அடித்தட்டு மக்களுக்கு வெறும் இடஒதுக்கீடு மட்டும் போதாது, தேர்தலில் தனிப் பிரிதிநிதித்துவம் வேண்டும் என்று 1930களில் அம்பேத்கர் முறையிட்டார். காந்தி அதை எதிர்த்தார். இந்தப் பிரச்சனை குறித்து ஆழமான விவாதங்கள் நடந்துள்ளன. சாதிக்கு அப்பால் இந்து மதத்தை ஒரு சீர்திருத்தப்பட்ட ஒன்றிணைக்கின்ற சக்தியாக்க காந்தி முனைந்தார். ஆனால் சாதியின் பாரபட்சம்தான் இந்து மதத்தை நிர்ணயிக்கிற அடிப்படை என்ற புரிதல் அம்பேத்கருக்கு இருந்தது.
காந்தியின் இலக்கு எதுவாக இருந்தாலும் இந்து ஒற்றுமை முயற்சி இந்த பாரபட்சத்தை நிலைநாட்டும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். காந்தியின் இந்த ஒன்றிணைக்கும் முயற்சி வேறுபாடுகளைக் களையாது மட்டுமல்ல, மேல்கீழான சமூக அதிகாரப் பதவிகளை பரஸ்பரம் இணைத்துதான் ஒன்றிணைக்க முடியும் என அம்பேத்கர் நம்பினார்.
இன்றைய இந்துத்துவ அரசியலின் இந்து அணி திரட்டல் அம்பேத்கரின் அச்சத்தை உறுதிப்படுத்துகிறது. ஆனால் காந்தி கனவு கண்டது இத்தகைய அணிதிரட்டல் அல்ல என்பதுதான் உண்மை. வரலாற்றில் ஒன்றிணைத்தல் என்பது அதிகார பிரயோகங்களால் நடப்பது என்பதை உணர முடிகிறது.
வித்தியாசங்கள் உருவம் கொள்வது இந்த அதிகார உறவுகளுக்கு உள்ளேதான். தேசியம் அனைத்து இடங்களிலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வலியுறுத்துகிறது. இதில் வேற்றுமை என்பதை விளக்குவது எளிது. மொழியில் உடையில் நம்பிக்கையில் ஏன் கால நிலையில் கூட நாம் வேறுபட்டிருக்கிறோம். ஆனால் ஒற்றுமையை விளக்குவது எளிதல்ல. இந்த வேறுபாடுகளுக்க அப்பால் தேசத்தை இணைப்பது எது?
உதாரணத்துக்கு ஜெர்மன் மொழிபேசுபவர்களை ஒன்றிணைத்து ஜெர்மானிய தேசியம் உருவானது. ஆனால் தேசியத்தினூடாக தேச நாடுகள் உருவானபோது இந்த ஒன்றிணைதல் முயற்சிக்கு பல கோணங்கள் வந்தன. தேசியத்துக்கு நில ரீதியான எல்லைகள் தீர்மானிக்கப்பட்டன. உதாரணமாக ஒவ்வொரு நம்பிக்கையும் மதமும் உருவான பிரதேசம் எவை என்ற கேள்வி தேசியத்துடன் தொடர்பு படுத்தப்பட்டன. ஏனென்றால் எல்லா தேச நாடுகளும் உருவம் கொண்டது அரசியல் ஒன்றிணைத்தலின் ஊடாகத்தான். பண்பாட்டு ஒன்றிணைதலினால் அல்ல என்பது வரலாறு. அரசுருவமற்ற தேசியம் அத்துடன் பலவீனமடைந்து அல்லது அரசுருவமற்ற தேசியங்கள் தேச நாட்டுக்காக முயற்சிக்கத் தொடங்கின.
பெரும்பாலும் அனைவரையும் பங்கேற்கிற ஒரு பண்பாட்டு வரலாற்றின் பெயரால் தேசமாவதற்கான உரிமையை நியாயப்படுத்துகின்றன. பிரதேச அடிப்படையில் இந்தியாவை நிர்ணயித்தபோது பிரிட்டிஷ்காரர்கள் வெளிநாட்டினர் (விதேசி) ஆயினர். அந்த விதேசிகளுக்கு எதிரான அரசியல் போராட்டம் தான் இந்திய தேசியத்தை உருவாக்கியது. அந்த தேசியம் எது என நிர்ணயிக்கும் போது அரசியல் ரீதியான ஒரு இறந்த காலத்துக்கு மட்டுமல்ல பண்பாட்டு ரீதியான ஒரு முன்வரலாறுக்காகவும் நாம் பின் நோக்கிச் சென்றோம்.
இந்தியர்களை இந்தியர்களாக்குவது எது? என்ற கேள்விக்கு பிரிட்டிஷ் எதிர்ப்போ சுயாட்சியின் மீதான நம்பிக்கையோ போதுமான விடையல்ல என்று வந்தது. இவை அரசியல் அணிதிரட்டலுக்கு உதவினாலும் அது ஒரு தேச நிர்ணயத்துக்கு போதாமையாக இருந்தது. அத்துடன் இந்தியப் பண்பாடு என்ற இல்லாத ஒன்றுக்கான தேடுதல் பயணம் தொடங்கியது.
இதன் முன்னோடியாக ஆங்கிலேயக் கல்வி கற்ற உயர்சாதி ஆண்களின் ஐரோப்பிய முன்மாதிரியைப் பின்தொடர்ந்த வரலாறு எழுதும் முயற்சி ஆரம்பித்தது.
ஐரோப்பிய கீழைத்தேய வரலாற்றாசிரியர்கள் இந்தியா குறித்து எழுதி வைத்த முன்மாதிரிகளைப் பின்தொடர்ந்து இந்து மதம் என்ற கற்பிதமும் பிராமணியத்துடன் தொடர்பு படுத்திய ஒரு புராதன பண்பாடு என்ற பொற்காலக் கனவை உருவாக்க முயன்றது. சாதியை ஒரு இயற்கையான ஒரு விதிவிலக்காக நியாயப்படுத்தி இந்து பண்பாடு எனும் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திலகர் போன்றவர்களுடைய முயற்சியும் ஒரு அரசியல் ஏற்பும் நடந்தது.
பிரதேச ரீதியான பண்பாட்டை வரலாறாக்குவதன் மூலமாக இந்த நிலப்பகுதியின் பண்பாடு ஒன்றையும் நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பகுதியின் பண்பாட்டின் பிரிக்க முடியாததாக இருந்த இஸ்லாமிய கிருத்தவ நம்பிக்கைகள் அன்னியமானதாக கட்டமைக்கப்பட்டன. ஆனால் விதேச மதங்களை தவிர்ப்பதனால் மட்டும் இந்து பண்பாட்டின் வரலாற்றை உருவாக்குவது என்பது எளிதல்ல. இந்து ஒன்றிணைவிற்கு தடையாக இருந்த சாதியை அதன் எல்லைகளைக் கடப்பது என்பது அசாத்தியமானதாக இருந்தது.
பிராமணிய கருத்தியலில் இந்து மதத்தை நிர்ணயிப்பது மூலமாக சாதி அதன் அடிப்படைக் கூறாக இருக்க எவ்வகையான ஒன்றிணைவும் அதன் அடிப்படையிலான அரசியல் அணிதிரட்டலும் அசாத்தியமானது.
முஸ்லிம் கிருத்தவர்களை பிறராக்க முயற்சிகள் முன்னெடுத்தபோது சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து மௌனமாக இருக்கவும் புறக்கணிக்கவும் முயன்றனர். மதம் குறித்த விவாதம் தேசிய வரலாற்றில் முதன்மையானபோது சாதியை அந்த வரலாற்றின் பகுதியாக்காமல் இருக்க திட்டமிட்டு மறைக்க முயன்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து தேசியம் சாதியை மூடிமறைக்க முயன்றதை-மௌனத்தை உடைக்க முயன்று போராடியது. இவர்களை பிரிட்டிஷ் ஏஜென்டுகளாகவும் இந்து ஒன்றிணைவுக்கு எதிரானவர்களாகவும் முத்திரை குத்தினர்.
