ஏப்ரல், மே மாதங்களைப் போல பருவ மழை பெய்யும் ஜூலை, ஆகஸ்டில் கூட பகல் நேரங்களில் வெயில் கடுமையாக இருந்தது. பருவ மழை இல்லாத காரணத்தினால் இந்த கடும் வெப்பம் என்று வானிலை ஆய்வு அறிக்கை வந்திருந்தது. பருவ மழை பொய்த்துப் போனதுக்கு பல காரணங்கள் அலசப்பட்டன. சில பகுதிகளில் அளவுக்கதிகமாக மழை பெய்து மக்களின் வாழ்வாதாரத்தையே நிர்மூலமாக்குகிறது. சில பகுதிகளில் மழை  இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகளும் மக்களும் தண்ணீருக்கு அலைந்து திரிந்து  அவதிக்குள்ளாகிறார்கள். இதற்கும் பல காரணங்களை கண்டுபிடித்து அலசுகிறார்கள். நிவார்த்திக்க வழிவகைகளைக் கூறுகிறார்கள். யாரும் கேட்பதில்லை. பிரச்சனையே இதுதான்!         

வெப்பம் அதிகமானதால் இரவுகளில் கொங்குக்கே உரிய குளுமை  காணாமல் போய் விட்டது. வீடு முழுக்க வெக்கை அலைந்துகொண்டே இருந்தது. கேரளாவில் வீடுகள் தோறும் மரங்கள் செடி கொடிகள் என எங்கும் பசுமை பூசிக் கிடக்கும். ஆனாலும் காற்றே இன்றி மரங்களில் இலைகள் கூட துளி அசைவின்றி ஒருவித இறுக்கமாக அமைதியாக சலனமின்றி கிடக்கும். மரங்கள் அசைந்தால்தானே காற்று வரும். கோவை கூட அப்படி மாறி  வருகிறதோ என எண்ணத் தோன்றும்படியாக இயற்கை சூழல் மாறியிருந்தது.

ஜன்னல்கள் திறந்து கிடந்தாலும் காற்று இல்லாமல் புழுக்கமாகவே இருந்தது. மின் விசிறிகளிலிருந்து குளுமையான காற்றுக்கு பதில் அனல் காற்று உடம்பை தாக்கி எரிச்சலை ஏற்படுத்துகிறது. இரவுகலில் புழுக்கம் அதிகமானதால் தூக்கம் வராமல் மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

“மழயே இல்லாததாலதா வெயில் இப்பிடி கெடந்து கொளுத்துது..!”

“நாட்ல அக்குரமம் அதிக மாயிருச்சு..! அதா மழ காலத்துல கூட மழ  பெய்ய மாட்டேங்குது..”

“கொடுங்கோலனுங்க ஆட்சி செஞ்சா இப்பிடித்தா….”

“துனியா அழியுருதுக்கான அடையாளங்களாக்கும் இதெல்லாம்..!”

மக்களின் வேதனை இப்படியான புலம்பல்களாக வெளிப்பட்டது. .

இரவுகளில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டே கிடப்பதால் ஏசி வாங்கி விடும் எண்ணம் சில நாட்களாகவே காதருக்கு இருந்து வந்தது “உப்புசம் தாங்க முடியல. ‘தூங்கவே முடியலீங்க..” தினம் மனைவியின் புலம்பல் வேறு. வாப்பாவிடம் சொன்னால் மின் கட்டணம் எக்கச்சக்கமாக வரும் என்று வேண்டாம் என்பார். எனவே  உம்மாவிடம் தன் எண்ணத்தை மெல்ல வெளிப்படுத்தினான் காதர்.

“உம்மா! மேல் ரூமில் சரியான சூடும்மா…! தூங்கவே முடியறதில்லம்மா… ஒடம்பெல்லாம் எரியுதுமா! ஏசி வாங்கிடலாம்மாம்மா?”

“ஏசியா?” உம்மா ஆச்சிரியத்துடன் கேட்டது.

“ஏம்மா.?”

“கரண்ட் பில்லு எக்கச்சக்கமா வருதுனு எதிர்த்த வீட்டம்மா புலம்பிட்டு இருக்காங்களே மொவனே!”

“சும்மா சொல்றாங்கம்மா! ஒரு நாளுக்கு ரெண்டே யூனிட்தா ஓடும். அதுவும் கொஞ்ச நேரம் ஏசிய போட்டுட்டு ரூமு குளிர் ஆனதும் ஆப் பண்ணிட்டு பேன போட்டமான ஒரு யூனிட்தா வரும்…”

“அப்பிடினா சரி. எதுக்கும் வாப்பாகிட்ட ஒரு வார்த்த கேட்டுக்க..” காதர் தலையாட்டிக்கொண்டான்.

