவசாயிகள் பலர் மரணமடைந்தனர். பாஜக கொண்டு வந்த மூன்று விவசாய சட்டதிருத்தத்தை எதிர்த்து ஏறக்குறைய ஒரு வருட காலம் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கோரிக்கையை ஒப்புக்கொள்வதோ நிராகரிப்பதோ அடுத்த கட்டம். ஆனால் குறைந்த பட்சம் அவர்களை சந்திக்கக் கூட நேரம் ஒதுக்காத ஏழைத் தாயின் மகன், இதற்கு முன்னர் தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போதும், உச்சபட்சமாக நிர்வாண போராட்டம் நடத்திய போதும் அவர்களை சந்திக்க மறுத்தவர்.
உயர்கல்வி படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று பிரச்சாரங்களில் கூறி விட்டு, தேர்தல் முடிந்ததும், நீங்கள் ஏன் பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ள கூடாது என்றார். இப்போது குலத் தொழிலை கொண்டு வந்துள்ளார். உலகில் பெண்களுக்கான பாதுகாப்பு வரிசையில் இந்திய 148வது இடத்தை பிடித்தது. அது வெளிநாட்டு சதி என்பவர்கள் மல்யுத்த வீராங்கனைகள் யாரை எதிர்த்து போராடினார்கள் என்பதைத் தேடிப் படிக்க வேண்டும்.
ஆக மொத்தம் தேர்தல் அறிக்கையில் என்னவெல்லாம் சொல்லப்பட்டதோ அதை எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்பதில் உண்மை இல்லை. பாஜக சொன்ன பல விஷயங்களை நிறைவேற்றி இருக்கிறது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் ராமர் கோவில் கட்டியது, ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசம் ஆக்கியது, உயர் ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு, மாநில அரசின் செயல்பாடுகளைக் குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி கொண்டு வந்து, ஒன்றிய அரசின் கைகளை எதிர்பார்க்க வைத்தது போன்ற மிக முக்கியாயமான செயல் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள 7.5 லட்சம் கோடி ஊழல் பற்றி CAG அறிவிப்பை அடுத்து, ஊழலை சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக அதை விட பன்மடங்கு ஊழலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகிவிட்டது.
இவை எல்லாவற்றையும் கூட சரி செய்து விடலாம் என்றாலும், பாஜக செய்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை மட்டும் அவ்வளவு எளிதாக கடந்து போக இயலாது என்றே தோன்றுகிறது. அது, மத வெறுப்பு அரசியல்.
பாஜகவைக் கட்டுப்படுத்துவது RSSதான் என்பது இப்போது ஓரளவு எல்லோரும் அறிவர். பாஜக யார் தலைமையில் செயல்பட வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அளவிற்கு அதிகாரம் படைத்தது RSS. திமுக எப்படி தங்கள் வரலாறு நீதிக்கட்சியில் இருந்து துவங்கிகிறது என்கிறதோ அதுபோல RSS ன் வரலாறு இந்து மகா சபையில் இருந்து துவங்குகிறது.
பிரிட்டிஷ் ஆட்சி வேலைகளில் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று துவங்கப்பட்ட காங்கிரஸ் இயக்கம் பின்பு மெல்ல உருமாறி இந்திய விடுதலை இயக்கமாக மாறியது. அதில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான் ஹிந்து மகா சபையினர். இஸ்லாமியர்களுக்கு முஸ்லீம் லீக் கட்சி என்றால், ஹிந்துக்களுக்கு ஹிந்து மகா சபை என்று விளக்கம் கூறப்பட்டது. RSSஐ துவங்கியவர்கள் அனைவரும் ஹிந்து மகா சபையில் இருந்து வந்தவர்கள் தான். ஏற்கனவே அது ஹிந்துக்களுக்காக செயல்படும்போது, RSS என்று இன்னொரு பிரிவு எதற்காக? என்ற கேள்வி நியாயமானது.
RSS ஐ துவங்கியவர் ஹெட்கேவர். ஹிந்து மகா சபையின் நோக்கம் ஹிந்துகளின் ஆட்சி. RSS நோக்கமோ ஹிந்து ராஷ்ட்ரம். இந்தியாவில் வாழும் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு பிரச்சாரம் இந்த புள்ளியில் இருந்துதான் துவங்குகிறது. ஹிந்துக்களுக்கான ராணுவத்தை உருவாக்குவது RSSன் திட்டம். அது எந்த அளவிற்கு வீரியம் அடைந்திருக்கிறது என்பதை இன்றைய அரசியல் நமக்கு உணர்த்துகிறது.
RSS ன் திட்டம், கொள்கை என அனைத்தையும் வழங்கிய ஹெட்கேவர் ஒரு விஷயத்தில் மிகக் கடுமையாக இருந்தார். எக்காரணம் கொண்டும் RSS வாக்கு அரசியலில் ஈடு படக்கூடாது என்றார். ஹிந்து மகா சபையில் இருந்து பிரிந்து வந்த போதும் RSS வளர ஹிந்து மகா சபை பெரிதும் உதவியது. RSSன் கூடாரம் இன்று நாடெங்கிலும் பல பெயர்களிலும் பரவியுள்ளன. வாக்கு அரசியலில் RSS ஈடுபடக்கூடாது என்ற ஹெட்கேவரின் கட்டளையை, அவர் மறைவிற்கு பின்னும் கூட RSS மீறியதே இல்லை.