சைமன் குழு வருகையைத் தொடர்ந்து அம்பேத்கர் மீதான இந்திய தேசிய காங்கிரசின் நிலைப்பாடு இதற்கு உதாரணம். அடித்தட்டு மக்கள் காலனியத்தைப் புரிந்து கொண்டது தேசியத்தின் பார்வையிலோ தேசியத்தை பரிந்து கொண்டது பிராமணியத்தின் பார்வையிலோ அல்ல. மாறாக சாதி ஒழிப்பு அடிப்படையிலான ஒரு அரசியல் புரிதலோடுதான். இந்து ஒன்றிணைவை அடிப்படையாக்கிய பண்பாட்டு தேசியத்தாடு அவர்களுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. ஆனால் அரசியல் அணிதிரளை அவர்கள் சாதி ஒழிப்புக்கான சாத்தியங்களாகப் பார்த்தனர்.
ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தேசியத்தின் பண்பாட்டு அளவுகோலில் மட்டுமல்ல அரசியல் நிர்ணயித்திலும் அவர்களுக்கு பிரவேசனம் மறுக்கப்பட்டது. அதனால் தங்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிற அரசியல் அணிதிரட்டலை அவர்கள் சந்தேகித்தனர். காந்தியின் அரசியல் நுழைவு இந்த சந்தேகத்திலிருந்து சிறிது நம்பிக்கை தந்தது. கிலாஃபத் இயக்கத்தை ஒத்துழையாமை இயக்கத்தோடு இணைத்தது காந்தியை ஒரு தேசியத் தலைவராக மாற்றியது.
நேரு உட்பட காங்கிரஸ் தலைவர்கள் இதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பக்கம் இந்து மகாசபையும் பிறகு ஆர்எஸ்எஸின் வெளிப்படையான இந்து அணிதிரட்டலும் மறுபக்கம் காங்கிரசுக்கு உள்ளேயே பல தலைவர்களின் இஸ்லாத்தின் இந்திய இருப்பு குறித்த சந்தேகங்களும், தேசியத்தின் அரசியல் ஒன்றிணைவு முயற்சிகளை சந்தேகத்தோடு பார்க்க முஸ்லிம் தலைவர்களைத் தூண்டியது. அதனால் அவர்களும் மாற்று முயற்சிகள் குறித்து சிந்திக்கத் தூண்டப்பட்டனர். அது பிரிவினைக்கும் ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கவும் செய்தது.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான உரையாடல் இரண்டாண்டுகள் நடந்தன. அதில் வேற்றுமைகளும் பன்முகத்தன்மையும் பெரிதும் பேசுபொருளாயின. இந்தியாவின் வலிமையில் இணைக்கப்பட்ட நாட்டு ராஜ்யங்கள் வடகிழக்கு மாநிலங்கள் பழங்குடி இனப் பகுதிகள் இவ்வாறு தனித்துவமான பிரதேசங்கள் முழுமையான அரசியல் இணைப்புக்கு சாத்தியமல்லாத நிலையில் நிலைநிற்கும் என அரசியல் உருவாக்க சபைக்கு புரிதல் இருந்தது. இந்தியா என உரிமை கொண்டாடுகிற பகுதிகள் அனைத்தும் ஒரே தன்மையில் இணைக்க முன்வந்தனர். ஆனால் சில மாநிலங்கள் மட்டும் தனித்தகுதியுடன் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. ஃபெடரல் ரீதியான சுயாட்சி உரிமைகளுக்காக சில மாநிலங்கள் உரிமை கோரின.
