பாபர் மஸ்ஜித் வழக்கு முடிந்த கையோடு புகழ்பெற்ற இதர முக்கிய மஸ்ஜிதுகளையும் கைப்பற்றும் திட்டத்தில் சங்பரிவார்கள் இறங்கி விட்டனர். கியான்வாபி மஸ்ஜித் மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மஸ்ஜித் இரண்டிலும் இந்து கோவில் இருப்பதற்கான தடயங்களை கண்டதாகவும் எனவே அந்த மஸ்ஜிதுகளை இடித்து விட்டு அங்கே கோவில் கட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்தில் அலகாபாத் நீதிமன்றங்களில் புதிய வழக்குகளை சங்பரிவார்கள் தாக்கல் செய்தார்கள். இந்த இரு மஸ்ஜிதுகளையும் கைப்பற்றும் கூச்சல்களை கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறார்கள்.
மதுரா மஸ்ஜித் வழக்கு:-
மதுரா நகரத்தில் புகழ்பெற்ற ஷாஹி ஈத்கா மஸ்ஜித் உள்ளது. இந்த மஸ்ஜிதில் இந்து கடவுள்கள் சிலைகள் இருப்பதாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுராவின் கீழமை நீதிமன்றங்கள் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கின்றன. இந்து கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் தான் ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளதாக இந்துக்கள் தரப்பிலிருந்து சங்பரிவார்கள் கூறுகிறார்கள். அவர்களது மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வரும் வரையில் மஸ்ஜித் இருக்கும் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுத்து பூசை செய்யும் உரிமை வேண்டும் என்று கேட்கின்றனர்
மதுராவின் ஈத்கா பள்ளிவாசல் தொடர்பான முதல் வழக்கு செப்டம்பர் 2020ல் தாக்கல் செய்யப்பட்டது. பாபர் மஸ்ஜித் வழக்கில் சங்பரிவர்களை திருப்திப் படுத்தும் தீர்ப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2019ல் வெளிவந்த பிறகே இந்த வழக்குகளைத் தொடுக்கும் துணிச்சலும் ஏற்பட்டிருக்கிறது. மதுரா பள்ளிவாசலை அப்புறப்படுத்த வேண்டும் என்று ரஞ்சனா அக்னிகோத்ரி (Ranjana Agnihotri) என்ற வழக்கறிஞர் மூலம் 6 கிருஷ்ண பக்தைகள் இந்த வழக்கை தொடுத்துள்ளனர். அக்னி ஹோத்திரி மனு செப்டம்பர் 2020ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், ஒரு மாதம் தாமதமாக ஒரு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மாவட்ட நீதிபதி ஒருவர் முடிவு செய்தார். டிசம்பர் 2020ல் மற்றொரு வழக்கை பல்வேறு வழக்கறிஞர்களும் ஐக்கிய இந்து முன்னணி (United Hindu Front) மற்றும் தர்ம ரக்ஷ்ணா சங்க விரிந்தாபன் (Dharm Rakhsha Sangh Vrindaban) அமைப்புகளும் இணைந்து தாக்கல் செய்தனர்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இத்தகைய வழக்குகளை நீதிமன்றங்கள் ஏற்பதற்கு தடை விதித்துள்ள போதும் ஏராளமான இத்தகைய வழக்குகள் ரத்துசெய்யப்படாமல் ஓராண்டுக்கும் மேலாக நீதிமன்றங்களில் கிடக்கின்றன. பாபர் மஸ்ஜித் வழக்கில் 2019ல் தீர்ப்புரை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த தீர்ப்பை வைத்து முகலாய அரசர்களின் இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு விடைகாண விளையக் கூடாது என்றும் வினோதமான கருத்தை கூறி இருந்தது. அதாவது முகலாயர்கள் இந்து கோவில்களை இடித்ததற்கு பகரமாக மஸ்ஜிதுகளை இடிக்க இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டக் கூடாது என்று தன்னை நல்லவனாக காட்டுகிறது உச்சநீதிமன்றம். ஆனால், இவ்வாறு கூறுவதன் மூலம் முகலாய அரசர்கள் இந்துக் கோவில்களை இடித்துதான் மஸ்ஜிதுகளைக் கட்டினார்கள் என்று ஆதாரங்கள் இல்லாத பொய்யை பரப்புகிறது. வேண்டுமென்றால், இதர மஸ்ஜிதுகளை இடித்து கோவில் கட்ட இதன் தீர்ப்பை மேற்கோள் காட்டாமல் வேறு வழிகளை தேட வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆனால், தீர்ப்புரையின் இந்த அம்சம் மற்ற மஸ்ஜிதுகளைக் காப்பாற்றும் என்று முஸ்லிம்களை நம்பச் சொல்கிறது உச்சநீதிமன்றம்.