காதரின் பணப் பிரச்சனைக்கு எங்கெல்லாமோ அலைந்தும் தீர்வு எதுவும் கிடைக்காமல் எப்போதும் டென்சனிலேயே இருந்தான். பைனான்ஸில் பணம் எடுத்தால் வட்டி கொடுக்க வேண்டும். அது ஒரு பெரும் நெருக்கடி  ஆகிவிடும். மேலும் வட்டி கொடுப்பதும் வாங்குவதும் ஆகாது என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டான். அவன் கண்ணெல்லாம் தரவாட்டு வீடு மீதுதான்! அண்ணன் நிஜாமிடமிருந்து ஒரிஜினல் பத்திரத்தை எப்படியாவது வாங்கிவிட்டால் போதும். அதை வைத்து ஏதாவது ஒருவழியில் பணத்தை புரட்டிவிடலாம். ஒரு பெரிய தொகைக்கு போக்கியத்துக்கு அந்த வீட்டைக் கொடுக்கலாம். அதற்கும் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுக்கும் போது பத்திர ஜெராக்ஸ் தேவைப்படும்.

அண்ணனிடமிருந்து எப்படி எந்த வழியில் பத்திரத்தை வாங்குவது என்ற எண்ணமே எந்நேரமும் அவனை வாட்டிக் கொண்டிருந்தது நேரில் போய் நாமே கேட்டுவிடலாமா…. என்ன ஆனாலும் சரி. சண்டை போட்டாவது வாங்கியே ஆகணும் என்ற முடிவுக்கு வந்தான் காதர். தம்பி இக்பாலை அனுப்பி கேட்டுப் பார்க்கலாமா என்ற எண்ணம் சட்டென்று தோன்றியது. இக்பாலிடம் பக்குவமாய் எடுத்துச் சொல்லி அனுப்ப வேண்டும். இல்லையேல் சொதப்பி காரியத்தையே கெடுத்துவிடுவான்.

திடுமென தம்பி இக்பால் தன்னைத் தேடி வந்ததில் ஆச்சிரியம் அடைந்தான் நிஜாம்! ‘ஆதாயம் இல்லாமல் செட்டி ஆத்தோடு போவானா..?’ என்ற பேச்சு வழக்கு அவன் நினைவிடுக்கில் தோன்றியது. தம்பிகள் இருவரும் காதர் கிழித்த கோட்டைத் தாண்டாமல் நடப்பவர்கள்! திருமணம் நடந்த கையோடு இடம் போதவில்லை என்று இக்பால் தனிக் குடித்தனம் சென்றுவிட்டான். இன்னொரு தம்பியான சாகுல் ஹமீதும் திருமணம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு அவனும் தனிக்குடிதனம் போய்விட்டான். காதர் மட்டுமே உம்மா வாப்பாவுடனேயே இருந்து கொண்டான்.

கல்யாணம் ஆனதும் காதர்தான் தனிக்குடித்தனம்  போவான் என்று நிஜாம் எண்ணியிருந்ததற்கு மாறாக மற்ற தம்பிகள் இருவரும் தனிக்குடித்தனம் சென்றது நிஜாமுக்கு மிக ஆச்சிரியமாக இருந்தது! அவன் சுபாவத்திற்கு கூட்டுக்குடும்பத்தில் இருப்பது ஒத்து வராது என்பது நிஜாம் உணர்ந்திருந்தான். அவன் குணத்திற்கு ஏற்றாற்  போலவே அவனுக்கு வாய்த்த மனைவியும் அதே குணம் வாய்ந்தவளாக இருந்தது நிஜாமுக்கு மிக ஆச்சிரியமாக இருந்தது. காதருக்கு திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே காதரின் மனைவி குறித்த குணம் மெல்லத் தெரிந்து போனது. அப்போதே அவன் ஜாஸ்மினிடம் இதைச் சொல்லிவிட்டான்.

“ஆமங்க..நானும் இத உங்களிடம் சொல்லணும்னுதா இரிந்தேன். நீங்களே புரிஞ்சிக்கிட்டீங்களே.!” என்று ஆச்சிரியப்பட்டாள்.