இன்று ஒரே கிரிமினல் சட்டம் இருக்கும்போது ஏன் ஒரே சிவில் சட்டம் கூடாது என்று கூறுபவர்கள் அரசியல் நிர்ணய சபையில் ஒன்றிணைந்த கிரிமினல் சட்டத்துக்கு அல்ல. சாதி, பாலியல் அடிப்படையிலான பாகுபாடுகள் இருக்கையில் கிரிமினல் சட்டத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனிப் பாதுகாப்பு விதிகள் எழுதிச் சேர்க்கப்பட்டதை உணர வேண்டும். எனவே ஒரு குற்றத்துக்கு ஒரே தண்டனை என்பது இல்லை. நடைமுறையில் அது Cowbelt பகுதிகளில் இன்று காப் பஞ்சாயத்தும் புல்டோசர் ட்ரீட்மென்டும் உணர்த்துகிற உண்மை அதுதான்.
அரசியல் அமைப்பு நிர்மாண சபையில் பெரிதும் பேசப்பட்டது சாதிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கு எதிரான குரல்கள் தான். இந்து தனியார் சட்டம் இந்து அணிதிரட்டலுக்கு உதவும் என பலர் கருதினர். இந்து தனியார் சட்டத்தினூடாக சாதி ஒழிப்பின் முதல் படியைக் கடக்கலாம் என அம்பேத்கரும் கருதினார். முஸ்லிம் தனியார் சட்டங்கள் நவீனமல்லாத சரீஅத் அடிப்படையிலானது என்று விமர்சிப்பவர்கள் இந்து தனியார் சட்டங்கள் குறித்து சுய விமர்சனத்துக்கு வராமல் மௌனம் காப்பது விசித்திரமானது.
முஸ்லிம் தனியார் சட்டங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. இந்து தனியார் சட்டங்களோ 19ஆம் நூற்றாண்டில்தான் தொகுக்கப்பட்டது. அது எந்த மூல ஆதாரங்களிலிருந்து எடுக்கபட்டது என்பது கேள்விக்குறியே. வடநாட்டு பிராமணிய ஆணாதிக்க அடிப்படையில் அதன் உருவாக்கத்தின் வேர் உள்ளது. உதாரணமாக மருமக்கத்தாயம் என்ற முறையை முழுமையாக நிராகரித்துதான் தனியார் சட்டம் உருவாக்கப்பட்டது.
சரீஅத் படி அல்லாத கிரிமினல் சட்டம் கூடுமென்றால் ஏன் மதச்சார்பற்ற தனியார் சிவில் சட்டம் கூடாது என்ற கேள்வி அரசியல் அணிதிரட்டலையும் பண்பாட்டு அணிதிரட்டலையம் ஒன்றாகப் பார்க்கிற குழப்பம் இது.
அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களை தனிமனிதாகப் பார்க்கிற அதே வேளையில் அவர்களது சமுதாய இருப்பையும் முழுமையாக அங்கீகரித்திருக்கிறது. இல்லையென்றால் பிறப்பால் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்க மனிதத்துக்கு எதிரான சாதியை கிரிமினல் குற்றமாக அறிவித்திருப்பார்கள். மதங்களில் நம்பவும் பரப்பவும் நிராகரிக்கவும் உரிமை அளிப்பது அரசியல் அமைப்பின் தனித்துவம்.
இஸ்லாமிய அரசுகள் இல்லாத இடங்களில் முஸ்லிம்கள் அரசியல் நிறுவனங்களிடம் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து இஸ்லாம் அளவுக்கு விவாதித்த விவரித்த ஒரு சமயக் கோட்பாட்டை காண்பது அரிது. அது உலக அளவில் விரிந்த ஒன்று. அந்த கோணத்தில் இது இங்குள்ள பிரச்சனை மட்டுமல்ல. ஒரே மதம் பிரதேச அளவில் பல மாற்றங்களுக்கு உட்பட்டது.