வாக்கு அரசியலில் பாரதீய ஜன சங்கம் மூலம் கால் பதித்தது RSS. அது தோல்வியடைய, ஜனசங்கமாக மாறி பின்பு இன்றைய பாரதீய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. அதன் முகங்களாக வாஜ்பாயும் அத்வானியும் விளங்கினார்கள். இருவரும் RSS கட்டுப்பாட்டில் தான் இருந்தார்கள். அதற்கான தேவை எங்கிருந்து வந்தது? RSS வளர ஹிந்து மகா சபை எப்படி உதவியதோ அதுபோல பாஜக வளர RSS தன் கர சேவகர்களைக் கொடுத்தது. RSS இல்லாமல் பாஜகவின் இந்த வளர்ச்சி சாத்தியம் இல்லை.
சுதந்திர இந்தியாவில் RSS இதுவரை மூன்று முறை தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட போதெல்லாம் வேறு முகமூடி அணிந்து செயல்பட்டது. அப்படி வளர்ந்தவை தான் RSSன் சங் பரிவாரங்கள். ஏபிவிபி, விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் போன்ற துணை அமைப்புகள். இது வரை இந்தியாவில் நிகழ்ந்துள்ள அனைத்து மதக்கலவரங்களிலும் சங் பரிவாரங்களின் பங்கு இல்லாமல் இருந்ததில்லை.
இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மணிப்பூர் இன அழிப்பிற்கு முக்கிய ஆரம்பப் புள்ளி சங் பரிவாரங்கள் பரப்பிய போலி விடீயோக்கள் தான். டெல்லியில் பெற்றோர்களால் கொல்லப்பட்ட ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தை பரப்பி, ஒரு மெய்தி பெண்ணை குக்கி சமூகம் கொன்று விட்டது என்று பரப்பினார்கள். இன்று மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பிரதமரோ ஒரு எட்டு கூட போய் பார்க்கவில்லை. எதிர்க்கட்சிகள் காட்டு கூச்சல் போடும் கூட காது கொடுத்து கேட்கவில்லை. நெருக்கடிக்கு பின் பாராளுமன்றம் வந்த மோடி 2 மணி நேரம் பேசினார். அதில் மணிப்பூரை பற்றி பேசியது வெறும் 4 – 10 நிமிடங்கள்தான்.
மோடியின் அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சர்யமான செய்தி இல்லை. வாஜ்பாயிக்கு அடுத்து பாஜகவின் முகமாக அத்வானி வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க, அவரை அசால்ட்டாக இடது கையில் நகர்த்திவிட்டு, குஜராத்தின் வளர்ச்சி நாயகனாய் மோடி வந்தார். அத்வானி விளக்கப்பட்டதும், மோடி முன்னிறுத்தப்பட்டதும் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான். இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பை பேச்சளவோடு மட்டும் நிறுத்தாமல் செயலில் காட்டியவர்கள் இருவரும். VHPன் உழைப்பில் (?) உருவான பாபர் மசூதி இடிப்பு திட்டத்தை கடைசி நிமிடத்தில் தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தார் அத்வானி. ஆனால் வாய்ப்புக் கேடாக அவருக்கு பதில் வாஜ்பாயிக்கு மகுடம் சூட்டப்பட்டது. காரணம் அத்வானியை விட வாஜ்பாய் கொஞ்சம் குறைவாக வெறுப்பு அரசியலை பேசுபவர். அப்போது வெறுப்பு அரசியல் குறைவாகத் தேவைப்பட்டது.
குஜராத் கலவரம் முழுக்க முழுக்க மோடியின் ஒப்புதலோடு நடத்தப்பட்டது. இதிலும் VHP தான் மூளையாக செயல்பட்ட அமைப்பு என்ற போதும், மோடி இல்லாமல் வேறு ஒரு கரசேவகர் முதலமைச்சராக இருந்திருந்தால் அந்த அளவிற்கு வீரியமாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே. காவல்துறையின் கண்காணிப்பில் 3 நாட்கள் கரசேவகர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. மோடி இல்லாமல் யாரால் இதை சாதிக்க முடியும்! அதன் பலனாக 2000க்கும் மேலான அப்பாவி உயிர்கள் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டன. பல்லாயிரகணக்கான மனிதர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்து அநாதை ஆனார்கள்.