இதனால் காதர் தனிக்குடித்தனம் சென்று விடுவான் என்று  உறுதியாக நம்பியிருந்தான் நிஜாம்! ஆனால் காலத்தின் கணக்கு இறைவன் நாட்டப்படி வேறுவிதமாகி நிஜாம் தனிக்குடித்தனம் செல்லும்படியாகிவிட்டது! மற்ற இரு தம்பிகளுக்கு கல்யாணம் ஆகிவிட்டால் காதர் தனியாக சென்றுவிடுவான் என்று எதிர் பார்த்தான். ஆனால் அப்போதும் நிஜாமின் கணக்கு தப்பாகி அவர்கள் இருவரும்தான் கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிக்குடித்தனம் சென்றார்கள்! ஏன் காதர் உம்மா வாப்பாவுடனேயே ஒட்டிக்கொண்டிருக்கிறான் என்பது இப்போதுதான் அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இரண்டு அண்ணன்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு தரவாட்டு வீட்டை அபகரிக்கும் திட்டத்துடன்தான் உம்மாவையும், வாப்பாவையும் அவன் கனிவுடன் கவனித்துக்கொள்பவன் போல நடித்து வருகிறான் என்ற உண்மை நிஜாமுக்கு இப்போது புரிந்துவிட்டது.. ஆனால் இக்பாலும், சாகுலும் இன்னமும் இதைப் புரிந்துகொள்ளாமல் காதர் போடும் ஒருவாய் சோத்துக்காக பல்லிளித்துக் கொண்டு அவனுக்கு வாலட்டிக் கொண்டிருக்கிறார்களே.. என்று மிக வேதனைப்பட்டான் நிஜாம்.

இவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்றே அவனுக்குத் தெரியவில்லை. எதையாவது சொன்னால் அதை அப்படியே போய் காதரிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார்கள்! இதை பலமுறை நிஜாம் தெரிந்துகொண்டு தம்பிகளிடம் எதையும் பகிர்ந்துகொள்வதை விட்டுவிட்டான். ‘ஒருத்தந்தான் அப்பிடினா மத்த ரெண்டு பேரும் அவங்கூட சேர்ந்துக்கிட்டு அவன மாதிரியே இருக்கானுங்களே..! எனக்குனு வந்து வாயிச்சிருக்காணுங்களே தம்பிங்க! ச்சை! யாரை நொந்து கொள்வது..!?’

தம்பிகள் விஷயத்தில் நான்தான் ஏதாச்சும் தவறு செஞ்சுட்டனா..! செஞ்சிருக்கனா…. இல்ல தப்பா நடந்திருக்கேனா..? பலமுறை இப்படி நினைத்து யோசித்துப் பார்த்திருக்கிறான் நிஜாம். அவன் அறிவுக்கு தெரிந்து அப்படி எதுவும் நடந்ததே இல்லை. பிறகு ஏன் சொல்லி வச்ச மாதிரி தம்பிகளுக்கு என் மீது இவ்வளவு வெறுப்பு? என்னை வெறுக்க என் மீது கோபப்பட என்ன காரணம்..? இக்பாலை கண்டதும் மறுபடியும் குழம்பியவாறு யோசித்துக் கொண்டிருந்தான் நிஜாம்.

ஒருவேளை காதர் செய்வது போல அடிக்கடி தம்பிகளைக் கூப்பிட்டு சாப்பாடு போடுவதில்லை நான்! அந்த கோபமாக இருக்குமோ! ஒருவாய் சோத்துக்காக இப்பிடியா நடப்பானுங்க! வெறுப்பாக உணர்ந்தான் நிஜாம். ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு சரியாக வேலை இல்லை என்று தம்பிகள் வந்து பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அப்படி கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்து உதவவில்லை நிஜாம். எப்போதாவது கொடுப்பான். அடிக்கடி தம்பிகள் இருவரும் மாறி மாறி வந்து பணம் கேட்டுக் கொண்டே இருந்தது பெரிய இம்சையாக இருந்தது அவனுக்கு.

“அப்பறம் பார்க்கலாம் இப்ப கொஞ்சம் டைட்டா இருக்கு” என்று சொல்லி அனுப்பி விடுவான். அந்த கோபமும் இருக்கலாமோ..!                                  அதன் பிறகு முன்பு போல பேசுவதை குறைத்துக் கொண்டும் நிஜாமை பார்த்தால் பார்க்காதது போல செல்வதுமாக தம்பிகள் இருவரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தான் நிஜாம். இவனும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான்.

மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டான் நிஜாம். “விடுங்க. அதுக்கு நீங்க எதுக்கு சங்கடப்படுறீங்க? கேக்கும்போதெல்லாம் பணம் குடுக்க இங்க என்ன கொட்டியா கெடக்குது.? மாச சாம்பளம் நம்ம செலவுக்கே பத்த  மாட்டேங்குது! இதுல எப்பிடிங்க கேக்கும்போதெல்லாம் தம்பிகளுக்கு குடுக்க முடியும்? அண்ணனுக்கு எவ்வளவு சம்பளம்னு அவுனுங்களுக்கு தெரியுமல்ல. தெரிஞ்சுக்கிட்டும் அடிக்கடி இப்பிடி வந்து கேக்குறாங்களே. கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாம்? அப்பறம் நம்ம மேலயே கோவப்படுறது என்னங்க நாயம்?” சமாதானம் சொல்லி அவன் சங்கடத்தைப் போக்குவாள் ஜாஸ்மின்.