பன்மைத்துவம் என்பதுதான் இயற்கை. அது பிரபஞ்ச சட்டம். சாதி அமைப்பு, சாதிகளை தனி அறைகளில் அடைக்கிறது. மதம் அப்படி அல்ல. இந்துக்கள் எல்லா நிலையிலும் இந்தியர்கள் எனவும், முஸ்லிம்கள் கிருத்தவர்கள் அரசியல் ரீதியாக மட்டும் இந்தியர்கள் எனவும்தான் இந்துத்துவ நிலைப்பாடும் கருத்தியலும். அனைத்து மதத்தினரும் தனிமனிதர்களும் ஒரே உரிமை உடையவர்கள் என்பதை இந்துத்துவம் ஏற்க மறுக்கிறது. பண்பாட்டு குடிமக்கள் என்ற நிலையில் இந்து அல்லாதவர்களை விலக்க முற்படுகிறது.
தேசியத்தின் பண்பாட்டு ஒன்றிணைவு முயற்சி வன்மமானது. நாசிசமும் ஃபாசிசமும் பிறருடைய வேற்றுமைய அல்ல அவர்களையே நீக்குவது என்ற கொள்கை உடையது. ஒரு சனநாயக அமைப்பில் அதிகாரப் பரவலினூடாகத்தான் அமைதி சாத்தியம். சிறுபான்மையினரை தவிர்த்த ஒரு சனநாயகம் சாத்தியமல்ல.
உலக அரங்கிலேயே பல நாடுகளிலும் ஒன்றிணைந்த குடும்பச் சட்டங்கள் இல்லை. சிரியா இரான் பாகிஸ்தான் எகிப்து சூடான் ஆகிய நாடுகளில் கூட சிறுபான்மையினருக்கு அவர்களுடைய தனிச் சட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
சிவில் சட்டங்கள் தனிமனிதனிலும் அவனது குடும்பத்தையும் பாதிக்க கூடியது. கிரிமினல் சட்டம் என்பது சட்ட ஒழுங்கையும் அதனோடு தொடர்புடைய பல விஷயங்கள் சம்பந்தமானது. அது சமூகத்தை பாதிக்கக் கூடியது என்று கூறினார் கோல்வார்க்கர் என்பதை இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.
வேற்றுமையிலிருந்துதான் ஒற்றமை உருவாக வேண்டும். அது தனியார் சட்டமானாலும் பொதுச்சட்டமானாலும் சரி.
இஸ்லாத்தில் பெண்களுக்கும் விவாகரத்து உரிமைக்கான எளிய மார்க்கம் உள்ளது. விதவைக்கு மறுமண உரிமை உள்ளது. ஆனால் இந்துப் பெண்களுக்கு இது சட்டம் வழிதான் சாத்தியம் என்பதை உணர வேண்டும்
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது என்று கூறப்படும்போது 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களிடையே தான் நடைமுறையில் பலதார மணம் குறைவு என்று அரசே வெளிப்படுத்தியுள்ளதை உணர வேண்டும்.
போர்த்துகீசியர்கள் கோவாவை விட்டுச் சென்று அரை நூற்றாண்டு மேலாகியும் ஒரே தனியார் சட்டம் அங்கு நிலவுகிறது என்பதும் விசித்திரமாகத்தான் உள்ளது.
பழங்குடி இன மக்களை பொதுச் சமூகம் என ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தனியார் சட்டம் பொதுவானதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது நிதர்சனம். ஒரே நாடு ஒரே சட்டம் என்பது ஒரே நாடு ஒரே கரன்சி என்பது போன்று எளிதல்ல.
தங்களது மதத்தில் உள்ள குழப்பங்களை மூடி மறைத்து பிறரை திருத்தாமல் அடங்க மாட்டோம் என்கிற பிடிவாதம் இந்து ராஜ்யத்துக்கான இலக்கு மட்டுமல்ல அன்றாட எரியும் பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கான அரசியல் சதி என்பதையும் உணர வேண்டும்.
கட்டுரையாளர்: முனைவர் மு. அப்துல் ரசாக்