மோடியை குஜராத்தில் பிரபலப்படுத்தியது குஜராத் படுகொலைகள் என்றால் அவரை நாடு முழுவதும் எடுத்து சென்றது குஜராத் பெருமுதலாளியாகிய அதானி. அதானி இன்று அடைந்திருக்கும் வளர்ச்சியின் முதலீடு மோடியின் அரசியல் ஏற்றம். உலகம் போற்றும் அரசியல் விமர்சகர் நோம் சோம்ஸ்கி கூறுவார், முதலாளிகள் தங்கள் நலன் காக்கும் அரசியல் தலைவரை ஆதரித்து பணம் செலவழிப்பார்கள். அந்த தலைவர் வென்றதும் முதலாளிக்கு நன்மை பயக்கும் சட்டங்களை கொண்டு வருவார். அதன் மூலம் பெரும் பொருள் ஈட்டுவார் அந்த முதலாளி. இப்படித் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வார்கள்’. இது அப்படியே மோடிக்கும் அதானிக்கும் பொருந்துவதைப் பார்க்கலாம்.
வெறும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது மூன்று நாட்கள் சங் பரிவாரத்திற்கு கட்டற்ற சுதந்திரம் கொடுத்தவர் நாட்டின் பிரதமரானால்! குற்றவாளிகள் எல்லாம் மாலை போட்டு வரவேற்கப்படுவார்கள். அது கூட மறைக்க முடியாத சாட்சியங்கள் இருந்தால் மட்டுமே.
கத்துவா வழக்கில் 8 வயதே ஆன ஒரு சிறுமிக்கு கோவிலிலுக்குள் நடந்த பாலியல் வன்கொடுமையை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமாக போராடியது பெண்கள்! அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டது அந்த குழந்தையின் பெற்றோர்கள் தான். நியாயம் கிடைக்காமல், ஊரை காலி செய்து வெளியேறினார்கள்.
மாட்டுக்கறி தின்பவன் என்று ஏசப்பட்டு ரயிலில் செல்லும் போது சக பயணியால் குத்தி கொல்லப்பட்ட ஜுனைத்திற்கு இறக்கும் போது வயது 14. ஆட்டுக்கறியை மாட்டுக்கறி என்று அடித்து கொல்லப்பட்ட அக்லாக்கிற்கு வயது 59. `ஜெய் ஸ்ரீராம்’ சொல்லு என்று அடித்து துன்புறுத்தப்பட்ட இளைஞனுக்கு அப்போது தான் திருமணம் ஆகி இருந்தது. அவனைக் காப்பாற்றுவது போல மீட்ட காவல் துறை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது. உயிரிழந்தான் அந்த இஸ்லாமிய இளைஞன். அடுக்கிக் கொண்டே போனால் பட்டியல் நீளும்.
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அறவழியில் போராடிய கிறிஸ்துவராகிய ஸ்டேன்ஸ் ஸ்வாமி, சிறையிலேயே உயிர் இழந்தார். இன்று மணிப்பூரில் கொல்லப்படும் பெரும்பான்மை மக்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். கிறிஸ்துவ தேவாலயங்களைத் தேடி தேடி சேதப்படுத்துகிறார்கள்.
சரி, ஹெட்கேவர் சொன்னது போல இது ஹிந்துக்களுக்கான ஆட்சியா என்றால், கவுரி லங்கேஷ், தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே போன்றவர்கள் எல்லாம் ஹிந்துக்கள் தான். ஒரே மாதிரி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்கள். ஆனந்த் ட்டெம்டும்ப்ளே, சுதா பரத்வாஜ், வரவர ராவ். இவர்களும் ஹிந்துக்கள் தான். தவறேதும் செய்யாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சங் பரிவாரங்கள் சொன்னதும் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு இந்திய இளைஞர்கள் இருக்கிறார்களா? நிச்சயம் இல்லை. ஆனால் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து விட்டு, ஓரிரு முதலாளிகளுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கும் மோடியின் ஆட்சியில், வேலை வாய்ப்புகள் பெரும் அளவில் குறைந்து விட்டன. ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு மூலம் சிறு குறு தொழில்களை நசுக்கிய பிறகு, பலரும் வேலை இல்லாமல் கிடைக்கும் வேலையை செய்து வருகிறார்கள். கல்வி பற்றிய விழிப்புணர்வும் கிடையாது. அவர்களிடம் சென்று, `உன் வாய்ப்புகள் அனைத்தையும் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் தான் பிடிங்கி கொண்டார்கள்’ என்று சொன்னால் அவர்களால் நம்பாமல் இருக்க முடியுமா? இவற்றை எல்லாம் ஒருமுகபடுத்தி ஆட்சி புரியும் மோடி நிச்சயமாக ஒரு திறமைசாலிதான. 9 ஆண்டு கால மோடியின் ஆட்சி இதுதான்.
வாஜ்பாயிக்குப் பிறகு வந்த மோடியே இந்த அளவிற்கு என்றால், மோடிக்கு அடுத்து வரப்போகும் ஒருவர் இன்னும் எத்தனை வீரியமாக இருப்பார்?
2024 தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர நேர்ந்தால் இது போன்ற கட்டுரைகளை எழுதவோ பிரசுரிக்கவோ கூட உரிமைகள் மறுக்கப்படலாம்.
75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவிற்கு சாவு மணியாகவே அது இருக்கும். ஹெட்கேவர் கனவு கண்ட ஹிந்து ராஷ்டிரம் அமைந்து விடும்.
அனைத்து மதத்தினரும் ஒன்றிணைத்து இதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கட்டுரையாளர்: சுமதி விஜயகுமார்