அந்தக் கால உறவு முறைகளின் அன்பும் பாசமும் நேசமும் இன்னமும் குறையாமல் அப்படியேதான் நீடித்து வருகிறது. வாப்பாவின் அண்ணன் தம்பிகளின் வாஞ்சையும் கூட்டுப்பிடிப்பும் இப்போதும் கொஞ்சம்கூட மாறாமல் அப்படியேதான் இருக்கிறது! குடும்பப்பேச்சு வரும்போதெல்லாம் இன்னமும் தன் அண்ணனைப் பற்றி தம்பிகள் பற்றி வாப்பா அவ்வளவு உயர்வாக பெருமையாக பேசுவார். சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் இருந்தால் கூட அதை பெரிதுபடுத்தாமல் “குடும்பம்னா நல்லது கெட்டது எல்லம்தான் இரிக்கும். நாமதான் அனுசரிச்சு நேர்ந்து கலந்து போகணும்.” என்பார்.

அந்த கால தலைமுறையில் இந்த அனுசரணை எல்லோரிடமும் இருந்தது. அதனால் கூட்டுக்குடும்பங்கள் தளைத்திருந்தன. குடும்பத்தில் எழும் சின்னச் சின்ன பிரச்சனைகளை சச்சரவுகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் ஒன்றும்  இல்லாத சின்ன பிரச்சனையைக் கூட பூதாகாரமாய் ஆக்கி அதைப்பற்றியே பேசிப் பேசி ஒரு பெரிய பிரச்சனையாக்கி  குடும்பத்துக்குள் மனக்கசப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.. முகம் கொடுத்து பேசக் கூட தயக்கம் காட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டு போகும் இன்றைய இந்த இளைய தலைமுறைகளின் போக்கை நினைக்கும் போது எதிர்காலம் இன்னும் மோசமாகவே இருக்கும் என்று நினைத்துக்கொண்டான் நிஜாம்.

இப்போது இக்பால் எத்ற்காக வீடு தேடி வந்திருக்கிறானோ..? உள்ளுக்குள் ஒருவித நெருடல் ஓடுவதை உணர்ந்தான் நிஜாம். ஜாஸ்மின் கொண்டு வந்து கொடுத்த தேநீரை வாங்கி குடித்துக்கொண்டே,`என்ன மைனீ! நீங்க உம்மாவையும் வாப்பாவையும் பாக்க ஊட்டுக்கு போறதே இல்லையாமே..?’ என்று கேட்டான் இக்பால்.

‘ஆஹா! வந்ததும் வராததுமாக இபுலீஸ் வேலையை ஆரம்பிக்கிறானே..’ நம்ம வாய் சும்மா இருக்காதே என நினைத்துக்கொண்டே தம்பியை கோபப்பார்வை பார்த்தான் நிஜாம்.                      .

‘இப்ப நீ புதுசா பிரச்சனைய உருவாக்கவா வராதவன் வந்திருக்கே..?’ என்று வெடுக்கென கேட்க வாயெடுப்பதற்குள், ஜாஸ்மின், ”ஏம்மச்சான்.! நாங்களேதா உம்மாவத் தேடி போவனுமாக்கும்? உம்மா முன்ன மாரி ஏன் இங்க வரமாட்டேங்குறாங்க..? எங்க மேல அப்பிடியென்ன கோவம்?’ என்றாள்.

இக்பால் எதுவும் பேசாமல் மதினியைப் பார்க்க, “காதர் மச்சான் ஒருக்கவாவது எங்க ஊட்டுக்கு வந்திருக்காரா..? அப்பறம் நாங்க எப்டி அங்க போவம்….சொல்லுங்க? நீங்களும் யாரும் வரமாட்டேங்குறீங்க.. நாங்களே உங்களத் தேடி வரணுமாக்கும்..?” முகத்தில் அறைவது போன்ற ஜாஸ்மினின் இந்த கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியாமல் பேசாமல் இருந்தான்.

தெரியாமல் வாயை விட்டுடோமோ? காதர் சொல்லி அனுப்பிய விஷயத்தை இப்ப எப்படி சொல்வது? இக்பால் மாட்டிக்கொண்டது போல உணர்ந்தான்.   (கதை தொடரும்)

கட்டுரையாளர்: ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *