மவுண்ட் பேட்டன் பிரபுவால் டெல்லியில் உருவாக்கப்பட்ட ராயல் லாஞ் எனப்படும் விஐபி லாஞ் பகுதியை 1970 களில் அடிதண்டமாக ஆக்கிரமித்துக்கொண்டு பத்து வருடம் இந்திய அரசை ஆட்டிப்பார்த்த ஒரு ராணியை தெரியுமா?

ஆம்! அவரது பெயர் பேகம் விலாயத் மஹல். தாம் உபி மாநிலம் ஔத்/ஆவாத் மாகாணப் பகுதியின் நவாப் ராணி என அறிவித்துக்கொண்டு, தனக்கு தன்னுடைய நிலப்பகுதி வேண்டுமென அரசுக்கு சவால் விட்டு அட்டகாசம் செய்த பெண்மணி.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது தன் கணவருடைய மூதாதையரான நவாப் ரம்ஸான் அலி, வலுக்கட்டாயமாக நேபாலத்திற்கு விரட்டப்பட்டதாகவும், பிரிட்டிஷாரிடம் தாங்கள் குடும்ப  நிலங்களை இழந்ததாகவும், கிபி 1893 இல் நவாப் ரம்ஸான் அலி விஷம் வைத்து கொல்லப்பட்டதனால் தாங்கள் நிரந்தரமாக நவாப் அந்தஸ்த்தினை இழந்துவிட்டதாகவும் அதனை மீட்டுப்பெற வந்திருக்கிறோம் எனக் கூறி 1970 இல் நேபாளத்தில் இருந்து டெல்லி வந்து இறங்கினார் பேகம் விலாயத் மஹல்.

இவர் யார்? இவரது குடும்ப பின்னணி என்ன, இவருடைய பூர்வீகம் எது என்பதெல்லாம் இன்று வரை யாருக்கும் தெரியாத மர்மமாக நீடித்து வருகிறது.

நான், ஆவாத் மாகாணத்தின் ராஜாவாக இருந்த வாஜித் அலி ஷாவுடைய ஒரே மகளான ஸம்ருத் மஹல் என்பவருடைய பேத்தி என எப்போதும் தன்னை கூறிக்கொள்ளும் விலாயத் மஹல், 1911இல் இந்தியா வந்த எட்டாம் எட்வர்ட் மன்னர் தம்முடைய பாட்டியார் ஸம்ருத் அவர்களுக்கு மானியம் தருவதாக கூறியதை மறுதலித்துவிட்டு நேபாலத்திற்கு சென்றுவிட்டதாகவும் பின்னர் இந்தியா சுதந்திரமடைந்து 1947 இல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தங்களுக்கு கஷ்மீரில் ஒரு ராஜமாளிகையைக் கொடுத்து கண்ணியமாக வாழ வைத்ததாகவும், 1971 இல் அங்கு நடந்த கலவரத்தில் தீ வைக்கப்பட்டு  தங்களது மாளிகை எரிந்து நாசமானதாகவும் அதன்பின்னர் தங்களது குடும்பம் மீண்டும் நேபாலத்திற்கே சென்றுவிட்டதாகவும் பத்திரிகைகளிடம் கூறிவந்தார்.

1970 இல் ஒருநாள் பேகம் விலாயத், அவரது மகன் அலி ரஸா, அவரது மகள் சகினா ஆகியோருடன் ஏழு சிம்பந்திகளும் 13 வெளிநாட்டு நாய்களுமாக உபி மாநிலம் லக்னோ இரயில் நிலையத்தில் வந்திறங்கினர். இரயில் நிலையம் முழுக்கவும் தங்களது நிலம் எனவும் இங்கிருந்த தங்களது குடும்ப எஸ்டேட் சொத்துக்களை மீண்டும் தரும்படி கோரிக்கை வைத்து ரயில் நிலையத்தை விட்டு நகர மறுத்து போராட்டம் செய்தனர்.

அதன் பிறகு சிறிது நாட்களில் லக்னோவில் இருந்து புதுடில்லி ரயில் நிலையத்திற்கு தங்களது வசிப்பிடத்தை மாற்றிய அவர்கள் இங்கும் தங்களுடைய மாளிகை இடிக்கப்பட்டுத்தான்  பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே இந்த இரயில் நிலையம் கட்டப்பட்டது என போர்க்கொடி உயர்த்தி விஐபி லாஞ்சில் தங்களது வசிப்பிடத்தை வலுக்கட்டாயமாக மைத்துக்கொண்டனர்.

அப்போது அந்த லாஞ்ச் முழுக்க விலையுயர்ந்த கார்பெட்கள் விரிக்கப்பட்டு முழுக்க முழுக்க பட்டினால் ஆன திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டு அவர்களது குடும்ப புகைப்படங்களை மாட்டி வைத்து அலங்கரித்திருந்தனர் என பத்திரிகை செய்தி வழியாக அறிய முடிகிறது. அவர்களிடம் இருந்த 13 ராட்சத உருவ நாய்கள் தான் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளன.

அந்த லாஞ்சில் வாழ்ந்த அவர்கள் எப்போதும் தொழுகை செய்வதிலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பலதரப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தனர். பேகம் விலாயத் தன்னை பெர்ஷிய பின்னணி கொண்ட ராணியாகவே வெளிக்காட்டிக்கொண்டார். முகலாயர்கள் எல்லாம் படைவீரராய் இருந்து அரசமைத்தவர்கள் தான் அவர்களெல்லாம் எங்கள் முன் மட்டம் தான் என்றே கூறிவந்துள்ளார்.