தங்கள் மனுக்கள் மீது மதுரா சிவில் நீதிபதி முடிவெடுக்கத் தாமதிக்கிறார் என்றொரு புகார் மனுவை ஒருவர் அலகாபத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்யாத அலகாபாத் உயர்நீதிமன்றம், “கிருஷ்ண ஜென்ம பூமி சம்பந்தமாக கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் மொத்தமாகச் சேர்த்து விரைவாக முடிவு செய்ய வேண்டும் என்றும், அதுவும், 4 மாதங்களுக்குள் முடிவை எதிர்ப்பார்ப்பதாகவும்” மே மாதம் 12ஆம் நாள் உத்தரவிட்டது.
குதுப் மினார்:-
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கமாலுத்தீன் மஸ்ஜிதில் இந்துக்களும் முஸ்லிம்களும் வெவ்வேறு நாட்களில் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) வழங்கிய 2003 உத்தரவை எதிர்த்து ஒரு இந்துத்துவ அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் ஒரு அறிவிப்பானையை (notice) மே 11ல் வழங்கியது. அங்குள்ள கட்டடத்தை பெண்கடவுள் சரஸ்வதியின் கோவில் என்று இந்துக்கள் உரிமையாடுகின்றனர். அதை போஜ்ஷாலா (Bhojshala) என்று அழைக்கின்றனர். இல்லை அது ஒரு மஸ்ஜித் என்று முஸ்லிம்கள் உரிமையாடுகின்றனர்.
தில்லியில், சாகெத் நீதிமன்றம் (Saket court) குதுப் மினார் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க உள்ளது. குதுப் மினார் நினைவிடத்தின் உள்ளே உள்ள மஸ்ஜித் கட்ட இந்து மற்றும் ஜெயின் கோவில்கள் பல இடிக்கப்பட்டன என்று மனுவில் கூறப்பட்டிருக்கிறது. நீதிமன்றங்கள் 2வது முறையாக இந்த வழக்குகளை விசாரிக்கின்றன. குதுப் மினார் சம்பந்தமான முதல் மனுவை ஒரு சிவில் நீதிமன்றம் விசாரித்து, “கடந்த காலங்களில் நடந்துள்ள தவறுகளை வைத்து நிழ்காலத்துக்கும் வருங்காலத்துக்குமான நமது நிம்மதியை குலைக்க முடியாது” என்று நவம்பர் 2021ல் தள்ளுபடி செய்து விட்டது.
ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் உள்ளே தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியும் அயோத்தியா ஊடகப் பிரிவின் தலைவருமான ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்த பொதுநல வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் மே 12ல் உடனடியாக (summarily) தள்ளுபடி செய்தது. நீதிமன்றங்கள் பொதுவாக இதுமாதிரியான வழக்குகளை விசாரணைக்கு ஏற்று மத சச்சரவுகளை கிளறி விடுவதே வழக்கம்.
ஆர்.எஸ்.எஸின் கிளை அமைப்பான மஹாகால் மானவ் சேவா என்ற அமைப்பு குதுப்பினார் முன்பு அமர்ந்து ஜெய் ஶ்ரீராம் என்று முழக்கமிட்டதுடன் அங்கு வரும் இந்து சுற்றுலாப் பயணிகளிடம் குதிப்மினார் இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த இடம் இந்துக்களுக்குதான் சொந்தம் என பிரச்சாரமும் செய்து வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ரிஷப் தேவ் என்ற ஆர்.எஸ்.எஸ். சாமியார் ஒருவர் குதுப்மினாரை கோவிலாக அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். இதே ரிஷப் தையிப் குதுப் மினாரை இந்து கோவிலாக அங்கீகரிக்க கோரி தில்லி மாவட்ட நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த வழக்கும் விசாரணைக்கு வரவிருக்கிறது. குதுப் மினார. நுழைவு வாயிலில் ஒரு மஸ்ஜித் உள்ளது. 27 இந்து கோவில்களை இடித்து விட்டு அந்த மஸ்ஜித் கட்டப்பட்டதாகவும், அங்கிருந்த சிலைகள் தரையில் வைத்து அவமானப்படுத்தப் படுவதாகவும் ஒரு கட்டுக்கதையை பரப்பி குதுப்மினாரை கோவிலாக்க முயற்சி செய்கின்றனர்.
அதேபோல், தாஜ்மஹால் நிறுவப்பட்டுள்ள இடம் தங்களுக்குச் சொந்தமானது என்கிறார் பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி. தாஜ்மஹால் உள்ள இடம் தங்கள் பரம்பரைக்குச் சொந்தமான இடம் என்றும் முகலாயர்கள் அந்த இடத்தை அபகரித்துக் கொண்டு அதன்மீது தாஜ் மஹால் கட்டியதாகவும் கூறியுள்ளார்.
தாஜ்மஹாலை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று ரஜினீஷ் சீங் கேட்டபோது, தாஜ்மஹாலை தொல்லியல் ஆய்வு செய்வது “தகுந்த செயல் இல்லை” (non-justiciable), அதை வரலாற்றாய்வாளர்களிடம் விட்டு விடுதலே சிறந்தது” என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், தற்போது, கியான்வாபி மஸ்ஜித் வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமனறம் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம்-1991ன் படி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். மாறாக, விசாரணைக்கு ஏற்றதன் மூலம் பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் அதிருப்தியான தீர்ப்புரை வழங்கிய ஓராண்டுக்குள் முஸ்லிம்களை கலவரப்படுத்தும் அடுத்த நடவடிக்கைக்கு தயாராகி இருக்கிறது. இப்படியாக, இந்தியா முழுவதும் 3000 க்கும் அதிகமான பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்கள் குறி வைத்துள்ளனர். 2019 பாபர் மஸ்ஜித் இருந்த இடம் ராமருக்குச் சொந்தமானது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்புரை வழங்கி இருப்பதால் நீதிமன்றங்கள் மூலமாகவே தங்கள் பட்டியலில் உள்ள மஸ்ஜித்துகள் ஒவ்வொன்றையும் கைப்பற்றிக் கொள்ளலாம் என திட்டமிட்டு காய் நகரத்துகின்றனர். சிவில் நீதிமன்றங்கள் தொடங்கி வைக்கின்றன. மாவட்ட நீதிமன்றங்கள், உய்நீதிமன்றங்கள் வழியாக உச்சநீதிமன்றம் முடித்து வைப்பதாக இருக்கிறது இந்தியாவில் உள்ள மஸ்ஜிதுகளை கைப்பற்றி கோவிலாக்கும் சங்பரிவார்களின் திட்டம்.
ஜனநாயகத்தின் இறுதி நம்பிக்கை நீதிமன்றம். ஆனால், இந்திய ஜனநாயக அமைப்பில் சிறுபான்மை மக்களின் அவநம்பிக்கையாக மீண்டும் காட்சியளிக்கிறது நீதிமன்றம்.
கட்டுரையாளர்: ஜி. அத்தேஷ்