தங்களது தாய்வழிப்பாட்டிகள் பல தலைமுறை முன்னரே ஆவாத் அரச குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்டு வந்தவர்கள் ஆதலால் இங்குள்ள ராஜபரம்பரையினருக்கெல்லாம் தாம் தான் முதன்மையானவள் என்பதாகவே அவரது பேச்சு இருக்கும். தங்களை சியா முஸ்லிம் எனக்கூறுவதில் அவருக்கு அத்தனை பெருமை உண்டாம்.

பேகம் விலாயத் தொடர்ச்சியாக பிந்தைய பிரதமர் இந்திரா அவர்களுக்கும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கும் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்துள்ளார். 1976இல் இந்திய அரசு சார்பில் இவர்களுக்கு ஒரு புதிய கட்டடம் ஒன்றில் வசதியான வீடு கொடுக்கப்பட்டது அதனை நிராகரித்தவர்கள் தங்களுக்கான ராஜமாளிகை வேண்டும் என விடாப்பிடியாக இருந்தனர். 1980களில் அடிக்கடி லண்டன் சென்றுவந்த விலாயத்தின் மகன் அலி ரஸா எனும் சைரஸ் நேரடியாகவே இங்கிலாந்து ராணியை சந்தித்து தங்களது கோரிக்கை கடிதங்களை கொடுத்தார் என கூறப்படுகிறது.

1984இல் இரயில் நிலையத்தில் வந்து இவர்களை சந்தித்த இந்திரா காந்தி, உள்துறை அமைச்சகத்துக்கு ஆணையிட்டு இவர்களுக்கான இருப்பிடத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்ள, 1985இல் பழைய டெல்லி அருகேயுள்ள சாணக்யபுரியில் கைவிடப்பட்டுக்கிடந்த ஒரு துக்ளக் காலத்து அரச மாளிகையான மால்ச்சா மஹாலை அவர்களுக்கு வழங்கியது. அம்மாளிகை பின்னாளில் விலாயத் மஹால் என அழைக்கப்பட்டது.

அங்கு தங்களது குடித்தனத்தை தொடங்கியவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியங்கள் கூட்டித்தர வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு இல்லை எனவும் குறைபாடிக்கொண்டே இருந்தனர். இந்நிலையில் 1993 அக்டோபரில் பேகம் விலாயத் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு உபயோகித்த பானத்தை Drink of Silence என ஆங்கில பத்திரிகைகள் வர்ணித்தன. முத்து, பவளம் மற்றும் வைரம் ஆகியவற்றை பொடித்து அதனை நீரில் கலக்கி குடிக்கும் ராஜ மரணமாக அது பழங்காலத்தில் இருந்து பழக்கத்தில் இருந்துவந்துள்ளது. விலாயத் இறந்து ஒரு வருடம் வரை தங்களுக்கு தெரிந்த முறையில் உடலை பதப்படுத்தி வைத்திருந்த அவரது பிள்ளைகள் அதன்பிறகு அவரை அவ்வளாகத்தினுள்ளாகவே புதைத்து விட்டனர்.

அவர்கள் வாழ்ந்த மால்ச்சா மஹால் வளாகத்திற்கு மிக அருகிலேயே இஸ்ரோவின் கட்டடம் ஒன்று இயங்கி வந்த காரணத்தால் இவர்கள் எப்போதும் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்தியர்கள் யாரையும் இவர்கள் சந்திக்கமாட்டார்களாம். வெளிநாட்டு பார்வையாளர் மற்றும் பத்திரிகையாளர்களை மட்டுமே எப்போதாவது சந்திப்பார்களாம். விலாயத்தினுடைய மற்றொரு மகன் ஒருவருடைய புகைப்படமும் அங்கே இருந்துள்ளது அதுபற்றி கேட்கும் யாரிடமும் டெல்லி இரயில் நிலையத்தில் தங்கியிருந்த போது எங்கள் அண்ணன் இறந்துவிட்டார் என்றே கூறுவார்களாம். ஆனால் உண்மையில் அந்த மூத்த மகன் பெயர் ஆஸாத், அவர் இவர்களுடன் சேராமல் தனியாகவே வாழ்ந்து கஷ்மீரில் இறந்துபோனதாக பிந்தைய புலன் விசாரணையில் தெரியவந்தது.

பிறகு 2013 இல் விலாயத்தின் மகள் சகினாவும் இறந்துபோனார். மின்சாரக்கட்டணம் கட்டாத காரணத்தால் தாயின் இறப்பிற்கு பிறகு அவர்கள் இருவரும் இருட்டிலேயே இருந்துள்ளனர். 2012 இல் இஸ்ரோ தயவால் அவர்களுக்கு தண்ணீர் பகிர்வு மட்டும் கொடுக்கப்பபட்டு வந்துள்ளது. எப்போதும் நாய்களை வைத்துக்கொண்டு வளாகத்தினுள்ளாக வலம் வரும் சைரஸ் சில நாட்களாக காணாமல் போக, மாளிகையினுள் நுழைந்த இஸ்ரோ, அவர் இறந்துகிடப்பதாக அவரது உடலை கண்டெடுத்தனர். 2017 இல் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்களுடன் இருந்த சிம்பந்திகள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அலி ரஸா எனும் சைரஸ் உடல் டெல்லி கேட் எனப்படும் பகதூர்ஷா ஸஃபர் மார்க் கபரிஸ்த்தானில் அடக்கப்பட்டார்.

நவாப் ராணி குடும்பத்தில் அனைவரும் மரணித்துவிட்ட பின்னரும் மர்மம் மட்டும் மரணிக்கவே இல்லை. ஏன் தெரியுமா? (அடுத்த இதழில் முடியும்).

கட்டுரையாளர்: நஸ்ரத் எஸ். ரோஸி

 

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *